Oct 25, 2012

சின்மயி விவகாரத்தில் அவர் அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடை வரிகள்:

பாடகி சின்மயியின் சில கருத்துக்கள் அது தொடர்பான எதிர்கருத்துக்கள், அதைத் தொடர்ந்த ஆபாசப் பதிவுகள், ஆணாதிக்கப் பேச்சுக்கள், புகார்கள் கைதுகள் என்று தற்போது அரங்கேறியிருக்கும் ஒரு நிகழ்வில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. ஊடகங்கள் வாயிலாக (புதிய தலைமுறை, NDTV Hindu) நானும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அதில் அவர் அவருக்
கு விருப்பமான, அல்லது சார்பான இடைவரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் ஒரு ஆபத்து இருப்பதை உணர்கிறேன். அதனால் சில விளக்கங்களை கொடுப்பது அவசியமாகிறது. 


இந்த விவகாரத்தில் இரண்டு எதிர்நிலைகளை பெரும்பான்மை மனநிலையாகக் காண முடிகிறது, ஒன்று தமிழ் உணர்வாளர், தலித் ஆதரவாளர் என்பதும் மற்றொன்று அது அல்லாதவர் என்பதும். கண்ணோட்டங்களில் சாதி, வர்க்கம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து இந்த பிரச்சனையை மதிப்பிடுவது அவசர புரிதல்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இட்டுச் செல்வதைக் காண முடிகிறது.

முதலில் ஆணாதிக்கப் பேச்சுக்களை கருத்துச் சுதந்திரம் என்பதில் சேர்த்துக் கொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும். இது பிறப்பிலேயே தோன்றுவதன்று மாறாக சமூகமயமாக்கப்படும் ஒரு நிகழ்விலிருந்து தோன்றுகிறது. அது புரிதல் சார்ந்த பிரச்சனை. இந்த புரிதலில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுதல், புன்படும் வகையான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தல் என்கிற அளவோடு அதை நிறுத்துக் கொள்வதே ஜனநாயகம். கருத்தை கருத்தாக பாவிக்காமல் தனி நபர் அவதூறாக, பாலியல் வசைகளாக, தனிப்பட்ட வாழ்வை எடுத்து பேசுவது, குறிப்பாக பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் ஆணாதிக்க மனோபாவத்தைக் வெளிக்காட்டுவது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

தனிநபர் பொறுப்புணர்வு, அரசியல் நாகரீகம், பேச்சு நாகரீகம், விவாதப் பண்பு ஆகியவை இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்டவர் காவல்துறையை நாடுவதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை. அந்த வகையில் சின்மயி தன்னையும், தன் தாயையும் இழிவு படுத்தியவர்களுக்கெதிராக புகார் கொடுத்தது வரவேற்கத்தக்கதே. எல்லா நேரமும் பெண்கள் இந்த வன்கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு முன் உதாரணம். புகாரைத் தொடர்ந்து வரும் விளக்கங்களில் ஆபாசமாகப் பேசியவர்கள் மட்டுமல்லாது எள்ளல் தொணியில் பேசியவர்கள் மீதும் சின்மயி புகார் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருந்தால் அது முதிர்ச்சியின்மை. தன்னுடைய பிரபல்ய அடையாளத்தை தவறாக பயன் படுத்தும் ஒரு செயல் என்று முடிவுக்கு வரலாம்.

இப்போது ஊடகங்கள் வாயிலாக நான் பகிர்ந்த கருத்துக்கள்:

NDTV Hindu: தொலைபேசி பேட்டி, இதில் சின்மயி விவகாரத்தை நேரடியாகப் பேசாமல், பெண்களுக்கெதிரான இணையதள குற்றங்கள் என்று பேசினார்கள்.

எனக்கு இனைப்பு கிடைத்தபோது எனது காதில் விழுந்தவை: “இந்த காரணங்களால் தான் சொல்கிறேன் இந்த ஊடகத்திலிருந்து பெண்கள் ஒதுங்கியிருத்தல் நல்லது என்று”

நான் சொன்னது (சொல் வாரியாக நினைவில்லை.. சாரம்): எல்லா நேரங்களிலும் எல்லா எச்சரிக்கையும், ஆலோசனைகளும் பெண்களை நோக்கியே வைக்கப்படுகிறது. பெண்ணாய் இருப்பதால் இந்த சமூக வலைதளங்களில் இப்படித்தான் தொல்லைகள் இருக்கும், அதனால் ஒதுங்கியிருங்கள் என்று சொல்வது தவறு. பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொவது வேறு. அது இரு பாலாறுக்கும் பொருந்தும்.

இதைத் தொடர்ந்து அவர் (காவல்துறை அதிகாரி கருணாநிதி என்று நிகழ்ச்சியின் ஊடே சொல்லப்பட்டது) யார் பாதிக்கபப்டுவார்களோ அவர்களுக்குத்தான் ஆலோசனைகள் வழங்கப்படும்.... முள்ளு மேல சேல விழுந்தாலும்....சேல மேல முள்ளு விழுந்தாலும்....பெண்கள் vulnerable அதனால் தான் சொல்கிறோம் என்பதாகப் பேசினார்.

பெண்கள் வல்னரபுல் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, அது சமூகப் பார்வை அதற்கு காரணம் ஆணாதிக்கம்.... பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்றால் அந்த பாதிப்பை ஏற்படுத்துபவர்களை எச்சரிக்க வேண்டும் அதை விடுத்து ஒதுங்கியிருங்கள் என்று சொல்வது சரியல்ல...அது அக்கறையிலிருந்தே வந்தாலும் சரியானதல்ல....இது தீர்வை வழங்காது என்றேன்.

