Sep 10, 2016

ஜீவாவின் விமர்சனத்திற்கான எதிர்வினை

சாதியப் பிரச்சினைக்கான தீர்வு... நூல் பற்றி தோழர் ஜீவானந்தம் எழுதிய திறனாய்வைப் படித்தேன். அவரே கூறியிருப்பதுபோல் கூட்டத்திற்காக தயார் செய்த கட்டுரை அது. அவர் கூட்டத்திற்கு வர முடியாமல் போனதற்கு என் கவனக்குறைவே காரணம். டிக்கெட் புக் செய்ய இன்னமும் காலம் உள்ளதே என்று நினைத்து நான் தாமதித்ததால், கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனது.
விமர்சனத்திற்கு வருவோம்: சாதியத் தாக்குதல்கள், 'மார்க்சிய தாக்குதல்களுக்கு' இடையில் வந்திருக்கும் நாகரீகமான விமர்சனம் என்பது ஆறுதல். அம்பேத்கரை நாம் எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியும் என்று 'பொறுப்போடு' பேசியுள்ள பிரியத்துக்குரிய தோழர் எங்களை நன்கறிந்திருந்தும் எங்கள் மீது தொடுக்கப்படும் 'சாதியத் தாக்குதல்' மற்றும் 'பின்னணி' குறித்த பேச்சுகளுக்கு ஒரு சிறு கண்டனங்களைக்கூட பதிவு செயாதது கண்டு கூடுதல் மகிழ்ச்சி!
தோழர் ஜீவானந்தத்துடன் மார்க்சியம் குறித்தும் - கோட்பாட்டு விளக்கம் குறித்தும் எங்களுக்குப் பல முரண்பாடுகளும், விமர்சனங்களும் உண்டு. அதை நாங்கள் உரையாடியும் வருகிறோம்.
தோழர் ஜீவா உட்பட சில தோழர்கள் பெரும்பாலும், எவருடைய மார்க்சிய நூல்களையும் - சிக்கலுடையது, திரிக்கிறது, பிரச்சினைக்குரியது என்று சொல்லியே நாங்கள் கேட்டிருக்கிறோம். மார்க்சியக் கோட்பாட்டு விளக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துதல் குறித்து மார்க்சியர்களிடையே முரண்பாடு இருப்பது உலகறிந்ததே. அந்த வகையில் தோழர். ஜீவானந்தத்தின் விமர்சனம் அவருடைய மார்க்சியப் புரிதலிலிருந்து வருகிறது. அதில் எப்படி மற்றவர்களுக்கு விமர்சனம் இருக்கிறதோ, அப்படி மற்றொரு கோட்பாட்டாளரிடம் ஜீவாவுக்கும் விமர்சனம் இருக்கலாம். நாகரீக உரையாடல் நிகழும்வரை, உரையாடலைத் தொடர முடியும். அவ்வளவே!
ரங்கநாயகம்மாவின் விளக்க முறையில் தோழர் ஜீவானந்தம் ஏற்கனவே முரண்பட்டு விமர்சனங்களை எழுதியுள்ளார். நானும் அவருடன் கடுமையாக முரண்பட்டு தர்க்கவாதம் புரிந்துள்ளேன். உதாரணமாக குழந்தைகளுக்கான பொருளாதாரம் நூலில் கச்சாப் பொருள் என்பது எது என்பதை விளக்குகையில், ரங்கநாயகம்மா - ஒரு பொருள் இயற்கையாக விளைந்திருக்குமெனில் அது இயற்கைப் பொருள் அதன் மீது உழைப்பு செலுத்தப்படும்போது அது கச்சாப் பொருளாகிறது (பயன் மதிப்பை்புடைய பொருள், பின்னர் அது சந்தைக்கு வரும்போது மதிப்பாக மாறுகிறது), அதாவது ஒரு கிழங்கு மண்ணுக்கடியில் இயற்கையாக இருக்கிறதென்றால் அது இயற்கைப் பொருள், அதை ஒருவர் பறித்து சமைப்பார் எனில் அப்போது அந்த கிழங்கு கச்சாப் பொருளாகிறது என்பார். சந்தைக்கு வரும்போது மட்டுமே அப்பொருள் சரக்காகிறது. இல்லையேல் தனிப்பட்ட தேவைக்காகப் பரித்து சமைத்தது என்றே பொருள்படும். பொருள், இயற்கைப் பொருள், இயற்கை வஸ்து, கச்சாப் பொருள், சரக்கு இவற்றையெல்லாம் ரங்கநாயகம்மா விளக்கும் முறையில் ஜீவா மாறுபடுவார்.
