Jul 24, 2012

எனது மனுவைப் பார்பதற்கான பூதக்கண்ணாடி:


நான் ஒரு வலதுசாரியாகவோ, மதவாதியாகவோ இருந்திருந்தால், இதழாசிரியர்களிடம் மனமாற்றத்தைக் கோருவதற்குப் பதிலாக, அதுபோன்ற புகைப்படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நடிகைகளையும், பெண்களையும் சாடியிருப்பேன்.  அவர்களுடைய படங்களைப் போட்டு பதாகைகள் செய்து நடிகர் சங்கம் வாசலில் போராட்டம் நடத்தியிருப்பேன். எனது மனுவை இந்து முன்னணி அலுவலகத்தில் சேர்த்திருப்பேன்.
ஒரு மார்க்சியப் பெண்ணியவாதியாக நான் ‘உருவாக்குபவர்களிடம்’ பொறுப்பைக் கோருகிறேன். அவர்கள் தங்களின் இதழ்களில் வெளியிடும் கவர்ச்சிப் படங்கள் மூலம் பெண்களை பாலியல் பண்டமாக்குவதற்கும் பெண் பற்றிய தவறான கருத்தியல் தாக்கங்களை வளர்தெடுப்பதற்கும் பொறுப்பேற்கச் சொல்கிறேன். அது என்னை உண்மையில் கவலையில் ஆழ்த்துகிறது. முதலாளிகளுடைய மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்கான பேச்சுவார்த்தையே எனது மனு.
நம் காலங்களில் நிகழும் பல்வேறு சமூக அவலங்களிலிருந்து மக்கள் அந்நியப்பட்டுப் போயிருப்பதற்கும், கண்டு கொள்ளாமல் மௌனம் காப்பதற்கும் வெகுஜன ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அச்செயலுக்கு பெண் உடல் ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்டுகிறது.
ஒரு பெண்ணாக இது என்னைப் பாதிக்கிறது. பெண் உடலை இந்த வணிகமயச் சுரண்டல்வாதத்திலிருந்தும், பாலியல் பண்டமயமாக்கப்படுவதிலிருந்தும் மீட்டெடுக்க விரும்புகிறேன்.
நான் ஒரு வலதுசாரியாகவோ / மத அடிப்படைவாதியாகவோ / பிற்போக்குப் பெண்ணியவாதியாகவோ (இரண்டுக்கும் பொருத்தமேயில்லை) இருந்தால், இந்நேரம் ‘கண்ணியமான’ உடையைக் கோரி நீதிமன்றப் படிகள் ஏறியிருப்பேன். ‘பர்தா’ உடைக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருப்பேன்.
என் கட்டுரைகளைப் படித்தவர்கள், மதவாதிகளுக்கு என்னுடைய பதிலுரைகளைப் படித்தவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
நண்பர்களே சாக்கு போக்குகள் வேண்டாம்……..
நன்றி,
கொற்றவை.

தமிழ் இதழ்களிடம் ஓர் வேண்டுகோள் – ஆபாசப் படங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்மதிப்பிற்குறிய ஆசியர் அவர்களுக்கு,
உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்து, பல சவால்களுக்கிடையில் செய்திகளை, தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கு முதலில் உங்களுக்கு நாங்கள் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகை கருதப்படுகிறது. ”வாள் முனையை விட பேனா முனைக் கூர்மையானது” என்றொரு சொல்லாடலை ஆங்கில ஆசிரியர் எட்வர் புல்வர்-லைட்டன் என்பவர் உருவாக்கினார். நாங்களும் அதை நம்புகிறோம்.
அத்தனை அற்புதமானக் கூர்வாளைக் கொண்டு நீங்கள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் பத்திரிக்கைகளில், இதழ்களில் ஆபாசப் படங்களை வெளியிடுகிறீர்கள் என்று காணும்போது வேதனை அடைகிறோம். உங்களின் இந்த பொறுப்பின்மையைக் கண்டு வெட்கப்படுகிறோம். ஒரு புறம் பெண்களுக்கெதிராக அரசு, தரகர்கள், அதிகார வர்க்கத்தினர், ஆண்கள் செய்யும் வன்கொடுமைகளைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். மறுபுறம், நடிகைகள், பெண்களின் உடல் பாகங்களை (பாலியல் உணர்வைத் தூண்டும் வகையான) அதாவது கவர்ச்சி, ஆபாசம் என்று சொல்லக்கூடிய படங்களையும் செய்திகளையும் வெளியிடுகிறீர்கள். உங்களின் இந்தச் செயலை “சதை வியாபாரம்” என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் வெளியிடும் இந்த ஆபாசப் படங்களால் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்பெறுவதாகாவும், அது பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைகளுக்கு வித்திடுவதாகவும் நாங்கள் கருதுகிறோம். அக்குற்றங்களுக்கு மறைமுகக் காரணிகளாக உங்களை, உங்கள் பத்திரிகையை, இதழைப் பொறுப்பாளராக்குகிறோம். இப்படி தூண்டப்பெறும் ஆண்கள் பெரும்பாலும் குழந்தைகளை, பதின்பருவ வயதினரை அதிகமாகச் சுரண்டுகின்றனர்.
மிஸ் எனும் இதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது “பாலியல் பண்டமயமாக்கப்படும் கலாச்சாரத்தில், பெண்கள் (குறிப்பாக) தங்களைத் தாங்களே மற்றவர்களுக்கான நுகர்வுப் பொருளாக காணும் நிலைக்கு உள்ளாகிறார்கள்.  இந்த பாலியல் பண்டமய  அகவயப்படுத்துதல் பல்வேறு மன நலச் சிக்கலோடு தொடர்பு படுத்தப்படுகிறது. (மருத்துவரீதியான மன அழுத்தம், “உடலை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பழக்கம்”), உணவு உண்ணும் கோளாறு, உடல் பற்றிய வெட்கம், சுய-மதிப்பு மற்றும் வாழ்வு நிறைவு மீதான கேள்விகள், மனநிலை செயல்பாடுகள், இயக்கு தசை செயல்பாடுகளில் சிக்கல், பாலியல் பிறழ்ச்சி, அரசியலில் தலைமையை அனுகுதலில் பின்னடைவு மற்றும் அரசியல் பலாபலன் அடைவதில் சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகிறது.  எல்லா இனப்பிரிவு பெண்களிடமும் இந்த பண்டமய அகவயப்படுத்துதலானது ஆணை விட அதிகமாகப் பாதிக்கிறது.” *
பெண்களைப் பாலியல் பண்டமாகச் சித்தரிப்பதற்கும், பெண்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை பரப்பவதற்கும் உங்கள் வெளியீடுகள் ஒரு காரணமாக இருக்கிறது  என்று உங்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவை பெண்களுக்குப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கிறது. நீங்கள் பெண்களைப் பாலியல் வேட்கைக்கான ஒரு பொருளாக சித்தரிக்கிறீர்கள், பெண்களின் மனிதத்தன்மையை அகற்றுகிறீர்கள்.
இம்மனு மூலம் மாசெஸ் அமைப்பும் இதில் கையெழுத்திடுவோரும் பெண்களின் உடலுக்குரிய மரியாதையைக் கோருகிறோம். நடிகைகள், பெண்களின் ஆபாச / கவர்ச்சி / உடல் பாகங்களை வெளியிடும் பொறுப்பற்ற உங்கள் செயலை நீங்கள் திரும்பப் பெறவேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழியைக் கோருகிறோம்.
குறிப்பிட்ட அளவு கையொப்பம் கிட்டியவுடன் இதழ்கள் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதில், பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாசஸ் அமைப்பு இந்திய அரசாங்கம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் தேசியக் கூட்டனி, இந்திய பிரஸ் கவுன்சில், மகளிர் அமைப்புகள், குழுக்கள் மற்றும் இதர மனித உரிமை அமைப்புகளிடமும் அழுத்தம் கொடுக்கச் சொல்லி முறையிடும்.
ஊடகங்களில் பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாக சுரண்டுவதை பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாடு என்று கருதப்பட வேண்டும். அதை தடுக்கவில்லையென்றால் இந்திய அரசாங்கம் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அழிப்பதற்கான செயற்குழுவில் (CEDAW) கையெழுத்திட்டதின் மூலம் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதாகும்.
ஜூலை 1993 மாநாட்டில் பெண்களுக்கெதிரான எல்லாவிதமான பாகுபாடுகளையும் நீக்கிவிடுவதாக இந்திய அரசு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கால இடைவெளியில் (4 வருடம்) UN CEDAW செயற்குவுக்கு (சுதந்திரமான வல்லுனர்கள்) நாட்டில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று அறிக்கை அளிக்க வேண்டும்.
கையொப்பம் இட:


