Sep 20, 2016

உண்மையை நோக்கி நகர்தல்....

திறனாய்வுக் கூட்டத்தில் பலவிதமான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கையில், தொடக்கத்தில் நானும் பெரியார், அம்பேத்கர் ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாட்டுடனேயே இருந்தேன். மாசெஸ் அமைப்பு தொடங்கியபோது நான் வெளியிட்ட்ட 18 நிமிட காணொளியில் கூட அம்பேத்கரின் உரையைப் பயன்படுத்தியுள்ளேன்: “இந்தப் பக்கம் வரத் தயாராக இல்லாத அவர்கள் வருவார்கள். அவர்களை இந்தப்பக்கம் இழுக்க... அவர்களுக்கு அதை சாத்தியப்படுத்திக் கொடுப்போம்.” (2012இல் வெளியிட்டது, என்னுடைய அந்த காணொலியில் உள்ள தவறுகள் பற்றி இன்று எனக்கே பல விமர்சனங்கள் உண்டு! பகுதி 1: https://www.youtube.com/watch?v=tsJ... , பகுதி 2: https://www.youtube.com/watch?v=Xuy... - அம்பேத்கர், பெரியார் மேற்கோள் வரும் பகுதி.) ‘களப்பணி’ எல்லாம் முயற்சித்துப் பார்த்துவிட்டு, எனக்குக் கிடைத்த அனுபவங்களின், வைக்கப்பட்ட ‘அவதூறுகளின்’ காரணமாகத்தான் நான் அதிலிருந்தெல்லாம் விலகி, முதலில் மார்க்சியத்தை சரியாகக் கற்று அதை மற்றவர்களிடத்து கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்வோம் என்று ஒதுங்கிவிட்டேன் என்று கூறினேன்.
வரலாற்று வளர்ச்சி எனும்போது அது எல்லாருக்கும் பொருந்தும், நானும் அப்படித்தான். மெல்ல மெல்ல மார்க்சியத்தைக் கற்று, இன்று அதன் அறிவியல்தன்மையை உணர்ந்ததால்தான் ஒரு கட்டத்தில் “நான் பெண்ணியவாதி அல்ல மார்க்சியவாதி” என்றேன். அதேபோல் பலதையும் ‘இணைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற ‘போலியான, சுயநலம் மிக்க பூர்ஷுவா அரவணைப்பு’ மனநிலையிலிருந்து மாறி ‘கராரான’, ‘நேர்மையான’ விமர்சனங்களை வைக்கிறேன் அல்லது அவற்றோடு உடன்படுகிறேன்.
ஆய்களோ, தீர்வுகளோ, விமர்சனங்களோ, சொல்லாடல்களோ எது எப்படி இருப்பினும், அது உண்மையை நோக்கி நகர்வதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
வசுமித்ர பேசுகையில் (நினைவில் இருப்பதிலிருந்து), எனக்கு அம்பேத்கரை ரொம்ப பிடிக்குங்க! அவர் வாழ்ந்த வாழ்க்கையையோ, அனுபவித்த அவமானங்களையோ நானோ (நாமளோ) ஒரு துளி அனுபவிச்சிருந்தாக் கூட ஒண்ணு கொலைகாரனாகி இருக்கணும், இல்லன்னா தற்கொலை பண்ணிக்கணும்… ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு அந்த மனுஷன் இவ்வளவு உழைச்சு அந்த மக்களுக்காகவே கடைசி வரைக்கும் நின்னு போராடியிருக்காரு….. ஆனால் அவர் முன்வச்ச தீர்வு போதுமான்னா போதாது!
தோழர் முருகன் பதிலளிக்கையில், அம்பேத்கரை நீங்கதான் உங்களுக்கான தலைவரா மட்டும் பார்க்குறீங்க… நாங்க அவரை எல்லாருக்குமான தலைவராதான் பார்க்குறோம்…..
கூட்டத்தில் பேசும்போதே நான் சொல்லியிருந்தேன், சாதியப் பிரச்சினை மற்றும் மார்க்சியம் குறித்து நடந்துள்ள விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகள் மீதான விமர்சனங்கள், இதுவரை இந்நூல் குறித்து வந்த எதிர்வினைகள் எல்லாவற்றையும் தொகுத்து கூடிய விரைவில் ஒரு நூலைக் கொண்டுவரவிருக்கிறோம். தொகுப்புக்காக பல்வேறு ஆய்வுகளையும், நூல்களையும் படித்துவருகிறோம். அந்த வரிசையில், தன்னுடைய நூலுக்கு ரங்கநாயகம்மா அளித்தி சில பதில்களின் தொகுப்பாக ‘Caste and Class: A Marxist Viepoint’: A collection of Polemical Articles எனும் நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
