Mar 31, 2012

நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்


உங்கள் அதிகார மொழி உங்களை கைவிடும்போது
அவளை
குழந்தையாக மாற்றுங்கள்
குழைந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளுங்கள்


விலங்குகளினும் சிறந்த முகரும் தன்மையுடன்
இரத்த வாடையை மோப்பமிட்டு
தயார் நிலையை களி கொண்டு
முரசு கொட்டுகிறது ஊர்


பட்டாம்பூச்சியுடன் சிறகை விரித்து அவள் பறக்கையிலே
வயதின் சுருக்கங்களை முன் வைத்து
பாதுகாப்பு வளையத்திற்குள்
நிறுத்தப்படுகிறாள்

ஒவ்வொரு இரவின் முடிவிலும்
தசைகள் நெகிழும் முன்பே
உடலெங்கும் 
ஒற்றைப் பாதையில் பயணித்து வரும்
கம்பளிப் பூச்சிகள்

அது கடந்து
மண்ணை நுகர்ந்து நடக்கையில்
பார்வைகளால் அங்ககளை அளவிட்டு
கூற முடியா வார்த்தைகளின் முடிவில்....

மற்றொருநாள்
அலுவலக அறை
சுழலும் நாற்காலி
கோப்புகள் எடுக்கும் ஆணை
குனிகிறாள்
பெண்
புட்டம் தடவிய கைகள்
பச்சைக் காகிதத்தில் சுற்றுகிறது
ஆண்மையை

எல்லா முனைப்புகளும் தோற்றுப்போகையில்...
கடவுளாக்கி வழிபடுகிறது....

நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்
நீலம் பாவுகிறது
உங்கள் உடல்.

(2010 இல் எழுதியது...அதை மறுவாசிப்பு செய்கையில் சில வரிகள் வெறும் உரைநடை வாசகமாக இருப்பதாக தோன்றியது...அவ்வரிகளை மாற்றி இப்போது வெளியிடுகிறேன்...)

Mar 29, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் – ஆணாதிக்கத்தின் கற்பனாவாதச் சிறகு
காட்சியமைப்பு, ஒளிப்பதிவு இன்னும் இதர தொழில்நுட்பத் துறைகளில் எவ்வளவு முன்னேறினாலும் காதல்எனும் குண்டு சட்டியை விட்டு தமிழ் திரைப்படங்கள் வெளியேறவில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் மு.. தாய் மீது பிடிப்பு, அதனால் பாதிக்கப்படும் மனநலம், அதைத் தொடர்ந்து தன் வாழ்வில் நுழையும் பெண் மீதான பிடிப்பு என்ற வழக்கமான ஈர்ப்புக்கூடிய மிகையுணர்ச்சிக் காதல் (obsessive Romantic Love).  கதைகளில் வரும் அதே அலுப்புத் தட்டும் கதாப்பாத்திர சித்தரிப்புகள்

பி.பி.ஓவில் பணியாற்றும் ஓர் இளைஞனின் காதல், அவனது பின்னணி, காதலில் பிரச்சனை, எப்படி அவ்விளைஞன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான், அதன் தொடர்ச்சியான முடிவு என்று ஓரிரு வரிகளில் கதையை சுருக்கிவிடலாம். பி.பி.ஓ இளைஞர்கள், இளைஞிகள்!!  என்றால் அவர்களுக்கென்று ஒரு சித்தரிப்பை தற்போதைய சினிமாக்கள் செய்து வருகின்றன. இக்கதையில் வரும் ராமும் அப்படி ஒரு ஹாண்ட்சம்இளைஞர், அவரின் கதாநாயகத் தன்மை, அழகு, கவர்ச்சி, ஒழுக்கவாதம்இவற்றை சித்திரிக்கும் வகையில் முதல் காட்சி சக பணியாளரான ஒரு பெண், குட்டைப் பாவாடையில் (அது சீருடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்) ராமை சுற்றி வந்து, ‘டேக் மீராம், அதாவது என்னை எடுத்துக்கோ ராம் என்பார் அதுவும் சாதாரணமாக இல்லை, ‘முற்போக்கு உடல் மொழியுடன் ஆம் அப்பெண் தன் மேல் சட்டையின் முதல் இரு பொத்தான்களை அவிழ்த்து விட்டு, தன் மார்புக் கோட்டை காட்டியாவது ஹாண்ட்சம்ராமை கவர்ந்து விட வேண்டும் என்று வலை வீசுகிறார். ஹீரோ ராம் (ராமர்) இல்லையா அதனால் அப்பெண்ணிடம் மூடசொல்லிவிட்டு, தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி மறுத்துவிடுவார். படம் முழுக்க பி.பி.ஓ பெண்கள் அல்லது தற்போதைய படித்த , ‘நாகரீக, ‘முற்போக்குபெண்கள் பற்றிய ஆணாதிக்க சித்தரிப்பே வழிந்தோடுகிறது பெண்கள் குடிப்பதை சந்தானம் கிண்டல் செய்வது, மீண்டும் மீண்டும் அப்பெண் ராமை சுற்றி வருவது, ராம் வேறொருவனை திருமணம் செய்து கொண்டாலும், விவாகரத்து வாங்க வைத்து திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வது, மனநல மருத்துவராக வரும் ஜெயப்பிரகாஷின் எள்ளல்கள், பெண்கள் பற்றிய சந்தானத்தின் மற்ற நகைச்சுவைவசனங்கள் என்று எல்லாம் ஆணாதிக்க பெண் கருத்தாக்கங்கள்.