தொடர்புடைய சுட்டி: * http://msmagazine.com/blog/blog/2012/07/06/sexual-objectification-part-2-the-harm/


To read the petition in english: http://masessaynotosexism.wordpress.com/2012/07/24/appeal-to-tamil-magazines-stop-publishing-porn-sexy-pictures/

Jul 13, 2012

பெண் என்பதில் கர்வம் கொள்வோம்

பெண்கள் எத்தகைய உடை அணிய வேண்டும் என்பது அவளது சுதந்திரம் என்று சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அவளுக்கான உடை வகைமாதிரிகளை வடிவமைப்பது யார்? அதன் பின் இருக்கும் ‘பெண்மை’ எனும் கருத்தாக்கத்தின் தாக்கம் என்ன?
தொப்புள், இடுப்பு, புட்டத்தின் கீழ் பகுதிகளை வெளிக்காட்டும் விதமான உடை ஏன் ஆண்களுக்கு இல்லை?

குத்தூசி காலனிகள், மினி ஷார்ட்ஸ் போன்ற உடைகள் ஏன் காரியதரசனுக்கு இல்லை?

ஆண்கள் ஸ்லீவ்லெஸ் அணிந்து வெளிவரும் தேவை ஏன் அவர்களுக்கு இல்லை?

உடலை முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு (ஷார்ட்ஸைத் தவிர) ஆண்கள் வலம் வர, பெண்களைச் சுற்றி மட்டும் ஏன் உடலை வெளிக்காட்டும் வகையான உடை சுதந்திரம் பற்றிய சர்ச்சை சுழன்று கொண்டேயிருக்கிறது. இது உண்மையில் பெண் சுதந்திரமா? அத்தகைய உடைகளில் ‘பெண்மை’ எனும் ஆணின் பார்வை அழகியல் கருத்தாக்கம் ஒளிந்திருப்பது நமக்குத் தெரியவில்லையா?

திரைப்படங்களில், விளம்பரங்களில், ஊடகங்களில் பெண்களின் உடல் ஆணாதிக்க நிலைப்பாட்டின் படி வடிவமெடுப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

நான் எப்போதும் சொல்வது போல், உடலை வெளிக்காட்டுவோம், கொண்டாடுவோம் அது நமது பகுத்தறிவிலிருந்து வெளிவரவேண்டும், ஆணாதிக்க முன்மொழிதல்களின் கிளிப்பேச்சின் விளைவால் அல்ல. அரைகுறை வெளிக்காட்டுதலை விட நிர்வாணம் அதி சுதந்திரமானது, ஆனால் அது எல்லாப் பாலினத்திற்கும் பொருந்துவதாய், சமூக யதார்த்தமாய் இருக்கட்டும்…..

பெண் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகளுக்குத் தெரியாத உடல், உடை சுதந்திரமா? ஏன் அவர்கள் எப்போதும் தங்கள் உடலை முழுவதும் போர்த்தியபடி வலம் வருகிறார்கள். அவர்கள் பிற்போக்குவாதியா? சுய அறிவு பெற்றவரக்ளா? ஆணாதிக்க திரிபுவாதங்களை அடையாளம் கண்டவர்களா? உடல் என்பது பேராயுதம். போயும் போயும் அற்ப ஆணாதிக்க இச்சைக்கு இரையாவதற்காகவா நாம் அதைப் பணையம் வைக்கப் போகிறோம்…..? அப்படியென்றால் நமக்கு ஆண்களின் அங்கீகாரம் அதிஅவசியமாகத் தேவைப்படுகிறது என்பது தான் அர்த்தம்...அவர்கள் நம் அழகை அங்கீகரிக்க வேண்டும், நம்மை ரசிக்க வேண்டும், வாளிப்பான உடல் என்ற சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்கிற தவிப்பு. இதுவும் ஆணாதிக்க, முதலாளித்துவ, பூர்ஷுவா சிந்தனையின் பிடியில் நம் மூளைகள் கட்டுண்டிருப்பதின் விளைவே.

பெண்கள் அனைவரும் எங்கள் உடலை நாங்கள் இனி வெளிக்காட்டவே மாட்டோம் என்றும் ஒட்டு மொத்தமாக முழங்கினால் அப்போது ஆணாதிக்க குரூர மனம் என்னவென்று வெளிப்படும்.பெண் உடலை கட்டுப்படுத்துவதாலும், பெண் உடலுக்கு பாலியல் சுதந்திரம் கொடுப்பதாலும் ஆதாயம் அடைவது ஆணினமே. ஒன்று மதவாதம், இன்னொன்று போலி முற்போக்குவாதம்.

