Jul 15, 2011

பெண்ணியம் – ஓர் உரையாடலுக்கான தொடக்கம்.
முன்னுரை:


பெண்ணியம் - தீவிரவாதத்திற்கு இணையாக, பெரும்பாலானோர் கலக்கமுறும் ஒரு சொல்லாக, சிந்தனையாக கருதப்படுகிறது.  மத அடிப்படைவாத வன்முறைகள் செய்பவர்களை தீவிரவாதி என்று சொல்வதற்கும், குடிமைச் சமுதாய பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தீவிரவாதி, பயங்கரவாதி, மாவோயிஸ்ட் என்று அரசால் குறிக்கப் பெறுவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. கற்பனாவாத, கருத்துமுதல்வாத சிந்தனைகளுடனும், குறுகிய எண்ணங்களைக் கொண்டு, சுயநலத்திற்காக மக்களை பிரித்தாள்வதோடு மட்டுமின்றி, வன்முறையில் இறங்கி கொலைகளை, இன அழித்தொழிப்புகளை நிகழ்த்துவதை தீவிரவாதம் என்று கூறுகிறோம், ஆனால் ஒடுக்கப்பட்ட இனம், அல்லது ஒடுக்கப்படும் இனம் தங்கள் இருப்பே மறுக்கப்படும் பொழுது அதை எதிர்த்து நின்று கலகக் குரல் எழுப்புவதை எப்படி தீவிரவாதம் என்று சொல்வது. போராட்டங்களுக்குப் பின்னால் ஒலிப்பது ஒடுக்கப்பட்ட குரலா அல்லது ஆதிக்க வர்க்கக் குரலா, மத அடிப்படைவாதமா, ஆக்ரமிப்பு தந்திரங்களா என்பதைப் பொறுத்து வேறுபாடுகள் அமைகின்றன. 


இதேபோல் பெண்ணியம் குறித்தான சிந்தனைகளை, அதற்கான அவசியத்தை, அதன்  பயன்பாட்டை, பெண்ணியம் முன்வைக்கும் சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்வதில் குழப்பங்கள் நிலவுவதைக் காண முடிகின்றது. பெரும்பாலும் பெண்ணியம் என்பது ஆணை எதிராக வைத்து, ஆண் என்ற ஒற்றை அடையாளத்தை எதிரியாக கருதி, குற்றச்சாட்டுகள் வைப்பது, பாலியல் சுதந்திரம், நுகர்வு கலாச்சார சுதந்திரம் ஆகியவற்றைக் வேண்டுவது, ஆணை விட பெண் உயர்வானவள் என்று வாதம் செய்வது அல்லது ஆணை முற்றிலுமாக நிராகரிப்பது, குடும்ப அமைப்பை உதாசீனப் படுத்துவது, குழந்தைப் பெற்றுக் கொள்ள மறுப்பது என்று பல்வேறு கோணங்களில் புரிந்துக் கொள்ளப்படுகிறது. இவைகளை முன் வைப்பது பெண்ணியமும் அல்ல, ஆணியமும் அல்ல அது தனி மனித சுதந்திரம். தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு காரணமாய் இருப்பது ஆணாதிக்க சமூக அமைப்பு. பொருளாதார விரிவாக்கம், அதிகார விரிவாக்கம், எல்லை விரிவாக்கம் இவற்றுக்குத் தேவைப்படும் மனித உழைப்பும் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக நிலவும் சமூக கோட்பாடுகளும் தந்தை வழிச் சமூகம் தருவித்த ஆணாதிக்கமுறைமை என்று சுருக்கமாக சொல்லலாம்.  (Patriarchy & Male dominant Social Structure). 


அதன்  ஒரு பகுதியாக பொருளாதார படிநிலையில் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதற்கேற்ற முறையில் சந்ததிகளை வளர்த்தெடுக்கவும், தாய்வழிச் சமூகத்தை குலைத்து குடும்பம் எனும் அமைப்பின் மூலம் பெண்களை ஒடுக்கி வைக்க, ஒழுக்க விதிகளை, சமூக கோட்பாடுகளை பெண் இனத்தின் மேல் நிறுவியது ஆணாதிக்க தந்தை வழி சமூகம். ஆணாதிக்கமானது ஒரு புறம் உழைப்பை கட்டுக்குள் வைத்திருக்கிறது. மற்றொருபுறம், அவ்வுழைப்பு ஈட்டித்தரும் உற்பத்தி மற்றும் உபரியின் பலன்களை ஆதாயமான முறையில் பரிவர்த்தனை செய்து, பொருளாதார உயர்வு நிலை அடைய வழிகளைக் கண்டுபிடிக்கிறது. அதற்கேயுரித்தான அதிகார சூழலை நிறுவுகிறது.  தங்களுக்கான அதிகார, ஆதாய சூழலுக்கேற்ற மேலாண்மை நிறுவனங்களை தோற்றுவித்து மக்களை, மக்களது சிந்தனைகளை, உரிமைகளை முடக்குகிறது. அரசு, மதம், ஆகிய நிறுவனங்கள் இதனுள் அடக்கம். ஆண்டாண்டு காலமாய் இயற்கையின் உற்பத்தி சக்தியையும், பெண்ணின் மறுஉற்பத்தி சக்தியையும் (இனப்பெருக்கம்) கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஆணாதிக்க அமைப்பு நிகழ்த்திய ஒடுக்குமுறைகள் வரலாற்றில் நிறைந்திருக்கின்றன.  ஆண்களின் தலைமையில் உற்பத்தி மற்றும் சமுகத் தலைமைகள் கைமாறியது.  ஆதிக்கம், லாபம், அதிகாரம், உற்பத்திப் பெருக்கம், தனிச் சொத்து ஆகியவைகள நோக்கமாகக் கொண்டு தந்தைவழிச் சமூகத்தால் மாற்றியமைக்கப்பட்ட சமுதாய அமைப்பில், ஆண்களின் நலனும், அவர்களுக்கான உரிமைகளுமே ஓங்கி இருக்கின்றன.  மேலும் சமுதாய அமைப்பை நிர்ணயிக்கும் அதிகாரமும் அவர்களிடமே இருக்கின்றது. அதிகாரத்தையும், லாப நோக்கையும் கொண்டுள்ளதால் ஏற்றத்தாழ்வுகளும், பிரிவினைகளும் நிறைந்திருக்கின்றன.  [தொல்பழங்கால தாய் வழி மரபில், குலக்குறிச் சமூகம் என்பது அரசன்  குடிகள் பாகுபாடறியாதது.  அது ஜனநாயக அல்லது கம்யூனிசத் தன்மை உடையது. குலக்குறியுடன் தொடர்புள்ள ஒரு குலத்தின் மக்கள், சமத்துவ முறையில் வாழ்பவர்கள் எல்லா உறுப்பினர்களையும் சரிசமமான அளவில் வைக்கும் சாராம்சமான அம்சமாகும். இது தொல் பழங்கால கம்யூனிசம் (1) என்று மோரப்பின் மேற்கோளை வைத்துச் சொல்கிறார், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா . இதேபோல் ஆதிக்கிறித்தவமும் அபோத்தலர்கள் நடைபெடி எனும் மதப் பீடத்தை நிறுவி கம்யூனிச சிந்தனைக்கு நிகரான பொதுப் பகிர்வு முறைகளை, கூட்டு வாழ்க்கையை, ஆண் பெண் சமத்துவத்தை வளர்த்ததாக ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுகிறார் (2)]. பெண்ணின் மறுஉற்பத்தி சக்தி மீதும், அவள் உழைப்பைச் செலுத்தி வளர்த்த வேளாண் விளை நிலங்களின் மீதும் தந்தைவழிச் சமூகம் அதிகாரத்தை நிறுவியது. அதன் தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்ட சமூக அமைப்பு அதன் தாக்கங்கள், அதில் நிலவும் மனித விரோத, இயற்கை விரோத சிந்தனைகள், செயல்பாடுகள், அவ்வமைப்பை மாற்றுவதற்கான தேவைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டறிந்து பறைசாற்றுவது, அவற்றை நடைமுறைப் படுத்துவது ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை நிறுவதற்கு அவசியமாகிறது.  பெண்களின் விடுதலையை மறுத்து சமச்சீர் பொருளாதாரத்தை நிறுவுவது சாத்தியமில்லை. [வேட்டைப் பொருளாதாரத்தில் தந்தை வழி உறவு முறை இடம் பெற்றிருந்தது, வளர்ச்சி பெற்றுள்ள விவசாயக் கட்டத்தில் தாய் வழியுரிமை முறையின் வகை மாதிரியாக அச்சமூகத்தினர் இருந்துள்ளனர். ஈட்டி கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் வேட்டை ஆண்களது வேலையாக மாறியது. உணவு சேகரிப்பதைப் பெண்கள் தொடர்ந்தனர். வேட்டைச் சமுதாயங்களில் பாலின அடிப்படையில் வேலைப் பிரிவினைகள் பொதுவானது, ஏனென்றால் கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் பெண்கள் அதிகமாக அலையமுடியாது. பின்னர் இரும்பின் கண்டுபிடிப்பால், தொழில் வளர்ச்சியால் இவ்வேலைப் பிரிவினை நிரந்தரமாகிறது. வேட்டைப் பொருளாதாரம் ஆண் கடவுள்களைக் கற்பனை செய்தது என்கிறார் பிரிபால்ட். (அதுவரை இயற்கை வழிபாடு, யோனி வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு, உற்பத்திசார் கூட்டு வழிபாட்டு சடங்குகளாக இருந்துவந்திருக்கிறதே ஒழிய புனிதங்களின் அடிப்படையில் மதம் நிறுவப்படவில்லை). அதோடு வேறுபடுத்தி அறிய முடியாத உடல் உழைப்புடன் மாந்த்ரீகமும் விஞ்ஞானமும் ஆரம்பத்தில் இணைந்தே இருந்தன  என்று சொல்கிறார் ஜோசப் நீட்ஹாம். (3)ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு கல்வி, பொருளாதாரம், நிலவும் சமூக அமைப்புத் தலைமையில் பங்கு மறுப்பு ஆகியவை அச்சமூகத்தைப் பின் தங்கிய ஒன்றாகவே நிறுத்திவைக்கும். வர்க்கப் போராட்டங்களைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கும் பாடம். ஒரு குறிப்பிட்டக் காலம்வரை கல்வியும், பொருளாதாரமும் மறுக்கப்பட்ட இனமாக பெண்களும், சாதியமுறை பகுப்பில் தாழ்த்தப்பட்டோரும் இருந்து வந்திருக்கின்றனர்.  அறிவு வளர்ச்சி முடக்கப்படும்பொழுது உடல் உழைப்பு மலினப்படுத்தப்பட்டு விலைப்பேசப்படுகிறது.  பெண்கள் வீட்டில் உழைத்து ஆண்களை ஆரோக்கியத்துடன் பராமரித்து, குழந்தைப்பெற்று அதையும் ஆரோக்கியமாக வளர்த்து, அதிகார வர்க்கத்திற்கு உழைப்பாளிகளைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாக குடும்பம் செயல்பட வைக்கப்படுகிறது. நிதர்சனமாகச் சொல்லப்போனால், முதலாளிகளுக்கு அடிமைகளைப் பெற்று பேணித் தருவது. அதற்கு சன்மானமாக சிறிய கூலியைப் பெற்றுக் கொள்வது. கல்வி, பொருளாதாரம் மறுக்கப்பட்டப் பெண், ஆணைச் சார்ந்து இருக்கும் சூழல் நிலவுகிறது. இச்சார்பு ஆண்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. மற்ற குடும்பங்களின் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டு போட்டிப் போடும் மனநிலைக்குப் தள்ளப்படுகிறார்கள். பெரும் பொருள் ஈட்டாத ஆணும், அவனது குடும்பமும் மரியாதையிழக்கும் சூழலின் அச்சுறுத்தல் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. அக்குடும்ப நிலையின் தாழ்வுக்குக் காரணமாய் பெண்களின் ஒத்துழைப்பு, மேலாண்மை, மற்ற குணாதிசயங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவ்விதமான சமூக நெருக்கடிகள் பணம் ஒன்றே குறியாக செயல்படவைக்கிறது. இவையே குடும்ப உறவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது, குடும்பம் சிதைவுறவும் காரணமாய் அமைகிறது. 

