Jun 18, 2014

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை!


வணக்கம்,

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாகசில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.

அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல்,
பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும்
ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி
இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான் எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார்.

மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக் குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம் எழுதுவதன்மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தரநிர்ணயக் கட்டுப்பாளராக தன்னைத் தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம். 

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ்
மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க:
அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009) “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை
பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி
எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும் எழுதுகிறார். அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா.”என்கிறார். ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். ஆக, படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட
படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண
இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான் அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும். இத்தகைய நவீன மனுக்களின் ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படவேண்டியவை.

பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர்
எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு
அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. “பெண்-1, பெண்களின் காதல்”
(அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால்
ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே
முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம்
என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே” . “இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட
பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்!
ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது
அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள்,
‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும்
கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி
விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர்
சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே
குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே,
தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள்
என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ
முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்
அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு
கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற
பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை
மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும்
அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில் பெண்வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம்
பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர்
கொண்டிருக்கிறார்.  இவரைத்தாம் தமிழ் வாசகப்பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்ற நிலை அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப்பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது.

ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன்
கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற
கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற
குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக
ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.

அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித்
தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும்
அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும்,
குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை
வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி
செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக
எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின்செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான
செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய
வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும்
விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட
படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“
கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக
எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள்
மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது
கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”

–‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம்
பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட
வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத
இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிற  அறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும் ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். ‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன் பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய
இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக
ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல கேள்வியும் பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை
அளித்திருக்கிறார்.

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட
பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து
‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும்
சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார்.
பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பரமோகிகளாகவும்
இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக்
காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்
கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர்.
உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை
பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக்
குப்பைகளையும் அங்கீகரிக்கவேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில்
கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள்
முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும்.
பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில்
பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே
நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச்
செய்திருக்கிறார். 
அம்பை, சிவகாமி, பாமா போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் வாழ்வைக் குறித்து எழுதியவர்களுக்கும் அந்த முப்பதாண்டு காலப்பகுதியில்
எழுதிக்கொண்டிருந்த, எழுதிக்கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும் தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார்

அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து
போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக,
இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும்
அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக்
கட்டியெழுப்ப  ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார்.
தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்ட
குதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது
ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகை
மாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும்.மாற்று அரசியற் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப்
பரப்புவதன்மூலமும், பாலியல்ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும்
பெண்களைப் பின்னடிக்கச்செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக
இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ (சிலர்)
அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு
பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை, இழிவுபடுத்தல்களை, அவதுாறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும் விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம்.
இனிவருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப் பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த
அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை,
அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக
பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை;
விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை.
இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது
செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத்
தட்டிக்கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும்
உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாததுபோலவே
கடந்துசெல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும்
கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு
படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சக
எழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப்
பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம்
பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே
உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும்
சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு
வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்
அம்பை, குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி, கவிதா முரளிதரன், சே.பிருந்தா, அ.வெண்ணிலா, சல்மா, பெருந்தேவி, தமிழச்சி தங்கபாண்டியன், மோனிகா, ஜீவசுந்தரி பாலன், உமா சக்தி, தர்மினி,  கவிதா சொர்ணவல்லி, வினோதினி சச்சிதானந்தம், கவின்மலர், மயு மனோ, சக்தி ஜோதி, தமிழ்நதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ஸ்வாதி ச.முகில், ஆர்த்தி வேந்தன், நறுமுகைதேவி, முபீன் சாதிகா, பாரதி செல்வா, ரமா இன்பா சுப்ரமணியம், ஷஹிதா, கொற்றவை, பரமேஸ்வரி, சபிதா இப்ராஹிம், ச.விஜயலட்சுமி, உமா மோகன், ஹேமாவதி, பிரசாந்தி சேகரம், நாச்சிமகள் சுகந்தி, ஜீவசுந்தரி பாலன், பத்மஜா நாராயணன், கீதா இளங்கோவன், பாலபாரதி, சி.புஷ்பராணி, பானுபாரதி, பவானி தர்மா, இளமதி, கிர்த்திகா தரன், நிலவுமொழி செந்தாமரை, சு.தமிழ்ச்செல்வி, நந்தமிழ்நங்கை, கல்பனா கருணாகரன், மீனா, ஜென்னி டாலி, ப்ரியம்வதா, இந்திராகாந்தி அலங்காரம்,தமிழ்ப்பெண் விலாசினி, கு.உமாதேவி, தேனம்மை லஷ்மணன், அப்துல் ஹக். லறீனா, கீதா நாராயணன், ஃபாயிஸா அலி, பெண்ணியம் இணையத்தளக் குழு (தில்லை, கேஷாயணி, சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்), லதா சரவணன், ஜீவலக்ஷ்மி, ஷில்பா சார்லஸ், அகல்யா பிரான்ஸிஸ், ராஜ் சுகா, சசிகலா பாபு, சுபாஷினி திருமலை, நிவேதா உதயன், கோதை, சாந்தி, பிறேமா, நிலா லோகநாதன், மீசா. காதம்பரி, பரிமளா பஞ்சு, தமிழரசி, சக்தி செல்வி , சந்திரா ரவீந்திரன், கிரிஜா ராகவன், சுபா தேசிகன், தமிழ் அரசி, ரேவா, ஹன்சா, சுஜாதா செல்வராஜ், அமுதா தமிழ், புதிய மாதவி


