Feb 22, 2015

அன்புக்குரிய ரகுராம் ராஜன் அவர்களே, நீங்கள் அணிந்த (அரதப்பழசான) அந்த ‘தொப்பி’ துர்நாற்றம் வீசுகிறது….


திரு. ரகுராம் ராஜனின் ‘சிந்தனைகள்’ நிச்சயமாக விவாதிக்கப்பட வேண்டியவை, கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவையும்கூட. அவருடைய குறிப்பிட்ட இந்த உரையானது பொருளாதாரத் துறைக்குறிய சொல் விளையாட்டே, மேலும் அதில் அறம், ஜனநாயகம், தர்மம் (இந்து தர்மமா?) போன்ற சில மசாலாப் பொருட்களைத் தூவியிருக்கிறார் அவ்வளவுதான். அதன் மூலம் அவர் முதலாளித்துவத்திற்கும், தனியுடமைக்குமே வக்காலத்து வாங்குகிறார். (விரிவாக எழுத வேண்டும்)


அரசாங்கச் செயல்பாடுகளை ஜனநாயகபூர்வமாக்குவதன் மூலமும் சில பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமும் ”எல்லாம் சரியாகிவிடும்” என்றொரு பொய் நம்பிக்கையை முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக நடுத்தர வர்க்க மக்களுக்கு கொடுக்க முயல்கிறார்.

அவருடைய கருத்துகள் அவர் முன்வைக்கும் ஜனநாயக பொறுப்புடமை, சமத்துவமான பங்கீடு போன்றவற்றிற்கு முரணாகவே இருக்கின்றன. ஏனென்றால், அவர் ‘நல்லாட்சியை’ முன்மொழிகிறார் (ஜனநாயக பொறுப்புடமை போன்ற சொற்களால் பூசி மெழுகி). இவ்வாறாக, அவர் நேரடியாக அரசுக்கெதிராக, முதலாளிகளுக்கு எதிராகப் பேசுவதை தவிர்த்து, அதே சமயம் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், சமத்துவம் நாடுபவராகவும் காட்டிக்கொள்ள விழைகிறார். அத்தோடு மார்க்சியத்தையும் தவறாக சித்தரிக்கிறார். அவருடைய அந்த உரையில் அரசு பற்றிய பேச்சே இல்லை, ஆனால் வர்க்க முரண்பாட்டை ஒப்புக்கொள்கிறார், இது முரணாகத் தோன்றவில்லையா?

அவர் சொல்கிறார், “அரசின் மரபார்ந்த மூன்று கருவிகளான – நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம் ஆகியவை ஒன்றுக்கொன்று சமநிலைகாக்கத் தேவை என்ற உள்ளார்ந்த கூற்றை எளிமையாக முன்வைக்கிறார். அரசாங்கம் என்பது ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும்போது வாழ்வையும், சொத்துரிமையையும் பாதுகாக்கும் முதன்மைப் பணி செய்யும் வெறும் “இரவுநேர மெய்க்காப்பாளன்’ எனும் தீவிரபோக்குடைய சுதந்திரவாதிகளின் கருத்துகளுக்கும் அதேபோல், வர்க்க முரண்பாடு முடிவுக்கு வரும்போது அரசாங்கம் மறைந்து போகும் எனும் தீவிரப் போக்குடைய மார்க்சியர்களின் (மார்க்சியர்கள் தீவிரப்போக்குடையவர்கள் (தீவிரவாதிகள் எனும் பொருளில்) என்று பொதுமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது) கண்ணோட்டத்திற்கும் நேரெதிராக முன்வைக்கிறார்.  ஹண்டிங்க்டனைப் போலவே ஃபுக்குயாமாவும், வளரும் நாடுகளில் பலமான, (அழுத்தம் பலமான) அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

முதலில், கார்ல் மார்க்ஸோ, எங்கல்ஸோ அல்லது லெனின், மாவோ போன்ற புரட்சியாளர்களோ “அரசாங்கம் மறைந்துபோகும்” என்று எங்கேயும் சொல்லவில்லை. கார்ல் மார்க்ஸ் சொன்னது “அரசு உலர்ந்து உதிர்ந்து போகும்” என்பதே.