அதேபோல் கல்வி, பொருளாதாரம் மறுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தார் கூலியை நம்பி இருக்கின்றனர்.  குடும்பத்தைக் காக்கும் பொருட்டு உழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.  இச்சமூகங்களில் பெண்களும் வேலைக்குச் செல்லும் சூழலை பொருளாதாரம் தீர்மானிப்பதை நாம் காணலாம். 

பெரும்  போராட்டங்களுக்குப் பின்னர் பெண்களுக்கும் கல்வி அனுமதிக்கப்பட்ட பின்னரே மற்ற சமூகங்களில் பெண்களும் வேலைக்கு செல்லும் சாத்தியங்கள் நிலவின. 

மேலும் ஆணாதிக்கச் சமூகத்தின் நீடித்த பேராசையின் விளைவாய் தொழில்நுட்பங்களை இயற்கை சக்தியின் மீது ஏவி, இயந்திரமயமாக்கலை நிறுவி உற்பத்தியைப் அளவுக்கதிகமாய்ப் பெருக்கி உபரிகளின் மூலம் லாபத்தை வளர்த்து, அதிகார படிநிலைகளை உயர்த்திக்கொள்வதில் இறங்கியது. 

அதிகார  விரிவாக்கம், பொருளாதாரா ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றிற்காக ஆணாதிக்கம் போர்களைத் தொடர்கிறது, வர்க்கங்களாக மக்களைப் பிரித்தாள்கிறது. பொருளாதார மதிப்பீடுகளைக் கொண்டே மனிதருக்கு சமூக மதிப்பீடு எனும் ஆதிக்க நிலையை நிறுவியது.  பாலின வேறுப்பாட்டிற்கான பிரிவினைவாத அடையாளங்களை சமூக கோட்பாடு எனும் பெயரில் கட்டமைத்து, உழைப்பாளர் வர்க்கத்தின் ஒரு பிரிவான பெண்ணினத்தையும் அடிமைப் படுத்திவைத்திருக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்பது ஆண் என்ற உயிரியல் பிறப்பை, அவனது எல்லா செயல்பாடுகளையும் எதிர்ப்பதாக தவறாக கருதப்படுகிறது.  அதற்கு மாறாக ஆணாதிக்க எதிர்ப்பு என்பது அச்சமூக அமைப்பு தோற்றுவித்த இயற்கை விரோத போக்கு, உழைப்புச் சுரண்டல், பாலின ஒடுக்குமுறைகள், தனி மனித சுதந்திரத்திற்கெதிரான கோட்பாடுகள், வர்க்க வேறுபாடுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை எதிர்ப்பதாக புரிந்துக் கொள்ளுதல் ஆகியவையே பெண்ணியச் சிந்தனையை வளர்த்தெடுக்க உதவும்.


மேற்சொன்ன ஒடுக்குமுறைகள் பல்வேறு  வடிவங்களில் செயல்படுகின்றன. இந்தியச் சமூகத்தில் அவை  சாதி, மதம், குடும்பம், பெண் பற்றிய கருத்தாக்கங்கள், பாலியல் அடையாளங்கள் என்ற வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.  உலகம் முழுமைக்கும் இது பொதுவென்றாலும் அவற்றை கட்டுடைப்பதில், ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க நாடுகள் பெண்ணியம் பற்றின ஒரு புரிதலை ஏற்படுத்தத் தொடங்கின.  

1968 ல் நியுஜெர்சியில் அழகிப் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெண் அழகு சாதனங்கள், உள்ளாடைகள் ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி போராட்டங்கள் நடந்தன. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்ணியம் பல்வேறு கோணங்களில் பரவலாக வளர்ச்சி கண்டது.  1975-1985 ‘பெண்கள் பத்தாண்டு என அறிவிக்கப்பட்டது.  பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிடையே அமெரிக்க இலக்கியங்களில் பெண்ணுரிமை பற்றிய தீவிர சிந்தனைகள் எழுப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில்தான் பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். 1792 ஆம் ஆண்டில் மேரியுல்ஸ்டன் கிராப்ட் பெண்களின் உர்மையைக் கோரும் வகையில் பெண்ணுரிமைக் கொள்கை நிறுவிடு என்னும் நூலை எழுதினார் என்று விவரிக்கிறார் முனைவர் வாசுகி ஜெயரத்தினம். 1966-இல் பெட்டி பிரெய்டன் என்பவரும் மற்றும் பலரும் இணைந்து பெண்கள் தேசிய நிறுவனம் ஒன்றை அமைத்து ஆண்களுக்கு நிகரான உரிமைகளுக்காகப் போராடினர் (4) 

இந்தோனேசியாவில் பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் குரல்  கொடுத்த கார்த்தினி, ஈரானில்  பர்தா அணிதலை நிராகரித்து  பர்தா அணியாமலே பிரசாரங்களை  மேற்கொண்ட குவாரத் உல் அயினர், டோக்கியோவில் கல்வி பயில்வதற்காக வீட்டை விட்டு வந்ததோடு, புரட்சிகரப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சீனப் பெண்மணி சிசுசின்’, இலங்கையைச் சேர்ந்த சுகலா கஜமன்னோனா ஆகியோர் பெண்களின் தனித்துவ வெளிப்பாட்டிற்காகவும் பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடிய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு மற்ற நாடுகளில் ஏற்பட்ட தீவிரமான போராட்டங்களும், புதிய சிந்தனைகளும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. 19,20 ஆம் நூற்றாண்டுகளில் சிந்தனையிலும், கோட்பாட்டிலும் புதிய போக்கு உருவாயிற்று. (5)

நம் சமூகத்தில் கல்வி, பொருளாதார பின்னடைவு மற்றும் சாதி, மதம், கற்பு ஆகிய சிந்தனை மேலோங்கி இருப்பதால், இவற்றைக் கட்டுடைக்கும் பணி குறைவாகவே சாத்தியப்படுகிறது.  கட்டுடைக்கப்படும் சித்தாந்தங்களை ஏதோ ஒரு வகையில் ஒரு அடையாளப் பின்னணியில் வைத்து, விமர்சிக்கப்பட்டு பிளவுகள் நீடிக்கிறது.  இந்தியாவிலும் பல மகளிர் தற்சார்பு இயக்கங்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றது. வனங்களிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிப்கோ போராட்டம் எனும் மரங்களைத் தழுவும் போராட்டம் ஒன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்திய  சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கெதிரான சாதியத்தை உடைக்க அரசியல் ரீதியாக ராஜாராம் மோகன் ராய், இயக்கமாய் ஜோதிராவ் புலே, சட்ட ரீதியாக அம்பேத்கரும், பெரியாரும், முன் மொழிந்த வழிகாட்டுதல்களும் அடக்கம்.  சாதிய ரீதியில் மிக மோசமாக ஒடுக்கப்பட்ட, மனிதர்களாகக் கூட கருதப்படாத மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே அம்பேத்கருக்கு அப்போதிருந்த முதன்மை பணியாக இருந்தது. அதோடு சேர்த்து அவர் அரசியல் சூழலில் பெண் விடுதலைக்கான (மறுமணம், சொத்து முதலானவை) சாத்தியங்களை சட்டத்தின் உதவியோடு வரையறுக்க உதவினார்.  இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டிலிருந்து பெண்கள் மிதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பரவலாக குரல்கள் எழத்துவங்கியது, பூலே உட்பட சுதந்திர போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சில தலைவர்கள் பெண்ணிய போராட்ட முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர், அவர்களைத் தொடர்ந்து பெண்களும் இப்பணியில் இணைகின்றனர். [அப்பெண்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளாகினர். பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று வலியுறுத்தியமைக்காக Dr. விஜலட்சுமி ரெட்டி தேவடியா என்று பாராளுமன்றத்தில் ஆண்களால் வசைபாடப்பட்டார்.]

இந்திய  அளவில் ஆங்காங்கே பெண்களின் உரிமைகளுக்காக சில தலைவர்கள் குரல் கொடுத்திருந்தாலும் தமிழ் நாட்டில் சாதிய எதிர்ப்போடு, பெண் விடுதலையை முழு வீச்சுடன் எடுத்துரைத்தவர்  பெரியார். 

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்பதில் துவங்கி, ஆண்கள் சம்பாதித்து கொண்டு வருவதை ஆடை அலங்காரங்களுக்கு செலவிடுபவர்கள் பெண்கள், பணத்தாசை பிடித்தலைபவர்கள், அழகைக் காட்டி மயக்கி ஆண்களை பயன் படுத்திக் கொள்பவர்கள் என்பது போன்ற ஆண்களின் பொதுக் கருத்துக்களும், பெண்ணியம் பேசும் பெண்கள் அடங்காத குணம் கொண்டவர்கள், பாலியல் சுதந்திரம் கோறுபவர்கள், புகை, குடி உள்ளிட்ட பழக்கங்களுக்கு உரிமைக் கோறுபவர்கள், குடும்ப உறவுகளை சிதைப்பவர்கள், அவர்கள் கையில் அதிகாரம் போனால் உருப்படாது என்பது வரையான விமர்சனங்களை பெண்கள் கேட்டிருக்கக்கூடும். மேலே குறிப்பிட்டிருக்கும் குணங்கள் பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய தனி நபர் சார்ந்த குணங்கள் மட்டுமே.

பெண்களுக்கு நிகராக ஆண்களும் அழகியலில், ஒப்பனையில், கவர்ச்சி காட்டுவதில் இப்பொழுது கவனம் செலுத்துகிறார்கள், (இன்னும் அதிகமாக என்றும் சொல்லலாம், அவர்களுக்கென்று ஃபேர்னஸ் க்ரீம்கள் தனியே வந்துவிட்டன) பெண்களை மயக்க பல் வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள், அவற்றை கையில் கிடைத்த தொழில்நுட்பங்களைக் கொண்டு, பதிவு செய்து, மிரட்டி, வல்லுறவுக்கும், பொருளாதார ஆதாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். (பெண்கள் இவ்வக்கிரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லையே) அடிப்படையிலேயே சுயமரியாதைக்கு மதிப்பளிப்பவராய் இருப்பின் ஆண்களும் யாருக்கும் அடங்கிப் போவதில்லை. புகை, குடி, போதை இவை எவருக்கும் உடல் நலக் கேட்டை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இவை பெண்களுக்கு உடல் நலம் சார்ந்து மறுக்கப்படவில்லை, அது பெண் என்ற பாலியல் அடையாளத்தை முன்வைத்தே மறுக்கப்படுகிறது. குழந்தைப்பேறு காலத்தில், குழந்தையின் உடல் நலன் கருதி என்று ஒரு வறட்டுக் காரணம் சொல்லப் பெறுகிறது, அதே குடி, புகை, போதை இவைகளை உபயோகிப்பவரின் விந்து ஆரோக்கியமற்றதாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது, கண் பார்வையை இழக்கும் வாய்ப்பிருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தும் ஆண்களுக்கு விந்து குறைபாடு, குழந்தைப்பேறின்மை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆண்கள் குடிப்பதற்காக சலுகைக் காரணங்கள் ஏராளமாகக் சொல்லப்படுகிறது உடல் அலுப்பு, கடுமையான உழைப்பு, மன உளைச்சல், விரக்தி, கொண்டாட்டம், சோகம்...  இப்படி, பெண்களுக்கு இத்தகைய உணர்ச்சிகள் இல்லையா? இருக்கக் கூடாதென்று ஆண்கள் கூறுவது  புலனுணர்வு, அனுபவ அடிப்படையில் அல்ல, வெறும் ஆண் மைய்யக் கோட்பாடுகளாய் மட்டுமே என்பதை நிணைவு கொள்ளுதல் வேண்டும்.