ஹீரோ ராம் ஒரு பெண்ணை (சாரு) தீவிரமாக விரும்புகிறார். பணி காரணமாக ஏற்படும் நட்பு ஆழமாக வளரும் சூழலில் அப்பெண்ணுக்கு சில ரவுடிகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பெண் ராமை நல்ல நண்பராகவே கருதி பழகி வருகிறார் (வழக்கம் போல), தீவிர ஈர்ப்பின் காரணமாக (obsession) ராம் சாருவை எவரும் ஏதாவது சொல்லி விட்டால் கொலைகூட செய்யத் தயங்காதவர். சாருவும் ராமும் சேர்ந்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அதை ஒரு போட்டியில் விவரிக்க வேண்டிய அன்று சாரு ஒரு காரில் சிலரால் இழுத்து செல்லப்படுகிறார். அதை பார்க்கும் ராம் முன்பு ரவுடி ஒருவர் சாருவை எச்சரிக்கும் காட்சியோடு தொடர்புபடுத்தி பதறி ஓடுகிறார். விபத்து நேர்கிறது. சித்தப் பிரமை பிடித்தவராகி வீடு திரும்புகிறார். உட்கார்ந்த இடத்திலேயே சில நாட்கள் உட்கார்ந்திருக்கிறார். பிறகு சாரு வருகிறார். அவருடன் அந்த வீட்டிலேயே வாழ்கிறார். வாரக் கடைசியில் காதலியோடு பெங்களூருவில் கழிக்கிறார். மற்ற நாட்களில் சென்னையில் வேலை.

சென்னையில் புதிய CEO (லதா) வருகிறார், அவர் சாருவைப் போல் இருக்கிறார். ஆனால் ராம் அவரைக் கண்டு எந்த உணர்வையும் வெளிப்படுத்தாததைத் தொடர்ந்து லதா அவரைப் பற்றிய பின்னணியை ஒரு மனநல மருத்துவரிடம் பகிர, மீதி கதை நகர்கிறது. சாருவுக்கும், லதாவுக்குமான தொடர்பு தெரியவருகிறது. ராமின் பின்னணிக் கதையைச் சொல்ல கிராமத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார்கள். கணவனை இழந்த ஒரு பெண் மகனை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் வளர்க்கிறாள் என்று சொல்ல நிணைத்த இயக்குனர் அதற்கு ஆணாதிக்க தாய்மைவாத சித்தரிப்புகளை மட்டுமே கைகொண்டுள்ளார். இளம்பிள்ளைவாதம் கண்டுள்ள சிறுவயது மகனுடன் இளமை நிறைந்த பெண் விதவையாகி நிற்கிறாள் ஆண்களால் அவளுக்குத் தொல்லை நேர்கிறது உடனே அவள் அந்த ஆணைத் அடித்து துரத்திவிட்டு அடுத்த நாள் தன் அழகை சிதைத்துக் கொள்கிறாள். பார்ப்பன புரோகிதர் அவளுக்கு நலம் விரும்பி (well wisher). ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் மொட்டையடித்து, சுடு பூசனியை கொடுத்து கடிக்கச் சொல்லி பற்கள் உதிரச் செய்து அவள் அழகை சிதைக்க வேண்டும், அவள் அழகற்றவளாக இருந்தால் தான் அவள் வேறொரு ஆணை நாடமாட்டாள், வேறொரு ஆணும் அவளை நாடமாட்டாள் எனும் பெண்களுக்கெதிரான பார்ப்பன (மனுஸ்மிருதி உள்ளிட்ட) பரிந்துரையை நயம்பட எடுத்துரைக்கிறார் இயக்குனர். பல இடங்களில் பார்ப்பனிய ஆதரவை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம் நிறைய கெட்டவர்களைகாட்டும் படங்களில் பெரும்பாலும் புரோகிதர்கள்ரொம்ப நல்லவர்களாக காட்டப்படுவதும் அவர்களைத் தவிர இரட்சகர்களே இல்லை எனும் சித்தரிப்பும் பார்ப்பன-இந்துத்துவப் பிடிப்பன்றி வேறில்லை. அவள் பிழைப்புக்கு பார்ப்பனப் புரோகிதர் பரிந்துரைப்பது வட்டிக்கு விட்டுப் பிழைத்தல்உடல் உழைப்பின்றி பிழைக்கும் புரோகிதக் கும்பல் உடல் உழைப்பை, வேறொரு தொழிலை பரிந்துரைக்கும் சாத்தியம் குறைவுதான் போலும். வட்டியை வசூலிப்பதற்கான கெட்டப்சேஞ், அதைத் தொடரும் அவரது உடல் மொழி. இங்கு ஆதிக்கச் சாதி  கருத்தியலை வைப்பது யதார்த்தமாக இல்லை. சாம பேத தாண தண்டம் நாலும்  தோத்துப் போகும் போது தகிடு தத்தம் என்ற இன்னொரு குரலும் சேர்ந்தே ஞாபகத்திற்க்கு வருகிறது. மற்ற சாதிகளிடத்தில் பிராமணியம் வரையறுக்கும் கடமைகளை பிராமணியம் கறாராக கைக்கொள்ளும் போது அது தனக்குத் தானே மீறலின் பொருட்டு வைத்திருக்கும் பரிகாரங்கள் ஏறாளம் எரிச்சல் குமட்டிக் கொண்டு வந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆணால் கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் அந்தப் பெண் சிறப்பாக நடித்துள்ளார்.

