Oct 18, 2016

கருத்துச் சுதந்திரமும் தமுஎகசவும் - யமுனா ராஜேந்திரன்


நன்றி யமுனா. //மார்க்சிஸ்ட்டுகள் அல்ல// என்பதை நான் எற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அப்போதைய தவறுகள் குறித்து விமர்சனங்கள் உள்ளன. மற்றபடி அணுகுமுறை தொடர்பாக விமர்சிப்பது உங்களின் உரிமைபார்பட்டதே. அதை நான் மதிக்கிறேன். அதேபோல் அம்பேத்கரின் பங்களிப்பை, அவரது அர்ப்பணிப்பை ரங்கநாயகம்மாவும் சரி, நாங்களும் சரி எங்கேயும் மறுக்கவில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள். மேலும், எங்களின் மார்க்சிய மரபு குறித்த உங்களது முரண்பாடு, நட்பு முரண்பாடு என்று எடுத்துக்கொள்கிறேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் உரையாடுவோம். கற்று கரை தேர்ந்து விட்டோம் என்று எதுவுமில்லை! இப்படி ஒரு பதிவை எழுதியமைக்கு நன்றி.

மேலும், நகைச்சுவைக்காக ஒரு சிறு குறிப்பு: நோக்கம் குறித்து ஆய்வு செய்தவர்கள், நிதிப் பின்னணி குறித்து ஆய்வு செய்வதாகச் சொல்லி உண்மைக்குப் புறம்பானப் பதிவுகளை எழுதியவர்கள் தமுஎகச மட்டுமல்ல, CPI (ML) Liberation கட்சி உறுப்பினர்களும் கூட. அவர்களில் ஒருவர் இப்பதிவுக்கு விருப்பக்குறி இட்டிருப்பது, தமுஎகச மீதான 'பாசத்தினாலோ' என்று எண்ணி சிரித்துக்கொள்கிறேன். அந்த நபரும் நூலை முழுமையாக வாசிக்கவில்லை. அக்கட்சியின் மற்றொரு உறுப்பினர்தான் வசுமித்ரவை பொறுக்கி என்று எழுதியதோடு, lumpen என்பதைத் தமிழில் அப்படி எழுதியதாக விளக்கம் கொடுத்தார்!

Yamuna Rajendran
1 hr
கருத்துச் சுதந்திரமும் தமுஎகசவும்
திருப்பூரில் தமுஎகச சந்திப்பில் கருத்துச் சுதந்திரப் பிரகடனத்தில் முன்வரிசையில் நின்று அவர்களது பிரபல எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்னவிதமான கருத்துச் சுதந்திரப் பிரச்சினை வந்தது? ஈழவிடுதலை ஆதரவாளர்கள் அவரை அச்சுறுத்தினார்கள் என்பது அவர்களது தரப்பு. ஆகவே, ஆதவன் தீட்சண்யாவின் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல். 
ஆதவன் தீட்சண்யா என்ன செய்தார்? இலங்கை ராணுவத்தினால் முள்ளிவாய்க்கால் பேரழிவில் கொல்லப்பட்ட விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது புதல்வி, அவரது ஆண் மகவு போன்றோரை முன்வைத்து ஒரு நக்கல் புனைவை வெளியிட்டார். இப்படியான ஒரு நக்கல் புனைவை ஈ.எம்.எஸ். பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி போன்றவர்கள் பற்றி எழுதி வெளியிட்டால் தமுஎகச வின் எதிர்விணை எவ்வாறு இருக்கும்? 
நீங்கள் யாருக்குச் சார்பாக யாரை நக்கல் செய்கிறீர்கள் என்பது எப்போதும் முக்கியம். உண்மையில் தமுஎகச அதற்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். உ.ரா.வரதராஜன் பற்றி ‘மக்கள் டிவி’யின் கருத்துக்கு டிவி ஸ்டேஷனை உடைத்துவிட்டு பிற்பாடு வருத்தம் தெரிவித்தீர்கள். இன்றுவரை ஆதவன் தீட்சண்யா கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர் என்கிற மாதிரியான சித்திரத்தை முன்வைத்து வருகிறீர்கள். 
அம்பேத்கர் தொடர்பான ரங்கநாயகம்மாவின் நூலின் அணுகுமுறையுடன் எனக்குத் துப்புரவாக உடன்பாடு கிடையாது. தலித் ஒடுக்குமுறை என்பது ஒரு நிதர்சனம். அதிலிருந்து விடுபட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர், செயல்பட்டவர், எழுதியவர் அம்பேத்கர். மார்க்சிஸ்ட்டுகள் அல்ல. இந்த ஸ்தூலமான நடைமுறையிலிருந்துதான் அம்பேத்கருடனான உரையாடல் நிகழ வேண்டும். அம்பேத்கரின் மார்க்சிஸ்ட்டுகள் தொடர்பான பார்வை இரு படிநிலையிலானது. 1.இந்திய மார்க்சிஸ்ட் கட்சிகளுடனான அவரது அனுபவம். 2.ஒரு கன்ஸ்டிட்யூசனல் லிபர்ட்டேரியனாக கோட்பாட்டு மாரக்சியம் தொடர்பான அவரது பார்வை. அவர் சென்ற நூற்றாண்டின் மத்தியில் மரணமடைகிறார். இதற்குள் இருந்துதான் அவரது கோட்பாட்டு மார்க்சியம் தொடர்பான புரிதலை நாம் ‘இன்று’ மதிப்பிட வேண்டும். அவர் அது பற்றிச் சொல்வதை நாம் அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், என்றையும் விட இன்று சோவியத்-சீன அனுபவங்களுக்கு அப்பாலான மார்க்சிய அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. 
சரி. இது புறம். ஒரு மார்க்சியன் எனக் கருதுபவன் அம்பேத்கர் பால் கொள்ள வேண்டிய அணுகுமுறை இதுதான் என நான் நினைக்கிறேன். ஆனால், ஆதவன் தீட்சண்யாவும் எஸ்.வி.ஆரும் தமுஎகச தோழர்களும் செய்வது என்ன? நூலையே வாசிக்காமல் அரைகுறை விமர்சனம். பிறகு, கொற்றவையிடம் நோக்கம் கண்டுபிடிப்பது. ரங்கநாயகம்மா ‘குகை மார்க்சியர்’ எனில் அதனை எஸ்.வி.ஆர்.நிறுவ வேண்டும். எஸ்.வி.ஆரின் நூலை முழுமையாக வாசிக்காமல் தனிநபர் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பதை அவர் ஒப்புவாரா? கொற்றவை, வசுமித்ர பார்வைகளில் அம்பேத்கர் பறறி மட்டுமல்ல அவர்களது மார்க்சிய மரபு தொடர்பான பார்வைகளும் பெரும்பாலானவை என்னால் உடன்பட முடியாதவை. ஆனால், தமுஎகசவினரின் அணுகுமுறை நாகரீகமானது அல்ல. கொற்றவையும் வசுமித்ரவும் ஒப்பீட்டளவில் நாகரீகமான சொற்களில் வாதிடுகிறார்கள். தமுஎகசவினர் பெரும்பாலும் தனிநபர் தாக்குதலும் நோக்கம் கண்டுபிடிக்கும் தாக்குதலும் தொடுக்கிறார்கள். இது நெடுங்காலமாகவே அவர்களிடம் இருக்கும் அணுகுமுறை. ஈழவிடுதலை தொடங்கி இன்று வரை இதனை அவர்கள் வெளிப்படையாக எதிர்கொண்டதேயில்லை..