பிவிஎன் தீபா நாகராணி, மோகனா சோமசுந்தரம், சரோஜா, நாகை கவின், சுந்தரவள்ளி, ஓல்கா ஆரன், பிரியா பாபு, ஷீத்தல் சென்னை, காத்தரீன் தெரசா, தாரா, நக்ஷத்ரா, வசந்த குமாரி, வாசுகி.

அரங்கமல்லிகா, நிருபா


ஆண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்:


இளவேனில், கீழ்.கா. அன்புச்செல்வன், கி. நடராசன், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, வசுமித்ர, இராதெ. முத்து, நிழலி, பவுத்த அய்யனார், யோ. திருவள்ளுவர், ஆழி செந்தில்நாதன், ஆர். விஜயசங்கர், அண்ணாமலை சுந்தரமூர்த்தி, சுரேஷ் காதான், ஷாஜஹான், நந்தன் ஸ்ரீதரன், வாசு முருகவேல், ரிஷி அன்பு, சு. அகரமுதல்வன், விஜய் கே.சக்கரவர்த்தி

தேவேந்திர பூபதி, அய்யப்பன், ஜீவ கரிகாலன், புதிய பரிதி, மைக்கேல் அமல்ராஜ், ஜோஸ் அன்றாயின், மனோன்மணி புது எழுத்து, பெரியசாமி நடராஜன், எம்ஜிபிடிசிஏ ஜானி, அகநாழிகை பொன். வாசுதேவன், ரத்தன் ரகு, சயந்தன் கதிர், தமிழ் ஸ்டுடியோ அருண், ராஜ சுந்தரராஜன், யமுனா ராஜேந்திரன்


ஆர். ஆர். ஸ்ரீனிவாசன், ருத்ரன், ரத்தன் சந்திரசேகர், லக்‌ஷ்மணன் சிபிஇ, விஸ்வநாதன் கணேசன், சரவண குமார் சேலம், எடிவி ஜீவதனபால், உமாநாத், கிருபா முனுசாமி.


ச. தமிழ்செல்வன், மாநிலத் தலைவர், தமுஎகச.

(எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

பிற்குறிப்பு:

இந்தக் கண்டனக் கூட்டறிக்கையோடு உடன்படுகிற ஆண் படைப்பாளிகள்,கலைஞர்கள் இந்தப் பதிவின்கீழ் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.


29 comments:

 1. what you have written is absolutely very correct- vimala vidya

  ReplyDelete
 2. வணக்கம். நான் ஒரு நீண்ட நாள் தமிழ் வாசகன் .அதன் அடிப்படையில் என் கோரிக்கை
  என்னவென்றால் கையெழுத்திட்ட ஏதாவதொரு பெண் எழுத்தாளரின் உயர்ந்த இலக்கிய
  படைப்புடன் திரு. ஜெயமோகன் அவர்களின் படைப்பின் இலக்கிய தரத்தையும் தரமாக
  ஆராய்ந்து பெண் எழுத்தளார்கள் திருத்தி கொள்ள வேண்டியிருந்தால் சம கல உயர் தர
  எழுத்தாளரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து மாற்றி கொள்ளலாம்.ஒரு வேளை அவர்
  தவறாக மதிபிட்டிருந்தால் மார்த்ரிகொள்ளும் பக்குவம் அவருக்கு உண்டு என்று நம்புகிறேன்
  அதன்றி கூட்டறிக்கைகள் அரசியல் தளங்களிளியே செல்லுபடியவடில்லை.

