Jun 19, 2017

காதலுக்குப் பிறகு.....

புனைவு - கொற்றவை.
நன்றி: http://tamizmagazine.blogspot.in/



காதலுக்குப் பிறகு …….

வரலட்சுமி குளித்து முடித்து ஈரத்தலையுடன் வர கொதிக்கும் சாம்பாரில் மல்லித் தழைகளைக் கிள்ளிப் போட்டு அமத்தியபடி மதிவாணன் “என்ன லட்சு குளிச்சுட்டியா… சரி உக்காரு” என ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டான் மதி.  மேடு தட்டிய தன் வயிற்றை பிடித்தபடி மெல்ல அமர்ந்தாள் லட்சு. ஹேர் டிரையரை எடுத்து லட்சுவின் ஈர முடிகளின் மேல் சூடான காற்றை லாவமகாக காட்டினான் மதி.

“இன்னைக்கு என்ன டிஃபன் மதி”

“இட்லி சாம்பார்பா”

“போதும் மதி சட்னி கிட்னியெல்லாம் வேண்டாம்”

“நல்ல புருஷன் நல்ல பொஞ்சாதி” என்றபடி வந்தாள் வசந்தி.

லட்சுமி மதி சிரித்துக்கொள்ள “அம்மா” என்றபடி வசந்தியின் இடுப்பிலிருந்து இறங்கி ஓடினாள் காதல்.

“காது குட்டி இட்லி சாப்பிட்டீங்களா” என தாடையை பிடித்து ஆட்டியபடி கேட்டாள் வரலட்சுமி

“ம்ம் சாப்பிட்டேம்மா பப்பு தொட்டு கொடுத்தாங்க அம்மூ”

“செல்லம்” என முத்தமிட்டாள் வரலட்சுமி

“குட் கேர்ள் அப்ப அப்பா சொன்னபடியே இப்ப டி.வி போடுறேன்” என டி.வியை ஆன் செய்தான் மதி.

“அப்பா ஹிமாமாரி ஹிமாமாரி”

“சரி சரி”

தொலைக்காட்சியை மிடுக்கிவிட்டு மீண்டும் லட்சுவின் ஈர முடிகளை சுடு காற்றில் ஆடவிட்டான் மதி.

“அப்புறம் என்னடி முடிவு பண்ணி இருக்க… மாசம் ஏழாச்சு…”

“பச்… அம்மா…”

“ஆமாண்டி முதல் குழந்தைக்கும் இதே மாதிரிதான் எட்டா நடந்து… பாட்டா படிச்சு…. உசுர வாங்காதீங்கடி…”

மதி தன் விரல்களை லட்சுவின் முடிகளுக்குள் ஓட்டினான் “ம்ம்ம் நல்லா உலர்ந்திருச்சு” என தொங்கும் வயரை சுருட்டி அலமாரியில் வைத்தான்.

“அத்தை சாப்பிடலாம் பசிக்குது”

“எடுத்து வைக்குறேன்… என் கேள்விக்கு பதில் சொல்லுங்க மாப்ள”

சிரித்தபடி தட்டுகளை எடுத்து மேஜையில் வைத்தான் மதி. பாட்டிலில் தண்ணீர் பிடித்து வைத்தாள் வரலட்சுமி

“ஹிமாமாரி எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மண்ணுல விளையாடாத மண்ணுல விளையாடாதன்னு” என்று தொலைக்காட்சிப் பாட்டி மிரட்டிக் கொண்டிருக்க

“அம்மா அம்மா அம்மூ டீவில”

ஹாட் பேக்கை எடுத்து வந்து மேஜையில் வைத்த வசந்தி “இந்த வீட்ல நண்டு சிண்டுக்குக் கூட நான் தொக்கு”

மதி சாம்பாரை கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்தான்.

“அத்தை உக்காருங்க”

“நீங்களும் உக்காருங்க மாப்ள”
மூவரும் அமர்ந்தார்கள். இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

“அம்மா அந்த சாம்பாரை இப்படித் தள்ளு”

சாம்பாரை ஊற்றி ஒரு வாய் வைத்த லட்சு “மதி இன்னைக்கு சாம்பார் சூப்பர்… ம்ம் என் டிரெயினிங் வீண் போகலை”

“ம்ம் அப்படியா சொல்ற… எனக்கென்னமோ கொஞ்சம் புளி கூட ஊத்திட்ட மாதிரி இருக்கு என்றான் இட்லியை மென்றபடி

“இங்க நான் என்ன பேசிக்கிட்டிருக்கேன்… நீங்க உப்பு புளி பிரச்சினைய..”