(as shared in FB)

Oct 11, 2016

இதுவரை வசுமித்ரவுக்குக் கிடைத்துள்ள பட்டங்கள்

தமிழ்நாட்டில் அறிவுச்சூழல் எத்தகைய தரத்தில் இருக்கிறது என்பதற்கு சமீப கால ‘அவதூறுகளே’ சாட்சி. அனைத்து ‘விமர்சனங்களிலும்’ அறிவார்ந்த பார்வைகள் இருக்கிறதோ இல்லையோ, தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும், இன்னும் சொல்லப் போனால் முட்டாள்தனமானப் பேச்சுகளுக்கும் பஞ்சமே இல்லை.

இந்த இணையவெளி ஏற்படுத்தும் மாயை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் ‘மாற்றுகிறது’ என்பதைக் காணும்போது சற்று அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது. பண்பையும், உண்மையையும் அது விழுங்கிவிட்டது என்பதற்கப்பால், (இடதுசாரிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடம்) தத்துவத்தைக் கூட குழிதோண்டி புதைத்துவிடும் அளவுக்கு இந்த முகநூலானது ஓர் அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது!
சில மாதங்களுக்கு முன்புவரை இந்த நோய் இலக்கிய உலகை மட்டுமே பீடித்திருந்தது. தற்போது அது ஒரு சில ‘இடதுசாரி’களையும் தாக்கியிருக்கிறது.
இலக்கிய உலகின் ‘விமர்சன’ப் போக்கு
1. ஓர் இலக்கியக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அது தொடர்பானப் பதிவுகள் முகநூலில் தொடர்ந்தது. அப்படி ஒரு விவாதத்தில் நேசமித்ரன் என்பவருக்கு வசுமித்ர சில கேள்விகள் வைத்ததும் தொடங்கியது தாக்குதல்கள்.
அவர் வசுமித்ரவுக்கு அளித்த பட்டங்கள்: ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டுக்குப் பின்னாடி இருக்கிற ஆங்கிலத்தைக் கூட படிக்கத் தெரியாதவர், ரவுடி, அடித்துவிடுவார் என்பதாக. அதிலும் உச்சபட்சமாக, அதுநாள்வரை வசுமித்ரதான் எனது கவிதை மேம்படவு, தான் அடைந்த உச்சத்திற்கும் வழிகாட்டி என்றெல்லாம் என்னிடமே சிலாகித்த அவருக்கு திடீரென்று வசுமித்ர ரமேஷ் பிரேதனைக் காப்பியடிப்பவராகிப் போனார்.
இதன் தொடர்ச்சியகக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், வசுமித்ர மட்டும் உத்தமனா, குடிப்பதில்லையா என்றெல்லாம் சீறிவிட்டு, பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறார் என்று ‘மிகுந்த நாகரீகத்தோடு’ ‘விமர்சனங்களை’ எழுதினார். ஆனால், இதுவரை நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. இந்த ’மோதல்’ வசுமித்ரவின் எழுத்து சார்ந்து வந்ததல்ல. தேனியில் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குறித்து நேசமித்ரன் வைத்த புகார்களுக்கு பதிலளிக்கச் சென்று, அதாவது தன் நண்பனுக்காகப் பேசச் சென்று வசுமித்ர பெற்ற பட்டங்கள் இவை. ஆனால், இன்று அந்த நண்பர் தன்னைக் கேவலமாகப் பேசிய அந்த நேசமித்ரனோடு ‘மிகுந்த நட்பில்’தான் இருக்கிறார்! ஓர் இலக்கிய இதழ் நடத்தினால் போதும், நட்பாவது மண்ணாங்கட்டியாவது!
2. எங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கூடிப் பழகி, பின்பு ஒரு பதிவிற்கு எதிர்கருத்து தெரிவித்ததாலேயே வசுமித்ரவுக்கு ‘சாதிவெறியர்’ பட்டம் கொடுத்தவர் பேய்க்காமன் என்பவர். பேய்க்காமன் எனும் பெயரை அவருக்கு வைத்ததே வசுமித்ரதான், அவர் இயற்பெயர் விஜயபாஸ்கர். (தலித் சாதியைச் சேர்ந்தவர்). எங்கள் திருமணத்தைக் கூட அவருடைய பொறுப்பில்தான் நடத்தினோம்.
இதில் நகைச்சுவை என்னவென்றால், இன்று தமுஎகச ‘தொண்டர் படை’ எஸ்விஆருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவதுபோல் அன்று தமிழ்ச்செல்வன் குறித்து பேய்க்காமன் எழுதிய அவதூறுக்கு எந்தப் படையும் வரவில்லை. வசுமித்ர மட்டுமே நண்பன் என்ற முறையில் பேய்க்காமனைத் தொடர்பு கொண்டு தவறாக எழுதியிருக்கிறார் என்று சொன்னதோடு, சில எதிர்கருத்துகளையும் வைத்தார். தொலைபேசியில் ‘அப்படியா வசு, சரி வசு’ என்றெல்லாம் பேசிவிட்டு, அடுத்த நொடி, முகநூலில் தமிழ்ச்செல்வனைப் பேசினால் வசுமித்ராவுக்கு ‘ஏன் பொங்குது’ என்று ஆரம்பித்து ‘சாதி வெறி’ என்று தனது சாதியை முன்வைத்து முத்திரை குத்திவிட்டு ஓடிவிட்டார். அவருக்கு நான் வைத்த கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கிறது.
