Jan 26, 2019

முதன் முதலாக: நினைவில் மிதக்கும் பனிக்குடம்

கொற்றவை
12.9.1999-ல் எனக்குத் திருமணம் நடந்தது. அவர் ஓர் ஓவியர். பின்னர் திரைப்பட இயக்குநரானார். தற்போது, அருங்காட்சியகம் மற்றும் கலைத்துறையில் பரிணமித்து வருகிறார். 2010-க்குப் பிறகு, நாங்கள் அந்த உறவை நட்புறவாக்கிக் கொண்டோம். அது இன்றளவும் நட்புறவாகத் தொடர காரணமாக, வாழ்வின் பிடிப்பாக இருப்பவள் எங்கள் மகள், வருணா!

‘வருணா’ என்றால் வண்ணங்கள், மழைக்கடவுள் என்றுதான் பொதுவாகப் பொருள் கொடுக்கின்றனர். ஆனால்,  ‘வருணா’ என்றால் ‘கடவுளுக்கெல்லாம் கடவுள்’ என்ற பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இல்லவே இல்லை எனும் எனக்கு, இப்பெயருக்கான பொருள்களில் பெரிய நாட்டமில்லை. ஆனால், தற்போது அவளுடனான 18 வருட உறவில் வருணா என்றால் தோழி, அன்பு, துணிவு, தெளிவு, புரிதல், அரவணைப்பு, தன்னம்பிக்கை, உற்சாகம், எல்லாவற்றுக்கும் மேலாக என் வாழ்வின் ஒரே காரண காரியமும் ஆகிறாள்.

என் அப்பா Xerox கடை வைத்திருந்தார். குடும்பமாக உழைத்தே நாங்கள் வாழ்ந்தோம். அதில் என் தாய், கடுமையான உழைப்பாளியாக்கப்பட்டவர். நாங்களும் (நானும் எனது தம்பியும்) 10 வயது தொடங்கி, எங்கள் கடையில் வேலைசெய்தே பிழைத்தோம். உழைத்து வாழ வேண்டும் என்பதை மட்டுமே என் தந்தை எங்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளார். (அவருக்கு மார்க்ஸியமெல்லாம் தெரியாது!) ஆண்கள் வந்துபோகும் இடங்களில், கடைகளில், பெண்கள் அமர்ந்து வேலைசெய்தால், இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளுக்குப் பல பட்டங்களை வழங்கி கௌரவிக்கும். அந்தப் பட்டங்களைப் பரம்பரைச் சொத்துமாக்கிவிடும். ஆகவே, நான் தினம் தினம் எங்கள் சாலையைக் கடந்து எங்கள் கடைக்குச் செல்லும் வழியில் பல ஆண்களின் ஆபாசப் பேச்சுகளையும் பட்டங்களையும் சுமந்தபடியே செல்வேன். அந்தச் சிறு வயது தொடங்கி, என்னுள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நான் வளர்ந்து பெரியவளாகி, ‘குடும்ப’ வாழ்வில் ஈடுபட்டு, பத்தினியாக (அடிமையாக வாழ்தல் என்பது அப்போது தெரியாதல்லவா) வாழ்ந்து, ‘சிறந்த குடும்பப் பெண்’ எனும் பெயரெடுப்பேன். அவ்வாழ்வில் கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை மட்டுமே பெற்றெடுப்பேன். இந்த உலகமே வியக்கும் அளவுக்கு அவளை ஓர் ஆளுமையாக வளர்ப்பேன் எனும் வேள்வித் தீ அது. என்மேல் திணிக்கப்பட்ட பாவங்களை மகள் என்னும் ‘திருவுரு’ கொண்டு கழுவிக் களைதல் எனும் பேதைமை மனம். இப்போது அந்த வீண் வீராப்பு வேடிக்கையாக இருந்தாலும், எங்களின் தாய் - மகள் உறவு, சுயமரியாதை, சமதர்மம் என்று வேறொரு தளத்தில் பரிணமித்து பெருவாழ்வு கண்டுள்ளது.

முன்னோட்டங்கள் முடிந்தது, இனி வருணா பிறந்த கதைக்கு வருவோம். 15.8.2000 அன்று வருணா பிறந்தாள். அன்றுதான் என் பிறந்த நாளும் என்பதுதான் இந்தக் கதையின் ஆர்வமூட்டும் அம்சம். எப்படி அவள் அதே நாளில் பிறந்தாள்?
நான் கருவுற்றிருந்தேன் என்பது அன்றைக்கு எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்திருந்தார். என் முகத்தைக் கண்டு, “என்னம்மா உண்டாகியிருக்கியா?” என்றார். “இல்லையே... அதெல்லாம் வாய்ப்பில்லை!” என்றேன். சிரித்துவிட்டுச் சென்றார். பிறகு, மதியம் வேறொருவர் வந்தார். அவர் கேள்வியெல்லாம் கேட்கவில்லை. “நீ உண்டாகியிருக்க. அது பெண் குழந்தை. மகாலட்சுமியே உனக்கு வந்து பிறப்பாள். குழந்தை வேண்டாம் என்று கருவைக் கலைத்துவிடாதே” என்று சொல்லிச் சென்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அடுத்த நாள், நான் உணவு உண்ணும்போது,  வாந்தி வந்தது. பரிசோதித்துப் பார்த்தபோது, நான் தாயாகி இருந்தேன். அந்த நிமிடம் முதல், அது பெண் குழந்தையாக இருக்க வேண்டுமே எனும் அந்த வேள்வித்தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தாயோ உறவுகளோ அருகில் இல்லாத நிலையில், என் வயிற்றை வளர்த்தது, மயிலாப்பூர் கிரிஜா கார்டனில் வசித்த அன்பு உள்ளங்களே. ஒரு காலனியே என் தாயாக மாறிய அனுபவக் காலம் அது.
வாய்க்கு ருசியாக அவர்கள் எனக்கு எவ்வளவு சமைத்துப் போட்டாலும், மூன்று உணவுப் பொருள்களுக்காக என் நா ஏங்கித் தவிக்கும் (craving). சொன்னால் சிரிப்பீர்கள், பழைய சோறு, கற்பூரவல்லி வாழைப்பழம் மற்றும் ஒரு நூடுல்ஸ் (பெயர் சொல்லக் கூடாதல்லவா). எவ்வளவு பழம் தின்றேன் என்று கணக்கே இல்லை. அதேபோல் அந்த நூடுல்ஸ் அவா இருக்கிறதே ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா... சரியாக மதியம் 12 மணிக்கு வெறி பிடித்தாற்போலாகிவிடும். வயிற்றுக்குள் இருந்துகொண்டு எப்படி ஆட்டி வைத்திருக்கிறாள் பாருங்கள்!

இப்படி நூடுல்ஸை குமுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், அதில் உள்ள MSG குறித்து எங்கேயோ படிக்க, தொற்றிக்கொண்டது பீதி. பயத்தில் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குன்றிவிடுமோ என்று அழுகையே வந்துவிட்டது. என் மருத்துவருக்குத் தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்லிக் கேட்டேன், கேவலமாகத் திட்டாத குறை. அதன் பிறகு, அதைக் கைவிட்டேனா என்பது  நினைவில்லை. ஏனென்றால், நாவை அடக்க முடியாதே!

இப்படியாகப் பல கலவைகளுக்கு மத்தியில் வயிற்றில் குழந்தை வளர்ந்தது.

எட்டாம் மாதம் நெருங்கும்போது, வயிறு வழக்கத்தைவிட மிகவும் பெரிதாக இருக்க, மருத்துவர் சற்று அச்சம்கொண்டார்.  ‘என்னதாம்மா பண்ற நீ’ என்பதுபோல இருந்தது அவர் பார்வை. “ஒருவேளை கர்ப்பகால நீரிழிவாக (Gestational Diabetes) இருக்குமோ என்னவோ தெரியவில்லை, பரிசோதித்துப் பார்ப்போம். அப்படியிருந்தால், பிரசவ தேதிக்குச் சில நாள்கள் முன்பே நீ மருத்துவமனையில் சேர வேண்டும்” என்றார். அச்சமும் குற்றவுணர்வும் பற்றிக்கொள்ள, மீண்டும் பதற்றம். அம்மா எங்கோ இருந்த நிலையில், மீண்டும் அக்கம் பக்கத்தவரே ஆறுதல்.