இது போன்ற கேள்விகளை எழுப்புவதால் பெண்கள் இப்பழக்கங்களைக் கைக்கொள்வதற்கான சுதந்திரம் கோரித்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பது ஆண் மைய்யத்தின் வக்ரமான வாதம். அவற்றை செய்ய நினைக்கும் பெண் கேள்விகள் எழுப்பி யாரிடமும் அதற்கான அனுமதிகோர வேண்டியதில்லை. அக்கேள்விகளின் நோக்கம், கற்பனாவாத கோட்பாடுகளின் தாக்கம் பெண்ணின் (மனிதரின்) விருப்பு வெறுப்புக்களின் மீது ஏன் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுதான். அதேபோல் சிகரெட், மது இவற்றை ஆண்மை சின்னமாய் கருதப்படுவதை உடைத்தெறிவதற்கும் இவ்வுரையாடல்கள் அவசியமாகிறது.

கூடுதலாக  சொல்வதானால், முந்தையக் காலக்கட்டத்தில் பெண்கள் கள் அருந்திய தகவல்கள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதும் தாய்வழிச் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் குறவர் சமுதாயத்தில் பெண்களும் குடிக்கச் செய்கிறார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பெரும்பாலான பெண்கள், கடினமான வேலை செய்யும் பெண்கள் குடிக்க செய்கிறார்கள். முதலாளி வீட்டுப் பெண்களும் மது அருந்துகிறார்கள். இதில் குழப்பத்தில் உழல்வது இடைநிலை பொருளாதார படிநிலை மக்கள். ஆண் பெண் இருபாலாருக்கும் இருக்கும் தனி மனித பழக்கவழக்கத்தின் வெளிப்பாடுகளுக்கும், அது சார்ந்த உரிமைப் பிரச்சனைகளுக்குள் மட்டும் பெண்ணியத்தை சுருக்கிவிட இயலாது.  

பெண்ணியம் என்பது ஆணாதிக்கப் பார்வையில் நிலவும் பாலின அடையாள வேறுபாட்டின் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் நடைமுறை. பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டறிவது, எவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதை வரலாற்றின் துணையுடன், கருத்தாக்கக் கட்டுடைப்பு ஆகியவற்றைக் கொண்டு கண்டடைவது, ஆணுக்கிருக்கும் அத்தனை சுதந்திரங்களையும், அதற்கும் மேலாக மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்குமான சுதந்திரங்களையும் கோருவது என்று பெண்ணியம் விரிகிறது. ஆணாதிக்க சமூக கட்டமைப்பு விதைத்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளை (வர்க்கம், சாதி, பாலின அடையாளம், பொருளாதாரம் ஆகியன) களைந்து, சமதர்ம சமுதாயத்தை நிறுவுவது பெண்ணியத்தின் நோக்கம்.

பெண்ணியத்திற்கு ஒடுக்கப்பட்டவர்களில் ஆண், பெண், பாலியல் சிறுபான்மையினர், சாதிய சமுதாயப் படிநிலையில்  பின்தங்கியவர்  என்கிற பேதமில்லை. பெண்ணியம் ஏகாதிபத்தியத்திற்கெதிராக அடக்குமுறைக்கெதிராக, ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக ஒலிக்கும் குரல். அது தனி மனித சுதந்திரத்திற்கான சுயமரியாதையைப் போற்றுகிற குரல். இவற்றை முடக்குகின்ற கருத்தாக்கங்களை, ஆதிக்க சக்திகளை, சமூக முறைமைகளை அடையாளம் காட்டுவது, அவற்றை முறியடிப்பது ஆகியவற்றின் பகுதியாகவே, தவறு என்று கருதப்படும் அத்துணை விஷயங்களையும் விவாதத்திற்குட்படுத்துவது (மதுப்பழக்கம், பாலியல் சுதந்திரம், பெண்ணெழுத்தில் பாலியல் சொற்கள் உட்பட). 

தவறு  என்று சொல்லப்படும் எல்லாமே  ஆணாதிக்க சமூகம் தோற்றுவித்தக் கோட்பாடுகளே ஆகும். பெண்களின் அறமாக சமூகத்தில் எல்லா சித்தாந்தங்களும், அறிவுரைகளும் ஆணாதிக்கத்தின் குழந்தைகளான ஆண்களால் தோற்றுவிக்கப்பட்டவையே. (இந்த உண்மையை அறியாமல் அவற்றிற்கு அடிமையாகிப் போன ஆணின் பெண்களாலும், அவ்வொழுக்கக் கோட்பாடுகளை அப்படியேக் கடைபிடிப்பதாக பறைசாற்றி தங்களை கற்புக்கரசிகளாய் நிறுவ முயலும் ஆணாதிக்க சிந்தனைக் கொண்ட பெண்களாலும்).  இவற்றில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் உடல் சார்ந்த ஒழுக்கக் கருத்தாக்கங்களாக முதன்மை பெறுகின்றன. ஆண்களுக்கும் அவ்வொழுக்க விதிகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு அவற்றை மீறும் சலுகைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இலக்காக பெண்கள் ஆணாதிக்க கட்டமைப்பை எதிர்ப்பதில் பெரும்பங்கு  வகிக்கின்றனர். அது பெண்ணியம் எனும் சித்தாந்தமாக, கோட்பாடாக வரையறுக்கப்படுகிறது. இக்கருத்துக்களை புரிந்துக் கொண்ட ஆண்களும் பெண்ணியத்திற்கு பங்களிக்கின்றனர். ஆண், பெண், பாலியல் சிறுபான்மையினர் என்று எல்லோருக்குமான தனி மனித சுதந்திரத்தை ஆணாதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பதிலும் பெண்ணியத்தின் பங்கிருக்கிறது. 

பெண்  எங்கே ஒடுக்கப்பட்டிருக்கிறாள் என்ற கேள்விக்குப் பதில் சொல்வது என்பது அவற்றைக் கேள்விகளால்தான் எதிர்கொள்ளமுடியும் என்பதிலிருந்துதான் தொடங்கும். ஆண் அறம், பெண் அறம் என்ற விதிமுறைகள் சமூகத்தில் எவ்வாறு தோன்றியது.  தோற்றுவித்தது எவர். பாலியல் ஒடுக்கத்தின் பாற்பட்டு பெண்ணின் இயல்புகளில் ஒன்றாக  நாணம் அமைவது பெண் அறம்.  ஆணின், அறமெல்லாம் நீட்சே கூறுவது போல வென்று எழுதலை’ (Overcoming) ஒட்டியவை. பெண் அறமெல்லாம் பணிந்து அடங்குவதை (submission) ஒட்டியவை என்று சொல்லலாம் என்கிறார் ராஜ் கௌதமன். மேலும் அவர் சொல்வது பதிவிரதை என்கிற பாலியல் தகுதிக்காகப் பெண்ணுக்குரிய அறம் பாலியல் அடிப்படையில் கூறப்படுகிறது. சங்க இலக்கியங்களைக் காண்கையில் ஆண் அறம் பொருள் அறமாகவும், பெண் அறம் இன்பம் சார்ந்து, இயற்கையோடு ஒன்றக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார்.  மேலாதிக்கப் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு ஆன்கள் கூறிய ஆண் அறத்தில் பெண் எழுவாயாக இல்லை, செயப்படு பொருளாகத்தான் இடம் பெற்றாள் என்று ஃபூக்கோவின் மேற்கோள்களைக் காட்டி ஆணின் அறம் தனியுடைமை அறம் என்று விளக்குகிறார். (6) 

பெண்ணின்  தருமத்தில் பிசகு ஏற்பட்டால் அந்த வீட்டு ஆண்களுக்கு எத்தனை இருந்தாலும் அத்தனையும் ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்*. பெண்களுக்கான திருமன வயது 9 என்று சட்டம் இயற்றிய மநுவில் தொடங்கி, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், சங்க இலக்கியப் பாடல்கள், திருக்குறள் உள்ளிட்ட படைப்புகளில் பெண்கள் பற்றிய வருணனை, பெண்களுக்குரிய கடமைகள், தண்டனைகள், அங்கிகாரங்களுக்கான செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வகுத்திருப்பது ஆணாதிக்க அமைப்பு.  பெண் விடுதலைக்கெதிரான அத்தனைக் கோட்பாடுகளையும் கடவுளின் பெயரால், புனிதங்களின் பெயரால் நிறுவியதன் மூலம் பெண்களை கடவுள் நம்பிக்கைகளுக்குள் மூழ்கடித்து, புனிதத்தன்மைக்காக அடிமைப்பட்டு கிடக்கவேண்டிய நெருக்கடியை ஏற்றிவைத்தது அவ்வமைப்பு. கடவுள் நம்பிக்கையற்ற ஆணை பகுத்தறிவாளனாக, அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் நாத்திகவாதியாக இருக்க அனுமதிப்பதில்லை. அனுமதி மறுப்பானது நேரடியான விதிகளாக இல்லாமல் பெண் பற்றிய கொச்சையான வசைச் சொற்களாக, நடத்தை சார்ந்த விமர்சனங்களாக வைக்கப்படுகின்றன. இவ்விமர்சனங்கள் பெண்களின் நடத்தைக்கான எழுதா விதிகளாக மாறி உளவியல்ரீதியாக பெண்ணை அச்சுறுத்தி அறிவுத் தேடலுக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. [ஏவாள் அறிவுக் கனியை உண்ண வற்புறுத்தியதால் ஆதாம் கடவுளின் அன்பிலிருந்து விலக்கப்பட்டான் என்பது ஆதி உதரணம்]

மறு உற்பத்தி, பொருளாதாரம், உபரி, அதீத லாபம், விரிவாக்கம், அதிகார மோகம் ஆகியவை சமூக கட்டுமானங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றிற்கான சாதகமான சூழலை ஏற்படுத்த அதிகார வர்க்கம் பல்வேறு கோட்பாடுகளைத் தோற்றுவிக்கிறது. சில வேளைகளில் நிலவும் நம்பிக்கைகளைப், பழக்கவழக்கங்களை திரித்து அவற்றை தேற்றங்களுக்குள் (theory) அடக்கிப் பரிவர்த்தனை செய்கிறது. 