அத்தோடு எள்ளல் என்கிற பெயரில் சிலர் அத்துமீறும்போது அவர்களால் மற்றவருக்கு நேரும் இடைஞ்சல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள தவறுகின்றனர். குறிப்பாக மாற்று அரசியல் பேசுபபவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கிறது, இது போன்ற சிலரது தவறான கையாடலால் தணிக்கைகள், முடக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

இறுதியாக பெண்கள் இப்படி வந்து புகார் அளிக்க வேண்டுமா..என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி:

நிச்சயமாகப் பெண்கள் தங்களுக்கெதிரான அத்தனை பாலியல் ஒடுக்குமுறைகளையும் வெளியில் பேச வேண்டும், அதற்கெதிராக புகார்கள் அளிக்க வேண்டும். அதை அவமானம் என்று கருதி அடங்கிவிடக்கூடாது. குறிப்பாக ஆபாசப் புகைப்பட சேட்டைகளுக்கு இலக்காகும் பெண்கள் அதை பெரும் அவமானமாகக் கருதாமல் அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் வெகு சிலரே அதைச் செய்கின்றனர். மார்ஃபிங் தொழில்நுட்ப அத்துமீறல் என்றிருந்தாலும் கூட நாம் இத்தகைய ஒரு நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்று மனம் புழுங்கி வருந்துவது தேவையில்லை.... இதுபோன்ற அத்துமீறல்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அடுத்து புதிய தலைமுறை பேட்டி... (காணொளி உள்ளது.).

ஒரு பெண் என்பதால் தொடுக்கப்பட்ட பாலியல் அவதூறு, இழிவு படுத்தும் பேச்சுக்கள், தாயை ஆபாசமாக பழிக்கும் சொற்கள் கண்டிக்கத்தக்கவையே. எதிர்தரப்பின் பேச்சுக்கள் ஆபாசமாகக் கருதப்படுவதுபோல், இந்தியாவின் சாதியச் செயல்பாடு குறித்த புரிதலின்றி தான் வளர்ந்திருக்கும் ஆதிக்க சாதி, மேட்டுக்குடி வர்க்கப் பார்வையில் சின்மயி வைத்த கருத்துக்களும் ஆபாசமானவையே. குறிப்பாக “so called oppressors’ என்கிற பதம்.

Oct 24, 2012

பாடகி சின்மயியின் சில கருத்துக்கள்............

பாடகி சின்மயியின் சில கருத்துக்கள் அது தொடர்பான எதிர்கருத்துக்கள், அதைத் தொடர்ந்த ஆபாசப் பதிவுகள், ஆணாதிக்கப் பேச்சுக்கள், புகார்கள் கைதுகள் என்று தற்போது அரங்கேறியிருக்கும் ஒரு நிகழ்வின் மீதான விவாதம்.

Oct 17, 2012

மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,

வணக்கம்.

தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக  நீங்கள் உங்கள் குரலை ஒலித்து வருகிறீர்கள். அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், முதலாளிகள், கிரிமினல்கள், பெண்டாளர்கள், ஊழல்வாதிகள் ஆகியோரின் முகத்திரைகளைக் கிழித்து உண்மையை ‘வெளிச்சம்’ போட்டு காட்டும் உங்களது சேவை அளப்பறியது.  நான்காம் தூணாக உங்கள் எழுதுகோல்கள் செயல்படுவதால் இந்தச் சமூகம் அடைந்திருக்கும் பயனை விவரிப்பதற்கு என்னிடம் எந்தச் சொற்களும் இல்லை.

கூடங்குளம் போராட்டத்தில் ஏவப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை குறித்த உங்கள் இதழின் அட்டைப்படம் நீங்கள் அம்மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது. அதேபோல் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த தண்டனை, ஜெ கொடுக்கும் மிரட்டல், காங்கிரசின் கடைசி அஸ்திரம் என்று அதிகார வர்க்கத்தின் இருண்ட பக்கங்களை புலனாய்ந்து மக்களுக்கு அறிவூட்ட நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி ஈடு இணையற்ற சேவை.  ஆனால் உங்களின் இந்த சேவை முகம் ஏன் பெரும்பாலும் ஆண் முகமாக இருக்கிறது என்பதே எனது கேள்வியாய் இருக்கிறது.

கண்ணீர் மல்க வைக்கும் அட்டைப்படம், அநீதியைக் கண்டு கொதித்தெழும் அட்டைப்படம், நியாயத்திற்காக குரல் கொடுக்கும் அட்டைப்படம் இவைகளுக்கு நடுவே உங்களுக்கு பெண் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் நடுப்பக்கம் ஏன் தேவைப்படுகிறது. அச்சு வார்த்தது போல் எல்லா புலனாய்வு அரசியல் பத்திரிகைகளும் நடுப்பக்கங்களை ஒரே மாதிரி வடிவமைக்கிறீர்கள். ‘போர்னோ’ படங்களைப் போடுவதற்கான தேவை எங்கிருக்கிறதென்று உங்களால் விளக்கமுடியுமா. அதனால் பத்திரிக்கை பிரதிகள் அதிகம் விற்கிறது என்கிற காரணமாக இருக்கிறது என்பதாக இருந்தால், ஆளும் வர்க்கமும் முதலாளி வர்க்கமும் அதே பணத்திற்காகத்தானே மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இதில் நீங்கள் எங்கிருந்து வேறுபடுகிறீர்கள்.

அந்த போர்னோ புகைப்படங்களை அச்சில் கோர்க்கும் எந்த ஒரு பொழுதிலும் உங்கள் குடும்பப் பெண்களின் முகங்கள் உங்கள் கண் முன் வந்தது இல்லையா. ஒரு பொழுது கூட உங்களின் மனசாட்சி உங்களை நோக்கி எந்த குரலையும் எழுப்பியதில்லையா இதை ஆணாதிக்கம் என்று சொல்வதா இல்லை பாலியல் சுரண்டல் என்று சொல்வதா. இல்லை பெண் உடலை முதலீட்டாக்கி பிழைக்கும் வாழ்க்கை என்று சொல்வதா.  இந்த கீழ்த்தரமான உடல் சுரண்டலுக்கு என்ன பேர்வைக்க முடியும்.

