Feb 29, 2016

பெண்களும் ஊடகங்களும்


பெண் என்றதும் உங்கள் மனக் கண்களில் என்னென்ன சித்திரம் ஓடுகிறது? என்ன சித்திரம் ஓடினால் நாம் முதலில் எழுப்ப வேண்டிய கேள்வி ‘பெண்’ என்பவளுக்கான இலக்கணங்களைப் படைப்பது யார் என்பதே. பெண்களுக்கான விதிகளைப் படைப்பதோடு பெண் அல்லது பெண்மை பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்குவது யார்? உருவாக்கும் உரிமையை அத்தகையோருக்கு கொடுத்தது யார்? இப்படிக் கேள்வி கேட்பதே கூட பெண்மைக்கு எதிரானது, இல்லையா? அப்படித்தான் இந்த சமூகம் சொல்கிறது. கேள்வி கேட்பது பெண்மைக்கு எதிரானதல்ல. மௌனம்தான் அறிவுக்குப் புறம்பானது.

பெண்கள் பற்றிய கருத்தோட்டம் உருவானதற்கு வரலாற்றுரீதியாக பல்வேறு காலச்சூழல்கள் உள்ளன என்றாலும் அதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் ஏற்பாட்டை நாம் சமூக அமைப்பு என்கிறோம். அந்த நிலவும் சமூக அமைப்பின் நலனைக் காக்க வேண்டி உருவாகும் விதிமுறைகளை பரப்புரை செய்வதில் என்றென்றைக்கும் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அது தண்டோரா போடுவதாக இருக்கட்டும் நவீன தொழில்நுட்பமாக இருக்கட்டும் நம் எண்ணங்கள் உருவாவதில் ஊடகங்களின் தாக்கம் பின்னிப் பிணைந்துள்ளது. ஓர் உதாரணமாக சினிமாவை எடுத்துக்கொள்வோம், பெரும்பாலான ஆண், பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பது கதாநாயகர்கள், கதாநாயகிகள்தான், குறிப்பாக காதல் விஷயத்தில். காதலை பொய்யாக புனிதப்படுத்தும் திரைப்படங்கள் - என்ன செய்தேனும் தான் விரும்பிய பெண்ணை அடைவதே கதாநாயகத் தன்மை என்று கற்றுத்தருகிறது. 

பெண்ணைக் கடத்திக்கொண்டுபோய் அடைத்து வைத்து அச்சுறுத்தி பின் கேவலமான பாடல்கள் பாடி, முட்டாள்தனமான வசனங்களைப் பேசி அவள் மனதை வெல்வார் ஹீரோ. சேது, ஐ போன்ற திரைப்படங்கள் அதற்கு உதாரணம். இதுபோன்ற ஹீரோயிசத்தால் தாக்கம் பெரும் ஆண்கள் அதை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். பெண்களை குரூரமாக சித்திரவதைச் செய்கிறார்கள். சமீபத்தில் அடையாளம் தெரியாத 4 நபர்களால் கடத்தப்பட்ட தீப்தி சர்னா பற்றிய செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். 3 நாட்கள் கழித்து அவர் திருப்பி அனுப்பட்டார். தேவேந்திர குமார் என்ற நபர் தீப்தி மீது கொண்ட காதலால் அவரைக் கடத்தியதாகவும், ஷாருக்கான் நடித்த ’டர்’ படம்தான் தனக்கு ஊக்கத்தைக் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். தன்னுடைய காதல் ‘சைக்கோத்தனமானது’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறார் அந்த நபர்.


காதல், நட்பு, ஆண் பெண் பண்புகள் எல்லாம் சமூகமயமாக்கலின் விளைவாக ஏற்படுவது. ஆண் பெண் மற்றும் ஆண்மை பெண்மை பற்றிய பிம்பங்கள், கருத்தாக்கங்கள் எல்லாம் சமூக நடவடிக்கைகளினால் உருவாகின்றன. எதுவும் சாஸ்வதமான ஒன்றல்ல. மனிதர்களை வேறுபடுத்துவதே சிந்தனைதான், பகுத்தறிவதால் மட்டுமே சிந்தனை உருவாகும். ஆகவே ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் சினிமா முன் வைக்கும் கதாநாயகர், கதாநாயகி பாத்திரங்களை உள்வாங்குவதை, நடிகர்களை முன்மாதிரியாகக் கொள்வதை முதலில் கைவிட வேண்டும். தமக்கான ஆளுமையை கற்றறிவின் மூலம் வளர்த்துக்கொள்வதே அறிவுடைமையாகும். 

நன்றி: கல்கி