இப்படி  மனிதர்களுக்காக மனிதர்கள்  தோற்றுவிக்கும் விதிகளை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் ஏற்றி வைப்பதற்கு கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இயற்கையின் விதியான ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஓர் சக்தி பற்றிய கருத்தாக்கங்கள் மூலம் ஓர் ஒற்றை அதிகார மையம் நிறுவப்படுகிறது. மரணம் பசி பற்றிய பயம் ஆகியவைகள் அனைத்து உயிரினிடத்தும் காணக்கூடிய ஒன்று.  [இதேபோல் உடல் இன்ப வேட்கையும், ஆனால் அதில் பெண்களுக்கு விதிமுறைகள் நிலவுகிறது]


மரணத்தையும், பசியையும் வெல்வதற்கான போராட்ட சூழலில் சமூக அமைப்பு மாறிக்கொண்டே இருக்கிறது. பசியை வெல்ல பொருளாதார போராட்டம், மரணத்தை வெல்ல அழியாப் புகழும், வாழும் காலத்தில அதிகாரத்தைக் கைக்கொள்ளவும் மனிதர்களை தள்ளுகிறது என்பதை வரலாறு உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. அதன் ஒரு பகுதியாய் மரணத்தையும் பசியையும் வெல்வதற்கான சாத்தியங்கள் பற்றிய கருத்தாக்கங்கள் மூலம் மனித மனங்களில் ஊடுருவல் செய்து சார்பு நிலைகள், பற்றுணர்ச்சிகள் பரிவர்த்தனை செய்யப்பட்டது. கேள்விக்கப்பாற்பட்ட ஒற்றை அதிகார மையமாய் கடவுள் எனும் கருத்தாக்கம் நிறுவப்படுகிறது. அவரைப் பணிவதன் மூலம் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று நம்பவைக்கப்பட்டது. (அது இன்றும் தொடர்கிறது).  அப்பணிவுக்கான போர்வையில் தனிச்சொத்து, ஒரு தார மணமுறை மற்றும் அதிகாரம், அரசு, முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு உறுதுணையாக கோட்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டது. அவ்வதிகாரப் புனைவுகளைச் செய்வோர் அறிவைப் பெறும் தகுதியாக வரையறுத்தனர் (ஆனால் அது பொருளாதார உயர்வு, கல்வி அறிவு, சாதிய மேல்நிலை ஆகியவைகளை உள்ளடக்கியது). உடல் உழைப்பிலிருந்து அறிவு பிரிக்கப்பட்டது. அறிவு உன்னதப்படுத்தப்பட்டு, உழைப்பு விலைமதிப்பற்றுப் போனது, குறிப்பாக பெண்ணின் உழைப்பு. [உ.ம். ஞானக்கனியைப் பெற முருகன் உலகெலாம் சுற்றி வருவார், பிள்ளையாரோ தாய் தந்தையை சுற்றி வந்துப் பெற்றுவிடுவார். இதன் மூலம் உடல் உழைப்புக்கு மதிப்பு குறைக்கப்பட்டு, அறிவுத் திறன் ஏற்றிவைக்கப்பட்டது.  தந்திர புத்தியை அறிவு என்று வகுத்து அறிவுடையோருக்கே ஆதாயமான சூழல் நிலவும் என்று கற்பிக்கப்படுகிறது. இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. இன்னும் கட்டுடைத்தால் முருகன், விநாயகன் ஆகியோர் வெவ்வேறு பழங்குடிகளின் தலைவர்கள், சிவனும், பார்வதியும் பார்ப்பனியம் உட்புகுத்திய தலைக் கடவுளர்கள், பழங்குடிகளின் தலைவர்களில் முருகரானவர் அத்தலைமைக்குப் பணிய மருத்து உழைத்து தன் கூலியைப் பெற முனைகிறார், விநாயகரோ அத்தலைமையே சிறந்த தலைமையென்றும், அதுவே உலகத்தின் வடிவம் என்றும் பணிந்து தந்திரமாக வெல்கிறார் என்றும் புரிந்துக் கொள்ளலாம்.]

பொருளாதாரம், மூலதனம், முதலாளியம், அடிமை முறை, சமூக கோட்பாடுகள் ஆகியவை ஒரு தனி இயங்கு பொருளாக வானிலிருந்து குதித்துவிடவில்லை. மனித செயல்பாடுகளிலிருந்தும், மனித போராட்டங்களிலிருந்தும் தோன்றின, தோன்றுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த ஆண்கள் தலைமையிலான சமூக அமைப்புக் கைக்கொண்ட வழிகள் சமச்சீர்தன்மைக்கு எதிரானதாய் பூதாகரமாய் வளந்துவிட்டது எனலாம்.  இப்போராட்டத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டிருப்பது பெண்ணினம். ஆணை சார்ந்து நிற்கும் நிலை, சமூகப் பாதுகாப்பற்ற சூழல், அவளது உடலுக்கும் மனதுக்கும், கருத்துக்கும் நிலவும் ஆணிய அச்சுறுத்தல்கள் என நீள்கிறது.   


பெண்களுக்கெதிரான  வன்முறைகள் சில  புள்ளி விவரங்கள்:**


32000 கொலைகள், 19000 வல்லுறவுகள், 7500 வரதட்சனை மரணங்கள், 36500 பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை பெண்களுக்கெதிரான குற்றங்களாக 2006இல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறைய குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் விடப்படுகிறது. இது இந்தியக் குற்றவியல் ஆவண நடுவர் மன்றம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

வல்லுறவுக்  குற்றம் இந்திய அளவில் அதிகரித்துவரும்  குற்றமாக இருப்பதாக தெரிவிக்கின்றது அம்மன்றம். ஒரு மணி நேரத்தில் 18 பெண்கள் ஆண்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறது. பத்திரிகைகளில் வன்புணர்ச்சி பற்றியும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனலாம். கூட்டமாக ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்வது முதல், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் கூட்டமாக சேர்ந்து அடித்தது வரை பெண்கள் மேல் ஆண்கள், ஆணாதிக்கம் கொண்டுள்ள வக்ரமான வளர்ச்சியைக் காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளாக வரும் பெண்கள் மீது கூட இத்தகைய வன்முறைகள் ஏவப்படுகிறது. இவற்றோடு காதலிக்க மறுக்கும் பெண் மீது அமிலத்தை ஊற்றுவது, கடத்திக் கொலை செய்வது, அப்பெண்ணின் பெற்றோரை அச்சுறுத்துவது என்று நாம் நாள்தோறும் செய்திகளைக் காணமுடிகிறது. நந்திக்ராம், கவுஹாத்தி போன்ற ஊர்களில் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஆண்கள் அடித்து உதைத்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்ததற்காக, ஊரே சேர்ந்து அப்பெண்ணை வன்புணர்ச்சி  செய்ய தீர்ப்பு அளிப்பதிலிருந்து, கௌரவக் கொலைகள், இணையக் குற்றங்கள் [சைபர் க்ரைம்] என எல்லாம் பெண்களின் மீது ஆணாதிக்க சமூக அமைப்பால் ஆண்களால் ஏவப்பட்ட வன்முறையே.

ஆண்களால்  நிலவும் இத்தகையப் பாதுகாப்பற்ற சூழலே பெண்களை குடும்ப  உறவில் தள்ளுகிறது. அதை எப்பாடுபட்டாவது  காத்துக்கொள்ள வேண்டும் என்று அதனுள் நடக்கும் வன்முறைகளை சகித்துக் கொள்ளச் செய்கிறது. ஆண்களால் சீரழிவதை விட ஆணால் சீரழிவது மேல் என்ற எண்ணத்திலேயே இது புகுத்தப்படுகிறது. இவ்வச்சமே பெண் சிசுக் கொலை வரை நீள்கிறது. 2008இல் பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை 19,5,856 ஆக இருக்கிறது. இது 2006 ஐ விட கூடியிருப்பதை நாம் காண முடிகிறது.****

இந்தியாவில் பாலியல் தொழிலானது ஆண்டுக்கு 400000 மில்லியன் வரையிலான வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கிறது. இதில் 30% தொழிலாளிகளின் குழந்தைகள். அவர்கள் ஈட்டுவது 110000 மில்லியன்கள். சுமார் 3 மில்லியன் குழந்தைகளில் 1 மில்லியன் 18 வயதுக்கு குறைவானவர்கள்.  15 சதவிகிதத்தினர் மும்பை, கல்கத்தா, டெல்லி, சென்னை, பங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களைக் கடத்தும் குற்றமாக 1998இல் மட்டும் சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய வருடத்தை விட இது 5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. 

ஐ.நா பொதுக்கூட்டம் நவம்பர் 25 ஆம் நாளை மகளிருக்கெதிரான வன்முறைகளைக் களையும் உலக தினமாக 54/134 டிசம்பர் 17,1999 தீர்மானத்தின் மூலமாக அறிவித்திருக்கிறது. இதன் பின்ணனியில் இருக்கும் வரலாறு, மிரபால் சகோதரிகள் 1960களில், டொமினிக்கன் அரசர் ரஃபேல் ட்ருஜிலோவின் ஆணையின் பெயரில், சில அரசியல் செயற்பாட்டாளர்களால் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். 1981 முதல் பெண்ணியலாளர்கள் 25 நவம்பரை பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகளுக்கெதிரான தினமாக அறிவிக்கக்கோரினர்.  20 டிசம்பர், 1993 ஐ.நா அதை ஏற்றது.

யுனிசெஃபின் உலக குழந்தைகளின் நிலை – 2009” இன் அறிக்கைப்படி 20-24 வயதில் உள்ள 47 சதவிகித பெண்கள் 18 வயதிற்கு முன்னறே திருமணம் செய்துக்கொண்டவர்கள். 40 சதவிகித குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடப்பதாக அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது. 1994இல் ஹையிஸ் என்பவரால் செய்யப்பட்ட ஆய்வில் ஐந்து நிமிடத்திற்கொருமுறை பெண்களுக்கெதிரான குற்றங்கள் நேர்வதாக பதிவாகியிருக்கிறது. 


உலகளவில்  பெண்கள் நிலைப் பற்றிய சிலத்  தகவல்கள் 1

    * வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் தொகையான 1.2 பில்லியனில், 70 சதவிகிதம் பெண்கள்.
    * உலக உழைப்பின் அளவில் 67 சதவிகிதத்திற்குமான உழைப்பு பெண்களுடையது, ஆனால் 10 சதவிகிதம் மட்டுமே அவர்களின் வருவாய் அதோடு 1 சதவிகிதம் மட்டுமே அவர்களின் சொத்து.
    * கூலிப் பெறாத உழைப்பின் மதிப்பீடான 16 பில்லியன் டாலரின் 11 பில்லியன் டாலர் பெண்களின் காணாப் பங்களிப்பிற்கானது.
    * 30 முதல் 40 சதவிகிதம் வரை பெண்களின் கூலி ஆண்களைவிடக் குறைவானது.
    * 60 முதல் 80 சதவிகித உணவு, முன்னேறும் நாடுகளில் பெண்கள் உற்பத்தி செய்வது.
    * 10 முதல் 20 சதவிகிதமே மேலாண்மைப் பணிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை
    * 5 சதவிகிதம் மட்டுமே அரசுத் தலைமைப் பதவியில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை.


