Jun 25, 2022

சுழல் தொடரில் எனக்குள்ள விமர்சனம்!

 


சுழல் – வெப் சீரீஸ் – இரண்டு பிரச்சினைகள் மீது பயணிக்கிறது! தொழிற்சாலை தீ விபத்து, சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்!

சண்முகம், தொழிற்சங்க தலைவரின் கதாப்பாத்திர வடிவமைப்பு மார்க்ஸையே பின்பற்றினாலும் குடும்பத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம், அதனால் குடும்பம் சிதைந்து, பெண் பிள்ளைகள் எந்த நிலைக்கு ஆளானார்கள் – சரி விட்டுவிடுவோம்.

தொழிற்சாலை தீ விபத்து  பற்றி இறுதியில் ஒரு கதை சொல்கிறார்களே! அப்படியென்றால் முதல் காட்சியில் காட்டப்படும் தொழிலாளர் போராட்டம், தொழிலாளர்கள் அடிவாங்குவது! இது குறித்தும் கேள்வி எழக் கூடாதா? நண்மைக்கு என்று முடிவான பின்னர், தொழிலாளர்களை அடியும், மிதியும் வாங்க விட வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் சொல்லும் கட்டுக்கதையை அந்த போராட்டமின்றியே அரங்கேற்றியிருக்க முடியும்! பொய்யான உணர்ச்சியை தூண்டிவிட்டு பதட்டமடைய வைக்கும் திரைக்கதை ஏற்புடையதா?

அடுத்து, பாலியல் குற்றவாளி என்று இருவரை கைது செய்கின்றனர். முதலில் கைதானவர் பற்றி ஒரு கதை வருகிறது! அப்போது படைப்பாளர் நம்மிடையே இரக்கபாவத்தை கோருகிறார். ஓடிப்போனவர்கள் பற்றி அவருக்கு பகுதி அளவு உண்மை தெரியவருகிறது, ஆனால் அவர் ஊராரிடம் சொல்லவில்லை, குறைந்தபட்சம் சண்முகத்திடம் கூட சொல்லவில்லை! ஏனென்றால் பணத்தை பறித்துக் கொண்டார். மேலும் அவரும் பாதிக்கப்பட்ட நிலையில் ஏதோ ஒரு பித்து பிடித்த மனநிலையில் இருக்கிறார் என்கிற சப்பைக் கட்டு! எதற்கு? கதை நகர வேண்டுமே அதற்காக!

இரண்டாவது ஒருவர் மீது சந்தேகப்பட்டு சன்முகமும், ரெஜினா (போலீஸ்) தூக்கிச் சென்று “விசாரிக்க” உணர்ச்சிகரமாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அதான் கண்ணால் காண்பது பொய் என்று முன்னரே சொன்னேனே, அந்த மெசேஜ் நமக்கு சொல்லப்படுகிறது!  இந்த காட்சி முடிந்த உடன் நமக்கு யார் மேல் கோவம் வருகிறதென்றால் பாதிக்கப்பட்ட தரப்பின் மேல்! ஏண்டா இப்படி முட்டாள்தனமா, அராஜகமா நடந்துக்குறீங்க. தொழிற்சங்க பிரதிநிதியாக இருக்கிறார். அந்த குடும்பத்தோடு அவ்வளவு நெருங்கி பழகுகிறார், நல்ல முதலாளிக்கு இருவரும் விசுவாசமாக இருக்கிறார்கள்! ஆனால் தன் முதலாளியிடம் நிறுத்தி நியாயம் கேட்க கூட யோசிக்காத மூர்க்கம்! ஏனென்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்! நியாயம்தானே என்று கொண்டு சென்று, பின் இது நியாயமா என்று பாதிக்கப்பட்டவர்கள், பார்வையாளர்களையும் சேர்த்து குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் வகையிலான ஒரு திருப்பம்!  அப்போதுதானே ஒரு ஆக்‌ஷன் பில்டப்ஸ் கிடைக்கும்!

சில வருடங்களுக்கு முன் அதேபோல் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் அந்த சிறுமியை எந்த ஒரு கட்டத்திலும் PREDATOR குறித்து எச்சரிக்கவே இல்லை! ஏனென்றால் அவள் அந்த துயரை மனதில் போட்டு புதைத்துவிட்டாள். இன்னும் இதர காரணங்கள் மனநல மருத்துவரால் விளக்கப்படுகிறது! பின்னர் உண்மை வெளி வருகையில், இது எதுவுமே இயல்பாக இல்லாமல், செயற்கையாக திணிக்கப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது! மனநலன் சார்ந்து சமாளித்த பின்னர், யாரும் அது சார்ந்து கேள்வி எழுப்ப இயலாதல்லவா! மருத்துவமனையில் சண்முகம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கவனித்தவர்களுக்கு, இறுதி காட்சியில் மார்க்ஸை காட்டும் போது ஏன் கோவம் வருகிறது என்பது புரியும்.  

பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்தபோது யாரிடமும் 'சொல்ல தெரியவில்லை’. வளர்ந்து பெரியவளாகி, அந்த இடத்தில் அவளைப் போலவே ஒருத்தி இருக்கும் போது கூடவா எச்சரிக்க தோணாது! நான் பாதிக்கப்பட்ட இடத்திற்கு என் மகளை அனுப்பவே மாட்டேன்! சிறு வயதில் சொல்ல துணிச்சல் இல்லை தான், ஆனால் வளர்ந்த பின்..??  அதுவும் இத்தனை தூரம் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில்.. ??? Predator உடன் நம் நெருங்கிய உறவு வளர்கையில், அந்த உறவோடு தொடரிபில் இருக்கையில்???? மேலும் பாதிக்கப்பட்டவர் தன் ரத்த உறவுகளை இன்னும் கூடுதலாக பாதுகாக்கும் ஒரு மனநிலைக்கும், மனப்பதட்டத்திற்குமே உள்ளாவார்! 

படைப்பாளி அதற்கொரு விளக்கம் கொடுத்துவிடுவதாலேயே அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அது வெறும் Screen play writing CRAFT சார்ந்த நியாயமற்ற உத்தி என்று சொல்லக் கூடாதா?

திரைக்கதை பாணியே எப்படி இருக்கிறதென்றால் - ஒன்றை சந்தேகிக்கும் வகையில், வெறுக்கும் வகையில் வலிந்து காட்டி, பின்னர் அது  / அவர்கள் அப்படியில்லை என்று ஒரு கட்டுடைப்பு! “பார்த்தீங்களா இந்த  PREJUDICE தான் உங்க கிட்ட பிரச்சினை, எப்படி உங்கள ஏமாத்துனோம்” என்று புளங்காகிதம் அடைய விரும்பினார்கள் போல் இருக்கிறது. Mystery கதைகளில் இயல்பாக பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகம் வரும், இயல்பாகவே அவரில்லை என்னும் விலகல் நடைபெறும். ஆனால் இங்கே எல்லாம் செயற்கை.

இப்படி ஒவ்வொன்றாக யோசிக்கையில், எல்லாமே சுவாரஸ்யம் மற்றும் இன்றைய சந்தைக்கு தேவையான எல்லாரையும்  உள்ளடக்கிய ஒரு பேக்கேஜிங் செய்திருக்கிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் Convincing ஆக இருக்க வேண்டும், யாரை ‘கெட்டவராக’ காட்டுகிறார்கள் என்பதில் கூருணர்வு இருக்க வேண்டுமல்லவா? 

ஜனகனமன என்றொரு படம் வந்தது. அதில் ஒவ்வொரு முடிச்சாக கட்டவிழும். ஓர் அதிர்ச்சி காத்திருக்கும். அது இயல்பாக, நம்பும்படியாக இருந்தது. அப்படி ஓர் உணர்வை சுழல் எனக்கு தரவில்லை. திரைக்கதையில் மெனக்கெடலும் இல்லை, நேர்மையும் இல்லை! தொழிற்சாலை பின்னணி என்பதே ஒரு பேக்கேஜிங் உத்திதான்! உத்திகளில் தவறில்லை, ஆனால் அதை கூருணர்வுடன் கையாண்டிருக்கலாம்!

பிரம்மாண்டம், Visual Treat, Detailing, கண்களுக்கு குளிர்ச்சியான பல விசயங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு இன்னும் இதர தொழில்நுட்ப விசயங்கள், கடின உழைப்பு என்பதற்காக செயற்கையாக கோர்கப்பட்ட  Mystery / Mystic / politically Class Insensitive content ஐ விமர்சனங்கள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன?

சுழல் – பிரம்மாண்டமான Making மூலம் காதில் பூச்சுற்றும் முயற்சி!

ரசிப்பவர்களின் ரசனையை நான் கேள்வி கேட்காத போது, எனது விமர்சனத்தை தேவையில்லாத ஒன்று, வேண்டுமென்றே குறை கண்டுபிடிக்கிறீர்கள் என்று சொல்ல யார்க்கும் உரிமை இல்லை!