இதை பொருளாதார அடிப்படையில், (அழுத்தம் பொருளாதார அடிப்படையில்), லெனின் அரசும் புரட்சியும் எனும் நூலில் விளக்கியிருக்கிறார். மார்க்ஸ் மேலும் கூறியதாவது: “…முதலாளித்துவ சமுதாயத்துக்கும் கம்யூனிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது.  இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது.  இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரமாகவே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது…”

இதை முன்வைத்து லெனின் சொல்வது:” ‘அரசு உலர்ந்து உதிர்கிறது’ என்னும் தொடர் நன்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இத்தொடர் இந்நிகழ்ச்சிப் போக்கின் படிப்படியாய் நடந்தேறும் தன்மை, தன்னியல்பாய்த் தானே நடந்தேறும் தன்மை ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாய் உள்ளது.”

 இப்படி இருக்கையில், மார்க்சியக் கோட்பாட்டை கற்பனாவாதம் அல்லது அராஜகவாதம் எனும் பொருள்தரும் வகையில் // அரசாங்கம் மறைந்து போகும் எனும் தீவிரப் போக்குடைய மார்க்சியர்களின்// என்று சொல்வது அறிவுநாணயமா? வரலாற்று நடைமுறையில், உற்பத்தி முறையின் வளர்ச்சி காரணமாக தோன்றிய வர்க்கம், வர்க்க முரண்பாடுகளின் விளைவே அரசு. ”வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு” என்கிறார் லெனின். அதாவது அரசு என்பது ஒரு ‘விளைவு’ அது ஒரு தனித்த அமைப்பு அல்ல. இந்த அடிப்படியில்தான் கார்ல் மார்க்சும், மார்க்சியர்களும் அரசு உலர்ந்து உதிரும் என்கின்றனர், மறைந்துபோகும் என்பதில்லை, அதுவும் அரசாங்கம் என்பது அரசின் இயந்திரம், அது ஒரு நிர்வாக இயந்திரம். (நீதித்துறை, அரசாங்கம் (சட்டமன்றம்), இராணுவம் ஆகியவை அரசு இயந்திரங்கள்)

திரு. ராஜனின் சிந்தனையின் சாரமானது ‘சீர்திருத்தவாதம்’, ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருளாதார முறையின் விளைவாய் நேர்ந்த வர்க்கப் பகைமைகளின் விளைவாக அரசு என்பது இருக்கும்பொழுது, அதன் இயந்திரங்களான நீதித்துறை (சட்டத்தின் ஆட்சி!!!) மற்றும் சட்டமன்றம் (அரசாங்கம்) எப்படி ஜனநாயகபூர்வ பொறுப்புடைமையை உறுதி செய்ய முடியும்?  மேலும், இன்றைக்கு தரகு முதலாளித்துவம், எகாதிபத்தியம், (நவ) தாராளவாதம், உலகமயமாக்கல், நிதி மூலதனம் ஆகிய முதலாளித்துவ ஆக்கிரமிப்பு கருவிகளுக்கான தரகர்களாக அரசு மாறிவிட்ட நிலையில் உள்நாட்டளவில் அரசாங்கம் என்பது எந்தளவுக்கான சுதந்திரமான, ஜனநாயகமான அமைப்பாக இருக்க முடியும்? மேலும், முதலாளித்துவத்தின் இலக்கே இலாபமாக – மூலதனக் குவிப்பாக – தனியுடைமையாக – செல்வக் குவிப்பாக இருக்கையில், அதன் பாதுகாவலரான அரசானது, சமத்துவப் பங்கீட்டை எவ்வகையில் உறுதி செய்ய முடியும், அதை முதலாளித்துவம் எப்படி சகித்துக்கொள்ளும், எப்படி அனுமதிக்கும்?


எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவத்தின் கீழ் (நிலப்பிரப்புத்துவத்திலும்)  உழைப்புப் பிரிவினை என்பது அராஜகவாதமாகவும், அதன் இயங்குமுறையானது சர்வாதிகாரமாகவும் இருக்கையில், அதன் பாதுகாவலரான அரசும் அதே ‘சட்டத்தின் ஆட்சியை’த் தானே கொண்டிருக்கும், ஜனநாயகத்திற்கும், ஜனநாயக பொறுப்புடைமைக்கும் எங்கே அங்கு இடமிருக்கிறது?