இத்தகைய ' மிகையுணர்ச்சி தாய்மை' சித்தரிப்பின்றி வந்த தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தைப் பற்றி இங்கு சொல்வது அவசியமாகிறது. அதில் தாயாக வரும் பெண் தன்னம்பிக்கையின் உருவமாய் இருப்பாள். எவரையும் நம்பாமல் தன் உடல் உழைப்பை நம்புவாள். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இருக்கும் கிராமங்களில் பெண்கள் பார்ப்பனியச்ஒடுக்குமுறைகளுக்கு இசையாமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ள வரலாறும் உள்ளது. தெ.மே.ப வில் காட்டப்படும் பெண் அத்தகையவள். வன்முறையை எதிர் கொண்ட பின்னரும் வழக்கமான வீரத் தாய்களைப்போல் இல்லாமல் மகனுக்கு வாழ்வுகாத்திருக்கிறது, பகையை பகையால் வெல்ல முடியாது, அதை கவனி, அடிதடி வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மடிவாள். அறுத்துக் கட்டும் பண்பாடு கொண்டது தமிழ்ச் சமூகம்ஆனால் விதவைக்கு மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது பார்ப்பனியப் பண்பாடு. மதவாதக் கருத்தாக்கங்களால் அக்காலக்கட்டத்தில் பண்பாட்டு இறுக்கம் காரணமாக பெண்கள் மறுமணம் செய்யவில்லை. இயக்குனர்கள் தங்களின் மற்ற மிகையுணர்சிப் புனைவுகளுக்கிடையே பெண் / பண்பாடு பற்றிய சித்தரிப்புகளை, ஆணாதிக்க, முதலாளித்துவ சமூக அமைப்பின் உளவியல்களை ஏன் கட்டுடைக்க முயல்வதில்லை அரை நிர்வானப் பாடல்காட்சிகள் வடிவமைக்க செலவிடும் நேரத்தில் சிறிதளவை இவர்கள், தங்கள் ஆணாதிக்க அறிவு நிலையை மீட்டுக்கொள்ள செலவிடலாம்.

