Aug 21, 2014

மதுரை சம்பவம்


மே 11,2013 – அன்று புனைவு நடத்திய இலக்கியக் கூட்டத்திற்காக நான், வசுமித்ர மற்றும் ஆதிரன் ஆகியோர் மதுரை சென்றிருந்தோம். பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் நிறைந்த அரங்காய் இருந்தது அது. ஸ்வாதி சா. முகிலும் இருந்தார். கூட்டம் நிறைவடைந்த உடன் சக்தி ஜோதியிடம் விடை பெற்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தியிடமும் விடைபெற்று, அங்கு வந்திருந்த நண்பர்களிடமும் பேசி மகிழ்ந்து புத்தகங்கள் வாங்கிவிட்டுக் கிளம்ப எத்தனித்தோம். அப்போது சுவாதியும் கிளம்பிக் கொண்டிருந்தார். சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே மதுரையில் காண வேண்டிய ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று விட்டுப் போகலாமே என்று யோசனை சொன்னேன். வசுமித்ர கள்ளழகர் கோவிலை பார்த்ததில்லை என்ற காரணத்தாலும் அது செல்லும் வழி என்பதாலும் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சுவாதியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.

போகும் வழியில் நிறைய பேச்சு, பாட்டு என்று மகிழ்வானதொரு பயணம். கோவில் இருக்கும் அந்த மலைப் பிரதேசம் மனம் கவர்வதாகவே இருந்தது. நடை சாத்தியிருந்தது. ஆனால் மண்டபத்தில் இருந்த சிலைகளைப் பற்றி பேசிவிட்டு, அங்கிருந்த படிகளில் அமர்ந்து சுக்கு காப்பி குடித்துவிட்டு கிளம்பினோம் கோவில் வாசலுக்கு வந்தோம். கள்ளழகர் திருவிழாக் காலமாக இருந்ததால் நிறைய கடைகள், மக்கள் கூட்டம் மற்றும் காவலர்கள் இருந்தனர். வாசலுக்கு வரும்போது ஆதிரனும் வசுவும் முன்னே சென்று விட்டனர். நானும் சுவாதியும் மாங்காய், நெல்லிக்காய் விற்கும் கடையை நோக்கிச் சென்றோம். மாங்காய் பத்தைகளை வாங்கியபடி இடப்புறம் திரும்பினேன், அப்போது ஒரு பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் மிகுந்த திமிரோடும், பெருமிதத்தோடும் என்னைக் கைகாட்டி அழைத்தவாரு “ஹலோ ரொம்ப சூப்பரா இருக்க” என்றான். சுவாதி மாங்காய் கடையைல் மற்ற தின்பண்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். கோபமும் எரிச்சலும் பொங்க “என் புருஷன் முன்னாடிதான் போறான், தைரியமிருந்தா அவரைக் கூப்பிட்டு சொல்லேன்” என்றேன். “ம் கூப்பிடு கூப்பிடு” என்றவாரு பைக்கில் சென்று கொண்டே இருந்தான். 

ஒரு நிமிடம் கடுப்பில் நின்ற நான் அவனது அந்த ஆணாதிக்கத் திமிரை சகித்துக்கொள்ள முடியாமல் வெறி பிடித்தது போல் “டேய் நில்றா” என்று கத்தியபடி அந்த பைக்கைத் துறத்திக் கொண்டு ஓடத் தொடங்கினேன். நான் துறத்துவதை கண்ணாடி வழியாக பார்த்த ‘பைக் ஓட்டுனர்’ வண்டியை வேகமாக முடக்க, எனக்கு வந்த ஆத்திரத்தில் என் கைப்பியை, கையிலிருந்த பர்சை என சரமாரியாக எரிந்தேன். அவர்கள் போய்க்கொண்டே இருந்தனர். நான் துரத்த மக்கள் கூட்டம் ஒன்றும் புரியாமல் பார்க்க.. சூழல் மாறியது. வேகமாக ஓட்டிய அவன் ஒரு காவலர் மீது மோதுவது போல் சென்று சரிந்து நிறுத்த, காவலர் அவனைத் திட்டிவிட்டு “ஒழுங்கா போங்கடா” என்று சொல்ல, அவர்கள் வண்டியை எடுத்து கிளம்பும் வேளை “சார் அவங்களைப் புடிங்க அவங்களைப் புடிங்க” என்று நான் கத்தினேன்.