பெண்கள் ஆணின் பரிந்துரைகளை அமிலச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். நான் பெண் என்பதில் கர்வம் கொள்ள வேண்டும்.

நம்மோடு நட்பு அல்லது உறவு கொள்ள விரும்பும் ஆணுக்கு நம் உடலைத் துய்க்கும் கருத்தியல் ரீதியான தெளிவு இருக்கிறதா என்பதை பகுத்தாறாயமல் நம்மை அவருக்கு கொடுப்போமானால், அந்நபரும் தன் வட்டங்களில் தன் ஆண்மை சாகசம் குறித்து தம்பட்டம் அடிப்பார். பெண்ணின் அந்த விட்டுக்கொடுத்தலை, அரவணைத்தலை அவரும் தேவைப்படும் இடத்தில் வேசைத்தனம் என்றே சுட்டுவார். அதேபோல் பெண்ணும் அந்த ஆணை இளக்காரமாக, என்னைத் துய்த்த உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு (நாயே) என்று தான் நிணைப்பாள். ஆக நாம் இங்கு இழப்பது ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் மரியாதையை. பெண்கள் தம் உடல் மீது தாமே கட்டுப்பாட்டை விதிப்பதென்பது சுதந்திரக் கேடோ பிற்போக்குவாதமோ அல்ல, அது சுயமரியாதை.ஏன் ஆண்களுக்கு புருவம் திருத்தும், உதட்டுச் சாயம் பூசும், ஐ லைனர் போடும் தேவை, கை-கால் முடிகளை மழிக்கும் அவசியம், பார்ட்டிகளுக்குப் போவதற்கு அரிதரம் போட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. பெண்களே நீங்கள் உண்மையில் பெண் என்பதில் கர்வம் கொள்வீர்களானால், முதலில் மேற்சொன்னவற்றை செய்வதில்லை என்று மறுத்தலியுங்கள்.

(ஆண் நடிகர்கள், மாடல்கள் நிலை வேறு, அது கட்டுடைப்புக்கு அவசியமற்றது).
  • 57 minutes ago · 

  • AD Bala 
    பெண் உடைகுறித்தும், உடல் குறித்தும் உங்களது பார்வை பெண்ணியவாதிகளாய் அறியப்படும் பலரை விடவும் நுட்பமானதும், ஆணாதிக்க மாயையை ஊடறுத்து புரிந்துகொள்வதுமாக இருக்கிறது. பெண் தமது உடலை மூடிமறைக்கும் வழக்கம் பிற்போக்காகவும், உடலை வெளிக்காட்டுவது முற்போக்காகவும் தெரிவதற்கு வேறு காரணம் உள்ளது. நிலக்கிழாரிய சமூக அமைப்பில் பெண் குடும்ப அடிமை, அவளது பாலுணர்வும் உடலும் கணவனுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து. ஆனால், முதலாளியம் பெண் உடலை பண்டமாக்கியுள்ளது. அந்த பண்டத்தை வைத்து பிராண்டுகளைக் கட்டமைக்கிறது. சினிமாக்களை, கலை-பண்பாட்டு-வணிக சேவைகளை உற்பத்தி செய்கிறது. அதையொட்டி அலங்காரப் பொருள், அழகு படுத்தல், உடை வணிகங்களும் நடக்கின்றன. நிலக்கிழாரிய குடும்பப் பிற்போக்குத் தனங்களில் கட்டுண்டு கிடந்த பெண்ணுக்கு இந்த பண்டமாக்கல், அதில் தமக்குள்ள தேர்வுச் சுதந்திரம் விடுதலையோ என்னும் மயக்கத்தை தருகிறது. நிகழ்ந்துள்ளது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையை நோக்கிய நகர்வு அல்ல. ஒரு அடிமைத் தனத்தில் இருந்து வேறு விதமான அடிமைத் தனத்தை நோக்கிய நகர்வு.
    உங்கள் பதிவின் கடைசி பாராவைத் தவிர மற்றெல்லாம் ஏற்புடையதே. //பெண்கள் அனைவரும் எங்கள் உடலை நாங்கள் இனி வெளிக்காட்டவே மாட்டோம் என்றும் ஒட்டு மொத்தமாக முழங்கினால் அப்போது ஆணாதிக்க குரூர மனம் என்னவென்று வெளிப்படும்.// இது யதார்த்தத்துக்கு முரணாக உள்ளது.

    7 minutes ago · Edited ·  · 1

  • Nirmala Kotravai AD Bala நன்றி. அவ்வரியில் வணிகச் சுரண்டலுக்கு துணை நிற்கும் விதமாக என்று சேர்த்துக் கொண்டால் சொல்லவந்து கருத்து சரியாகப் புரிந்திருக்கும். அது தனிப்பட்ட உறுவுகளுக்குப் பொருந்தாது.(முகப்புத்தகத் துளிகள்)

Jul 11, 2012

இன்று உலக பெண்கள் தினம்; நம் ஆதி தாய்கள் கல்லறையில் உருளுகின்றனரா? - மேகன் மர்ஃபி , மொழியாக்கம் – கொற்றவை
கட்டுரையாளர் பற்றிய அறிமுகம்

மேகன் மர்பி ஒரு பெண்ணிய பத்திரிகையாளர். வான்கோவரில் பிறந்து அங்கேயே வாழ்பவர். அவருக்கு வட்டார அரசியலில் தீவிர ஆர்வம் உண்டு, குறிப்பாக அவை பாலினம், இனம் மற்றும் வர்க்க செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருப்பதால். மேகன் சிமோன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், தற்போது பாலினம், பாலியல் பண்பு மற்றும் மகளிரியல் துறையில் முதுகலை மாணவி. மேகன் மர்பி ‘The F Word radio Show’ எனும் வானொலி அலைவரிசையில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் feminisms.org எனும் வலைத்தளத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். 2008 முதல் The F word உடன் தொடர்பிலிருக்கிறார்.

கட்டுரை – மேகன் மர்ஃபி

சர்வதேசிய பெண்கள் தினத்தன்று பெண்ணிய அலை எழுச்சி குறித்த ஏக்கத்தை வெளிப்படுத்துவது தவிர்க்கவியலாது. ஆனால் பல வகைகளில் அது பரவாயில்லை என்று கருதுகிறேன். சர்வதேசிய பெண்கள் தினம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாளல்ல என்பது எனது கருத்து. சொல்லப்போனால், அது ஒரு நினைவூட்டல். சர்வதேசிய பெண்கள் தினம் இன்னமும் நமக்கு வேண்டும் என்பதற்கான நினைவூட்டல்.