அதனினும் கொடுமையானது, “சாதி அமைப்பே உழைப்புப் பிரிவினைக்கு வழிவகுத்தது” எனும் ராஜனின் வாதம், இது முற்றிலும் வரலாற்றுக்குப் புறம்பானது, (சாதியின் தோற்றம் குறித்து இதுதான் காரணம் என இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை, ஆனால் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் ஒரு உற்பத்தி நிகழ்முறை எவ்வகையான சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கும் என மார்க்ஸ் கூறுகிறார், சாதியையும் அவர் அதன்படியே விளக்குகிறார்).

வரலாற்றுக்குப் புறம்பான அனுகுமுறை, தர்மத்தில் நம்பிக்கை, தனியுடைமைக்கு வக்காலத்து – ஒருவேளை ராஜன் எதிர்காலத்தில் பிரதம மந்திரி வேட்பாளராகப் போட்டியிட பயிற்ச்சி எடுத்து வருகிறாரோ?

அன்புக்குரிய ரகுராம் ராஜன் அவர்களே, நீங்கள் அணிந்த (அரதப்பழசான) அந்த ‘தொப்பி’ துர்நாற்றம் வீசுகிறது….

 உரை: http://scroll.in/article/708502/Full-Text:-When-Raghuram-Rajan-took-off-his-hat-as-RBI-governor-and-tore-into-'strong-governments',-invoking-Hitler,-Emergency-et-al

Feb 3, 2015

மதம் பிடித்த பேச்சு


வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் இந்திய அரசியல் வெளியில் இப்போது உச்சபட்ச நகைச்சுவை பேச்சுகளை கேட்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் உலக அரங்கில் இந்திய அறிவின்மானம் கப்பலேறிக் கொண்டிருக்கும் வேளையில் அப்பேச்சுக்களை உதிர்ப்பவர்கள் இந்து மதம் என்னும் மதம் பிடித்த தன்மையில் அவற்றை மிகவும் பொறுப்புள்ள பேச்சாக கருதுவதே.

இந்து-இந்திய தேசிய உணர்வை வலுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட அப்பேச்சுகள் கலாச்சார காவல், சமஸ்கிருதமயமாக்கல், கல்விகளில் இந்துத்துவத்தை உட்புகுத்துதல் எனத்  தொடங்கி, விஞ்ஞானத்திற்குள் புகுந்து இப்போது ஒரு பெண்ணின் கருவறைக்கு ஆணை பிறப்பிப்பதில் வந்து நின்றிருக்கிறது.

அதிகாரத்திற்காக பிறப்பிலேயே பேதங்களைக் கற்பித்து, அதை சட்டமுமாக்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமூகத்தையே சாதி என்னும் கொடிய நஞ்சினுள் மூழ்கடித்து வைத்திருக்கும் இந்துத்துவவாதிகள் எல்லாவற்றிலும் தாங்களே முதலானவர்கள், மேன்மையானவர்கள் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. தங்களின் மதம் பிடித்த பேச்சுகளால் இவர்கள் ஆழமாக விதைத்திருக்கும் வெறுப்புணர்வு என்பது சீர் செய்யவே முடியாத அளவுக்கு சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. குறிப்பாக இந்து - முஸ்லிம் என்னும் எதிர் எதிர் கட்டமைப்பு, இந்துக்களே இந்தியர்கள், இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்பதே அதன் அடிப்படை. அவ்வெறுப்பை மூலதனமாக்கி இவர்கள் செய்யும் அரசியல் மனித சமூகம் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு கொடூரமானதாக இருக்கிறது.