  சரவணக்குமார்.கோவை

  ReplyDelete
 3. இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசைநடவடிக்கை மூலம். கும்பல்கூடி கூச்சலிடுவதன்மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு- வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். தனித்து நிற்கும் குரலையே நாம் இலக்கியவாதியின் குரல் என்கிறோம்.

  ReplyDelete
 4. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. செயற்பாட்டாளர்கள் என்றால் யார்?

  ReplyDelete
 6. எழுத்தின் மூலமாகவோ, களத்திலோ செயல்படுபவர்கள். அதேபோல் ஜெயமோகன் யார் என்பதைப் பேசும் கட்டுரை மேலே உள்ளது. நன்றி

  ReplyDelete
 7. இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் பல ‘பெண்ணிய’ எழுத்தாளர்கள்,பழைய சரோஜாதேவி புத்தகத்தில் வரும் வார்த்தைகளை கவிதை,இலக்கியம் என்கிற பெயரில் மறுபதிப்புசெய்தவர்கள் என்பதைத்தவிர - ஆழ்ந்த,செறிவுள்ள இலக்கிய ஆக்கங்கள் எதையாவது எழுதினார்களா என்பதை,அவர்களின் ரகசிய அறையில் தான் தேடவேண்டும்....

  ReplyDelete
 8. எப்போதும் மற்ற கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மதிக்க தெரியாத ஒருவர் ஜெயமோகன்.கலைஞர் பற்றியும் சிவாஜி பற்றியும் ஈழ எழுத்தாளர்கள் பற்றி இவர் கூறிய கருத்துக்களையும் இணைத்துப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும்....பாலசுகுமார்

  ReplyDelete
 9. அன்புள்ள சகோதரிகளே,உங்கள் அறிக்கையை படித்தபின் உங்கள் மீது ஆதங்கமே ஏற்படுகிறது.உணர்ச்சியின் உந்துதலுக்கு ஆற்பட்டு எழுதாதீர்கள்சற்று அறிவின் வயப்பட்டு எழுதுங்கள்.மொத்தத்தில் நீங்கள் இன்னும் வளரவே இல்லை என்பதைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது.

  ReplyDelete
 10. இடதுசாரி சிந்தனையுடன் எழுதினால் தான் எழுத்தாளர்கள் என்ற மோசமான சூழ்நிலையில் தான் தமிழ் இலக்கியம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில் மாற்றுக் கருத்துடன் எழுத வருபவர்களை கூட்டமாக சேர்ந்து தாக்குவதும் தொடர்கிறது. இடது சாரிகள் இந்துத்துவம் எழுதுவதை தவறு என்று கூறினால், இந்துத்துவவாதிகள் இடதுசாரிகளின் மார்க்சியத்தை தவறு என்று கூறுவதில் என்ன குற்றம் இருக்க முடியும்... மேலே கண்ட பட்டியலில் மார்க்சியம் சாராத நடுநிலையாளர்கள் யார்?

  ReplyDelete
 11. @கொற்றவை: கமலா தாஸ் குறித்த ஜெயமோகனின் கட்டுரையையும் (http://www.jeyamohan.in/?p=2819) அதற்கு வந்த எதிர்வினைக்கு ஜெயமோகனின் பதிலையும் முழுவதும் படித்தீர்களா (http://www.jeyamohan.in/?p=2920)

  ... கமலாதாஸ் கேரளத்தின் முக்கியமான படைப்பாளி. முதிரா இளமையில் அவரது படைப்புகள் நம்மை மேலும் கவரும் என்பதும் உண்மை. கமலாவின் தத்தளிப்புகள் கசப்புகள் போலிப்பாவனைகள் எல்லாம் அவரது படைப்புகளுக்கு உரமாக இருந்தவையே. அவரது தனிப்பட்ட இயல்புகளை வைத்து அவரது படைப்புகளை நான் நிராகரிக்கவோ குறைத்து மதிப்பிடவோ இல்லை. அவை படைப்பாளிக்குரிய இயல்பான தன்மைகள் என்றே என்ணுகிறேன். ஆனால் அவர் சொன்ன அரசியல், சமூகவியல் கருத்துக்களைப் பரிசீலனைசெய்வதற்கு அவற்றுக்குப் பின்னால் உள்ள உளவியல் விவாதிக்கப்படவேண்டும்.....