உங்கள் வீட்டுப் பெண்கள் நீங்கள் நடத்தும் இதழ்களைப் படிப்பதுண்டா? அவர்கள் அந்த நடுப்பக்கத்தைக் கண்டு என்ன சொல்வார்கள். குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகள் அந்த புகைப்படங்களைப் பற்றி என்ன சொல்வார்கள். இது காலத்தின் தேவை என நீங்கள் கருதும் பட்சத்தில் அவர்களும் அது போன்ற உடைகளை அணிந்து உடலை வெளிக்காட்டும் சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குவீர்களா.

நடிகைகளின் பாலியல் உறவுகள் குறித்த, அயல் உறவுகள் குறித்த  ‘ஒழுக்கவாத’ தீர்ப்புகளை எழுதுகையில் உங்கள் விரல்கள் உங்களை நோக்கி எதையும் சுட்டுவதில்லையா?

தொழிலுக்காக உங்களுக்கு நீங்களே தளர்வு விதிகளை வகுத்துக் கொள்வீர்களானால் ஏன் நடிகைகள், கணவன், மனைவிகள், அல்லது ஆண் பெண் ஆகியோர் தங்களது விருப்பங்களுக்காக பாலியல் சுதந்திரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அடுத்தவர் அந்தரங்கங்களை நோக்கி வெளிச்சம் பாய்ச்ச  படுக்கையறைக்குள் நுழையும் உங்களது அதிநவீன கேமாரக்கள், உங்கள் இல்லத்தை நோக்கி வெளிச்சத்தை உமிழ்ந்தால் கொந்தளிக்கமாட்டீர்களா.

நான் உங்களின் மூலம்  நாட்டு நடப்புக்களை அறிந்து வருகிறேன். அதே சமயம் அதை வெளிப்படுத்தும் உங்கள் நோக்கங்கள் குறித்து எனக்கு உங்களிடமிருந்து சில விளக்கங்கள் வேண்டும். உங்கள் பத்திரிக்கையின் வாசகியாகவே இதை முன் வைக்கிறேன்.

1. உங்களின் சமூக அக்கறை எவருக்கானது, அந்த சமூகத்தில் பெண்களுக்கு இடம் உண்டா.

2.  தாய்க்குலம், மங்கலப் பெண், இல்லத்தரசி, புனிதவதி என்றெல்லாம் பெண்களுக்கான மதிப்பீடுகளை முன்வைத்து தீர்ப்பெழுதும் நீங்கள் எந்த மனநிலையின் அடிப்படையிலிருந்து நடுப்பக்கங்களை திட்டமிடுகிறீர்கள்.

3.  தமிழினம், தமிழர், தன்மானத் தமிழர், வீரத் தமிழர் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க எழுதும் நீங்கள் அதே தமிழினச் சகோதரர்களின் கண்களுக்கு, நுகர்வுக்கு என்ன காரணங்களுக்காக நடிகைகளின் ஆபாசமானப் புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்.

4.  உங்கள் எழுத்தின் மீது, உங்கள் இதழின் மீது நம்பிக்கை இல்லாத காரணங்களால்தான் இந்த அற்ப பிழைப்புவாதம் என்று நான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமா.

5.  உங்களின் அலுவலகங்களில் பெண் பணியாளர்கள் உள்ளனரா.  அவர்களின் உடலை நீங்கள் எவ்வாறு காண்பீர்கள்.

6.  நடிகைகளின் உடல் வெளிக்காட்டும் புகைப்படங்களைப் போடுவதின் மூலம் நீங்கள் அடைய விரும்பும் சமூக மாற்றம் என்ன?


 கடவுளின் பெயரால், ஆன்மீகம் வளர்க்க, பக்தி ஒழுக உங்களது மற்ற இதழ்களில் எழுதுகிறீர்கள் அதே கையோடு நீங்கள் பெண் உடல்களை ஆபாசமாக அச்சுகோர்த்து, கிசு கிசுக்களையும் எழுதுகிறீர்கள். உங்களின் பன்முகத் தன்மை எனக்கு வியப்பளிப்பதோடு வருத்தத்தையும் அளிக்கிறது. கடவுள் மறுப்பாளர்கள், இடதுசாரிகள் தங்களின் கைக்காசுகளைப் போட்டு ‘அரசியல்’ இதழ்களை வெளியிடுகிறார்கள். கைக்காசுகளை இழக்கும் நிலையில் கூட அவர்கள் ஒரு பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிடுவதில்லை, இது ஏன்.

உங்கள் இதழ்கள் அரசியல் வார இதழ் என்று சொல்லப்படுகிறது. அரசியல் வார இதழில் ஆபாசப் பெண் புகைப்படத்தின் அவசியம் என்ன இருக்கப்போகிறது.  அப்படி வெளியிடுவதுதான் இந்த சமூகம் பற்றிய உங்களது மதிப்பீடா என்ன.

அரசியல் என்றால் அது ஆணின் களம் என்று தானே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள், ஆகவே உங்கள் இதழ்களுக்கான இலக்கு ஆண்கள். பெண்கள் உங்கள் இதழ்களைப் படிப்பதில்லை என்பதில் தான் எத்தனை உறுதியாக இருக்கிறீர்கள். ஆண் வாசிப்பாளர்களுக்கு அரசியல் ஆர்வம் ஊட்ட நீங்கள் இப்புகைப்படங்கள் மூலமாக  ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்.  . 

குற்றம் செய்பவரைக் காட்டிலும் குற்றம் செய்யத் தூண்டுகோலாய் இருந்தவர்களே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல நீங்கள். 

