Mar 31, 2020

காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி



ஊரடங்கின் காரணமாக பெரும் ஓய்வு கிட்டியுள்ளது. (குறிப்பிட்ட வர்க்கத்திற்கு!)
வேலைப் பதட்டமற்ற, சமர்க்கிப்பட ஏதுமில்லாத இலக்கற்ற சூழல் மனநலனையும் உடல் நலனையும் பேண உதவுகிறது. அத்தோடு அறிவை வளப்படுத்திக்கொள்ள நல்வாய்ப்பாகவும் உள்ளது.
உண்மையில் மனித வாழ்வு இப்படித்தான் அன்றாடம் இருக்க வேண்டும். குறைந்த நேர உழைப்பு, உடல் பராமரிப்பு, சமூகக் கூடல், அறிவு வளர்ச்சி, சமூகப் பங்களிப்பு இப்படியாக எல்லாவற்றுக்கும் நேரமிருக்கும் வகையில் தான் இருக்க வேண்டும். ஆனால் செல்வந்தர்களின் வளர்ச்சிக்கான தனியுடைமை உற்பத்தி முறையில் மீண்டும் நாம் இணைக்கப்படுகையில் உழைப்பும், ஓட்டமும் தவிர நமக்கு வேறெதுவும் கிடைக்கப் போவதில்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு அடிப்படைத் தேவைகளும் கூட கிடைப்பதில்லை.
இது இன்று நேற்று இருக்கும் பிரச்சினையல்ல. உழைப்புச் சுரண்டல் தொடங்கிய ஆண்டான் அடிமை காலந்தொட்டு, வர்க்க சமூகம் உருவான காலம் தொட்டு உழைப்பவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. அதில் கடைநிலை உழைப்பாளிகள், பழங்குடிகள் வாழ்வென்பது சொல்லொணாத் துயரம் நிறைந்தது.
அந்த துன்பங்களிலிருந்தே புரட்சியும் ஊற்றெடுக்கிறது. அப்படி ஒரு புரட்சிகர சமூகத்தின் வாழ்வை, எழுச்சியை அந்த எழுச்சிக்கு வித்திட்ட ஒரு புரட்சி நாயகனின் வாழ்க்கை வரலாற்றை மூன்றே நாளில் படித்து முடித்திருக்கிறேன். அவனே பீர்ஸா முண்டா.
பிரிட்டிஷ் காலனியமும், ஆதிக்க சாதி நிலவுடைமையாளர்களும், அவர்களுடன் கை கோர்த்துக்கொண்ட தரகர்களும் பழங்குடிகள் மீது நிகழ்த்தியுள்ள வன்முறைகள், அநீதிகளை படித்தறிய வேண்டிய சமூகத்தில் நமக்கு போதிக்கப்படுவது என்ன? பார்ப்பனிய ஆளும் அர்க்க இலக்கியங்களும், வரலாறும். இந்த கல்வியினால் ஏதும் பயன் இருக்கிறதா?
வரலாற்றில் பெரும்பாலும் புரட்சிக்கு வித்திடுபவர்கள் இளைஞர்களாகவே இருக்கிறாரக்ள்! புரட்சி என்பது வெற்றி தோல்வியால் அளக்கப்படுவதில்லை. நாங்கள் அடிமைகளாக வாழ மாட்டோம் என்று முழங்கும் சுயமரியாதையால் அளக்கப்படுகிறது.
ஸ்பார்ட்டகஸ், பகத் சிங், பீர்ஸா முண்டா, சே குவெரா,ரோசா லுக்சம்பர்க் இப்படி எண்ணற்றோர் அத்தகைய குரல்களாக உள்ளனர். அநீதிக்கு எதிரானோரின் உணர்வில் உள்ளனர். துரதிர்ஷ்டமாக மனிதன் மனிதனுக்கு நிகழ்த்தும் இத்தகைய அநீதிகளைப் பற்றி அறிந்துகொள்ளாமலேயே இங்கு எல்லாம் சரியாகவே உள்ளது என்று நம்பும் ஒரு கூட்டம் உள்ளது. அறிந்தாலும், அது தவறில்லை அதிகாரம் என்பது இயல்பானதே, அது நிர்வாகம், அது ஓர் ஆட்சிமுறை, சமூக ஒழுங்கு என்று நியாயப்படுத்தும் ஒரு கூட்டமும் உள்ளது. இரண்டிலும் அல்லாது ‘விதி’ என்று நடக்கும் அநீதிகளை ஏற்றுக்கொள்ளும் கூட்டம் ஒன்றும் உள்ளது (இதுவே பெரிதும் பாதிக்கப்படும் கூட்டம்).
இந்த கூட்டத்திலிருந்து விலகி மேலாதிக்கமும், படிநிலைகளும், செல்வந்தர்களின் ஆட்சியும் இயல்பானதல்ல! அது அவசியமும் அல்ல என்பதை உணர்ந்து சுரண்டலாளர்களின் அதிகாரத்தை தகர்க்க கிளம்பியவர்களே புரட்சியாளர்கள்! அன்று முதல் இன்றுவரை இவர்கள் தேச துரோகிகள், கலகக் காரர்கள், தூண்டிவிடுபவர்கள் என்றே அறியப்பட்டுள்ளார்கள்.
அத்தகைய ஒரு கலகக் காரனை, தூண்டி விட்டவனை பற்றிய வரலாறே (புனைவாக) மகா சுவேதா தேவி எழுதிய காட்டில் உரிமை!
புரட்சியாளர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்? புரட்சியாளர்கள் ஏன் ‘தோற்கிறார்கள்’? அல்லது புரட்சி ஏன் தோற்கிறது? போர் தர்மம் என்று வாய் கிழிய பேசும் ஆளும் வர்க்கம் அதில் ஒன்றையாவது பின்பற்றுகிறதா? வீரம் வீரம் என்று முழங்குபவர்கள் எதிர் தரப்பிடம் நியாயமான முறையில் நடந்துகொள்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு இந்த நாவல் உங்களுக்கு பதில் அளிக்கும். அப்போது உண்மையில் எது வீரம், யார் உண்மையான வீரன் என்னும் உண்மையும் விளங்கும்!
அன்றைக்கு அந்நியன் நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டு இந்திய மக்களை அடிமப்படுத்தினான். பூர்வகுடிகளுக்கு எதிராக போர் தொடுத்தான். அவர்களின் உடைமையை பறித்துக்கொண்டு பிச்சைக்காரர்களாக்கி, உழைக்கும் கூலிகளாக்கினான். தங்களின் நிலத்திற்காக, உரிமைகளுக்காகப் போராடியவர்களை கொன்று குவித்து மக்களின் ரத்தம் குடித்து வாழ்ந்தான். இதற்கு ‘இந்திய ஆதிக்க சாதி’ ஆளும் வர்க்கமும், நிலவுடைமையாளர்களும் துணை போனார்கள்!
பெயரளவில் வெள்ளையன் வெளியேறினான். அவர்களின் ஆசீர்வாதத்துடன் அந்த இடத்தை அதே ‘இந்திய ஆதிக்க சாதி’ பிடித்துக்கொண்டது. முதலாளிகளாக, நிலவுடைமையாளர்களாக அவர்களே நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெதிரான போர் இன்னும் தொடங்கவே இல்லை!
பீர்ஸாவின் குரல் பயங்கரமாக, கம்பீரமாக ஒலித்தது.
“நம்ம காலம் வந்து விட்டது! நான் நம்ம நாட்டை உங்களுக்குத் திருப்பித் தருவேன்! நம்ம நாட்டிலே ஒரு வயலுக்கும் இன்னொரு வயலுக்கும் நடுவிலே வரப்பு இருக்காது. எல்லா நிலமும் எல்லாருக்கும் சொந்தம். எல்லா நிலத்தையும் எல்லாரும் உழுது பயிரிடுவாங்க. எல்லா விளைச்சலும் எல்லாருக்கும் சொந்தம். நம்ம நாட்டிலே எந்த ஒரு முண்டாவும் முதலாளியாயிருக்க முடியாது. நம்ம நாட்டிலே யுத்தம் இருக்காது. நம்ம ராஜ்ஜியம் தரும ராஜ்ஜியம். நம்ம பாட்டன் – முப்பாட்டன்மார் எப்படி அரசாட்சி செஞ்சாங்களோ, அதே தரும வழியில் நாம அரசாட்சி செய்வோம். தடியாலே, ஆயுதத்தாலே, ஆட்சி செய்ய மாட்டோம்!”
இதுவே பழங்குடிகள் ஆட்சி! புராதன பொதுவுடைமை ஆட்சி! அது அகற்றப்பட்டு விட்டது. ஆனால் அழிக்க முடியாது.
வரலாற்று வளர்ச்சியின் மாற்றங்களைத் தொடர்ந்து பறிக்கப்பட்டு விட்ட மக்களின் உரிமைகளையும், நிலங்களையும், நல் வாழ்வையும் மீட்டு விஞ்ஞான சோஷலிசத்தை அமைத்து பீர்ஸா முண்டா போன்ற தியாகிகளுக்கு நியாயம் செய்திடுவோம்! ஒவ்வொரு நாட்டிலும்! ஒவ்வொரு தேசிய இனத்தினிடையேயும்!
நமக்குத் தேவை உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரிய தர்ம இராஜ்ஜியமே தவிர, இராம இராஜ்ஜியமல்ல! காட்டுக்குள் இருந்து அதனை பீர்ஸா உங்களுக்கு உணர்த்துகிறான்!
வாசிக்காதவர்கள் வாசித்திடுங்கள்!