இதுபோல் பாதிக்கப்பட்டால், ஒருவர் என்னதான் செய்ய வேண்டும்? காவல்துறை என்னதான் செய்ய வேண்டும்? யார் மீதும் சந்தேகப்படக் கூடாதா? என்று ஒரு கட்டம் வரை குழம்பி நிற்க வேண்டியுள்ளது! இறுதியில் யாரை முதலில் சந்தேகப்பட வேண்டும் என்கிற ‘MESSAGE’ அவசியமானது! தெளிவானதும் கூட. ஆனால் அதை சொல்வதற்கு, எங்கெல்லாம் சென்று வருகிறார்கள், அதற்கு எடுத்துக் கொண்ட பின்னணியில் ஒரு நேர்மை இல்லை, கூருணர்வு இல்லை என்பதே எனது விமர்சனம்!  அதோடு யாரை நல்லவர்களாக காட்டுகிறார்கள் என்னும் போது, தொழிற்சங்க பின்னணியும் சேர்ந்து வருவதால், ரத்தம் உறிஞ்சிக் கொழிக்கும் ஆலை முதலாளிக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது!

தொழிற்சாலை, சன்முகம் மாதிரியான ஒரு தொழிற்சங்க தலைவர், உறுப்பினர் பின்னணியில்லாமல் ஒருவேளை இந்த கதை எழுதப்பட்டிருந்தால், சொல்ல வந்த கருத்தை கொண்டாடி இருக்கலாம்!

அப்படியே கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள்! ”ரசனை சார்ந்து - நீ ஏன் இப்படி பார்க்குற” என்று கேள்வி கேட்கும் உரிமை எனக்குமில்லை, மற்றவருக்குமில்லை.

Additional links:

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid0H9LWxNZHMfxaGkMeYwf6xR9o8DRKhYGmSoZr32M6ZU5mgubUM6m5DzopGpMLjdyAl 

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid0R4tkMxqp6bNCjWxhhBDppdKp9f9pz3zoNTYJ1jJc48WcGi2ss6CCQ2ns72PK254Pl

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02svEBgnTqDWHn74mJwgwCsajLL7DFsuioqVGLcSgSLzJ18Gzfzdj9MgMAPcaSZS4ol

 அந்த முதலாளி தமிழனாகவே இருந்திருக்கலாமே! சேட்டு என்று வைத்துவிட்டு, அவன் மற்றும் அவனது மகன் மூலம் பார்வையாளர்களை நோக்கி வைக்கும் கேள்விகள் / சொல்லும் மெசேஜ் “ஏன் அப்படி இருக்கக் கூடாதா?” என்கிற பரந்த மனப்பான்மை சார்ந்த பிரச்சினையல்ல… படைப்பாளர் ஏன் அப்படி அவர்களை வைத்தார்கள் என்று அணுக வேண்டிய பிரச்சினை!

”அவங்கள்லையும் நல்லவங்க இருக்கலாம், இவங்கள்ள கெட்டவங்களும் இருக்கலாம்!” – எத்தகைய அரசியல் பின்னணியில் இந்த பாடம் கற்பிக்கப்படுகிறது? இனம், மொழி, பிரப்பு, மூலதன ஆதிக்க அரசியல் எதிர்ப்பு போராட்ட உணர்வை பகடி செய்யும் நடுநிலைவாதமிது! பிரிவினைவாதத்தை வளர்ப்பவர்கள் என்று சொல்லாமல் சொல்வதாகவே என்னால் எடுத்துக்கொள்ள முடிகிறது! 

 

 

Jun 24, 2022

திராவிட அரசியலின் வர்க்கச் சார்பு என்ன?

 தமிழ்நாடு / திராவிட மாடல் முற்போக்கானது! சமூக நீதி நிறைந்தது! வடக்கு போல் இல்லை என்று ஒரு வாதம் நிலவுகிறது! ”திராவிடம் தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று பிரபல ஊடகவியலாளர் சொல்கிறாராம். இவர் மார்க்சியத்தைப் படித்திருக்கிறாரா ஐயமே! படித்தும் இப்படி பேசுவார் என்றால் அது பிழைப்புவாதம்! அதோடு பாட்டாளி வர்க்கத்திற்கு இழைக்கும் துரோகம்! 

திராவிட அரசியல் என்பது நிலவுடைமை வர்க்கத்தின் தேவையிலிருந்து (பார்ப்பனரல்லாத கூட்டணியாக) உதித்தது, தற்போது முதலாளித்துவத்தோடு தகவமைகிறது!  அதில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ”போட்டியின்” காரணமாக “முதலாளித்துவ ஜனநாயகத்தை” கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எந்த வகையிலும் அது மார்க்சியத்திற்கு இணையாகாது! மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதே தவறான சொல்லாடல்!

