அம்மா என்றால் யார்?
அம்மா என்றால் உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றவள்…
அம்மா என்றால் நீ பிறப்பதற்கு காரணமாய் இருந்தவள்…
இரண்டு விளக்கமும் ஒரே பொருளைத்தானே கொடுக்கிறது. முன்னது நடைமுறையை, காலத்தை பிரதானமாக முன் வைத்து விளக்குகிறது. பிந்தையது விளைவைப் பிரதானமாகக் கொண்டு விளக்குகிறது. எந்தவகையிலும் இது உண்மையை சிதைக்கவில்லை. (அம்மா என்றால் பெண், பெண் என்றால் கருப்பை என்ற அகராதிப் பொருள் போல் இல்லையே இது!!)
அதேபோல்தான் பொருளாதார பாடத்தில் - உற்பத்தி நடைமுறையில் இடம்பெறும் (உள் நுழையும்) ‘பொருள்’ எனப்படும் பொருள், கடக்கும் கட்டங்களை ‘தெளிவாக’ (கூடுதலாக) விளக்க ஒருவர் குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றலாம்.
அந்த வகையில்தான் ரங்கநாயகம்மா இயற்கைப் பொருள் – பொருள் – சரக்கு எனும் கூம்பகத்தை வழங்குகிறார் என்பது என் வரையிலான கருத்து. அது உழைப்பின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவதாகும். (இணைப்பைப் பார்க்கவும்). ஒருவகையில் சுரண்டல்வாத சமூகத்திற்கு விளக்க இந்த அழுத்தம் தேவை என்றே கருதுகிறேன். நிலம், காற்று, நீர்.. (இன்னபிற) என்பது இயற்கையில் கிடப்பது. ஆனால் அதை தனி நபர் (அல்லது அரசு) உடைமையாக்கி அதற்கு வாடகை (வட்டி, இலாபம்) என்று வசூலிப்பதை இயற்கையான ஒன்றுதான் என்று கருதும் (அப்படி கருதவைக்கப்பட்ட) ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற ‘உடமை’ முறையும், வருவாய் முறையும் (மதிப்பு வடிவம்) இயற்கையானதல்ல என்பதை விளக்கும்போது உதாரணமாக “காடு” என்பது இயற்கைப் பொருள் (natural substance) ”தோட்டம்” என்பது பொருள் என்கிறார் ரங்கநாயகம்மா. இது எந்த வகையில் பொருள்முதல்வாதப் பார்வையிலிருந்து விலகிச் செல்கிறது? இன்னும் சொல்லப்போனால், இந்தளவுக்கு பகுத்துப் பார்ப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் போது மார்க்சியக் கோட்பாட்டை அதன் உட்பொருளுக்காக மட்டுமின்றி அதன் வரலாற்று நோக்கினையும் சேர்ந்து புரிந்துகொள்ள வகை செய்கிறது. வரலாற்று சூழலுக்கேற்ப, சொற்களும்கூட பண்டமாகிவிட்ட சூழலில், சில சொற்கள் சில நியாயங்களை தாமாக வழங்கக்கூடிய சூழலில் (உற்பத்தி முறையில்) இது ஒரு வகையில் கூடுதல் பகுப்பாய்வு – கூடுதல் விளக்கம்.
எளிமையாகச் சொல்வதெனில், இப்படி ‘கூடுதலாக’ வகைப்படுத்தி விளக்கும்போது பாமரர் மனதில் தோன்றக்கூடியதாக எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் - ”இயற்கையையே ஒருத்தன் (ஒருத்தியும்தான்) சொந்தம் கொண்டாடுரானேப்பா”, “நாம உழைக்கலன்னா இவனுங்களுக்கு எங்கருந்து ‘பொருள்’ (சரக்கு) கிடைக்கும்”, ”எல்லாருக்கும் சொந்தமா இருக்குற இயற்கையை கைப்பத்தி, நம்மளை உழைக்க வச்சு ‘கூலிங்கிற’ பேர்ல பிச்சை போட்டு, அவன் ‘இலாபம்’னு அள்ளிக்கிட்டு போறான்யா…. நம்மை உழைப்பை சுரண்டுறானுங்கப்பா… இதையெல்லாம் விளக்குறதுதான் கம்யூனிசமாம்பா… நாம என்னவோ அது உற்பத்தி உற்பத்தின்னு ஏதோ பெரிய கணக்கு வழக்கு பேச்சு பேசுதுன்னுல்ல நினைச்சோம்… இயற்கை, நம்ம உழைப்பு, அதுல கிடைக்கிற ‘விளைச்சல்’ இதெல்லாம் நமக்கும், எல்லாருக்கும் சமமா சொந்தமாகனும்பா… அதுக்கு கம்யூனிசம் வேணுமப்பா..”