அதில், அம்பேத்கர் மற்றும் சாதியப் பிரச்சினை பற்றி இரண்டு கேள்விகளும், இரண்டு பதில்களும் எனும் தலைப்பில் ஒரு உரையாடல் உள்ளது. அது பின்வருமாறு.
கேள்வி-1: அம்பேத்கரை முன்வைத்து நீங்கள் எழுதிய புத்தகத்தைப் படித்து நான் எவ்வளவு வருந்தினேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. உங்களுடைய மற்ற நூல்களையும் நான் படித்துள்ளேன். ஆனால் அம்பேத்கர் பற்றிய புத்தகம் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. அவரைப் படிக்காமலேயே நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
பதில்: அம்பேத்கரின் எழுத்துகளை படிக்காமல் நான் எப்படி அவ்வளவு மேற்கோள்களைக் கொடுக்க முடியும்? அவருடைய நூல்களில் எதெல்லாம் விமர்சிக்கத்தக்கதோ அதை நான் விமர்சித்துள்ளேன். அம்பேத்கரின் நூல் மூலமாகத்தான் நான் காந்தியின் சதியைப் பற்றி கற்றரிந்தேன். அம்பேத்கர் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படியே சொந்தம் கொண்டாடினாலும், எங்களுடைய தலையீட்டைக் கோரும் சில விஷயங்களையும் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஸ்டாலின் மற்றும் மாவோவைக் கூட விமர்சித்து நான் நிறைய எழுதியுள்ளேன். அதற்கும், அவர்களைப் பிடிக்காததுதான் காரணமா? இல்லை, பாராட்டுக்குரிய சில விஷயங்களில் எனக்கு அவர்களைப் பிடிக்கும். விமர்சனம் தேவைப்படும் விஷயங்களில் நான் அவர்களை விமர்சிக்கிறேன்.
சாதியம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் துன்பப்படும் மக்களுக்காக எழுதிய அம்பேத்கர் - சொத்துறவு, சுரண்டல் மிக்க உழைப்புசார் உறவுகள் பற்றியெல்லாம் புறக்கணித்துவிட்டு, பூர்ஷுவா அரசமைப்பில் நம்பிக்கைக் கொண்டிருந்தாரே, அது உங்களுக்குப் பரவாயில்லையா?
மார்க்சியத்தை ‘பன்றிகளின் தத்துவம்’ என்று சொல்லிவிட்டு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் விடுதலைக்காக ஏதேனும் கோட்பாட்டை அவரால் முன்வைக்க முடிந்ததா? அஷ்டாங்க மார்க்கத்தைப் (புத்தரின் தர்மம் எனும் பாதை) பின்பற்றுவதால் ஏழைகளுக்கு விடுதலைக் கிடைத்துவிடுமா? நீங்கள் வருத்தப்பட்டீர்கள் என்பதை அறிந்து நானும் வருத்தபப்டுகிறேன்; ஆனால், அதை நீங்கள் சற்று பொறுத்துக்கொண்டு, சரியான பாதை எது என்பதைக் கண்டறிய வேண்டும். நம் தலைவர்கள் சொல்லாதவற்றையும் நாம் கற்றரிய வேண்டும். அம்பேத்கர் ‘பயன்படமாட்டார்’ என்று நான் சொல்லவில்லை; அவர் ‘போதாது’ என்றுதான் நான் சொல்கிறேன். மக்களின் விடுதலைக்காக அவர் முன்வைத்த திட்டங்கள் போதுமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? சரி, குறைந்தது, ’பௌத்த அஷ்டாங்க மார்க்கம்’ போதுமானதா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பாமல் நாம் எப்படி கூட்டிலிருந்து வெளியே வருவது?
எனக்கும் அம்பேத்கரைப் பிடிக்கும்! ஆனால், அம்பேத்கரைக் காட்டிலும் உண்மையை அதிகம் பிடிக்கும்!

No comments:

Post a Comment