மார்க்சியம் என்பதே மண்ணுக்கேற்ற வகையில் ஆய்வு செய்து உத்திகளை கடைபிடிப்பது தான். அதற்கு எதற்கு முன்னொட்டு!

திராவிட அரசியலில் - பெரியார் இயக்கத்தால் உண்டான பகுத்தறிவு, பெண் விடுதலை இயக்கம், சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கென ஒரு நன்மதிப்பு உண்டு. ஆனால் அது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு போதுமானதல்ல! பார்ப்பன எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பாகாது!

உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பார்ப்பனர்கள் வசம் என்றொரு கூட்டம் சொல்லி அனைத்தைம் பார்ப்பனியத்தின் மேல் போட்டுவிட்டு இடைநிலை சாதிகளின் வளர்ச்சி, முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகளுடனான அரசுகளின் கூட்டணி பற்றி வாய் திறப்பதில்லை!

சமூக நீதி என்கிற சொல்லாடல் மூலம் உண்மையான சமத்துவம் எது என்பதையே மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்! உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே உண்மையான சமூக நீதி! அது - அதாவது தனியுடைமை தகர்ப்பு திராவிட சித்தாந்தத்தில் இருக்கிறதா? சாதி ஒழிப்பிற்காவது தீர்வு உண்டா? மனசாட்சியோடு பேச வேண்டும்!

பகுத்தறிவு / முற்போக்கு சிந்தனை என்பது தொடக்கம்! நம் அவல வாழ்க்கை / சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் பற்றிய முழுமையான கண்ணோட்டம் பெற மார்க்சியம் அவசியத் தேவை!

பகுத்தறிவு / பெரியார் / அம்பேத்கர் என்பது தொடக்கம்! கலகம் தொடங்கும்! தீர்வுக்கு மார்க்ஸ் அவசியத் தேவை!

#மார்க்சியம்

பெரியாரிடம் இந்த நிலைப்பாடு இருந்தது! ஆனால் திராவிட ஆட்சியாளர்களிடம் பாட்டாளி வர்க்க சார்பு உள்ளதா? தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கபப்டுவதில்லையா?



மார்க்சியம் நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு என்பதை கணக்கில் கொள்ளும்! பிஜேபி கூட்டணி சேராத திராவிட அரசியல் எங்களுக்கு நட்பு முரண்பாடு! பார்ப்பனியமும், முதலாளித்துவமும் பகை முரண்பாடு! RSS opp திராவிடத்திற்கு பார்ப்பனியம் பகை முரண்பாடு! முதலாளித்துவம்? இதை மனதில் வைத்து அணுகவும் :)

ஆதிக்கம் என்கையில் ஆதிக்க சிந்தனை மட்டும் நம் எதிரி ஆகாது! மூலதன ஆதிக்கமும் நம் எதிரியாக இருக்க வேண்டும்! அதை தகர்க்கும் கொள்கை அந்த “மாடலில்” இருக்க வேண்டும். அதுவல்லாத ஆட்சி என்பது முதலாளித்துவ “ஜனநாயக” ஆட்சி! சீர்திருத்தவாதம் போல் தோன்றும்! Its an existential game here.

 திராவிட மாடலின் போதாமை குறித்த எனது பதிவிற்கு வழக்கம் போல் சில திராவிட உணர்ச்சியாளர்கள் பொங்குகிறார்கள். மடக்கும் கேள்விகள் கேட்பதாக நினைப்பு! மார்க்சியம் படிச்சு அந்த கேள்விக்கு விடை தேடுங்க. இல்லையா ஒரு கம்யூனிஸ்ட் அமைப்புல போய் உங்க கேள்விகள கேளுங்க!

 திராவிட கட்சிகளுடன் ஏன் கூட்டணி என்பது உட்பட எல்லாத்துக்கும் பதில் சொல்வாங்க! உண்மையாகவே கற்றுக்கொள்ளும் நோக்கமும், சமூக விடுதலையில் அக்கறையும் இருந்தால் ஒருவர் அதைத்தான் செய்ய வேண்டும். உங்கள் வம்பளக்கும் தேவைக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க இயலாது! நன்றி நமக்கம்!