சில மாதங்கள் கழித்து என்னுடையக் கட்டுரை ஒன்று சிறப்பாக இருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்! நான் பதில் ஏதும் அளிக்கவில்லை! எனக்கிருந்த ஒரே கேள்வி, வசுமித்ர சாதிவெறியர், அவர் மனைவி ‘முற்போக்காளர்’! (பெண் என்பதாலா?)
3. விக்ரமாதித்தன், தேவதச்சன் இருவரை விமர்சித்து வசுமித்ர ஒரு பதிவை தனது வலைப்பூவில் எழுதினார். அதற்கும் இலக்கிய உலகில் ஒரே புலம்பல்! இங்கு எல்லாமே வழிபாட்டு மனநிலைதான் இருக்கும் போல! விமர்சனத்திற்கு துளியும் இடமில்லாத ஒரு சமூகமாக சில ’அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகள்’ மாற்றிவருகின்றனர். இப்போது அந்தப் பட்டியலில் சில இடதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.
புத்தகக் கண்காட்சியில் வசுமித்ர ஓர் அரங்கில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு ‘கவிஞர், எழுத்தாளர்’ ‘அவங்களை எல்லாம் விமர்சிக்கிற! நீ என்ன பெரிய ஆளா’ என்று தானாக வம்பிழுத்து, (அப்போது அவர் குடித்திருந்தார்) மிகவும் அநாகரீகமாகப் பேசி, உணர்ச்சியைத் தூண்டிவிட்டபடியே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வசு அவரைத் தள்ளிவிட, அங்கு ஒரு சலசலப்பு ஏற்பட்டது!
ஆனால், அச்சம்பவம் குறித்து பதிவுகள் எழுதிய ‘இரு பெரும் ஆளுமைகளில்’! ஒருவர், இந்த இலக்கியவாதிகள் ஏன் இப்படிக் குடித்துவிட்டு பொதுவெளியில் கலாட்டா செய்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக தனது கற்பனையிலிருந்து எழுதினார்.
மற்றொருவரோ வசுமித்ர என்பவர் விரலை கடித்துவிட்டாராமே என்று எழுதினார்!
தோழர்களே! இதுதான் இங்கு நிலவும் ‘விமர்சன அரசியல்’!
4. அதேபோல் சம்பந்தமே இல்லாமல் லக்‌ஷ்மி சரவணக்குமார் என்பவர் என்னைப்பற்றி அவதூறாக ஒரு பதிவு எழுதினார். அதையும் நாங்கள் எப்படிக் கையாண்டோம் எனும் பதிவு எங்கள் தளங்களில் உள்ளது! ஆனால், தாமாக வந்து அவதூறைத் தொடங்கிவிட்டு, எந்த இலக்கியவாதியாவது எங்களைப் பற்றி ஏதேனும் எழுதினால், உடனே அங்கு ஆஜராகி கேவலமானப் பதிவுகளை எழுதுவதை தொடர்ந்துவந்தார். அதற்கு நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பது எனது வலைப்பூவில் உள்ளது!
இவரும் தன்னுடைய அத்தகைய செயலுக்குக் கொடுத்த விளக்கம் ‘எவரோ ஒருவரின் தூண்டுதலுக்கு உள்ளாகி அப்படி செய்துவிட்டேன்’ என்று தனிப்பட்ட முறையில் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, பொதுவெளியில் வழக்கம் போல தனிப்பட்ட காழ்ப்புகளைத் தொடர்ந்து எழுதினார். அதற்கும் எதிர்வினைகளைப் பதிவு செய்தோம்.
5. இந்த இலக்கியவாதிகள் சிலர் ஏன் தமது ‘இலக்கிய வளர்ப்புத் தொண்டினை’ மற்றப் பெண்களிடமே காட்டுகின்றனர், ஏன் தமது மனைவிக்கு அத்தகைய ‘அறிவினை ஊட்டுவதில்லை’ என்று ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியதற்காக, அபிலாஷ் சந்திரன் என்பவர் முகநூலில் ‘பொங்கி எழுந்தார்’. கற்பனைக் கதை என்கிற பெயரில், வசுமித்ரவுக்கு என் மீது சந்தேகம், எந்த ஆணும் என்னுடன் பேசுவதை அவன் விரும்புவதில்லை, அவனது நிழல்கூட என்னைக் கண்கானித்தபடியே இருக்கிறது என்று சரோஜாதேவி பத்திரிகைக்குக் கதை எழுதுவதுபோல் எழுதினார்.
அதற்கொரு ‘போராட்டத்தை’த் தொடுக்க வேண்டியதாயிற்று! (சம்பந்தப்பட்டவர் அதன் பிறகு மன்னிப்பு கேட்டார்)
6. இப்போது எஸ்விஆரை விமர்சித்ததும், தமுஎகச ‘தொண்டர் படை’ ஒன்று கிளம்பியிருக்கிறது பட்டங்களுடன் – ரவுடித்தனம், அராஜகம், வயசுக்கு மரியாதை கொடுக்காமல், படித்த திமிர், பொறுக்கி இப்படியாக… இதில் உச்சபட்ச கேவலம் என்னவென்றால், கூட்டத்தில் அடிக்கடி தண்ணீர் குடித்ததைக் கூட ‘ஆளுமைக் கோளாராக’ இழுத்துப் பிடித்து எழுதுவதென்பதுதான்! என்னவகையானப் பண்பு இது! ஒருவேளை இந்த பூர்ஷுவா அறிவுஜீவிகளுக்கு தாகமே எடுக்காதோ?