உலகெங்கிலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர் எனும் அடிப்படையில் உரிமை, இனப்பெருக்க உரிமை, வறுமை ஒழிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்று பல்வேறு வகையில் போராடிக்கொண்டிருக்கின்றனர். புதிராக, பல மேற்கத்தியர்கள் நாம் சமநிலை சமுதாயத்தில்தான் வாழ்கிறோம் என்று கற்பனை செய்கின்றனர். அவர்கள் எங்கிருந்து உலகை காண்கின்றனர் என்று தெரியவில்லை. நான் நிற்கும் இடத்திலிருந்து காணும் போது நாம் செய்வதற்கு நிறைய இருக்கிறது.


வெள்ளி அன்று, வான்கோவர் மற்றும் மாவட்ட தொழிலாளர் ஆணையத்தின் வருடாந்திர சர்வதேசிய பெண்கள் தின இரவு விருந்தை பதிவு செய்த ஜாரா ஹோட்ஜ், rabble.ca நிறுவனர், களச் செயல்பாட்டாளர், பெண்ணியலாளர் ஜூடி ரெபிக்கின் எழுத்தை மேற்கோள் காட்டி பின்வருமாறு கூறினார்:


”நாம் நிறைய அடைந்திருக்கிறோம், ஆனால் செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது,” மேலும் ரேபிக் சொன்னது, பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவதை தடுக்கும், போராடும் நாளை இல்லாமல் செய்வதும், தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டும் ‘வன் புணர்ச்சி கலாச்சாரத்தை’ முடிவுக்கு கொண்டுவருவதும் அவசியமாகிறது.


சர்வதேசிய பெண்கள் தினத்தை ஒரு விடுமுறை நாளாக, கொண்டாட்டமாக கருதுவோர் பலர் இருக்கின்றனர். அது அற்புதமான ஒன்றுதான், நாம் பெண்களை, பெண்களின் சாதனைகளை கொண்டாடுதல் வரவேற்கத்தக்கதே. அதேவேளை இதில் உணரக்கூடிய நிதர்சனம் என்னவென்றால், பெண்ணிய அசைவியக்கங்களின் தேவையை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம், மூன்றாம் அலை பெண்ணியலாளர்களாக நாம் நமது முந்தைய தலைமுறை பெண்கள், நமது சார்பாக ஆற்றிய அளப்பறிய கடுமையான பணிகளை மதிக்கத் தவறுகிறோம்.


மூன்றாம் அலை, நான் என்னில் கண்ட அலை (நான் 1979ல் பிறந்தேன், அதில் வேறு தேர்வுகள் எனக்கு சாத்தியப்படவில்லை) என்பது, முதல் மற்றும் இரண்டாம் அலைகள் பின்னடைவு கொண்டவை எனும் தீர்மானகரமான கண்ணோட்டத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன. மூன்றாம் அலையை முழுமுற்றாக நன்றிகெட்ட ஒன்று என்றோ எல்லோரும் அங்கத-விரும்பிகள் (burlesque-loving), ஒழுங்கீன நடைகள், பின் நவீனத்துவவாதிகள் என்றோ தீட்டுவது நியாயமாகாது. இந்த தலைமுறை பெண்ணியலாளர்களிடமிருந்து மதிப்பு மிக்க கோட்பாடுகள், விமர்சனங்கள் வந்துள்ளன, ஆனால் இந்த குறிப்பிட்ட அலையை நான் திரும்பி பார்ப்பது போல் கற்பனை செய்கையில், அவமான உணர்வை போன்ற ஒன்றில் மூழ்கிப்போவது போன்ற உணர்வை கடக்க முடியவில்லை.

தீவிரப் பெண்ணியம் பேசுவோர், மார்பு கச்சையை எரிப்போர், மயிரடர்ந்த உடல் கொண்டோர் (hairy), ஆண்-வெறுப்பு, ஓரினச் சேர்க்கைப் பெண்கள், இரண்டாம் அலைப் பெண்ணியத்தை பிரதிபலிப்பவர்களாக உள்ளனர். மூன்றாம் அலைப் பெண்ணியத்தில் அரை நிர்வானம், குத்தூசி குதிகால் காலணிகள், பெண்களும், பருவ வயதினரும் மேடையில் ஆடைகளைதல் என்பவற்றில் சிக்கொண்டுள்ளோம். அதை பெண் விடுதலை என்கிறோம். ”பாலியல் சுதந்திரம்” எனும் போர்வையின் கீழ் தம்மைத் தாமே ‘தூய்மையற்றவள்’ (slut walk) என்று அணிவகுப்பதில் பெருமை கொள்கிறோம். பெண்களையும், சிறுமிகளையும் உயர் பாலியல்படுத்தும் (hypersezualize) ஒரு பண்பாட்டுகட்டத்தின் நடுவே, ”புறப்பொருளாக்குதல்” (objectification) எனும் சொல்லின் புரிதலை தொலைத்துவிட்டவர்கள், ’போர்ன்’ தொழில்முறையின் பெருகிவரும் வன்முறையை புறக்கணிக்கும் திறனை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் “மறைபொருள்” விவாதங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ”பெண்ணிய போர்னின்” இருப்பு குறித்த விவாதத்தில் வலிய தடம் புரண்டு செல்கின்றனர். மூன்றாம் அலைக்காரர்கள் சிறிது குழப்பம் நிறைந்த கூட்டமாக இருக்கின்றனரோ என்று தோன்றுகிறது.

தனிப்பட்ட மகளிராக, பெண் எனும் இனத்தின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருந்து வரும் சூழலில் வெள்ளை பெண்கள், சலுகை பெற்ற, மேற்கத்திய பெண்கள்....ஒழுங்கீன நடை என்று அணிவகுக்கிறார்கள்? ஆடைகளைதலை விடுதலை என்று கட்டமைக்கின்றனர்? உண்மையில்?