ஜீவாவைப் பொறுத்தவரை அது தவறு. //The natural things available in nature without the intervention of human labour sometimes act as raw-materials also// அவரது கட்டுரையைப் படித்தால் முழுமையான கருத்தை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம். ஆனால் இதில் எனக்குள்ள பிரச்சினை என்னவெனில் உழைப்பின் தலையீடின்றி இயற்கைப் பொருளானது கச்சாப் பொருளாகவும் இருக்கும் எனும்போது அது முதலாளித்துவ சிந்தனையாகிப் போகிறது. இயற்கையையே கச்சாப் பொருளாகப் பார்க்கும் பேராபத்து அதில் நிலவுகிறது.
ரங்கநாயகம்மா உழைப்புக்கு (உழைப்பு நடைமுறைக்கு) முக்கியத்துவம் கொடுத்து விளக்கும் முறை மற்றும் மேற்சொன்ன உதாரணத்தில் பொருள், கச்சாப்பொருள் பற்றியெல்லாம் மார்க்சின் மூலதனத்தை வைத்து அவர் விளக்கும் முறையில் எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நான் ஏற்கனவே அவரிடம் உரையாடி இருக்கிறேன். இப்படி எங்களுக்குள் நிறைய முரண்பாடு உண்டு. அது கோட்பாட்டு விளக்கம் சார்ந்தது. (அதுமட்டுமின்றி உழைப்புசார் உறவுகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இரண்டும் ஒன்றே என்ற விளக்கத்தையும் ரங்கநாயகம்மா அளித்து விட்டார், அதையும் நான் அவரிடம் பகிர்ந்திருக்கிறேன்.)
அடிப்படையில் மார்க்சியம் என்பது தனியுடைமையை எதிர்க்கிறது. அதன் அடிப்படையிலான உற்பத்தி முறையை, உழைப்புப் பிரிவினையை, உழைப்புச் சுரண்டலை (விளக்குகிறது) எதிர்க்கிறது. இந்த அடிப்படையிலிருந்தே ரங்கநாயகம்மா அம்பேத்கரை விமர்சிக்கிறார். ஏனென்றால் அம்பேத்கரது பொருளாதார சிந்தனை ஆளும் வர்க்கக் கருத்தியலின் அடிப்படையில் உள்ளது. அது முதலாளித்துவ பொருளாதாரத்திற்கே உதவக்கூடியது எனும் வகையில் தலித் மக்கள் விடுதலைக்கு அது போதாது. இதுதான் ரங்கநாயகம்மா முன் வைக்கும் சாரம். அதேபோல் சாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் முன் வைக்கும் தீர்வு பௌத்தம் (அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம்). அதன் போதாமையை மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அவர் விளக்குகிறார். இதையெல்லாம் இவர்கள் (ஜீவா, ஏறத்தாழ இதே கேள்விகளை தனது கட்டுரையில் முன் வைத்த அவரது நண்பர், மற்றும் சிலர்) ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்களது விமர்சனங்களின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அம்பேத்கரை கராராக விமர்சிப்பதில் இவர்களுக்கு அச்ச உணர்வு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அதற்கு பொருள்முதல் பார்வை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். காலவரிசிப்படி புரிந்துகொள்ள வேண்டும் , குறிப்பிட வேண்டும் என்பதெல்லாம் சரி, ஆனால், நாம் ஒருவருக்கு மட்டும் பொருள்முதல்வாதப் பார்வையை apply செய்து புரிந்துகொண்டு சார்புநிலை எடுக்க வேண்டுமெனில், இதே நிலைப்பாட்டை காந்தி தொடங்கி இந்துத்துவவாதிகள், மத நூல்கள் என அனைத்திற்கும் கொடுத்து, எல்லாவற்றிலுமிருந்து 100கிராம் வீதம் எடுத்து ஒரு கதம்ப மார்க்சியத்தை உருவாக்கலாம்.