வசுமித்ர கேட்ட கேள்வி என்ன? முதலில் அவர் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டாரா? இவர்களாக ரஙக்நாயகம்மா நூல் குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கிவிட்டு, அதற்கு நேரடியாகத் தொடர்புடைய வசு பதில் சொல்ல எழுந்தபோது, வசு அங்கு வந்திருப்பதைக் கண்டு ’அச்சமுற்ற’ ஆதவன் நேரம், காலம், இது ரங்கநாயகம்மா மேடையல்ல என்றெல்லாம் முதலில் வாய்ப்புத் தரவே மறுத்து, பின்னர் வசு பேசியிருக்கிறார். அதிலும் அவர் விருதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, நூல் பற்றிய எஸ்விஆரின் கருத்தோடு உடன்படவில்லை என்று சொல்லிவிட்டு ‘எஸ்விஆர்’ எப்படி மார்க்சிய அறிஞர் என்று மட்டுமே கேட்டிருக்கிறார். எஸ்.வி.ஆரை கம்யூனிஸ்டு இல்லை, மார்க்சிஸ்ட் இல்லை என்று வசு சொல்லவில்லை, மார்க்சிய அறிஞர் என்றால் மார்க்சியத் தத்துவத்தை வளர்தெடுக்க அதற்கென அறிவார்ந்த (Schoalrly contribution) பங்களிப்பு செய்திருக்க வேண்டும். எஸ்விஆரின் பங்களிப்பை வாசகர்களே படித்தறியலாம்! அது மார்க்சியத்தை வளர்க்க உதவக்கூடியதா, அல்லது திரிக்கவும், சிதைக்கவும் உதவக்கூடியதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்! ஆனால் இதற்கு மார்க்சியத்தை அறிந்திருப்பது அவசியம்!
என்னோடு உரையாடும் ஒவ்வொரு புரட்சிகர அமைப்புகளும் (இந்த மார்க்சிஸ்ட் கட்சி போல் அல்லாத) அதில் உள்ள தோழர்களும் எஸ்விஆர், வ. கீதா, அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரை மார்க்சிய எதிர்ப்பாளர்கள் (anti-marxists) என்றுதான் எப்போதும் வசைபாடி வந்துள்ளார்கள். பொதுவெளியிலும் அத்தகையப் பதிவுகள் உள்ளன. ஆனால், இன்றைக்கு வசுமித்ர மட்டுமே எஸ்விஆரை அவதூறு செய்வதாக இவர்கள் திரிக்கிறார்கள். இத்தனைக்கும் வசுமித்ர எஸ்விஆரை மார்க்சிய எதிர்ப்பாளர் என்றுகூட சொல்லவில்லை. மார்க்சிய அறிஞர் என்றால் அதற்கான பங்களிப்பு என்ன என்றுதான் கேட்கிறார். மேலும் எஸ்வீஆர் எழுதிய ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்சியமும் போன்ற நூல்கள் எதற்குப் பயன்படக்கூடியவை என்ற அடிப்படையில், இவர் ஒரு தலைமுறையை சீரழித்தவர் என்று பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு அல்லது பொறுக்கித்தனம் அல்லது சாதி வெறி?
ஒருவரை மார்க்சிய அறிஞரா என்று கேட்பதில் என்ன அராஜகம், மேதாவித்தனம்? இவர்களைப் போல் சதா சர்வ காலமும் ‘மூத்தவர்களுக்கும்’, ‘நண்பர்களுக்கும்’ துதிபாடிக் கொண்டே இருக்க வேண்டுமா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோஷ்டி கானம் பாடிக்கொண்டு தம்முடைய சொந்த போட்டி, பொறாமைகள், வன்மத்தின் காரணமாக ‘கூலி உழைப்பை’க் கேவலப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசி சீண்ட வேண்டுமா? தமக்கு லைக் போடுவதற்காக கும்பல் சேர்ப்பிற்காக வசைச் சொற்களை நிரப்பி அவதூறு செய்ய வேண்டுமா? இதுபோன்ற பேச்சுகள் ‘ஜனநாயகம்’, ‘நாகரீகமான பேச்சு’ ஆனால் ஒரு விமர்சனம் வைத்தால் ‘ரவுடி’, ‘திமிர்’, பொறுக்கி, ‘சீரியலுக்கு வசனம் எழுதும் கேவலப்பட்டவன்’, (இப்போது நடிப்புத் தொழில் செய்யும் கேவலம் வேறு சேர்ந்திருக்கிறது).
மார்க்சியத்தின் பெயராலும், முற்போக்கு அமைப்பு என்ற பெயரிலும் இவர்கள் செய்யும் இந்த கும்பல்வாத அராஜகத்திற்குப் பெயர் குண்டாயிசமே அன்றி மார்க்சியமல்ல என்று மட்டுமே சொல்ல முடியும்.
தோழர்களே! விமர்சனம் செய்தாலோ, கேள்வி கேட்டாலோ இந்த ‘முற்போக்கு குண்டர்கள்’ என்ன செய்வார்கள் என்பதை நீங்களே அவர்களது எழுத்துகளைப் படித்தறியலாம். இதுபோன்ற எந்த வகையான அவதூறுகளும், அவமானப்படுத்தல்களுக்கும் நாங்கள் சோர்வுறப் போவதில்லை!