“ஐயோ அம்மா வளைகாப்புத்தான… வச்சுக்குவோம்… ஆனா ஆளுங்க… கூட்டம்.. சடங்கு… சம்பிரதாயம் இதெல்லாம் வேண்டாம்… எத்தனை தடவை சொல்றது”

“என்ன மாப்ள”

“அத்தை உங்களுக்கே தெரியும்… எங்களுக்கு இந்த சாமி… சடங்கு சம்பிரதாயத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை… போன தடவையே உங்க மனசு திருப்திக்காகத்தான் ஒத்துக்கிட்டோம்…”

“மாப்ள நான் என்ன ஐயர கூப்பிட்டு ஹோமம் கீமமெல்லாம் பண்ணனும்னா சொல்றேன்… அக்கம் பக்கம்… நம்ம சொந்தங்கள்ல சொல்லிவிட்டு… கை நிறைய வளையல் போடச் சொல்லி… நல்லா வாழுற பொம்பிளைங்ககிட்ட ஆசி வாங்க நினைக்குறது ஒரு குத்தமா”

வரலட்சுமி சாப்பிட்டு எழுந்தவள் தட்டை பேசினில் போட்டு கை கழுவ

“என்னடி மறைமுகமா கைய கழுவிட்டேன்னு சொல்றியா”

“கை காஞ்சிடும் பரவால்லையா… அப்புறம் அது தரித்திரம்னு புலம்ப மாட்டியே”

“ம்க்கும்… “ என எழுந்தவள் தட்டை போட்டு கை கழுவினாள். “இப்ப நீ எதுக்கு கை கழுவுன”

மதியும் கை கழுவி வந்து ஆஃபீஸ் கிளம்பத் தேவையான ஃபைல்களை எடுத்து வைத்தான்.

“பிச்கூ… பச்சக்… ஹ ஹ ஹா… ஜெம்ஸ் சாக்லேட் பந்துடன் ஒரு பிச்கூ பொம்மை இலவசம்…”

“அம்மா அம்மா ஜெம்ஸ்… அப்பா”

“சரி காதல் குட்டி அப்பா ஆஃபீஸ்லருந்து வரும்போது வாங்கிட்டுவ் வரேன்”

உம்மா! கொடுத்து சைக்கிளில் உட்கார்ந்து அரையை வட்டமிட்டாள் காதல்

ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியின் ஒலியை குறைத்த வசந்தி
“ஏண்டி புள்ளதாட்சி பொம்பளைக்கு நிறைமாசம் நெருங்கும்போது வளையல் போடுறது பழங்காலத்துல இருந்தே இருக்கு… அதுவுமா உங்க கொள்கைக்கு இடிக்குது…”

“அம்மா அது இடிக்கல… ஏன் வளையல் போட சொல்றாங்கன்னு எனக்கும் தெரியும்… ஆனா ஆளுங்கள கூப்பிடுறதுதான் எனக்கு புடிக்கல… இங்க அங்கன்னு சந்தனம் பூசுறது குங்குமத்தை நெத்தில பெயிண்ட் அடிக்குறது… இதெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது…”

“அதுவுமில்லாம நல்லா வாழ்ந்த பொம்பள வாழாத பொம்பளைன்னு வேற லிஸ்டு போடுறீங்க… குழந்தை பிறக்காத பொம்பளைங்க இருந்தா மலடின்னு கூப்பிட மாட்டீங்க… இதெல்லாம் தேவையாத்த… “

“ம்ம்ம் அதான… எல்லாம் உங்கள சொல்லனும் மாப்ள… ஆம்பிளை மாதிரியா நடந்துக்குறீங்க நீங்க”

“ஏந்த்தை  ஆம்பிளைக்குன்னு தனி நடை இருக்கான்ன”

“ம்க்கும்… என்னமோப்பா… நான் வாழ்ந்த காலத்துல அப்படித்தான்… பொம்பிளைங்க பைய புருஷன் பின்னால நடக்கனும் ஆம்பிளைன்னா வேகவேகமா முன்னால நடக்கனும்… இங்க ரெண்டும் ஒரே மாதிரில்ல நடக்குது”

சிரித்த மதி “என்னை அன்பா பார்த்துக்க ஒருத்தரும்… என் கிட்ட இருக்குற அன்பை எந்த நடிப்பும் இல்லாம… கூச்சமும் இல்லாம காட்ட எனக்கொருத்தரும் தேவைப்பட்டாங்க… அதேதான் உங்க பொண்ணுக்கும்… அதுக்காகத்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…. நடை பழக இல்லத்த”