பெண்களும் கல்வியும்

    * 130 மில்லியன் கொண்ட  6 முதல் 11 60 சதவிகித பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில்  60 சதவிகிதம் பெண் குழந்தைகள் ஆவர்.
    * தோராயமாக கல்வியறிவில்லாத 875 மில்லியன் இளைஞர்களில் 67 சதவிகிதம் பெண்கள், அதில் தெற்காசியாவில் 5 இல் 3 பெண்களும், ஆப்ரிக்க, அரேப்ய நாடுகளில் 50 சதவிகித பெண்களும் கல்வியறிவற்றவர்கள்.

இந்தியாவில் பெண்கள் நிலை:

    * விவசாயமற்ற  கூலித் தொழிலில் பெண்களுக்கான பங்கு வெறும் 17 சதவிகிதமே.
    * பணியாட்கள் எண்ணிக்கையில் நகரங்களில் பெண்களின் பங்கு 13.9 சதவிகிதம், கிராமங்களில் 29.9 சதவிகிதம்.
    * பெண்களின் கூலி ஆண்களின் கூலியில் 25 சதவிகிதம் குறைவாக உள்ளது, அது 25 சதவிகித குடும்ப வருமானத்திற்கு பங்களிக்கிறது.
    * இந்தியாவில் விவசாயக் கூலியில் எங்கும் சரிசமக் கூலி பெண்களுக்குக் கிடைப்பதில்லை.
    * நீதிமன்றப் பணிகளில் 4 சதவிகிதமும், மேலாண்மைப் பணியில் 3 சதவிகிதமும் மட்டுமேப் பெண்கள்.
    * 245 மில்லியன் பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.

பெண்களும் ஆரோக்கியமும்:

    * பெண்கள் உட்கொள்ளும் காலரிகள் 1440 மட்டுமே, அவர்களுக்குத் தேவை 2200 காலரிகள்.
    * சென்சஸ் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் பெண்கள் பிரசவக் காலத்தில் இறக்கின்றனர்.

 2011 ஆம்  ஆண்டு சென்சஸும் வெளிவந்துவிட்டது, குழந்தைப் பாலின விகுதியில் (0-6 yrs) ஆயிரம் ஆண்குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகளே இருக்கின்றனர், இது 2001இல் 927 என்ற விகிதத்தைவிட குறைவு. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 830,846 என்று இருக்கிறது. பெண் சிசுக் கொலைகள் இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வியறிவு விகிதமும் ஆண்களைவிட பெண்களில் குறைவாகவே முன்னேற்றம் கண்டிருக்கிறது. 


எப்படி ஒருவர் தன் நிழலைத் தாண்டவியலாதோ, அதேபபோல் நாம் வரலாற்றைத் தாண்டிச்செல்லவியலாது, அதே வேளையில் அவ்வளர்ச்சியை திருகிவிடவோ அல்லது முடக்கவோ செய்யவியலும் என்கிறார் ஷோசலிசப் புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். மேலும் அவர் சொல்வது, மனிதர்கள் (ஆண்) அவர்கள் வரலாற்றை அவர்களே படைக்கின்றனர். ஆதலால் வரலாற்றின் முன் உழைப்பாளிகளுக்கும், (பெண்ணும் அடங்கிய), உழைப்பளிகளின் கட்சிக்கும் அவர்களின் சொந்த விதியை நிணைவூட்டவும், இயந்திர வளர்ச்சியின் ஆதாரமற்ற வெற்றியை நம்பிக்கையுடன் வலியுறுத்தும் போக்கையும், அதன் விளைவான சோம்பலும், மனநிறைவையும் எதிர்த்தல் அவசியமாகிறது என்கிறார்.  

வரலாற்றில்  சமூக அமைப்பானது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது தடுக்கவியலாதது. அம்மாறுதலின் போது அதிகாரம் கைமாறுவது, உரிமைகள் பறிக்கப்படுவதும் நடந்தேறுகிறது. பெண்களின் சமூக வரலாற்றைப் பொறுத்தவரை குலக்குறிச் சமூகத்திலிருந்து தனிச்சொத்தை மையமாகக் கொண்டு எழுந்த சமுதாய அமைப்பு, அவளை இரண்டாந்தர நிலையிலேயே வைத்திருக்கிறது. இனவிருத்திக்கும், குடும்ப மேலாண்மைக்குமான பிறப்பாய் மட்டுமானவள் பெண் என்ற நிலையைத் திணித்தது ஆண் தலைமையிலான தந்தைவழிப் பொருளாதார சமூக அமைப்பே. 

பண்டையப்  பலதார மணமுறையில் பிள்ளைகளின்  மேல் பெற்றவனுக்குப் பெரிய  உரிமைகள் இருந்திருக்கவில்லை என்று தொல்பழங்கால ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு ஆண் ஈட்டும் பொருளை, பெண் மற்ற ஆணுக்குப் பிறந்த வாரிசுகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பதிலிருந்து, தன் சொத்து தனக்கான இரத்த உறவுக்கு மட்டுமே செல்லவேண்டும் என்ற நோக்கோடும், அக்காலக் கட்டத்தில் நிலவிய தொழிற்முறைப் போட்டிக்கேற்பவும், பொருளாதார வாய்ப்புகள், அரசியல் அதிகாரம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகிய சூழலுக்கேற்பவும் ஒருதார மணமுறைக்கு மாற்றம் ஏற்பட்டது எனும் தகவல்களை அவ்வாயுகள் மூலம் கண்டுக்கொள்ளலாம்.  இது பொருட்படுத்தக்கூடிய ஏற்பாடு என்பதில் ஐயமில்லை, ஆனால் இருவர் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு முறையில் ஒருவருக்கு மட்டும் விதிகளாக ஒடுக்குமுறை, பொருளாதார அச்சுறுத்தல் (வரதட்சனை), உடல் வதை வன்முறைகள் நிலவக் காரணமாய் இருப்பது களையப்படவேண்டும். உறவுகள் அன்பினால் தீர்மானிக்கப்படவேண்டுமே அன்றி சமுதாயம் கட்டமைக்கும் நலம் பயக்கும் அமைப்பு என்றோ கடமை உணர்சிகளினாலோ  அல்ல.


நிலங்களின்  மீது தனிமனித அதிகாரம், அதற்கேற்ற  ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வுகள்  என சமூகம் மாறுதல் பெற்றது. பொதுவாக உழைத்துப் பொதுவாகப் பகிர்ந்து உண்ட நிலைமை மாறி, ஒருவர் உழைக்க மற்றவர் அவ்வுழைப்பின் பலனை அனுபவித்தல் என்ற ஏற்றத்தாழ்வுக் கூடிய சுரண்டல் நிலைத் தோன்றியது. இத்தனிச் சொத்து முறையானது ஆண்களுக்கு கவுரவத்தைப் பெற்றுக் கொடுத்தாலும், நாட்டின் பொருளாதார நிலவரத்திற்கேற்ப தலைமகனுக்கு கடும் நெருக்கடிகளைத் தருகிறது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ளுதல் உதவும். பெண்களும் பொருளீட்டுவதன் மூலம் அந்நெருக்கடிகளை பகிர்ந்துக் கொள்கின்றனர். ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்கள் பொருள் ஈட்டுவது இரண்டாம்தர விமர்சனங்களுக்குள்ளாகிறது.

ஆணாதிக்க  சிந்தனைகளால் பணிக்குச் பெண் எதிர்கொள்ளும் மனநிலைகள்:
 
1. பெண்களினால் ஆண்களுக்கு வேலை வாய்ப்புக் குறைகிறது.


2. பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் குறித்தான அச்சம் அல்லது பெண்கள் கைக்கொள்ளும் பாலின அடையாள முன்னிறுத்தல், அதை வைத்துப் பெறும் சலுகைகள். 

முதலில் எல்லா சமூக நிலைகளிலும்  பெண்ணுக்கு சம உரிமை அவளது பிறப்புரிமை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டியுள்ளது. வேலை வாய்ப்பு குறைவது பெண்களால் என்பது மூடத்தனமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க பொருளாதார அணுகுமுறையின் இயந்திரமயமாக்கல் அதற்கு முக்கியக் காரணமாய் உள்ளது.  தொழில்மயமாக்கலின் தொடக்கக் காலங்களில், கடும் எடை கூடியவை, ஆபத்து நிறைந்தவை என்று சொல்லி பெண்களை தொழிற்சாலைப் பணிகளிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். இது போன்ற காரணங்களால், பெண்கள் தொழில் நிறுவனங்களில் பங்கு பெறாமல் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பின்னர் அவை நவீன இயந்திரமாக்கலின் போது எளிய தானியங்கி (automation)  யுக்திக்கு மாற்றம் பெற்று, எவரும் கையாளக்கூடிய திறனுக்கு மாறுதல் பெறுகிறது. விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம் பெண்கள் கல்வி கற்றனர், அவர்களுக்கான உரிமைகளை கோருகின்றனர். வேலையற்ற தன்மை (‘unemployment’)  என்பது அரசு தீவிரமாக ஆய்ந்து தீர்வுக் கான வேண்டிய ஒன்று, இதில் பெண்களைப் பழிப்பது ஆணாதிக்க மனநிலை. 

ஆணாதிக்க  மனநிலை பொருளாதார அதிகாரம் பெற்றிருக்கும் ஆண்களின் உளவியலை அறிந்து, பெண்களை பாலினக் கவர்ச்சிக்காக முன்நிறுத்துவதற்காக பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கிறது எனவும் சொல்லலாம். அதோடு, ஆணாதிக்க தலைமை பெண்களை தங்கள் பாலியல் இச்சைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறது, கொடுக்கும் காசுக்கு அதிக லாபம் எதிர்பார்க்கும் ஆணாதிக்க, முதலாளித்துவ மனோபாவம்.

பெண்களை ஒடுக்குவதற்காக ஆணாதிக்கம் அவள் உடலின் மேல் ஏற்றிவைத்த சிந்தனைகளே, பெண்களுக்கு நாள்தோறும் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்குக் காரணமாய் இருக்கிறது. ஒருபுறம் அவள் உடலின் மேல் புனிதங்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றிவைத்துவிட்டு, மறுபுறம் இலக்கியம், திரைப்படங்கள், மற்ற ஊடகங்கள் அவளது பாலியல் உறுப்புக்களை சந்தைப்படுத்தி காம உணர்ச்சிகளை விநியோகம் செய்கிறது. (சங்க இலக்கியம் முதல் இதே நிலைதான்). இது மேலும் மேலும் பெண் ஆணுக்கான ஒரு பாலியல் பயன்பாட்டு பண்டமே என்று அறிவுறுத்துகிறது. பெண் உறுப்புகளைக் கண்டு உணர்ச்சி எழாத ஒருவன் ஆண்மையற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, ஆதாரமற்ற உடலின்ப அச்சுறுத்தல்களையும் கற்பிக்கிறது. உடலின்பத்திற்கு சரியான வடிகாலற்ற சூழலில் காம வறட்சியோடு திகழும் ஆண்மகன் கவர்ச்சிக் காட்சிகளால் தூண்டப்பெற்று, காணும் பெண் உடலின் மீது வன்முறையை உபயோகித்தேனும் தன் வேட்கையைத் தீர்த்துக்கொள்கிறான். பணியிடங்களில் இவ்வுளவியல் அங்கிகாரம், பொருளாதார உயர்வு என்ற காரணங்களோடு செயல்படுத்தப்படுகிறது. ஆணின் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆண்மைப் பற்றிய சிந்தனைகளும், ஆணின் உள பலவீனமும் பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறது, பின்பு அவளை குற்றம் சாட்டுகிறது. மேலும் கற்பனாவாத கட்டுப்பாடுகள் அவற்றை மீறுவதில் நிலவும் சுவாரசியத்தை ஒழுக்க மீறலுக்கான வெற்றியாகவும், புரட்சிகர சிந்தனையாகவும் தவறாக புரிந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. 

பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிற்காக பாலியல் சுதந்திரத்தை பெண் சுதந்திரம், நாகரீக வளர்ச்சி என்று திரிப்பதும் ஆணாதிக்கமே. இவற்றை உணரத் தவறும் பெண்கள் இரையாகுகிறார்கள். பெண்கள் கவர்ச்சிக் காட்டி ஆண்களைப் பயன் படுத்திக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பொருளற்றது. மனிதரை மனிதர் ஏய்ப்பதும், பயன்படுத்திக்கொள்வதும், சுரண்டுவதும் காலம் காலமாய் நடந்துவருகிறது. உயர் பதவியில் இருப்பவரைப் புகழ்ந்து பேசி ஆண்கள் ஆண்களைப் பயன்படுதிக்கொள்வதில்லையா? வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை அபகரித்துக் கொள்வது, களவாடுவது போன்ற செயல்களை அதிகமாக செய்வது எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்கள்தானே அதிகம். 

ஆணுக்குப் பெண் துணையாய்க் கிடைப்பதிலும் தடையாய் செயல்படுவது பொருளாதாரம், பணமற்றவனை எப்படி ஆணாதிக்க சமுதாயம் மதிக்க மறுக்கிறதோ, அதே போல் பெண்களும் மறுக்கின்றனர். பணம், பாதுகாப்பான வாழ்க்கை இவற்றைப் பெண் மட்டும் கோருவதில்லை, மனித சமூகமே அதைத் தான் கோருகிறது. மனித மதிப்பிற்கான சமூக அளவுகோல் மாறாதவரை இச்சிந்தனைகள் மாறுவது கடினம்.  

பெண்கள் கவர்ச்சி உடை அணிவது, குடிப்பது, புகைப் பிடிப்பது, கட்டற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதென்பது ஊடகம் கற்பிக்கும் நாகரீக வளர்ச்சி, நவீனமயமாக்கல், உலகமயமாக்கல் இவற்றின் விளைவுகளே தவிர அவைகளே பெண்களின் முழுவிருப்பல்ல. ஆண் உட்கார்ந்து மலங்கழிக்கும் கக்கூஸ்கள் முதற்கொண்டு, பல் துலக்கும் பசையிலிருந்து, அவன் ஓட்டும் வாகனத்தில் தொடங்கி, அக்குளில் அடிக்கும் வாசனைத் திரவியம் முதற்கொண்டு விற்பதற்கு பெண்களின் திறந்த மார்புகளே ஊடகத்திற்கும் முதலாளிகளுக்கும் தேவைப்படுகிறது. இதற்கும் பெண் விடுதலைப் போராட்டத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பி.பி.ஓ நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைப் பெருகிய பின், நாகரீகத் திணிப்பு தவறான சுதந்திரக் கருத்துக்களை முன்வைத்து பெண்களை வழிநடத்துகிறது. பூர்ஷ்வா பெண்கள் இச்செயல்பாடுகளுக்கு பெண் விடுதலைச் சாயம் பூசுகின்றனர். இவ்விஷயங்களில் பெண்ணிய விமர்சனமாய்  எழுவது ஒன்றே ஒன்றுதான், பெண்கள் இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று வரையறுத்தது ஆண்கள், இன்றும் அந்நிலையேத் தொடர்கிறது. அது எவ்வாறு அந்நிலைக்குச் சென்றது? பாலின அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட வேறுபாடுகளை கண்டறிவது, களைவது ஆகியவையே பெண் விடுதலைக்கான அடிநாதங்களாய் முன் வைக்கலாம்.


உழைப்பு, கூலி பற்றிய சிறு உரையாடல் மூலமும் ஆணாதிக்க பொருளாதார இயக்கவியல் மூலம் சமூக கட்டமைப்பை உரையாடலுக்குட்படுத்தலாம்.  முதலில் ஒரு சிலர் முதலாளிகளாகவும், சொத்துப்படைத்தோராகவும் எவ்வாறு முன்னிலையில் இருக்கின்றனர்? எல்லா வளங்களும் பூமியிலிருந்தே எடுக்கப்படுகிறது, அவற்றைக் கொண்டு மனிதப் பயன்பாட்டிற்கான மற்றத் துணைப் பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. மற்றொரு புறம் மனித உயிரின் பராமரிப்பிற்கான சேவைகள் என மருத்துவம், இன்னபிற சேவைகள் செயல்படுகிறது.  

பொதுவுடமை பொருளாதார சூழல் நிலவிய தொல்பழங்குடிக் காலத்திற்குப்  பின் இப்படி பூமியிலிருந்து எடுக்கப்படும் பொருள்களின்  உரிமை, அவற்றை எடுக்கும்  உரிமை சிலரிடம் மட்டுமே இருக்கிறது [இதைப் பற்றி விரிவாக பேச வேண்டும்]. அவ்வளங்களை எடுத்துக் கொடுக்கும் பணிக்கு மனித உழைப்பு செலுத்தப்படுகிறது அதற்கு கூலி வழங்கப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் நிலையிலும், மற்றவர் பெறும் நிலையிலும் இருப்பதற்கான காரணங்கள் எவை?  இக்கேள்விகளை அதன் முளையிலேயே எழுப்பவியலா வண்ணம் அடிமைமுறையை தற்காத்துக்கொள்ளவே பாவம், புண்ணியம் எனும் மதக் கருத்தாக்கங்கள் இதனோடு தொடர்புப்படுத்திப் புனையப்பட்டது.

நம் நிலத்தில் நமக்குத் தேவையான  அளவு உழைத்துப் பொருளீட்டி  மனநிறைவோடு வாழ்வதென்பது நமக்காக நாம் உழைப்பதென்றாகிறது. அவ்வாறில்லாமல் எவர் பிடியிலோ இருக்கும் நிலங்களில், தொழிற்சாலைகளில் [தொழிற் சாலைகள் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பது பெரிய விளக்கங்களுக்குரியது [அந்நியமாதல்], பொதுவளங்களை ஒரு சிலர் சுரண்டிவிட்டு, அதை வளப்படுத்துவதற்கான மனித உழைப்பைக் கைக்கொள்ள, வேலை வாய்ப்புப் பெருக்கம் என்பதெல்லாம் விவாதிக்கப் படவேண்டியவை.] ஒரு சிலர் உழைத்துப் பொருளீட்டித் தருதல் என்பது மற்றவர் வளம்பெற நாம் நம் உழைப்பைச் செலுத்துதல் என்பதாகிறது.  கொள்ளை லாபம் போக, மனித உழைப்புச் சக்தியை தக்கவைத்துக் கொள்ள முதலாளித்துவமானது கூலிகளைக் கிள்ளித் தருகிறது.  தொடக்கத்தில் ஆண்கள் உழைப்புச் சக்திகளாகப் பயன்பட்டனர், அவர்களைப் பராமரிக்கவும், சந்ததியை வளர்த்து தனிச் சொத்துப் பேணவும் பெண்கள் வீட்டில் வைக்கப்பட்டனர். 

மனிதர்கள் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்பது நன்மையே. ஆனால்  பெண்களுக்கு மட்டுமே அப்பணி என்று விதிக்கப்படுவதே, ஒடுக்குமுறையாகக் காலப்போக்கில் மாறிவிடுகிறது.  இவ்வொடுக்கு முறைகளுக்கேற்ற கருத்தாக்கங்கள் பற்றுத் தன்மையை, சார்பு நிலைகளை, பிரிவினைவாத சிந்தனைகளை, அதோடு சேர்ந்து பொருளாதார, போட்டி, பொறாமைகளை விதைத்து மனித உறவுகளில் சிதைவுகளை ஏற்படுத்துகிறது. எல்லோரும் சமம் எனும் கம்யூனிச வாழ்க்கை முறையை, அதை அடைவதற்கான வழிமுறைகளை முன் வைத்தவர் ஆசான் காரல் மார்க்ஸ். இதற்காக அவர் கடும் உழைப்பை செலுத்தியிருக்கிறார். வறுமையில் உழன்று குடும்பத்திற்கென பெரிதாய் ஏதும் செய்யவியலாமல் மடிந்தார். அவரது மனைவி ஜென்னி வசதியான வாழ்க்கையப் புறந்தள்ளி குழந்தைகளை பட்டினிக்குப் பறிகொடுத்து, வறுமையிலேயே அவரும் இறந்து போனார். [இது காதலால் அவர் செய்த தியாகம். கற்பு, கடமை, பத்தினித் தன்மை ஆகிய அச்சுறுத்துல்களை ஏவி மனைவிகளை சோதித்த ரிஷிகளின் கதையாடல்கள் அவ்வுறவில் தாக்கம் செய்திருக்கவில்லை].

காரல் மார்க்ஸும், அவரைப் பின்பற்றி  மனித விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திச் சென்ற எண்ணற்ற  அவரது தோழர்களும் (பெண்கள் உட்பட) குடும்பத்தை பின்னுக்குத்தள்ளி, மனித குல மேம்பாட்டை முதன்மையாகக் கருதியதன் பயன்களை இன்றைய குடும்ப உறவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. [8 மணி நேர வேலை மட்டுமே என்பதுக் கூட இதன் விளைவே] அவருக்கு உறுதுணையாக எங்கல்ஸ் செயல்பட்டதோடு, அவரும் மார்க்சியம் எனும் சமுகவிஞ்ஞானக் கருவியுடன் பல ஆய்வுகளை மேற்கொண்டார். குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் அவரது புத்தகம் அதில் முக்கியமான ஒன்று.  

சர்வதேசிய அளவில் ரோஸலிண்ட் மைல்ஸ், கிளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வார் உள்ளிட்ட பெண்ணியலாளர்களும், இந்திய அளவில் சாவித்திரி பாய் பூலே முதல் தற்போதைய பன்வாரி தேவி வரை,  தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட சுயமரியாதை வீராங்கனைகள் ஆற்றியப் பணிகளும், அவர்களது எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போது இஸ்லாத்தில் உள்ள பெண்களுக்கான சமத்துவமின்மையை எதிர்த்து ஆஸ்ரா நொமானி எனும் இந்தோ-அமெரிக்கப் பெண்மணி எடுத்துரைக்கும் கருத்துக்களும், போராட்டங்களும்  சமீப காலங்களில் கவனம் பெற்றுவருகிறது.  (இது போன்ற கருத்தை வலியுறுத்தியதற்காக தஸ்லிமா நஸ்ரின் எத்தகைய எதிர்ப்புக்களை சந்தித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே)

பெண்களுக்கு கல்வி, ஓட்டுரிமை, சமமான கூலி, கருக்கலைப்பு உரிமை, விவாகரத்து உரிமை, தொழுகை உரிமை என எல்லாவற்றையும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே நமது முன்னோடிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 


சொலவடைகள், பழமொழிகள் என எல்லாவற்றிலும் பெண் பேச்சைக் கேட்கும் ஆண்  பின்னடைவான் என்று அச்சுறுத்தி வைத்திருக்கிறது ஆணாதிக்க முறைமை. பெண் பேச்சைக் கேட்டு நடக்கும் ஆண் மகனை ஆண்மையற்றவன், பெண்டாட்டி தாசன், அதீத காமநாட்டம் கொண்டவன் என்று ஆண்களை இழிவு படுத்துகிறது. பெண்டுகன், பெட்டை, பேடி, பேடு என்ற சொல்லாடல்கள் ஆணை மிகவும் கோபமுறச் செய்வதாக இருக்கிறது. இங்கு பெண்மைத்தன்மை என்பது ஒரு இழிவான தகுதியாக கருதப்படுகிறது,  இதனால் ஆண் அவனுக்கான, மற்றும் அவன் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிற ஆண் மையத்தின் சமூகத் தகுதியை இழந்து விடக்கூடியவனாக இருக்கிறான். இம்மனநிலை சக ஆண்களையே விலக்கும் பட்சத்தில், மூன்றாம் பாலினரை மிகக் குரூரமான பார்வையோடு அணுகி, அவர்களை மனிதர்களாக பார்க்க மறுத்து இழிபிறவிகளாக ஆண்களைப் பார்க்கவைக்கிறது. அதோடு ஆண்களால் கட்டியமைக்கப்பட்ட பெண்களின் உலகத்தில் மூன்றாம் பாலினர் பரிதாபத்திற்குரியவர்களாகவும், கடவுள்கொள்கை உடையவர்களால் கழுவ முடியா பாவம் செய்தவர்களாகவும் உற்று நோக்கப்படுகின்றனர். இம் மூன்றாம் பாலினத்தினரிடமும் ஆண்மையவாதிகள் தங்களது பாலுணர்வைத் தீர்க்கும் அடிமைகளாய் மட்டுமே அவர்களை காணுகின்றனர். அந்த வகையிலும் தங்கள் ஆண்மையை நிருபித்துக் கொள்கின்றனர்.