சங் பரிவார்கள் இன்னும் இதர சமாஜ்கள், சேனைகள் மூலம் ஆண்டாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வந்த இந்துத்துவ வெறியானது இப்போது நேரடியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது எந்த எல்லைக்குச் செல்லும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. சமீபத்தில் கேரளாவில் நடந்த கலாச்சார காவல் தாக்குதல், காதலனுடன் சென்ற ஒரு பெண்ணை பஞ்சாயத்தில் அனைவரின் முன்னால் முலைப்பால் கொடுக்கச் சொன்ன பஞ்சாயத்து தீர்ப்புகள், மீண்டும் ராமர் கோவில் கட்டுவோம் என்னும் முழக்கங்கள் என மத-கலாச்சார அளவில் அரங்கேரும் அராஜகங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது அரசு இயந்திர பிரதிநிதிகளும் சர்வ சாதாரணமாக இந்து மதம் பிடித்த பேச்சுகளை உதிர்க்கும் நிலைவந்தாகி விட்டது. பிரச்சினை என்னவென்றால், அவை சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், தளங்களில்கூட எவ்வித குற்ற உணர்வுமின்றி பேசப்படுகின்றன. எல்லாவற்றிலும் இந்து இந்திய அடையாளமிருக்க வேண்டும் என்னும் ஒரு வெறி இவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறது.

சமஸ்கிருத வாரம் என்பதைக் கட்டாயமாக்கும் ஒரு சுற்றரிக்கை விட்டார்கள், பின்னர் கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினமாக அறிவித்து, பலமான எதிர்ப்புகள் விமர்சனங்கள் கிளம்பியபோது சால்ஜாப்புகள் சொல்லி சமாளித்தார்கள். மஹாபாரதம் கதையல்ல நிஜம் என்று சொன்ன இந்திய வரலாற்று கவுன்சிலின் தலைவர் சுதர்ஷன் ராவ், கூடுதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, காஸ்மிக் ஆயுதங்கள் இருந்திருக்கும் என்று புராணங்களை ஆதாரமாகக் கொண்டு இவைகள் இந்திய வரலாற்று உண்மைகள் என்கிறார். இந்து தேசியராக பிரச்சினைக்குரிய விதத்தில் அறியப்பட்ட தினநாத் பாத்ரா என்பவர் பள்ளிக்கூட பாட புத்தகங்களை எழுதுவதற்கான அலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வித்துறையில், வரலாற்று துறையில் மதத்தின் தாக்கம் இப்படியிருக்க, காவல்துறையில் இந்து கலாச்சார தாக்கம் என்ன செய்திருக்கிறது தெரியுமா? சுதந்திர தினத்தன்று போர்பந்தரில் பெண்களே பொதுவெளியில் நாகரீகமான உடையணிந்து வாரீர்என்று சுவரொட்டிகளை காவல்துறையே அடித்து ஒட்டயுள்ளது. சொல்லப்பட்ட காரணம் பெண் விடுதலை!
இப்படிப்பட்ட வேடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக, வேத காலத்திலேயே பறக்கும் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன என்னும் காப்டன் ஆனந்த் போடாசின் முத்தாய்ப்பானபேச்சு. இது நடந்தது இந்திய தேசிய அறிவியல் காங்கிரசில்! சமஸ்கிருதம் மூலம் பண்டைய அறிவியல் என்பதே அக்கருத்தரங்கின் ஆய்வுப்பொருள். சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் அறிவியல் துறையில் இப்படிப்பட்ட மத-மொழிச்சார்புடைய ஒரு தலைப்பு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பா..கவின் ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பின் அடிப்படியிலேயே ஒருவன் தாழ்ந்தவனாகின்றான், தீண்டத்தகாதவனாகின்றான் என்று சொல்லிவந்த இந்த இந்துதுவ மடங்கள் தற்போது கர் வாப்சிவிழாக்களை நடத்திக்கொண்டு இந்தியாவில் பிறக்கும் எவரும் இந்துக்களே என்று அரவணைக்கும்முழக்கங்களை வைக்கத் தொடங்கியுள்ளன. இந்திய தேசியத்தின் பெயரால் பயங்கரவாத எதிர்ப்பு என்னும் போர்வையில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வந்தவர்கள் பதின்பருவ வயது பெண்களுக்குக்கூட இந்துத்துவ வெறியேற்றி ஆயுதப் பயிற்சி கொடுத்து வருகின்றன.  இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படி பல்வேறு மட்டங்களில் இந்துத்துவ பிரச்சாரத்தை செய்துவந்த இவ்வரசானது தற்போது தனது  ‘சாத்வீகப்பார்வையை பெண்களின் கருவறை மீது செலுத்தியுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையை நிறுவும் விதமாக இந்து மதத்தைக் காக்க வேண்டி, இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று பா..க எம்.பி சாக்ஷி மஹாராஜ் பேசியுள்ளார். ‘சாதியத் தூய்மையைக் காக்க வேண்டுமா பெண்ணின் கருவறைக்குப் பூட்டு போடு, மதப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா பெண்ணின் கருவறைக்கு ஆணையிடுஇதுவே மதவாதிகளின் சூத்திரம்.

