Jun 17, 2018

கலை ஒரு வாணிபப் பொருளாதல்



“அறிவார்ந்த உழைப்பின் சில பிரிவுகளுக்கு, உதாரணமாக கவிதை, ஓவியம் ஆகியவற்றுக்கு முதலாளித்துவ உற்பத்தி முறை எதிரானதாக உள்ளது’ (மார்க்ஸ்-உபரி மதிப்புக் கோட்பாடுகள் 1.285). அறிவியல் ஒரு உற்பத்திச் சாதனமாக ஆன பின்னால், கலையும் ஒரு வாணிபப் பொருளாகிறது. கலையும் நுகர்வுப் பொருளாக மாறுகிறது. ஆனால் ஏணைய வாணிப்ப் பொருள்களிலிருந்து சில விஷயங்களில் வேறுபடுகிறது. நாகரீக உலகின் மாற்றங்கள், கலைத் துறையில் ஈடுபடும் முனைவர்கள். கலைப்பொருள் சேகரிப்பவர்கள் ஆகியோரின் பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை போன்று தற்செயலான அம்சங்களினால் கலையின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இந்த விதத்தில் தான், கலை ஏணைய வாணிபப் பொருள்களிலிருந்து வேறுபடுகிறது.
நிலமானியச் சமூகத்தில், கைவிவினைஞர்களுக்கு கிடைத்த சமூகத் தகுதி கலைஞனுக்கும் கிடைத்தது. அக்கலைஞனுக்கு சமுதாய வாழ்க்கையில் பணிவான ஆனால் பாதுகாப்பான இடம் கிடைத்தது. அவன் தன் நிலப்பிரபுவுக்கு கட்டுண்டவன். ஆனால் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட, நேருக்கு நேர்முகமான உறவு முறையே காணப்பட்டது. அது வணிகமயமானதல்ல; வாணிப்ப் பொருளின் உற்பத்திப் பெருக்கம் வளர வளர, இத்தகைய ‘எளிய’, ‘மகிழ்ச்சியான’ உறவு முறைகள், ‘பணத்தோடு தொடர்பு கொண்ட’ உறவு முறைகளாக மாறிவிடுகின்றன. இத்தகைய மாற்றத்தை சென்ற பகுதியில் குறிப்பிட்ட மாபெரும் வியன்னா இசைக்கலைஞர்களின் வாழ்க்கையில் காணலாம். பீத்தோவன் காலத்தில், இசை நிகழ்ச்சிக்குரிய அரங்கமானது சிலர் மட்டுமே கண்டு களிக்கக் கூடிய தனி அறையிலிருந்து பொதுவான இசையரங்கிற்கு மாறி விடுகிறது. இசைநிகழ்ச்சி, கலைப்புரவலனை விட அரங்க நிர்வாகியை நம்ப வேண்டியுள்ளது. பீத்தோவன் இம்மாற்றத்தை விரும்புகிறார். ஆயினும் சந்தைக்குரிய பொருள் தயாரிப்பினைப் போன்று இழிந்து போன தன் பரிதாப நிலையையும் உணர்ந்து கொண்டுள்ளார்.
"உலகத்தில் மாபெரும் கலை அரங்கம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அங்கே கலைஞர்கள் தம் கலைப் படைப்புகளை வெளியிட்டு, செழுமைப்படுத்தியிருக்கலாம். கலைப் படைப்புகளை வெளியிட்டு தம் தேவைக்கானவற்றைப் பெற்றிருக்கலாம். ஆனால் தற்போதைய காலத்தில் கலைஞன் என்பவன் பாதி வாணிகனாக இருக்க வேண்டியுள்ளது – இதை எப்படி சகித்துக்கொள்வது? (கடிதங்கள்-ஆண்டர்சன் தொகுப்பு, 1. 47)
"முதலாளித்துவ சமுதாயத்தில் கலைஞனின் சுதந்திரம் என்பது சந்தையின் சுதந்திரம் ஆகும்" (லெனின் தொகுப்பு நூல்கள் 10.48)
ஏகபோக மூலதனக் காலகட்டத்தில், இத்தகைய சுதந்திரம் கூட தடை செய்யப்பட்டுள்ளது. வசதி படைத்த சிலருக்கான பொழுதுபோக்குக்குரிய அம்சமாகவே தான் ஏகபோக முதலாளிகள் கலையைப் பயன்படுத்துகின்றனர். இலாபம் ஈட்டும் ஆதாரமாகவும் ஒழுக்கக் கேட்டையும் நசிவுக் கருத்துகளையும் பரப்பும் வாயிலாகவும் வெகுசனத் தொடர்புச் சாதனமான கலை சுரண்டப்பட்டு வருகிறது.