பதறிய காவலர் வேகமாக ஒட்ட, மற்ற காவலர்களும் உஷாராகி அந்த பைக்கை மடக்கி நிறுத்தினர். கிட்டத்தட்ட 300, 400 காவலர்கள் அங்கு கூடியிருந்தனர். 50 பேர் அவர்களைச் சுற்றி நின்றிருந்தனர். சரமாரியாக அடி கொடுத்தனர். நான் ஓடிச் சென்றேன். பின்னால் எதுவும் புரியாமல் சுவாதி வந்து நின்றார். “என்னம்மா செயினை அத்துக்கிட்டு ஓடுனானா” என்றார் ஒரு காவலர். இல்லை சார் “கிண்டல் பண்ணிட்டு ஓடுறான்” என்றேன். காவலர்கள் மீண்டும் அடித்தனர். வண்டி ஓட்டியவனையும் அடிக்க, எனக்குப் பரிதாபமாகி விட்டது “சார் அவர் எந்த தப்பும் பண்ணல, இதோ இவந்தான் சூப்பரா இருக்கன்னு சொல்லி கிண்டல் பண்ணான்” என்று மற்றொருவனைக் அடையாளம் காட்டினேன். மீண்டும் நல்ல அடி விழுந்தது. அவன் கெஞ்சத் தொடங்கினான்.

உயர் அதிகாரி ஓடி வந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தார். தன் மேல் மோதுவது போல் வந்தது உட்பட நான் துறத்தி வந்தது, அவன் கிண்டல் செய்தது என எல்லாவற்றையும் சொன்னோம். உயர் அதிகாரியும் அவனை அடித்தார்.

“போதும் சார் விட்றுங்க” என்றேன். “ஏண்டா கோவிலுக்கு சாமி கும்பிட வர்றீங்களா, இல்ல இப்படி அயோக்கியத்தனம் பண்ண வர்றீங்களா” என்றார். “மன்னிச்சுடுங்க சார், தெரியாம” என்றான் அவன். “ஏங்க பொண்ணுங்கள இப்படித்தான் கிண்டல் பண்ணுவீங்களா” என்றேன். அவன் மருகினான். குடித்திருந்தான் என்பது தெரிந்தது. “குடிச்சிருந்தா கிண்டல் பண்ணுவீங்களோ” என்றேன். காவலர்களும் திட்டினர், எச்சரித்தனர். “சரி விட்றுங்க சார் போய்த் தொலையட்டும்” என்று சொல்லி விட்டு நானும் சுவாதியும் நகர்ந்தோம். மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போதுதான் ஏதோ நடக்கிறதே என்று வசுவும் ஆதிரனும் நெருங்கி வந்து விசாரித்தனர். நடந்ததை சொல்லவும் வசுமித்ரவுக்கு கோபம் வந்துவிட்டது. காவலர்கள் பிடித்து எச்சரித்து அனுப்பிவிட்டார்கள் போதும் விட்டு விடுவோம் என்று சொல்லி நகர்ந்தபோது ஒரு பெண்மணி எனது டெபிட் கார்டுகளை அள்ளிக் கொண்டு ஓடி வந்தார்.

“என்னம்மா இப்படி துறத்திக்கிட்டு போன” என்க, நடந்ததை சொன்னேன். அப்போது அப்பெண்மனி, கீழ 1500 ரூபா கிட்ட கிடந்தது, ஒரு பொம்பள எடுத்துக்கிட்டு வந்துச்சு கொடுக்கலையாம்மா” என்றார். இல்லை என்றேன். “அந்தக் கடைல மத்த கார்டுகள எடுத்து வச்சாங்க பார்த்து வாங்கிக்கம்மா” என்று சொல்லி விட்டு சென்றார் அப்பெண்மனி. அவரால், என் டெபிட் கார்டு கிடைத்தது, இளநீர் கடைக்காரரால் மற்றொரு டெபிட் கார்டு கிடைத்தது. ஆனால் எனது பான் கார்ட் மற்றும் 1500 ரூபாய் பணம் தொலைந்து போனது.