பெரும் சிரமத்துக்கு மத்தியில் மகனை வளர்க்கும் அந்த தாய் மகன் வளர்ந்து பி.பி.ஓவில் சேர்ந்து செட்டில்ஆன பின்னர் மடிந்துபோகிறாள். அதனால் சித்த பிரமை பிடித்தவன் போல் ஆகிறான் மகன். உடனே சாரு வந்து அவனை தோளில் சாய்த்து நான் இருக்கேண்டா உனக்கு, எப்பவும் உன் கூடயே இருப்பேன்என்று சொன்னவுடன் தாய் மீது அளவற்ற பாசம்கொண்ட ராம் சாருவின் மீது சாய்ந்துவிடுகிறார் எத்தனை காலங்களுக்கு இந்த நுரைதள்ளும் புளித்துப் போன அரைத்த மாவை சகித்துக் கொள்வது. ( பகலில் தாய், இரவில் வேசி, முற்பகலில் தோழி, பிற்பகலில் சகோதரி, இத்யாதி இத்யாதி....) பெண் என்பவள் எப்பொழுதும் ஒரு ஆணுக்கு ஆதரவான சொற்களையே சொல்லவேண்டும், உடலைச்  சத்திரம் போன்று திறந்து வைத்திருக்க வேண்டும், அந்த சத்திரத்தில் ஒருவனுக்கு மட்டுமே, அதுவும் வீர சாகசங்கள் செய்யும் கதாநாயகனுக்குமட்டுமே திறந்து வைத்திருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தோளில் சமூகத்தால் பாதிப்புக்குள்ளான so called bad people’ அத்துணை பேரும் ஏன் சாய்ந்து கொள்ளக்கூடாது. அன்பு அத்தகையவர்களுக்கும் கிடைத்தால் அவர்களும் இந்தக் கதாநாயகர்கள் போல் நல்லவர்ஆகி விடலாமே. அது தவறு என்று சொல்வீர்களானல் இதற்குப் பெயர் அன்பு, ‘காதல்என்பது வெறும் ஆணாதிக்க வெற்றுச் சொற்கள், வெற்றுக் கருத்தாக்கம் அப்படியென்றால் அதற்குப் பெயர் காதல் இல்லை, அது காமம் எனும் உடல் தேவைக்கும், தன் விந்தணுவை தூய்மையாக விதைத்துவாரிசு பெற்றெடுக்கும் தேவைக்கு சிறந்த பெண்மைநிறைந்த பெண்ணைக் கண்டடையும் ஒரு வேட்டை அதேபோல் ஏன் ஒரு பெண் தாய்மை கூடிய அன்பை பலருக்கும் கொடுக்கக் கூடாது எனும் விதி நிலவுகிறது. தாய்மை எனும் அந்த பரந்த உணர்வு ஏன் ஒருவருக்கு மட்டுமே உடமையாக்கப்படுகிறது?  ‘தாய்மைஎனும் அன்பு உலகளாவிய பரந்த செயல்பாட்டுக்கு ஏன் அனுமதிக்கப்படுவதில்லை. தாய் என்பவளில் ஒரு சிறந்த வேலைக்காரி, அதுவும் தனக்கு மட்டுமான வேலைக்காரியை தக்கவைத்துக்கொள்ளும் மனப்பான்மையன்றி வேறென்ன?

தங்களை கவனித்துக் கொள்ளும் சுயநலத் தேவை, பாதுக்காப்பின்மை உணர்வின் வெளிப்பாடு ஆகியவையே தன் தாய் போல் பொறுமைநிறைந்த பெண்ணைத் தேடச்செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் பெண்கள் கூட தங்களுக்கு துணை தேடும்போது தந்தை போல் ஒருவர் வேண்டும் என்று தேடுவது குறைவாகத்தான் இருக்கிறது, அவளுக்கும் தாய் போல் ஒருவனே தேவைப்படுகிறார். இது அறிவியலா, கற்பிதமா அல்லது தந்தையாகியஆண்கள் பெரும்பாலும் அத்தகைய குணங்களைக் கொண்டிருப்பதில்லையா? அல்லது தந்தைகளுக்கென்று பொருளீட்டுவதைத் தவிர அன்பு, அடக்கம், பொறுமை, அரவணைத்து தோள் கொடுத்து காக்கும் எந்த கடமையும் இல்லையா. அப்படி இருப்பின் ஆண்கள் வருத்தப்படவேண்டிய விசயம் இது

அப்படியில்லையென்றால் ஆணாதிக்க தாக்கமின்றி அன்பு, பாசம், அரவணைப்பு, என்று பெண்ணுக்கு தாங்கள் கொடுக்கும் இடம் ஆகியவை திரைப்படங்களில் மதிக்கப்படுவதில்லை, யதார்த்தமாக காட்டப்படுவதில்லை என்று ஆண்கள் கோபம் கொண்டு ஆணாதிக்க திரைப்படங்களுக்கு எதிர்வினையாற்றலாம்.