இத்தகைய கொடுமையின் விளைவுகள் எங்கேனும் காணப்பட்டு வருகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு மண்டலத்தில் இன்றளவும் இயங்குகின்ற நாடுகளில், பொது மக்களுடைய பழமையான மரபு ரீதியான பண்பாட்டு வடிவங்கள் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதை நாம் காணலாம்.
இத்தகைய நேரத்தில், ஒரு கலைஞன் தன் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவன் தன்னை வாணிகப் பொருள் படைப்பாளியாக மாற்றி, வணிக ரீதியிலான வெற்றிக்காக அலையும் நிலையை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்வதன் மூலமாக ஒரு கலைஞனுக்கேயுரித்தான நேர்மையுணர்ச்சியை அடகு வைத்து விடுகிறான், அல்லது வாணிக இலாபங்களைப் புறக்கணித்துவிட்டு, கலை தன்னைத் தானே தன்னிச்சையாக வெளிப்படுத்துகிறது எனும் கொள்கையிலே அதாவது கலை கலைக்காகவே எனும் கொள்கையிலே போய் ஒரு கலைஞன் ஒதுங்கி விடலாம். இக்கலைஞர்கள் முன்னிறுத்தும் கலை கலைக்காகவே எனும் கோட்பாடு, வாணிப்ப் பொருள் உற்பத்தியிலே இயல்பாக உறைந்து காணப்படும் தன்நலஞ்சார்ந்த தனி மனித வாத்ததின் வெளிப்பாடாகவே உள்ளது. எனவே இக்கலைஞர்களும் கலையின் வாணிப மதிப்பிலிருந்து தம்மைத் தாமே தப்புவித்துக் கொள்ளவில்லை எனலாம்.
ஒரு கலைஞன் தன் சமுதாயப் பொறுப்புணர்ச்சியிலிருந்து தன்னை உதறிவிட்ட பின்னால், கலையாக்க எழுச்சி அவனை விட்டுப் பிரிந்து விடுகிறது. அவன் மீண்டும் கலையாக்க எழுச்சியைப் பெற வேண்டுமென்றால், அந்த எழுச்சியை அவன் மக்களிடமிருந்து தான் பெற்றாக வேண்டும். ஒரு கலைஞன் தன்னை மக்களோடு இணைத்துக் கொள்ளும்போது மட்டுமே, அவனுடைய கலையின் மதிப்பு, அதனுடைய சந்தை விலையைப் பொறுத்து அல்லது அது மக்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சியைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும் எனலாம்.
வாணிகப் பொருள் உற்பத்தியோடும் வர்க்கச் சுரண்டல் முறையோடும் தொடர்புடைய கருத்துகள் நம் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன. நீண்ட தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தின் மூலமாகத்தான், நாம் அவை எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை உணர முடியும். ஆகவேதான், சோசலிசப் புரட்சிக்கால காட்டத்தின்போதும், அது முடிந்த பின்னரும் அனைத்து வர்க்கங்களுக்கும் தத்தம் தத்துவங்களை புத்துருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய தத்துவார்த்தப் புத்துருவாக்கம் வேண்டிய அவசியம் பழைய சுரண்டும் வர்க்கத்தினருக்கு மட்டுமல்ல, அறிவுஜீவிகள் உள்ளிட்ட புரட்சிக்கு ஆதரவளித்த அனைத்து வர்க்கத்தினருக்கும் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இந்த அவசியம் உள்ளது.
“வர்க்கப் போராட்டம், இயற்கையை எதிர்த்த போராட்டம் ஆகியவற்றின் மூலமாக தொழிலாளி வர்க்கம், சமூக முழுவதையும் மாற்றி புதியதாக உருவாக்குகிறது; அதே நேரத்தில் அது தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்கிறது” (மாசேதுங் – நான்கு தத்துவக் கட்டுரைகள், 105).
பாட்டாளி வர்க்கத்தினருக்கு கட்சி தலைமையேற்கிறது. இந்த வர்க்கம் அறிவுஜீவிகளுக்குத் தலைமையேற்பதன் மூலம், அறிவுஜீவிகள் தங்களை முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்டால் தான் புதிய சமுதாயத்துக்கு முழு அளவிலான சேவை செய்ய இயலும் என்ற கருத்தை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்.