லாரா பென்னி தெளிவாக எழுதியதுபோல்:

மற்ற எல்லோரையும் போல், பெண்கள், ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த 50 வருடங்களாக நவதாராளவாத கண்ணோட்டத்தின்படி சுதந்திரம் என்பதன் பொருளாக ‘சுவையற்ற’ (bland) ஒரு தன்மைக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அப்போதைய காலகட்டத்தில் வெள்ளைப் பெண்கள் பணிப்பெண்ணை அமர்த்திக்கொண்டதால் வாழ்வு எளிதாக இருந்திருக்ககூடும், ஆனால் ஏணையோர், சிக்கனமான, எட்டி உதைக்கப்பட்ட பாலினப் புரட்சியின் பதிப்பிற்கு, பணியில், இல்லத்தில் சமத்துவம் என்பதற்கு பதிலாக, நாம் “தேர்வு”, ”நெகிழ்வுத்தன்மை” மற்றும் குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுப் பணிகளை பாதிக்காத வகையில் அமையும் மோசமான ஊதியம் தரும் பகுதி நேர வேலைகள் ஆகியவற்றுக்கு சமரசம் செய்துகொண்டோம்.”

வருத்தம் தரும் வகையில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஒடுக்குமுறை, சுரண்டல், புறப்பொருளாக்குதல் சந்தேகத்திற்கிடமின்றி எவரேனும் ஒருவர் ‘தேர்வு’ எனும் ஆயுதத்தை உங்கள் முன் வீசுவர். அங்கத விமர்சகர்கள் கவனமாக இருங்கள். சில பெண்கள், மேடையில் ஆடை களைப்பு மூலம் தனிநபராக அதிகாரம் பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள்! பாலியல் தொழில்துறையை விமர்சிப்பதா இல்லை பாலியலை விலை கொடுத்து வாங்குபவரையா? நீங்கள் பாலியல் இன்பத்தை வெறுப்பவர் என்பது தெளிவாக தெரிகிறது. இது ஒரு மோசமான செயல்.

அதிகாரம் பெறுவதற்கு ஒரு பொருளில் இருக்கும் ”கவர்ச்சியை” (sexy) நீங்கள் விரும்பவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது பாலியல்-நிறை (Sex-positivity). பாலியல்-நிறை எனும் கம்பளம் திடீரென்று சுரண்டல்வாத, பாலியல் தொழிலை பெண்களுக்கான விடுதலை என்று கூறுகிறது? இதை பற்றி என்ன நிணைக்கிறீர்கள்.

போராடுவதற்கு உண்மையில் நமக்கு எதுவும் இல்லையா? இருக்கிறதென்றே நினைக்கிறேன். பெண் உரிமைகளுக்கான போராட்டம் என்பதில் உடைகளைக் களைவது என்று நினைக்கும் அளவுக்கா நமது கற்பனைகள் வரண்டு விட்டது? கூச்சலிட்டு கதற வேண்டும் போல் இருக்கிறது.

இதை விட உருபாடியான எதையாவது நாம் செய்ய வேண்டும். விடுதலைக்கான பாதையை நாம் இவ்வளவு வன்புனர்வு செய்யக்கூடாது. விடுதலை எனும் பெயரில் உள்ளாடை அணிவதைத்தான் பெண்ணியம் என்று சொல்வோமானால் , நான் மற்றொரு அலைக்கு தயாராக இருக்கிறேன் பெண்களே.

பெண்கள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்று உணர்த்தவே உலக மகளிர் தினம் நிலவுகிறது. உலகெங்கிலும் பெண்கள் வன்புணர்வு செய்யபப்டுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், ஆண்களால் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பாலியல் விற்பனையாகிறது என்பதால் அது நிலவுகிறது, அதாவது பெண்ணின் புட்டத்தின் பின்னிருந்து பணம் செய்கிறார்கள் என்பதால். அது நமக்கு செலவே அன்றி வரவில்லை. ‘ஒழுங்கீன நடை’, பெண்களுக்கானஅதிகார வெளி என்பதன் பெயரில் ஆடைகளையும் களி கூடங்கள், கவர்ச்சி ததும்பும் ’பெண் கலகக்காரர்கள், பெண் (அ லா ஃபெமென்) ஆகியோரை முன்வைத்து ஆண்களும், ஊடகங்களும் களம் இறங்குகிறார்கள். உன்மைதான். அவர்கள் அதை செய்வார்கள். ஏனென்றால் இவை எதுவும் ஆணின் பலத்தையோ, உரிமைகளையோ சவால் விடுவதில்லை. இதுபோன்ற பொருள்களால் தான் உரிமைகள் புனையப்படுகின்றன. உங்கள் மார்பகங்கள் மீது ஒட்டிக்கொள்ளும் கண்கள், கிடைக்கும் கவனம் ஆகியவை உங்களை பலசாலியாக உணரவைக்கலாம். ஆனால், இவையெல்லாம், பெண் எதிர்கொள்ளும் வன்முறையிலிருந்து அவளை எவ்வாறு பாதுகாக்கும் என்று ஐயம் கொள்கிறேன். குத்தூசி குதிகால் செருப்புகளும், பெரிய மார்புகளும் தந்தைவழி சமூக அதிகாரத்தை எவ்வாறு வீழ்த்தும் என்ற கேள்வி எழுகிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

நவ-தாராளவாத காலகட்டத்தில் பெண் விடுதலை என்பது எத்திசையில் செல்கிறது எனும் கேள்வியை, விமர்சனத்தை மிதவாத, சோஷலிச பெண்ணிய ஆர்வலர்கள் வைத்த வண்ணம் இருக்கிறார்கள். மேலை நாட்டு முதலாளித்துவ, பூர்ஷுவா பெண்கள் எடுத்துரைக்கும் ’உடல் பாகங்களை வெளிக்காட்டும் சுதந்திரம்’ என்பது குறித்து விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உடலைக் கொண்டாடுதல் எனும் கருத்தாக்கமாக சுதந்திரம் எனும் பெயரில் பெண் உடல் மீது பல்வேறு வகையான உரிமை முழக்கங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

’கொண்டாடுதல்’ என்றால் என்ன எனும் கேள்வியை நான் விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன். எவரின் வரையறையின் கீழ் அது கொண்டாட்டமாக இருக்கிறது? வதை என்று சொல்லப்படும் ஒன்று ஒருவருக்கு கொண்டாட்டமாக இருப்பின் அதையும் உடலைக் கொண்டாடுதல் என்பதில் பொருத்திக்கொள்ளலாமா. உடலை அறிதல், தன் உடலை தானே நுகர்தல், துய்த்தல், நுகரக் கொடுத்தல் என்பதெல்லாம் தனிப்பட்ட தேர்வு, அது முழுக்க முழுக்க சுதந்திரம் சார்ந்தது. அது சரியா, தவறா என்ற ஒழுக்கவாதத்தை நான் முன் வைக்கவில்லை. ஆனால், நாம் சுதந்திரம் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் சுதந்திரம் தானா? அது நமது சொந்த தேர்வா? திணிக்கப்பட்ட தேர்வா என்ற கேள்விகளையாவது எழுப்ப வேண்டாமா. அந்த சுதந்திரமும் சமூக சுதந்திரத்தோடு பொறுத்திப்பார்த்து, பொறுப்புணர்வு சார்ந்து கையாள்வது அவசியமாகிறது என்று கருதுகிறேன். முதலாளித்துவம் முன் வைக்கும் தனிமனித சுதந்திரம் என்பது வெறும் நுகர்வு கலாச்சாரம் சார்ந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வர்க்க படிநிலை அடிப்படையில் அச்சுதந்திரத்தின் தன்மை மாறுபடுகிறது.