பல மில்லியன் வருட பரிணாமப் பின்னணியில் ஆண், பெண் எனும் உயிரியல் (மற்ற உயிரியல்களும்) எண்ணற்ற மரபியல் மாற்றங்களைக் கண்டுள்ளது. கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள், வேட்டைமூலம் உணவு சேகரிப்பு குறைதல் அதைத் தொடர்ந்த உற்பத்தி முறையில் மாற்றங்கள், விதைப்பு, ‘வேளான்மைஆகியவற்றைப் பெண்கள் கண்டுபிடித்தல் என்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்ணே கலவிக்கு, உயிர் மறு உற்பத்திக்கு தகுதியான ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தாள் என்று வரலாற்றாசிரியர்கள் நிறுவியுள்ளனர் வேளான் பொருளாதாரம் தோன்றிய பின்னர், கடுமையான உடல் உழைப்பு குறைந்து குறைவான உழைப்பில் பொருள் சேர்ப்பு நடக்கிறது. ஒரு கட்டத்தில் கலவி பொழுதுபோக்காகிறது’, பெண் பெரும் சொத்துபடைத்தவள் ஆகிறாள். அவளது அதிகாரம் மேலும் கூடுகிறது. தனக்கும் தன் பிள்ளைகளுக்கும், சொத்துக்கும் ஒழுங்கானபாதுகாப்பு வழங்கும் ஆணை மட்டுமே அக்காலத்தியப் பெண்கள் கலவி கொள்ள தேர்ந்தெடுத்தனர். அதுவரை சுதந்திரக் காதல் (கலவி) மட்டுமே இருந்து வந்துள்ளது. பெண்ணைக் கவரும் சாதனைகள்  செய்ய ஆணுக்கு டெஸ்டோஸ்டிரோன்எனும் சுரபி அதிகமாக சுரப்பது அவசியமாகிறது. அச்சுரபியும் அவன் பெண்ணோடு கலவி கொள்ளும்போதோ அல்லது பெண்ணின் அருகாமையில் இருக்கும்போதோ இன்னும் அதிகமாக சுரக்கச் செய்யும் தன்மையில் இருக்கிறது.

அச்சுரபி இரண்டு நரம்பு தூதர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்கும் என்று விளக்குகிறார் மருத்துவர் ஷாலினி. டோபமைன், என்டார்ஃபின் எனும் அச்சுரபிகள் பேரானந்தத்தை உணரச்செய்பவை. வேட்டை, விளையாட்டு பெண் வழிச்சேறல் ஆகியவற்றில் ஈடுபடும்போது ஆணுக்கு இச்சுரபிகளின் அளவு அதிகரிக்கும். அதனால் ஆண் பெண்ணின் பாராட்டைப் பெற எல்லா முயற்சியையும் மேற்கொண்டான் என்கிறார். அது இன்றும் தொடர்கிறது. பெண்களுக்கும் அத்தகைய உணர்ச்சிகள், வேட்கைகள் உண்டு. அதை கட்டுபடுத்த வேண்டும் எனும் கட்டளைகளால் அவளது மரபணுவிலேயே பெறும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

அத்தோடு ஆணுக்கு தன் மரபணு சுத்தமாக எந்த கலப்பும் இல்லாமல் பிறந்து பெண்ணின் சொத்துக்களைதக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வளர்கிறது.  உற்பத்தி முறை மாற்றம், தனிச்சொத்து பேணும் முறை வளரத் தொடங்குகிறது. ஆகவே தனித்தமரபணு விதைப்புக்கு ஆணின் தலைமையில் உறவு ஒப்பந்தத்தைஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையை உருவாக்குகிறான். அதுவே திருமணம்

மாதவிடாய் பொறாமை, கர்ப்பப் பொறாமை, செல்வாக்குப் பொறாமை, மரபுவளப் பொறாமைகள் இருப்பதாக பட்டியலிடுகிறார் மருத்துவர் ஷாலினி  பெண்ணை, அவளது மறு உற்பத்தி சக்தியை, அவள் சம்பாதித்த சொத்துக்களை உடமையாக்கிக் கொள்ளுதல் எனும் தேவை, சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக பெண் அடிமையாக்கப்பட்டாள், அவளுக்கென்று கடமைகள் வகுக்கப்பட்டன, ஆணுக்கு ஆறுதலான தோளை சுமந்து நிற்பதைத் தவிர வேறு தேர்வுகள் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. நாள் பட நாள் பட ஆணைச் சார்ந்தே வாழும் நிலைக்கு பெண் தள்ளப்பட்டாள். பெண் மீது ஆண் கொண்டிருந்த சார்பு, அவனது பாதுகாப்பின்மை உணர்வு, பெண்ணின் உடல் பலத்தின் மீது அவன் கொண்டிருந்த பொறாமை பெண்ணைப் பெண்ணாக இல்லாமல் செய்ததுவே வரலாற்றின் வெற்றி. அத்தகையப் பெண் திரைப்படங்களில் ஆணின் காதல்பொருள் மட்டுமே ஆகிப்போனது அவல நிலை

ஆணின் பொறாமைகள், அவர்களின் இயலாமை ஆகியவை பெண் மீது ஏற்றி வைத்த கடமைஉணர்ச்சிகளை பெண்மை என்று சித்தரிக்கும் ஆணாதிக்க மனோபாவமே இத்தகைய பெண் கதாப்பாத்திரங்களில் தெரிகிறது உற்பத்தி முறையில் மாற்றம், தனிச்சொத்துக் காரணமாக ஏற்பட்ட பொறாமை, பெண் பற்றிய சித்தரிப்புகள் ஆகியவை பெண்ணையே பெண்ணுக்கு எதிராக நிற்கவைத்துள்ளது.