பேடி இலக்கணமாய் திவாகர நிகண்டு அவர்களது உடல் அசைவுகள் முதற்கொண்டு அவர்கள் நினைப்பது, அவர்களின் நோக்கம் அனைத்தையும் மிகக் கீழ்த்தரமான ஒன்றாக அவர்கள் ஆணிகளிடம் மிகுந்த இச்சை மிக்கவர்கள்,அதோடு அறுவெறுக்கத் தக்க குணங்களே அவர்களது ஆதார குணம் என்ற அளவிலேயே இலக்கணம் வகுக்கிறது. (இப்படிப்பட்ட இலக்கணங்களை பெண்கள் வகுப்பார்களா என்பது ஐயமே). 

தன்னை,மற்றும் தன் புலன்களை, பெண்ணைக் கட்டுப்படுத்த முடியாத ஆணைப் பெண்தன்மை கொண்டவன் என்று கூறும் ஆணாதிக்கம்அதனாலேயே, மிகுந்த பிடிவாதத்தோடு துறவைக் கொண்டாடுகிறதுஒருவகையில் துறவுபுலன் கட்டுப்பாடு எல்லாமே ஆணாதிக்கத் தத்துவங்களே. பண்டையத் தாய் வழிச் சமூகங்களில் துறவு என்றொரு கோட்பாடிருந்திருக்கவில்லைஅவர்கள் உலகாயதவாதிகளாக பொருள்முதல்வாதிகளாகஇன்பவியல் வாழ்வுமுறையை கடைபிடித்தவர்களாக இருந்திருக்கின்றனர்.. வேத காலம்வைதீக சிந்தனை கருத்துமுதல்வாத ஆன்மா எனும் அகத்தின் உன்னத நிலை இவையெல்லாம் தந்தை வழிச் சமூகத்தின் கோட்பாடுகள். இதுவே பெண்ணுக்கு ஞானத்தை மறுத்தது, அறிவை மறுத்தது, பெண்ணை ஆணிற்கு குழந்தை பெற்றுத் தரும் கருவியாய் அதே சமயம் ஆண் தருவதால் அவனுக்கு அடிமையாயும் இருக்க கற்பித்தது. அதீத  காமம் என்ற ஒன்றை பெண்தன்மை கொண்டதாக தோற்றுவித்துசமூக ஒழுக்கத்தை காமத்தைக் கட்டுப்படுத்தும் செயலை வைத்தே மதிப்பிடும் அறமாக ஆணாதிக்க அறம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. முரணாகபக்தி இலக்கியங்களில் ஆண்கள் தங்களை நாயகியாக பாவனைச் செய்து ஆண் கடவுளைத் தொழுவர். காமமும்கலவியுமே அதன் முழுச் சாரமாக இருக்கும். பெண்ணான ஆண்டாளின் பாடல்கள் காமமாகிக் கசிந்துருகிக் கலவிக்கு ஏங்குவதாகவே பதிவாகியுள்ளதுதனது உறுப்புகள் திருமாலுக்காகக் கிளர்ந்து ஏங்கி ஏக்கத்தால் விம்மி, பொங்கி, சதா அவன் வருகைக்காக  திறந்து காத்திருப்பதாக பாடியுள்ளார். இங்கு காமம் பக்தியாகக் கடவுளின் பெயரால் கொண்டாடப்படுகிறது. மானிடருக்கு அது மறுக்கப்படுகிறது. பெண்கள் காம நாட்டத்தினால் பார்வைகளை வீசிமயக்கி விடுவர்அதுவே அவர்களது பிறப்பு என்று மநு சொல்லியிருக்கிறார். ஆண் பற்றிய இத்தகைய மதிப்பீடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணுக்கு பெருமைவீரம்வலிமைஅழகுபுகழ்அறிவுகடமைஉரிமைஆள்வினைசெயலூக்கமான  பாலியல் அதிகாரம் ஆகியவைபெண்ணுக்கு பெருமை உடல் அழகுமென்மைபணிவுஅடங்கிய பாலியல்கற்பு ஒழுக்கம்வேவைச் செயல் [தாய்மை]மடமைநாணம் ஆகியவை. 

ஆண்டாண்டுக் காலமாக வகுக்கப்பட்டுள்ள இவ்வறங்களுக்கேற்ப வாழ்வதே  பெண்களுக்கு கௌரவம் நிறைந்த ஒன்று. இவற்றை ஒரு சொல்லாக, அல்லது ஒரு கேள்வியாக  முன்வைத்தால் அப்பெண் ஆண்களின் உலகத்தில் மாற்றுக் கூற முடியாத பரத்தைகுடும்பத்தை குலைக்க வந்த வேசி. இதுவே ஆண்கள் மனமுவந்து பெண்ணிக்கு இடும் நற்பெயர்கள். 

கண்டுபிடிப்புகள்தத்துவங்கள் எல்லாம் காலத்திற்கேற்பஅறிவியல் வளர்ச்சிக்கேற்பமாறிவந்திருக்கிறது. சமயச் சிந்தனைகளுக்கு தத்துவக் கோட்பாடுகள் செயல்பட்டுவந்திருக்கிறதுபின்பு 15 ஆம் நூறாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் புலனுணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்  தத்துவங்கள் உருவாகின்றன. பொதுக் கோட்பாடுகள் என்பவை சமூக அனுபவங்களிலிருந்து உருவாக்கப்படுபவை, ’பிறப்புக் கோட்பாடுகள்’ என்று எதுவில்லை. மனிதனே சகலவற்றிகும் பொது அளவுகோல்” என்றார் புரோட்டகோரஸ். உண்மைக்கு கூட ஒவ்வொரு தத்துவவாதிகள் ஒவ்வொரு விளகங்களை அளித்துள்ள்னர். உண்மைகளின் அளவுகோல் ஒரு கருத்தின் பயனே என்கிறது பயன்வழிக் கொள்கை (Pragmatism), அமைதியைத் தரும் பயன்பாடு உண்மை எனச் சொல்கிறார் பீர்ஸ்.

அறிவுசிந்தனைஉழைப்புஆகியவை ஒற்றை மைய அதிகாரத்திற்குள் ஆதாயங்களாக முடக்கப்படுகிறது. அவ்வாதாயம் என்பது ஒட்டுமொத்த மனிதருக்கானதாய் அல்லாமல் ஆதிக்க வர்கத்தினருக்கானதாய் இருப்பதை மார்க்சிய ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு புற உலகப் பொருளோடு புலனுணர்வு அனுபவங்கள் எல்லோருக்கும்  ஒன்றாக இருக்கவல்லது [பசிதாகம்வலி போன்றவை] ஆனால்  இறைமறைஒழுக்கம்புனிதம் போன்றவை அக உணர்வு சார்ந்தவை என்ப்படுகிறது. அதற்கென சிறப்புத் தகுதிகளைக் கோருவதாய் இருக்கிறது.  அது உண்மையோ இல்லையோ அத்தகுதி பெற்றவர் என்ற முத்திரை வேண்டி மனித மனத்தை தூண்டிப் பிரிதாளுகிறது கற்பனாவாத கோட்பாடுகள். அத்தகுதியை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்திரத்தை ஆணாதிக்கச் சமூகம் தருவதில்லை. ஆணாதிக்கச் சிந்தனையானது முழுக்க முழுக்க சமய சிந்தனைகள் முன்வைக்கும் ஆன்ம’ சுத்தத்தைக் கோருவதன் மூலம் இயற்கையைபுலனுணர்வைதனிச் சக்தியாக புற உலகோடு வினையாற்றி பெறக்கூடிய தனி அனுபவங்களைஅதற்கான சுதந்திரத்தை மறுத்தலிக்கிறது என்பதை நம் பெண்கள் புரிந்துக் கொள்ளச்செய்யவேண்டும். 

இந்தியாவில் மதக் கட்டமைப்புகள் இறுகிகெட்டித்தட்டிவிட்டனஅதை அசைக்கும்ஆட்டுவிக்கும்  காரணிகள் பற்றிய அறிதலை மக்களிடம்  எடுத்துறைத்தல் தற்போதைய அவசரத் தேவை. உலகுக்கும்புலன்களுக்கும் அப்பால் ஓர் உலகமிருக்கிறதுபுலன்கள் குறைபாடுடையவை என்றக் கருத்து ஆண்மகனைத் தன் மனைவியிடம் கூட கட்டுபாடற்ற உடலுறவில் ஈடுபடுவதிலிருந்துத் தடுக்கிறது எனத் தோன்றுகிறது. அதனால் பண்டமாய் நினைக்கும் மற்ற பெண்களிடம் அச்சோதனை முயற்சிகளை செய்துப் பார்க்க ஆண்களைத் தூண்டுகிறது. பெண்ணுக்கும் இது பொருந்தும்வெளிப்படுத்தமுடியாத காம நாட்டத்தை அவள் வேற்று ஆணிடம் வெளிப்படுத்தமுடிகிறது. கட்டாய பிணைப்பு (bondage) இல்லாதி்ருத்தல் கூச்சத்தைக் கட்டுபாட்டைத் தளர்த்திவிடுகிறது. புலன்களைப் பற்றிய புரிதலும்அது உணர்ச்சியவப்படும் நிலைகளையும்இயற்கை சார்ந்த பார்வையுடன் கூடிய பாலியல் கல்வி ஆண் பெண் உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக தொடு உணர்ச்சிகளை அகத் தூய்மை’ என்ற கற்பனாவாத கருத்தாக்கத்தைத் தாண்டிஇயல்பாக எப்படி அவற்றை எதிர் கொள்வதுஅவ்வுணர்ச்சி நிலைகள் காதல்’ என்ற புரிதலை எவ்வாறு விதைக்கிறது போன்ற உரையாடல்கள் பெண்களை பாலியல் சுரண்டல்களிலிருந்து காக்க உதவும். இங்கு வழங்கப்படும் கல்வியும் ஆண் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. 