 தலித்தியம் ,பெண்ணியம், என அடையாள அரசியல் அனைத்திற்கும் இதே நிலைப்பாடுதான்! பெண்ணியத்திலும் மேட்டுக்குடி வர்க்க நிலைப்பாடு உண்டு. மார்க்சியக் கண்ணோட்டம் மட்டுமே அதை கட்டுடைக்க உதவும்! முற்போக்குடன் நட்பு முரண்பாடும்; தனியுடைமை ஆதரவிருந்தால் பகை முரண்பாடும் கொள்வதே பாட்டாளி வர்க்க அரசியல். அதுவே கம்யூனிஸ்ட் அரசியல். 

 

Jun 11, 2022

ஆடையும் பொள்ளாச்சி வல்லுறவும்

பொள்ளாச்சி வல்லுறவு நடந்த போது அந்த பெண்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள். செய்தவர்கள் யார் (தமிழன்!) வக்கிரம் புடிச்சவங்கள்ல ஆம்பிளை, பொம்பிளை, சாதி, மதம், மொழி, தெக்கு, வடக்கு, இனம் வேறுபாடு இல்லை! எல்லாத்துக்கும் அடிப்படை சமூகமயமக்கல்! பொது புத்திய தூக்கி எறிந்து விட்டு வளரனும்.

உடைல பண்பாட்டை தேடிட்டு இருக்கானுங்க! வக்கிர புத்திக்கும் பெண்களையே குத்தம் சொல்றது! தமிழர் உடை போடுறதால ஒரு ஆண் உத்தமனாகிடுறானா? மண்டைல அழுக்க வச்சிக்கிட்டு வெளிய வெள்ளையும் சொள்ளையுமா திரியுறது! புடவைய போத்த்திட்டு திரியுறதில்ல பண்பாடு!

எதிர்ல ஒரு பொண்ணு அம்மணமாவே உக்காந்திருந்தாலும் அவ விருப்பிம் இல்லாம அவளைத் தொடக் கூடாது என சொல்லி வளர்ப்பதே சிறந்த பண்பாடு!

ஆம்பிளைன்னா அப்படிதான் இருப்பான்! நீ தான் மூடிட்டு போகனும் என்று சொல்லி வளர்ப்பதே ஆணாதிக்கம்! இதுல பெருமை வேற!

இதுல வேற பலாப்பழம்னா ஈ மொய்க்கதான் செய்யும்! முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேலைக்கு தான் நட்டம்! அடேய்! மனுஷன நல்ல மனுஷனோட ஒப்பிடுங்க! ஆம்பிளைனா அப்படிதான் இருப்பான்னு சொல்றவன்/ சொல்றவள் தான் பெண்களுக்கு எதிரான அத்தனை கொடுமைகளுக்கும் பொறுப்பு.

Women have right to exist! Right to safety! Right to loiter! Right to late night roaming! Right to wear what they want! Right to be free.. as any other men! Stop oppressing women and paving way for Men to harass and exploit women in the name of Feminity!

Jun 3, 2022

பொதுவுடைமை என்றால் என்ன?

 


கம்யூனிசம் என்றால் இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கி இல்லாதவர்களிடம் கொடுப்பதா?

 இல்லை!

 உன் கிட்ட மட்டும் எப்படி இருக்கு என் கிட்ட ஏன் இல்ல என்று கேட்பது!

 "ஓ! எல்லாமே எங்க பாட்டர், முப்பாட்டர்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கி தொடங்குனுச்சா? ஓ அதை "மூலதனமா" வச்சு காலம் காலமா எங்க உழைப்பைச் சுரண்டி சேர்த்த சொத்துகளா என்று ஆய்வுப் பூர்வமாக அந்த ரகசியத்தைச் கண்டறிந்த மார்க்சிய தத்துவத்தைப் பற்றிக் கொண்டு உழைப்பாளர் விடுதலைக்காக போராடுபவது. உழைப்புச் சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை (பொருளாதார அமைப்பை) நிறுவ இயக்குபவது!

இருப்பவினிடம் பிடுங்குதல் என்பது!

 எம்மிடமிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டதை திருப்பி எடுத்துக் கொள்வது. பொதுச்சொத்தை தனியுடமை ஆக்கி வைத்துள்ள நிலையை ஒழித்து மீண்டும் பொதுவுடமை ஆக்குதல். அனைவரும் உழைத்து உழைப்புக்கேற்ற பலனை சமமாகப் பிரித்து கொள்ளுதல் என்று பொருள்.

கம்யூனிசம் என்பது ராபின் ஹுட் ஹீரோயிஸம் அல்ல!