சுவாதி நம்பமுடியாமல் திகைப்பில் இருந்தார். அன்று பார்த்து அந்த களேபரம் நடந்த நேரம் மணர் காற்று விசி, சூழலே ஒருவித வேகத்தோடும், பதட்டத்தோடும் இருந்தது.

எல்லாம் முடிந்து மதுரையை விட்டுக் கிளம்பினோம். பேசிக்கொண்டும் பாடல்கள் கேட்டுக் கொண்டும் தேனி வந்து சேர்ந்தோம்.


இன்று நினைத்தாலும் அந்த சம்பவம் எனக்கு ஒரு கனவு போலவே இருக்கிறது. ஆனால் அது இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆண் மன யதார்த்தத்தைப் பிரதிபலித்த ஒரு நிஜ நிகழ்வு.


Aug 11, 2014

சுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் - உயிரோசை


சுதந்திரம் என்றால் என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவடைந்து 68ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கிறோம். சுதந்திரம் என்றால் என்னவென்று இப்போது நான் ஒரு கேள்வியை முன்வைப்பது வேடிக்கையாக இருக்கலாம்.  ஆனால் ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூகத்தில் இக்கேள்வி எக்காலத்திற்கும் பொருந்தும். சுதந்திரம் என்பது வெறும் கோஷமாக ஆளும் வர்க்கத்தினரின் கோஷமாக சொல்லப்போனால் அதிகாரம் படைத்தவர்களின் தனிச்சொத்தாக மட்டுமே இருக்கிறது. ஏகாதிபத்திய-காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றுவிட்ட போதிலும் சாதி, மதம், இனம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலும், உடல் ரீதியான மாறுபாட்டின் அடிப்படையிலும் பாகுபாடுகள் நிலவுவதையும், கொடூரமான ஒடுக்குமுறைகள் நிலவுவதையும் எவரும் மறுத்துவிட முடியாது.

ஒவ்வொரு சமூகமும் பல்வேறு மாற்றங்களின் வழி பரிணமித்துள்ளது.  உற்பத்தி முறைகளின் அடிப்படையில் இம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக புராதனப் பழங்குடி கூட்டுச் சமூக உற்பத்தி முறை மற்றும் சமத்துவ அல்லது சுதந்திர வாழ்க்கை முறை சிதையத் தொடங்கியது. இயற்கை வளங்கள், உற்பத்திச் சாதனங்கள் பொதுவாக இருந்த காலகட்டங்களில் உற்பத்தி சக்தியின் அடிப்படையில் பெண்களுக்கு தனி அந்தஸ்து நிலவியதை வரலாற்று ஆய்வுகளின் வழி நாம் அறியலாம். பெண்கள் தலைமை வகித்த அச்சமூகம் தாய்வழிச் சமூகம் எனப்படுகிறது. பின்னர் இயற்கை வளங்களும், உற்பத்திச் சாதனங்களும் படிப்படியாகத் தனியுடமை ஆக்கப்பட்டபோது தாய்வழிச் சமூகமானது சிதைந்து தந்தைவழிச் சமூகமானது. தற்போது நாம் மாறிவிட்ட இந்தச் சமூகக் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறோம்.

தனியுடமையானது, உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் உழைப்புச் சக்தியைக் கைப்பற்றி லாபம் குவிக்கும் நோக்கத்தோடு பல்வேறு அடிமை முறைகளை உருவாக்கியது. அது தன்னளவில் ஆண் தலைமையைக் கொண்டிருந்த காரணத்தால் பெண்கள் பாலின ரீதியாகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.  இது இன்றளவிலும் தொடர்கிறது. இந்தச் சமூக கட்டுமானத் தளத்திலிருந்தே சுதந்திரம் என்றால் என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

