Aug 30, 2010

சூல் கொண்ட வன்மம்

http://www.penniyam.com/2010/08/blog-post_29.html

சதையின் நடுவே
சூல்கொண்ட பிளவு
இறங்கியது
சமவெளியின்
ஒரு பக்கம்

திரவங்கள் கூடிய மார்பை
அறுத்து வைப்பதோ
கவிகளின் நாவில்
சுழலும் கூந்தலை
பிடுங்கி வைப்பதோ
ஓலம்....

உரு பேதங்கள்
இரும்புச்சங்கிலிகளைத் தருகையில்
கண்ணீரின் நீர்மவாய்
ஆயுதத்தை முத்தமிட்டு மடியும்

பிணங்களின் கங்குகளில்
குளிர்காயும் மூதாதைய உடல்கள்
நட்டுச்செல்கிறது புன்னகையுடன் கூடிய
வன்ம மரங்களை
பூத்துக்குலுங்குகிறது வலி

உலா வருகிறாள்
அவள்
தன்னைத் தானே தொலைத்தபடி

கருப்பையில் விழுந்த
விதைகளை தாங்கிப் பிடிக்கும்
கைகளே..

புன்னகை சிந்தா உதடுகளே...
உங்கள் கருப்பையொத்த விழிகளை
காவு கொண்டதும்
எண்ணற்ற மலைகள் தாண்டி மறைத்து வைத்ததும்
சொல்லக்கூசும் வார்த்தைகளோடு ஓடி ஒளிவதும்
எது
எவை
ஏன்....


நடையில் குறுகி
மெத்தையில் துணுக்கிட்டு விரியும்
அந்தகாரம் கூடிய அப்பிளவுகளில்
செவ்வுதிரம்

எண்ணற்ற வாய்களுக்கு வெண்ணமிழ்தம் பொழிந்த மார்புக் காம்புகளில்
ஊறுவதும்
வானம் நோக்கி விடைக்கும் குறிகளில்
மிதப்பதும்
செவ்வுதிரம்
உதிரம்
ஒரே
நிறம்

பிளவு
வாசல்
வருகை
ஜனனம்.


(பெண்ணியம்.காம் இற்காக)

Aug 25, 2010

வெளியேற அனுமதித்தல்.

வெளியேற்றவேண்டும்
அந்தக் காதுகளிலிருந்து இசையை
விழிகளிலிருந்து
பாவையை
வானிலிருந்து மேகத்தை
சூரியனிலிருந்து
வெப்பத்தை

வெளியேற்றுவோம்

காமத்தின் வாயதனைப் பிளந்து
காதலை உடலிலிருந்து உருவி
இப்படியாக
புனையப்பட்ட
பெண்மையை பெண்ணிலிருந்தே

நட்சத்திரங்கள் தாங்கி வந்தாலும்
இரவெனப்படுவது இருளே

வௌவாலின் பார்வையில்
விலங்குகள்
தலைகீழ்

சுழற்சி
காலத்தின் சிசு
முளைத்திடும் வேர்களில் பதிகிறது
ஓட்டுகளற்ற தராசு
ஒன்றின் நிழல்

Aug 22, 2010

சுரணையற்ற குதிரைகள்


தன் மீதிருக்கும் நாஜிகளை வாழச் செய்வது என்று தீர்மானிப்பது குதிரையே, தனக்கு இந்தத் தேர்வுச் சுதந்திரம் உண்டென்பதை குதிரை நினைவில் வைத்திருப்பதில்லை என்பதுதான் விழயம் - ஊர்சுலா கே. லீ

நாஜிகளுக்கும், முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பெரிதாய் வித்தியாசம் ஏதும் இருப்பதில்லை. இப்போது அவர்களிடத்தை ஊடகமும் கைப்பற்றியிருக்கிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்கள் அவர்கள் பதிவு செய்யும் விசயங்கள் (முக்கியமாக பொழுதுபோக்கு விசயங்கள்) மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்வதோடு நினைவற்ற குதிரைகளாய் அவர்களை ஆக்குவதே தங்கள் லட்சியப் பணியாய் செவ்வனே செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