 செயற்கையாக உருவாக்கப்பட்ட லாபம், அதாவது உழைப்பு சுரண்டல் அதை ஒழித்தல் என்பதாகும்

 மூலதனம், லாபம் என்கிற பெயரில் உழைக்காமல் வாழும் கூட்டத்தை உழைப்பில் ஈடுபடுத்துவது, அதாவது நம்மை பலவந்தமாக கூலி உழைப்பில் ஈடுபடுத்தியது போல் அவர்களையும் சோஷலிச உழைப்பு முறையில் ஈடுபடுத்துவது! அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்! இதை வன்முறை என்று அச்சமூட்டுவார்கள்.

 முதலாளித்துவமே ஆகப் பெரிய வன்முறை தான்!

ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக உறவுகளை சமத்துவ உற்பத்தி உறவுகளாக நிலை நாட்டுவது... அதாவது உழைப்பைக் கொள்ளை அடித்து ஒரு பக்கம் மட்டுமே குமித்து வைப்பதால் சாய்ந்திருக்கும் தராசை சமநிலைக்கு கொண்டு வருவதாகும்.

 கம்யூனிச கட்டத்திற்கு செல்லும் முன் சோஷலிசம் என்னும் கட்டம் உள்ளது. முதலாளிகள் தனிச் சொத்தாக கைப்பற்றி வைத்துள்ள உற்பத்தி சாதனங்களை பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது (சொத்தையெல்லாம் புடுங்கிப்பாங்க என்று அறை குறையாக இதை சொல்லி கம்யூனிஸ்ட்கள் குறித்து அச்சமூட்டுவார்கள்).

 முதலாளித்துவத்தை பணிய வைக்கும் போராட்டம் நீண்டு நெடியது. அதில் தாங்கள் சுரண்டி சேர்த்த சொத்துகளை காக்க மூலதனம் கொண்டு தொழிலாளர் வர்க்க அரசை ஒழிக்க பல சதிகள் நடக்கும்! அடக்குமுறைகள் ஏவப்படும்! உள்ளூர் பெரு முதலாளிகள், ஏகாதிபத்திய நாடுகள், நிதி நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல நெருக்கடிகளை கொடுப்பார்கள்! குறிப்பாக பொருளாதாரத் தடை என்கிற பெயரில் சோஷலிச நாடுகளின் அத்தியாவசியப் பொருட் தேவைகளைக் கூட தராமல் அவர்கள் இருப்பை, வளர்ச்சியைக் கெடுப்பார்கள்.

இதைக் கண்டு சோஷலிசம் எங்கே தாக்குப் பிடிக்கிறது என்று கூப்பாடு போட வேண்டியது!

 ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் சதிகளை முறியடிக்க சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அமெரிக்காவை முறியடிக்க சைனா... போராடுகிறது!

 ரஷ்யாவை முடித்து வைத்தது ஏகாதிபத்தியம்..

 கியூபா, வெனிசுலாவில் நடப்பதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

 உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட சதி.. (இதெல்லாம் நடக்கும் என்று மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் கணித்து சொன்னார்கள், மாவோ, ஹோசி மின், ஸ்டாலின் எல்லாம் என்ன செய்தார்கள் என்று படிக்கவும்).

 மூலதன ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகையில் இடைக்கால அரசியல் பொருளாதார சமரசங்களை சோஷலிச நாடுகள் எடுக்க நேர்கிறது. இதில் பாதை மாறிப் போக நேர்கிறது! பின்னடைவுகள் ஏற்படுகின்றன! ஆய்வுகள் செய்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவார்கள்!

 கம்யூனிஸ்டுகளே இப்படித்தான்! இன்னைக்கு எல்லாம் எங்கய்யா உண்மையான கம்யூனிஸ்ட் இருக்காங்க!

 சோசலிசம் தோத்துப்போச்சு! வளர்ச்சி இல்ல! பஞ்சம் பசி பட்டினி என்று கிளப்பி விடாமல்

 சோஷலிச நாடுகளில் என்ன நடக்கிறது, கம்யூனிஸ்ட் அரசியல் போராட்டம் என்றால் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன் நிபந்தனை மார்க்சியத்தை படிக்க வேண்டும். படித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும். அந்த மனதிற்கு தான் வர்க்க உணர்வு என்று பெயர்.

 #பொதுவுடைமை என்றால் என்ன!

