Sep 25, 2015

பெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே

//அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார்.// ((திரிஷா இல்ல நயந்தாரா திரை விமர்சனம் - tamil hindu)

திரைப்படங்களை / படைப்புகளை பெண்ணிய நோக்கிலிருந்தும் விமர்சனபூர்வமாக அணுகும் வெகு சிலரில் அரவிந்தனும் ஒருவர். அவருடைய திரை விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றும்கூட...

நான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பிட்டு படம்டி எனும் பாடல் கேட்டபோதே நிச்சயமாக இது ஒரு கேவலமானப் படமாகத்தான் இருக்கும் என்று யூகித்திருந்தேன். தன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவரே இப்படி விடலைப் பருவ காம உணர்வுகளையும், பெண்களை தூற்றுபவர்களாகவும்.. அதிலும் குறிப்பாக காதலில் பெண்கள் ஏமாற்றுபவர்கள், மோசமானவர்கள் என்பதாக மிகைப்படுத்தி ஏதோ ஆணினத்தை இரட்சிக்க வந்தவர்கள் போல் தங்களை முன்வைப்பர்.

நடிகர் விஜய் இந்தப் பாதையைத்தான் முன்னெடுத்தார். அதற்கு அவர் தந்தையே வழிகாட்டி. அதேபோல் சிம்பு, தனுஷ் என்று பட்டியல் நீள்கிறது. பெண்களை சபிப்பதன் மூலம்… பெண்ணினத்தை தாழ்த்துவதன் மூலம் இவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை தங்களின் ரசிகர்களாக உருவாக்கலாம், ஆனால் பெண்களுக்கெதிரான மோசமான நஞ்சையே இவர்கள் விதைக்கின்றனர் என்பதை அவர்கள்தான் அறியவில்லை, அல்லது அறிந்தும் ‘பிழைப்பிற்காக’ முதுகெலும்பற்ற காரியத்தை செய்கின்றனர் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி இதை சகித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.

பெண் பற்றிய ஆபத்தான கருத்தியல்களை விதைப்பதிலும், ஆணாதிக்க கட்டமைப்பை அப்படியே கட்டிக்காப்பதிலும் திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், பெண்களைப் பற்றி மட்டுமின்றி ஆண்களையும் சதா சர்வ காலம் பெண்ணையே சார்ந்திருப்பவராகவும், பெண்ணுக்காக அலைபாய்பவராகவும், காமமே கண்ணாய் இருப்பவர்களாகவும் காட்டும் இந்த ஆபாச பிழைப்புவாதப் போக்கை உண்மையில் எதிர்க்க வேண்டியவர்கள் ஆண்களே.
ஆணையும் பெண்ணையும் பிரித்தாளும் செயல்களின் மூலம் இலாபமடைபவர்கள் முதலாளிகள் / நடிகர்கள் ஆனால் பெரும் நஷ்டமடைவது சமூகம். அந்த சமூகம் என்பதில் உங்கள் வீட்டுப் பெண்ணும் அடக்கம் என்பதை ஆண்கள் நினைவுகொள்ள வேண்டும்.
பெண் இனத்தை மீண்டும் மீண்டும் கொச்சைப் படுத்துவதும், குடித்துவிட்டு பெண்களை சபித்துக்கொண்டே இருப்பதும், பெண்களைத் தாழ்த்துவதுமாக இருக்கும் இவர்களுக்கு உண்மையில் பெண் உடலைக் காட்டாமல் பிழைப்பு நடத்தும் துணிவு இருக்கிறதா?
இதில் பெண்களின் பங்கு இல்லையா? அதில் நடிப்பவரும் ஒரு பெண்தானே என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் என்னிடம் உள்ளது: ஆண், பெண் இருவரும் இதே ஆணாதிக்க சமூகத்தில்தான் பாடம் கற்கிறோம். பொது ஆணிற்கு இருக்கும் அதே அறியாமைதான் பொது பெண்ணிற்கும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பெண் என்பவள் victimize செய்யப்பட்டவள், அவளுக்கு அத்தகைய வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன.ஆனால் அவர்களுக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், முதன்மையில் இங்கு நாம் குறை சொல்வது ஆணினத்தை அல்ல, ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகளைக் கொண்டு தம் பிழைப்பை ஓட்ட நினைக்கும் அந்த ‘படைப்பாளர்கள்’ பற்றி மட்டுமே. அத்தகையவர்கள் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். இந்த சமூகத்தின் முன் எவர் ஒருவர் ஒரு படைப்பின் மூலம், செயலின் மூலம் ஒரு சிந்தனையை, ஒரு உடையாடலை, ஒரு படைப்பை முன் வைக்கிறாரோ – (அதாவது கருத்து சொல்லிகள்) அவர் பற்றிய விமர்சனமே இது. அத்தகையோருக்கு பொது புத்தியில் உள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் பொறுப்புள்ளது….

ஜீ.வி பிரகாஷ், ஆதிக் மற்றும் அதுபோன்ற திரைத்துறையினர் தம் செயலுக்காக உண்மையில் வெட்கித் தலை குனிய வேண்டும்.

அரவிந்தனின் சொற்களில் சொல்வதானால் //ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.//

Related Links: 

http://tinyurl.com/nbcbtsn
http://www.cinemapettai.com/news/ladies-hates-trisha-illana-nayanthara/ 

@CameoFilmsIndia   
SonyMusicSouth @Aadhikravi

Sep 16, 2015

'அறம் செய விரும்பு’ திட்டம்

Aramseyavirumbu a social movement by Vikatan
'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...
இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும்.
திட்டம் தொடர்பான தகவல்களை
www.vikatan.com/aramseyavirumbu  என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள்aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!
- விகடன் டீம்,

Source: http://www.vikatan.com/news/article.php?aid=51865&spl=102

Sep 13, 2015

கேள்வி கேட்கலாமா கூடாதா: இப்போதய கேள்வி இதுதான்


கேள்வி கேட்கலாமா கூடாதா: 
இப்போதய கேள்வி இதுதான்
ரொமிலா தாபர் | தமிழாக்கம்: கொற்றவை

இந்த விரிவுரைக்காக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதென்பது சற்று சிரமமான காரியமாகவே இருந்தது. எல்லாரும் சொல்வது போல், நிகில் சக்ரவர்த்தி பன்முகம் கொண்ட ஒரு மனிதர். அன்பும் பாசமும் கொண்ட ஒரு நல்ல நண்பர், மக்கள் குறித்த ஆர்வத்தோடு, அரசியல் மற்றும் நாம் வாழும் உலகின் பொதுவான சூழல் பற்றிய ஆர்வம் மிக்கவர். எங்கள் இருவருக்கும் ஒரு சில விஷயங்கள் பொதுவானதாக இருந்தன – இருவருமே பத்ம விருதை மென்மையாக மறுத்தவர்கள். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அது தனது சுதந்திரத்தை பாதிக்கும் என்று நிகில் கருதினார், ஒரு கல்வியாளராக எனக்கும் அதே உணர்வு எழ, நானும் அதை மறுத்தேன். எப்போதாவது வெளியாகும் அரசியல் வதந்திகள் குறித்த நிகிலின் துணுக்குகளுக்காகக் காத்திருப்பது  வீணல்ல. நினைவுக் குறிப்புகள் வெள்ளமெனப் பெருக்கெடுத்தோடு இக்காலகட்டத்தில், ஒருவேளை நிகில் தன்னுடைய நினைவுக் குறிப்புகளை எழுதியிருந்தால், ஊடக உலகமே ஊதித் தள்ளியிருக்கும்.

பொது விஷயங்கள் குறித்த அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்கு நிகில் மதிப்பு கொடுத்தவர். சமூகம் மற்றும் அரசியலுக்கு இடையிலான சார்புத்தன்மை பற்றி கேள்வி கேட்பவர்களுக்கான ஒரு வெளியை அவர் எப்போதும் வழங்கினார். இன்றைக்கு அந்த வெளி சுருங்கி விட்டது, அறிவுசார் பண்பளவு குறுகிவிட்டது.  அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் மக்களிடையே தாக்கம் செலுத்தும் கருத்து சொல்லிகள் மத்தியில் பொது அறிவுஜீவிளுக்கு முன்பிருந்ததை விட தற்போது மதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலை உண்மைதானா அல்லது ஏன் இந்நிலை என்பது குறித்து பேசலாம் என்றிருக்கிறேன், நிகிலுக்கு பிடித்த ஒரு பேசுபொருளாகவும் இது இருக்கலாம். எத்தகைய சமூகத்தை நாம் வேண்டுகிறோம், ஏன் அதை வேண்டுகிறோம் எனும் அக்கறை காரணமாக இப்பேச்சு அவசியமாகின்றது.

பொது அறிவுஜீவிளின் இருப்பானது குறிப்பால் எதனை உணர்த்துகிறது என்பது பற்றிய எனது கருத்தினை இன்று நான் உங்களிடம் பகிரவிருக்கிறேன். ஒரு வரலற்றாசிரியராக, கடந்த காலத்திலிருந்து தொடங்குவது தவிர்க்கவியலாததாகிறது. ஆகவே, பொது அறிவுஜீவிளின் தோற்றத்திற்குப் பங்களித்த நவீன காலங்களின் சிந்தனை மரபுக்குத் தொடர்புடைய ஐரோப்பிய சிந்தனையாளர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டு நான் எனது உரையை தொடங்குகிறேன். அதன்பிறகு, இந்திய மரபில் அத்தகைய பாத்திரம் வகித்த சில சிந்தனையாளர்கள் பற்றியும் குறிப்பிடுகிறேன். இரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லையென்றாலும், பலவகையில் அவை இணையொத்தவை. பின்னர் இறுதியாக, பொது அறிவுஜீவிளின் பாத்திரம் எத்தகையதாக இருக்கலாம், இன்றைய சமூகத்தில் அத்தகையோர் பற்றிய விழிப்புணர்வு ஏன் அதிகமிருக்க வேண்டும் என்பதை விளக்கவிருக்கிறேன்.

மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகள் மற்றும் சமூக நீதிக்கு முதன்மைத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சமூக செயல்பாடு தொடர்பான பிரச்சினைகள் மீது பொது அறிவுஜீவிள் அக்கறை கொள்கின்றனர். பிரச்சினைகளின் தளம் பரந்தது. அவற்றிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் கருத்தியவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதிகாரம் என்று நாம் எதைக் கருதுகிறோம் – அது மதமோ, அரசோ அல்லது விவாதத்திற்குறிய பிரச்சினைக்கு ஏற்ப ஏதோ ஒன்று, மேலும் அளிக்கப்பட்டிருக்கும் தெரிவுகளை  நாம் எப்படி மதிப்பிடுவது - என்பது முதல் கேள்வி. அறிவு மற்றும் அதன் பயன்பாட்டை நாம் எதைக் கொண்டு மதிப்பிடுவது? உதாரணமாக, நிலவும் வைதீக கருத்துகளையும், உறுதியாக நிலை நாட்டப்பட்டுவிட்ட அதிகாரங்களையும் எதிர்க்கும் புத்தறிவு என்று நாம் எதிர்பார்க்கலாமா? எதிர்ப்பை நாம் எப்படி சமாளிப்பது? பகுத்தறிவுடன் கூடிய தர்க்கவாதம் கொண்டு நம்மைச் சுற்றி உள்ள உலகம் பற்றியும், அதன் கடந்த காலம் பற்றியும் விளக்குவதை  அது முதன்மையில் சார்ந்திருக்கிறது. பகுத்தறிவை வலியுறுத்துவதன் மூலம் கற்பனை என்பது ஒருவகையான சிந்தித்தல் நடைமுறை என்று நான் விலக்கவில்லை, ஆனால் அதிலுள்ள வேறுபாடுகளைப் புறக்கணிக்க இயலாது.

அத்தகைய அக்கறைகள் ஒன்றும் சமீபத்தில் வெளிப்பட்டவை அல்ல. பழங்காலம் தொட்டே அவை நிலவி வந்தன, பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டு வந்திருக்கின்றன. சமூகத்தை கட்டமைப்பவர்களை நோக்கி இன்றைக்கு நாம் கேள்வி எழுப்பும் இந்த உரிமைக்கான அடித்தளத்தை கடந்தகாலம் தொடங்கி அமைத்துக் கொடுத்த ஒரு சிலர் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த காலங்களில், பகுத்தறிவுவாதத்திலிருந்தும், தர்க்கப்பூர்வ சிந்தனையிலிருந்துமே கேள்விகள் தோன்றலாயின, ஆனால் அவை மனித நிலைமைகளால் மட்டுப்படுத்தப்பட்டன. பூமியில் ஒரு மேலான சமூகத்திற்கென கற்பனை செய்யப்பட்ட ஒரு எதிர்காலத்தின் கதவுகளை அப்பதில்கள் மூடிவிடவில்லை மேலும் அவை, சொர்கத்திற்காகவோ அல்லது அடுத்த பிறவிக்காகவோ காத்திருக்கச் சொல்லவுமில்லை. ஐரோப்பாவில் அத்தகைய சிந்தனை மரபு இருந்தது. இந்தியாவில் அத்தகைய சிந்தனை மரபின் இருப்பானது பெரும்பாலும் நிராகரிக்கப்படுகிறது. அத்தைய நிராகரிப்பை நான் எதிர்க்கிறேன். வைதீகத்தையும், அதிகாரத்தையும் கேள்வி கேட்க சவாலுக்குறிய தருணங்கலிலாவது சமூகங்கள் அனுமதிக்க வேண்டும், இல்லையேல் அத்தகைய சமூகங்கள் வெகு சீக்கிரத்திலேயே தம் மரணத்தைத் தானே தேடிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

ஐரோப்பிய கடந்தகாலத்திற்கு திரும்புவோமானால், பொது அறிவுஜீவிளின் முன்னோடிகள் தத்துவார்த்த கேள்விகளில் ஈடுபட்டனர், ஆனால் அச்சிந்தனைகள் அரசியல் மட்டத்திலும் ஊடுருவின, பரிந்துரைக்கப்பட்ட சமூக செயல்பாடாகவும் பிரதிபலித்தன. சாக்ரட்டீஸ் போன்று துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோதும் அதிகாரத்தை விமர்சிக்கும் உரிமைக்காக அத்தகையோர் உரிமை கோரினர். கடவுளின் இருப்பை மறுத்ததற்காகவும், ஏதேனில் நிலவிய நீதி முறைகள் பற்றி விமர்சித்ததற்காகவும் ஏதேனிய கிரேக்கர்கள் அவரை எதிர்த்தனர். அதற்காக விஷத்தை குடிக்கும் தண்டனைக்குள்ளானர் சாக்கிரட்டீஸ்.

இருப்பினும், ஐரோப்பிய சிந்தனையின் முக்கிய இழை ஐந்தாம் நூற்றாண்டின் சாக்கிரட்டிய முறைக்கு நம்மை அழைத்துச் செல்லும். எந்தவொரு கூற்றும் பல கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டது, அதன் ஆக்கக்கூறுகளுக்குறிய தொடர்புகளை நுணுக்கிக் காணும் வகையில் பிரித்தாயப்பட்டது. பின்னர் அவை ஒரு கருதுகோளாக சாதாரணமாக இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. எதிர்தரப்பால் மாற்றீடாக முன்வைக்கப்படும் அறுதியுரையானது இயக்கவியல் ரீதியான ஒரு விவாதத்திற்கு வழிவகுக்கும். கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம சொற்பொழிவாளரான சிசேரோ, ஆளுநர்கள் சிலரின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர், எவற்றையெல்லாம் கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் நினைத்தாரோ அவற்றையெல்லாம் கேள்வி கேட்கும் உரிமைக்காகக் குரல் கொடுத்தார், அதற்காக தனது சட்ட அறிவைப் பயன்படுத்தினார்.

கி.பி.இரண்டாம் ஆயிரமாண்டில், கத்தோலிக தேவாலயமானது அரசர்கள் மீது அதிகாரம் செலுத்தியது. தொடர் வந்த காலத்தில் அந்த அதிகாரமும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அறிவொளி இயக்கம் என்ற  ஐரோப்பிய சிந்தனை மரபின் தோற்றத்திற்கு வித்திட்ட விவகாரங்களில் அதுவும் ஒன்று. நமக்குப் பரிச்சியமான சில தத்துவவாதிகள் – லாக்கே, ஹூம், வால்டேர், மாடெஸ்கியு, திதெரோ, ரூசோ மற்றும் பலர் – மரபார்ந்த அறிவையும், நடைமுறைகளையும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுக்குள்ளும், பிறருடனும் அவர்களுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அதன் விமர்சனபூர்வ தர்க்கத்திற்காகவே அவர்களது கேள்விகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கத்தோலிக்க தேவாலயங்களின் ஏக அதிகாரங்களுக்கு எதிர்ப்பு என்னும் பொதுவான செயல்பாட்டிற்கு அப்பால், குறிப்பாக இன்றைக்கு நாம் சிவில் சமூகம் என்று சொல்லக்கூடிய சமூகத்தின் விவகாரங்களில் இத்தர்க்கவாதமே அவர்களை ஒன்றிணைத்தது. சிவில் சமூகம் என்பது மதச்சார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கியதாக தற்போது பார்க்கப்படுகிறது. அவற்றுள் சில அரசால் நடத்தப்படுகின்றன. மதரீதியான விலக்கலும், வெறுப்புணர்வும் பிற்போக்குத்தனமாகக் கருதப்பட்டன. சேர்த்துக்கொள்வதிலும், வேறுபாடுகளை சகித்துக்கொள்வதிலுமே முன்னேற்றமானது அடங்கியிருப்பதாக வாதிடப்பட்டது.

மத எதிர்ப்பு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் தேவாலயங்கள் விமர்சிக்கப்படவில்லை, மாறாக சமூக நிறுவனங்களான – குடும்பம், கல்வி, ஆட்சி முறை மற்றும் நீதித்துறை – ஆகியவற்றின் மீது சம்பிரதாய மதங்களுக்கு இருந்த அதிகாரத்திற்கு எதிர்ப்பாக அவை தோன்றின. அந்நிறுவனங்கள் பெற்றிருந்த புனித அங்கீகாரங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறாக, ஆட்சி முறைக்குறிய அதிகாரங்களுக்கான ஊற்று மக்களுக்கிடையிலான சமூக ஒப்பந்தம் என்று முழங்கப்பட்டது. மற்ற விஷயங்களுக்கப்பால், சமய நம்பிக்கையை மேற்கோள் காட்டுவதைக் காட்டிலும் தற்கவாத ஆய்வு வலியுறுத்தப்பட்டதால், சமூக செயல்பாட்டின் மூலவிசையை கண்டறிந்து, தேவைப்படும் இடங்களில் மாற்றங்களைப் பரிந்துரைப்பது எளிதாக இருந்தது.

இருப்பினும், ட்ரேஃபஸ் விவகாரம் என்று சொல்லக்கூடிய ஒன்றோடு தொடர்புடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தத்துவவாதிகளிலிருந்து மாறுபட்டவர்களான பொது அறிவுஜீவிள் என்போர் ஓர் அங்கிகரிக்கப்பட்ட பிரிவினராக உருவெடுத்தனர். ஃப்ரென்ச்சு இராணுவத்தில் காப்டனாகப் பணியாற்றிய யூதரான டிரேஃபஸ் என்பவர் ஜெர்மானியர்களுக்கு சில இரகசிய தகவல்களைக் கசிய விட்டதாக ஒரு தவறான குற்றச்சாட்டிற்குள்ளாகி, சிறைவைக்கப்பட்டார். அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டு இராணுவத்தின் பொது அதிகாரிகளும் சேர்ந்து ட்ரேஃபஸை நியாயமின்றி தண்டித்துவிட்டதாக இச்செயலை எதிர்த்தவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். எமில் ஜோலாவால் எழுதப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு பெருமளவிலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வித்துறையினர் ஆகியோரின் ஆதரவு கிடைத்தது. அவர்கள் அனைவரும் ‘அறிவுஜீவிகள்’ என்று அழைக்கப்பட்டனர். இறுதியாக உணர்ச்சிபூர்வ அதேசமயம் செமிட்டிய எதிர்ப்பற்ற ஒரு விசாரனையின் மூலம் ட்ரேஃபஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு, மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இவ்வாறாக, ‘அறிவுஜீவி’ என்னும் சொல்லுக்குறிய பொருள் இக்கருத்தை ஒட்டி உருப்பெற்றது: ஒருவர் அறிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அறியப்பட்ட ஒரு தொழிற்முறை அந்தஸ்த்தில் இருப்பவராக, பொது நடவடிக்கைகள் பற்றி அதிகாரத்திடம் விளக்கம் கோருபவராக, ஒருவேளை அத்தகைய கேள்வி முறை அதிகாரத்தில் உள்ளோரையும், அதிகாரத்தையுமே விமர்சிப்பதாக இருப்பினும் கேள்வி கேட்பவர்.