ஊடகமென்பது மக்கள் தேவைகளையும், பிரச்சனைகளையும் வெளிப்படுத்தும் சாதனமாய் இருந்து சமுதாய சீர்திருத்தத்திற்கும், அறிவு பூர்வ வளர்சிக்கும் வழிகாட்ட அமையாது சமீப காலமாக பெரும் சீர்கேட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. வானொலி, தொலைகாட்சி, பத்திரிக்கை, விளம்பரச் சுவரொட்டிகள் என எங்கு பார்த்தாலும் " "மெய்மை நிகழ்ச்சி" (Reality Show) என்ற போர்வையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், அந்நிய சக்திகளையும் விட மிக மோசமாய் மக்களை அடிமைகளாக்கி வருகின்றன. குறிப்பாக குழந்தைகளை வைத்து இவர்கள் சந்தைப்படுத்துவது, எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாய் தோன்றுகிறது.

(தனிமனித துதி எந்தளவுக்கு மக்களை தங்களுக்குள் இருக்கும் அன்றாட பிரச்சினைகளை மறக்கச்செய்கிறது என்பதை மிகப்பெரிய உளவியல் கூறாக அணுக வேண்டியுள்ளது. அதை பின்பு பார்க்கலாம்)
முதலாளிகள், தங்களது அலைவரிசைகள் எப்பொழுதும் லாபத்துடன் (கொள்ளை லாபத்துடன்) செயல்படவேண்டும் என்பதற்காக புதுப் புது மலிவு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி இன்னும் சொல்லப்போனால் புதிய தலைமுறைக் கலாச்சாரம், சுதந்திரம், மற்றும் நாகரீகம் என்ற பெயர்களில் மக்களை முடக்கிப்போடுகிறார்கள். அதுபற்றிய எந்த கூறுணர்வும் இல்லாமல் தொலைக்காட்சியே கதி என்று வீழ்ந்துக்கிடக்கிறது பெரும்பான்மை.

திறமைகளுக்கு மேடை அமைத்துக் கொடுப்பது வரவேற்புக்குரியதே, ஆனால் அதை நிறுவனமயமாக்கி, மக்களின் உணர்ச்சிகளோடும், தன்மானத்தோடும் விளையாடி நிகழ்சிகளை நடத்துவது முழுக்க முழுக்க வணிக நோக்கமே அன்றி வேறில்லை. உண்மையில் திறமைக்கு மேடை என்றால், அதை திரைக்குப் பின்னால் செய்து அதற்குரிய அங்கீகாரங்களை வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளலாமே, அதை விடுத்து ஒப்பனை அறை வரை சென்று அழுவதையும், விழுவதையும், சண்டையிடுவதையும் படம் பிடித்து, அதை வேகம் குறைவான (slow motion) காட்சிகளாய் ஒளிபரப்பு செய்து அந்நிகழ்ச்சியில் தோற்பது அல்லது விலக்கபடுவது ஏதோ அவர்களின் குடியே மூழ்கிப்போகும் விசயம் போன்று மிகைப்படுத்தி புனைவு செய்து அச்சுறுத்தி பிழைக்கின்றன தொலைக்கட்சிகள். பொது நோக்கம் என்றால் போட்டியில்லாத மேடை அமைத்துக் கொடுக்கலாமே. செய்யமாட்டார்கள், ஏனென்றால் உணர்சிக்கு குறி வைத்தால் தான் டி.ஆர்.பி (television rating point –இது, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்களுக்கே தெரியாத மர்மமான விசயம்) என்று சொல்லக்கூடிய விளம்பர விற்பனை குறியீட்டுக்கு நிகழ்சிகள் தேர்ந்தெடுக்கபபடும்.