பிரசவ தேதி நெருங்கும்போது அம்மா வந்தார். ஆகஸ்ட் 22 என்று தேதி கொடுத்திருந்தார்கள். ஆனால், என் அம்மாவோ “கண்டிப்பாக அவள் உன் பிறந்த நாளன்றுதான் பிறப்பாள் பார்!” என்றார். அற்புதங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், அன்பு உள்ளங்களின் வாழ்த்தில் உண்மை இருக்குமல்லவா. ஆசையும் தொற்றிக் கொண்டது. கேட்கவா வேண்டும், சங்கு சங்கென்று சலங்கை கட்டிவிட்டதுபோல் ஆடத் தொடங்கியது மனம். 14 ஆகஸ்ட், 2000 அன்று, வலி வருவதுபோல் உள்ளது என்று சொல்லி நானே வலிந்து மருத்துவமனைக்குச் சென்றேன். உண்மையில் வலி உடலில் இருந்ததா அல்லது மனம் அதை வரவழைத்ததா என்று எனக்கு நினைவில்லை. பிரசவ அறை இல்லாத நிலையில், பொது வார்டில்தான் சேர்ப்பேன் என்றார்கள். “பரவாயில்லை டாக்டர், எனக்கு வலி அதிகரித்துவிட்டால் என்ன செய்வது? நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நாளை குழந்தை பிறந்துவிடும்” என்றேன். பின்னர் மாலையில் தனியறை கொடுத்து மாற்றினார்கள். மயிலாப்பூர் இசபெல் மருத்துவமனை, மருத்துவர் உஷா கிருஷ்ணகுமார். பெண்களின் கடவுளாக பார்க்கப்படும் மருத்துவர். இன்றைக்கு முதுமை எய்தியும், எத்தனை பிரசவங்களைப்  பார்த்துக்கொண்டிருக்கிறார் அத்தாய்.

எனக்கு வலியும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள். நான் ஹாயாக அமர்ந்துகொண்டு “வந்துடும்... வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில், படிகளில் இறங்கி நடப்பது (புவியீர்ப்பு விசை!), வராண்டாவில் நடப்பதென்று இயற்கைப் பிரசவத்திற்கான ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். “வலி வரவில்லை என்றால், உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். அடுத்த வாரம் நீ வந்தால் போதும்” என்றார்கள். பித்து தலைக்கேறிய பின்னர் அடங்க முடியுமா? படிகளில் ஏறி இறங்கத் தொடங்கினேன். செவிலியர்களும் கன்னியாஸ்திரீகளும் என்னைக் கண்டு நகைக்கத் தொடங்கி னார்கள். “ஏம்மா நல்லா இவ்ளோ தெம்பா நடக்குற, உனக்கு இப்பப் புள்ளை பொறக்கப் போகுதா?” என்றனர். “பிறக்கும்!” என்றேன்.
இரவு 10 மணிபோல் கன்னியாஸ்திரீ ஒருவர், என் யோனிக்குள் தன் கையைவிட்டுப் பரிசோதித்து, “குழந்தைக்கு இன்னும் தலை திரும்பவில்லை மகளே, திரும்ப வேண்டும், உனக்கு முதுகுத்தண்டு எலும்பும் விலகிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இயற்கைப் பிரசவம் நடக்கும்… பார்ப்போம்” என்றார். அறைக்குள் நடக்கத் தொடங்கினேன். வராண்டாவில் நடந்தேன். என் உயிரின் சாட்சியாக மற்றோர் உயிர் பிறப்பதற்கான அந்த வலி வரத் தொடங்கியது. உச்சத்தை அடையத் தொடங்கியபோது, “ஐயோ எனக்குக் குழந்தையே வேண்டாம், ஏன் பொம்பளைங்களுக்கு மட்டும் இந்த நிலை” என்று தொடங்கி, எல்லா வசைகளையும் பாடித் தீர்த்தேன். அப்போதும் அவர்கள் வந்து பார்த்துவிட்டு, “இது பொய் வலியாகவும் இருக்கலாம் பார்ப்போம்!” என்றார்கள். இரவு முழுவதும் வலியால் அமர முடியவில்லை, உறங்க முடியவில்லை. அழுகையும் புலம்பலும் கத்தலுமாகக் கழிந்தது. காலை ஏழு மணி, எழுந்து நின்றபோது தரை முழுதும் ஈரம். ‘பனிக்குடம்’ உடைந்துவிட்டது என்று பதற்றமடைந்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால், என்னால் நிற்கக்கூட முடியவில்லை.  உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தனர். பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ அறிவுறுத்தல்கள் தொடங்கின. குழந்தையை வெளியே தள்ள முக்க முக்க, மலம் வேறு வெளி வந்துகொண்டிருந்தது. ஏதோ ஊசி போட்டார்கள், எனிமா கொடுத்தார்கள். மயங்கினேனா என்பது எனக்கு நினைவில்லை. உயிர்ப் போராட்டமும் மற்றோர் உயிருக்கான போராட்டமும் உச்சத்தை அடைந்தது.

தலைக்கனம் பிடித்த ஓர் உயிர் என் வயிற்றுக்குள் கருவுற்றிருந்தது. ஆம், அதன் தலை அவ்வளவு பெரிதாக இருந்ததால் வெளிவரவில்லை. Vaccum போட்டு இழுக்கலாம் என்று ஏதோ பேசினார்கள். பின்னர் என்னமோ செய்தார்கள். சிவப்பும் கருமையும் பச்சையும் பிசுபிசுப்பான வெண்ணிற திரவமும் சுற்றியபடி ஓர் உயிர் பிறப்பெடுத்தது.

15.8.2000, செவ்வாய்க்கிழமை, காலை எட்டு மணி, ‘நூடுல்ஸும் வாழைப்பழமும் தின்று என்னைக் கொழுக்கவைத்த நாயே’ என்று என்னைத் திட்டுவதுபோன்ற ஓர் அலறல். ‘பெண் குழந்தை’ என்றனர். மயங்கி, ஓய்ந்து, விழித்து கையை நீட்டினேன் அவளைக் கேட்டு. “இரு தூய்மை செய்து கொண்டு வருவார்கள்” என்றனர். காற்றை உறிஞ்சிய பலூன்போல என் வயிற்றைக் கண்டு, “ஐயோ என் வயிற்றைக் காணோம்” என்று கத்தத் தொடங்கினேன். “எல்லாம் இங்கதாம்மா இருக்கு” என்று வலப்பக்கம் சுருங்கிய பைபோல் ஒன்றிக்கொண்டிருந்த அந்த வயிற்றுச் சதையை இழுத்துப் பிடித்துக் காட்டினார்கள். நினைத்தால் எல்லாம் கனவுபோலத்தான் உள்ளது.

