கீழேயுள்ள ஈஸ்வரயிய கொச்சைப் பொருள்முதல்வாத அனுமானவாதத்தின்படி, வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் சாதி என்பது வெறும் கருத்தியல் மட்டத்தில் மட்டுமே செயல்படுகிறது, அது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. இது எத்தனை அபத்தமான, மார்க்சின் உருவாக்கத்தை (formulation) அப்படியே கொச்சையாக (literal explanation) பொருள் கூறுவதாகிறது என்று இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் சாதியமைப்பு என்பது உழைப்புச் சக்திகளை படிநிலை அமைப்பாக வகைப்படுத்தும் மதரீதியான (இந்துத்துவம்) சட்ட வடிவமாக உள்ளது. உழைப்புப் பிரிவினைக்கு அது ஒரு கோட்பாட்டை, சட்ட வடிவத்தை வழங்கியுள்ளது. அதன்படி, துப்புறவுப் பணிகள் / கீழ்நிலை உடல் உழைப்புப் பணிகள் தலித் சாதிகளுக்கு (கீழ்நிலை சாதிகள்) மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றி வெற்றிகரமாக வளர்ந்துகொண்டு வரும் இந்நாளைய நிலையில் கூட இந்த உழைப்புப் பிரிவினையை நாம் காண முடியும். அதாவது முதலாளித்துவ தன்மைகள் தோன்றிவிட்ட காலத்திலும் கூட சாதி என்பது உற்பத்தி நடைமுறையில்-(உற்பத்தி சக்திகளுக்கிடையில்) பகுதி அளவில் பிணைந்திருப்பதைக் காண முடிகிறது. உபரியை அதிகரிக்க, மூலதனத் திரட்டலை பெருக்க முதலாளித்துவத்திற்கு (தனியுடைமை அடிப்படையிலான எந்த ஒரு உற்பத்தி முறைக்கும்) மலிவான உழைப்புச் சக்தி தேவை. அதற்கு சாதியமைப்பு ஏற்றதொரு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு ஏதுவான சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கிறது.
ஆகவே, பகுதி அளவில் ஜனநாயகமாகவும், பகுதியளவில் அதனை தன் உற்பத்தி நடைமுறையோடும் இணைத்தே முதலாளித்துவ உற்பத்தியமைப்பும், வளர்ச்சியும் செயல்படுகிறது (இன்றைய நிலையில்). உதாரணமாக, உற்பத்தியில் – பொருள் தயாரிப்பு (product-manufacturing) மற்றும் விநியோகம் என்று வரும்போது, தொழிலின் அடிப்படையில், அது அனைத்து சாதியினருக்கும் தனது பொருளை சந்தைப்படுத்தும் விதமாக சாதியை மறுத்தும் / நெகிழ்த்தியும் செயல்படுகிறது.
அதாவது சர்க்கரை உற்பத்தித் தொழில் என்று எடுத்துக்கொள்வோம் – அந்த சர்க்கரையை தயாரிக்கத் தேவையான கச்சாப் பொருளைப் பெறுவதிலும், சர்க்கரையை விநியோகிப்பதிலும் முதலாளித்துவமானது சாதியைக் கடந்து அனைவரிடமும் தனது பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. ஆனால் உழைப்புச் சக்தியை அமர்த்துவதில் அது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே மேல்நிலைப் பணிகளை வழங்குகிறது, ஆலையில் துப்புறவுப் பணிகள் அல்லது கீழ்நிலைப் பணிகளில் பெரும்பாலும் தலித்துகளே இருக்கிறார்கள்.
பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில், நிலவுடமை உற்பத்தி முறையின் கூறுகள் இன்னமும் ஒடுக்குமுறை வடிவங்களாக இருக்கும் ஒரு நாட்டில், உற்பத்திக் கருவிகளின் (உற்பத்தி சாதனங்களின்) வளர்ச்சி மிகவும் மெதுவாகவே நடக்கும். சாதியமைப்பின் வேறூன்றிய நடைமுறையானது (வெறும் கருத்தியல் நிலையில் மட்டுமல்லாது) முடிந்தவரை உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி சாதனங்களுக்கிடையிலான உள் முரண்பாட்டிலிருந்து ஏற்படக்கூடிய உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வரும்.
துப்புரவுப் பணிகளில் இன்னமும் இயந்திரங்களைக் கொண்டுவராதிருப்பது, இதற்கொரு சிறந்த உதாரணம். இந்த தாமதத்திற்கு ஒரு வகையில் வேலைவாய்ப்பின்மையால் அந்த சாதியினர் மத்தியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவும், மாற்று பொருளாதார திட்டங்கள் இல்லாதது எந்தளவுக்குக் காரணமோ அதையும்விட சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையானது முதலாளித்துவச் சுரண்டலுக்கு மிக மிக ஏதுவாக இருப்பதும் ஒரு காரணம்.