“ உற்பத்தியா – உழைப்பா – உற்பத்தி நடைமுறையா – உழைப்பு நடைமுறையா எது பெரிது? எது முக்கியம் எனும் போக்கினை ரங்கநாயகம்மா எடுக்கவில்லை. ஆனால் அச்சொற்கூறை பிடித்து தொங்குவதன் மூலம் (பொருள்) உற்பத்தி நடைமுறையே (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்) முக்கியம் என்று சொல்லி உழைப்பைப் பின்னுக்குத் தள்ளுவதன் மூலம் இவர்களது வாதங்கள் வரலாற்று பொருள் இரண்டாம் பார்வை என்று சொல்லலாமா? அல்லது ‘மூளை உழைப்பில்’ மட்டுமே ஈடுபடும் வர்க்கச் சிந்தனையின் பிரதிபலிப்பு என்று சொல்லலாமா? உழைப்பின் பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து இயற்கைப் பொருள் – பொருள் – சரக்கு (சந்தைக்கு வரும்போது மட்டுமே அது சரக்காக (மதிப்பு பெற்ற பொருள்) இருக்க முடியும். மற்ற நேரங்களில் அது (பயன் மதிப்பு கொண்ட) பொருள் மட்டுமே). இதைத்தான் ரங்கநாயகம்மாவும் விளக்குகிறார். இந்த கூடுதல் வகைப்படுத்தலினாலோ அல்லது உழைப்புசார் உறவுகள் என்று சொல்வதாலோ கோட்பாட்டிற்கு எந்த வகையில் ‘இழிவு’ ஏற்பட்டுவிடும்?
//The natural things available in nature without the intervention of human labour sometimes act as raw-materials also// //For example, wind energy used in the wind mill. The wind is available in nature and it is a natural thing. And no labour is involved in making of the wind. But the wind energy is converted into electrical enegy in the wind mill. How do you call the wind energy used in the wind mill? It is no doubt the wind used in the wind mill is a raw material to the electrical energy.//
காற்றாலை மின்சக்தி உற்பத்தியில் காற்று என்பது கச்சாப் பொருள். சரி! ஆனால் அந்த காற்றை தடுத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படி தடுத்து நிறுத்துவதற்கு இறகுகள் கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயந்திரங்கள் (உழைப்புக் கருவி – உற்பத்திக் கருவி) உழைப்பின் தலையீடின்றி உருவானதா? உழைப்பினால் உருவான ஒரு கருவியின் தலையீடின்றி, இயற்கையாக ஒரு திசையில் சென்றுகொண்டிருந்த காற்றை தடுத்து நிறுத்தும் அந்த நடைமுறை தொடங்காதவரை காற்றானது ‘இயற்கைப் பொருளா’ இல்லையா? (இல்லை என்று சொல்வோமானால், அது மார்க்சியர்களுக்கு சூழலியல் பார்வை இல்லை என்ற விமர்சனத்தில் தப்பில்லை எனலாம்).
அந்தக் காற்றை நாம் கச்சாப் பொருள் என்று சொல்வோமேயானால் – இயற்கையையே கச்சாப் பொருளாக வரையறுத்து – பல்வேறு உத்திகள் / தொழில்சார் சொற்கூறுகளை முன் வைத்து இயற்கையை கூறு போடும் முதலாளித்துவ சிந்தனையா இல்லையா? குறைந்தபட்சம் முதலாளித்துவ ‘கொள்ளைகளுக்கு’ வலுசேர்க்கக்கூடியதா இல்லையா?