விதவைத் தாய் பற்றிய சித்தரிப்பு அலுப்புத் தட்டுகிறதென்றால், வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டப் பெண் மற்றொருவனைக் காதலிக்க அழுத்தமானகாரணங்கள் தேவைப்படுகிறது இயக்குனர்களுக்கு. ஆணாதிக்கப் பழமைவாத, மதவாத கற்புகருத்தாக்கத்திலிருந்து இவர்களால் வெளியேறமுடிவதில்லை. ஆகையால் ஆணுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் கொடூரமானவனாக, கெட்டவனாகஇருக்க வேண்டும். முன் பின் பழக்கமில்லாத ஒரு ஆணுடன் நிச்சயம் செய்யப்படும்போது ஒரு பெண் யாரையும் காதலிக்கவில்லை, சந்தர்ப்பவசத்தால் வேறொரு ஆணை சந்திக்க நேர்ந்து அவனது குணங்கள் பிடித்துப் போனால் அவள் காதலில் விழுவது இயல்பு. இதில் என்ன ஒழுக்க மீறல் இருக்கிறது அப்படி வேறொருவனைக் காதலிக்க நேர்ந்தால் அப்பெண் அதை நேர்மையாக வெளிபடுத்தி, சம்பந்தப்பட்ட நிச்சயிக்கப்பட்ட அணிடம் தன் காதலை விளக்கி நடக்கவிருக்கும் திருமணத்தை ரத்து செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக இதுவரை ஏதாவது திரைப்படங்கள் வெளிவந்துள்ளனவா

அப்படி வெளிப்படையாக சொன்னால் அந்த ஆண் அதை ஏற்றுக்கொள்வானா எனும் கேள்வி எழலாம், அவனை ஏற்றுக்கொள்ள விடாமல் இருப்பது சமூக அமைப்பே. திருமணம் என்பது ஆண்மைக்கானஒரு சான்றிதழாக கருதப்படுகிறது. அதிலும் பணக்கார படிநிலையென்றால் அது அந்தஸ்து சார்ந்த விசயமாகிவிடுகிறது. ஒடுக்கபப்ட்ட சமூகம் என்றால் கற்புசார்ந்த விசயமாகிவிடுகிறது. சாதியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.  அதனால் பையன்வீட்டார் அதை ஒரு ஈகோபிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. எப்படிப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும், காதல்வயப்பட்ட ஆணும், பெண்ணும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை இருக்கிறது, அதற்கான முயற்சிகளை, போராட்டங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று மாற்று பார்வை கொண்ட கதைகள் மிகக் குறைவு. பெரும்பாலான இயக்குனர்கள் பெண்ணியச் சிந்தனையை, மானுட சமத்துவ சிந்தனையை பெற்றிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.  ‘கெட்டகதாப்பாத்திரப் புனைவுகள், அதைத் தொடர்ந்து கதாநாயகின் மனமாற்றம் அதுவும் ஒரு ஆண் சாகங்கள்செய்து தன்னை நிரூபித்த பின்னர் ஏற்படும் மனமாற்றம் பிற்போக்குத்தனம் நிறைந்தது. அது முழுமையான ஆண்மைவாதம் மட்டுமே.

தமிழ் திரைப்படங்கள் (இந்தியத் திரைப்படங்களும்) ’ஆண்மைசாகசத்தை தவிர வேறெதையும் பிரகடனம் செய்வதில்லை. மிகவும் அரிதாகவே பெண் விடுதலையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன ஆண்மை, பெண்மை எனும் பாலினவாத சித்தரிப்பு மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சித்தரிப்பும் ஆணாதிக்க மதவாதக் கருத்தாங்களை கொண்டேப் புனையப்படுகின்றன. நாயகனையும், நாயகியையும் சேர்த்து வைத்து கதையை முடிக்கும் இறுதிக் கட்டத்தில் சில நீதிகளைப் பரிந்துரைப்பர் நமது இயக்குனர்கள் . அவ்வகையில் மு..க வில் நல்லவர்களானஆணும், பெண்ணும் சேர்வதற்கு பலியாகும் கெட்ட வில்லன்கள்யார் தெரியுமா, ’நம்பிகள் (gay) எனும்  ஓரினச்சேர்கையாளர்கள். (அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும், தனுஷ் சிறையில் இருக்கும் போது ஒரு கேஅவரை உறவுக்குஅழைப்பார்...அது கொலை அளவுக்கு சென்று விடும்..10 வருட ஜெயில் தண்டனை கிடைக்கிறது.....)