இந்தப் பொறுப்பற்ற பேராசைக்கு சற்றும் குறைவில்லாதது, பெற்றோர்களின் பேராசை அல்லது பங்கேற்பாளரின் பேராசை. பிள்ளைகளை இவர்கள் பெறுவதே இதுபோன்ற நிகழ்சிகளுக்கு நேர்ந்து விடத்தான் போலிருக்கிறது. திறமைகளுக்கான மேடைகள் எவ்வளோவோ இருக்க, ஊடகம் மூலம் குழந்தைகளை சிறுவயதிலேயே வர்த்தகப் படுத்தி, ஊரெல்லாம் சுவரொட்டிகள் அடித்து வாக்கு சேகரித்து பிறகு மேடைக் கச்சேரிகளுக்கு விலை பேசுகிறார்கள். குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து சட்டம் இயற்றப்பட்டது போல் இதற்கும் ஒரு தீர்வு காணவேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் திறமை என்பது (இரண்டாம் தர) திரைப்பட பாடலை பாடுவதும், சிறுவயதிலேயே கவர்ச்சி உடைகள் அணிந்து படுக்கையறைக்கு அழைக்கும் நடனங்களை ஆடுவதும்தானே. இங்கே அறிவுக்கும், பண்புக்கும் என்ன இடம்? அதிலும் நம் திரைப்படங்களில் வரும் கருத்து நிறைந்த டப்பாங்குத்து பாடல்களுக்கு ஒன்றும் குறைவே இல்லை. இப்பாடல்களை பாடியும், ஆடியும் அக்குழந்தைகள் எத்தனை முறை பயிற்சி செய்திருப்பார்கள். அந்த வரிகள் அச்சிறுவர்களின் மனதில் விதைக்கும் ஒழுக்கம் எதுவாக இருக்கும்? இதுபற்றியெல்லாம் அப்பெற்றோர்களுக்கு எந்தக் கவலையும் இல்லாதிருப்பது வியப்பாக உள்ளது.

5 வயதிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு போட்டி போட குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். சிறுவயதிலேயே விளம்பரமும், புகழும் தான் அவசியத் தேவை என்று கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். அதற்கு தரமற்ற எந்த முறையானாலும் பரவாயில்லை, புகழே வாழ்க்கை என்று தள்ளப்படுகிறார்கள். சிறந்தவராய் அறியப்படுவதென்பது பணமும், புகழும் சார்ந்தே என்று கட்டமைக்கிறது முதலாளி வர்க்கம். அப்பொழுதுதான் நான் சிறந்ததை தருகிறேன் என்று நம்மை விலை பேச முடியும். பெரும்பாலும், சிறந்தது என்பதற்கான தரக் குறியீட்டை தீர்மானிப்பது அதிகார மற்றும் முதலாளி வர்க்கமே.
இதில் நீதிபதிகள் என்ற பேரில் அவர்கள் அடிக்கும் கூத்தும், நிகழ்ச்சித் தொகுப்பாளரின் ஆங்கிலம் கலந்த கொஞ்சும் பேச்சும், ஒரே ஆபாசம். இச்சூழல் சமுதாயக் கூர் உணர்வு , நாட்டின் வறுமை நிலை, அடித்தட்டு மக்களின் பிரச்சனை, அறம், ஒழுக்கம், மனிதாபிமானம் இப்படி எந்த சிந்தனைகளும் அற்று எம் பிஞ்சு மக்கள் வளர வித்திடுகிறது.


குழ்ந்தைகளாவது பெற்றோர்களினால் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால், வளர்ந்த இளைஞர்களை இது போன்ற மலிவு நிகழ்சிகளை நோக்கி தள்ளுவது எது? திரைப்படங்கள், பிரபலங்களை மட்டுமே, குறிப்பாக திரைப் பிரபலங்களை மட்டுமே மனிதர்களாக ஏற்றி வைத்து கொண்டாடும் விளம்பரங்கள், ஊடகங்கள், சில அரசியல் கட்சிகள் மற்றும் முதலாளிகள்.