சமூகத்தின் அறிவுஜீவி மரபு பற்றிய ஒரு திறனாய்வு இருப்பின் அத்தகைய கேள்விகள் இன்னும் எளிதாகத் தோன்றும். ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு முறைகளைக் கொண்டு வாதங்களை எழுப்புவதென்பது, ஒருவேளை வரலாற்றுச் சூழலானது கேள்வி கேட்பதற்கான முறைகளையே மாற்றியமைப்பினும், ஆதாரங்களை சரிபார்ப்பது, ஆய்வு செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். (சொல்லப்போனால், தற்போது இம்முறையானது விஞ்ஞானத்திற்கு மட்டுமின்றி சமூக விஞ்ஞானத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது, சமூக மற்றும் அரசியல் நிறுவனங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த அறிவார்ந்த விளக்கங்களை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, வரலாற்று ஆய்விற்கு இம்முறை எல்லா நேரங்களிலும் வரவேற்கப்படுவதில்லை மேலும், மரபார்ந்த கண்ணோட்டங்கள் மீது இவ்வாறாக கேள்வி எழுப்பப்பட்டன.)

பகுத்தறிவுவாதம் என்னும் கருத்தேகூட கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பகுத்தறிவு மீதான ஒரு மேலதிக மதிப்பிடானது முழுமையான விளக்கங்களைக் கொடுக்கவல்லதல்ல என்றும், மேலும், அனைத்து விளக்கங்களும் – பகுத்தறிவுடன் கூடியதோ அல்லது மற்றதோ – இரண்டும் சாத்தியமானதே என்னும் வாதம் மூலம் அதன் மையத்தன்மை கேள்விக்குள்ளானது. பகுத்தறிவு சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட விமர்சகர்கள் ஆதாரங்களைப் பொறுத்தும், சாதாரண விளக்கங்களில் உள்ளார்ந்த தர்க்கவியலைப் பொறுத்தும் பன்முகப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இருப்பினும், பகுத்தறிவு திறனாய்வு என்னும் மரபுத்தொடர் வரலாற்றுச் சூழல்களில் மாறுபட்டாலும், பகுத்தறிவு திறனாய்வு என்பது தன்னளவில் எப்போதும் தொடர்கிறது, தொடரவும்கூடியது.

நாம் இடைக்காலத்தவரல்லர்அல்லது நிலப்பிரபுத்துவ பண்புகளற்ற சமூகத்தவர் என்று சொல்லிக்கொள்ளத்தக்க தாரளவாத மதிப்பீடுகள் மற்றும் ஜனநாயகம் போன்ற நவீன சிந்தனைகளின் வேர்கள், தத்துவவாதிகள் மற்றும் இதரர்களுக்கிடையில் நடந்த விவாதங்களுக்கே நம்மை இட்டுச் செல்லும். மேலும், அவ்விவாதங்கள் ஐரோப்பாவிற்குள்ளாக மட்டும் நடக்கவில்லை, ஏனென்றால் காலனியத்தின் முதுகில் ஏறிக் கொண்டு உலகின் மற்ற பகுதிகளில் இச்சிந்தனைகள் சவாரி செய்தபோது அவை ஏற்பையும் எதிர்ப்பையும் பெற்றன.

நிலவும் சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து மாற்றத்திற்காக பகுத்தறிவையும், தர்க்கபூர்வமான விளக்கங்களையும் வலியுறுத்திய நபர்கள் சிலர் பற்றி சொல்வதற்காக இப்போது நான் இந்திய மரபிற்குத் திரும்புகிறேன். நமது மூதாதையர்களுக்கு அறிவின் திறவுகோலாக பகுத்தறிவின் தேவை இருக்கவில்லை என்னும் கோட்பாடு நம்மில் ஆழமாக பதியவைக்கப்பட்டுவிட்டது, அதனால் பகுத்தறிவு சிந்தனையில் நமது பாரம்பரியத்தை நாம் புறக்கணித்துவிடுகிறோம். கேள்விகளை ஊக்குவித்து, காரண காரியங்களைப் பரிசோதித்து, பகுத்தறிவுடன் கூடிய விளக்கங்களை ஊக்குவித்த இந்திய தத்துவவாதிகள் சாக்கிரட்டீஸுக்கு சமகாலத்தவரக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு கண்டங்களில் வாழ்ந்தவர்கள், மற்றவர்களோடு எந்தத் தொடர்புமற்றவர்கள். ஆம்! நான் புத்தரைத்தான் குறிப்பிடுகிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் விஷம் குடிக்க நேரவில்லை, ஆனால் அவரது போதனைகள் தொடக்ககால வைதீக பிராமணியத்தின் பலமான எதிர்ப்பை சந்தித்தது. அவரது தத்துவங்கள் மாயை என்றும் தவறாக வழிநடத்துவதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் பௌத்தம் மெல்ல மெல்ல துடைத்தெறியப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. அண்டை நாடுகளில் பரவி செழித்து வளர்ந்தது. ஆனால், சில இடங்களில் அதுவே வைதீகமாகிப் போனது.

சிந்தனைகளின் வரலாற்றில் சுவாரசியமானதொரு அம்சம் என்னவென்றால், தங்களின் பரிணாம வடிவங்கள் குறித்து பல்வேறு வகைகளில் சமூகங்கள் சொல்லும் விளக்கங்கள்தான். அரசாங்கத்தின் தோற்றம் குறித்து புத்தரிடம் கேட்கப்பட்டபோது, ஆதிகாலத்தில் எல்லாரும் சமமாக வாழ்ந்தார்கள், அனைத்து வளங்களுக்கும் சமமான அதிகாரம் இருந்த அசலான யுடோப்பிய நிலை இருந்தது. குடும்பங்கள் எல்லை பிரிக்கப்பட்டபோது முதல் மாற்றம் ஏற்பட்டது, அவை சமூக அலகுகளாயின.  அதனைத் தொடர்ந்து தனியுடைமையாக நில உடமை முறை தோன்றியது. இம்மாற்றங்கள் குழப்பங்களையும், மோதலையும் விளைவித்தன. அதனால், மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி, தங்களை ஆளவும், குழப்பங்களுக்கு தீர்வாக அமையும் சட்டங்களை வகுக்கவும் - தங்களுக்குள் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்தான் மஹாசம்மட், மாபெரும் தலைவர். பயனளிக்கக்கூடிய வகையில், அது ஒரு சமூக ஒப்பந்தம் ஆகும்.  ஆனால் ஒரு விஷயம், ழான் ஜேக் ரூசோவோ அல்லது ஃப்ரெட்ரிக் எங்கல்ஸோ பௌத்த நூல்களைப் படித்திருக்கவில்லை!

இந்த பௌத்த விளக்கங்கள் பிராமணியத்தின் பல கதையாடல்களுக்கு முரணாக இருந்தன. அவற்றுள், கடவுளருக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போர் கதைகளும் அடக்கம், கடவுளர்கள் தோற்கும் நிலையில் இருந்ததால் அவர்கள் பிரஜாபதியிடம் உதவி கேட்டார்கள். சில கதைகளில், கடவுளருக்கு வெற்றி கிட்ட பிரஜாபதி தனது மகன் இந்திரனை நியமித்தான் – ஆட்சி முறைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.  தெய்வங்களிடம் முறையிடுவதும், புனித ஆணைகளும் அவசியமானது. மேலும், அதிகார மனவோட்டத்திற்கு அது சாயம் பூசுகிறது. ‘மாபெரும் தலைவர்’ என்னும் புத்தரின் கருத்தானது ஒருவகையில், அரசன் என்பதன் தலைகீழ் வடிவம் – தெய்வீகராக நியமிக்கப்படுகிறார், அவருள் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இரண்டு தொன்மங்களிலும் உள்ள அனுமானங்கள் மாறுபட்டவை.

இந்த தொடக்ககால நூல்களில் மதம் என்று குறிப்பிடப்படும்போது, இந்து மதம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை – வெகு காலத்திற்கு பின்னரே அப்பதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் பல சமயங்கள் அதனதன் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. பொதுவாக குறிக்கப்படும்போது அவை பெரும்பாலும் இந்த இரண்டு பிரிவின் கீழ் வந்தன: பிராமணியம் – பிராமணிய நம்பிக்கைகளோடு தொடர்புடையது – ஷ்ராமணியம் – பௌத்த மற்றும் ஜைன போதனைகளைக் குறிக்கிறது. (பௌத்த பிக்‌ஷுக்கள் ஷ்ராமணர்கள் என்றழைக்கப்பட்டார்கள்). பல்லாயிரம் வருடங்களாக, கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகரின் அரசாணைகள் தொட்டு கி.பி. 11ஆம் நூற்றாண்டில், அல் பிருனியின் இந்தியா பற்றிய குறிப்புகள் வரை அனைத்திலும் மதங்கள் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளன.  முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய பதஞ்சலி என்னும் சமஸ்கிருத இலக்கணவியலாளர் அவ்விரண்டையும் பாம்பிற்கும், கீரிக்கும் ஒப்பிட்டுப் பேசும்போது கூடுதலாக ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறார். தெளிவாக, எந்த ஒன்றையும் கேள்வியின்றி நம்பும் ஒரு சிலர் ஒருபுறமும், கேள்வி கேட்பவர் மறுபுறமும் இருக்குமொரு சமுதாயத்தில் அவ்விவாதங்கள் நிச்சயம் கடும் குரோதமுடையதாகவே இருந்திருக்கும்.

அதன் பிறகு உலகாயதர்கள் என்றழைக்கப்பட்ட சார்வார்கர்கள் இருந்தனர். வாழ்வு குறித்த பொருள்முதல்வாத பார்வை கொண்டவர்களான அவர்கள் பெருமாலான தத்துவ மரபுகளை எதிர்த்தனர், மற்ற எந்த சிந்தனைகளுக்கும் துளி அளவு இடமும் அளிக்க மறுத்தனர். அவர்களின் அனைத்து நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் பல அறியப்பட்ட நூல்களில் அங்குமிங்கும் அவர்கள் மேற்கோள் காட்டப்படுகின்றனர்.  இப்பிரிவுகள் சிலவற்றின் வாதங்களைப் புத்தர் ‘விலாங்கு மீனைப் போன்று நழுவுதல்’ என்று கூறுகிறார்.