உண்மையில் இவர்கள் அம்பேத்கரை பரிதாபத்திற்குரிய ஆளுமையாக மாற்றுகிறார்கள். ஆனால் ரங்கநாயகம்மா (நாங்களோ) அவரை அப்படிப் பார்க்கவில்லை. மாபெரும் அறிவுஜீவி, சாதி ஒழிப்பிற்காக பல ஆய்வுகளையும், பணிகளையும் மேற்கொண்ட ஆளுமை என்கிற வகையில், அறிவுதளத்தில் அம்பேத்கரின் சிந்தனைகள், திட்டங்கள் குறித்து திறனாய்வு செய்கிறார். ஒரு பொருளாதார அறிஞர் என்கிற வகையில், அவருடைய பொருளாதார திட்டங்களில் உள்ள சிக்கலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார். (இங்கு கூறுமுறை கொஞ்சம் கராராக, முகத்தில் அறைந்தார் போல் உள்ளது அவ்வளவே!)
அதேபோல் புத்தரை ஒட்டுண்ணி என்கிறார் என்றால், உழைக்காமல் மற்றவர் உழைப்பில் (உபரியைக் கைப்பற்றி வாழ்வதற்கு அது சமம்) வாழும் ஒருவரை அப்படி சொல்வதில் என்ன தவறு? மார்க்சியம் மதத்தை (தொழிலாக) போதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இவர்கள் ஏன் அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவுமில்லை. (இது என்ன மார்க்சியம்?) எல்லாரும் உழைத்து வாழ வேண்டும். எல்லாருமே இரண்டு வகையான உழைப்பிலும் ஈடுபட வேண்டும். இது மார்க்சிய அடிப்படை. இதை விளக்கினால் இதை அறவாதம் என்கிறார்கள். உழைப்புச் சுரண்டல் என்பது அறமற்ற செயல்தானே? பொருள்முதல்வாத பார்வையற்ற ஒருவர் எப்படி மார்க்சியத்தை அடிப்படையாக வைத்து பேசுவார்? உழைப்பாளர்களை பரிதாபத்துக்குறிய வகையிலா அவர் சித்தரிக்கிறார்? மார்க்ஸ் முன்வைத்த அடிக்கட்டுமான தகர்ப்பு, சோஷலிச சமூக உருவாக்கம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சி என எல்லாவற்றையும் முன்வைத்துத்தானே பேசுகிறார். அதுமட்டுமின்றி அம்பேத்கரிடமிருந்து எதை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எது பயனளிப்பது என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
அதேபோல் அம்பேத்கர் முன்வைத்த புத்தரைத்தான் அவர் நையாண்டி செய்கிறார். (புத்தர் துறவரம் மேற்கொண்டதற்கு அம்பேத்கர் சொல்லும் கதையைப் படித்தால்…..) புத்தரை எப்படி அணுகுவது என்பதையும் ரங்கநாயகம்மா தெளிவாகவே விளக்குகிறார். சமூகத்தை எப்படி ஆய்வு செய்வது, நிலவும் ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படைக் காரணத்தை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கும் தத்துவம் மார்க்சியம்; அதனால் மார்க்சியம் தேவை என்கிறார். மார்க்சியத்தின் அடிப்படைகளை, அதாவது ஏற்றத்தாழ்வைக் களைந்திட மார்க்சியம் எப்படி உதவும் என்று போதுமான அளவுக்கு விளக்கியுள்ளார்.