1.   நடிகைகளின் உடலை வெளிக்காட்டும் புகைப்படங்களைப் போடுவதின் மூலம் ஆண்களின் மனதில் தூண்டப் பெறும் பாலியல் உணர்ச்சியில் உங்களுக்கு பங்கிருக்கிறதா?
2.   பெண் உடல் மீது நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு உங்களையும் நாங்கள் பொறுப்பாளர் ஆக்கலாமா?
3.   பெண் உடலை வெறும் பாலியல் பண்டமாகவே காணும் ஆண் மனதின் புரிதலுக்கு உங்களைப் போன்றோரே விதை விதைக்கின்றனர் என்று சொல்லலாமா?
4.   நடிகைகளைத் தரக்குறைவானவர்களாக இந்த சமூகம் கருதுவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் அப்படி கீழ்த்தரமாக எழுதிவிட்டு நீங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வந்து ‘குத்து விளக்கு’ ஏற்ற வேண்டும் என்ற அவாவோடு காத்திருக்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள். 
5.   வன்புணர்வு குற்றங்களில் உங்களது இதழ்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்லலமா.

சுதந்திரம் என்றால் பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதுதானா. இறுதியாக நீங்கள் நடத்துவது அரசியல் வார இதழ் என்று சொல்லிக் கொள்வதை நான் எப்படி உணரவேண்டும். அதை எப்படி புரிந்து கொள்வது. என்னால் உங்களின் வல்லமையை அறிந்துகொள்ளமுடியும். நீங்கள் நினைத்தால் போர்னோ படங்களின் பின்னால் ஒரு இனத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் அவமானத்தை அதன் பின்புலத்தை ஒரு நொடியில் விளக்கிவிடமுடியும். யோசித்துப் பாருங்கள் அது நிகழ்ந்தால் நீங்கள் மக்களின் மனச்சாட்சியல்லவா. என்னைப் பொருத்தவரையில் பாமர மக்கள் கடவுளும் மருத்துவருக்கும் கொடுக்கும் இடத்தை விட ஓரளவு படித்தவளாக உங்களுக்கே அவ்விடத்தை வழங்குவேன். அரசுக்கு, நீதித்துறைக்கு பயப்படாது இறுக மூடியிருக்கும் அரசின் கதவுகள் பத்திரிக்கையாளர்கள் என்றால் இன்றும் சற்று பதட்டத்தோடு திறந்து கொள்வது ஏன். ஒரு கேமரா…ஒற்றை வெளிச்சம், ஒரு எழுதுகோலாவது உண்மையைச் சொன்னால் அரசு கவிழும் என்கிற பயம்தானே. கறுப்பாடுகள் மத்தியில் சில வெள்ளாடுகளும் இருந்துவிடக்கூடும் என்கிற அச்சம்தானே. ஏன் நீங்கள் முழுமுற்றான வெண்மைக்கு மாறக்கூடாது.

நண்பர்களே…உங்களது கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் அக்கருத்தைச் சொல்லும் உங்களது உரிமைக்காக எனது உயிரையும் கொடுப்பேன் எனச் சொன்னா வால்டேரின் வாசகங்களை நீங்கள் தேர்வு செய்திருந்தால் மக்களுக்குப் போராட வேண்டிய அவசியமே இருக்காதென்று நினைக்கிறேன். வாள் முனையை விட எழுதுகோலின் முனை கூர்மையானதல்லவா. கூடங்குளம், முதற்கொண்டு எந்த பாதிப்பும் உள்ளே நுழையாதாவாறு தடுக்கும் வல்லமை உங்களது எழுதுகோலுக்கு உண்டு. ஆண்டு தோறும் நீங்கள் வழங்கும் காலண்டர்கள் நாட்காட்டிகளுக்குப் பதில் மக்களே உங்கள் பத்திரிக்கைகளை அல்லவா இல்லங்களில் தொங்க விடுவார்கள். இதுதானே மக்களின் பத்திரிக்கை என்பதற்கு மகத்தான சாட்சியாக இருக்கமுடியும்.

இறுதியாக, பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதை தடை செய்யும் சட்டத்தின் இணைப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். http://wcd.nic.in/irwp.htm ஒரு பத்திரிகை ஆசிரியராக சட்டத்தின் வலிமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

வணக்கம்.

மிக்க மரியாதையுடன்
தோழர் கொற்றவை.

வேறு வழியின்றி உங்கள் இதழ்களின் ஆபாசப் புகைப்படங்களை இங்கு இணைக்கிறேன், அட்டைப்படத்திற்கும், நடுப்பக்கத்திற்கும் உள்ள முரண்களை அது உங்களுக்கு எடுத்துரைக்கும்.

      


 

Oct 10, 2012

பெண்ணியம் என்றால் என்ன – வின் டி.வி


சுட்டும் விழிச் சுடர் நிகழ்ச்சியில் தோழர் அரங்க மல்லிகாவுடன் பெண்ணியம் குறித்த கலந்துரையாடல். A debate on what is Feminism

Oct 8, 2012

கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12 ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி பொதுவுடைமைச் சிந்தனையுடைய ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு உதிர்த்திருக்கும் இப்பொறுப்பற்ற சொற்கள் மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் போராட்டம் குறித்தும், கூடங்குளம் அணு உலை குறித்த அவரது கருத்தும், போராட்டத்தலைவர் குறித்த அவரது ஏளனமான வார்த்தைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

”கூடங்குளமோ…குருவிக் குளமோ…அணு மின் நிலையங்கள் வேண்டும். இப்போது போராடும் பாதிரியார்கள் ஜப்பானில் குண்டு போடும்போது என்ன செய்தார்கள்?” என்று கேட்கிறார். மற்றொரு பதிலில் ”……. பாதிரியார்களுக்கு மின்சாரத்தைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு மின்சாரம்தான் முக்கியம்!” என்கிறார். மக்களை குழி தோண்டி புதைத்து விட்டு யாருக்காக அந்த மின்சாரம் என்று தா.பாண்டியன் அவர்கள் விளக்க வேண்டும்.