இன்று 18 வயதாகிவிட்டது அவளுக்கு. மகளாய் இருந்தவள், அவளின் 10 வயதில், நான் மிகப் பெரிய முடிவொன்றை எடுத்தபோது, “உனக்கு எது சந்தோசமோ அதைச் செய் மம்மி” என்று கூறி எனக்குத் தாயானாள். இப்போது, தோள் கொடுக்கும் தோழியாக…

மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமடி!
நன்றி: விகடன் தடம் 
https://www.vikatan.com/thadam/2018-dec-01/column/146274-interview-with-writer-kotravai.html

Jan 25, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும் - தி.சு. நடராசன் முன்னுரை



அம்பேத்கரும் அவரது தம்மமும்
வசுமித்ர-வின் நூலுக்கு ஒரு முன்னுரை
தி.சு. நடராசன்

இன்றைய சமூகம் பற்றியும், சமூகநீதி பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிற உங்களுடைய வாசிப்புக்கு இப்போது வசுமித்ரவின் இந்த நூல் தயாராக இருக்கிறது. அம்பேத்கர் மற்றும் அவருடைய புத்தர் பற்றி விமர்சிக்கின்ற சாக்கில், வளர்ந்துவரும் இந்த சமூகத்தின் கரடுமுரடுகளையும் கன பரிமாணங்களையும் தீவிரமாக ஆராய்கின்றது, இந்த நூல்; தனது நிலைப்பாடுகளை அறிவறிந்து உங்கள் முன் வைக்கிறது. சாதி சமயம் இரண்டும் இந்த நாட்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகள். ஆயிரத்தெட்டு விவாதங்கள்; ஆனாலும் தீர்ந்து போகாத சொல்லாடல்கள். தொடரும் இந்தச் சொல்லாடல்கள் தலித்துக்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தமைவுக்குள் சிக்கிக்கொண்டுள்ளன. இன்றைய சமூக அரசியலில் முக்கியமாக அம்பேத்கரின் இது பற்றிய நிலைபாடுகளும் செயல்பாடுகளும் பரிசீலனைகளுக்கும் மறுவிவாதங்களுக்கும் உரியவையாக உள்ளன. இவை அவசியமாகவும் உள்ளன. வசுமித்ர இதன் அவசியத்தை உணர்ந்துள்ளார். தீவிரமாகப் பரிசீலனை செய்கிறார். யாரும் புனிதமானவர் இல்லை. எதுவும் புனிதமானது இல்லை. விவாதங்களை மேற்கொள்ளுகிற போது, விளக்கங்கள் மேலெழுந்து வருகின்றன. சமயம் - சாதி - அரசியல் என்ற இந்த மூன்றையும் அடிமொத்தமாக ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என்பது தர்மசங்கடமானது. துணிச்சலுடன் இந்தக் காரியத்தைச் செய்கிறது இந்த நூல். சமூகத்தைக் கூறுபடுத்திக் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலையில் நின்று கொண்டு சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்ற ஒரு போக்கில் எழுந்த அம்பேத்கரின் நோக்கத்தையும், முறையியலையும் வசுமித்ரவின் இந்த நூல் மறுவாசிப்பு செய்கின்றது. விரிவாகத் தனது விமர்சனத்தை முன்வைக்கின்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதன் அரசியல் நிர்ணய சபையில் முதல் சட்ட அமைச்சராக நியமனம் பெற்றவர் அம்பேத்கர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர். மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மூன்றுமுறை டாக்டர் பட்டம் பெற்ற அம்பேத்கர், மகாராஷ்டிராவில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். அங்கே தலித் இயக்கம் ஒன்றை உருவாக்கியவர். அரசியல் சட்டம் இயற்றுவதற்கு முன்னும் அதன் பின்னும் இந்த இயக்கமே அவருடைய செயற்பாடுகளின் மையமாக இருந்தது. தன்னுடைய உயர்ந்த கல்விக்கும் அதன் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகளுக்கும் காரணம் மதவுணர்வுகளே என்று சொல்லிக்கொள்ளும் அம்பேத்கர், அதே சமயம் வைதீக சமயமே சாதிய உருவாக்கத்திற்குக் காரணம் என்று காணும் அம்பேத்கர், புத்த சமயத்தில் சேர்ந்தார். புத்தரும் அவரது தம்மமும்என்ற ஒரு விரிவான நூலை எழுதினார். புத்தர் பற்றியும் அவருடைய சித்தாந்தம் பற்றியும் விளக்கமாக எழுதினார். பல தலித் மக்களை நாட்டார் மரபு வழிபாடுகளிலிருந்து மீட்டுப் பெருஞ்சமய நெறியாகிய புத்தசமயத்தில் இணைத்தார். சாதி, சமயம் அவற்றின் அரசியல் என்று மூன்றிலும் காலூன்றிய அம்பேத்கர், அதனையே தன்னுடைய அரசியலாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும், இவர் இன்றும் இவற்றின் கருத்தமைவுகளில் மையமாக இருக்கின்றார்.

சைவம், வைணவம் உள்ளிட்ட இந்து சமயம் மற்றும் சமண சமயம் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவின் வடக்கே, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்த சமயம், உலகின் பெரும் சமயங்களில் ஒன்றாக, மக்கள் தொகையில் ஏழு சதவீதம் அதாவது 490 மில்லியன் மக்கள் பெருக்கத்தோடு விளங்குகிறது. முக்கியமாக இது ஆசிய சமயமாகக் கருதப்படுகிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, மங்கோலியா, பூடான், ஜப்பான், சைனா, வியட்நாம் முதலிய நாடுகளில் இது ஆதிக்கம் செலுத்துகிறது.

சமயங்கள், அவற்றின் பிறப்பினடிப்படையில் பொதுவாக அன்பு, அறம், அமைதி, புனிதம் முதலியவற்றைக் கொள்கைகளாகவும், ஆதாரங்களாகவும் கொண்டவை என்று பிரகடனப்படுத்திக் கொள்கின்றன. உடல், உள்ளம், சொல், செயல் எனும் இவற்றில் நேர்மையையும், ஒன்றிணைவையும் வலியுறுத்தும் சமயம், ஆன்மீகத்தையும் அப்பாலைத் தத்துவத்தையும் வலியுறுத்துகிறது. ஆனால் பின்னர், தெளிவற்ற முரண்மை முதலியவற்றில் ஈடுபட்டு நடைமுறையில் அதிகார சக்தியாகப் பரிணமித்துள்ளது. கடவுளின் பெயர்களாலும் மற்றும் நம்பிக்கைகள் சடங்குகள் முதலியவற்றாலும் மனிதனை பேதப்படுத்துவதாகவும் அந்த பேதங்களிடையே ஆதாயங்களைத் தேடுவதாகவும், இவற்றின் பொருட்டு வன்முறைகளைத் தூண்டுவதாகவும் - இப்பொழுது என்று இல்லை - இங்கு - அல்லது அங்கு என்று இல்லை - நீண்ட காலமாகவே - பரவலாக - இது ஆகியுள்ளது. இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தும். பவுத்தத்திற்கும் இது பொருந்தும். கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உள்ள முரண்பாடுகளே இயல்பாகிவிடுகிறபோது, சமயம் அழகான போர்வைகளை இறுகப் போர்த்திக் கொள்கின்றது. சமீபத்திய உதாரணங்கள், இலங்கை, பர்மா என்ற மியான்மார். அங்கு நடந்த இனக்கலவரங்கள், அராஜகங்கள். இது பிக்குகளாலும், போதகர்களாலும், அரசு அதிகாரிகளின் கனமான நடைமுறைகளாலும் அவற்றின் துணையோடும் நிகழ்ந்திருக்கின்றது என்பதை யாவரும் அறிவர்.

வரலாற்றுப் போக்கில் எது சமயத்தை வழிநடத்துகிறது? அதனுடைய எந்த இயல்பு அல்லது நடைமுறை அதனை வழிநடத்துகிறது? அறிவு அல்ல, தர்க்கம் சார்ந்த கொள்கை அல்ல. ஆனால் உணர்ச்சிதான்; நம்பிக்கைதான். இது அறிவாளியாகிய அம்பேத்கருக்கு நன்றாகத் தெரியும். வெள்ளைக்கார நாட்டில் படித்து, இங்கு உள்நாட்டில் சமூக ஆதிக்கம் குறித்து அரசியல் பண்ணத் தெரிந்த அம்பேத்கர் எதனை ஆயுதமாகத் தரித்துக்கொண்டார்? சமயம்; அதற்கான உணர்ச்சி; அதற்கான நம்பிக்கை. இது தனக்கென ஓர் உள்ளுணர்வினை அல்லது தெளிவினை ஒழுங்குபடுத்திக்கொள்ள அல்ல; பிறரின் அத்தகைய உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் எளியதாகவும் வலியதாகவும் செயல்படவைக்கக் கூடிய குறிப்பிட்ட சில குழுவினரை இலக்காகக் கொண்டது. அவருடைய ஆங்கிலக் கல்வியும் திட்டமிட்ட செயல் திறனும் அவரை இந்தச் சமூகத்தின் மீது செயல்படவும் சிந்திக்கவும் வைத்தன. ஆனால் இதற்கான அரசியலை - அரசியல் இயக்கத்தை - அவர் கண்டறியவில்லை. அதற்கான தேடுதலில் ஈடுபடவில்லை. சமயத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த அவர் சமூக மாற்றத்திற்குச் சமயமே ஆதாரமாக இருக்க முடியும் என்று கருதினார்; நம்பினார். ஒரு சமயத்தை இதற்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டியவரானார். இந்திய தேசியத்தில் பெருத்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட அவருக்கு, வெளிநாடுகளோடு சேர்ந்து பிறந்த கிறித்தவமோ, இசுலாமியமோ மாற்றுக்களாகத் தோன்றவில்லை. அதேபோது, இந்தியாவில் பிறந்த வைதீக சமயமோ பிறப்பிலேயே ஆச்சாரங்கள் மூடநம்பிக்கைகளால் அழுந்திக்கிடந்தது. ஆனால் இந்தியாவில் பிறந்த இன்னொரு சமயமாகிய புத்தசமயம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. மாற்றாகத் தோன்றியது. தன்னுடைய வெளிப்பாடுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாகத் தெரிந்தது. இதன் காரணமாக அம்பேத்கர் புத்த சமயத்தில் சேர்ந்தார். புத்த சமயத்தை விளக்கினார். புத்தர் பற்றி நிறைய எழுதினார்; புத்த சமயத்தில் தன் பகுதித் தலித் மக்களை மதமாற்றம் செய்தார்.