காலம் கடந்து நிற்கப்போவது மக்களுக்கு அறிவூட்டக்கூடிய எழுத்துகளே அன்றி இதுபோன்ற கேவலப்பட்ட ‘அவதூறுகள்’ அல்ல! இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் இந்த முகநூலில், தமது நட்பு வட்டத்தில் இவர்கள் ‘புரட்சியாளராக’ வலம் வர முடியும். ஆனால் சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பு என்னவென்று பார்க்கும்போது ‘அற்பப் பதிவுகளே’ அதிகமாக மிஞ்சும்!
நாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிவதாலேயே இவர்கள் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுக்க முடியும், இல்லையா! ஆனால், அமைப்புகளில் இருப்பவர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், சில எழுத்தாளர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் (எஸ்விஆர் உட்பட) என்று எதுவும் பொதுவில் தெரியாததால், அவர்கள் ‘முழுநேர’ புரட்சியாளர்கள். அமைப்பில் அட்டெண்டஸ் போட்டுக்கொண்டு, போராட்டங்களில் கலந்துகொண்ட செல்ஃபிகளைப் பகிர்ந்துகொண்டு, எல்லாருடைய பக்கங்களிலும் தாமாக சென்று விருப்பக்குறி இட்டு, சிலபல கமெண்டுகளையும் எழுதிவிட்டால் போதும் சமூகத்திற்காகத் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள்! தம்முடைய சொந்த அடையாளத்திற்காக அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதைவிட உதிரிகளாக இருந்துகொண்டு தம் எல்லைக்கும், பொருளாதாரத்திற்கும் உட்பட்டு சில வேலைகளைச் செய்வது எவ்வளவவோ மேலானது.
உழைப்பாளிக்கு, கூலி உழைப்பு அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லாத ஒரு அமைப்பில், கிடைக்கும் வாய்ப்புகளைத்தான் ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைக் கூட அறியாத முற்போக்கு குண்டர்களாக இவர்கள் இருப்பது தெளிவாகிறது! இன்னொரு விஷயம், மார்க்சியத்தைப் பேசுவது, பாட்டாளி வர்க்க அரசியலைப் பேசுவதென்பது ஏதோ ஒழுக்க நெறியல்ல, அது சமூகம் என்னவாக மாறவேண்டும் எனும் இலக்கை முன்வைத்து முன்னேறும் ஒரு அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை வழிகாட்டி. ஆனால், இன்றைய நிலைமையில் ஒருவர் நிலவும் அமைப்புக்கு உட்பட்டே உழைத்து வாழ முடியும். தன்னைப் போல் மற்றவரும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார் என்பதையும் கணக்கில் கொண்டு எல்லாருக்கும் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை வேண்டும் என்பதால் மார்க்சியத்தைப் பேசுகிறோம். ஆனால் இவர்கள் பேசுவது முட்டாள்தனமான தூய்மைவாதம், அது ஒரு மதவாதக் கோட்பாடு! புறச்சூழலை கணக்கில் கொள்ளாத கருத்துமுதல்வாதம்.
‘படைப்பு’ (அல்லது வேலை) என்று வரும்பொழுது, அதன் மீது ஒருவருக்கு என்னவிதமான அதிகாரமும், சுதந்திரமும் இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவரின் ‘அரசியலை’ விமர்சிக்க முடியும்! வசுமித்ர ஒரு சிலரைப் போல் ‘ஓனர்’ அல்ல, அவன் ஒரு கூலி உழைப்பாளி! கிடைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பாட்டாளி! ஆனால், அந்தப் பாட்டாளி சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு விசுவாசமாக தனது அரசியலை சமரசம் செய்துகொண்டு, அம்முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆதரவாகப் பேசினாலோ அல்லது அவர்களின் ‘சரக்கினை’த் தூக்கிப் பிடித்து எழுதினாலோ, புகழ்ந்துரைத்துக் கொண்டே ‘காக்காப் பிடிக்கும்’ வேலைகளைச் செய்தாலோ விமர்சிக்கலாம். (தான் பெற்ற விருது பற்றிய செய்தையைக் கூட பொதுவெளியில் பகிரக் கூடாது என்று சொல்லும் ‘பொறுக்கி’ அவன்!).
தொழிலை இழுத்து பேசி இவர்கள் தம்மை பிற்போக்குவாதிகள், கருத்துமுதல்வாதிகள், எல்லாவற்றுக்கும் மேல் தம் அடையாள நெருக்கடியின் காரணமாக, (தம்மை ஆதரித்து பேசாத சில அற்பக் காரணங்களுக்காக) தத்துவத்தைக் கூட விலை பேசுபவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.
இத்தகைய போக்குகளை ஊன்றிக் கவனிக்கும் போது இந்துத்துவப் பாசிஸ்டுகள், இந்துந்துவ குண்டர்களுக்கு இவர்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதையேக் காண முடிகிறது.