ஏறத்தாழ 40 வருட கடும் உழைப்பைச் செலுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளைக் கூட வறுமைக்கு இரையாக்கி, மக்களின் பொது எதிரி யார், அவர்கள் எவ்வகையில் மக்களைச் சுரண்டுவார்கள் என்பதை விஞ்ஞானபூர்வமாக விளக்கிய பேராசான் காரல் மார்க்சைப் படித்த ஒருவர் அணு சக்தியில் மின்சாரம் தயாரிப்பதை ஆதரித்து பேசுவதும், மக்களது போராட்டங்களைக் கொச்சை படுத்திப் பேசுவதும் வியப்பளிக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அதை விடக் கொடுமை “போராடினால் எல்லாம் கிடைத்துவிடுமா” என்று கேட்டிருக்கிறார். “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்று காரல் மார்க்ஸ் எதற்கு சொன்னார், கூடிக் கும்மாளம் போடவா. ஒன்று கூடி உங்கள் உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்பதற்காகத் தானே. கூடங்குள இயக்கத்தை கும்பமேளாவோடு தொடர்பு படுத்தி அங்கும் மக்கள் கூடுகிறார்கள் என்ற பதிலின் மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு கும்பமேளாதான் என்கிற அவரது கருத்தை நமக்கு உணர்த்துகிறது.

மக்கள் போராட்டம் குறித்து, கூடங்குளம் போராட்டக்காரர்கள் குறித்து தா. பாண்டியன் பகிர்ந்துள்ள கருத்துக்களை, அதில் வெளிப்படும் மத வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு அவரது மக்கள் விரோதப் போக்கை கண்டிப்பதோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசெஸ் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
கொற்றவை
மாசெஸ் அமைப்பு.
சென்னை.

நகல் 1 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மாநிலத் தலைமை அலுவலகம்
நகல் 2 இந்தியக் கம்யூனிஸ் கட்சி – மாநில நிர்வாகக் குழு.
நகல் 3 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மைய்ய நிர்வாக் குழு.

மேற்சொன்ன அறிக்கையில் கையெழுத்திட விரும்புவோர் உங்களின் பெயர்களை இங்கு பதிவு செய்யவும். இவ்வறிக்கை நாளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.

புகைப்படக் குறிப்பு: சென்னை, சி.பி.ஐ அலுவலகம் முன்பு தோழர்கள் சிலர் தா.பாண்டியன் அவர்களின் பேச்சுக்களைக் கண்டித்து கூடி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

Oct 1, 2012

பெண்ணியம் என்பது சிறப்பதற்கோ, பறப்பதற்கோ அல்ல...

எதிர்வினை.


29-9.2012 அன்று தினமணியில் பெண்ணியம் சிறக்க எனும் தலைப்பில் க.சி. அகமுடைநம்பி என்பவர் எழுதிய ஒரு பத்தி வெளிவந்துள்ளது. http://dinamani.com/editorial_articles/article1278627.ece (அல்லது காண்க பின்னிணைப்பு).

பெண்ணியச் சிந்தனைக்கு எதிர்வினை எழுதும் அகமுடைநம்பி தன் பெயரோடு வள்ளுவரையும், பாரதியாரையும் இணைத்துக்கொள்ளும் ஒரு வார்ப்புருவை (template) கைவிடுவதாக இல்லை. திருவள்ளுவரும் பாரதியும் சொல்லா விட்டால் கூட பெண் விடுதலையை முன்வைப்பதாய் இருந்தால் அகமுடைநம்பியின் பரிந்துரைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு சிபாரிசுகள் தேவை இல்லை.  பெண்ணிய எதிர்ப்பு என்பதில் வழக்கமாக நம்பி அவர்கள் எடுத்தாளும் ஒரே விசயம் கற்பு நெறி. அது குறித்த ஆதாரமாக திருவள்ளுவர், பாரதியின் விளக்கம். அதன் மூலம் அவர் எடுத்துரைப்பது இருபாலாருக்கும் அவர்கள் கற்பு பேசினார்கள், ஆனால் அவர்களை இந்தப் பெண்ணியவாதிகள் மறுத்தலிக்கின்றனர். பெண்ணியவாதிகள் ஒழுக்கச் சிதைவை ஊக்குவிக்கிறார்கள். இதேயளவிலான ஆணாதிக்கப் பதிவுகளையே எப்போதும் முன்வைக்கிறார். இவருக்கு எதிர்வினையாற்றுவது சற்று அலுப்பூட்டுவதாய் இருந்தாலும், தினமணி எனும் ஒரு வெகுஜன ஊடகத்தில் அவர் இத்தகையப் பதிவை சற்றும் கூச்சமில்லாது வைத்திருப்பதால் எதிர்வினை அவசியமாகிறது. 

திருவள்ளுவரையும், பாரதியையும் தவிர்த்து நம்பி அவர்கள் வேறெவரையும் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். (இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டினால் கற்புள்ள மனைவி பெய் என்றால் பெய்யும் மழை என்று வள்ளுவர் கூறியுள்ளார், இப்போது மழை பொழிவது குறைந்திருப்பதற்கு காரணம் மனைவிகள் யாரும் கற்பு ஒழுக்கத்தை கடைபிப்பதில்லை என்றும் எழுதுவார்). ஔவையாரும் இருபாலாருக்கும் கற்பு பேசியிருக்கிறார். முற்போக்கு கொள்கைகளை பிரச்சாரம் செய்த பெரியாரும் கூட அதையேத்தான் சொல்கிறார். அம்பேத்கரும், ’குடும்ப வாழ்வு என்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக பெண்கள் தமது உடலால் சுரண்டப்படுதலிருந்து தம்மை விடுவிப்பதே சரி என்றும், பாலியல் ரீதியாக ஆண்கள் தம்மைப் பயன்படுத்த அனுமதிப்பது பெண் சுதந்திரத்தின் பாற்பட்டது அன்று. மாறாக, அது ஒரு வகையான ஏமாறுதல் மட்டுமல்ல, தனி மனித ஒழுக்கத்திற்கும், சமூக நலனுக்கும் எதிரானதாகும்; என்று கூறியிருக்கிறார்.  இன்றைக்கு இருக்கும் ஒவ்வொரு பெண்களும் (மனைவிகள், குடும்பப் பெண்கள், பருவம் எய்திய உடன் சிறுமிகள்)  இதையேதான் பேசுகிறார்கள். இதில் அவர்கள் இருவரின் வரிகளுக்கு மட்டும் அத்தனை விசேசம் என்ன இருக்கிறது.