அப்படியானால், என்ன எதிர்பார்க்கத் தோன்றுகிறது? சாதி வேறுபாடுகள் இல்லாத மனிதகுல விடுதலையை இவர்கள் முன்மொழிந்தார்கள் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. ஆனால் பேதங்களும் பிளவுகளும் சண்டைகளும் சச்சரவுகளும் வெவ்வேறு வடிவங்களில் பெருகிக் கிடக்கும் இந்தச் சமூகத்தில் அதற்கான காரணங்கள் என்னவாக, எப்படியாக இருந்தன என்றோ, அந்தக் காரணங்களை வேரோடு சாய்த்து அழிப்பது எப்படி என்றோ புத்தரோ, அம்பேத்கரோ பேசினார்களா என்ற ஒரு வினா எழுகிறது. புதிய சமூகக் கட்டுமானத்தை முன்மொழிவதற்கு, வரலாற்றியல், அறிவியல் பார்வைகள் அவசியப்படுகின்றன. அதெல்லாம் இல்லாமல் மாறி மாறிச் சமயத்தைத் தோளில் சுமந்து கொண்டு மனிதமேம்பாட்டை எப்படியாக்கும் சமைத்திடமுடியும்? எதன் மீது பேதமற்ற சமூகத்தைக் கட்ட முடியும்? மேலும் இந்தப் பேதம் என்பது - வேறுபாடு என்பது - வெறுமனே சாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையா? அப்படியானால் இந்து சமயத்தைச் சாதிகளற்ற சமயமாக மாற்றினால் இது தீர்ந்துவிடுமா? கருத்து அடிப்படையிலான சிந்தனைகளுக்கு மாற்றாகப் பொருள் அடிப்படையிலான ஆய்வுமுறைகளை முதன்மைப்படுத்துகின்ற போதுதான், இந்தச் சமூக முரண்பாடுகளின் உண்மைகளை உசாவ முடியும். முரண்பாடுகளின் உண்மைகளை அறிகின்ற போதுதான் அந்த முரண்பாடுகளை வேரோடு களைய முடியும். ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கவுதம புத்தருக்கு இது அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சர்வதேச தொழில் குழும முதலாளித்துவம் வளர்ந்து, தனது சாதுரியங்களையும் சாதனைகளையும் காட்டி வருகின்ற இந்த நவீன காலத்தில் வாழ்ந்து, செயல்பட்ட அம்பேத்கருக்கு இது மிகவும் அவசியமல்லவா?

சமூக அமைப்பினைக் கூறுபடுத்திச் சாதியப் பிரச்சினையை மட்டும் தனிமைப்படுத்தி அதனைத் தனித்துவமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது.
சமூக மாற்றம் என்பது, ஒன்றிணைந்த ஒரு ஒட்டுமொத்தமான செயல்பாடு ஆகும். அப்படியென்றால் சமூகத்தை கூறுபடுத்திச் சாதியப் பிரச்சினையை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு கருதுகோளை உருவாக்குவது என்பது சொல்லாடலின் நோக்கத்தைப் பிறழ்பட்டதாக ஆக்கிவிடும். அதுவும் பொருளாதார உறவுகள் அடித்தளமாக இருக்கின்றபோது சட்டம், சாதி, சமயம் முதலியவை மேல்தளங்கள் என்ற நிலையில் அடித்தளத்தின் செயல்பாட்டையும் உறவுகளையும் சார்ந்தே அமைகின்றன. இதனைப் பிறழ்பட விளக்க முற்படுகிறபோது விவாதத்தின் நோக்கம் வேறுபட்டதாக - பிழைபட்டதாகவே - அமையும். சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இதனைச் செய்தாலும், அவருடைய நோக்கம் அப்படிப் பிழைபட்டதாகத்தான் அமையும். இப்படியிருக்கின்ற போது மக்களின் வேதனைகள் பற்றியும், சாதிப் பிரச்சினைகளின் வன்கொடுமைகள் பற்றியும் தீர்வு கண்டிட முடியுமா?

எனவே சாதியத்தை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அம்பேத்கரியத்தில் இல்லை; பொருளியல் சார்ந்த உறவுகளையும் அவற்றிற்கிடையேயுள்ள, தர்க்க ரீதியான முரண்பாடுகளையும் பற்றிப் பேசுகிற விஞ்ஞானத்தில் அதாவது மார்க்சியத்தில்தான் இருக்கிறது. இதனுடைய அவசியத்தை, வகை தொகைபட விளக்குகின்றார், மார்க்சிய அறிஞர் ரங்கநாயகம்மா. (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை; தமிழ் மொழிபெயர்ப்பு, கொற்றவை) ரங்கநாயகம்மாவின் விளக்கமும் விமர்சனமும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கு தேசம் மாநிலங்களில் பிரசித்தமானவை. அம்பேத்கரையும், புத்தர் அவரால் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார், எவ்வாறு வழிபடப்படுகிறார் என்பதையும் ரங்கநாயகம்மாவின் வழி நின்று தமிழ்ச் சூழலில் வைத்து விளக்கிப் பேசுகின்றார் வசுமித்ர.

இப்படி உரையாடலின் அவசியத்தை தமிழ் உலகம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நம்மோடு அண்மையில் வாழ்ந்த அம்பேத்கர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவுதம புத்தரைத் தன்னோடு அரவணைத்துக்கொண்டு பேசுகிறார். புத்தரை ஒரு வரலாற்று நாயகர் என்று பார்ப்பது ஒருவகை. இது ஒரு முக்கியமான இயல்பு. அப்படிப் பார்ப்போமானால், வரலாற்று மெய்மைகளோடும் தேவைகளோடும் தாக்கங்களோடும், தர்க்கங்களோடும் பார்த்தும் பேச வேண்டும். அப்படியில்லாமல் வழிபடு பொருளாகப் பார்ப்பது என்பது, அதுவும் குறிப்பாகப், பெரும்பாலும் ஒரு பகுத்தறிவாளராகவே தன்னை முன்னிறுத்திய ஒரு பெரும் சிந்தனையாளரைப் பார்ப்பது என்பது, தங்கக் கூண்டுக்கள் அவரை அடைப்பது போன்றது. கர்ப்பகிருகத்துக்குள் பூட்டிவைத்து பூசிப்பது போன்றது. இந்திய அரசாங்கத்துக்கு அரசியல் சட்டநிர்ணயம் செய்திட்ட அம்பேத்கர், புத்தரை இப்படிக் கொண்டு வருகிறார். மேலும், இங்கே காவிய நாயகனாக வருணிக்கிறார்; இறுதியில் ஆகப் பெரும் கடவுளாக உருமாற்றுகிறார், வழிபடுகிறார்.