சாருவுக்கு நிச்சயிக்கப்பட்ட  அந்தப் பணக்கார மாப்பிள்ளை ஓரினச்சேர்கை பழக்கம் கொண்டவர். அவரது ஆண்காதலர்கள், தன் காதலன் ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொள்வதை சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு பொறாமை கொண்டவர்கள். நட்பைத் தாண்டி வேறு சில பழக்கங்களைகொண்டிருப்பவர்கள்.  ‘நம்பிகாதலனுக்கு நிச்சயம் செய்யப்படும் பெண்களைத் துரத்தி துரத்தி கொலை செய்துவிடுவார்கள். அப்படித்தான் அவர்கள் சாருவையும் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ஆணாகியஹீரோ அவளைக் காப்பாற்ற பறந்தோடி வருகிறார். அடி உதைகளை வாங்கி பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஓரினச்சேர்கையாளர்கள் கொடூரமானவர்கள், சமூக விரோதிகள், சைக்கோக்கள் எனும் அச்சு வார்ப்பு  ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள், பாலியல் வியாபாரம் செய்யும் பெண் தாதா என்றால் தெலுங்குக்காரி, ஓரினச்சேர்கையாளர்கள் என்றால் கட்டாயப்படுத்தியாவது ஆணை புணர்பவர்கள், போதைப்பழக்கம் உடையவர்கள், காதலனுக்காக பெண்களைக் கொலை செய்யத் தயங்காதவர்கள் எனும் சித்தரிப்புகள் எத்தகைய ஆபத்தான கருத்தாக்கங்களை உருவாக்குகின்றன, அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் கண்டு வருகிறோம்.  23.2.2012 அன்று கேஉரிமைகள் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா ஆஜராகி ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடானது......எனவே இருநபர் சம்மதத்துடனான ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்ற ஐக்கோர்ட்டு தீர்ப்பினை ஏற்க இயலாதுஎன்று வாதிட்டுள்ளார். எதிர்பால் உறவுகளில் எந்த அத்துமீறலும், நோயும் ஒழுக்கக்கேடும் விளைவதில்லையா உலகில் உள்ள எயிட்ஸ் நோய் முழுமையும் ஓரினச் சேர்க்கையாளர்களால் தான் பரவியுள்ளது என்பதற்கு ஆதார பூர்வ தரவுகள் ஏதேனும் உள்ளனவா நோய் வருவதால் அவர்கள் உறவு கொள்ளக் கூடாதென்றால் எதிர்வாதமாக ஒரு கேள்வி எழுகிறது. இன்று பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களால் புற்று நோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் வருகின்றன, அதனால் உண்பதையே நிறுத்திவிடலாமா, தொழில் நிறுவனங்களின் விஷக் கழிவுகளால் காற்று மாசுபட்டு உயிர் கொல்லி நோய்கள் வருகின்றன, சுவாசிப்பதையே நிறுத்திவிடலாமா வேடிக்கையாக இருக்கிறது.

மூன்றாம் பாலினம் பற்றிய எந்த அறிவும் வெகு ஜனத்தளத்தில் இல்லாதபோது அவர்களை சதா 24 மணி நேரங்களிலும் வெறுமனே புணர்ச்சிக்காக மட்டும் அலையும் வெறி பிடித்தவர்களாய்  காட்டப்படுகிறது. இவற்றை பொது மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்ற ஒரு சிறிய கவலையாவது அவர்களிடம் இருக்க வேண்டும். வெறி பிடித்து கொலை செய்யும் அளவுக்கு எத்தனை தொழிலதிபர்கள், அரசு சார் அதிகாரிகள் மற்றும் விதிவிலக்கல்லாத திரைப்பட இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களின் காம வெறியை இன்னும் ஆழமாகச் சொல்லி பொது ஜனத்துக்கு உதவலாமே. மூன்றாம் பாலினத்தவர் கொலை செய்ய மாட்டர்கள் என்று நாம் இங்கு விளக்க வரவில்லை. சம்பந்தப்பட்ட கதையே மூன்றாம் பாலினம் சம்பந்தப்பட்ட கதையாக இருந்து அவர்கள் கொள்ளும் நெருக்கடிகள் அதன் விளைவாக வரும் கொலை மற்றும் தற்கொலைகளை புரிந்து கொள்ளவாவது செய்யலாம். இது ஏதோ கொலைக்காரராக குப்பத்துக்காரர்களை சித்தரிப்பது, தேச விரோதியாக இஸ்லாமியர்களைச் சொல்லுவது என்பது போல் ஆகி இயக்குனர் புது மாதிரியாக இருக்க வேண்டும் என மாற்றுப் பாலியல்காரர்ககளை வைத்திருக்கிறார். இதைத்தான் இதுவரை யாரும் சொல்லாத கதை என இயக்குனர்கள் பொதுவாகச் சொல்லுகிறார்கள் போலும்.