பெண்ணியம் என்றாலே கற்பு நெறி தவறுவதுதான், அது உடலின்ப சுதந்திரத்தை மட்டுமே பேசுகிறது என்று கூறுவதை அறியாமை என்று சொல்வதா இல்லை ஆணாதிக்கத் தடித்தனமென்று சொல்வதாப் புரியவில்லை.  ஒரு வாதத்திற்கு பெண்ணியவாதிகள் பெண்கள் கற்பொழுக்கம் பற்றியக் கேள்விகளை எழுப்புவதால் ஒழுக்கச் சிதைவு ஏற்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். எவரின் பேச்சுக்களாலும் பாடங்களாலும் ஆண்கள் இரண்டு வயது சிறுமி என்று கூட பாராமல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அதோடு கொலையும் செய்கிறார்கள். எவரின் பாடங்களால் மனைவிமார்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்.

காதல் என்ற சொல்லைப் பயன்படுத்தி, பெண்ணை உடமையாக்க முனைவது, அதற்கு இணங்க மறுக்கும் பெண்களின் முகத்தில் திராவகம் வீசுவது, திருமணத்தின் பெயரால் தன் வீட்டுக்கு ஒரு நிரந்தர தொழிலாளியைக் கொண்டுவரும் நிலையில் கூட வரதட்சனை கேட்டு, அதை கொடுக்க முடியாமல் போகும் நிலையில் மண்ணெண்னை ஊற்றி எரிப்பது, கொலை செய்வது போன்ற செயல்களை எவரின் எழுத்துக்களைப் படித்துப் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் என் அமைப்பின் கவனத்திற்கு வந்த செய்தி: தூத்துக்குடியில் இரு நபர்கள் - தாய், மகள் இருவரையும் நிர்வாணப்படுத்தி மிளகாய்த்தூள், சுண்ணாம்பு, கல் இவற்றால் செய்த கலவைகளை அவர்களது பிறப்புறுப்பில் திணித்து, அடித்து துன்புறுத்தியோடு சம்பந்தப்பட்டப் பெண்ணின் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு தப்பியும் ஓடிவிட்டனர். சம்பந்தப்பட்ட அந்த நபர்கள் வேறு யாரும் இல்லை அந்த தாயின் சொந்த தம்பிகள். தம்பிகளில் ஒருவன் அந்த தாயின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார் (அக்காள் மகள்). அவளின் அழகு இவருக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே அவளுக்கு பல்வேறு கொடுமைகளை செய்ததோடு நில்லாமல், உச்சபட்சமாக தன் அண்ணனின் பேச்சைக் கேட்டு மேற்சொன்ன கொடுமையை செய்திருக்கிறார். அதோடு, தனது அக்காளையும் வரச்சொல்லி அவருக்கும் இதேக் கொடுமையை செய்திருக்கிறார். இப்போது அந்தப் பெண் மிக மோசமான காயங்களோடு தூத்துக்குடி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலத்த காயங்கள் என்பதால் அருகில் இருந்து உதவி செய்ய எவருமற்ற நிலையில், அவரது தாயார் (அவரும் பாதிக்கப்பட்டவர்) தனது பாதிப்புக்கு வெளி நோயாளியாக மருத்துவம் செய்து கொண்டு, தனது மகளை கவனித்து வருகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையை செய்த அந்த சகோதரர்களைக் காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை. பிள்ளைகளையும் மீட்டுத் தரவில்லை. இந்தக் கொடுமைகளுக்கும் பெண்ணியவாதிகளின் எழுத்தும், பேச்சும் தான் காரணமா. இது போன்ற போராட்டங்களை எடுத்து நடத்தும் பெண்கள் பெண்ணியவாதிகள் இல்லையா.

பெண்ணானவள் பொதுவெளியிலும், குடும்பத்தாராலும் சிதைவுக்குள்ளாகும் இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக  அகமுடை நம்பி எத்தனை பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் நான் கண்டவரை சம்பந்தப்பட்ட பெண்கள் பிரச்சினையில் பாலியல் என்று வந்துவிட்டால் அவருக்கு வள்ளுவர், மற்றும் பாரதியார் சொன்ன இருபாலார் கற்பு, குடும்ப அமைப்பு இவைகள் ஞாபகத்தில் வந்துவிடுகிறது. குடும்ப அமைப்பில் உள்ள குறைபாடுகள், அதில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளுவதோடு, அதைக் களைவதற்கான கோட்பாடுகள் பற்றி எந்தப் புரிதலும் இன்றி பெண்ணியம் என்ற சொல்லைப் படித்தவுடனேயே அல்லது பெண்கள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள் என்ற செய்தியைப் படித்தவுடனேயே அகமுடைநம்பியின் எதிர்வினை வந்துவிடும்.