காலம் காலமாக அடிமை முறைகள் நிலவி வருகின்றன. விவசாயத் தொழில், வீட்டுப் பராமரிப்பு, சுரங்கத் தொழில், இயந்திரத் தொழில், அதிகாரச் சேவகம் என்று சமூகத்தின் அன்றாட இயங்குமுறைக்குத் தேவையானப் பணிகளில், பொருள் உற்பத்தியில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர், ஈடுபடுத்தப்படுகின்றனர். அடிமை வேலைக்கு ஈடாக ஒருவருக்கு பணம் அல்லது பொருள் கொடுக்கப்படும். இங்கு உழைப்புச் சக்தி சுரண்டப்பட்டு கூலி என்கிற பெயரில் சொற்பமாக ஈடு செய்யப்படும். இவ்வகையில் நாம் அனைவரும் பொருளாதார அடிமைகளாக இருக்கிறோம் என்பதே உண்மை. உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூக கட்டுமானம் மாறும்போது மட்டுமே இந்த அடிமைத்தனத்தைக் களைய முடியும். அதுவே உண்மையான விடுதலை.

இச்சூழலில்,  பெண் என்பவள் பாலின ரீதியாக கூடுதலாக அடிமைப்படுத்தப்படுகிறாள். பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபாடு நிலவுகிறது, உயிரியல் ரீதியான அந்த மாறுபாட்டை எவரும் மறுக்கவில்லை. ஆனால் இந்தப் பால் அடையாளத்தைக் கொண்டு பெண்களுக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள சமூகப் பாத்திரத்தை – அதை நிறைவேற்ற ஒரு பெண் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், கடமைகள் இன்னபிற விதிகளை தர்க்க ரீதியாக ஆய்வு செய்யும் போது, சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலுமே பெண்கள்  இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆண் பெண் பால் விகிதம் தொடங்கி, ஆண் பெண் கல்வியறிவு விகதம், பெண் வளர்ப்பு முறை, பெண் குழந்தைகள் ஊட்டச் சத்து விகிதம், பெண்களுக்கான சுகாதார ஏற்பாடுகள் ஆகியவற்றோடு குடும்ப அமைப்பில் பெண்களுக்கான கடமைகள், பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பொது வெளியில் பெண்களுக்கான இடம், அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் காணக்கூடிய பால் விகிதம் என ஒவ்வொன்றாக எடுத்துப்  பார்க்கும்போது ஆணாதிக்கச் சமூக அமைப்பானது பெண்களுக்கு இழைக்கும் அநீதி கண்கூடாகத் தெரிகிறது.

பெண்கள் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆணாதிக்க சமூகத்தின் வெறியாட்டத்திற்கு ஓர் இரத்த சாட்சி. கழிப்பறை வசதியற்றப் பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகள் ‘சுதந்திரமாக’ இயற்கை உபாதையைக் கூட கழிக்க முடியாத ஓர் அவலம் இங்கு நிலவுகிறது. வல்லுறவுக்குள்ளாவது மட்டுமின்றி கொடுமையான வகையில் கொல்லவும்படுகின்றனர். பெண்களுக்குப் பாலின ரீதியான பாதுகாப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. 1971ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டிற்குள் பாலியல் வல்லுறவு குற்றமானது 902% உயர்ந்திருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்தும் பார்க்க முடிகிறதா? இது தவிர பிச்சையெடுப்பதற்காக, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக  பெண்கள் கடத்தப்படுகின்றனர். இக்குற்றங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் மிகவும் மோசமான வகையில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். ’குடிமக்கள்’ செய்யும் பாலியல் கொடுமைகளையும் விஞ்சியது இராணுவத்தினரின் அட்டூழியங்கள். அவர்கள், சராசரிப் பெண்களையும் விடுவதில்லை, தன் சக உழியரையும் விட்டு வைப்பதில்லை. 

இது ஒருபுறமிருக்க, கலாச்சாரக் காவல் எனும் பெயரில் மத அடிப்படைவாதக் கும்பல்களின் அராஜகத்தினால் பெண்களுக்குப் பொது வெளி என்பதே அச்சத்துக்குறியதாய் மாறி வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள்கூட பறிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமானத் (ஆண்) துணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. ஒடுக்குமுறையின் வடிவங்களான சாதி, மதம் ஆகியவை இந்த விதியை கட்டிக் காக்க மிகவும் வெளிப்படையாகவே பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்யும்.