கிறுத்தவ சகாப்தத்தின் தொடக்ககாலத்தில் பௌத்த மதமானது அரசு, வணிகர்கள் மற்றும் நில உடமையாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. அப்போது வெளியான முக்கியமான சில பிராமண நூல்கள் பௌத்தர்களை மத எதிர்ப்பாளர்கள் என்றதோடு நாத்திகர்கள் – கடவுள் மறுப்பாளர்கள் என்றும் குறிப்பிட்டன. பிராமணிய கண்ணோட்டத்தின்படி ஷ்ராமணர்கள், சார்வாகர்கள், அஜீவிகர்கள், கடவுள் மறுப்பாளர்கள், பொருள்முதல்வாதிகள் மற்றும் பகுத்தறிவுவாதிகள் என அனைவரும் நாத்திகர்கள் என்றே ஒன்றாக முத்திரை குத்தப்பட்டனர்.  கடவுள் மறுப்பு, அதனையொட்டி வேதம் என்பது தெய்வீக வெளிப்பாடு என்னும் மறுப்பு; சாதிய நடைமுறைக்கு எதிர்ப்பு மற்றும் கர்ம வினை பற்றிய அவர்களது கருத்தும் மாறுபட்டது, சிலர் அதை முற்றிலுமாக மறுத்தனர். (நம்முடைய காலத்தின் இந்துத்துவா ஆதரவாளர்களின் நினைவு வருகிறது.  அவர்களை எதிர்ப்பவர் எவராயிருப்பினும் அனைவரும் மார்க்சியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்!  ஆர்வமூட்டும் வகையில் இப்போதெல்லாம், அடிப்படைவாத இசுலாமியர்கள் தங்கள் மதத்தின் வைதீகத் தன்மையை எதிர்க்கும் தாராளவாத இசுலாமியர்களைக்கூட மார்க்சியர்கள் என்றழைப்பதாகக் கேள்வி!)

மத எதிர்ப்பாளர்களைக் கண்டு மநு சாஸ்திரமோ கிட்டத்திட்ட அஞ்சி நடுங்குகிறது, அவர்களை நாத்திகர்கள், பொய்யான போதனைகளை வழங்குபவர்கள் என்றழைக்கிறது. அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், தமஸின், அதாவது இருண்மையின் தோற்றுவாய் என்கிறது. எதுவாகினும், மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வந்த தத்துவ சிந்தனைகள் பல நாத்திக கருத்தையும் உள்ளடக்கி இருந்ததால் வைதீகத்திற்கு அது சவாலான காலகட்டமாகவே இருந்தது. ஆனால் அறிபூர்வமான வகையில் அதுவே ஓர் உற்சாகமான காலகட்டமாகும்.

எங்கெல்லாம் கடவுள் மறுப்பாளர்களுக்கு அதிக ஆதரவு இருந்ததோ, அங்கெல்லாம் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டனர்.  ஆரம்பகால நூற்றாண்டின் விஷ்னு புராணத்தில் மாயமோகி என்னும் நபர் பற்றியும், அவரது ஆதரவாளர்கள் பற்றிய எதிர்மறை குறிப்புகளும் நிறைந்திருக்கும். பெயரே குறிப்பது போல் மாயை மற்றும் வஞ்சனை  – இதுவே அக்குழுவின் குணாதிசயங்கள்.  அனைத்து தீய சக்திகளையும் – அசுரர்கள் மற்றும் தைத்தியர்களை – மாயமோகி ஒன்று திரட்டுகிறான், தன் சிந்தனைகளை போதித்து அவர்களை மாற்றிவிடுகிறான். சிவப்பு அங்கி உடுத்துவது, தலைமுடியை மழிப்பது, சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாமை, பிச்சை எடுத்து உண்பது ஆகிய குறிப்புகள் வழி அவர்கள் பௌத்தர்கள் மற்றும் ஜைனர்கள் என்று உணர்த்தப்படுகிறது. அவர்களுடனான சொல்லாடல்கள் (discourse) அனுமதிக்கப்படவில்லை, ஏனென்றால் அது தீட்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாதங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும், ஆங்காங்கே சில குறிப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அதேவேளை கண்கூடாகத் தெரியும் அளவுக்கு இல்லையென்றாலும், இவ்விவாதப்பரப்பின் ஓர் அங்கமாக சார்வார்கர்கள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். ஆன்மாவுக்கெதிராக பருப்பொருளின் முதன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் அவர்களின் கோட்பாடு பற்றி 9ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் குறிப்பிடுகிறார். பதிநான்காம் நூற்றாட்டில், சர்வதர்ஷன சங்கிரகம் என்று மாதவாச்சாரியாரால் ஒன்றிணைக்கப்பட்ட பிரதான தத்துவார்த்த மரபுகள் பற்றிய விவாதமானது, சார்வாக சிந்தனைகளின் சாத்தியப்பாடுகள் குறித்த ஒரு நீண்ட விவாதத்தோடு தொடங்குகிறது.  இறுதியில் அவர் அதை நிராகரித்திருந்தாலும், மிக நீளமாகவே அதுபற்றி விவாதிக்கிறார். சார்வாக சிந்தனைகளுக்கு பெரும் தாக்கம் இருக்கவில்லையென்றால், நிச்சயம் அது எளிதாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கும். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் காலனிய கல்வியின் விளைவாக, இந்திய நாகரீகத்தில் பகுத்தறிவு சிந்தனைகளே இல்லை என்றும் இந்தியாவின் பின் தங்கிய நிலைக்கு அதுவே காரணம் என்பதுபோன்ற பிம்பங்கள் சில காலனிய எழுத்தாளர்களின் வாதங்கள் மூலம் அரங்கேற்றப்பட்டன. தேசியவாத சிந்தனையாளர்களால் ஏற்றுக்கொள்ளவியலாத வாதமாக இது இருந்தபோதும், குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அறிஞர்களின் எதிர்ப்பை நாம் எங்கும் காண முடியவில்லை.  எந்தவொரு எதேச்சிகாரத்திற்கும் கேள்வி கேட்பவர்கள் விரும்பத்தகாதவர்கள். அதேபோல், இந்துத்துவம் என்னும் ஒற்றை தேசிய அடையாளத்தை கட்டமைக்க நினைத்தவர்கள் பிராமணியத்திற்கு எதிரான போதனைகளுக்கு இடமளித்திருக்க மாட்டார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள் வைதீகத்தால் நிராகரிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களுடைய சிந்தனைகள், மற்றும் அதையொத்த சிந்தனைகள் நூற்றாண்டின் தொடக்ககால தத்துவார்த்தப் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வாளர்கள் மட்டத்தில், புலமை வாய்ந்த பிராமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கிடையில் நடந்த விவாதங்கள் ஈர்க்கக்கூடிய பல தத்துவார்த்தப் பள்ளிகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தன. தர்க்கம் மற்றும் காரண காரியம் பற்றிய விவாதங்களுக்கான வழிமுறைகளோடு கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவான மற்ற தத்துவ முறைகளும் கூர்தீட்டப்பட்டன. அக்காலகட்டத்தில் முக்கிய தர்க்கவாதிகளாக இருந்த நாகார்ஜுனர், வசுபந்து, திக்நகர், தர்மகீர்த்தி போன்றோர் பெரும்பாலும் பௌத்தர்களாக இருந்தனர், அவர்களில் சிலர் பிராமணர்களாக பிறந்து, அக்கல்வியைப் பெற்றிருந்தாலும், பௌத்தர்களாகவே இருக்க விரும்பினர். கருத்துமுதல்வாதத்தை அவர்கள் நையாண்டி செய்தனர், குறிப்பாக நாத்திகத்தின் நுணுக்கங்கள் பற்றிய விவாதத்தின்போது. ஒத்த கருத்துகள் இருக்கவில்லை. மேலும் விவாதங்கள் பரவலாக நடந்தன, சில நேரங்களில் அவ்விவாதங்கள் இயக்கவியல் வடிவம் பெற்றன.

இவ்விவாதங்களுள், பகுத்தறிவு சிந்தனைக்கு மிக நெருக்கமாகத் திகழும் வானவியலாளர்கள் அல்லது கணிதவியலாளர்கள் ஆகியோருக்கும் தத்துவவாதிகளுக்கும் இடையில் விமர்சனபூர்வமான பகுத்தறிவுடன் நடந்த விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்த அறிவார்ந்த வாதங்களாக இருந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை காணக்கிடைப்பதில்லை. கணிதவியல் கணக்கீட்டின் அடிப்படையில் பூமி சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று வாதம் செய்தார் ஆர்யபட்டர். அவருடைய இந்தக் கோட்பாடு காப்பர்னிக்கஸ் மற்றும் கலிலியோ ஆகியோரின் கோட்பாடுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. ஐரோப்பாவில் இச்சிந்தனைகளின் வீரியத்தைக் கண்டு பைபிளை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதனால் சமூகத்தின் மீதான தமது ஆதிக்கத்திற்கு ஆபத்து நேரும் எனவும் கத்தோலிக்க வைதீகங்கள் அஞ்சின.  கலிலியோ தனது கண்டுபிடிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. சூரிய மைய மாதிரியைப் பற்றி இந்தியாவில் விவாதங்கள் நடந்தன, ஆனால் அவை பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை, ஒருவேளை இங்கு தேவாலயங்கள் இல்லாதிருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு வேறொரு காரணமும் தோன்றுகிறது, சூரிய மண்டல அமைப்பை ஏற்றுக்கொண்டால் ஜோதிடக் கணக்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இராஜாங்கங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாக ஜோதிடத்தை வைதீகங்கள் பயன்படுத்தி வந்தன. இவ்வாறாக பெரும்பாலான இடங்களில் பண்டைய ஞானம் தங்குதடையின்றி தொடர்ந்தன. இந்தியாவின் கணக்குக் கோட்பாடுகளும், ஜோதிடமும் தங்களளவில் படைப்பாற்றலுடன் வளர்ந்தன, ஆனால் முரண் என்னவெனில், பாக்தாத்தில் இருந்த அப்போதைய மூலமுதல் அறிவியல் (protoscience) மையத்தில் ஆய்வுப் பொருளானபோது அவை மேலும் செல்வாக்கு பெற்றன.