பெண்ணியம் பேசுபவர்கள் எந்நேரமும் உடலின்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில்லை. கற்பு என்ற கோட்பாட்டின் கருத்தாக்கத்தை, அதன் ஆணாதிக்கச் சார்பை, கற்பின் பெயரால் எதற்காக பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், அதன் பின்னால் இருக்கும் சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகள் என்ன என்பதை, ஒரு கோட்பாட்டுப் பின்னணியுடன் திறனாய்வு செய்து பேசுகிறார்கள். வள்ளுவரையும், பாரதியையும் மட்டுமே படித்து விட்டுப் பேசுவதில்லை. மேலும் கற்பு என்பதன் பொருளை நம்பி அவர்களுக்கு ஒவ்வொருமுறையும் தெளிவுபடுத்த  வேண்டியுள்ளது. கற்பு என்றால் கல் அல்லது கற்ப்பது என்று பொருள். கற்பை நிராகரிப்பதென்பது இதுவரை கற்றவற்றை தவறென்றால் நிராகரிப்பது, அதாவது கற்றவை அனைத்தும் ஒரு சாராரின் நலனை மட்டுமே பேசுகிறது என்பதை அறிந்தவுடன் அதை நிராகரிப்பது என்று பொருள்.

அடுத்து, அவர் உஷா ராணி எனும் பெண் தற்காப்பிற்காக தாக்கியதில் இறப்பு நேரிட்ட ஒரு சம்பவம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இத்தகையக் கேள்விகளை எழுப்புவது சட்டப்படி தவறு.

கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறதா என்று கேட்கிறார். இக்கேள்வி இவரது ஆணாதிக்க மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வன்புணர்ச்சி செய்யும் நபர்கள் தங்கள் செயலுக்கு பார்வையாளர்களை ஒருங்கிணைத்துக் கொண்டா செய்வார்கள். அப்படி நடந்தால் அது கூட்டு வன்கலவி. என்ன ஒரு வக்கிரத்தனமானக் கேள்வி இது? இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் பெண்ணின் தந்தை. குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைகளுக்கு சாட்சிகளை வைத்துக் கொள்வது எப்படி என்று அவரே விளக்கலாம், குறிப்பாக ஆண் உறவினர்கள் செய்யும் பாலியல் அத்துமீறல்களை எந்த சாட்சியை வைத்துக் கொண்டு விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தலாம்.  ( இங்கு இரண்டு வயது சிறுமிக்கு பாலுறுப்புகள் பற்றிய புரிதலே இருக்காதே...அக்குழந்தை வன்புணர்ச்சிக்கு ஆளானால் விசாரணைக்குச் சாட்சியாக எவற்றை முன்வைப்பது. )

காவல்துறை கண்காணிப்பாளர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார், மகளின் சாட்சியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவரது கேள்வியும் அதோடு அதற்கான தீர்ப்புமாய் நீள்கிறது. இதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம், சட்டப்படி இவர் இப்படி கருத்து தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் சொல்லலாம். இருந்தாலும் அவரது தெளிவிற்காக, இவ்வழக்கு தொடர்பாக ஜோதிபாசுவின் தந்தை சமயமுத்து, முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் சகாயத்திடம் அளித்த மனுவைத் தொடர்ந்து திரு. சகாயம் அவர்களின் அறிக்கை பற்றிய நீதிமன்றக் கருத்தை நாளிதழில் தேடிப்படித்தால் நம்பி அவர்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும். அதில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரனை பற்றி விவரித்துள்ளனர்.

பெண்ணியவாதிகள் பெண்மை போற்றி நடப்பதே சமுதாயம் சிறக்க வழி, பெண்ணியம் சிறக்க வழி என்று வள்ளுவரோடு பாரதியோடு தனது பெயரையும் சேர்த்து அவரது பதிவை நீதியுரையோடு முடித்திருக்கிறார்.

பெண்மை என்றால் என்ன?

அது எந்த உயிரியல், வேதியலின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது? எந்தத் தரவுகளை வைத்து இவர் பெண்மை என்ற ஒன்றை மதிப்பிடுகிறார்? ஆண், பெண் என்பது பாலியல் அடையாளம் (sex). ஆண்மை, பெண்மை என்பது பாலினம் (gender).  பால் அடையாளத்திற்கும், பாலினத் தன்மைக்கும் உயிரியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒரு கருத்தாக்கம். எண்ணற்ற சமூகக் காரணங்களால் ஆண் தலைமையிலான தந்தைவழிக்  சமூக (patriarchal society) அமைப்பு உருவானது. அது  ஆண், பெண் இருவருக்குமான வேலைப் பிரிவினைகளைக் கொண்டு வந்தது. இங்கு தனிச்சொத்துடைமையை தற்காத்துக் கொள்ள ஒரு தாரமணம் தோன்றியது. இந்த ஒருதாரமணத்தை நிறுவ பெண்களுக்கு கற்பொழுக்கம் என்கிற கருத்தாக்கம் முளைத்தது. அதே சொத்துடைமைக் காரணிகளுக்காகவே ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு சதி என்னும் சடங்கையும்,  விதவைத் திருமண எதிர்ப்பையும் கொண்டுவந்தது.

இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஆண், பெண் சமத்துவத்திற்காக களத்திலும் எழுத்திலும் போராடுபவர்கள் பெண்ணியவாதிகள். உடலின்ப சுதந்திரத்தைப் பேசுவது மட்டுமே பெண்ணியம் அல்ல. அது, பொருளாதார தளத்தில் இன்று புதிதாக முன்னேறி வரும் ஒரு கூட்டத்தினரின் பரப்புரையே அன்றி, அதற்கும் பெண்ணியத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எல்லாத் தளங்களிலும் இருப்பது போல் பெண்ணிய தளத்திலும் இது போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் ஊடுருவியுள்ளது. அதற்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவிப்பவர்கள் பெண்களே. இவை எதையுமே ஆராயாமல், எப்பொழுது பார்த்தாலும் பெண்ணியவாதிகளால் சமூகம் சீர்கெடுகிறது என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே அதுவும் கற்பின் பெயரால் முன்வைக்கும் அறிவுடை நம்பிக்கு எனது கேள்விகள் சில..