Mar 28, 2020

இராமாயணம் ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா



இராமராஜ்ஜியம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை தலைநகரில் கைவிட்டுவிட்ட அவலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பண்பாடற்ற, அறிவற்ற ‘லேபர்ஸ்’, ‘இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்’ என்று ‘தேச பக்தாள்’ சிலர் தொழிலாளர்களை குறை கூறி நியாயம் பேசிக் கொண்டிருப்பார்கள். அரசை எதிர்க்க இவர்கள் ஒருபோதும் துணிய மாட்டார்கள். எதிர்ப்பதை விடுங்கள், எது ஒன்றையும் கேள்வி எழுப்ப இவர்களுக்கு முதுகெலும்பென்ற ஒன்று இருக்காது! அத்தகையோரின் அறியாமைக்கும், சுயநலத்திற்கும் பலியாவது உழைக்கும் வர்க்கமே!

இராமனும் வரமாட்டான், கிருஷ்ணனும் வரமாட்டான் என்பதை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்ல உதவிடுங்கள் தோழர்களே! – கொற்றவை!

இராமாயணம்
ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா
ஆங்கிலம் வழி தமிழில் - கொற்றவை

அறிமுகம்

இந்நூலின் சில வரிகளைப் படித்ததுமே இதை எரித்துவிட வேண்டும் என்னும் ஆவேசம் சில உத்தமர்களுக்கு ஏற்படும். ஆனால், அவர்களால் காகிதங்களை எறிக்க முடியுமே ஒழிய சிந்தனைகளை அல்ல. சிந்தனை என்பது இயற்கையாக உதித்து, வரலாற்றின் போக்கில் அனுபவங்கள் வாயிலாக வளரக்கூடியது. இந்த உண்மையை நிராகரிப்பதால் யார்க்கும் பயனில்லை.