இந்திய சூழலில் சாதியத் தாக்கம் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆக நாம் உடல் சார்ந்த சுதந்திரத்தை (மற்ற எவ்வகை சுதந்திரமானாலும் சரி) முன் வைக்கும் போது ஒட்டு மொத்த சமூகத்திற்கு அத்தகைய சுதந்திரத்தை பெற்று தரும் முயற்சியில் ஈடுபடாமல் தன்னளவில் ஒன்றை அனுபவித்தல் என்பது ஒருவகையில் சுயநலம், பொறுப்பின்மை என்றும் சொல்லலாம். ‘கொண்டாட்டம்’ என்பது பணம் படைத்தோர், வலிமை படைத்தோர், சமூக வரையறையின் படி ‘அழகு’ படைத்தோர் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. (குறிப்பாக உடல் சார்ந்த சுதந்திரம்) பணமில்லாதவர், ‘அழகற்றவர்’, மாற்றுத் திறனாளி, சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர் ஆகியோருக்கான உடல் சுதந்திரம் என்னவாக இருக்கிறது.

கடுமையான உழைப்பிலிருந்து தன் உடலை மீட்டெடுக்கும் சுதந்திரம் ஒருவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. உழைப்பின் அளவை, அதற்கேற்ற கூலியை நிர்ணயிக்கும் உரிமை உழைப்பாளிக்கு இல்லை. உறவுகளோடு செலவிடும் நேரத்தை கூட முதலாளிக்கு அளித்தது போக மீதமிறுக்கும் நேரத்தை தன் குடும்பத்திற்காக உழைக்கும் நபர் ஒருவர் ஒதுக்க முடிகிறது. உழைக்கும் உடல் மீது செலுத்தப்படும் சுரண்டல் குறித்து எத்தனை சுதந்திர ’உடல் மொழி’ கவிதைகள் வெளிவந்துள்ளன. பொது வெளியில் பாலியல் சந்தைக்குட்படுத்தப்படும் பெண் உடல், தந்தையாலும், தாத்தாவாலும் இன்ன பிற ஆண்களால் சிதைக்கப்படும் பச்சிளம் பெண் குழந்தையின் உடல், பெண் உடல் மீதான இன்னும் இதர சுரண்டல்களை, ஒடுக்குமுறைகளை களைவதற்கான ‘உடல் மொழி’ எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறது. கவிதைகளில், புனைவுகளில் உடலை அறிதல், உடலை எழுதுதல் என்பது பெரும்பாலும் பாலியல் உறுப்புகளை பாலியல் இன்பத்தை மையமாக வைத்து விவரித்தல், பாலியல் தேர்வுகளைக் கொண்டாடுதல் என்பதாக சுருங்கி நிற்கிறது. மேலும் பழம்பெருச்சாளிகள் பெண்ணுடலைத் தீட்டு என முன்வைக்கையில் அதை பெண் முன்னெடுத்து நடத்தும்போது அதற்கு ஆண்கள் தரும் வரவேற்பு இதைக் கத்தி மேல் பயணமாக மாற்றுகிறது. கற்றவர் கல்லாதவர் யாராயினும் அவர்கள் பெண்ணுடல் மீது வைக்கும் பார்வையானது சுதந்திரத்தை முன் வைத்தோ இல்லை ரசிப்பை முன் வைத்தோதான் இயக்கப்படுகிறது. 

பெண்ணையும் பெண் சாதி பொஞ்சாதி எனக் கட்டமைக்கும் சாதிய மனம் எப்படி பெண்ணை பெண்ணாக முன் வைக்க உதவும். ஒவ்வொரு சாதியும் மிக அழுத்தமான மொழியில் பெண்ணின் பிறப்புறுப்பே சாதி காக்கும் உறுப்பென முன்வைக்கிறது. பார்ப்பனப் பெண்ணுக்கும் கீழ்சாதி ஆணுக்கும் பிறந்தவன் கண்டால் தீட்டு என அறிவிக்கப்பட்ட சண்டாளன், சாதித் தூய்மையும் பெண்ணை நேரடியாக யோனியென்றே முன்னிருத்துகிறது. இதற்கிடையில் முதலாளித்துவமானது தன்னை நிலைநிறுத்த கூலி உழைப்பு லாபம் மற்றும் பொருளாதார காரணிகளை விட அது நம்பும் மனசாட்சி முன் ஜென்மப் பலன்..விதி ஆகியவைகளை முன் வைத்து அது செய்யும் வியபார எத்தனங்கள் சொல்லில் அடங்காதவை. அதற்கிணையாக ஆணாதிக்கம்.

ஆணாதிக்கத்தை நேரடியாக முதலாளித் துவத்திற்கு இணையாக வைத்துப் பேசுவதென்பது முதலாளித்துவத்தின் கொடுமையை சற்றும் கீழிறங்கச் செய்யாது என்றே நம்புகிறேன். முதலாளி தொழிலாளிக்கு இருக்கும் பரஸ்பர உறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவுகளில் இல்லை. அடிமைக்கு கூலி பெண்ணுக்கு கற்பு ஒழுக்கம் என்ற கருத்துக்கள் அவளுக்கு இடப்பட்டு அவளை அவளே பத்தினியாக்கவும், பரத்தமைக்கும் அவளே காரணகர்த்தாவாகவும் நிலை நிறுத்துகிறது. ஒரு பெண் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதென்பதே ஒரு ஆணின் துணையோடுதான் என்ற குடும்பச் சார்பு மிக மோசமாக இதை வெளிப்படுத்துகிறது. உடல் மொழி என்பது அடக்கப்பட்ட உறுப்புகளை கொண்டாடத்திற்கு கொண்டு செல்கையில் அதையும் ஆணாதிக்க மனம் மனதளவில் பாலியல் துய்ப்பாகவே எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதை உணரமுடிகிறது. இது சற்றே, பரத்தமையை கடவுள் பெயரால் ஆணாதிக்கம் விதித்ததைப் போல இப்பொழுது சுதந்திரத்தின் பெயரால் பெண் உடலைக் கொண்டாடச் சொல்கிறது. இதில் அழகிய உடல்களுக்கான கொண்டாட்டத்தை மட்டுமே ஆண் அவனது அகராதியில் கொண்டாடுகிறான்.