வண்புணர்ச்சிகளை செய்வது ஆண்களா பெண்களா....
குடும்ப வன்முறைக்கு உள்ளாவது ஆண்களா பெண்களா.....
போபர்ஸ் ஊழல் தொடங்கி இன்றைய நிலக்கரி ஊழல் வரை செய்வது யார் பெண்ணியவாதிகளா.......
கனிம வளங்களுக்காக பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கும் செயல்கள், அந்நிய முதலீட்டிற்காக சொந்த மண்ணை தாரைவார்க்கும் கொடுமைகளை எல்லாம் செய்வது யார்... பெண்ணியவாதிகளா?  

பெண்ணியம் பேசுவது சிறக்கவோ, பறக்கவோ அல்ல...... எல்லோரையும் மனிதர்களாய் உணர்த்த, சமத்துவத்தோடு வாழ.

-      கொற்றவை

பெண்ணியம் சிறக்க...
By க.சி. அகமுடைநம்பி
First Published : 29 September 2012 05:34 AM IST

பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்று வியந்து பாராட்டுகிறார் வள்ளுவர். இந்தப் பெருந்தன்மை ஒரு பெண்ணுக்கு எப்போது கைவரும்? கற்பு என்னும் உறுதிநிலை அவளுக்கு அமையப்பெற்றால் என்கிறார் அவர். இதனாலேயே வள்ளுவரைப் பெண்களின் எதிரியாகப் பெண்ணியவாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பெண்ணுக்கு வற்புறுத்தப்படுகின்ற இந்தக் கற்பை ஆண்களுக்கும் வலியுறுத்துகிறது குறள். தன் கணவனுடன் மனம் ஒன்றி வாழுகின்ற ஒருமை மகளிர்போலத் தன் வாழ்க்கைத் துணைவியுடன் கூடிய இல்லற நெறியில் பிறழாது தன்னை இருத்திக்கொள்கின்ற ஆண் மகனுக்குப் பெருமையும் உளதாகும் என்று குறள் (974) பேசுகிறது.
பெண்ணின் கற்பு அகநிலை என்றால் ஆண் கற்பு புறநிலை என்று சொல்லலாம். பெண் கற்பு குடும்பத்துக்குப் பெருமையையும் இல்வாழ்க்கைக்கு ஏற்றத்தையும் அளிக்கும் என்றால் ஆண் கற்பு குடிமைக்குப் பெருமையையும் அவனுக்குத்தன்மான உணர்வையும் பிறர் பின்பற்றத்தக்க சால்பையும் பெற்றுத்தருவதாகும்.

கற்பொழுக்கத்துடன் வாழவேண்டும் என்று பெண்களை அறிவுறுத்துவது பெண் உரிமைக்கு மாறானது, பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஆண்களால் திணிக்கப்பட்டது என்று பெண்ணிய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். பெண்களிடையே இவர்கள் ஒழுக்கச் சிதைவை ஊக்குவிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

""கற்புநிலை என்று சொல்லவந்தார் - இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்'' என்று முழங்கிய பாரதிகூட குடும்ப வாழ்க்கையையும் ஆண் பெண் கற்பு நிலையையும் பெரிதும் போற்றியே பேசினார், எழுதினார்.

மேலை நாடுகளில் நிலவுகின்ற கட்டுப்பாடற்ற பாலியல் உறவைப் பாரதி கடுமையாகக் கண்டித்தார் என்பதைப் பெண்ணியவாதிகள் கண்டுகொள்வதில்லை.

கிரிக்கெட் மட்டையால் அடித்துத் தன்னுடைய கணவர் ஜோதிபாசுவைத் தானே கொன்றதாகவும் தன் மகளைக் கணவர் பாலியல் இச்சையுடன் அணுகியதால் அவரைக் கொல்ல நேர்ந்ததாகவும் மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் உஷாராணி என்பவர் தெரிவித்தார். அதை அப்படியே ஏற்ற கண்காணிப்பாளர் அந்தப் பெண்ணை கொலைக்குற்றத்துக்கு உள்படுத்தாமல் விடுதலை கொடுத்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

ஜோதிபாசுவின் தந்தை இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்ததுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதை ஆய்வு செய்த ஆட்சியர் மாநில அரசுக்கு அறிக்கை அளித்தார். உஷாராணியை விடுதலை செய்யும் அதிகாரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு இல்லை. அவர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஜோதிபாசுவின் மரணம் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதால் மட்டும் நிகழ்ந்திராது. உஷாராணி அவரது உயிர் உறுப்பை அழுத்திக் கொன்றிருக்கிறார். இது ஒரு தற்காப்பு வினையாகத் தெரியவில்லை என்பதே மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் சுருக்கம்.
ஜோதிபாசு தவறு செய்ய முனைந்ததையோ அதைத் தடுப்பதற்காக உஷாராணி கிரிக்கெட் மட்டையைக் கொண்டு தாக்கியதையோ நேரில் பார்த்த சாட்சி உண்டா?
மகள்தான் சாட்சி என்றால் அதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளாமல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாமா?

காவல்துறைக் கண்காணிப்பாளர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செயல்பட்டால் அதைத் தெரிந்துகொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் எதுவும் செய்யாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது, கூடாது.

பெண்களின் மேம்பாடுதான் தம் குறிக்கோள் என்றால் பெண்ணியவாதிகள் பெண்மை போற்றிச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் பெண்ணியம் சிறக்கும்; சமுதாயம் மேம்படும்.

(எனது எதிர்வினையை தினமணி ஆசிரியருக்கும் அனுப்பி வைத்தேன் ஆனால்........தெரியவில்லை............)