  ..... ஓர் எழுத்தாளனின் மறைவு என்பது அவனை தொகுத்துக்கொள்வதற்கான ஒரு தருணம். மரணத்துக்குப் பின்னரே எழுத்தாளன் முழுமையாக அணுகப்படுகிறான்.

  நாராயணகுருவைப்பற்றி, காந்தியைப் பற்றி, இ.எம்.எஸ்ஸைப் பற்றி கமலா கருத்து சொல்லலாம், அப்படி கருத்துசொல்லும் கமலாவின் உளவியலை ஆராயக்கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? அக்கருத்தை நான் கமலாமீதான என் மதிப்பீடாகவே முன்வைக்கிறேன்........

  .....கமலா சுரையா குறித்து நான் எழுதியவை எல்லாமே வெளிப்படையாக அவரால் மேடைகளில் சொல்லப்பட்டவை, பேட்டிகளில் சொல்லப்பட்டடவை, எழுதப்படவை.....


  ... . பொதுமேடையில் பலர் சாட்சியாக பேசப்பட்டவற்றையே நான் எழுதினேன். அல்லாத தனிப்பட்ட விஷயங்கள் என்றால் இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஏன், என்னிடம் அவர் ·போனில் வசைபாடிச் சொன்னவற்றையே எழுதலாமே. அவரது குணச்சித்திரத்தை வார்ப்பது என் நோக்கமல்ல. ஓர் அஞ்சலிக் கட்டுரையில் அவ்விஷயங்களை விரிவாக எழுத நான் நினைக்கவில்லை. எழுத்தாளர் என்ற வகையில் ஒரு பொது மதிப்பீட்டுக்காகவே சிலவற்றை எழுதினேன்....

  ReplyDelete
 12. Please spell out any best writings by any of the undersigned authors and compare it with jeymos writings.. I still do not understand what peraasan marx to do with Tamil literature or for that matter literature.

  ReplyDelete
 13. எந்த பெண் படைப்பாளியையும் அவமானப்படுத்தும் நோக்கத்தோடு திரு.ஜெயமோகன் அவர்கள் எந்த கருத்தையும் சொன்னதில்லை. சிறப்பான படைப்புகள் வர வேண்டும் எனவும் அதன் மூலம் பெண்கள் புகழ் பெற வேண்டும் என்றுதான் பதிவு செய்திருந்தார். மேலும் யாரையும் புகழ பாசாங்கு சொற்கள் சொல்ல முடியாது அவரால். எனவேதான் பட்டவர்த்தனமாக எந்த படைப்பாளியாக இருந்தாலும் அவரது படைப்பை வைத்து அவர்களை சுட்டுவார். அந்த விமர்சனத்தை தாங்க முடியாதவர்கள் எழுத்தாணியை எடுத்திருக்க கூடாது.
  எழுத்தை தவமாக கருதும் எழுத்தாளர்களுக்கு கடும் பஞ்சம் நிலவும் இக்கால கட்டத்தில், நாங்கள் ஜெயமோகன் அவர்களின் படைப்புகளையே நம்பி உள்ளோம். ஏழாம் உலகம், காடு, அறம், விஷ்ணுபுரம், வெண் முரசு போன்றவை காலத்தால் அழியாத படைப்புகள். இந்த தேவை அற்ற வசைகளால் அந்த மாபெரும் எழுத்தாளனின் மனம் நோகச்செய்து அவரின் படைப்புகளுக்கு தடை போட்டு விடாதீர்கள்.

  தாழ்மையுடன்,
  சரவணகுமார்
  துபாய்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிடும் அந்த புத்தகங்கள் நன்றாக இருந்ததினாலேயே மற்றவர்கள் கீழே இருக்கிறார்கள் எனும் பொருளில்லை தம்பி. (இளையவர் என நம்புகிறேன்)

   அவர் சொல் தவறு என்றே சொல்கிறோம். அவருக்கு ஆதரவு சொல்வதாக நினைத்து அவரது தவறான சொல்லுக்குத் துணை போக வேண்டாமே...யாரும்.