சமுதாய நலப்பணி தொடங்கி, நகைக் கடை திறப்பு விழா வரை இன்று முக்கியத்துவம் பெருவது திரைப்பிரபலங்களே. ஒரு திரைப் பிரபலம் அல்லது அரசியல் ஆதிக்க பின்னணி நிறைந்த நபர் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு கிடைக்கும். ஊடகப்பதிவு (media coverage), மற்றையோர் வந்து துவக்கிவைத்தால் கிடைப்பதில்லை. இது ஏன்? ஏனென்றால் பரஸ்பர ஆதாயம் என்பது இவர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது.
மக்களோ முழுக்க முழுக்க ஊடகம் முன் மொழிவதையும், முன் மொழிவோரையுமே பெரும்பாலும் கருத்தில் கொண்டு செயல் படுகிறது அல்லது மூளை சலவை செய்யப்பட்டு கட்டுண்டு கிடக்கிறது.

ஒரு விளம்பரத்தில் அல்லது ஊடகத்தில் ஒரு பொருளை முன் மொழியும் பிரபலம் வாழ் நாளில் அதை உபயோகப் படுத்துவாரா என்பது சந்தேகத்துகுரியது. தடை செய்யப்பட்ட அல்லது விஷத் தன்மை நிறைந்த அந்நிய பானங்கள், அந்நிய உணவுப் பொருளகளை அதன் சாதக பாதகங்கள் பற்றி ஏதும் கவலையற்று வெறும் பணத்திற்காக பரிந்துரைக்கும் பிரபலங்களை நம்பி அப்பொருளை வாங்கும் நிலையிலேயே நம் மன நிலைகள் சலனப்பட்டுகிடக்கின்றன.
ஊடக ஆண், பெண்கள், நடிகர், நடிகைகள் இவர்களின் பாணிகளை பின்பற்றுதல், அவர்கள் மூலம் முதலாளிகள் சந்தைப்படுத்தும் அழகுணர்சி, நாகரீகம் என்ற பெயரில் முன் வைக்கப்படும் அந்நிய கலாச்சார மோகம், உயர்தர வாழ்க்கை முறை, இவற்றின் மூலம் எதிர்பாலரை எளிதில் கவரக் கூடிய தன்மைகள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளும் விருப்பம் மேலும் அவர்கள் அடைந்த அதே புகழ், பணம், வசதி ஆகியவற்றை அடையத்துடித்தல் என்ற போக்கு மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது. மக்களின் எளிய மனதை நன்கு அறிந்து வைத்திருக்கும் முதலாளிகள் அந்தப் பேராசையையும், கதாநாயக வழிப்பாட்டு மனப்போக்கையும் சரியாக பயன்படுத்தி மேலும் மேலும் அந்தப் பலகீனத்தை வளர்த்து விடுகிறார்கள்.


மற்ற பெண்களை சதைப் பற்றுப் பொருளாக மட்டுமே கருதி அவளது மார்பையும், தொப்புளையும் இடுப்பு வளைவுகளையும், தொடைகளையும், சுழிக்கும் உதடுகளையும் பல கோணங்களில் காட்டிப் பிழைக்கும் இவர்கள், ஏன் தங்களது குடும்பப் பெண்களை அது போல் காட்ட தயங்குகிறார்கள்? திறமைகளூக்கான நிகழ்சி என்று கூறிவிட்டு, அதற்கு மதிப்பீடு என்ற பெயரில் உடை என்பதையும் சுட்டிக்காட்டி பங்கேற்பாளர்களை கவர்ச்சி உடைகளை அணிய வைக்கிறார்கள்.
பங்கேற்பாளர் மட்டுமல்லாது, நிகழ்ச்சி தொகுப்பாளரும், சில செ.மீ அளவு உடை மட்டுமே அணித்து வருகிறாரே ஏன்? இது போன்ற நிகழ்சிகளில், ஏன் அந்நிகழ்சி முதலாளிகளின் மகள்களோ, மனைவிகளோ பங்கேற்பதில்லை? குறைந்தது தொகுப்பாளராகக் கூட இருப்பதில்லையே ஏன்? எவற்றின் பிடியிலிருந்து இம் முதலாளிகள் தங்கள் குடும்பத்தாரை மட்டும் காக்க நினைக்கிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள் தோழர்களே.