Oct 7, 2016

ஆண்மை ஒழிப்போம்!


சமீப மாதங்களில் காதலின் பெயரால் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் செய்திகள், காணொளிக் காட்சிகள் நம் அனைவரையும் உரையச் செய்துள்ளது. ஒருதலைக் காதலை மறுத்ததால் கொலை, காதலித்து பின் ஏதோ ஒரு காரணத்தால் விலகினால் ஆசிட் வீச்சு அல்லது கொலை, பின் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பது பொறுக்க முடியாமல் காவல்நிலையம் சென்று புகார் அளித்ததால் கொலை என்று அந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பெரும்பாலும், பெண்கள் மீதான இத்தகைய வன்முறைகளை, குறிப்பாக காதல் சார்ந்து நிகழ்த்தப்படும் வன்முறையை - தீவிரக் காதல், புனிதக் காதல், வெறித்தனமானக் காதல் – அதனால் ஒருவர் தன்னிலை இழந்து கொலை செய்வதாக மட்டுமே இந்த சமூகம் அணுகுகிறது. திரைப்படங்களும் அப்படித்தான் கட்டமைக்கின்றன. இணைகளாக அன்பும், மரியாதையும், சம உரிமையும் இருக்கும் ஓர் உறவே காதல். இந்த மூன்றில் ஒன்று இல்லாது போனாலும் அது காதலாகவோ, கணவன் மனைவி உறவாகவோ இருக்க முடியாது. இரண்டு பேரில் ஒருவரின் ஆதிக்கம் நிறைந்த உறவாக – எஜமானர், அடிமை உறவாக அது மாறிவிடும். இது ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் (அதாவது ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு மற்றும் ஆணுக்கு உயர்ந்த இடம் கொடுத்திருக்கும் சமூக அமைப்பு) பெரும்பாலும் அவ்வுறவில் ஆணின் ஆதிக்கமே தலைதூக்கி இருக்கும்.

இத்தகைய ஆணாதிக்க சமூகம் உருவானதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. மெல்ல மெல்ல பெண்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு அவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிலவுடைமை சமூகத்தில் முழுமுற்றிலுமாகப் பெண்கள் ஆணின் உடைமைகளாக மாறிப்போயினர். தனிச்சொத்து (குடும்பச் சொத்து) சேர்க்கைக்காக கொடூரமான அட்டூழியங்கள், கொலைகள், ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்பட்ட, இன்றைக்கும்கூட தொடர்கின்ற ஓர் அமைப்பே நிலவுடைமையாகும். பெண் ஒடுக்குமுறை என்பது தனிச்சொத்தை பாதுகாப்பதோடு நெருங்கிய தொடர்புடையது.

பெண்ணும் நிலமும் ஒன்று அதை அடுத்தவன் வந்து ஆண்டுடாம பார்த்துக்க, பெண்ணைப் பாதுகாப்பதென்பது சொத்தைப் பாதுகாப்பது போல் என்றெல்லாம் சொல்லப்படுவதென்பது உண்மையில் பெண்கள் மீதான அக்கறையினால் அல்ல, மாறாக பெண் மூலமாக குடும்பச் சொத்து மாற்றானுக்குப் (அதாவது வேறு சாதி-குடும்பத்திற்கு) போய்விடக் கூடாது என்பதால்தான். 

இத்தகையதொரு ஆணாதிக்க சமூகத்தில் வளரும் ஆண்களின் மனமானது எப்போதும் பெண்களைத் தங்கள் உடைமையாகவே கருதும் வகையிலேயே உருவாகிறது. சிறுவயது முதலே குழந்தைகள், ஆண்கள் உயர்ந்தவர்கள், பலசாலிகள், என்று சொல்லியே வளர்க்கப்படுகின்றனர். ஆண் / தந்தை அடித்தாலும், மிதித்தாலும் தாயானவள் தந்தைக்குக் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் எனும் விதியானது - ஆண்களின் மனதில் பெண்களை அப்படி வன்முறை மூலம் ஒடுக்கலாம் எனும் - முழுக்க முழுக்க ஓர் உடைமை அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பில் எப்படி ஒரு பெண் கணவனின் உடைமையாகக் கருதப்படுகிறாளோ அதேபோல் காதலிக்கப்படும் பருவத்தில் காதலி எனும் பெண் ஆணின் உடைமையாகக் கருதப்படுகிறாள். அதேபோல் இந்த அமைப்பில் எப்படி, பெண்கள் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்ளும் உரிமை மறுக்கப்படுகிறதோ அதேபோல் தனக்கு விருப்பமில்லை என்றாலும் காதலை மறுக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. 

