ரங்கநாயகம்மா சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை; மார்க்சியத்தை
போதுமான அளவில் விளக்கவில்லை; அது மார்க்சியமே இல்லை என்றெல்லாம் கொச்சைப் பொருள்முதல்வாதியான
ஈஸ்வரன் விளக்குவதில் உள்ள அபத்தத்தை நாம் இப்போது பார்ப்போம்:
இவரைப் பொறுத்தவரை, சாதி உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் சாதியப்
பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் வகையில் எழுதுவதாகும். இந்த சமூக அமைப்பு எத்தகையது,
உழைப்புச் சுரண்டல் என்றால் என்ன? உழைப்புச் சுரண்டலை புரிந்து கொள்ளவேண்டும், உழைப்புச்
சுரண்டலை எதிர்க்க வேண்டும், தனி உடமையின் அடிபடையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையை
மாற்றி அமைக்க வேண்டும், அதன் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க வேண்டும்
என்று பாட்டாளி வர்க்க உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்குவது மார்க்சியமில்லை. மேலும்,
இதையெல்லாம் அடையும் விதமாக வர்க்கப் போராட்டம் தொடுப்பது, வர்க்கப் போராட்டப் பாதையில்
மற்றப் போராட்டங்களை நடத்துவது, இதற்கான செயல் திட்டத்தோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுவது,
அமைப்பு கட்டுவது அவசியம் என்று ரங்கநாயகம்மா விளக்குவதெல்லாம் சாதியப் பிரச்சினைக்குத்
தீர்வல்ல.
உள்முரண்பாடுகளின் காரணமாக வர்க்கப் போராட்டம் வெடிக்கும், அப்போது
சாதி உலர்ந்து உதிர்ந்து விடும் என்று மார்க்சின் முடிவுரையை அப்படியே சாதி என்ற சொல்லை
மட்டும் வைத்து எழுதுவதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு.
அந்த இயக்கப் போக்கை விரிவாக விளக்காததாலும், நடைமுறையோடு அதனை ஒப்பிட்டு
விளக்காததாலும் ஈஸ்வரன் நமக்கு ஒரு பொருளாதார நிர்ணயவாதியாக மட்டுமே கடைசியில் எஞ்சுகிறார்.
அந்த நிர்ணயவாதத்தில் எந்த வகையிலும் நாம் பாடாளி வர்க்க உணர்வைக் காணமுடியாது. அது
குட்டி பூர்ஷுவா அறிவுஜீவித்தனமாக மட்டுமே எஞ்சுகிறது. ஒருவகையில் நிலவுடைமை ஆதிக்க
மனநிலையை கொண்டதாகவும் இருக்கிறது. தத்துவத்தின் full stop, comaவை மட்டும் சரி பார்க்கும்
ஒரு ஆசிரியர் தன்மை விமர்சனங்களும், கொட்டேஷன் தொகுப்பு நூல்க்ளும் எந்த வகையிலும்
பாட்டாளிவர்க்கத்தையோ-தலித் மக்களையோ (வர்க்க) அரசியல் மயப்படுத்த உதவாது. மேலும்,
பாட்டாகளிடையே, தலித்திகளிடையே அறச்சீற்றத்தையோ, போராட்டக் குணத்தையோ ஏற்படுத்தவும்
உதவாது. அதனினும் பிரச்சினையாக மார்க்சியம் குறித்த ஒரு தப்பெண்ணத்தையும், நம்பிக்கையின்மையையுமே
ஏற்படுத்த அது உதவும். அ.கா.ஈஸ்வரனின் நூலைப் படித்ததைக் கொண்டு நடைமுறையில் மார்க்சியத்தை
எப்படி பொருத்திப் பார்த்து விளக்குவது என்பதற்கு எனக்கு எந்த வகையிலும் உதவியதில்லை.
தம் சொந்த விளக்க முறையில் எழுதப்பட்ட அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட மார்க்சிய நூல்களில்
எனக்கு அந்த சிரமம் இருக்கவில்லை.
இவ்வாறாக வெறுமென்று மேற்கோள்களை வைத்து மட்டுமே மார்க்சியத்தை அறிமுகம்
செய்வதால் ஈஸ்வரனிடம் அறமும் இல்லை, அறச்சீற்றமும் இல்லை, பாட்டாளி வர்க்க உணவும் இல்லை
எனும் முடிவுக்கு நாம் வரவேண்டியதாகிறது. மேலும் அவரின் நூல்களைக் கொண்டு மார்க்சியத்தை
நடைமுறையோடு இணைத்துப் பார்த்துப் புரிந்து கொள்வதாற்கான அறிவும் நமக்கு கிடைப்பதில்லை.
எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால் கொச்சைப் பொருள்முதல்வாதியும், பொருளாதார
நிர்ணவாதியுமான அவருக்கு- தான் ஒரு மார்க்சிய எழுத்தாளர், ஆத்தண்டிக் மார்க்சிய நீதிபதி
என்கிற இறுமாப்புகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதன் மூலம் தனது நூல்களுக்கான சந்தையையும்
அவர் உருவாக்கிக் கொள்கிறார்.
இன்னும் மிகத் தெளிவாகக் குறிப்பிடவேண்டுமென்றால், மார்க்சிய மூல ஆசிரியர்களின்
தத்துவங்களை எத்தனையோ ஆசிரியர்கள் விளக்கி நடைமுறைக்கு உதவும்படி விளக்கம் சொல்லி,
விவாதித்து வந்திருக்கின்றனர். ஆனால் கொச்சைப் பொருள்முதல்வாதியான ஈஸ்வரனோ மேற்கோள்களோடு
மட்டும் மார்க்சியத்தை முன்வைக்கிறார். இதிலிருந்து மார்க்சிய அறிவுஜீவி என்ற அடையாளம்
அவருக்கு ஒளிவீசும் பட்டமாகத் தெரிகிறது. தான் படித்ததை சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளோடு
தொடர்புப்படுத்தி தம் சொந்த சொற்களில் விளக்கக் கூடத் தெரியாத அவர் மார்க்சிய மூல நூல்களைச்
சுரண்டி தன்னை எழுத்தாளராக முன்வைக்கிறார்.
இது ஒருவகையில் மார்க்சியம் நடைமுறைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் என்று
மக்கள் கருதிக்கொள்வதற்கு மட்டுமே வகை செய்கிறது என்பதே என்வரையிலான கருத்து.
No comments:
Post a Comment