நானறிந்தவரை இங்கு கிழவியின் உடல்கள் கொண்டாடப்பட்டதில்லை. குழந்தைகள் பற்றி எழுதுகையில் ஆண்கள் தகப்பனாகிறார்கள் காதலைப் பற்றி எழுதும்போது மகத்தான காதலனாக மாறுகிறார்கள். காமத்தையும் அவ்வாறே. பெண்ணோ தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரை ஒரு வகை சோக கீதத்தையே முன் வைக்கிறாள். இதற்கிடையில் நவீன கல்வி வழங்கிய சுதந்திரம் அவளை எழுதத் தூண்டிய போது அவள் வைக்கும் ஒவ்வொரு அடியும் பாலியல் சொல்லாடலென ஆண் வர்க்கம் முன் வைக்கையில் அவர்களது அடி மனத்தில் பெண் புணர்வதற்கு படைக்கப்பட்டவள் என்ற உணர்ச்சியே வெளிப்படுகிறது. இந்தியாவில் இருப்பது ஆணாதிக்க சாதி முறை ஆணாதிக்கக் கடவுள்கள் ஆனாதிக்க மனம் இவையே. எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் அவனது சவப்பெட்டியைத் திறந்து பார்த்தால் அங்கு கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக் கொண்டிருப்பதைக் காணாலாம் என்று லெனின் சொன்னதை இங்கு நாம் புரிந்து கொள்ளலாம். முதலாளியை ஒரு மனிதனாக்கி அவனுக்குள்ளிருக்கும் கருணையையும் வெளிக்கொணற, இயற்கையை ரசிக்க வைக்க எல்லாவற்றையும் விலைபேசும் அவனது மனதை மானுடத்தின் அளவில்லா ஒன்றிணைப்புக் குறித்து அறியச் செய்யவும் பொதுவுடமை போராடுகிறது. இது அவனை முதலாளி என்ற பதத்தில் இருந்து இறக்கி தானும் ஒரு மனிதன் என்ற எண்ணத்தை அவனுக்கு நினைவூட்டவே போராட்டங்களை முன்வைக்கிறது. அதேபோல் ஆணாதிக்க மனத்தின் மூலம் பெண்ணை துய்ப்புக் கருவியாகவே நினைக்கும் ஆணின் மூளையிலிருந்து அவளை ஒரு மனுஷியாக மாற்றும் போராட்டத்தை பெண்ணிலை வாதம் முன்வைக்க வேண்டும். மாறாக இங்கு பெண்ணுடல் சுதந்திரம் என வழங்கப்படுவதெல்லாம் அடிமையை சுதந்திரம் என கூவ மட்டுமே அனுபவிக்கும் ஆணாதிக்க தழுவல்.

 முலைக்கு வரிவிதித்த கொடுமையில் தன் முலையை வாழை இலையில் அரிந்து வைத்தவளில் அங்க இழப்பு எந்த மொழி. பாலியல் இன்பத்தை மையப்படுத்தி எழுதப்படும் ஒன்றை உடல் மொழி என்று சொல்வதை விட பாலியல் கவிதை என்றோ, பாலியல் இலக்கியம் என்றோ சொல்வது பொருத்தமாக இருக்கும். பெண் உடலை தீட்டென்றால் அதை பெண் புனிதமாக்கும் உத்தியை பயன்படுத்தி கையிலெடுப்பதென்பது குறைந்த பட்சம் ஆண்களுக்கும் வாய்ப்பை அளிக்கும். ஆணாதிக்க விளம்பரங்களில் பெண்ணுடல் காட்சிப் படுத்தி கொண்டாடுவதை விட இங்கு பெண்கள் தங்கள் உடலை கொண்டாட தங்கள் சொந்த வரிகளை எழுதவில்லை என்பதை நாம் உணரவேண்டும். அங்குல அங்குலமாக ஒரு பெண்ணை கொண்டாடுவது எப்படி என்று பெண்களுக்கே அது சொல்லித் தருகிறது. அதை ஆண் கொண்டாடுதல் என்பது அவனது ஆணாதிக்க பாலியல் வேட்கைக்கு தீனி போடுவதாகிறது. பெண்களாகிய நாம் சுதந்திரம் என்ற பெயரில் அதற்கு துணை நிற்ககூடாதென்றே நினைக்கிறேன்.

பெண் உடலைக் கொண்டாடுதல் என்பதற்கு அதிக ஆதரவும், உரிமையும் கோருபவர்களாக ஆண்கள் இருப்பது எனக்கு அச்சத்தை தருகிறது. அது வணிக ரீதியான சுரண்டலுக்கே பெரிதும் பயன்படுகிறது, மேலும் அது பண்ட பரிமாற்றமாக துணைகளில் எவறேனும் ஒருவர் மட்டுமே அறமற்று செயல்படும் அயல் உறவுகளாக மாறுவதோடு கொடூர மரணங்களிலும், கொலைகளிலும் தஞ்சமடைகிறது. கட்டற்ற சுரண்டல்வாத காமம் கொல்லைப்புறங்களில் வழிந்தோடி, ஆண் பெண்ணுக்கு வகுத்த பருவங்களாக குழந்தை, சிறுமி, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, பேரிளம், பெண், மூதாட்டி வரை அனைவரையும் ஒரு சதையாக யோனியுறுப்பாகவே காண்கிறது, அங்கு வேறெதுவுமே இல்லை. ஆணாதிக்க மனம் எவரையும் விட்டு வைக்காது அங்கேயே குழி தோண்டி புதைத்தும் விடுகிறது.(இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்துள்ளக் கட்டுரை)Jul 10, 2012

பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை.....
கோமான்களே
கனவான்களே
கைவிடப்பட்ட
எம் மக்களின்
கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள் 
நினைவூட்டத் தவறுவதேயில்லை

எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது
பூக்களில் நாற்றம் வீசியதில்லை
மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை
பசியென்ற சொல் சதையானபிறகே
தோளிலேறும் வில்
எளிய வேட்டை

இப்படியாகத்தான்..........
சில
காலம் முன்பு வரை

இப்போது
நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம்
உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது
நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது
தொப்புள் துவள்கிறது
எம் வியர்வையில் வாசம் இல்லை

அடர்த்தியான வனங்களின் ஊடே
நிர்வாணமாய் இருந்த பாறைகள்
பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று
எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது
சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது

பிள்ளைகள்
மணல்களை, பாறைகளை, மரங்களை
மற்றும்
இதுவரை கேள்விப்பட்டிராத
மரணத்தின் விழிகளை
வரைந்து பார்த்து மகிழ்கின்றனர்
அதில்
அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது

சொல்லியிருக்கிறோம்
எங்கள் சிறார்களுக்கு
இயற்கையின் பிதாமகர்கள்...

(அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். )

மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று
உறுதி அளித்திருக்கிறோம்

எங்கள் உடல் சூட்டின் உரிமைகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது

ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு
பதுங்கு குழிகளுக்குள்  இருக்கும்
சிறார்களின்
புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது
அவை
எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக 
அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன்
எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து
சொல்லிச் செல்கிறார்

தானியங்கிகள் கூட
இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது
எம்
பெண் மக்களைக் காணும் பொழுது
திக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது
வனம் தனது தூக்கத்தை இழக்கிறது
போர் தொடங்குகிறது
சதை, நிணம், உங்களது அரிய பார்வையில்
ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம்
வழியும் குருதி
கைதூக்கிய சொற்கள்
அனைத்தும் களைத்து விழுகிறது

உடல்களுக்கு  தாக்குதல் ஓரிருமுறை
யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை

(எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. கற்பழிப்புக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே)

உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி
உங்களின் கரங்களுக்கு
சிலுவைகளில் இடமில்லை

ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம்
பிணத்தை
பிணச்சூட்டை
கருகிய மரத்தை
கந்தக நிலத்தை

இப்படியாக....
கிழிக்கப்பட்ட
நைய்யப்பட்ட
குருதியோடிய

இன்னும்......
துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட
பார்த்து மகிழ்ந்த
வெந்து தணிந்த
சிதைந்த
சிறிய
பெரிய
முதிர்ந்த
விழிகள்
கரங்கள்
சதைகள்

மற்றும் இறுதியின் இறுதியாக
எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும்
மரத்த யோனிகளைத் தவிர
யெது வுமில்லை
எங்களுக்கு

எதுவுமில்லை
எதுவுமே........................யில்லை.

கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை
மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை

துரதிருஷ்டம்
சாபத்திற்கு உண்டந்த பலம்

தங்களது மேன்மை பொருந்திய
இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது
எம்மக்கள் வயிறு

குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில் 
வெளிப்படுகிறது உறைந்துபோன
எங்கள் கவுகள்
கண்ணீர்
இழந்த எமது
இளமை

வரலாற்றின் பக்கங்கள்
நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது

இயற்கை எல்லாவற்றையும்
எப்பொழுதும்
சகித்துக்கொள்வதில்லை
அது
கணிக்கும்
கண்காணிக்கும்
அழிவின் தும்மலை அறிவித்து
வாரிக்குடிக்கும்

எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட
உங்களது
ரப்பர் பொம்மைகளும்
வாசலில் சிரிக்கும்
சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த 
புன்னகை கண்டு
நிறையட்டும்
உங்கள் வயிறு
இயற்கையைச் செரிக்க
இம்மண்ணில் பெருவயிறு
எவருக்கும்
இல்லை
இல்லை
இல்லை


இனி இடம்பெயர
யெதுவுமே
இப்படி எதுவுமே
இனி
எப்பொழுதுமே
எதுவுமே
இருக்கப்போவதில்லை.


(குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை)

Jul 4, 2012

எழுதும் இறகில் ஸ்கலித மை

மனிதர்கள் அன்பு மிக்கவர்களாக
இருக்கிறார்கள்
சொற்கள் அன்பை மென்று செறிக்கையில்
காகிதப் புலிகளின் உடல்களிலிருந்து
அர்த்தங்களை பிரித்தெடுக்கிறது

எஞ்சி நிற்பது
வெற்று 
நா

கேள்விகளின் நிறத்தை பகிரங்கமாக உடுத்தி
பால் அடையாளத்தை
பொருத்துகிறது
வளைவுகளற்ற
மென் நா

இருப்பு
எப்போதும் பற்றாக்குறையை
தனக்கேயுரிய புன்னகையுடன் வெல்கிறது

பால் துருத்தும் உறுப்புகள்
தஞ்சமடைகிறது
உடல்
சுதந்திரம்  

அது
தன்னை நிச்சயமாக
அறிவித்துக் கொள்ளும் வேளையில்

பொம்மையை அணைத்திருக்கும்
மார்புகளிலிருந்து காம்புகளை
அறுத்தெரிகிறான்
ஒருவன்
நிச்சயமாக
‘ன்’
தான்

விரல்களை சூப்பிக்கொண்டிருக்கும்
மயிரற்ற யோனியில்
துருப்பிடித்த
நாட்ப்பட்ட கருமையேறிய
ப்ளேடை செலுத்துகிறான்
உடல் மொழியின் பேரரசன்

புத்தரின் மூடிய இமைகளிலிருந்து
புன்னகையுடன்
குமிழியிட்டுச் சிதறும்
எண்ணற்ற
எண்ணற்ற துவக்குகள்
காவலுடன்
புணரப்படுகின்றன

எம்  உடல்கள்

உடல்
சுதந்திரம்
ஆம்
அதுவே

துவக்குகளை
அடைக்கும் மொழியென்றாகிய கருந்தோட்டாக்கள்
அல்லது
தவிர்க்கவியலாத விடுதலை
கேள்விக்குறிகளை நிமிர்த்தும்
மொழி
கணவன்மார்களிடமிருந்து
நாற்காலியைப் பறிக்கப்போகும்
மொழி
யோனிகளின் சிதைவுகளை தடுக்கப்போகும்
மொழி

தலைவர்களே
உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி
நேர்மையோடு நடத்துங்கள்.
உங்களுக்கும் விண்ணகத்தில்
ஆண்டவர் ஒருவர் உண்டு
என்பதை நினைவிற்கொள்ளுங்கள் *

ஆண்டவர் அருளிய மொழியில்
குறிகள்
யோனிகளுக்கு கற்றுத் தருகிறது
மொழியை….

ஒரு உடல் கால்களில் தோன்றியது
ஒரு உடல் அதற்கும் அப்பால்
ஒரு உடல் விலா எலும்பிலிருந்து

ஆம்

அது
எம்
தந்தையர்களால் எழுதபட்ட
அவர்களுக்கான
உடல் மொழி

*கொலோசையர் 4:1