அதேபோல் காட்டில் உள்ள மரம் என்பது இயற்கைப் பொருள் அதை வெட்டி பலகை ஆக்கிய பின்னர் நாற்காலி தயாரிக்க அப்பலகை கச்சாப் பொருளாகிறது. பொதுபுத்தியில் நாம் அந்த மரத்தை கச்சாப் பொருள் என்போம், ஆனால் அந்த மரம் இயற்கையிலேயே விளைந்திருந்ததா அல்லது காடு வளர்ப்பில், மனித உழைப்பின் மூலம் மரங்கள் வளர்க்கப்பட்டதா என்பதைப் பொறுத்து மரம் கச்சாப் பொருளாகும் அல்லது பலகை கச்சாப் பொருளாகும். இங்கேயும் உழைப்பின் தலையீடின்றி பொருள் உற்பத்தி (நுகர்வுக்காக, சரக்காக) சாத்தியமில்லை என்பதை விளக்கவே இப்படி ‘ஆழமாக’ வகைப்படுத்தி விளக்கப்படுகிறது. இந்தப் பகுப்பாய்வின்றி மரத்தை கச்சாப் பொருள் என்றால் காட்டை ஏலம் எடுக்கும் மூலதனமும், உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கும் திறனும் உள்ள முதலாளித்துவ ‘தொழிற்முறையை’ நாம் நியாயபப்டுத்துவதாகாதா?
ஒருவகையில் இது அறம்சார்ந்த பகுப்பாய்வையும் கோருகிறது. ஆனால் அந்த அறம் என்பது அகவாதமோ அல்லது கருத்துமுதல்வாதமோ கிடையாது. இது இயற்கை மீதான பொது உரிமையை (சொல்லப்போனால் மனித வாழ்விற்காகத் தேவைப்படும் பொருள் உற்பத்திக்காக மட்டுமே இது பொருந்தும்… அல்லையேல் யாரும் இயற்கை மீது உரிமை கோர முடியாது – இயற்கையான உழைப்பு சக்தியை விலைக்கு வாங்க முடியாது) நிலைநாட்டுவதற்காக, புரியவைப்பதற்காக முன்வைக்கப்படும் ‘பொருளாயத அறம்’. இதைப் புரிந்துகொள்ளும்போது நமக்கு ஒரு அறச்சீற்றம் ஏற்படுகிறது. அந்த அறச்சீற்றமானது ‘சரியான’ பகுத்தறிவினையும், பொருள்முதல்வாதப் பார்வையையும் ஊட்டுவதாக (உள்ளடக்கி) இருக்கிறது. அந்த வகையில் மார்க்சியத்தை பாமரருக்கும் புரியும் வண்ணம் கொண்டு சேர்க்கும் செயலை அது செவ்வனே செய்கிறது.
புரட்சியாளன் இறந்தாலும், வன்புணர்ச்சியாளன் இறந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று கூறும் மையவாதம்தான் அறவாதமே தவிர பின்னால் இருக்கும் நீதிக்கான காரணங்களை விளக்குவது அறக்காரணம்மல்ல. ஒரு மார்க்சியவாதிக்கு அறப்பார்வை கூடாது என்கிற மொண்ணையான விளக்கங்கள்தான் மார்க்சியத்தை வறட்டு வாதமாக மாற்றுகிறது.
இதனால்தான் மார்க்சியத்தில் அன்பு இல்லை, பண்பு இல்லை, என்று தூற்றுவதற்கு வாய்ப்பளிக்கிறது.
“இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.” என்ற மார்க்சின் வார்த்தைகள் கூட குடும்ப வாதமாகவோ,அறவாதகமோ உணர்சிவயப்பட்டதாகவோதான் இது போன்ற விவரணையாளர்களுக்குப் படுமேயன்றி அவற்றிற்குப் பின்னால் இருக்கும் நோக்கங்கள் அல்ல. இவர்களைப் பொறுத்தமட்டில் வெறும் காசு பணம் சம்பந்தப்பட்ட பொருளாதாரந்தான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம்.