இதற்கிடையில், இந்தியாவில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதற்கான வெளியை மற்ற சமயப் பிரிவுகள் வழங்கின. மத அதிகாரங்கள் மற்றும் ஆள்பவர்கள் அல்லது இதர வைதீகங்கள் உயர்த்திப்பிடித்த நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுள் ஆண்டாள், அக்கம்மா மஹாதேவி மற்றும் மீரா ஆகிய சில பெண்களும் அடக்கம். சாதி விதிமுறைகளைப் புறக்கணித்து தனியொரு சமூக விதிகளைப் படைத்த அவர்களை வெகுவான மக்கள் கூர்ந்து கவனித்தனர். ஆனால் அவர்களின் படைப்புகளுக்கு மதரீதியாக அதிக கவனத்தைக் கொடுத்து அவர்களின் சொல்லாடகளிலுள்ள மேற்சொன்ன அம்சங்களை நாம் அரிதாகவே கவனிக்கின்றோம்.

அமீர் குஸ்ரௌவை தில்லி சுல்தான்கள் அறிந்திருக்கவில்லை. பதினான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட துக்ளக்-நாமாவில், பாரம்பரிய வரலாற்று வடிவத்தில் அரசவை அரசியல் குறித்த கவித்துவமான பார்வையை அவர் வழங்கியுள்ளார். சூரிய வட்டத்தை மையப்படுதியே அவர் தனது வானவியல் ஆய்வுகளை முன்வைத்தார். ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை கேள்வி கேட்பதாக அது கருதப்பட்டதால் வைதீக இஸ்லாத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். குஸ்ரௌ அரசவைக் கவியாக இருந்தபோதும், அவரை எதிர்ப்பது சரியாகாது என்று சுல்தான்களும், வைதீகர்களும் நினைக்கும் அளவுக்கு அவருடைய கவிதைகளும், இசைக் குறிப்புகளும் அவருக்கென ஒரு அந்தஸ்தையும், ஆதரவையும் பெற்றுத்தந்தன. குஸ்ரௌவின் வழிகாட்டியும், நண்பருமான நிஜாமுதின் ஆலியா எனும் சிஷ்டி பிரிவைச் சேர்ந்த ஒரு சூஃபி சுல்தான்களிடம் இருந்து விலகி இருந்தார், அதை அவர் மற்றவர்களுக்கும் வலியுறுத்தினார்.

சில நூற்றாண்டுகள் கழித்து சம்பிரதாய மதங்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை மஹாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஏக்நாத் என்பவர் கேள்வி கேட்டார். அவர் எழுதிய பாகவதப் புராணம் மற்றும் ராமாயணம் ஆகியவை அவருடைய பிராமணியப் புலமையை பறைசாற்றவல்லது. சமூக ஒழுங்கையும், சாதி நடைமுறைகளையும் கேள்வி கேட்க அது ஒரு தடையாக இருக்கவில்லை.

புதிய வழிபாட்டு வடிவங்களை போதித்த அனைவரும் அதிகாரங்களைக் கேள்வி கேட்கவில்லை, ஆனால் அப்படி கேள்வி கேட்டவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். இதை செய்ய நாம் தயங்கி வந்துள்ளோம், ஏனென்றால், கடந்த காலங்களில் சமூக கருத்துரைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. சமய நம்பிக்கைகள் மற்றும் வழிபாடுகள் பற்றிய அத்தைகையோரது கருத்துகளைத் தவிர மற்ற பேச்சுகளை நாம் எளிதாகப் புறம் தள்ளி விடுகிறோம், மத நம்பிக்கைகள் ஒன்றும் அனைத்தையும் உள்ளடக்கியதல்ல, அவை வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பேசும் ஒன்றல்ல என்று எண்ணிக்கொள்கிறோம். ஆதலால், முதன்மையில் மத ஆசிரியர்களாக இருந்தவர்கள்கூட சமூகம் மற்றும் சமூக மதிப்பீடுகள் பற்றி கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர். அக்கருத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானவை, குறிப்பாக பரந்த அளவிலான ஆதாரங்களைக் கொண்டு மதப் பிரிவுகள் சிந்தனைகளை உட்புகுத்தி வந்த காலகட்டமது.

நவீன காலத்திற்கு திரும்புவோமேயானால், தேசியம் எனும் கருத்தியல் சமூக ஒழுங்கை மறு கட்டமைப்பு செய்ய முயற்சித்தன. தேசியவாதமானது காலனியத்தை எதிர்த்திருக்கலாம், ஆனால் காலனிய ஆய்வுகளிலிருந்து கோட்பாடுகளை ஏடுத்தாளத் தயங்கவில்லை. இந்து மதத்தின் மேல்சாதியைச் சார்ந்த சமூக சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் போன்றவை புதிய வடிவிலான இந்து மத ஒழுங்குகளையும், சாதிய பாத்திரத்தையும் பரிந்துரைத்தன. ராஜா ராம் மோகன் ராய் பற்றியும், அவரது சமூக-மத சீர்திருத்தங்கள் பற்றியும் நாம் அறிந்தவர்களே, ஆனால் அவருடைய சமகாலத்தவரான செர்ஃபோஜி II, தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய குறுநில மன்னர் பற்றி குறைவாகவே நமக்குத் தெரியும்.  கல்வி முறையின் மீது கவனம் செலுத்தியதன் மூலம் அவர் வைதீகத்தை நோக்கி கேள்வி எழுப்பினார். அறிவொளி சிந்தனையாளர்களின் எழுத்துக்களைப் படித்ததன் மூலம், அறிவென்பது பகுத்தறிவின் நடைமுறையைச் சார்ந்திருக்கிறது, மேலும், அவை கல்வியின் மூலமே கற்பிக்கப்படுகின்றன என்று நம்பினார். அவர் தோற்றுவித்தப் பள்ளிகள் இக்குறிக்கோளை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே.  சரஸ்வதி மஹால் நூலகத்திற்காக அவர் சேகரித்த புத்தகங்கள், பொருள்கள் ஆகியவையும் அந்நோக்கத்திற்கானவையே.

அறிவு மரபை விமர்சனபூர்வமாகக் கேள்வி கேட்பதற்காக இவ்வியக்கங்கள் உருவாக்கப்படவில்லை என்றாலும், அவ்வப்போது அவை மேல்மட்டத்தை உரசிப் பார்த்தன. சாதியப் படிநிலையின் கருவானது மதத்தால் சட்டபூர்வமாக்கப்பட்ட நிலையிலும், சாதிக்கும் மதத்திற்கும் இடையிலான தொடர்பு பெரிதாக ஆய்வு செய்யப்படவில்லை. தங்கள் தாயகமான இந்தியா திரும்புவதற்காக ஆரியர்கள் ஆர்க்டிக் கண்டம் கடந்து வரவேண்டியிருந்தது என்னும் தனது கருத்திற்கப்பாலும் ஆரியர்கள் வேய்த இந்திய நாகரீகத்தையும், மேல் சாதி கலாச்சாரத்தையும் 19ஆம் நூற்றாண்டுகளில், பால கங்காதர திலகர்ஆதரித்தார். ஆனால் ஜோதிபா பூலேவோ ஆரியர்களின் வருகையை கீழ் சாதியினரின் ஒடுக்குமுறைக்கான தர்க்கபூர்வ விளக்கக் காரணமாகப் பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சூத்திரர்கள் எனப்பட்ட சுதேசிகளான பூர்வ பழங்குடிகளை ஒடுக்கிய பிராமணர்களே ஆரியர்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வையை திலகர் விரிவுபடுத்திப் பேசினார், ஆனால் பூலேவோ நிலவும் சமூகத்தை விளக்குவதற்காக அவற்றைக் கொண்டு கேள்வி எழுப்பினார். இரண்டு பார்வைகளுமே வரலாற்றுபூர்வமாக தவறானது, ஆனால் முக்கியமானது என்னவெனில், பூலே ஆழமான கேள்விகள் எழுப்பினார் என்பதே ஆகும்

பிராமணிய நம்பிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து சாதிய அதிகாரத்தை கேள்விகேட்டவர்களின் பட்டியல் இன்னும் இருக்கிறது. பெரியார் அல்லது ஈ.வே.ரா, கல்வியாளர் இல்லையென்றாலும், நிறைய கற்றரிந்தவராக அறியப்பட்டவர். அவருடைய கல்வித்துறை சகாக்களும் அப்படியே. இந்து தொன்மங்களில் காணப்பட்ட முரண்களைப் பெரியார் தீவிரமாக விமர்சித்தார், ஒரு பகுத்தறிவாளராக, அவை யாவும் இந்தோ ஆரிய மக்களின் புனைவாக்கம் என்று அத்தொன்மங்களை நிராகரித்தார். சமூக சமத்துவத்திற்கு ஆதரவான, குறிப்பாக பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

நான் இங்கே குறிப்பிட்ட நபர்கள் யாரும் நவீன பொருளில் பொது அறிவுஜீவிள் அல்ல. மேலான ஒரு சமூகத்தை அடைவதற்காக நடைமுறை யதார்த்தத்தை கேள்வி கேட்டவர்கள். அவரவர் தொழில்முறையின் அடிப்படையில் பெற்ற மதிப்பின் காரணமாக அச்சிந்தனையாளர்களின் பேச்சுக்களை மக்கள் பொருட்படுத்தினார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளோ அல்லது அவற்றின் ஒத்த தன்மையோ அல்ல விஷயம், மாறாக காலத்துறிய பிரச்சினைக்கேற்ப கேள்விகளின் தன்மை மாறியபோதும் ஒவ்வொன்றையும் அவர்கள் பகுத்தாய்ந்ததே விஷயம். அக்கேள்விகள் ஏதும் தன்னிச்சையானவையல்ல. முறையான விமர்சனபூர்வ பகுத்தறிவினால் வழிநடத்தப்பட்டவை.  மேலும், கேள்வி கேட்பவர்கள் முக்கியமான வரலாற்றுரீதியான மாற்றங்கள் உருவான தருணங்களில் தீர்க்கமாக குரல் எழுப்பியவர்கள், எழுப்புபவர்கள்.