புத்தரை அழகுடையவராக ஆராதனை செய்கிறார் அம்பேத்கர். உடலின் குறிகள் என அழகின் அம்சங்களைச் சித்தரிக்கின்றார். அவருடைய உயரம், கம்பீரமான தோற்றம் எல்லாமே வருணிக்கப்படுகின்றது. புத்தரைக் கண்ட யாரும் அவருடைய கால்களைக் கழுவிவிட வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் காட்டுகிறார். பெண்ணோ, ஆணோ யார் பார்த்தாலும் புத்தரிடம் மறுயோசனையின்றி மயங்குவர், சேவிப்பர் என்று அம்பேத்கர் சொல்லுகிறார். இவரை மயக்குவதற்காக அழகிய பெண்களை ஏவினாலும் கொஞ்சமும் அசையாதவர் புத்தர். அவரை அணுகும் யாரும் அவருடைய பவுத்த நெறிக்கு மாறிவிடுவர். அவருடைய உருவத்தைச் சுற்றி எப்போதும் ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இவ்வாறு மீமனிதராக அவரைக் காட்டுகிறார் அம்பேத்கர். புத்தருடைய பேச்சைக் கேட்டு அடிமைகள் ஒவ்வொருவரும் சுதந்திர மனிதர்களாகிறார்கள். மன்னர்கள் பிரபுக்கள் எல்லோரும் புத்தருடைய நெறிக்கு மாறிவிடுகிறார்கள் புத்தர் பல அற்புதங்கள் நிகழ்த்துகிறார். இப்படிப்பட்ட சொல்லாடல்கள் மூலம் அம்பேத்கர் புத்தரை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அவருடைய நியாயங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.

இதற்காக, வரலாற்றியல், அறிவியல் வழிப்பட்ட முறையியல்களை அவர் ஒதுக்கி வைத்து விடுகிறார். அகவயப்பட்ட - உணர்ச்சிவயப்பட்ட - பக்திவயப்பட்ட - வழியே அவர் பயணிக்கிறார். நாட்டார் வழிப்பட்ட மரபுகளையும், வழிபாடுகளையும் சார்ந்திருந்த தலித் இனமக்களை ஈர்ப்பதற்குரிய ஒரு திட்ட வழிபட்ட சமயப் பனுவலாக ஆக்குவதற்கே புத்தரின் தம்மம்பற்றிய அம்பேத்கரின் விளக்கம் அமைந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

பெருஞ் சமயங்கள் பேசப்படுகின்ற வெளியில், கடவுள்கள் பெயராலும் மகான்கள் பெயராலும், அவ்வப்போது கட்டமைக்கப்பட்ட புராணிக மரபுக் கதைகள் மூலமாகவும், வரலாற்றுத் துளிகள் மூலமாகவும், போதனைகள் மூலமாகவும் புனிதங்கள் கற்பிப்பது தொடர்ந்து காணப்படுகின்றது. நம்மிடம் வார்த்தைகளுக்கோ பஞ்சம்? வார்த்தைகள் வக்கிரம் தெரியாமல் வெளிப்படுகின்றபோது, வக்கணைகள் வரலாறுகளை மறைத்துவிடுகின்றன. மினுமினுப்புகள் மேதாவிலாசங்களின் முகவரிகள் ஆகின்றபோது, செயல்பாடுகளின் திசைகள் சிதறிப்போகின்றன.

அம்பேத்கர், புத்தரின் கதைகளையும், போதனைகளையும், அவருடைய வாழ்க்கைப் பயணங்களையும் அவை தந்துவிட்டுப் போன செய்திகளையும் மறுயோசனையின்றிப் - பரிசீலனை எதுவுமின்றி - ஜோடனையுடன் அழகுபடுத்தித் தருகிறார்.

உங்கள் கையிலே இருக்கும் இந்த நூலில், ஆசிரியர் வசுமித்ரவின் சொல்லாடல், அம்பேத்கர் பற்றியும் புத்தர் பற்றியும் திட்டவட்டத்தோடு மறுவாசிப்புச் செய்யத் தூண்டுகிறது. யாரும் எதுவும் புனிதமில்லை என்று ஆகிப்போகிறபோது, வழிமறித்து மறுபரிசீலனை செய்வதும், தொடர்ந்து விவாதமின்றி பேசப்பட்டு வருகின்றவற்றை வம்புக்கு இழுப்பதும், அதன் மூலம் மறுகட்டமைவுக்குத் தூண்டுவதும் தவிர்க்க முடியாதவை. தேவையானவை, ஆசிரியர் வசுமித்ரவின் வார்த்தைகள், யோசிக்க வைக்கும் வார்த்தைகள். அம்பேத்கரின் பார்வையிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றும் புத்தரின் முகம் பார்த்துப் பேசுவது ஆசிரியரின் இலக்கு. தமிழ்ச்சூழலில் இதற்கான ஒரு தேவையிருக்கின்றது என்பதாக உணர்த்திக்கொண்டு போகிறார் ஆசிரியர்.

அம்பேத்கரும் அவரது தம்மமும்என்னும் இந்நூலின் மூலமாக, ஆசிரியர் வசுமித்ர இந்தத் தேவையை சமரசமின்றி அறியப்படுத்துகிறார். விரிவான, விளக்கமான விவாதப் பொருட்களுடன் தன்னுடைய கருத்தாடலை முன்வைக்கிறார். இது நிச்சயமாக சாதி, சமயம் உள்ளிட்ட வெளிப்படையானதொரு உரையாடலை இங்கு நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கிறார். இது நியாயமான எதிர்பார்ப்பு.

(குறளி பதிப்பகம் வெளியீடு, 920 பக்கங்கள் விலை ரூ. 890/-)

வேலை நிறுத்தம் நம் உரிமை


வேலை நிறுத்தங்கள் குறித்த எதிர்மறையான உணர்வை ஏற்படுத்துவதில்தான் அரசு குறியாக இருக்கிறது. அரியலூரில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலைப் போராட்டம் என்றொரு செய்தியைப் பார்த்தேன். இது அறியாமையால் நிகழ்ததா அல்லது ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா தெரியவில்லை. மேலும், 6,500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப் போவதாகவும் (கல்விச் சேவைக்கு இடையூறு ஏற்படாதிருக்க) அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. ஆனால் அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ அல்லது தனியார் தொழிலாளர்களோ வேலை நிறுத்தம் செய்கையில் அவர்களை ஒடுக்கும் வண்ணம் வேறொருவரை வேலைக்கு எடுப்பதென்பது தொழிலாளர் விதிகளில் அடிப்படை உரிமை மீறலாகும். தம் உரிமைகளுக்காகப் போராடுவது, வேலை நிறுத்தம் செய்வதென்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை.
பேராசை நிறைந்த தனியுடைமை பொருளாதார உற்பத்தி முறையினால் இங்கு ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட இல்லாமை தலைவிரித்தாடுகிறது. ஆகவே மக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அரசுகளும், தனியார் முதலாளிகளும் தங்களுடைய கையாலாகாதனத்தை, உழைப்புச் சுரண்டலை மூடி மறைக்க வேலை நிறுத்தம் என்பது ஏதோ தொழிலாளர்களின் பேராசை செயல் என்பதாக கட்டமைக்கின்றன. இதனால் பொதுமக்களிடையே ஒரு வெறுப்பை உண்டாக்கிவிட முடிகிறது. ஒருபக்கம் போட்டி மனப்பான்மை, மறுபக்கம் வெறுப்பு இரண்டையும் ஊட்டி வளர்த்து தொழிலாளர் வர்க்கத்தையே பிளவுபடுத்தி, ஒருவரோடு மற்றொருவர் மோதச் செய்து குளிர் காய்கின்றனர்.
இந்த சூழ்சிக்கு பொதுமக்கள் பலியாகக் கூடாது. வேலைவாய்ப்பு தேடும் புதியோர், மற்றோர் யாராக இருப்பினும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பதை நம் அனைவருக்குமான உரிமைப் போராட்டமாக காண வேண்டும்.
நண்பர்களே, அரசு விடுக்கும் இந்த தற்காலிக ஆசிரியர் பணிக்கான அழைப்பு (எந்தப் பணியாயினும்) நம் சக தொழிலாளர்களை, தோழர்களை வஞ்சிக்கவும், ஒடுக்கவும், அச்சுறுத்தவுமே என்பதை புரிந்துகொண்டு அரசின் அழைப்பை புறக்கணியுங்கள். இந்தப் புரிதலை மேலும் பரவலாக்குவது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழர்களின் கடமையாகும்.
எந்த ஒரு வேலை நிறுத்தமும் அதிகாரத்திற்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டமே. அதற்கு சுரண்டப்படும் வர்க்கத்தை சேர்ந்த அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்.
உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக!
(25.1.2019)
புகைப்படம்: விகடன் தளம்
#ஜாக்டோ_ஜியோ #JACTO_GEO #Workers_Strike