மேலும், அறமே இல்லாத பொருளாதாரம் தான் முதலாளித்துவ பொருளாதாரம். அனைவருக்கும் அனைத்தும் வேண்டும் என்ற (மார்க்சின்) வார்த்தைகளுக்குப் பின் பொருளாதாரம் மட்டுமல்ல அன்பும், நேசமும், அறமும் இருக்கத்தான் செய்கிறது. இதை ஒற்றை வார்த்தைகளில் அறவாதம் என்று சுருக்கும் போக்கானாது மார்க்சியத்தை வெறும் இயந்திரப் பொருள்முதல்வாதமாக முன்வைக்கும் ஒன்றாகும்.
இது ஒருபுறமிருக்க, விளக்க முறையில் ஒரு மாறுபட்ட வழிமுறையைக் கையாண்டாலும், மார்க்சிய அடிப்படையிலிருந்து விலகாமல் மார்க்சிய பொருளாதாரத்தைப் புரியவைக்கும் ரங்கநாயகம்மா நூலை இவ்வளவு நுனுக்கமாக பிரித்து மேய்ந்து ‘திறனாய்வு’ செய்கிறார்களே (மகிழ்ச்சி)! இதேபோன்று தமிழ்நாட்டு ‘மார்க்சியர்கள்’ எழுதி தமிழில் வந்துள்ள எத்தனை ‘மார்க்சிய’ நூல்களை இப்படி அக்கு வேறு, ஆணி வேராகப் பிரித்து மேய்ந்திருப்பார்கள். அந்நூல்களில் உள்ள மார்க்சிய திரிபுவாதங்களையும், திருத்தல்வாதங்களையும் கண்டித்து விமர்சனக் கூட்டம் நடத்தி இருப்பார்கள்?
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டே ‘திரிபுவாதம்’, ‘திருத்தல்வாதம்’ செய்யும் ’எழுத்தாளர்கள்’, ‘அத்வைத, வைணவ, இத்தியாதி’ வகை ’மார்க்சியர்கள்’, அடையாள அரசியலை மார்க்சிய (கட்சி) அரசியலாக முன்வைக்கும் ‘பரந்த சிந்தனையாளர்கள்’, மார்க்சியத்தை வளர்த்தெடுக்கிறோம் என்று பல இசங்களை கூட்டுக் கதம்பம் செய்த ‘கலப்புவாதிகள்’, மண்ணுக்கேற்ற மார்க்சியம் ‘செய்கிறோம்’ எனும் ‘நவ உற்பத்தியாளர்கள்’ என்று இங்கு உள்ள ‘மார்க்சிய’ப் பட்டியல் ஏராளம். ஆனால், அதுபோன்ற நூல்கள் மற்றும் அச் ‘சிந்தனையாளர்களின்’ உள்நோக்கம், ஒவ்வாமை பற்றியெல்லாம் எத்தனை திறனாய்வு கட்டுரைகள் / நூல்கள் வெளிவந்திருக்கின்றன?
கிளிப்பேச்சு பேசுவதுதான் மார்க்ஸை/ மார்க்சியத்தை விளக்க ஒரே வழியென்பது அறிவு ஒவ்வாமை அன்றி வேறில்லை.
மார்க்சியத்தை பாமரர்களுக்கு, உழைக்கும் வர்க்கத்திற்கு கொண்டு சேர்ப்பதைவிட அதை ஒரு அறிவார்ந்த, எவரும் நெருங்க முடியாத ‘பூச்சாண்டி’ என்று முத்திரை குத்தி ‘அந்நியப்படுத்துவதுதான்’ இவர்களது பூரிப்பற்ற வகையிலான உள்நோக்கம் என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?
இவர்களைப் போன்றவர்கள், ஒட்டுமொத்தமாக மார்க்சியத்தை கொச்சைப் பொருள்முதல்வாதமாக மாற்ற முயல்கிறார்கள் என்பதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை. எளிமைப்படுத்துவதற்கும், கொச்சைப்படுத்துவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.
No comments:
Post a Comment