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. பெண்கள் படித்ததும் இது “இன்னார்” எழுதியது என்கிறோம்.

  அனேக ஆண்கள் “பெண் படைப்பாளி” எழுதியது என்கிறார். இது சராசரிகள்கூட செய்யக்கூடாத தவறு.

  இவ்வளவு பிரபல எழுத்தாளர் இதைச் சொல்வதுமல்லாமல்.... :) வேறென்ன சொல்ல..

  இவருக்குப் பெண்களைத் தெரியவில்லை அல்லது அவர்களின் படைப்புகளைப் படித்ததில்லை சும்மா எழுதும் நான் படித்த அளவு கூட என்றல்லவா பொருளாகிறது? அப்படி இல்லை என்றே நம்புவோம்.

  பதிலடி சொல்லாவிடில் இன்னும் இன்னும் சீண்டுவார்கள். எனவே இந்த தொகுப்பும் முடிவும் சரிதான்.

  (பதில் சொல்லாமல், இதை அவர் இக்னோர் செய்ய முயற்சித்தால்.. அப்படி இக்னோர் செய்தபடியே நல்ல எழுத்தாளர்களின் எழுத்தையும் இக்னோர் செய்திருக்கிறார் என்றே பொருளாகிவிடும்.) எனினும், உங்கள் பதிலுக்கு நன்றி சரவண குமார்.

  ReplyDelete
 16. இவரது மொழியிலேயே ஆண்/பெண் படைப்பாளிகள் என பிரிக்க வேண்டியதாயிற்று... இது எத்தனை மோசமான நிகழ்வு?

  ReplyDelete
 17. எழுத்தாளர் ஜெயமோகன், பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தரமற்றவை என்று சொன்னால், படைப்புகளை முன் வைத்து, சிறந்த படைப்புகளை பட்டியலிட்டு பதில் சொல்வதுதானே எழுத்தாளர்களின் மிகச்சிறந்த எதிவினையாக இருக்கும்? அதை விட்டு விட்டு இந்த குழாயடிச்சண்டை வகை அறிக்கை எதற்கு?
  அரசியல் சரிகளை மட்டும் பேசாமல், ஒரு சமநிலையோடு எல்லா படைப்புகளையும் குறை நிறைகளை ஆராய்ந்து சொல்லும் ஞானமும், தைரியமும் உள்ளவர்களே எந்த சமூகத்துக்கும் தேவை. தமிழில் அத்தகையோர் மிகக்குறைவு.
  உலக இலக்கியம் பற்றிய அறிவும், இந்திய வரலாறு பற்றிய பாரபட்சமற்ற தெளிவும், இந்தியாவின் சமகாலத்திய மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளை படைத்த ஆற்றலும் தான் ஜெயமோகனை தமிழ் இலக்கியத்தின் பிதாமகராக ஆக்கின.
  அவருக்கு பதில் சொல்ல உங்களுக்கு இருந்த பொன்னான வாய்ப்பை வீணடித்துவிட்டீர்கள்! பெண் எழுத்தாளர்களின் அற்புதமான படைப்புகளை பட்டியலிட்டு அவற்றுக்கு கொஞ்சம் கவனம் தேடித்தந்திருக்கலாம். அதை விட்டு விட்டு, இந்த தரக்குறைவான அறிக்கை மூலம் வரலாற்றின் கரிய பக்கத்தில் உங்கள் கையெழுத்துக்களை பொறித்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 18. பிரபலங்கள் சில தவறுகள் செய்வதை பெரிது படுத்தகூடாது.. விஷ்ணுபுரம் வட்டமும் வெள்ளை யானையும் மறக்கூடியவையா..
  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்

  ReplyDelete
 19. நீங்கள் நசுக்க நினைப்பது ஜெயமோகனையா, இல்லை அவரது வசைகளையா? உங்களது இந்த கட்டுரையில் அவ்வளவு வன்மம் தெரிகிறது...இது சரியான எதிர்வினை இல்லை என்றே தோன்றுகிறது.இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று நினைத்தால் அந்த சிந்தனை உங்களை வேறு மாதிரி சிந்திக்க விடாது.

  ReplyDelete
 20. ஒப்பம் அளித்து கையெழுத்து இட்டவர்களில் பாரதியாரும் தாகூரும் மிஸ்ஸிங்.