வரலாற்றில் மாற்றம் ஏற்பட்ட தருணங்களும், சமூகத்தை புதுவிதமாக ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டடைவதும் இந்தியாவில் முன்னும் பின்னும் நடந்த வண்ணமே இருந்திருக்கிறது. சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளையும் சமூகத்திற்கு அவை எங்கணம் வடிவம் கொடுக்கின்றன என்பதையும் புரிந்துகொள்வதற்கு ஆக்கப்பூர்வமான முறைகள் நம்மிடையே இப்போது உள்ளன. அவற்றுக்கிடையிலான தொடர்பு ஆய்வு செய்யப்பட வேண்டியவை. அத்தகைய ஆய்வுகளைச் செய்ய கவனிக்கத்தக்கப் பாத்திரமாற்றும் பொது அறிவுஜீவிள் தேவை: அதுமட்டுமின்றி, நம்முடைய அறிவு மரபில் உள்ள பகுத்தறிவு சிந்தனை மரபுகள் பற்றி எடுத்துரைக்கவும் அவர்கள் தேவை. ஆனால், இப்போக்கு தற்போது மெல்ல அழிந்து வருகிறது.

காலனிய எதிர்ப்பிற்காக தோன்றிய மைய நீரோட்ட இந்திய தேசியவாதமும், தாராளவாத ஜனநாயகத்தின் தோற்றமும், மதச்சார்பற்ற இயக்கங்களாக இருக்கும் நோக்கோடு பொது அறிவுஜீவிளின் செயல்பாடுகள் கண்கூடத் தெரிவதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்தன. நிறைய பேர் அறிவுஜீவி பாத்திரத்தைப் பூண்டனர், குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னர். பரந்தளவிலான விவாதங்களை அவர்கள் நடத்தினார்கள். பிந்தைய சம்பவங்கள், அது அவசர காலகட்டமோ அல்லது குறிப்பிட்ட மதத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையோ, அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடப்பதை தடுக்கும் விதமாக பொது அறிவுஜீவிளின் தேவை பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகரித்தது. நிகில் சக்கிரவர்த்தி, ரொமேஷ் தாபர் மற்றும் பலர் தணிக்கை வடிவங்களையும், மாற்றுக் குரல்களை நசுக்குவதற்கான முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தனர்.

இன்றைக்கு, பல்வேறு துறைகளில் நிபுனர்கள் பலர் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பெரும்பாலும் தம் துறைக்கப்பால் இருக்கும் வெளி உலகம் பற்றிய பிரக்ஞை இன்றி இருக்கின்றனர். சில வேளைகளில் அந்நிபுணர்கள் பொது அறிவுஜீவிளுக்கு மாற்றாக கருதப்படுகின்றனர். ஆனால் இரு தரப்பினரும் ஒன்றல்ல. முன்பைக் காட்டிலும் இப்போது பல கல்வியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதிகாரத்தை எதிர்க்கத் தயங்குகிறார்கள், இது சுதந்திர சிந்தனைக்கு எதிரானது என்றாலும், அவர்கள் எதிர்ப்புக்கு அஞ்சுகின்றனர். ஏனென்றால் அவர்கள் தொல்லைகளின்றி அறிவை முன்னெடுக்க விரும்புகிறார்கள், அல்லது அதிகாரத்தின் ஆணைக்குட்பட்டு அறிவை துறக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

பொது அறிவுஜீவிகளின் பாத்திரத்தை விளக்கி நிறைய எழுதப்பட்டுள்ளன. அத்தகைய நபர் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்கின்றி சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கருதப்படுகிறார். மேலும், எவரின் பிரச்சாரமாக இருப்பினும் எல்லாவற்றையும் பற்றிய கருத்துரீதியான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். பகுத்தறிவுடன் கூடிய விமர்சனங்களே அவசியமான தொடக்கப்புள்ளி. ஒரு பொது அறிவுஜீவி என்பவர் தன்னை ஒரு சுதந்திரமான நபராகவும், அதற்கும் மேலாக மற்றவரின் பார்வைக்கு அப்படிப்பட்டவராகவும் திகழ வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்முறை அந்தஸ்த்தானது ஒருவர் சுதந்திரமாக செயல்படுவதை எளிதாக்குகிறது. அத்தகைய அந்தஸ்தில் இன்றைய பொது அறிவுஜீவிகள் இருப்பதோடு, குடிமக்களின் உரிமைகள் யாவை, குறிப்பாக சமூக நீதிக்கான பிரச்சினைகள் பற்றிய அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர். மேலும், இவ்விவகாரங்களை பொதுக்கொள்கை பிரச்சினையாக எழுப்பும் ஒரு எத்தனமும் அவர்களிடம் இருக்கிறது.

சமூகத்திற்காகப் பேசுவதும் அதை பேசுவதற்கான தார்மீக அதிகாரத்தைக் கோருவதுமே விமர்சகருக்குரிய நீதி. தொழிற்முறை மரியாதையையும், சமூக அக்கறையையும் இணைத்து செயல்படுவதானது சில வேளைகளில் ஒருவருக்கு தார்மீக அதிகாரத்தையும், மக்கள் ஆதரவையும் பெற்றுத் தரக்கூடும். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதி, ஆனால் வெளிப்படையாக உணரக்கூடிய ஒன்றல்ல. கடந்த காலங்களில் சமூகத்திலிருந்து விலகி இருந்தவர்கள் மாற்றங்களைப் பரிந்துரைத்தபோது, அதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை என்று நம்பப்பட்டது. ஆனால் எப்போதும் அப்படி இருக்கவில்லை. ஒரு சில சாதகங்கள் இருக்குமென்றாலும், ஏதோவொரு அரசியல் கட்சியோடும் முறைப்படியான ஒரு இணைப்பானது சுதந்திர சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கான பரிந்துரைகளுக்கும் இடையூறாக இருக்கக்கூடும்.

ஒரு இயல்பான மனப்பான்மையோடு, தொழில்முறை நிபுணர்களும் கல்வியாளர்களும் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகையோர், அவர்கள் மட்டுமென்றில்லை எவரும் மாற்று சிந்தனைக்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கலாம், பரந்த சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றியும் பேசலாம். பகுத்தறியப்பட்ட, தர்க்கபூர்வ ஆய்வுகளிலிருந்தே அத்தகைய சிந்தனைகள் எழும். இருப்பினும், பகுத்தறிவுடன் கூடிய விளக்கங்களைத் தருவதற்கான உரிமைக்காக இல்லாவிட்டாலும் எவ்வளவு கவனமாகப் பேசினாலும் மாற்று சிந்தனை என்று சொல்லப்படும் பரந்த பொருளிலான சிந்தனை முறைக்குக்கூட ஆதரவாகப் பேசத் தயங்குகின்றனர். எந்தத் தயக்கமுமின்றி புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன, கசக்கி எரியப்படுகின்றன. மேலும் புத்தகங்கள் எரிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களிலுமிருந்தும் மதம் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு அடிபணிந்து அல்லது அரசின் தலையீட்டினால் பாடதிட்டங்களையே மாற்றுதல் ஆகியவற்றிலிருந்து இது வெளிப்படையாகத் தெரிகிறது. நன்கு செயல்பட்டுவந்த பதிப்பாளர்கள்கூட இடுப்பொடிந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் இத்தகைய நடவடிக்கைகள் கல்வியாளர்கள் மத்தியிலோ அல்லது தொழில்முறையாளர்கள் மத்தியிலோ ஏன் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்துவதில்லை?  வழக்கமாகச் சொல்லப்படும் பதில் என்னவெனில், இச்செயல்களைத் தூண்டுபவர்களுக்கு அரசியல் அதிகார பின்புலம் இருக்கிறது என்பதே. ஆனால் அது மட்டுமே காரணமா?

கடந்த பத்தாண்டுகளில் சுதந்திர வெளி குறுகிக்கொண்டே வருவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அந்நிலை அப்போது எதிர்க்கப்பட்டது, இப்போது நமது முறை. மரபார்ந்த அதிகாரத்தைக் கோருபவர்களை கேள்வி கேட்பதும், பொறுப்புள்ள நடவடிக்கையைக் கோருவதும் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும், குறிப்பாக நீதி மறுப்பு நிகழும்போது அது கண்டிப்பாக நிகழ வேண்டும். சமூக வலைதளங்கள் ஓர் சுதந்திர வெளியாகக் கருதப்பட்டது, ஓரளவுக்கு அது உண்மைதான். ஆனால் சமூப காலங்களில் மதவாத செயல்பாடுகள் குறித்து, சமகால அரசியல் குறித்து விமர்சனபூர்வமாக கருத்து தெரிவிக்க பலர் அஞ்சுகின்றனர். அதிலும் முக்கியமாக மத அடையாளங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதம் பற்றிய கற்பனையான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களது வெறுப்பு அரசியல் பிரச்சாரங்கள் என்று வரும்பொழுது நாம் நேருக்கு நேர் கேள்வி கேட்பதில்லை.

அப்படி கேள்வி கேட்பதென்பது, மத நோக்கங்களைக் கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் நிறுவணங்கள், அமைப்புகள் தங்கள் அதிகாரத்தை மதம் அல்லாத காரணங்களுக்காகப் பயன்படுத்துவதை விமர்சிப்பது என்பதாகும். சமீபத்தில் தோன்றிய மதமானாலும் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள அவையும் சட்டங்களை, ஒழுங்குகளை வகுக்கின்றன. அவர்களுடைய செயல்பாடுகள் கொலை, வல்லுறவு மற்றும் சீர்குலைவை விளைவிக்கலாம். மதங்கள் வன்முறையை போதிப்பதில்லை என்று அவ்வமைப்புகளோடு தொடர்பற்றவர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். ஆனால் பிரச்சினை அதுவல்ல, அனைத்து மதங்களும் நற்குணங்களை போதிக்கன்றன என்பது தெரிந்ததே, ஆனால், கேள்விக்குரியவை அம்மதிப்பீடுகள் அல்ல மாறாக, மதத்தின் பெயரால் அரங்கேறும் அமைப்புகளின் நடவடிக்கைகளும், அதன் நம்பிக்கைகளும்; அந்நடவடிக்கைகள் எப்போதும்  மத ஒழுங்குக்குள் மட்டும் இருப்பதில்லை. வன்முறையையும், பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுக்கத் தயங்காத அத்தகைய அமைப்புகள் நமக்கொன்றும் புதிதல்ல. நாமறிந்த இந்துமதம் மற்றும் இஸ்லாம் சீக்கியம் போன்ற மதங்களும் அதற்கு உதாரணம். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக, அதை மதத்தின் பெயரால் செய்தாலும், அவற்றுக்கெதிராக சட்டங்கள் இயற்றப்படுமா?  அது அவசியமானதே என்றாலும், தண்டனை மட்டும் போதாது. மதங்களுக்காதரவாக அவை ஏன் நடக்கின்றன என்பது பகுப்பாயப்பட்டு, அதை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும். மத நம்பிக்கை உடையவர்கள் இத்தகைய வன்முறை செயல்களை ஆதரிக்கின்றனரா? இல்லையென்றால், தம் மதத்தின் அடையாளத்தை முன் வைத்து வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றை புரியும் அப்பயங்கரவாதிகளிடமிருந்து அத்தகையவர்கள் தம்மை துண்டித்துக் கொள்ள வேண்டாமா?