நோய் வராமல் இருக்கும் தடுப்பு முறைகளைப் பரிந்துரைப்பதே முறையான வழிமுறை, அதைவிடுத்து சமூக நலன் எனும் பெயரில் உயிரியல் மாற்றங்களை மறுப்பது இயற்கைக்கெதிரானது, மனித உரிமைகளுக்கெதிரானது, அறிவியலுக்கெதிரானது வெகுஜன ஊடக சித்தரிப்பின் மூலம் தேவையற்ற அச்ச உணர்வு, கருத்தாக்கங்கள் பரவும் அபாயம் உள்ளது. பின்பு அவையே சமூக விதியாக, யதார்த்தம், உண்மை என்று கருத்தப்படும் போக்கும் உள்ளது. ஆகவே பாலினவாத சித்தரிப்புக்களை கூறுணர்வோடு, அறிவியல் பூர்வமாக அணுகுவது அவசியமாகிறது.

இறுதியாக, திரைப்படங்களில் பெண்களைக் காப்பாற்ற பெண்கள் அல்லது மாற்றுப்பாலினத்தவர் ஏன் வருவதில்லை. ஒற்றை ஆள் மட்டுமே இரட்சகராக இருப்பது யதார்த்தத்தில் எந்தளவுக்கு சாத்தியம் திரைப்படம் வெறும் புனைவு தானே, இதுவெல்லாம் வெற்று வாதம் என்று சொல்வோரிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது அத்தகையப் புனைவுகளில் கூட பெண்கள் பறந்து வந்து காப்பாற்றுவது போல் காட்டப்படுவதில்லையே ஏன். ஆணைத்தவிர பெண்களை, சமூகத்தை எவரும் காப்பாற்ற முடியாதா. பெண் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளே இல்லையா எனும் கேள்விகளுக்கு ஆணாதிக்கவாதிகளிடம் நேர்மையான, அறிவியல்பூர்வ பதில்கள் கிடைப்பதில்லை இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட துவக்க காலத்தில் விதியாசமான காதல் கதையெனும் நிலைப்படுத்துதல்’ (Positioning) மேற்கொள்ளப்பட்டது. இப்போது தாய்மைதூக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. மொட்டையடித்து ஒரு தாதாபோல் மாறிய தாயின் உருமாற்றபுகைப்படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகள் காணப்படுகின்றன. வணிக நோக்கங்களுக்காக பெண் எல்லா வகையிலும் பயன்படுகிறாள். சதைப் பிண்டமாக, காமத் தூண்டுதலுக்கான கவர்ச்சிப் படங்களோடு ஒரு இடத்தில், அடி உதை பெறும் - கதாநாயகன் வந்து காப்பாற்றும் பரிதாபத்துகுறிய பிறவியாக, அதுவுமல்லாமல் போனால், ஆணைக் காத்து நிற்க வேண்டிய தாயாக என்று வனிக தேவைக்கேற்ப அவளது இடம்’, ‘பாத்திரம்விளம்பர முன்வைப்புக்கு பயன்படுகிறது.

ஆணின் சாகசங்கள், அவனுக்கான பரிதாபங்கள், இரக்க உணர்வுகள் என  எல்லாம் பெண்ணை நோக்கிச் சொல்வது நீங்கள் எங்கள் அடிமைகள், எங்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள், எங்களை மகிழ்விப்பதும், கவனித்துக்கொள்வதும், வாழ்வைத் தியாகம் செய்வதுமே உங்கள் பணி. அதனால் உங்களுக்கான குணாதியங்களையும் நாங்களே வடிவமைப்போம். எங்கள் காதலை மறுக்கும் அதிகாரம் உங்களுக்குக் கிடையாது. அப்படி மறுத்தாலும் நாங்கள் செயற்கரிய சாகசங்கள் செய்தால் எங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இல்லையென்றால் முகத்தில் அமிலம் வீசுவோம், இவற்றை மறுப்பீர்களானால் நீங்கள் தத்தாரிகள், வேசிகள்...... சுருங்கச் சொல்வதானால்....சமூகத்தை சீர்குலைக்கும் பெண்ணியவாதிகள்.....எங்களை நாங்கள் நல்லவர்களாக, சாகச வீரர்களாக காட்டிக்கொள்ள ஆணல்லாத எந்த பாலின அடையாளத்தையும் எங்களுக்கு எதிரானவர்களாகவே சித்தரிப்போம்..... வாழ்க பாலின சமத்துவம்.

(* மருத்துவர் ஷாலினி சொன்ன குறிப்புகள் - பெண்ணின் மறுபக்கம், விகடன் வெளியீடு).

இக்கட்டுரை 361 டிகிரி மார்ச் மாத இதழில் வெளிவந்துள்ளது.