இதையெல்லாம் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை இல்லாமல், இந்திய சமூகத்தின் உள்முரண்பாடுகள் அமுங்கி இருப்பதற்கான காரணங்களைக் கணக்கில் கொள்ளாமல் வெறுமனே இயந்திரத்தனமாக கோணார் உரை எழுதுவது போல் “வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம், ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத (material)உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்குச் சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.” என்று சொல்வது எத்தனை அபத்தமானது; நடைமுறையிலிருந்து விலகி வெறும் ஏட்டுச் சுரைக்காய் வியாக்கியானமாக, கருத்துநிலை ‘ஆசீர்வாதமாக’ மட்டுமே எஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
முதலாளித்துவம் முழுவதுமாக வளர்ச்சி பெரும் வகையில் முன்னேறும் கட்டத்தில் மட்டுமே உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி தீவிரமாக ஏற்படும். இந்திய நிலைமையில் சாதியமைப்பு அதுவரை பகுதியளவில் (பகுதியளவில் என்பதற்கு அழுத்தம் அதிகம்) அடிக்கட்டுமானத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆகவே முதலாளித்துவ தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதி பொருளாயத அடித்தளமாகவும் (பகுதியளவில்) இருக்கும் என்பதை நாம் காணமுடிகிறது.
அதேபோல் “முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாகக் காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். அந்நிலையில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டுச் சாதியம் உலர்ந்து மறையும்.” என்று ஈஸ்வரன் மொட்டையாகச் சொல்லும்போது, அதை உற்பத்தி நடைமுறையின் உதாரணங்கள் எதையும் முன்வைத்து விரிவாக விளக்காமல் போவதால், அவருடைய ஏட்டுச் சுரைக்காய் சிறுகுறிப்புகள் ஏற்படுத்தும் புரிதல் என்னவெனில்: முதலாளித்துவம் வந்துவிட்டால் சாதி மறைந்துவிடும், உலர்ந்து உதிர்ந்து விடும்; அதுவரை நீங்கள் கைக்கட்டி வாய்ப்பொத்தி வேடிக்கை பாருங்கள். மேடை போட்டுக்கொண்டு சாதி வெறும் கருத்தியல், கருத்தியல், கருத்தியல் என்று சொல்லிக் கொண்டு மார்க்ஸின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி ‘கருத்தியலுக்கு எதிரான’ அறச்சீற்றமற்ற வகையில், மென்மையாகப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
வர்க்கப் போராட்டம் என்றால் என்ன, சுரண்டல் என்றால் என்ன, சுரண்டலை எப்படி உழைக்கும் வர்க்கத்திற்குப் புரியும் வகையில் விளங்க வைப்பது, அந்த மக்களின் வாழ்க்கை நடைமுறையிலிருந்து, குறிப்பாக அவர்களின் நிலைக்கு பிரதான ஒடுக்குமுறை வடிவமாக இருக்கும் உழைப்புப் பிரிவினையை எப்படிப் புரியவைப்பது? உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கமைக்கத் தடையாக இருக்கும் அடையாள அரசியலை, மார்க்சியம் குறித்த தவறான (அம்மக்களின்) தலைவர்களின் வழிகாட்டுதல்களை எப்படி தவறென்று புரியவைப்பது இதையெல்லாம் அவரிடம் கேட்டுவிடாதீர்கள். மேற்கோள்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறையிலிருந்து விளக்கி எழுத மார்க்ஸ், எங்கல்ஸ் நூல்கள் இப்போது இல்லையே. தெரிந்தால் சொல்லிவிட மாட்டாரா!
“முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையிலானதல்ல” – சமூக வளர்ச்சியானது புராதனப் பழங்குடிகள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து முதலாளித்துவ காலத்திற்கு வரும்வரையில் உற்பத்தி நடைமுறையின் போக்கில், உற்பத்தி உறவுகள் பரிணாமம் பெற்று வளர்கிறது, மாறுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை (இந்தியாவில் சாதியமைப்பின் செல்வாக்குக்கு உட்பட்ட) உற்பத்தி உறவுகளின் அடிப்படையாக இருக்காதெனினும், முழுமையான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படும் வரை பகுதியளவில் அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தி அடிக்கட்டுமானத்தில் அரை நிலவுடைமையாகவும், அரைக் காலனியமாகவும் இருக்கிறது. இன்றைய நிலையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் சாதியமைப்பு எப்படி செயல்படுகிறது என்று மேலே பார்த்தோம்
கருத்தியல்கள் மேற்கட்டுமானம் என்றாலும், உற்பத்தி நடைமுறையில், சுழற்சியில் ஒரு கட்டம் வரை அடிக்கட்டுமானத்தில் செல்வாக்கு செலுத்தும். சாதியமைப்பு என்பது உழைப்புப் பிரிவினையை சட்டவடிவமாக்கியதால், இந்தியாவில் அதன் செல்வாக்கு மிக அதிகமாகவே இருக்கிறது (பொருளாயத அடிப்படையில்தான்) அதனால் மார்க்சின் உலர்ந்து உதிர்ந்து மறையும் என்பதை நாம் உங்கு இயந்திரத்தனமாகக் பொருள்கொடுக்கும் வகையில் எழுதுவதென்பது எத்தனை ஆபத்தானது, குழப்பம் ஏற்படுத்தக் கூடியது.
நடைமுறையோடு அதனை தெளிவாக விளக்காமல், ஆசீர்வாதம் செய்வது போல் “சாதி மறைந்து போகும்” என்று தப்பும் தவறுமாக உரை எழுதுவது யாருக்குப் பயன் தரும்.
மார்க்சின் சொற்களிலேயே சொல்வதானால், வியாக்கியானங்கள் நிறையவே இருக்கின்றன, பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான். முதலில் அதற்கு மார்க்சியத்தை சுரண்டல்வாத அமைப்பின் அனைத்து வகையினங்களையும் (categories) – உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், பரிவர்த்தனை உறவுகள் என்று ஏற்றத் தாழ்வுக்கான அனைத்து வகையினங்களையும் - புரியும்படி சொல்லவேண்டும். சொல்லப்போனால் அறச்சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்ல வேண்டும்.
இந்தப் போக்கில் உற்பத்தி உறவுகள் எனும் சொல்லையே தவிர்த்து ஒருவர் மார்க்சியத்தை விளக்கினாலோ அல்லது உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியினால் ஏற்படும் உள்முரண்பாடுகள் ஏதுமிருக்காது, பாட்டாளி வர்க்கம் உணர்வு பெற்றுவிட்டால் புரட்சி வெடித்துவிடும் என்று சொன்னாலோ அது தவறு என்று சொல்லலாம். ரங்கநாயகம்மா அப்படி எங்கேயும் சொல்லவில்லை, வர்க்கப் போராட்டம் என்பதை வெறுமென்று உழைப்புச் சுரண்டலை மட்டும் ஒழிப்பது என்பதோடு நிறுத்திக் கொள்ளவுமில்லை, தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றே கூறுகிறார்.
ஆனால் முழுமையாக ஒருவரின் எழுத்தைப் படித்து தொகுத்துப் பார்த்து அது தரும் விளக்கத்தை அறிவகந்தையும், அடையாள இருப்பு சார்ந்த உள்நோக்கமும் இன்றி படித்தோமானால் இதுபோன்ற திரிபு வேலைகளை செய்யாமல் தவிர்க்கலாம். முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அந்தந்த நாட்டின் உள்முரண்பாடு மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களை வைத்து நடைமுறையில் தொடர்புப்படுத்தி, ஆய்வுபூர்வமாக விளக்காமல், மார்க்சின் சொற்களை மட்டுமே எடுத்துப்போட்டு, கொச்சையான பொருள்முதல்வாத வியாக்கியானங்களை மட்டுமே ஏட்டறிவில் செய்யும் ஈஸ்வர நாமேதேய வகையறாக்களினால்தான் மார்க்சியம் என்பது வெறுமனே பொருளாதார நிர்ணயவாதம் என்று பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
தோழர்களே, நமக்கெல்லாம் ஈஸ்வர ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது, நாள்தோறும் மார்க்சின் மேற்கோள்களை ஜெபிக்கலாம். முதலாளித்துவம் வளர்ந்துவிட்டால் சாதி மறைந்துவிடும். அதன் பின்னர் நாம் வர்க்கப் போராட்டத்தைத் தொடுப்போம்.
ஜெய் மார்க்ஸ்!!!!!!!
மார்க்ஸே நமஹ!!! எங்கல்ஸ் அய்யாவுக்குத் தோத்திரம்!!! லெனின் இன்ஷா அல்லாஹ்!!!!
பாதி புத்த அட்ட தீவ் பாவ்!
மார்க்ஸே சரணம் கச்சாமி!!!
No comments:
Post a Comment