மக்களே, இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தாலும் மதம் என்னும் நிறுவனம் நம் ஒவ்வொருவரின் மீதும் செலுத்தும் அதிகாரத்தை, நிகழ்த்தும் அட்டூழியத்தை இனியும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? மதவாத அரசியலுக்கு, அது எம்மதமானாலும் சரி, அதை பின்பற்றுவது பாவம் என்று உங்கள் இறை நம்பிக்கை உங்களை வழிநடத்தவில்லையா?

Feb 2, 2015

கவிதைகள்

1.  மற்றொரு அறை

விழித்திருக்கும் அறையின்
இமைகள் ஒன்றுக்கொன்று
முத்தங்களைச் சொறிந்தது

பச்சை மச்சம் படர்ந்திருந்த பின்புறம்
அடர்பச்சையாக்கும்
மெல்லிய முடிகள்
வானை நோக்கி உயர்த்தியபடி
மிதிவண்டி ஓட்டும் தோரணையில்
முன்னும் பின்னும் ஆட்டி
கட்டளை இடும் கால்கள்
கால்களின் தாளத்திற்கிசைந்த
அழுகையொலி

வாரியெடுத்து
நெஞ்சுக்குழியில்
படுக்க வைத்து
நிறுத்தம் வந்தவுடன்
வேகத்தை குறைத்து ஓடும்
ரெயில் வண்டியின் அசைவையொத்த
ஆட்டம் கொடுத்து
காதை வருடி
நெற்கதிரென வளர்ந்திருக்கும் முடிகளின்
நடுவே விரல்களால் வருடிக் கொடுத்து
கருவறையை மெத்தையாக்கி
உறங்க வைத்திருந்தாள் அவள்

மற்றொரு
தனிமைத் துயர்கூடிய
அறை
இமைகள்
முத்தம் கொடுத்துக் கொள்வதே இல்லை

இப்போது

வயிற்றில்
எரியூட்டிய கடலொன்று
அனுமதியின்றி உட்புகுந்ததை
உணர்ந்தாள்

இரைச்சலற்ற பேரலை
பனிக்குடத்தை
பிடுங்கிச் சென்றது

நெஞ்சுக்குழியிலிருந்து நீண்டு விரியும்
விரல்கள்
அருகில் இருந்த அவளைத் தேடி
கரைகிறது செங்காகமென


2. எழுதுகிறாள் அவள்

பூமத்திய ரேகைகள்
அழிக்கப்படாமல் இருக்க
தன்
வெளியை
எழுதுகிறாள் பெண்

உறங்கவைத்து
தசைக்குள் நுழைந்த
லிங்க எழுதுகோல்கள்
இறுக இட்டுவைத்திருக்கும்
முடிச்சுகளை
கட்டவிழ்க்க

அவிழ்க்கப்பட்ட லிபிகள் வழி
ஓடித் திரியும் நாணமற்ற
பெண் நதிகளை
சிவப்பு கம்பளம்
பரவியணைக்கிறது
நாற்காலிகளற்ற வெளி

உன்மத்தம்  தீண்டாதிருக்க
பெயரற்ற சமாதியில்
தானற்ற உடலாய்
சேர்க்கப்படாமலிருக்க

கடவுளின் மொழிகளில்
அரித்த உப்பில்
ஊறித் துளைக்கும் இந்திரிய சொற்களின்
கூர்மையை மழுங்கடிக்க
புறப்பட்டிருக்கும்
செம்பறவை
எழுதுகிறாள்

 நன்றி: கொம்பு இதழ்