இராமாயணம்ஒரு விஷ விருட்சம்என்னும் தலைப்பு சில ‘பகுத்தறிவாளர்களைக்’ கூட தொந்தரவு செய்கிறதென்றால், அது இராமாயணத்தின் குற்றமே ஒழிய என்னுடையதல்ல. எந்த விதியிலிருந்து இந்த விஷ விருட்சம் வளர்ந்தது, எந்த விஷப் பாம்புகளுக்கு அது தன்னுள் தஞ்சமளிக்கிறது என்பதை புரிந்து கொண்டால், இந்த தலைப்பின் அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இந்நூல்ஆசாரப் பண்டிதர்களுக்கானதல்ல; கடவுள் பக்தாள்களுக்கானதுமல்ல, நகை நட்டுகள் அணிந்து கோவில்களுக்குச் செல்பவர்களுக்கான நூலுமல்ல, ஆசார விதிகளை மீறும் உடை அணிந்து, ஒப்பனை செய்து விருப்பம்போல் இருப்பதுமுற்போக்குஎன்று அராஜகமாக எண்ணும் பெண்களுக்கு மத்தியில் வாழும் உத்தம புத்திரர்களுக்கான நூலுமல்ல. மாறாக, சுயநலமும், சமய வெறியும் பீடிக்காமல், ஏமாற்றின்றி விழிப்புணர்வுடன், உண்மையை திறந்த மனதோடு ஏற்கத் தயாராக உள்ள குழந்தைகளுக்காக எழுதப்படும் நூலிது. வார இதழ்கள், வெகுஜன நாவல்களை மட்டுமே படித்து வேறு சிந்தனைகளை நாடாத இளைஞர்களுக்கான நூலிது.

தலைமுறை தலைமுறைகளாக அரசியல் மற்றும் பொருளாதார சுரண்டலுக்குள்ளாகி, மிகவும் கேவலமான, துன்பகரமான, ஒடுக்குமுறை வாழ்வை வாழ்ந்து கொண்டு, விடுதலைக்கான நம்பிக்கையை இழந்து தவிக்கும் அந்த பெரும்பான்மை மக்களின் நலன் காக்க இந்நூல் உதவும் என்று நான் நம்புகிறேன்.

பழையனவற்றை எல்லாம் நிராகரிப்பதே முற்போக்கு என்று சிலர் எண்ணுகிறார்கள்.” – புதிய சிந்தனைகள் தோன்றும்போது, வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் விமர்சனமிது. ஆனால் நாம் இங்கு பேசுவதுபழையவிஷயமல்ல.  அது இன்னும் பழையதாகவில்லை. இராமாயணம் போதிக்கும் மதிப்பீடுகளும், கலச்சாரமும் இன்றைக்கும் நம்வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன. அது இன்னும் பழையதாகவில்லை என்பதை உறுதிசெய்ய பிரச்சினைகளுக்கான தீர்வாக, ‘இராம நாமத்தை ஜபித்தால்போதும் என்று இன்றைக்கும் வழங்கப்படும் ஆசீர்வாதம் ஒன்றே போதுமானது.

அதேபோல், ஒன்றை விமர்சிப்பதால் பழையன எல்லாவற்றையும் நிராகரிப்பதாகி விடாது. பழையனவும் மனிதவரலாறே. வரலாற்று வளர்ச்சியில், இராமாயணத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, அதன் இயல்பு மற்றும் உள்ளடக்கம் அது அன்றாடம் பிரச்சாரம் செய்யும் சமூக அமைப்பின் உண்மை முகம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.

இராமாயணத்தை பல கவிகள் இயற்றியுள்ளனர். வால்மீகியின் இராமாயனத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே எண்ணற்ற கதைகள் எழுதப்பட்டுள்ளன. அப்படியெனில் எதை நாம் அடிப்படையாகக்கொள்வது?” என்னும் கேள்வி நிலவுகிறது. அனைத்துப் பதிப்புகளும் ஒன்றுதான். தொடரும் பாடல்களில் அதை நாம் காண்போம்.

இராமாயணம் உண்மைக் கதையாஇல்லையா? அப்படி உண்மையில் நிகழ்ந்த வரலாறெனில், அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இறந்திருப்பார்கள், இல்லையா? அப்படியென்றால், அந்த மனிதர்கள் பற்றி இப்போது விவாதித்து என்ன பயன்? அதுஉண்மை நிகழ்வல்லஎனில், ஒரு புனைவு குறித்து இவ்வளவு பேச்சு தேவையா?” – இவையும் முக்கியமான கேள்விகளே. இராமாயணம் உன்மைக் கதையோ இல்லையோ, அதன்உள்ளடக்கமேநமது பிரச்சினை. இராமன் என்பவன் உண்மையில் வாழ்ந்தானோ அல்லது அவன் ஒரு கவி படைத்த கற்பனைக் கதாபாத்திரமோ, கரு ஒன்றுதான்.

இந்தக் கதையிலிருந்து நமக்கு பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன:
  • ·        சமூகமானது ஏற்கனவே பணக்காரர் வர்க்கம் ஏழை வர்க்கம் என்று பிளவுபட்டிருந்தது.
  • ·        செல்வந்தர்களின் பிரதிநிதிகளாக, அவ்வர்க்கத்தின் நலனுக்காக தசரதன், இராமன் மற்றும் இராவணன் ஆகியோர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி  வந்தனர்.
  • ·        சுதந்திரமின்றி, தனித்துவமின்றி பெண்கள் ஆணாதிக்க இருளில்,வாழ்ந்து வந்தனர்.
  • ·        சாதாரண மக்களோ மோசமான ஏழ்மை, சாதிய பாகுபாட்டில் உழன்றதோடு பிச்சையெடுத்தல், விபச்சாரம் ஆகியவற்றில் ஈடுபட்டும் மத நம்பிக்கைகளிலும் மூழ்கியிருந்தனர். ஓர் இனத்திற்கும் மற்றொர் இனத்திற்கும் இடையில் போர், ஒரு வர்க்கத்திற்கும் மற்றொரு வர்க்கத்திற்கும் இடையில் போர்.
  • ·        நோய்த்தொற்று போன்று ஆளும் வர்க்கத்தின் இந்த சுரண்டல்வாத இலக்கியங்கள் மனித மனங்களை ஊடுறுவி முதுகெலும்பையும் கூட அரித்திருந்தது.