 

Jun 2, 2022

கமல்ஹாசன் அவர்களுடன் ஒரு சந்திப்பு: மலரும் நினைவுகள்

 



 

2009 இல் நிர்மலாவாக இருந்த எனக்கு பெண்கள் நிலை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியது! தாய் வழித் தெய்வம் குறித்த ஆய்வின் போது, பெண் கடவுள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட ‘கலை’ வரலாறு இன்னும் சில கேள்விகளை என்னுள் எழுப்பியது. திருமணத்திற்குப் பின் பெண்கள் ஏன் வீட்டிற்குள் அடைக்கப்படுகிறார்கள், ஆண்கள் வாழ்வு பெரிதாக மாறுவதில்லையே (அன்று நான் கொற்றவை அல்ல!). எந்த ‘தியாகமும்’ செய்ய வேண்டியதில்லாமல் சுதந்திரமாக அப்படியேதானே இருக்கிறார்கள் என்கிற கோவம்!

 அப்போது "பெண்ணிய” நோக்கில் எழுதப்பட்ட பல பதிவுகளைப் படிக்கத் தொடங்குகிறேன். மனதை வெளிப்படுத்த கவிதைகள் எழுதத் தோன்றியது. அதற்காக ‘இலக்கியமும்’ படிக்கத் தொடங்குகிறேன்! நூலகங்களுக்குச் செல்வேன்.. படிப்பேன் எழுதுவேன்!

 எனது கோவங்கள், உடைபட்ட நதிபோல் உடைபட்ட வாக்கியங்கள் ஆகின்றன! அதை கவிதை என்றே நான் நம்பினேன்! வசுமித்ர வந்து “இதெல்லாம் கவிதைனா அப்ப கவிதைய என்ன சொல்றது” என்று கேட்கும் வரை! வாழ்வு அன்று மாறியது… அது வேறொரு கதை!

 இப்படி நான் கவிதை என்று நம்பி ஒன்றை எழுதிக் கொண்டிருந்த போது இரு ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவுப் பதிவே இது!

 எத்தனை மனிதர்கள் வர்ஷாவாக பிரபலமாக இருந்து அதே துறையில் இருக்கும் ஒரு நபரை நான் திருமணம் செய்துகொண்டேன். அவரும் ஒரு ‘செலப்ரிட்டியாகி’க் கொண்டிருந்தார். திரைத்துறையில் மட்டுமல்லாது ‘மேல் அடுக்கில்’ இருக்கும் பல பிரபலங்களை அறிந்தவராக, நண்பர்களாக பெற்றிருந்தார்! ‘புகழ் வெளிச்சம்’ மிக்க வாழ்க்கை! ஆனாலும் மனநிறைவற்ற ஒரு நிலை! அதன் வெளிப்பாடாக தொடங்கியதே கவிதை எழுதுதல்!

 பாஞ்சாலியின் கண்ணோட்டத்தில் மகாபாரதம், சீதையின் பார்வையில் இராமாயணம், சித்தர் பாடல்கள், பட்டுக்கோட்டையார், வாலி, திரை இசைப்பாடல்கள் என்று எல்லாம் கலந்து கட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். (மார்க்சியம் அப்போது படிக்கவில்லை).

 உள்ளுக்குள் எரிந்த தீ, கையில் எழுதுகோலாக மாறியது!

 தோன்றியதை எழுதினேன்! கவிதைக்கு என்ன இலக்கணம்! இலக்கணம் மீறிய கவிதை எனது இப்படி எனக்கு நானே ‘மகுடமும்’ சூட்டிக் கொண்டேன். வாலி எழுதிய நூலோ அல்லது அவரைப் பற்றிய சுயசரிதையோ ஏதோ ஒன்று படித்து, ரசித்து அவரை சந்திக்க ஆவல் எழுந்தது. அப்போதிருந்த வட்டம் காரணமாக திரைப் பிரபலங்களை சந்திப்பது அசாத்தியமில்லை!

 வாலி குறித்து ஒரு ‘கவிதை’ எழுதினேன்! அவர் பாடல் எழுதிய திரைப்படங்களின் பெயர்களை வைத்துக் கோர்த்து (சிரிக்காதீர்கள்) எழுதி அதை ‘ஃப்ரேம்’ போட்டு அவரிடம் கொடுக்க சென்றேன். நிறைந்த அன்போடு வரவேற்றார். கடைசி நிமிஷத்தில் எழுத்துப் பிழையை கவனித்து, மீண்டும் பிரிண்ட் செய்ய முடியாமல், அதை x மார்க் போட்டு வைத்திருந்தேன்! அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை! ‘உனக்கு தமிழ் நன்றாகவே வருகிறது. உன் தமிழ் எனக்குப் புடிச்சிருக்கு’ என்றார். நிறைய பேசினோம். அதற்கு முன்பு அவரை நான் சந்தித்தது பாட்டுப் பாடவா திரைப்பட வேலையின் போது. அதையும் அவருக்கு நினைவுபடுத்தினேன்! நெகிழ்ச்சியானதொரு சந்திப்பு! பின் 2,3 வருடங்களில் அவர் மறைந்தார். அந்த சிரித்த முகம் இன்னமும் என் மனதில் பதிந்துள்ளது.