“நம் கலை இலக்கியவாதிகள் இந்தக் கடமையை நிறைவேற்ற; அவர்கள்தம் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள், நடைமுறைப் போராட்டங்களில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் தீவிரமாகப் பங்கேற்றுக்கொள்வதன் மூலமாகவும் மார்க்சீயத்தையும் சமூகத்தையும் கற்றுணர்ந்து கொள்வதன் மூலமாகவும் படிப்படியாக தங்கள் நிலைப்பாட்டை தொழிலாளர், விவசாயிகள், இராணுவ வீர்ர்கள் பக்கமும், பாட்டாளி வர்க்கத்தினர் பக்கமும் மாற்றிக்கொள்வர். (மாசே துங் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் 3.78) அறிவுஜீவிகள் மத்தியில் முன்னேற்றம் தென்படுகிறது. ஆனால் அது மனநிறைவு கொள்ளத்தக்கது அல்ல. அவர்கள் தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் தம்மிட்த்தில் உள்ள முதலாளித்துவ உலகக் கண்ணோட்ட்த்தை படிப்படியாக கைவிட்டு, பாட்டாளிவர்க்க-பொதுவுடைமை உலகக் கண்ணோட்டத்தை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் புதிய சமுதாயத்தின் தேவைகளுக்குத் தம்மை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும்; அப்போது தான், பாட்டாளிகள் விவசாயிகள் ஆகிய பகுதியினரோடு இணைய முடியும். உலக்க் கண்ணோட்டத்தில் மாற்றம் பெறுவது என்பது மிகவும் அடிப்படையான விஷயமாகும்; இது நாள்வரை, நம் அறிவுஜீவிகளில் பெரும்பாலானவர்கள் இத்தகைய உலகக் கண்ணோட்டத்தைப் பெற்றிருப்பார்கள் எனக் கூற இயலாது. அவர்கள் இன்னும் முன்னேற்றம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு; மேலும் நடைமுறைப் பணி, தத்துவப்படிப்பு ஆகிய பயிற்சிகளின் மூலமாக, அவர்கள் பொதுவுடைமை உலக்க் கண்ணோட்ட்த்தைப் படிப்படியாகப் பெற்று, மார்க்சீய-லெனினியக் கருத்துகளைச் சரியாகக் கிரகித்துக் கொண்டு தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் சரியாக இணைய முடியும் என்ற நம்பிக்கை நமக்குண்டு.” (மாசேதுங் – நான்கு தத்துவக் கட்டுரைகள். 108)
இத்தகைய இயக்கப் போக்கு, பாட்டாளி வர்க்கத் தலைமையில் தான் நடத்த வேண்டும். ஆனால் அறிவுஜீவிகளின் சுதந்திரமான இசைவையும் முழு அளவிலான உடன்பாட்டையும் பெற்று, இதை நடத்தினால்தான் இது வெற்றி பெற முடியும் எனலாம்:
“தலைமையிடமிருந்து ஒரு சுதந்திர உணர்வையும் மத்தியத்துவ வழி காட்டுதலின் கீழ் ஜனநாயகத்தையும் நாம் வற்புறுத்துகிறோம். இவ்வாறு வற்புறுத்திக் கூறுவதனால், தத்துவார்த்தப் பிரச்சினைகளையோ, ஒரு விஷயம் குறித்து மக்களிடையே எழும் கருத்து மாறுபாடுகளையோ தீர்ப்பதற்கு அதிகாரத்தையும் வன்முறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று பொருளாகாது, தத்துவார்த்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நிர்வாக ஆணைகளையும் அதிகார நடவடிக்கைகளையும் பயன்படுத்தும் எந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைவதோடு மட்டுமின்றி, அது துன்பம் பயக்கக் கூடியதாகும். அதிகாரவர்க்க ஆணைகள் இடுவதன் மூலமாக சமயத்தை ஒழிக்க இயலாது; அல்லது சமய நம்பிக்கை கூடாது என்று மக்களை அச்சுறுத்துவதன் மூலமும் ஒழிக்க இயலாது; மார்க்சீயத்தின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லியும் கட்டாயப்படுத்தக் கூடாது: தத்துவார்த்தப் பிரச்சினைகளையும் மக்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டுக்குரிய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குரிய ஒரே வழி, ஜனநாயக முறையைக் கையாள வேண்டியதாகும்: விவாதம், விமர்சனம், இணங்கச் செய்தல், கல்வி போன்ற ஜனநாயக முறைகளையன்றி, அதிகாரப்பயன்பாடு, அடக்கு முறை போன்ற வழிகளில் பிரச்சினைகளை தீர்க்க இயலாது (மாசேதுங்நான்கு தத்துவக் கட்டுரைகள் 86.)

சீனப் பொதுவுடைமைக் கட்சியினர், பாட்டாளி வர்க்கத்துக்கும் அறிவுஜீவிகளுக்கும் இடையே எழுந்த பகைமையற்ற முரண்பாடுகளை இவ்விதம் அணுகி, வெற்றிகரமாகத் தீர்த்துக்கொண்டனர் என்பதை அவர்களது கடந்த கால நூற்றாண்டு அனுபவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
- ஜார்ஜ் தாம்சன், மனித சமூக சாரம் : கலை அறிவியலின் மூலாதாரங்கள், பக். 194-200.
இந்நூலுடன் கலையும் இலக்கியமும், மா சே துங்கின் நூலையும் படிப்பது பயன் தரும்.

Related link: http://www.padippakam.com/document/M_Books/m000580.pdf