 இவ்வாறாக நாம், இராமாயணத்தில் அக்காலத்தைய சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளோடு, அக்காலக் கொள்கைகள், ஒழுங்கங்கள் பற்றியும் அறிய முடியும். சில புதிய மாற்றங்களோடு அந்நிலைமைகளும், கொள்கைகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன. இதனை நாம் உணர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். இராமாயணம் உண்மை நிகழ்வா இல்லையா என்பது அவசியமில்லை.

……….
இந்தமுன்னுரையின்உண்மையான குறிக்கோள்

மக்கள் மத நூல்கள், நீதிநெறி நூல்கள், காவியங்கள் அல்லது சமூக நிலைமைகளை பிரதிபலிக்கும் எந்த நூலைப் படித்தாலும், சிலர் அதை தீவிரமாக போற்றுவர், சிலர் தீவிரமாக அதனை எதிர்ப்பர். ஒரே நூல் ஏன் இப்படி முரண்பட்ட கருத்துகளை உருவாக்குகிறது? ராமாயணத்தையே எடுத்துக் கொள்வோம்,  இக்காலத்திலும் அதனை உயர்த்திப் பிடிக்கும் நபர்கள் உள்ளனர். அதன் போதனைகளை போற்றுகின்றனர். அதேவேளை வேறு சிலர் அந்த போதனைகளை எதிர்க்கின்றனர் ஏன்? ஒரு குழந்தையை வளர்ப்பதில், தாய் தந்தை இருவருக்கும் பொறுப்பு இருக்கும்போது, ‘தந்தை பக்திமட்டும் ஏன் தனிச் சிறப்பான கடமையாகிறது? தாய் பக்தி ஏன் வலியுறுத்தப்படவில்லை? பதிபக்தி உள்ளது, பத்தினி பக்தி ஏன் ஆணின் கடமை ஆவதில்லை? அதுமட்டுமின்றி, பாலியல் உறவில் கணவனுக்கு சுதந்திரம் உண்டு ஆனால் பதிபக்தி மனைவிக்கு அவசியக் கடமை. ஏன் சில பெண்கள்பத்தினிகளாகவும், சில பெண்கள்விபச்சாரிகளாகவும்மாறினார்கள்? ஏற்றத்தாழ்வுகள் ஏன் தோன்றின? இதுபோன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில் வேண்டும்.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் இக்கதைகளை கூறியுள்ளனர்.  இதுதான் நமது பண்பாடு.” என்றால் அது சரியான பதில் இல்லை.

சரி,  நம் முன்னோர்கள் சொன்னார்கள்? அவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள்? சரி இதுதான் நமது பண்பாடு, ஆனால் ஏன் இப்படி உள்ளது?” என்று புதியதொரு கேள்வி எழ வேண்டும்.

ஒரு கேள்வி எழுந்தால், நமக்கு அதற்கு பதில் வேண்டும்.

நிலத்தில் வளரும் ஒரு புல்லைக் கண்டு, “ஏய் புல்லே வளராதே! நில்! முனிவர்களும், வேதங்களும் நீங்கள் வளரக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளன! நில். நீ வளர்வது நல்லதல்ல. நில்!” என்று சொன்னால் புல் வளர்வது நின்றுவிடுமா? அதேபோல் தான் முன்னோர்கள் சொன்னதாலேயே கேள்விகள் எழக்கூடாது என்றால் நிறுத்திவிட முடியாது.

முன்னோர்களைப் போல், கேள்வி கேட்கும் அறிவை மட்டுப்படுத்தும் போக்கை விட ஒன்றின் ஆணிவேரை ஆய்வு செய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இராமாயணம் போன்ற மதப் புராணங்கள் ஏதோ கடவுள் மீதான பக்தியைக் கூறுவதாக தோன்றும். பக்தி என்றால் என்ன? கடவுள், அரசர், பிராமணர் அல்லது எதோ ஒன்றின் மீதான பக்தி என்றால் என்ன? இது அவசியமா? எதற்காக அவசியம்?

இக்கதைகளில் சொல்லப்படுவது மனித வரலாறுதானா? ‘இராமாயணத்தில்கடந்தகால வரலாற்றை காண முடிகிறதா? இந்தக் கதை எக்காலத்தைக் குறிக்கிறது? மக்களுக்கு அது என்ன போதிக்கிறது? எந்த ஒரு மத நூலைப் படித்தாலும், புராணங்களைப் படித்தாலும் நாம் இக்கேள்விகளை எழுப்ப வேண்டும்.

மனிதர்கள் எப்போதும் தங்களது கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால வரலாற்றை இயன்றவரை அறிந்து கொள்ளவேண்டும்!

- ரங்கநாயகம்மா
தமிழில் - கொற்றவை

இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி இந்துத்துவமானது தனது மதப் பிரச்சாரத்தை மேற்கொள்ள இராமாயணம், மகாபாரதம் ஆகிய தொன்மங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் போகிறது. இது கடவுளரின் கதை என்று நம்பும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆனால் மூட நம்பிக்கையானது அறிவிற்கு எதிரி. எனவே இக்கதைகளை அக்கால மக்கள் வரலாறாக - முற்கால சமூக வாழ்வியல் எப்படி (மோசமாக – அதிகாரம், சாதி, ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக) இருந்தது என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் காணலாம். அதில் கூறப்படும் மதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்கலாம். மத இலக்கியங்கள் (எம் மதமானாலும்) மக்களை மூளைச் சலவை செய்யவே இயற்றப்பட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கமும், அரசும் ஏற்படுத்தும் சட்ட திட்டங்களை மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்டவை. (எழுதப்படுபவை).