ஒழுக்கக்  கோட்பாடுகள்பாவம்புண்ணியம்தண்டனை என்று முழங்கும்  சமூகத்தில் தான் எயிட்ஸ்  முதன்மையிடம் வகிக்கிறதுபெண்கள்சிறுமிகள், குழந்தைகள் வல்லுறவுகளுக்கு ஆளாகுகிறார்கள்கொலைகொள்ளைஊழல் என்று சகலவிதமான உடல்உழைப்புபொருளாதார சுரண்டல்கள் தலைவிரித்தாடுகின்றன.  

இயற்கையிலேயே  பெண் பலகீனமானவள் என்பது முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டும். ஒருவேளை [அழுத்தமாக] அவள் பலகீனமாக இருந்தாலும்அவளை ஒடுக்குவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. தாய்வழிச் சமூக நிலைமைகளுக்கு திரும்புவோமாயின் அவளுக்கு பலமான’ ஆண்கள் பாதுகாவலர்களாக இருக்கும் பேறுதவி தேவைபடப்போவதில்லை. இன்னொரு ஆண் துன்புறுத்தாத வரையில் அவளுக்கு ஆண் துணை பாதுகாப்பையொட்டி எப்பொழுதும் தேவைப்படுவதில்லை. பல ஆண்டுகாலமாய் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டதன் காரணமாக உடல் வலிமை சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடமுடியாமல் போனது. ஆண்களுக்கு நிகராய் அவர்களும் அத்தகையப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் பெண்ணும் பலசாலியாகிவிடுவாள் என்பதில் ஐயமில்லை. மேலும் உடல் சக்தி’ என்பது பயிற்சியால்வேலை முறைகளால் வடிவமைக்கக்கூடிய ஒன்று என்று நம் பெண்கள் புரிந்துக் கொள்ளுதல்இயற்கையைக் காரணம் காட்டி நம் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை எனும் உண்மையை உணர்த்தும்.

வன்முறைக் குற்றங்களில் பெண்ணின் பங்கு  சொற்பமானது. சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டால் எவரும் எவரையும் பாதுகாக்க வேண்டியதில்லை. ஆண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதுஇதற்கு எவ்வகையிலும் பெண்களும்பெண் விடுதலைப் போராட்டங்களும் காரணமில்லையே. பெண்ணிய சிந்தனை ஆண்களுக்கும் விடுதலை அளிக்கவல்லது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 நம் சமூகத்தில் வன்முறைபொருளாதார  ஏற்றத்தாழ்வுசாதி இவை மட்டுமே  ஒடுக்குமுறையின் வடிவங்களாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது.  மனித உணர்ச்சிகளின் மேல்சிந்தனைகளின் மேல் செலுத்தப்படும் கருத்தாக்க ஒடுக்குமுறைகள் முக்கியத்துவமற்றவைஒருவேளை அவை பரிசீலனைக்குட்படுத்தப்படுமாயின் அது ஆண்களின் நலன் கருதியதாக இருத்தல் அவசியம் எனும் நிலைதான் நிலவுகிறது. 

பெண்  விடுதலை என்பது புரட்சிகரமான அறிக்கைகளினாலும்ஆண்களை வசைபாடுவதாலும்நாகரீகத் தோற்றத்தினாலும் திடீர் என்று ஒரு நாள் நம் கையில் தானாய் கனிந்து விழக்கூடிய பழமன்று.  ஆணாதிக்க முறைமையால் ஆண்களுக்கும்பெண்களுக்கும் மாறுபட்ட பாலினத் தேர்வுக்கொண்டவருக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை சரியாக புரிந்துக்கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று.

சீமாட்டிகளுக்கும்நாகரீக கோமான்களுக்கும் மட்டுமான ஒன்று அல்ல பெண்ணியம். சொல்லப்போனால்அடித்தட்டு பெண்களுக்கும்கல்வி அறிவற்ற சமூகத்தவருக்கும்பால் பேத அடிப்படையில் குறைந்த கூலி வாங்கும் பாட்டாளி வர்க்கத்துப் பெண்களுக்காகவும் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டிய ஒன்று. கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையைப் போன்று வர்க்க அடிப்படையிலானசாதி மனநிலையைக் கணக்கில் கொண்டும்பொருளாதாரம்கல்வி நிலையில் பின்னடைவு ஆகியவைகளை நினைவில் கொண்டும் பெண்ணியத்திற்கான  ஒரு அறிக்கையைத் தயார் செய்தல் அவசியமாகிறது.

அம்மக்களிடத்து  பண்பாட்டு மீறல்பண்பாட்டுக்  காவல் இரண்டுமற்ற கண்ணோட்டத்துடன் ஆணின் பங்கையும்குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் அங்கிகரிக்கும் வகையான உரையாடலைத் துவங்குதல் முக்கியம் எனக் கருதுகிறேன். அதே வேளை கூட்டுச் சமூக வாழ்வின் பயன்களையும்அதற்கு எதிராய் குடும்பம் என்பது சுயநலத் தன்மைக் கொண்டதாக விளங்குகிறது என்பதையும்மனித உறவுகளை இரத்த உறவுகளாய் சுருக்குவதன் மூலம் முதலாளிகள்ஆதிக்க சக்திகள்மத நிறுவனங்கள் சமூகத்தில் விதைக்கக் கூடிய ஆபத்தான கருத்தாக்கங்கள் எடுத்துரைக்கப்படவேண்டும்.

 நம்  அறிவு நிலைகள்உழைப்பு  ஆகியவை எப்படி மற்றவரின்  கட்டுப்பாட்டில் இயங்குகிறது  என்ற உளவியலை மையமாகக் கொண்டிருத்தல் உதவும். இது நேரடியாக ஆண் பெண் நடவடிக்கைகளைச் சாடாதுஅறியாமையை சுட்டிக் காட்டுவதாக அமைக்கபெறும். அவற்றோடு தொன்மைச் சமுதாயத்தில் பெண்ணின் பங்குசடங்குகளில் அவளுக்களிக்கப்பட்ட முதன்மை நிலை ஆகிய வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட வெளிப்பாடுகள் தொடர்புப்படுத்தலுக்கு ஏற்புடையதாய் அமையலாம். இவற்றோடு பெண்களுக்கென்று சில ஆணாதிக்கத் தற்காப்புச் சிந்தனைகளை” வலியுறுத்த வேண்டும் அது அழகியல்பொருளாதார மேன்மை நிறைந்த வாழ்வுகௌரவம்சமூக அங்கிகாரம் இவற்றின் மேல் அதீத நாட்டம் பற்றியத் திணிப்பிலிருந்து பெண்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ளுதல் என்பனவற்றை உள்ளடக்கியதாய் ஒரு திட்ட வரைவாய் மேற்கொள்ளப் படவேண்டும். 

இந்தியாவில் நடைபெறும் கொலைகள்மற்றும்  தற்கொலைகளில் கணிசமானவை  கலாச்சாரக் காரணங்களுக்காக நடைபெறுகின்றன என்று பதிவு செய்திருக்கிறார் அசோகன் முத்துசுவாமி,. கப் பஞ்சாயத்து பற்றிய ஒரு தொகுப்பில். 2003 ஆம் ஆண்டு முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் அதே மாதங்களில் 13 கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. ஜனநாயக மாதர் சங்கம் திரட்டியுள்ள தகவல்களின்படி, 2007ம் ஆண்டு வெறும் நான்கு மாத காலத்திற்குள் 107 கவுரவக் கொலைகள் ஹரியானாவில் நடந்துள்ளன. இதன் பின்னணியில் சாதிபொருளாதாரகலாச்சார காரணங்கள் நிலவுகின்றன. தமிழகத்தில் பார்ப்பனிய-இந்துத்துவ-கலாச்சார கௌரவத்  தாக்கம் சற்றுக் குறைவாக இருப்பதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

தருக்கம்  என்பது இரு தரப்பையும் நியாயப்படுத்தக்கூடியது. ஆனால் கற்பனாவாத புனிதத்தன்மைமுன் முடிவுகள்அனுபவ ஒப்பீடுகள் எதிர் தரப்பை ஏற்க மறுக்கிறது. ஏற்க மறுப்பது அவர் அவர் சுதந்திரம் என்றாலும்அது எதிர் தரப்பென்று ஒன்று நிலவுவதையே ஒடுக்க நிணைக்கும் மனநிலையே பொதுப் பண்புகளுக்கெதிரான பெண்ணியக் கேள்விகளைப் புரந்தள்ளச் செய்கிறது. பொதுப் பண்புகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் நிலவுவது போல்அதை மறுக்கும் சுதந்திரமும் பொருட்படுத்தவேண்டிய ஒன்று. அத்தகைய மறுப்புக்குரலாக பெண்ணியக் குரல் உள்ளது. தற்போது கடைப் பிடிக்கப்படும் பண்புகளுக்குள்ளேயே நின்று உரையாடுவது பெண் விடுதலைப் பாதையில் ஓர் முடக்கம். புது பண்புகளைபெண்களுக்கான பண்புகளை பெண்கள் உருவாக்க வேண்டும். சாதிமதம்புனிதக் கோட்பாடுகள்பொருளாதார தற்காப்பு இவைகளை மீறிய பண்புகளை மார்க்சிய வழி பெண்ணிய சிந்தனைகளைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும். அது மனிதனை இயற்கையோடு இணைக்கும் தன்மைக் கொண்டதாகவும்மனிதரை மனிதராக (ரிஷி நிலைக்கு உயர்த்தாத) அங்கிகரிக்கும் தன்மைக் கொண்டதாகவும் இருக்கும் என்று உறுதி கூறலாம். 

உதவிய நூலகள் மற்றும்  சுட்டிகள்:
1.     உலகாயதம்தேவி பிரசாத் சட்டோபாத்யாயதமிழில் தோதாத்ரிஎன்.சி.பி.எச், 2009
2.     மார்க்சியம் – பெண்ணியம்: உறவும் முரணும்வெ. கோவிந்தசாமிநடராஜ்விடியல் பதிப்பகம், 1998.
3.     குடும்பம்அரசுதனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்எங்கெல்ஸ்தொகுப்பு பக்தவத்சல பாரதி.
4.     பெண்ணியச்  சுவடுகள்முனைவர் வாசுகி  ஜெயரத்னம், 2009, அறிவுப் பதிப்பகம்.
5.     சோசலிசமும்பதபீடங்களும்ரோசா லக்சம்பர்க்தமிழில் ராமசந்திர வைத்தியநாத்பாரதி புத்தகாலயம், 2009
6.  மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்எங்கெல்ஸ்முன்னேற்றப் பதிப்பகம்மாஸ்கோ,
7.     கப்’ பஞ்சாயத்து: சாதியின் மற்றொரு கோரமுகம்அசோகன் முத்துசாமிபாரதி புத்தகாலயம், 2010.
8.     மார்க்சியக் கட்டுரைகள்ந. முத்துமோகன்காவ்யா, 2007.
9.    Rosa Luxemberg – Her Life and Work, Paul Frolich, Translated by Edward Fitzgerald, Victor Gollancz Ltd, London.

    * http://ncrb.nic.in/
    * http://www.census.gov/ipc/prod/wid-9803.pdf
    * http://www.swayam.info/swayam_gi_leaflet_31mar.pdf
    * http://www.sparrowonline.org/

** http://www.azadindia.org/social-issues/crime-against-women-in-india.html