Jan 17, 2019

சாதி வெறி யாரையும் விட்டுவைப்பதில்லை


#வசுமித்ர அரிவாள் வெட்டு! என்னவென்று தெரியாத நண்பர்களுக்காகமார்ச் 17, 2010 (நான் வசுவுடன் இணைந்து 3 மாதங்கள் இருக்கும்) அன்று இரவு 9.30 மணிக்கு இருவரும் கை கோர்த்துக் கொண்டு கே.கே நகர் அழகிரிசாமி சாலை அருகே நடந்து செல்லும் போது ஒரு ரௌடி கலாச்சார காவலராக ஏய்! கையை விட்டுட்டு நடங்க, உங்களை மாதிரி ஆளுங்களால தான் கலாச்சாரம் கெடுதுஎன்று எச்சரிக்கை விடுத்தான். அதனைத் தொடர்ந்து வசு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வாக்குவாதம் செய்தான். பேச்சில் தனது பெயர், ஊர், தான் செய்யும் வேலைகளைக் குறிப்பிட்டு இதுதான் என் பயோடேட்டாஉன்னைப் பற்றி சொல்லு, யார் நீயார் உன் தலைவன் என்று கேள்விகளை எழுப்பஅந்த ரௌடி வசுவின் சாதியை உணர்ந்துகொண்டான். அதனால் தான் வெட்டினான்! அதாவது சாதியப் பெருமையையும், ஆணாதிக்கப் பெருமையையும் காத்துக்கொள்ள வெட்டினான். அதாவது வெட்டியவன் ‘சாதி’, வெட்டப்பட்டவன் சாதிஒன்று தான். (குறைந்தது அந்த மூன்றில் ஒன்று)

ஊர் வழக்கில் சொல்வதானால் சொந்த சாதிக்காரன் தாம்போய்வெட்டினான். (வசு பிழைத்ததே பெரிய விசயம். அதன் பிறகு அந்த வெட்டிய நபரையும் எனது பின்னணியையும் இணைத்து இங்கு வதந்திகள் பரப்பப்பட்டு நான் எதிர்கொண்டவை ஏதும் ... சாதி எந்த விதத்துலையும் எங்களை காப்பாத்தல... அதுக்கு அப்பன்களா சொல்லிக்கிற ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளும் தான்)..

ஆக, சாதி எல்லா சாதியினருக்கும், எல்லா வர்க்கத்தினருக்கும் எமன் தான். தன் பெருமையை காத்துக்கொள்ள அது எவரையும் பாவம் பார்த்து விடப்போவதில்லை. வெட்டுக் குத்து இதெல்லாம் ஆண்மை, வீரம், சாதியப் பெருமை, ஆண்மை என்று ஆணாதிக்க வெறி, ஆதிக்க வெறியை ஏற்றிவைக்கும். இதற்கு சாதிய பேதம் கிடையாது. 

சொந்தப் பிள்ளையையே வெட்டிக் கொல்லும் அளவுக்குத தந்தையர்களை, சகோதரர்களை, உறவினர்களை, ஊர்க்காரர்களை வெறியேற்றக் கூடியது சாதி. இதில் இழப்பு, வலி, அவமானம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமன்று. (அவர்களின் பாடுகளை குறைத்து மதிப்பிடவில்லை).

இதுபோன்று கூலிக்கு ரௌடிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாறி தம் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்களில் (பெரியவர்களும்), பெரும்பகுதியினர் இடைநிலை சாதிகளில் உள்ளனர் என்றும் சொல்லலாம். குறைந்தபட்சம் தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னர் பகுத்தறிவு, சமூக நீதிக்கான தேவை, சாதி ஒழிப்பு அரசியல் விழிப்புணர்வு என்ற வழிகாட்டுதல்கள் தலித் மக்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இடைநிலை சாதி மக்கள் இன்னும் சாதிய அரசியல் தலைமைகளுக்கே பலியாகி கிடக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அம்மக்களிலும் ஆதிக்க சக்திகளாக இருப்பது சிறியளவிலான கூட்டமே. மீதம் மூளை உழைப்பாளிகளாக (ஓரளவுக்கு), கூலி உழைப்பாளிகளாக (பெரும்பான்மை), விவசாயம் பொய்த்துப் போய் பாட்டாளிகளாக மாற வேண்டியவர்களாக, வேலைவாய்ப்பற்றவர்களாக திரிந்துகொண்டிருக்கிறார்கள். கடும் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள்.

இந்தச் சுரண்டல் என்பது சாதி-வர்க்க ரீதியிலானது என்பதை புரியவைப்பதில் தான் நம்முடைய சமத்துவ, சமூக அரசியல் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையிலான சமூக-மத அடையாளங்களை முன்வைத்து அரசியல் செய்வதன் மூலம் அதை புரியவைக்க முடியாது.
போட்டி நிறைந்த பொருளாதார அமைப்பில் ஆதிக்க சக்திகளும், ஆளும் வர்க்கமும் இத்தகைய அடையாள அரசியலை மற்ற தரப்பினருக்கான அச்சுறுத்தலாக முன்நிறுத்தி, ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்திவிடும். அது மீண்டும் சாதியே (அந்தந்த சமூக அடையாளங்களே) தனக்குப் பாதுகாப்பான வளையும் என்று நம்ப வைக்கும். சாதியம்தலைகீழ் சாதியம் என்று மாறி மாறி அது சுழலும். இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. சாதி வெறும் மனநோயோ அல்லது மதப் பிரச்சினையோ, ஒடுக்குமுறை கருவியோ மட்டுமல்ல. அது ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் கருவியும் கூட.

சாதி ஒழிப்பென்பது ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேவை மட்டுமன்று. குறிப்பாக பெண்கள், காதலர்கள், முற்போக்காளர்கள், அரசு மற்றும் ஆளும் வர்க்க எதிர்ப்பாளர்கள் எல்லாம் பாதுகாப்ப வாழ சாதி ஒழிப்பென்பது அனைவருக்குமான தேவையாகத்தான் இருக்கிறது. பிறப்பின் அடிப்படையில்தான் சாதி ஒழிப்பு உணர்வு ஏற்படும், அவர்கள் தான் அதற்கு விசுவாசமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் என்னும் பேச்சுகள் எல்லாம் முட்டாள்தனமன்றி வேறில்லை. ஏனென்றால் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் வரையில் அனைத்து ஆதிக்கங்களும் அந்த வர்க்கத்தையும் பாதிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய விடுதலையின்றி தன் விடுதலையும் சாத்தியமில்லை என்ற அறிவைப் பெற மார்க்சியம் உதவுகிறது. அதைக் கற்றரிந்தோருக்கு எந்த ஒரு ஆதிக்கத்திற்கு துணை நிற்பதும் தனக்குத் தானே சவக்குழி தோண்டிக் கொள்வதற்குச் சமம் என்று தெரியும்.

ஆகவே அடையாள அரசியல் மீதான விமர்சனங்களை சாதியை வைத்துக் காணும் நபர்களுக்கு - காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரியும்.