ஏன் குறைந்தபட்சம் ஒரு நடிகை திருமணம் ஆனதும் நடிக்க வருவதில்லை.(ஒரு நல்ல திறமையான நடிகை, நடிகரையே பார்த்து திருமணம் செய்துக் கொண்டால் கூட, திருமணத்திற்கு பின்பு அந்நடிகர் ஏன் அவரை நடிக்க அனுமதிப்பதில்லை? அவரிடம் கதாநாயகர் விரும்புவது குடும்பப்பெண்ணென்றால் அவருடன் தொடை காட்டி நடிக்கும் தற்பொழுதைய நடிகை...?)அடுத்ததாக வானொலி. படுக்கைக்கு அழைக்கும் குரலில் தொகுப்பாளர்களை பேசவைத்து, தொகுப்பாளினிகளை காம உணர்ச்சி மேலோங்கும் முக பாவங்களை புகைப்படங்களாக சுவரொட்டிகளாய் ஊர் முழுக்க ஒட்டி, வெட்டிப் பேச்சுகளை வினா-விடை நிகழ்ச்சியாக நடத்தி, கேட்பாளர்களை ஊர்ஜிதப்படுத்தி விளம்பரங்களை பெருக்கி குரல்-விபச்சாரம் செய்து சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறது.கதாநாயக வழிபாடு நடத்தும் இளைய சமுதாயம் எழுப்ப வேண்டிய கேள்விகள்:  • திரையில் புரட்சி பேசும் நடிகர்கள் ஏன் நிஜ வாழ்க்கையில் அரசுக்கெதிராக ஒரு குரலும் எழுப்புவதில்லை?
  • தாய்மையைப் போற்றும் கதாநாயகர்கள், ஏன் கதாநாயகியாகிய பெண்ணை வெறும் சதைப் பிண்டமாக காண்கிறான்?
  • அவளுடன் குத்தாட்டம் போடுகிறான்? பெண்ணை கவர்ச்சிப் பொருளாக்கி வணிகப் படுத்தும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது. இவர்கள் வைக்கும் பெண் பற்றிய கருத்தாக்கங்கள் சமுதாயத்தில் விதைக்கும் பண்புகள் யாவை?
  • கதாநாயகியின் உடைகளும், அதன் அவசியமும் பெண்கள் மனதில் விதைக்கும் கருத்தாக்கம் என்ன?
  • இவ்வுடைகளை அணியும் பெண்களை ஆண் என்ன கண்ணோட்டத்துடன் காண்கிறான். அவ்வுடைகளை உடுத்திச் செல்லும் பெண் ஏன் எளிதில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறாள்?