 எனது கவிதை ‘சேவை’ தொடர்ந்தது. பட்டாம்பூச்சி என்று பெயர் வைத்து… (சிறகடித்து பறக்க வேண்டும் என்கிற வேட்கை) நான் எழுதிய ‘கவிதைகளைத்’ தொகுத்தேன். முதல் பிரதியை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அச்சில் அல்ல, பிரிண்ட் வடிவில் நூலாக தயாரித்தேன்…

 நான் சந்திக்க விரும்பிய இன்னொரு திரை ஆளுமை! கமல்ஹாசன் அவர்கள்!

 என் முன்னாள் கணவருக்கும் கமல் அவர்களுக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. மேலும் என் மகள் மீது நிறைய அன்பு காட்டுவார். அவளின் ஓவியங்களை பாராட்டி ஊக்குவிப்பார்.

 ஒரு நாள் நேரம் கொடுத்தார். ’கவிதை’ பிரதியோடு அவரை சந்தித்து ”ஒரு சிறிய முயற்சி, படித்து உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்றேன். சரி என்று வாங்கிக் கொண்டார். இன்று நினைத்தால் முன்னுரையே வேடிக்கையாக இருக்கும்! அதைப் போய் அவரிடம் கொடுத்தேனே என்று தோன்றுகிறது.

 சார் படிச்சாரு.. நல்லாருக்குன்னு சொன்னாரு” என்று அவர் தொடர்பாளர் மூலம் பின் ஒருநாள் செய்தி வந்தது!

 அறிவுத் தேடல் உள்ள மனிதர்! ஆகவே அனைத்தையும் குறித்து படிப்பார். ஓவியம் குறித்து இன்னும் எத்தனையோ விசயங்கள் குறித்து அவரிடம் ஆழ்ந்த அறிவு உள்ளது. அவரது தேடல், வேட்கை, குழந்தைகள் போல் புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றை கண்டு நான் வியந்துள்ளேன்.

 எனது தேடலுக்கு மார்க்சியம் மூலம் விடை கிடைத்தபோது கொற்றவையாக மாறினேன். அரசியல் கண்ணோட்டம் இடதானது! எனது பாதை மாறியது!

 ஓரிரு நாட்களாக கமல் அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும் போது, “உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது” என்று அவர் பாடியதை கேட்கும் போது, அந்த குரல் என்னை ஏதோ செய்கிறது! பழைய நினைவுகள் மனதில் ஓடின.

 வாழ்வின் துயரங்கள், அவலங்கள், போராட்டங்கள் தான் என்னை எத்தனை தூரம் விரட்டியுள்ளது! தற்போது எங்கு வந்து நிற்கிறேன் என்கிற ஒரு மலைப்பு!

 கடந்த காலத்தில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன! கமல், வாலி, இசை ஆளுமை ஜாகிர் உசேன், சூரியா என பல கலைஞர்களை சந்தித்த அந்த தருணங்கள் … அவற்றுள் பசுமையானவை.

 கமல் அவர்களின் தற்போதைய தோற்றம் ஈர்ப்பதாக உள்ளது! மேலும், அவரது குரலுக்கு நான் என்றும் விசிறி! இளையராஜாவின் குரல் போல், கமலின் பாடல்கள் சிலதும், குரலும் ஆழ்மன துயரை கண்ணீராக வெளியேற்றும் சக்தி படைத்தது. அதனால் தான் அவர்கள் என் மனதை வேட்டையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்!

உழைப்புச் சுரண்டல் மிக்கதொரு வாழ்வில், கலைஞர்கள் ஏதோ ஒரு வகையில் துயர் துடைப்பவர்கள் தானே! நடிகராக, பாடகராக, சந்திக்கையில் தன் பேச்சின் மூலம் ஊக்குவிப்பவராக கமல் பல விதங்களில் அதை செய்துள்ளார்.

 கமல்ஹாசன் என்னும் கலைஞன் வாழ்க வளமுடன்!

 #KamalHaasan best wishes for #VikramMovie 

 

 (ஆமாம், அந்த கவிதைகள் வெளிவந்தனவா? அது பற்றிய பதிவு மற்றொரு பதிவில்)