பொது அறிவுஜீவிளின் வீழ்ச்சிக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. நான் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். மிகவும் வெளிப்படையான அதே சமயம் பெரிதாக ஒப்புக்கொள்ளப்படாத நவதாராளவாதம் தோற்றுவிக்கும் பாதுகாப்பின்மை ஒரு முக்கிய காரணமாகும். அது கொண்டு வந்திருக்க வேண்டிய பொருளாதார ஏற்றத்தின் விளைவாக, ஆனால் தவறாகிவிட்ட ஏற்றத்தினால் எழுந்தவை அவை. வேலை வாய்ப்பு மிகவும் போட்டிக்குரியதாகிவிட்டது, மோதல் போக்கை இது இன்னும் அதிகப்படுத்துகிறது மேலும், மனித உறவுகளை சார்ந்திருப்பதை மெல்ல மெல்ல சீரழிக்கின்றது. செல்வக் குவிப்பில் அருவருக்கத்தக்க ஏற்றத்தாழ்வு இந்த மோதலை மேலும் வலுப்படுத்துகின்றன. ஒழுக்கக் கோட்பாடுகள் பகட்டான விளம்பரங்கள் மூலம் வெறும் ஜிகினா வாசகங்களாக மாற்றப்பட்டு விட்டன. ஊழல் என்பது சகஜமான ஒன்றாக ஏற்கும் நிலை வந்துவிட்டது. செல்வந்தர்கள் தொழும் பொது தெய்வமாக பணம் மாறிவிட்டது. மற்றையரோ வீழும் துளிகளுக்காக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். சமத்துவத்தைக் கோரும் உரிமை கோருவதில் உள்ள மனஎழுச்சிகளுக்கும், புதிய வகையிலான சாதி மற்றும் மத அதிகாரங்களால் அவை மறுக்கபடுவதற்கும் இடையே மோதல்கள் நிலவுகின்றன.

நவ தாராளவாதக் கலாச்சாரமும், பொருளாதாரமும் அவ்வளவு எளிதாக மாற்றப்படக் கூடியதல்ல, ஆனால் அதன் தீமைகளைக் குறைக்க முடியும். ஆனால், வளங்கள், நலன்கள் மற்றும் சமூக நீதிக்கான மக்களின் உரிமைகள் மீது சமூகத்தின் வேர்கள் ஊன்றப்பட்டிருக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பின் தேசிய-அரசு உருவாக்கப்பட்டபோது இருந்த பிரச்சினை இதுதான். 1960கள் மற்றும் 70களில், குடிமக்களுக்கு சம உரிமைகள் நிறைந்த ஒரு சமூகத்தை, கோட்பாட்டளவில் மட்டுமின்றி யதார்த்தத்திலும் எப்படி உருவாக்குவது என்று நடந்த விவாதங்களை நான் நினைவுகூர்கிறேன். அத்தகைய விவாதங்கள் தொடர வேண்டுமென்றால் நாம் பொது அறிவுஜீவிகள் பக்கம் திரும்ப வேண்டும், ஒரு துடிப்பான சமூகத்திற்கு அது அவசியமானதும்கூட; மேலும் கேள்விகள் கேட்கப்பட வேண்டுமென்றால், அவர்களை முன்னணிக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் அதற்கும் அப்பால், அத்தகையோர் கேட்கும் கேள்விகள் சரியானதே என்று புரிந்துகொள்ளும் சமூகமும் வேண்டும்.

எது விவாதிக்கப்பட வேண்டும், ஏன் விவாதிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்ற, விமர்சனபூர்வ பகுப்பாய்வுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றும் ஒரு சமூகத்தை நாம் எப்படி உருவாக்குவது? அவ்வெதிர்வினையானது பரிந்துரைக்கப்பட்ட அனைத்திற்கும் ஆதரவு என்றிருக்க வேண்டியதில்லை, குறைந்தபட்சம் மாற்று சிந்தனைகளை, பரிந்துரைகளை விவாதத்திற்குட்படுத்துவது என்றாவது இருக்கலாம். இது ஒரு தொடக்கத்தைக் கோருகிறது. கல்வியூட்டப்பட்ட மக்களாகுதல், பொது அறிவுஜீவிகளின் பாத்திரத்தை வரவேற்கும் மக்களாக மட்டுமின்றி, அவர்களின் தேவையை அங்கீகரிக்கும் அறிவைப் பெற்ற மக்களாக மாறுதல் அவசியமாகிறது.

கற்றரிந்த மக்களாகுவதற்கு, நம்மை நாமே எப்படி கற்பித்துக் கொள்வது? பல்வேறு துறைகளில் இருக்கும் தொழில்முறையினர் மற்றும் தங்களது தொழில்முறை நிலைப்பாட்டிலிருந்து மாற்று அதிகாரத்தை வரையறுத்துக் கொள்ளும் பொது அறிவுஜீவிகள் ஆகிய இருதரப்பிற்கும் இக்கேள்வி பொருந்தும். இன்றைக்கு, நம்மை நாமே கற்பித்துக் கொள்வதற்கான இரண்டு வழிமுறைகள் உள்ளன. வாய்மொழி வடிவில், முறைசாரா மறைமுகக் கல்வியாக காட்சி ஊடகங்கள் மூலம், இரண்டாவது முறைசார் கல்வி நிறுவனங்கள் மூலம்.  இணையம் என்பது இங்கு இடையகம். மற்ற இரண்டைப் போலவே இதுவும் முழு சமூகத்தையும் சென்றடைந்துவிடவில்லை. தொலைக்காட்சி அலைவரிசைகளோ, அரிதான எண்ணிக்கை தவிர, பங்கேற்பாளர்கள் சுழற் நாற்காலி ஆடுவது போல் நடக்கும் விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் ஒருவரை ஒருவர் போலச் செய்கின்றனர். அனைத்தும், முற்றிலுமாக அனைத்தும், அரசியலாக, அதற்கு சற்றும் தொடர்பில்லையென்றாலும், சமகால அரசியல் நோக்கிலேயேப் பார்க்கப்படுகின்றன. அதனால், ஒவ்வொரு நிகழ்ச்சியும், தேடலுடன் கூடிய விவாதங்களை அனுமதிக்காத போக்கைக் கொண்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களால் நிரம்பி வழிகின்றன. அவர்களின் பேச்சுகளைத் தாண்டி அரிதாகவே அந்நிகழ்ச்சிகள் உண்மைகளை ஆய்வு செய்கின்றன. மாற்று சானல்களுக்கே வழி இல்லையா என்று எனக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது, பொருளாதார ரீதியாக அது சிரமம் என்றால், குறைந்தபட்சம் ஒரு பண்பலையாவது? இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொள்ளாத பண்பலை! மாற்று சிந்தனைகள், தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவித்து, ஒற்றை தரப்புக்கப்பால் ஆய்வு செய்து, விமர்சனபூர்வ கேள்விகளால் உத்வேகம் அளிக்கும் ஒரு பண்பலை? எதிர்வரும் தேர்தெலுக்காக மட்டுமின்றி சமூகத்திற்காக, சிறந்த எதிர்காலம் பற்றிய சிந்தனையோடு குரல் கொடுக்கும் அக்கறை மிகுந்த குரல்கள் ஒலிப்பதற்காக பொருளாதார ரீதியாக நாம் எப்படி உறுதி செய்வது?

அடுத்து, முறைசார் கல்வி என்று மற்றதொரு வழிமுறை உள்ளது. இதை நாம் இரண்டு மட்டங்களாகப் பார்க்க வேண்டும்: கல்வியின் உள்ளடக்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சுதந்திரம். கல்வியானது,  கல்வியாளர்களின் கையிலிருந்து, அரசியல்வாதிகள் மற்றும் கலாச்சார மற்றும் மத நிறுவனங்களாக பாவனை செய்யும் அரசியல் அமைப்புகளின் கையில் இன்று சென்றுவிட்டது. அரசியல்வாதிகள் அறிவுஜீவிகளை எங்கணம் பொருட்படுத்துகின்றனர் என்பதை – ஒருவேளை அவர்கள் அங்கணம் பொருட்படுத்துவதாயின் - இவ்விஷயம் முக்கியமானதாக்குகிறது.

சரியாகச் சொல்வதானால், கற்றலின் சாரமானது ஒரு நபரை ஆய்வு பூர்வமான, தர்க்க பூர்வமான மற்றும் சுதந்திரமாக, படைப்பாற்றல் மிக்க வகைகளில் சிந்திக்கத் தூண்டுதலாக இருக்க வேண்டும். அறிவானது தொழில்நுட்பமாக வடிவெடுக்குமிடத்து அவ்வறிவை உற்பத்தி செய்வதற்கான, அதை தக்க வைத்துக்கொள்வதற்கான குறிப்பிட்ட சூழலை அது கொண்டிருக்கின்றது எனும் விழிப்புணர்வை பகுத்தறிவின் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும். சூன்னியத்திலிருந்து அவை வடிவெடுத்திருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அந்த நூற்றாண்டில்தான் நடந்திருக்க வேண்டும். தேவைப்பட்ட தொழில்நுட்ப அறிவோ, அது தொடர்பான அறிவோ இன்றி அவை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்க முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட கால வளர்ச்சி தேவைப்படுகின்றது, எத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டது என்பதற்கு வரலாற்று அறிவியலாளர்கள் ஆதாரம் கண்டுவிடலாம். ஒரு கண்டுபிடிப்பை சாத்தியமாக்கிய தொழில்நுட்பமும், அறிவும் எவ்வாறெல்லாம் பரிணமித்தன, வளர்ந்தன என்பதை அவர்கள் அவதானித்துவிடலாம்.