போதா குறைக்கு வலிந்து மார்க்ஸ் கூட உழைக்கவில்லை, கட்சித் தோழர்கள் உழைப்பதில்லை என்று இவர்களாகவே எடுத்துக்கொடுத்து வியாக்கியானம் செய்கிறார்கள். (உச்சபட்சமாக, தீவிரவாத குழுக்களுக்கு லைசன்ஸ் வழங்குகிறார் என்று ஏதோ பதிவு செய்திருக்கிறார். இது ஏதோ அமைப்பு சார்ந்த பிரச்சினையாக இருக்கும்போலிருக்கிறது. உண்மையில், இவர்கள் யாருக்கு pointகளை எடுத்துக் கொடுக்கிறார்கள்?).
கார்ல் மார்க்ஸோ, கட்சித் தோழர்களோ உபரியைப் பெற்று, உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தவில்லை, நடத்துவதுமில்லை. மத போதனைகளில் ஈடுபடவில்லை. அரசுக்கு ஆதரவாக சமரசம் செய்துகொள்வதில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவைப்படும் அணிதிரட்டலுக்குத் தேவையான உழைப்பில் ஈடுபடுகின்றனர். (அதில் கட்சி, இயக்கம் சார்ந்து பலவீனங்கள், குறைபாடுகள் இருக்கலாம்). முன்னவர் சமூக மாற்றத்திற்காக மூளை உழைப்பில் ஈடுபட்டவர். கட்சித் தோழர்கள் (பெரும்பாலும்) உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள். நேரடியாக இது உற்பத்திக்கு பங்களிக்காவிட்டாலும் சுரண்டல் நிறைந்த உற்பத்தி முறையை தகர்த்தெரிவதற்கான சமூக மாற்றத்திற்காக உழைக்கிறார்கள். இந்த அமைப்புகளை அரசு நிதி கொடுத்து வளர்ப்பதில்லை. அதேபோல், அந்த அமைப்புகளும் - கடன் பெற்றவர், இராணுவ வீரர்களை (ஒருகட்டம் வரை பெண்கள்) அமைப்பில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று அரசை திருப்திபடுத்தும் ‘கொள்கைகளை’ வைத்திருப்பதில்லை என்பது யதார்த்தம்.
ஆனால், புத்தரின் ‘மூளை உழைப்பு’, ‘செயல்பாடு’ அத்தகையதா? புத்தரோ, பௌத்த மடாலயங்களோ, மத நிறுவனங்களோ அப்படி இல்லை. அதுமட்டுமின்றி மத நிறுவனமாக பௌத்தம் எப்படி அரசுக்கு சாதகமான கருவியாக பின்னாளில் மாறியது என்றெல்லாம் மார்க்சிய ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதே நிலைப்பாட்டைத்தான் ரங்கநாயகம்மாவும் கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்னவென்பதுதான் எனக்கு விளங்கவில்லை.
பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்பது சுரண்டல்வாத சமூகத்தில் அவசியம் என்பதையும் இதுபோன்ற அமைப்பு முறை கொண்ட அரசியல் இயக்கத்தின் தேவையைக் கூட நிராகரிக்கும் அளவிற்கோ அல்லது அவர்களை ஒட்டுண்ணி என்று சொல்லும் அளவுக்கோ ஒருவர் முட்டாளாக இருக்க முடியாது. ஆனால், தம்மை இந்த இணைய வெளியிலும், ‘விமர்சகர் வட்டத்தி்லும்’ நிரூபித்துக்கொள்ளும் பதட்டத்தில், எப்படிப்பட்ட ‘குதர்க்கமான’ கேள்விகளை பூரிப்பின்றி முன்வைக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்பது சற்று வியப்பாகவே உள்ளது.
உழைக்கும் வர்க்கத்திற்கு உழைப்புச் சுரண்டலைப் பற்றியும், தாம் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதையும் எளிமையாகப் புரியும் வண்ணம் ரங்கநாயகம்மா விளக்குகிறார் என்பதே என்வரையிலான கருத்து. மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதில் எனக்கு அவருடைய எழுத்துகள் பேருதவியாக இருந்திருக்கின்றன. இனி வாசகர்கள் அவருடைய நூலையும், மார்க்சிய மூல நூல்களையும் தாமே நேரடியாகப் படித்து சீர் தூக்கிப் பார்த்து தெளிவு பெறலாம்.

No comments:

Post a Comment