Jan 15, 2019

ரோசா லுக்சம்பர்க் & லீப்னெஹ்ட் கொல்லப்பட்ட நூற்றாண்டு



4.  கொலை

கார்ல் லீப்னெஹ்ட்டும், ரோசா லுக்சம்பர்க்கும் வில்மெர்ஸ்டார்ஃபை அடைந்த போது அவர்களைச் சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருந்தது. எதிர்ப் புரட்சிக் குழுக்களின் எண்ணற்ற கூலிப் படைகள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ரஷ்ய உயர் குடியினரால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விஸ்ட் எதிர்ப்புக் கழகம், இதர பகுதிகளிலிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு கொலை முயற்சியைத் தொடங்கியது. அதற்கு ஜெர்மனி முழுக்க கூலிப்படைகள் இருந்தன, கார்ல் லீப்னெஹ்ட், ரோசா லுக்சம்பர்க் மற்றும் கார்ல் ரடேக்கின் தலைக்கு விலை நிர்ணயித்தது.  டிசம்பர் 7 அன்று கார்ல் லீப்னெஹ்ட்டைக் கைப்பற்ற முனைந்த பெர்லின் நகர கமாண்டட்டின் கூலி பெற்ற தரகரான ஃபான் டிஸ்காவும் அதில் இருந்தார். நகர கமாண்டண்டின் ஆணையின் பேரில் எர்னஸ்ட் மேயர் மற்றும் ஜியார்ஜ் லெடெபாரைக் கைது செய்தவர்களில் ஃபான் டிஸ்காவும் ஒருவர், லெப்டினன்ட் கியுர்கென் மற்றொருவர்.  பெர்லினின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நகரம் முழுவதும் மற்றும் வில்மேர்ஸ்டார்ஃப் உட்பட நடுத்தர வர்க்க  புற நகர் பகுதிகளிலும் தங்களது தரகர்களை நியமித்திருந்தது. குதிரைப்படைப் பிரிவின் தற்காலிகத் தலைமையகம் இருந்த எடென் ஹோட்டலில் இருந்து ஐந்தாம் படைத் தரகர்களும் இதர உளவு நிறுவனப் பிரதிநிதிகளும் ஏவப்பட்டனர். சமூக ஜனநாயகக் கட்சியால் உருவாக்கப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியின் துணை அமைப்பு, பிரிவு 14 என்று அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட ரீஷ்டாக் படைவகுப்பும் ஒரு உளவு நிறுவனத்தை வைத்திருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பின்னர் அவதூறு வழக்கின் கீழ் விசாரிக்கப்பட்டன. அப்போது, ஃபிலிப் ஷீடெமான் மற்றும் ஜியார்ஜ் ஸ்க்லார்ஜ் (ஊழல்வாதி என்று பின்னர் பொதுத் தளத்தில் அடையாளம் காட்டப்பட்டவர்) ஆகியோர்களால் கார்ல் லீப்னெஹ்ட் மற்றும் ரோசா லுக்சம்பர்க்கின் தலைகளுக்கு 1,00,000 மார்க் பணம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது  நீதிமன்றப் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிவு 14 இன் தலைவர் ஹெசல்,படை வகுப்பின்  சம்பள அதிகரி சொன்னென்ஃபெல்,க்ராஸ்னிக் எனும் அதிகாரி எல்லோரும் சேர்ந்து, ஃபிலிப் ஷீடெமானின் மருமகனான ஃப்ரிட்ஜ் ஹென்க் என்பவர் அந்த இரண்டு புரட்சிகரத் தலைவர்களின் தலைகளுக்கும் விலை நிர்ணயித்தார் என்றும், காரியம் முடிந்த அடுத்த கணம் பணம் கைக்கு வரும் என்று கூறியதாகவும்  சத்தியப் பிரமாணம் செய்தனர். படை வகுப்பின் மற்ற உறுப்பினர்களில் பலரும் சாட்சிக் கூண்டில் ஏறி முந்தய சத்தியப் பிரமாணத்தை உறுதி செய்தனர். லீப்னெஹ்ட் மற்றும் லுக்சம்பர்கின் கொலை ஆணை எழுத்துப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும், படை வகுப்பு முழுதும் அது பொதுவாக அறியப்பட்டிருந்தது, இரண்டில் எவர் ஒருவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து வந்தால் 1,00,000மார்க்குகள் காத்திருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தது. 

பூர்ஷுவாக்கள் மற்றும் சமூக ஜனநாயக நிறுவனங்கள் என்று இரு தரப்பும் பாட்டாளி வர்க்கத்தின் அந்த இரு புரட்சித் தலைவர்களையும் கொன்று குவிக்கப் போட்டி போட்டுக் கொண்டு தங்களால் இயன்றதைச் செய்தனர். அவர்களுடைய இணைப்பு அலுவலர்கள் பெர்லின் நகர கமாண்டண்ட் அலுவலகத்தில் நாற்காலிகளிட்டு அமர்ந்திருந்தனர்.

கொலைக்கான சூழலும் தயார்படுத்தப்பட வேண்டியிருந்தது. புரட்சியின் தொடக்க நாளில் இருந்து, ஒரு அபஸ்வரத்தில் இசைக்கப்பட்டு வந்த ஸ்பார்ட்டகஸ் எதிர்ப்புப் பிரச்சாரமானது  இப்போது ஒரு வெறிபிடித்த பிரச்சாரமாக மாறியது. எதிரப் புரட்சியின் தூதுக்குழுவினர் சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகளைக் கொன்று குவித்தனர். பத்திரிகைகள் மீட்பர்களைப்புகழ்ந்து கீதம் இசைத்தன.  இரத்தமும், மூளையும் சிதறிக் கிடந்த அந்தக் கோட்டைகளில் தொழிலாளர்கள் வீழ்த்தப்படுவதைப் பத்திரிகைகள் ஒரு இன்பவெறியுடன் வர்ணித்துக் கொண்டிருந்தன. இந்த மனசாட்சியற்ற தூண்டுதல் பிரச்சாரத்தின் விளைவால், நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர வர்க்கங்களுள் கொலைத் தாகம் மேலோங்கியது. சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்நபர் கமாண்டோக்களின் துப்பாக்கிகளின் முன் நிறுத்தப்பட்டார். இறந்த புரட்சிகரத் தொழிலாளர்கள் மத்தியில் பல அப்பாவி மக்களும் இருந்தனர். இந்த அறப்போர் இறுதியில் லீப்னெஹ்ட் மற்றும் லுக்சம்பர்க்கின் குருதியை வேண்டுவதாக, சச்சூர்லீனியாவுக்கு (சனிக் கடவுளுக்கு பலி கொடுத்து மேற்கொள்ளப்படும் ஒரு விழா) மணிமுடி சூட்ட வேண்டும் எனும் அளவுக்குப் பெருகியது. சமூக ஜனநாயக ஃபோர்வார்ட்ஸ் இதழ் ஜனவரி 13 அன்று ஆர்துர் ஜிக்லரின் ஒரு கவிதையை வெளியிட்டு இந்த வெட்கங்கெட்ட செயலை மூடி மறைக்க முனைந்தது:

வீல் ஹுண்டர்ட் டோடே இன் ஐனர் ரீஹ்’-
ப்ரொலேடெரியெர்!
கார்ல், ரோசா, ரடேக் உண்ட் கும்பனியே
எஸ் இஸ்ட் கெய்னர் டாபேய், எஸ் இஸ்ட் கெனர் டாபெய்!
ப்ரொலெடரியெர்! 1

1  நூற்றுக் கணக்கானப் பிணங்கள் ஒரு வரிசையில்
    பாட்டாளிகளே!
    கார்ல், ரோசா, ரடேக் மற்றும் இதர உறுப்பினர்கள்., -
    அங்கு ஒருவரும் இல்லை, அங்கு ஒருவரும் இல்லை!
    பாட்டாளிகளே!

லீப்னெஹ்ட் தப்பிக்க முனைந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்மேலும், லுக்சம்பர்க் மக்களால் கொல்லப்பட்டார்என்று ஜனவரி 16 அன்று, மற்ற பத்திரிகைகளை முந்திக் கொண்டு செய்தி வெளியிடும் ஒரு கௌரவத்தைப்பெற்றிருந்தது ஃபோர்வார்ட்ஸ்.