நமது சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி பற்றி பேச வேண்டுமெனில், நாம் கடந்தகாலத்தில் அறிவியலின் பாத்திரம் குறித்து - அறிவு தளத்திலும், தொழில்நுட்பம் வாயிலாக பயன்பாட்டிலும் - என இரண்டு தளங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னரே இந்தியாவில் இருந்தது என்று சொல்வதற்கு பதில், வரலாற்றின் போக்கில் அறிவின் இயல்பு, தொழில்நுட்பத்தின் இயல்புகளையும், அவற்றைக் கொண்டு நாம் என்ன செய்தோம் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். 15ஆம் நூற்றாண்டில் கேரளத்து கணிதவியலாளர் ஒருவர் நுண்கனிதத்தை (calculus) கண்டுபிடித்திருந்தால், அறிவின் வளர்ச்சிக்காக அக்கண்டிடுப்பு எவ்வகையில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஏற்கணவே உள்ள அறிவு பற்றிய செய்திகளைக் கொடுப்பதே கல்வியின் முதல்படி. இருக்கும் அறிவின் இடத்தில் கற்றல் நடைமுறையின் வாயிலாக புதிய அறிவை பதிலீடு செய்யும் அவசியம் இருக்கிறது என்று மதிப்பீடு செய்வது அடுத்தபடியாகும். பெரும்பாலான பள்ளிகளில், இன்றைய கல்வி திட்டங்கள் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை. பள்ளிக்கூடங்களின் பற்றாகுறைக்கும், இருப்பவற்றின் மோசமான நிலைக்கும் திட்டமிட்ட கொள்கைகளே காரணமாக இருக்கலாம். மேலும்,  மக்கள் படிப்பறிவு பெற்றுவிடுவார்கள் என்பதோடு அவர்கள் கற்றரிந்தவர்களாகி விடுவார்கள் எனும் அச்சமும் அதற்கு காரணமாக இருக்கும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் கடந்த அரை நூற்றாண்டுகால புறக்கணிப்புக்கு இதுவே காரணம். அதோடு மட்டுமின்றி, பல்கலைக்கழக அளவில், சரி அதைக்கூட விட்டுவிடுவோம், உயர்நிலைப் பள்ளி அளவில்கூட அறிவைக் கையாள்வதற்கான எவ்வித தயாரிப்புகளும் இல்லை. ஆனாலும், மேலும் மேலும் பல்கலைக்கழகங்களைத் திறக்க தயாராகிக் கொண்டிருக்கிறோம், ஐ.ஐ.டிக்கள், ஐ.ஐ.எம்கள்; இது போதாதா? இந்நிலையானது கல்வியை ஓர் அர்த்தமற்றதாக நீர்த்துப் போகச் செய்கிறது – உண்மையில் அதை மீச்சிறு பொது வகுத்தி (Least Common Denominator) போலாக்கிவிட்டது. இதனை நாம் ‘மீ.பொ.வ கல்வி’ (LCD education) எனலாம். கேள்வி கேட்கும் அறிவுக்குத் தூண்டுதலாக இருக்கவேண்டிய சிந்தனை முறைகளும், பொது அறிவுஜீவிகளின் கருத்துகளோடு எதிரொலிக்கும் வகையான அறிவு வளர்ச்சியையும் நடப்பு கல்வி முறையானது அடிப்படையிலேயே முடக்கிப் போடுகிறது. இவ்வமைப்பையும் கடந்து சுதந்திரமாக, படைப்பாற்றலுடன் சிந்திக்க பழகிக் கொண்டவர்களுக்கு உண்மையில் நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். ஆனால், நாம் எதிர்பார்க்கும் விமர்சன வட்டத்திற்குள் அவர்கள் வருவதில்லை. கல்வியானது மாணவர்களைக் கேள்வி கேட்கவும், சுதந்திரமாக சிந்திக்கவும் தூண்டுதலாக அமையுமாயின், நமக்குக் கிடைக்கக்கூடிய ஆற்றல் மிக்க, சிந்திக்கும் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்கால பொது அறிவுஜீவிகள் பேசக்கூடிய பிரச்சினைகள் எவையாக இருக்கலாம் என்ற கேள்வி எழலாம். சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு, சொல்லப் போனால் பெரும்பான்மை இந்தியர்களுக்கு நல்லாட்சி என்பது காலத்திற்கு ஒவ்வாத காலனிய வேர்களை இன்னமும் பற்றிக்கொண்டிருக்கும் தற்கால வாழ்வாதாரச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதாகும். நியாயமற்ற தேசிய செல்வப் பங்கீடே வறுமை நிலை உயரக் காரணம். காலனியக் கொள்கையின்படி உருவாக்கப்பட்ட சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான முன்னுரிமைகளே இன்றளவிலும் நிலவுகின்றன. காலனிய நிர்வாக முறையானது பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்கள் எனும் பேதங்களைக் கண்டுபிடித்து, மத அடையாள அரசியலை ஊக்குவித்தது. இவையே இப்போது சாஸ்வதமாகக் கருதப்படுகின்றன. அவை ஜனநாயக செயல்பாட்டை அனுமதிப்பதில்லை, ஏனென்றால் ஒரு ஜனநாயகத்தில், பெரும்பான்மை என திகழ்வோர் பிரச்சினைக்கு பிரச்சினை நிலைமாறக் கூடியவர்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் இடஒதுக்கீட்டை நிரந்தரமாகக் கொண்டிருப்பதென்பது, அவற்றால் சிறு அனுகூலங்கள் கிடைப்பதானாலும், மதம் மற்றும் சாதிய அடையாளங்களை மீண்டும் வலியுறுத்துவதாகும். நமது சமூகத்தையும், பொருளாதாரத்தையும் மாறுபட்ட வகையில் ஒழுங்குபடுத்துவதில், அதாவது காலனிய அடையாளங்களை புறந்தள்ளிவிட்டு சமத்துவமான செல்வப் பங்கீட்டை மேற்கொள்வதே தீர்வாகும்.

மதச்சார்பற்ற ஒரு சமூகமே வெற்றிகரமான ஜனநயாக சமூகமாகத் திகழமுடியும்; அனைத்து மதங்களின் ஒன்று சேர்ந்த இருப்பிற்கப்பால் முன்னேறும் ஒரு சமூகம் என்பதே இதன் பொருள்; அதாவது, குடிமக்களாக சமூக உறுப்பினர்கள் அனைவருக்கு சமமான சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் இருப்பது, மதச்சார்பற்ற வகையில் அவ்வுரிமைகளைப் பிரயோகிக்கும் உரிமை இருப்பது; அவ்வுரிமைகளை பிரயோகிப்பதில் மத நிறுவனங்களின் தலையீடற்ற ஒரு சுதந்திர சமூகம்; தம் விருப்பப்படி எந்தவொரு மதத்தில் வேண்டுமானாலும் இருப்பது அல்லது இல்லாதிருப்பதற்கான சுதந்திரம் நிறைந்த ஒரு சமூகமாக அது இருக்க வேண்டும். மதச்சார்பின்மை என்றால் என்ன, ஜனநாயகத்திற்கு அது ஏன் அவசியம் மற்றும் மதச்சார்பின்மை நடைமுறையை பாதுகாக்கும் முறைகளை விளக்குவதில் பொது அறிவுஜீவிகளை ஈடுபடுத்தும் ஒரு சமூகமாக அது இருக்க வேண்டும்.

நம் சமூகத்தில் பொது அறிவுஜீவிகளே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்கள் ஒன்றும் வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் மேற்சொன்னதுபோல் அவர்களுக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. தற்போதைய அறிவுஜீவிகள் முந்தைய அறிவுஜீவிகள் ஆற்றிய பாத்திரத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தை ஆற்றவில்லையென்றாலும், நம் காலத்திலும் அவர்களுக்கான தேவை இருப்பதை அங்கீகரிக்கும் வரலாற்று தேவை உள்ளது. நமது சமூகத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான புதிய கோணங்களை அவர்களின் முன்னோடிகள் நமக்கு வழங்கினார்கள். மனித நிலைகள் பற்றிய பகுத்தவறிவுடன் கூடிய தர்க்கபூர்வமான வாதங்களைக் கொண்டு சமூகத்தை கட்டுப்படுத்தியவர்கள் மீது மதச்சார்பற்ற வகையில் ஒரு தார்மீக அதிகாரத்தை செலுத்தியதன் மூலமும்; மிக சமீபமாக காலனிய ஆதிக்கத்தை மறுத்தலித்து கேள்வி கேட்டதன் மூலமும் அம்முன்னோடிகள் அதைச் செய்தனர். முந்தைய அவைதீகர்கள் நனவுபூர்வமாக அவர்களை அங்கணம் ஊட்டி வளர்த்தனரா? விமர்சனபூர்வ பகுத்தறிவை கைகொள்ளும் பொது அறிவுஜீவிகளே இம்மரபின் வாரிசுகள்.

இவ்வுரையின் தலைப்பு கேள்வி கேட்பது பற்றியது என்பதால், ஒரு நீண்ட கேள்வியுடன் எனது உரையை முடித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய, தொடர்புடைய கேள்விகள் கேட்கக்கூடிய சிந்தனையாளர்கள் பற்றாக்குறை ஏதும் நம்மிடையே இல்லை. ஆனால், பெரும்பாலும் குரல்கள் கேட்கவேண்டிய தருணங்களில் அமைதியே நிலவுகின்றன. அனுசரித்துப் போவது நமக்கு அனுகூலமாக இருக்கிறதா? கேள்விகேட்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி நாம் அஞ்சுகிறோமா?  சிந்திப்பதற்கான, மேலும் கூட்டாக சிந்திப்பதற்கான ஒரு சுதந்திர வெளி நமக்குத் தேவைப்படுகிறதா?

(விரிவுரையிலிருந்து சற்றே விரிவுபடுத்தப்பட்ட கட்டுரை இது. விரிவுரைக்கான முதல் பிரதி மீது கருத்துரை கொடுத்ததன் மூலம், என்னுடைய சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள உதவி செய்த அமித் பாதுரி, தீபக் நய்யார் மற்றும் நீலாத்ரி பட்டாச்சார்யா ஆகியோருக்கு நன்றி).

நன்றி: http://www.thebookreviewindia.org/.  புக் ரிவியு நிறுவனத்தார் மற்றும் ரொமிலா தாபர் ஆகியோரிடமிருந்து உரிய அனுமதி பெற்று இக்கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


நன்றி: அகம் புறம்