காமம் என்பதை ஒரு ஒழுங்குமுறையுடன் அனுபவிக்க வேண்டும் என்று விதிக்கப்படும் நம் சமூகத்தில், காமத்தை தூண்டும் சகல வழிமுறைகளையும் ஊடகங்களும், திரைப்படங்களும் மேற்கொள்கிறது. மார்புக் காம்பு சற்றே மறையும் மேலாடை, பிறப்புறுப்புக்கு சற்று கீழ் மட்டுமே உள்ள கீழாடை அணிந்த நடிகைகளை அட்டைப்படமாகக் கொண்ட பத்திரிகைகள், தொப்புள் நடனங்கள், கவர்ச்சிக் குத்தாட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சுற்றி சுற்றி எல்லாமே பெண்ணின் உடலை சந்தைப் படுத்தும் செயல்களே. இதனால் காமம் உந்தப்படும் ஆண் பணம் படைத்தவனாயின் அவன் காமத்திற்கு எளிதில் வடிகால் கிட்டி விடுகிறது. கிடைக்கப்பெறாதவன் கற்பழிக்கிறான். (அது 2 வயது சிறுமியாக இருந்தால் கூட) ஆக ஊடகங்களும், திரைப்படங்களும் இலவச பாலியல் வன்முறை வகுப்புகள் நடத்தும் நிறுவனமாக செயல்படுகின்றன.
இதையெல்லாம் அனுமதிக்கும் மக்களும், அரசாங்கமும் முறையான பாலியல் கல்விக்கு சப்பைக் கட்டு கட்டிக்கொண்டிருக்கிறது.பெண்கள் இப்படிக் கவர்ச்சிப் பொருளாக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க துணியாத கலாச்சார பாதுகாவலர்கள் அப்பெண்களை வெகுவாக ரசிப்பர், தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் அவர்களுடன் உறையாடுவதை பெறும் பேறாக கருதுவார்கள். திரையில் கவர்சியை அனுமதிக்கும் நம் மனது ஏன் நிஜ வாழ்கையில் அதைக் கண்டுக் கொதிக்கிறது? சுதந்திரம், நாகரீகம் என்ற பெயரில் இப்பண முதலைகள் முன் வைப்பது எதுவும் ஏன் அன்றாட வாழ்விற்கு பயன்படாத ஒன்றாக இருக்கிறது?


பண்பாடு, கலாச்சாரம், தாய்மையின் உன்னதம், பெண் கடவுள்கள், பெண்மையின் மென்மை ஆகியப் போற்றப்படும் இச்சமுதாயத்தில் தான் பெண் உடலின் மீது மிகவும் கீழ்தரமான கண்னோட்டங்கள் நிலவுகிறது. அவளை எளிதில் சந்தைப்படுத்துகிறது முதலாளி வர்க்கம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது ஊடகங்களும், திரைப்படங்களுமே. இது பற்றிய எந்த உணர்ச்சியுமற்று, கூறுணர்வும் அற்று அந்நாஜிக் குதிரைகளை பத்திரமாக சுமந்து செல்லும் குதிரைகளாக மாறிபோயிருக்கிறோம் நாம்.
ஒரு சமுதாயத்தில் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கான தேவை, கலை என்பதற்கான தேவை என்ன? எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது எல்லா அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு செய்வதற்கு ஏதுமன்றி கலை என்பது நிறுவப்பட்டதாம். அப்படி ஒர் நிலை இன்றைய காலத்தில் எந்த ஒரு சமுதாயத்திலும் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க சமுதாய சிந்தனை, அக்கறை, சக மனித தோழமை கொண்டவராக மாற்றும் செய்திகள், உண்மை அரசியல் செயல்பாடுகள், கொள்கை குறைபாடுகள், வளர்சித் திட்டங்கள் என கொடுத்து ஒவ்வொரு குடிமகனையும் மனித இனத்தின் மேன்மைக்கு உழைக்கும் கூறுணர்வு கொண்டவராக வழிநடத்தும் ஊடகங்கள் தனியாரிலும் இல்லை, அரசாங்கத்திடமும் இல்லை. இருக்கும் செய்தி அலைவரிசைகள் மற்றும் சமுதாய நிலை சார்ந்த விவாத நிகழ்சிகள் கூட வணிக நோக்கோடும், தாஙகள் சார்ந்திருக்கும் கட்சிக்கு நன்மதிப்பு கிடைக்கவுமே நடத்தப்படுகின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் பெரும்பாலான ஊடகங்கள் (தொலைக்காட்சி, செய்தித்தாள் என எல்லாம்) இருப்பது பார்ப்பண முதலாளிகளிடமே. ஆகையால் அவாளுக்கு பிடிச்சவாளப் பத்தி நன்னா எழுதுவா.