“மனிதனாகப் பிறந்தவர் கேள்வி கேட்காமல் அழியக் கூடாது”. இதுகாரும் நமக்கு போதிக்கப்பட்ட அனைத்தையும் கேள்வி எழுப்புங்கள்! ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் அதிகாரக் குரலை கண்டுகொள்ளுங்கள்! குறிப்பிட்ட சாதி, மதம், பாலினம், வர்க்கம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே இக்கதைகளை புனைந்தன என்பதை உணர்ந்து பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்!

ஆக்கக் கடவுள் என்று சொல்லப்பட்டவர்களை அழிவுக்கு ஏன் பயன்படுத்துகிறார்கள் என்னும் கேள்வி நமக்கு எழாமல் போனால் ஆறாம் அறிவினால் என்ன பயன்? அது மனிதர்களின் தவறு என்பீர்களானால் , அத்தகைய அராஜகங்களைத் தடுக்க கடவுள் ஏன் அவதாரம் எடுத்து வரவில்லை என்னும் கேள்வியை முன்வைக்கலாம்! தனக்குக் கோவில் கட்டச் சொல்லி, அதற்காக மற்றொரு சமூகத்தை அழிக்கச் சொல்லி சொல்லும் கடவுள் இருக்கக் கூடுமா? எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுக்கு ஏன் ‘பெட்ரோமாக்ஸ்’ லைட்டே தேவைப்படுகிறது?

வர்க்கப் பகைமைகள் நிறைந்த ஒரு சமூகத்தில் மதம் என்பது ஒடுக்குமுறைக்கான கருவி, மூளைச் சலவை செய்யும் ஆயுதம் என்பதை உணர இனியும் கால தாமதம் ஏன்?

(ரங்கநாயகம்மாவை (என்னையும், வசுமித்ரவையும்) சாதி வெறியர், மண்டை வீங்கி என்றெல்லாம் அவதூறு செய்த சாதியவாதிகள் இப்போது இராமனையும், இராமாயணத்தையும் மார்க்சியக் கண்னோட்டத்தில் விமர்சித்திருப்பதை படிக்கையில் என்ன செய்வார்கள் என்று நினைத்து சிரித்துக் கொள்கிறேன். இராமாயணம் மட்டுமல்லாது ‘இதண்டி மகாபாரதம்’, ‘ஏம் செப்பாயி வேதாலு’ என்று மகாபாரதம், தேவங்கள் என எல்லாவற்றையும் மார்க்சிய நோக்கில் விமர்சித்துள்ளார். சமீபத்தில் தத்துவம் ஒரு சுருக்கமான அறிமுகம் என்ற நூலையும் வெளியிட்டார். வயது, கண் பார்வை கோளாறு என எதையும் பொருட்படுத்தாமல் இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல்கள் தற்போது இணைய பதிப்பாக 40ரூபாய்க்கு (ஒரு புத்தகம்) கிடைக்கின்றன.

“பெரியவா சொன்னா கேள்வி கேட்கப்டாது! பெரியவாளையே நீ விமர்சிக்கிறியா” என்பதெல்லாம் பார்ப்பனிய (மத ஆதிக்க) அராஜகம். அதை அனைவரும் உணர வேண்டும்!)

Mar 20, 2020

மார்க்சியமும் சூழலியலும் வேறில்லை



21.3.20 – இன்றைய இந்து தமிழ் திசையில் நக்கீரன் அவர்கள் எழுதிய பொதுவுடைமை இயக்கங்களின் முன்நிற்கும் கடமை என்று ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. நக்கீரன் மீதிருக்கும் பெருமதிப்பை இக்கட்டுரை சற்று குறைத்துவிட்டது என்பதே உண்மை. கண்டிப்பாக இது நட்பு முரண்பாடே J

பொதுவாக குறிப்பிட்ட துறை சார் வல்லுனர்களிடம் காணப்படும் அறிவார்ந்த ’கோளாறு’ இது என்று சொன்னால் தவறாகாது என்றே எண்ணுகிறேன். மார்க்சியர்கள் என்னும் போது மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள், 
ஏற்றுக்கொள்பவர்கள் என்பதோடு அக்கோட்பாட்டை அனைத்து தளங்களிலும் பொருத்தி சமூகத்தை மேம்படுத்த முடியும் என்னும் அறிவியலை உணர்ந்தவர்கள் என்றும் பொருளாகிறது. அதுபோல் அல்லாது மார்க்சிய ஆதரவளார்கள் (அதாவது எதிர்ப்பாளர்கள் அல்ல) என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்வதை விட மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின் (மற்றும் பலர்) ஆகியோரை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

மார்க்சியத்தை விமர்சனத்தோடு வளர்த்தெடுக்கும் நோக்கில் அனுகுவதாக ’அக்கறையோடு’ பேசுவார்கள். உண்மையில் இது நற்பணியே! ஆனால் இத்தகையோரின் பேச்சில் ஒரே வாய்ப்பாடு தான் சுழன்று சுழன்று வரும்!