  ReplyDelete
 21. ஜெமோ மீதான இந்த கண்டன அறிக்கைக்கு முழுவதுமாக உடன்படுகிறேன்... தொடர்ந்து இது போன்ற பிற்போக்குசெயல்களை அம்பலபடுத்துவோம். நன்றி.

  ReplyDelete
 22. முதலில் ஜெயமோகன் பாலியல் ரீதியான எதையுமே அவர் கட்டுரையில் குறிப்பிடவில்லை.இதை தமிழ் தெரிந்த எவரும் அவரது கட்டுரையை படித்தால் அறிவர்.மேலும் நாஞ்சிலின் பட்டியலில் உள்ளவர்களிலேயே சில பெண் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் முக்கியமானவர்களாக குறிப்பிட்டிருக்கிறார்.

  இது நாஞ்சில் குறிப்பிடாத, நாஞ்சில் குறிப்பிட்டு ஜெயமொகன் குறிப்பிடாமல் விட்ட மற்றவர்களின் குமைச்சல் மட்டுமே.

  ReplyDelete
 23. இந்த அறிக்கையே பெண் படைப்பாளர்களின் தகுதிக்கு சான்றாக இருக்கும் வண்ணம் நேர்த்தியான மொழியில் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு அறிக்கையை கூட இலக்கிய தரத்துடன் தயாரிக்க பெண் படைப்பாளிகளால் முடிய வில்லையா? அசட்டு வார்த்தைகளை கொண்டு தாக்குதல் மட்டுமே நோக்கமாக கொண்ட அறிக்கை...
  சமீப காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள பெண் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை பட்டியலிட்டிருக்க வேண்டும். அதன் இலாக்கிய தரம் குறித்த விவாதத்தை ஊக்குவித்திருக்க வேண்டும். அதை விடுத்து இந்த அளவிற்கு தரம் இறங்கி நடப்பது , ஜெ.மோ சொன்ன குற்றசாட்டை மெய்பிப்பது போலாகிவிடும்.
  உங்களால் பட்டியல் வெளியிட முடியுமா????

  ReplyDelete
 24. there are 100 Pussys,and 200 Boobs, ( Exclude Living Smile Vidya as she is transgender )...Thats it...

  ReplyDelete
 25. இந்த அறிக்கையின் ஒரு வரியைக் கூட நான் படிக்கவில்லை. உங்கள் பக்கம் உள்ள நீதியை ஏற்றுக்கொள்ள அறிக்கையின் வாசகங்கள் அவசியம் என்று நான் நினைக்கவில்லை. வலது பிற்போக்குவாதம் தனது ஆணாதிக்க முகத்தைக் காட்டியிருக்கிறது. இதற்கெதிரான உங்கள் போராட்டத்தில் உங்கள் பக்கத்தில் உறுதுணையாக நிறுத்துவதற்கு என் ஆதரவான எண்ணத்தையும், கருத்தையும் தவிர என்னிடம் ஏதுமில்லை. உங்களை ஆதரிக்கிறேன். உங்களோடு நிற்கிறேன். பெண் குலத்தைப் பிணித்த கயிற்றின் இன்னொரு முனை உழைக்கும் ஆண்களின், ஒடுக்கப்பட்ட ஆண்களின் கைகளில் இல்லை. அவர்களின் கழுத்தில் இருக்கிறது. இருவரும் வேறுவேறு திசைகளில் செல்வதால் இருவரது கழுத்தும் இறுகும். கயிற்றின் மையத்தைக் கைகளில் பிடித்திருக்கும் பிற்போக்காளர்களுக்கு எதிராக இருமுனைகளின் திரளவேண்டும் என நினைக்கும் ஓர் எளிய குரல் இதோ...

  ReplyDelete
 26. தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய இலக்கிய அப்பாடக்கர் என தன்னைத்தானே நினைத்துக்கொள்ளும் ஜெமோ மீதான இந்த கண்டன அறிக்கைக்கு முழுவதுமாக உடன்படுகிறேன்... தொடர்ந்து இது போன்ற பிற்போக்குசெயல்களை அம்பலப்படுத்தியே தீருவோம்
  நன்றி வழக்கறிஞர் அபுசாலிஹ்
  ஆசிரியர் மக்கள் உரிமை தமிழ் வார இதழ்

  ReplyDelete