சமீப காலமாக 24 மணி நேர செய்தி அலைவரிசைகள் தொடங்கிய பின்னர் முந்திக்கொண்டு செய்தி தருவது யார் என்ற போட்டியும், நேரடி ஒளிபரப்பை யார் உணர்ச்சி பொங்க கொடுப்பது என்ற போட்டியும் அரசியல் நிலைப்பாடு, வர்க்க நிலைப்பாடு சார்ந்த சார்பு கண்ணோட்ட குறுக்கு விசாரனை நிகழ்சிகளுமே. இது உண்மை போன்றே தோன்றும், எதோ சமுதாய நலனை தங்கள் நலனாக எடுத்திக்கொண்டது போன்றே செய்திகளை முன் வைப்பர். ஆனால் சொல்லாடல்கள் எல்லாம் அரசின் அகராதிக்கேர்ப்பவே. உ.ம் உரிமைகளுக்காகவும், வாழிடத்திற்க்காகவும் போராடும் பழங்குடியின மக்களை நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என்ற அரசின் முத்திரைச் சொற்களையே ஊடகங்களும் பயன்படுத்துவது. இதுவும் வியாபார நோக்கோடே நடத்தப்படும் நிகழ்ச்சியாகும்.பிடித்தாலும், இல்லையென்றாலும் நாம் அணியவேண்டிய செருப்பு முதல், நமக்கு பிடிக்க வேண்டிய சுவை வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது முதலாளிகளே. அவர்களிடம் பிடுங்கி பிழைப்பவர்கள் ஊடக துணை முதலாளிகள். குறிப்பாக தொலைக்காட்சிகள். பொழுதுபோக்கு என்று இவர்கள் முன்னிறுத்துவது திரைப்படம்/நடிகர்களை தழுவிய நிகழ்சிகளே. அவர்களைப் போல் ஆடுவது. அவர்களுடன் உண்பது, பேசுவது என்பதெல்லாம் கிடைத்தற்கரிய வாழ்வாய் புனைகிறது இந்த தரங்கெட்ட அமைப்பு. அப்படி அவர்களை புனைந்தால் தான் அவர்கள் அத்தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு வருவார்கள், அவர்கள் வந்தால் தான் அந்நிறுவனத்திற்கு விளம்பர வருமானம் கிட்டும். நம் பொழுதை நல்ல விலைக்கு விற்கிறார்கள்.


பொழுதை போக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது? மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற காரணங்களை முன்வைப்பது யார்? அவை நமக்கு எழக் காரணமாய் அமைவது யார்? அது குறித்த ஆராய்சிகள் மேற்கொள்வது யார்?

(மனநலத் துறை என்ற ஒரு மருத்துவப் பிரிவு 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, 19 ஆம் நூற்றாண்டில் வளர்ந்து 20 ஆம் நூற்றாண்டில் முழுமை அடைந்தது. முதலாளித்துவத்தின் எழுச்சியோடுதான் இந்தப் பிரிவு ஆரம்பமாகிறது. முதலாளித்துவ கட்டுகளை எதிர்த்தெழுபவர்களை மனநோயாளிகளாக முத்திரைக் குத்தி, செல்லாக் காசுகளாக்கிவிட உளவியல் மருத்துவமனைகளும் சிகிச்சை முறயும் அதிகாரவர்க்கத்திற்கு மிகவும் பயன்பட்டது. மனநோயின் மொழி, டேவிட் கூப்பர். தமிழில் லதா ராமகிருஷ்னன்).