மார்க்சியர்கள் எப்போதும் ‘வெறும் பொருளாதார’ போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்! வர்க்கப் போராட்டம் வர்க்கப் போராட்டம் என்று ‘கூலிப் போராட்டத்தில்’ மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்பார்கள். நக்கீரன் அந்தளவுக்கு மார்க்சியர்களை நேரடியாக அவரே மட்டம் தட்டவில்லை! மாறாக “பொருளாதாரக் கோட்பாடு என்கிற அளவுடன் மார்க்சியக் கோட்பாட்டைச் சுருக்கக் கூடாது’ என்று மைக்கேல் லெபோவிட்ஸ் உள்ளிட்ட மார்க்சியப் பொருளாதார அறிஞர்களை துணைக்கு அழைக்கிறார். இங்கு தான் நமக்கு ஐயம் எழுகிறது. ‘வழமையான’, ‘காலாவதியான’ பேச்சுகளையே மார்க்சியர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைபிடிக்கின்றனர். அதனால் தான் மார்க்சியம் தோற்கிறது! மார்க்ஸ் (& கோ) சொன்னது வேறு இவர்கள் செய்வது வேறு! மார்க்ஸ் தவறு செய்யவில்லை, மார்க்சியர்கள் தவறு செய்கிறார்கள் உள்ளிட்ட ‘திறனாய்வுகள்’ மட்டும் வழமையாக இருக்கிறதே என்று நாம் கேட்டுவிடக் கூடாது!

எனக்கு மார்க்ஸை பிடிக்கும், பெரியாரை பிடிக்கும் ஆனால் மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் தான் பிரச்சினை இப்படி வகை வகையாக சொல்லி தங்கள் துறை சார் மேதமையைக் காடிக்கொள்வதையும் நாம் காலம் காலமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மார்க்சியர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இல்லை! ஆனால் மார்க்சியர்கள் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கையில், போகிற போக்கில் “மார்க்சியம் என்பது ‘வெறும் பொருளாதாரம்’ மட்டுமே பேசுகிறது, மார்க்சியர்கள் ‘வெறும் பொருளாதார’ போராட்டங்களை மட்டுமே முன்னெடுக்கிறார்கள் என்னும் வகையிலான ‘விமர்சனங்கள்’ ஆபத்தானவை!

இத்தகைய ‘வழமையான சீண்டல்கள்’ சம்பந்தபட்டவரின் மார்ச்கியப் புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறது! ஏற்கனவே நிலவும் மார்க்சியம் பற்றிய எதிர்மறை சிந்தனை உள்ளோர் மற்றும் மார்க்சியத்தை கற்காமலேயே கம்பு சுழற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இத்தகைய ‘சொல்லாடல்கள்’ வலு சேர்க்கின்றன.

மார்க்சியம் மனித சமூகத்திற்கு அவசியம் தேவை! ஆனால் அதில் உப்பில்லை, காரமில்லை, அது சற்று கெட்டியாக இருக்கிறது, அது ஐரோப்பிய பூதம் எமக்கு இந்திய பூதம் / தமிழ் பூதம் தான் வேண்டும் என்னும் கூப்பாடுகளை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நக்கீரனின் கட்டுரையும் அத்தகையோரின் குரலாகவே ஒலிக்கிறது. ஆனால் சற்று மிதமாக!

முதலாளித்துவ சுரண்டல் குறித்து மார்க்ஸும் எங்கல்ஸும் திறம்பட விளக்கியுள்ளார்கள். குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு எத்தகைய கேடுகளை இந்த உற்பத்தி முறை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பின்னர் வந்த மார்ச்கியர்கள் (லெனிக்குப் பிந்தைய) கோட்டை விட்டார்கள். இனியாவது மார்க்சியர்கள் சுற்றுச் சூழலில் கவனம் செலுத்துங்கள் என்பதே அவரது அறைகூவல்! மகிழ்ச்சி! மார்க்சியம் வேலைக்கு ஆகாது என்பவர்கள் மத்தியில் மார்க்சியத்தில் உண்டு மார்க்சியர்களிடம் இல்லை என்கிறார் நம் தோழர் நக்கீரன்!

வெறும் பொருளாதாரம் அல்லது பொருளாதாரக் கோட்பாடாகச் சுருக்கிவிடக் கூடாது என்றால் என்ன? பொருளாதாரம் என்றால் வெறும் பணப் பரிவர்த்தனை தொடர்பான செயல்பாடுகள், போராட்டங்கள் என்கிற பொதுபுத்தி சார் புரிதலை முன் வைத்து இத்தகைய ‘துறை சார் ஆய்வாளர்கள்’ பேசுவார்கள் எனில், இவர்கள் மார்க்சியர்கள் அல்ல என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்! தவறில்லை! வேண்டுமென்றால் ‘மார்க்சிய ஆர்வலர்கள்’ என்று அழைக்கலாம்!

மற்றவர் போல் அல்லாது நக்கீரன் தனது கட்டுரையில் மார்க்சியத்தின் சாரத்தையேனும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். “மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பது போல் சூழலியல் சீர்கேட்டுக்கு முதலாளித்துவக் கொள்கையே காரணம்” என்று கூறிவிட்டு இதனை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு மார்க்சியத்தின் தேவை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேவையை உணர்த்தும் வகையில் தொடர்ந்திருந்தால் அது அவர் நினைக்கும் நோக்கத்திற்கு – அதாவது ‘இந்த நிலை தொடர்ந்தால் ஆபத்து’, ‘சிஸ்டம் மாறவேண்டும்’ என்னும் நோக்கத்திற்கு வலு சேர்த்திருக்கும். அதை விடுத்து அவர் வழமையான அறிவுஜீவிகள் போல் மார்க்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து (அறிவுரை கூறி!!!) கட்டுரையை முடித்துவிடுகிறார். இங்கு தான் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது! இவர் யாருக்காகப் பேசுகிறார்?

பசுமையைக் காக்கும் வரலாற்றுக் கடமையில் சிவப்பு ஈடுபட வேண்டுமெனில், இதுவரை சிவப்பு அது சார்ந்து எதுவும் செய்யவில்லையா?

முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சுயநலம் பிடித்த, அராஜக உற்பத்தி  முறை (அவரும் அதை குறிப்பிடுகிறார்). தனி நபர்களின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து உற்பத்திச் சாதனங்களும் (நிலம், வளம், இயந்திரங்கள், மனிதர்களின் உழைப்புச் சக்தியை வாங்குவதற்கான பணபலம்.. இத்யாதி) இருக்கும். தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி முறையை தாங்கிப் பிடிப்பதற்கான அரசு தோன்றி வளர்ந்து தற்போது முதலாளித்துவ அரசாக உச்சம் பெற்று நிற்கிறது. இந்த உற்பத்தி முறை சுரண்டல் நிறைந்தது என்று மார்க்சியம் அல்லது மார்க்சியர்கள் பேசுகையில் அவர்கள் உழைப்புச் சுரண்டல் / பொருளாதார சுரண்டலை மட்டும் பேசுவதில்லை. நிலம், வளம், சுற்றுச் சூழல் என்று அனைத்தும் சுரண்டப்படுவதை சேர்த்தே பேசுகிறார்கள், போராடுகிறார்கள். சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அனைத்துவிதமான தொழில் திட்டங்களுக்கும் எதிராக போராடுகிறார்கள். குறிப்பிட்ட துறை சார் அமைப்புகள் (NGOs போல்) போல் மார்க்சிய அமைப்புகள் அத்தகைய போராட்டங்களுக்கு தனித்த விளம்பரம் தேடிக்கொள்வதில்லை!

இங்கே இன்னொரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மார்க்சியர்கள் தொழிநுட்ப வளர்ச்சிக்கோ அறிவியல் வளர்ச்சிக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவை தனிச்சொத்தாக மாற்றப்படுவதற்கு எதிரானவரகள். இந்த பூமியில் உருவாக்கப்படும் அனைத்து செல்வங்களும் காலம் காலமாக மனித சமூக அறிவு மற்றும் உழைப்பின் தொடர்ச்சியே ஆகவே அது தனி நபர்களின் வளர்ச்சிக்காக மட்டும் பயன்படக் கூடாது. அது ஒட்டுமொத்தமாக மனித சமூகத்திற்கு இலாப நோக்கின்றி பயன்பட வேண்டும் என்பதே மார்க்சியர்களின் நிலைப்பாடு (கியூபாவைப் போல்!). அதேபோல் தேவையற்ற பொருள் உற்பத்திக்காக திட்டங்கள், அதேபோல் பாதுகாப்பற்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகையில் மார்க்சியர்கள் எதிர்க்கிறோம். அது வளர்ச்சிக்கெதிரான போராட்டமல்ல மாறாக நிலம், வளம், மனிதர்கள் உள்ளிட்டவற்றை காப்பதற்கான போராட்டம்.

பொருளாதரம் என்பதை மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒருவர் சரியாகப் படித்து புரிந்து கொண்டால் ‘வெறும் பொருளாதாரக் கோட்பாடாக சுருக்காதீர்கள்! பொருளாதார போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள்’ என்னும் வகையிலான ‘அறிவுரைகள்’ மார்க்சிய அல்லது மார்க்சியர்கள் பற்றிய விமர்சனத்தின் அடிப்படையாக இருக்காது.

பொருளாதாரம் என்று மார்க்ஸ் / மார்க்சியர்கள் பேசியதென்பது –

// “இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. [அரசியல்பொருளாதாரவிமர்சனத்துக்குஒருபங்களிப்பு – முன்னுரை, மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி 4, பக்.207]

மார்க்ஸின்  மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து  நாம் ‘பொருளாதார அமைப்பு’ என்னும் பதத்தை கவனிக்க வேண்டும். ‘உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்’ என்பதை  ‘உண்மை அடித்தளம்’ என்று குறிப்பிட்டு அவர் அதை ‘பொருளாதார அமைப்பின்’ அடித்தளம் என்கிறார். வேறு சொற்களில் சொல்வதானால் பொருளாதார அமைப்பு (பொருளாதாரம்) என்பதே சமூகத்தின் அடித்தளம். பொருளாதாரம் என்றால் ‘பணம்’ இல்லை. உற்பத்தி உறவுகளே பொருளாதார உறவுகளாகும். பணம் இல்லாத புராதனக் காலத்தில் கூட பொருளாதார உறவுகள் (உற்பத்தி உறவுகள்) நிலவின. ‘பணத்தின்’ இருப்பு இன்றி உருவாகப்போகும் கம்யூனிச சமூகத்திலும் பொருளாதார உறவுகள் இருக்கும். உற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, மற்ற மேற்கட்டுமானங்கள் அந்த அடித்தளத்திற்கு ஏற்ற வகையில் உருவாகிறது. இதுவே அவர் கண்டடைந்த ‘பொதுவான முடிவு’ - அவரது ‘ஆய்விற்கு’ ‘வழிகாட்டும் கொள்கையாக’ அமைந்த முடிவும் இதுவே. // (ரங்கநாயகம்மா. முழுமையான கட்டுரைக்கான சுட்டி இறுதியில்)

மேலும் சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் முதலாளித்துவம் தரித்து வந்த அல்லது வரக்கூடிய முகமூடிகள் குறித்து நாம் அறிய மாட்டோமா? நம்மவிட இயற்கை வேளான்மை குறித்து அதிகம் கவலைப்படுவது முதலாளித்துவமே! ஏன்? நிலமும் வளமும் மாசுபட்டுப் போனால் அவர்களால் சுரண்டலில் ஈடுபட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும் தானே?

// பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட புரட்சிகள், கிராமப்புறங்களிலும், வேளாண் தொழிலிலும் மூலதன வரவுக்கு வழிகோலும் விதமாக செழிப்பானக் களத்தை தயார் செய்தன. மறுபுறம், மூலதனத்தின் பலத்திற்கு ஏற்றவாறு, உபரியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை முதலாளித்துவ நிலப்பிரபு-குலாக்குகளுக்கு வாரி வழங்கின. வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் நாடு முழுவதிலும் வளர்ச்சியடைந்தது. நகர்புற செல்வந்தர்கள் கூட தங்களது மூலதனத் திரட்டிலிருந்து விவசாயத்தில் முதலீடு செய்தனர். மூலதனத் தீவிரமுடைய நவீன விவசாயப் போக்கு முன் நகர்ந்தது.  விவசாயக் குடிகளுக்கிடையிலான பாகுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இயற்கைப் பொருளாதாரம் மற்றும் வட்டாரச் சந்தை ஆகியவற்றின் எச்சம் துடைத்தழிக்கப்பட்டது, தொலைதூரப் பகுதிகள்கூட தேசிய மற்றும் சர்வதேசியச் சந்தையோடு இணைக்கப்பட்டது. பழைய நில வாடகை முறை இன்னும் சில இடங்களில் நிலவியது, ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது தடையாக இருக்கவில்லை (மார்க்ஸும் எங்கெல்ஸும் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்). // (அர்விந்த் மார்க்சியக் கல்வியகம்)

மார்க்சியர்களுக்கு வழிகாட்டும் கொள்கையும் இதுவே! எந்த ஒரு பிரச்சினையும் தனித்ததொரு பிரச்சினை இல்லை என்பதே மார்க்சியர்களின் நிலைப்பாடே ஒழிய தனித்தனிப் போராட்டங்களோ, தனித்தனி துறைசார் முன்னெடுப்பகளோ தேவையில்லை என்பதல்ல.

இவ்வாறு மார்க்சியர்கள் செயல்படுகையில் சகல விதத்திலும் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை தகர்த்து சுரண்டலற்ற பொதுவுடைமை உற்பத்தி முறையை நுறுவுவதற்கான இலட்சியத்தோடு இயங்குகிறார்கள் என்று பொருள். சுரண்டலை எதிர்க்கிறார்கள் என்கையில் சாதி, மதம், பாலினம், சுற்றுச் சூழல், இனம், மொழி அடிப்படையிலான உழைப்புச் சக்தி சுரண்டல் என்று வெவ்வேறு வடிவிலான சுரண்டலுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் சமமாகவே போராடுகிறார்கள். அதிலும் குறிப்பாக முதலாளித்துவ எதிர்ப்பு என்பதிலேயே சுற்றுச் சூழல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என்பது உள்ளார்ந்து இருக்கிறது. தனி நபர் செல்வக் குவிப்பிற்காக நிலம், வளம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். இலாப நோக்கத்திற்காக சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறார்கள் என்று முழங்குபவர்கள் கம்யூனிஸ்டுகள். நிலத்தை பொதுவுடைமையாக்குவோம் என்பது எதற்காக என்று இந்த துறை சார் வல்லுனர்கள் அறியமாட்டார்கள் போலும்!

எல்லாவற்றுக்கும் மேலாக முதலாளித்துவம் என்பது தேவையற்ற பொருள்களை உற்பத்தி செய்கிறது. செயற்கையான தேவைகளை ஏற்படுத்தி மக்கள் மேல் திணிக்கிறது என்றெல்லாம் மார்க்சியர்கள் பேசுகையில், சுற்றுச் சூழல் சுரண்டலும் அதில் அடக்கம் தானே!

மார்க்சிய ஆதரவு ஆய்வாளர்களே, நிலத்தை பொதுவில் வை! செயற்கையான தேவையாக உள்ள இலாபம், வாடகை, வட்டி உள்ளிட்டவற்றை ரத்து செய்! என்பது வெறும் உபரி மதிப்பு பற்றிய கோஷம் மட்டுமில்லை! இலாபத்தின் பெயரால் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதற்கு எதிரான முழக்கமே அது!

மார்க்சியம் பற்றிய உண்மையை தெளிவுபடுத்தி, முழுமையான புரிதலை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. (நாம் ஒன்றும் அதில் இல்லாததை பேசப் போவதில்லை). அதை விடுத்து மார்க்சியர்களை வெறும் பொருளாதாரவாதிகள் என்னும் தொனியிலான அறிவுஜீவித்தனமான ‘பிரசங்கம்’ என்பது மார்க்சியத்தின் மீதான அவநம்பிக்கைக்கே வித்திடும்.

ஆகவே துறைசார் வல்லுனர்களாக தனித்து இயங்கும் ‘தோழர்கள்’ மார்க்சியத்தின் அடிப்படையை மக்களுக்கு அதன் கோட்பாட்டு சாரத்திலிருந்து எடுத்து விளக்கி, அதன் மூலம் மார்க்சியர்கள் எவ்வாறு வெவ்வேறு வடிவிலான சுரண்டலை எதிர்க்கிறார்கள் என்பதை விளக்கி, மார்க்சியத்தின் தேவையை உணர்த்துவதன் மூலம் தான் அவர்கள் விரும்பும் மாற்றத்திற்கு வித்திட முடியும்.

“பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றுவதே புரட்சி” என்றார் நிக்கிடின். மார்க்சியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அதற்கான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள். சூழலியலும் அதில் அடக்கம். 

சிவப்பின் பின்னால் அணிதிரள வேண்டிய வரலாற்றுக் கடமையை மக்களுக்கு எடுத்துரைப்பது இடதுசாரிகளின் கடமை. இதில் பசுமையும் சிவப்புடன் ஈடுபட வேண்டும்.

தோழர் நக்கீரனின் ஆழமான வாசிப்பும், கடின உழைப்பும், சூழலியல் சாந்த அவரது பங்களிப்பும் போற்றுதலுக்குரியவை. நன்றி. வாழ்த்துகள்

இணைப்பு: பொருளாதார நிர்ணயவாதம் என்றால் என்ன? http://saavinudhadugal.blogspot.com/2018/11/blog-post.html