ஆக மொத்தம் குடும்பத்தில் பெண் தந்தைக்கு அடிமை, பொதுவெளியில் பெண் பொதுவான ஓர் ஆணின் அடிமை. காதலித்து திருமணம் செய்துகொண்டால் குடும்பத்தார் வெட்டுவார்கள். காதலை ஏற்க மறுத்தால் பொதுவான ஓர் ஆண் (காதலன்) வெட்டுவான். ஆக, பெண் இனத்திற்கு குடும்பத்திலும் பாதுகாப்பில்லை, சமூகத்திலும் பாதுகாப்பில்லை. இதுதான் இந்த தனியுடைமை ஆணாதிக்க சமூக அமைப்பின் ‘ஆண்மை-நண்மை’! 

பெண் பற்றிய ‘பெண்மை’க் கருத்தியலை தூக்கிப் பிடிப்பதிலும், பெண்கள் மீதான வன்முறையை காதலின் பெயரால் நியாயப்படுத்துவதிலும் திரைப்படங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளைப் பின் தொடர்ந்து செல்வது, பாட்டு பாடி வம்பிழுப்பது, காதல்-துறத்தல் என்கிற பெயரில் வரும் பாடல்களில் பெண்ணின் அனுமதியின்றியே அவளை தொட்டுத் துன்புறுத்துவது என்பதெல்லாம் காலம் காலமாக திரைப்படங்களில் காட்டப்பட்டு வருகின்றன. விருப்பமில்லாத பெண்ணையும் துரத்தி துரத்தி, கட்டாயப்படுத்தியாவது காதலிக்கச் செய்வதே ‘ஆண்மை’ என்று இதுபோன்ற திரைப்படங்கள் கற்றுத்தருகின்றன. அதேபோல் காதலுக்காக (இன்னபிற காரணங்களுக்காகவும்) வெட்டுவதும், குத்துவதும்தான் ஆண்மை, வீரம் என்று வன்முறையையே போதிக்கின்றன. 

ஆணாதிக்க சமூகத்தின் ஆண்மை கருத்தியலானது ஆண்களுக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அந்த ஆண்மை ஏற்றப்பட்ட ஆண் மனமானது எந்த வகையிலும் நிராகரிப்பை, மறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அப்படி ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், தான் ஆண் மகனே இல்லை என்பதாக ஆண் மனம் உடைகிறது. ஆண்மை இழந்தவனாக அது அவனை ஓர் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது. ஆணைச் சுற்றியுள்ளவர்களும் அப்படித்தான்  அவனை ஏளனம் செய்வார்கள். 

உடைமை மனநிலையும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமாகி கொலை வெறியனாக ஆண் மாறிவிடுகிறான். பாதிக்கபப்டும் பெண்ணோ, குடும்பமோ காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டால் அதையும் தன் ஆண்மைக்கும், வீரத்திற்கும் இழுக்கானதாகவே ஆண் கருதுகிறான். ஆகவே, கொலை செய்தேனும் தன் ‘வீரத்தை’ பறைசாற்ற எண்ணும் மனநிலை உருவாகிறது; அதுமட்டுமின்றி தனக்குக் கிடைக்காதப் பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் தனியுடைமை மனநிலையும் அதில் மேலோங்கி நிற்கிறது. 

இந்த சமூகமும், பெற்றோர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், பெண்களை ஒடுக்கி ஒடுக்கி ஆண்களுக்கு எல்லையற்ற அதிகாரத்தை கொடுத்தாயிற்று;. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தியாயிற்று. அதனால் மீண்டும் பெண்ணை வீட்டுக்குள் ஒடுக்கி வைப்பதோ, ஆண்களுடன் பழகுவதைத் தடுப்பதோ, காதலை எதிர்ப்பதோ இதற்கு தீர்வாகிவிடாது. முதலில் குடும்ப அளவில் ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். பெண்கள் மீது அதிகாரத்தையும், வன்முறையையும் செலுத்துவதைக் கைவிட வேண்டும். பெண்ணைத் தாழ்த்தியும், ஆணை உயர்த்தியும் பேசுவதை, வளர்ப்பதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தம் பெண் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண் இனமும் இந்த வன்முறையிலிருந்து விடுதலைப் பெருவதற்காக சமூகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். 

அரசாங்கமானது சட்டங்களையும், தண்டனைகளையும் மட்டும் கணக்குக் காட்டிக் கொண்டிருப்பதை விடுத்து பெண்களின் நிலையை எல்லா மட்டங்களிலும் மாற்றியமைப்பதற்கான முற்போக்கான செயல்திட்டங்களை வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்-பெண்மை, ஆண்-ஆண்மை பற்றிய கருத்தியல்களை அடிப்படைக்கூறு சார்ந்தே மாற்றியமைத்திடுவதற்கான சமத்துவக் கல்வியை, அதானது பாலினக் கல்வி (பாலியல் கல்வி மட்டுமல்ல) சிறுவயது முதலே ஒரு பாடமாக வழங்க வேண்டும். பெண்களுக்குக் கல்வி, பொருளாதாரம், திருமண உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.

குற்றங்களுக்கு சமூக அமைப்புக் காரணம் என்று சொல்வதால் குற்றவாளிகளைக் கருணையோடு அனுக வேண்டும் என்பதல்ல. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு ஆதாரபூர்வமாக ஒருவர் குற்றவாளி எனும் பட்சத்தில் கொடூரக் கொலைகள் மற்றும் வன்முறைக்கான தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட வேண்டும். அதேவேளை எதிர்காலத்தில் குற்றங்கள் நடைபெறா வண்ணம் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சமூக மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்க வேண்டும். 