சுற்றி சுற்றி வாருங்கள் எல்லாம் பொருளாதாரத்தை சுற்றியும், புகழைச் சுற்றியுமே வந்து நிற்கும். இந்த நெருக்கடியை ஏற்படுத்துவது யார்? தேவை இருக்கிறதோ இல்லையோ, பணம் சம்பாதிக்க முதலாளிகள் பொருட்களை ஈட்டுவர். அதை சந்தைப்படுத்த (மார்கெட்டிங்) எல்லா வழிமுறைகளையும் கையாள்வர். அதில் நம் மூளை மழுங்கி விட வேண்டும். மூளை மழுங்கவைப்பதற்கு ஆண்களை கவர்ச்சிக்கும், புகழிற்கும் அடிமையாக்குதல், பெண்களை பரிசுப்பொருளுக்கும், புகழுக்கும் (பிளைகளின் வாயிலாக) அடிமையாக்குதல். (ஏனென்றால் பெண்களுக்கு தன்னுடைய இருப்பு பற்றிய சந்தேகம் இருந்துக்கொண்டே இருக்கிறது). இதை சரியாக சந்தைப்படுத்தும் ஒரு மேடையே தொலைக்காட்சிகள், வானொலிகள். அதன் தற்போதைய சரியான ஒரு உபகரணம் [tool] மெய்மை நிகழ்ச்சி, உரையாடல் நிகழ்ச்சி போன்றவை.

சரி, இதையெல்லாம் அரசாங்கம் ஏன் கண்டுகொள்வதில்லை? ஏனென்றால் நமக்கு பொழுது போகவில்லையென்றால் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அப்பொழுது நம்மை அறிய முயற்சிப்போம், நாம் சிந்திக்கத் தொடங்குவோம். சிந்திக்க தொடங்கினால் கேள்விகள் எழும், உன்மை விளங்கிவிடும். பின்பு புரட்சி வெடிக்கும். அது நடக்கவிடாமல் செய்ய அவர்களால் முடிவதெல்லாம் நம் நேரத்தை தின்பதே.

இதை சோதித்துப் பார்க்கவேண்டுமென்றால், மூன்று மாதங்கள் தொலைக்காட்சி, திரைக்கூடங்கள் இவற்றை நிறுத்தி வைக்கட்டும் அரசு; கண்டிப்பாக புரட்சி வெடிக்கும்.

Aug 6, 2010

கொற்றவையின் தோற்றம்


"பிறையாகிய வெள்ளி இதழைச் சூடுகின்ற சென்னியாள்;
நெற்றியைக் கிழித்து விழித்த இமையாத நெற்றிக் கண்ணை உடையாள்;
பவளம் போன்ற வாயாள்; முத்தொளி விளங்கும் சிறப்பினை உடையாள்;
நஞ்சுண்டு கறுத்த கழுத்தினை உடையாள்;
பாம்பை நாணாகிப் பூட்டி மேருமலையினை வளைத்தவள்;
துணையமைந்த பல்லையுடைய நச்சுப் பாம்பினைக் கச்சாகக் கட்டியிருக்கும் மார்பினாள்;
வளையுடையக் கையிலே சூலம் ஏந்தியவள்;
யானைத் தோலைப் போர்த்தியவள்;
புலித்தோலை மேகலையாக அணிந்தவள்
இடப்புரக்காலிலே சிலம்பும், வலப்புரக்காலிலே வீரக்கழலும் ஒலிக்கும் சீரிய அடிகளையுடையவள்;
எருமைத் தலையும் மனித உடலுமாகத் திரண்ட மகிஷாசுரனைக் கொன்று அவன் தலை மீது நிற்பவள்.................

கொற்றவையின் தோற்றமாக வர்ணிக்கப்படும் இவைகள் சிவபெருமானின் தோற்றமாக எப்பொழுது மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுகிறது,,,,"

- க. பஞ்சாங்கம் / சிலப்பதிகாரம்: சில பயணங்கள் (காவ்யா, சென்னை,2002 ) - சூரிய நடனம் தொகுப்பிலிருந்து.