கொலைக் குற்றத்தின் ஒவ்வொரு விவரமும் துல்லியமாகத் தெரியும். முழு உண்மையையும் கண்டறிய லியோ ஜொகிச்செஸ் அயராது உழைத்து, ரோடே ஃபானேவில் அதை வெளியிட்டார்.  அரசு வழக்குரைஞர் ஜார்ன்ஸோடு புலனாய்வில், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்கள் குழுவின் சமூக ஜனநாயக செயற்குழு உறுப்பினர்களோடு இணைந்து செயல்பட்டார் ஜொகிச்செஸ். முடிந்தவரை ஆதாரங்களை மூடி மறைக்க முனைந்த ஜார்னின் இழிவான முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இறுதியில் அவர்கள் பின்வாங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டாலும், அவர்களுடைய தொடக்கக்கட்ட ஒத்துழைப்பு ஜொகிச்செசுக்கு உதவியாக இருந்தது.  இருந்தாலும், அதைத் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைகளில் மேற்கொண்டு தகவல்கள் வெளிவந்தன. உதாரணமாக ஹீடெமான் (எதிர்) பிரின்ஸ் மற்றும் பலர் எனும் வழக்கு டிசம்பர் 1920 அன்று விசாரணைக்கு வந்தது. ப்ரஷ்ய சட்டசபையால் (Diet) அமர்த்தப்பட்ட சிறப்பு குழுவால் மொத்த விவரங்களும் மிகவும் ஆழமாக பரீசிலிக்கப்பட்டன.

அந்த வழக்கு விவரங்கள் பின்னர் பிரஷ்ய சட்டமன்றத்தால்  அதிகாரப்பூர்வ ஆவணத்தில் பதிப்பிக்கப்பட்டது.  1929-30 ஆம் ஆண்டுகளில் டாகெபுகின் ஆசிரியர் போர்ன்ஸ்டைனுக்கெதிராக ஜோர்ன்ஸ் கொண்டு வந்த நிறைவேறாத அவதூறு வழக்கின் போது இறுதி பூச்சுகள் கொடூரமானகாட்சியாக  முன்வைக்கப்பட்டது. 

ஜனவரி 15 அன்று இரவு ஒன்பது மணிக்கு கார்ல் லீப்னெஹ்ட், ரோசா லுக்சம்பர்க் மற்றும் வில்ஹெல்ம் பீக் ஆகியோர் வில்மெர்ஸ்டார்ஃபின் மன்ஹைமர் தெருவில் உள்ள எண்53 கட்டிடத்தில் வைத்துச் சில படைவீரர்களால் கைது செய்யப்பட்டனர். முதலில் லீப்னெஹ்ட்டும், ரோசா லுக்சம்பர்க்கும் அது ஒரு தற்செயலான  சோதனை என்று நினைத்துப் பொய்ப் பெயர்களைக் கொடுத்தனர். எனினும், லீப்னெஹ்ட்டின் நம்பிக்கையை வென்றிருந்த உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டனர். ஒழுங்கு முறைக்  குழுவினரின் தலைமையகத்திற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டார் கார்ல் லீப்னெஹ்ட், அங்கிருந்து பின்னர் ஈடன் ஹோட்டலில் உள்ள குதிரைப்படைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரோசா லுக்சம்பர்க்கும், வில்ஹெல்ம் பீக்கும் அங்கு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டனர்.


கைது பற்றிய முதல் செய்தி ஈடன் ஹோட்டலை அடைந்தவுடன், கார்ல் லீப்னெஹ்ட்டையும், ரோசா லுக்சம்பர்க்கையும் கொல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் காப்டன் பப்ஸ்ட். உள்ளே அழைத்துவரப்பட்ட அடுத்த கணம் கார்ல் லீப்னெஹ்ட் துப்பாக்கிப் பின்முனையால் இரண்டு முறை தாக்கப்பட்டார். உடனே அவர் தனது காயத்திற்கு கட்டுப் போடும்படி கேட்டார், ஆனால் அது மறுக்கப்பட்டது. பிறகு ரோசா லுக்சம்பர்க் அழைத்து வரப்பட்டார். கூச்சல்களாலும், மோசமான வசைகளாலும் அவர் வரவேற்கப்பட்டார். பீக் அந்தக் கட்டிடத்தின் நடைபாதையில் காவலரின் பிடியில் இருந்தார். கார்ல் லீப்னெஹ்ட்டும் ரோசா லுக்சம்பர்க்கும் காப்டன் பப்ஸ்டின் அறைக்கு விசாரணைக்காகஅழைத்துச் செல்லப்பட்டனர். சில மணித்துளிகளில் லீப்னெஹ்ட் ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது மீண்டும்  துப்பாக்கியின் பின்முனையால் தாக்கப்பட்டு, காருக்குள் இழுத்துப் போடப்பட்டார். காப்டன் ஹோர்ஸ்ட் ஃபான்  ஃப்ளுக்-ஹர்டுங், அவனுடைய சகோதரன் கேப்டன் ஹெய்ன்ஸ் ஃபான்  ஃப்ளுக்-ஹர்டுங்,  லெப்டினன்ட்கள்  லீப்மன், ஃபான் ரிட்கன், ஸ்டீகெ,  ஸ்லுஸ் மற்றும் ஃப்ரீட்ரிஹ் எனும் ஒரு படை வீரன் ஆகியோர் அதைச் செய்தனர். டியர்கார்ட்டனில் வைத்து, லீப்னெஹ்ட் அரை மயக்கத்தில் காரிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, சிறிது தொலைவில் கொலை செய்யப்பட்டார். காப்டன் ஹார்ஸ்ட் ஃபான் ஃப்லுக்-ஹர்டுங் முதல் குண்டைச் சுட்டான். பிணம் மீண்டும் சீருந்தில் ஏற்றப்பட்டு, அருகில் இருந்த பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு டியர்கார்ட்டனில் அடையாளம் தெரியாத ஒரு பிணம் கண்டெடுக்கப்பட்டதுஎன்று சொல்லிச் சேர்க்கப்பட்டது.

சில மணித்துளிகளில், லெப்டினன்ட் ஃபொகெலின் வழிநடத்தலின் கீழ் ரோசா லுக்சம்பர்க் ஈடென் ஹோட்டலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். லெப்டினன்ட் ஃபாகல் மற்றும் காப்டன் ஹார்ஸ்ட் ஃபான் ஃப்ளுக்-ஹர்டுங் ஆகியோரின் ஆணைப்படி ருங்கே எனும் படை வீரர் ரோசா லுக்சம்பர்க் வெளிவந்தவுடன் தனது துப்பாக்கி கொண்டு அவரை பின் மண்டையில் அடித்து தரையில் வீழ்த்துவதற்காகக் கதவருகில் காத்துக் கொண்டிருந்தார்.  ரோசாவின் மண்டையோட்டை இரண்டு வீச்சுகளால் தகர்த்து அவரை வீழ்த்தினான் அவன். பின்னர் அரைப் பிணமான அவரை லெப்டினன்ட் ஃபோகெல் மற்றும் இதர அதிகாரிகளோடு காத்திருந்த பேருந்தில் ஏற்றினான்.  அவர்களுள் ஒருவன், தனது துப்பாக்கியின் பின்புறம் கொண்டு மீண்டும் தாக்கினான். லெப்டினன்ட் ஃபாகெல் சுடும் தூரத்தில் வைத்து (point-blank range) ரோசா லுக்சம்பர்க்கை தலையில் சுட்டுக் கொன்றான். லாண்ட்வெர் கால்வாயின் மீதுள்ள லீஹ்டென்ஸ்டைன் பாலத்தில் வண்டி நின்றது. அங்கிருந்த கால்வாயில் ரோசாவின் பிணம் வீசி எறியப்பட்டது. அதன் பிறகு மே மாதம் வரை அப்பிணம் மீட்கப்படவே இல்லை.

ரோசா லுக்சம்பர்க்: வாழ்வும் பணிகளும், பால் ஃப்ராலிச், தமிழாக்கம் - கொற்றவை, நூலிலிருந்து, பக். 423
சிந்தன் புக்ஸ் வெளியீடு, விலை ரூ. 350. ph: 9445123164