பெண்களைப் புனிதப்படுத்துவது, காதலைப் புனிதப்படுத்துவது, சாதித் தூய்மை பேசுவது, பெண்மையை வலியுறுத்துவது, ஆண்மை, வீரம் போன்ற வன்முறைக்குரிய வடிவங்களை, அதிகாரங்களைத் தூக்கிப் பிடிப்பது இது எல்லாமே பெண்களுக்கு எதிரான கருத்தியலே. குடும்பம், அரசு, திரைப்படங்கள் ஆகிய மூன்று சமூக நிறுவனங்களுக்கும் இதை மாற்றியமைப்பதில் பங்கு இருக்கிறது.


செப்டம்பர் மாத இனிய உதயம் இதழில் வெளிவந்த எனது கருத்துரையை உள்ளடக்கிய விரிவான கட்டுரை

Oct 5, 2016

குறிப்பிட்டதொரு கூலி உழைப்பை அவமதிக்கும் பார்ப்பனியவாதம்

குறிப்பிட்டதொரு உழைப்பை (தொழிலை) கேவலமானதென்றும், பிறிதொரு உழைப்பை (பணியை) மேன்மையானதென்றும் கருதுவது பார்ப்பனியவாதமாகும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமான பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் சிராஜ்தின் என்பவர் இத்தகைய கருத்தை முன்வைத்து (சீரியலுக்கு வசனம் எழுதி பிழைப்பதை கேவலமானது என்கிறார்) முகநூலில் உரையாடுகிறார். அதிலும் குறிப்பாக அமைப்பின் ஒரு வெகுஜன நிறுவனத்தில் பணிபுரிவதையே முழுநேர அரசியல் பணி என்று சொல்லி எதிர் தரப்பின் கூலி உழைப்பை அவமானப்படுத்திப் பேசுவதென்பது, அவரது தனிப்பட்டக் கருத்தே ஆகினும் அமைப்பிடம் முறையிடுவதற்கான அத்தனை நியாயங்களையும் கொண்டிருக்கிறது.

1.  அமைப்பில் இருக்கும் அதிகாரத்தைக் கொண்டே அவர் இத்தகைய தனிமனித தாக்குதலைத் தொடுக்கிறார்.

2.  அமைப்பில் இருப்பதைப் புனிதப்படுத்தியும், கூலி உழைப்பைக் கேவலப்படுத்தியும் அந்நபர் கருத்து தெரிவிக்கிறார்.

3. தான் சார்ந்திருக்கும் அமைப்பைப் புனிதப்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்தான் அமைப்பை ஒரு தனிப்பட்ட விவாததிற்கு கேடயமாகப் பயன்படுத்துகிறார். ஆகவே, உழைப்பில் மேன்மையானது, கீழானது என்று அந்த அமைப்பு ஏதேனும் நிலைப்பாடு கொண்டிருக்கிறதா என்று கேட்டறிவது அவசியமாகிறது.

4. பொதுவெளியில் நடந்த விவாதமாகையால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை டேக் (Tag) செய்து விளக்கம் கேட்பதற்கான அவசியத்தை அந்நிறுவனப் பணியாளர்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

5.  அப்படி விளக்கம் கேட்கும்போது, இது அந்த தனிநபரின் கருத்து என்று சொல்வது ஓரளவுக்கு ஏற்புடையது. ஆனால், அமைப்பை டேக் செய்வது அத்துமீறல் என்று சொல்வதன் மூலம், சம்பந்தப்பட்ட பிரச்சினையின் ஆதாரக் கேள்வியை / நியாயத்தை இரண்டாம்பட்சமாக்கி அல்லது மழுப்பலாக நிராகரித்து, பாதிக்கப்பட்டவரை அராஜகவாதியாகவும், நாகரீகமற்றவராகவும் முத்திரைகுத்தி, அமைப்பில் உள்ள லும்பன்களைக் காக்கும் செயலாகிறது.

6. இடதுசாரி அமைப்பின் உறுப்பினர் / பணியாளர் என்பவர் ஏதோ தனியார் நிறுவன உறுப்பினர்போல் நாம் கருதிவிட முடியாது. இவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளாக, பொதுவெளியில் இடதுசாரி அமைப்பின் முகங்களாகத் தென்படுகின்றனர் / இயங்குகின்றனர்.

அப்படிப்பட்ட இடதுசாரி அமைப்பின் பணியாளர் ஒருவர் ஒருவகை கூலி உழைப்பைக் கேவலப்படுத்திப் பேசும்போது, அது அத்தகைய உழைப்பு பற்றிய தவறான மதிப்பீடுகளை பொதுமக்கள் மனதில் விதைப்பதாகிறது. இது அந்த தனிநபரின் கருத்தா அல்லது அமைப்பின் மதிப்பீடே அத்தகையாதா என்பதை பொதுவெளியில் விளக்கம் கேட்பது ஜனநாயகப்பூர்வமானதே அன்றி அத்துமீறல் ஆக முடியாது.

அத்துமீறல் என்ற பதில்கள் மூலம் அந்த அமைப்பின் தலைமை நிர்வாகியானவர் பணியாளரின் (‘புரட்சியாளரின்’) தவறை கண்டும்காணாமல் போவதாகப் புரிந்துகொள்ள, அல்லது தம் பணியாளரைக் காக்க நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பணியாளருக்கு கண்டனங்களைப் பதிவு செய்வதே அறிவுநாணயமிக்க செயலாக இருக்க முடியும்.