பொது வெளியில் பெண்களின் நிலை இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் இருக்க, மிகவும் ‘பாதுகாப்பானது’, இந்தியப் பண்பாட்டின் சின்னம் என்று சொல்லப்படும் ‘குடும்ப’ அமைப்பும் எவ்வகையிலும் மாறுபட்டதில்லை. வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவை இன்றளவிலும் ஒழிக்கப்படவில்லை. உண்மையில் ஆணாதிக்கத்தை அப்படியே கட்டிக்காப்பதற்கு ஓர் வலுவான துணையாக விளங்குவது குடும்ப அமைப்பே. குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள், குடும்ப உறவுகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றுக்கப்பால் கீழ் மத்தியத்தர வர்க்கப் பெண்கள் மற்றும் அடித்தட்டு வர்க்கப் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் இன்னும் கூடுதலானது. இரட்டை உழைப்பு, குடிகாரக் கணவனின் வன்முறை, பொருளாதாரச் சுமை என்று  அப்பெண்கள் கடும் துயர்களுக்குள்ளாகின்றனர். சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களின் நிலை அதனினும் மோசமானதாக இருக்கிறது. சாதியின் காரணமாகவே ஒடுக்கப்பட்டச் சமூகப் பெண்கள் மிகவும் இழிவாக நடத்தப்படுகின்றனர். ‘சுத்தம்’ செய்யும் தொழில்கள் பெரும்பாலும் இப்பெண்களுக்கே (ஆண்களுக்கும்) ஒதுக்கப்படுகிறது. ஆணாதிக்கச் சாதியப் பொருளாதார அமைப்பினால் விளையும் மிகப்பெரிய தீங்கு இதுவே. இதுதவிர, ஆதிக்கச் சாதியினராலும், அரசு அதிகாரத்தைச் சார்ந்தவர்களாலும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் கற்பனை செய்ய முடியாத பாலில் கொடுமைகளுக்குள்ளாகின்றனர்.  தாழ்த்தப்பட்ட சாதியைப் பொருளாதார ரீதியாக ஒடுக்கி அவர்களை நிரந்தர அடிமைக் கூலிகளாக வைத்திருக்க நினைக்கும் அத்தகையோரின் முதல் இலக்கு அச்சாதியைச் சேர்ந்தப் பெண்களாகவே இருக்கின்றனர்.  பல வேளைகளில், அரசு இயந்திரமும் இந்த பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கிறது.

இப்படி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பின்மையும், அச்சுறுத்தலும், ஏற்றத்தாழ்வும் நிலவுகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது உண்மையில் போலித்தனமானது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறிவிட்டனர் என்பதை வைத்து பெண்கள் எங்கே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர் என்று கேள்வி எழுப்புபவர்கள் மூடர்களாக மட்டுமே இருக்க முடியும்.

பெண் விடுதலை இல்லாத ஒரு சமூகம் உண்மையில் பிற்போக்குத்தனமானது, அப்படிப்பட்டச் சமூகமானது சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் தகுதியற்றது.  அப்படியென்றால் சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரம் என்பது சமத்துவம்.  என்றைக்கு இந்தச் சமூகத்தில் சமத்துவம் நிலைநாட்டப்படுகிறதோ அன்றைக்குத்தான் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியும். நாடு என்கிற அளவில், நம் நாடு அடைந்துவிட்ட சுதந்திரமானது எல்லைகளின் அடிப்படையில் நிலைநிறுத்திக்கொண்ட ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கிறது. ஆனால் நாம் இங்கு பேசுவது மக்களுக்கான சுதந்திரம் அதாவது மானுட விடுதலை, அதில் எந்த ஏற்றத்தாழ்வுக்கும் ஒடுக்குமுறைக்கும் இடமில்லை.  அதுவே உண்மையான சுதந்திரம். 

(நன்றி உயிரோசை மாத இதழ்)