“ஆமாமா… அதான் தெரியுமே உங்க அன்பு… கிறுக்கு என்னான்னு… ஏன் மாப்ள கூப்பிடுற மாதிரியா புள்ளைக்குப் பேரு வச்சிருக்கீங்க…”

“ஏந்த்தை காதல் சுருக்கமாத்தான இருக்கு”

“ஐயோ அந்தப் பேரை… புள்ள வெளிய விளையாடும்போது காதல் ஏய் காதல்னு கூப்பிட்டா ஊரே ஒருமாதிரி பார்க்குது மாப்ள

“ஏந்த்தை காதல்ங்குறது அப்படி ஒரு கெட்ட வார்த்தையா என்ன”

வரலட்சுமி சிரித்தவளாக எழ

“என்ன லட்சு”

“ஒண்ணுமில்லப்பா இளனி குடிக்கலாம்னு”

“ஏன் என்கிட்ட கேட்டா நான் எடுத்து தரமாட்டனா”

சிரித்து தலையாட்டியபடி வரலட்சுமி அமர மதி இளநீரின் கொண்டையை சீவியபடி

“அத்தை காதல்னா என்ன அன்புதான… அன்புன்னு பேர் வச்சுக்குறதில்லையா… அதுமாதிரி இது காதல்… அவ எங்க காதலுக்கு அடையாளமா பொறந்திருக்கா… எங்க காதல் சின்னம்”

“நல்லா வியாக்கியானம் பண்றீங்க…”

“இதென்னமா கொடுமையா இருக்கு… உன் கேள்விக்குத்தான பதில் சொன்னாரு”

“ஆத்தா உம் புருஷன நான் ஒண்ணும் சொல்லலத்தா… சரி வளைகாப்புக் கதை என்ன”

“ம்ம்ம் நம்ம குடும்பக் கதைதான்…”
“அடியேய்”

“அம்மா என் புருஷனும் நீயும் அத்தையும் போட்டுவிட்டா போதும்… சும்மா அவங்கள இவங்களன்னு கூப்பிட்டு… வர்ரவங்களுக்காக தாலிய போடு… மெட்டிய போடும்ப… அப்புறம் பட்டு புடவை கட்டும்ப… எல்லாத்துக்கும் மேல நகை ஸ்டாண்டு மாதிரி வந்து நிக்கச் சொல்லுவ…”

“ஏண்டி ஒரு நாள் போட்டா குறைஞ்சா போயிடுவ…”

“என் புருஷனோ… ஏன் என் மாமியாரோ கூட அதைப் பத்தி கவலைப்படல… நான் ஏன் மத்தவங்களுக்காக கண்டதையும் மாட்டிக்கனும்…”

“அப்ப அவங்க ஒத்துக்கலன்னா இதையெல்லாம் மாட்டிக்குவல்ல… என் பேச்சை மட்டும்”

“இல்ல அவரு எனக்கு புருஷனாவே ஆகியிருக்க முடியாது….”

”ஐயோ ஐயோ… உன்னால அவரு கெட்டாரா இல்ல அவரால நீ கெட்டியா… கடவுளே…”

“அவரலாதான் நாங்க கெட்டோம்த்தை…”

“இதுக்கு என்ன எடக்கு வச்சுருக்கீங்க மாப்ள”

“அவருதான எல்லாரையும் படைச்சாருன்னு சொல்றாங்க…”

“இல்ல சாமி… இல்ல.. உங்க ரெண்டு பேரையும் சத்தியமா அவரு படைக்கல…”

“அப்ப அவரு படைக்காதவங்களும் இந்த பூமில பிறந்திருக்காங்கன்னு ஒத்துக்குறீங்க… ம்ம்…”

“மாப்ள அந்த வெள்ளைத் தாடிக்காரர படிச்சுட்டு ஏன் மாப்ள இப்படி வம்பு பண்றீங்க…”

“ஒரு வெள்ளை தாடிக்காரன் இல்லத்த மொத்தம் மூணு பேரு…”

“அம்மூ அம்மூ எனக்குப் பசிக்குது…”
“என்னடி வேணும் என் தங்கம்” என காதலை தூக்கினாள் வசந்தி

“எனக்கு எனக்கு க்ரீம் பிச்சி தர்றியா…”

”காதல் குட்டி க்ரீம் பிச்சி அதிகமா சாப்பிட்டா பல்லெல்லாம் சொத்தையாத்தான் வளரும்…”

“இல்லம்மா ஒண்ணே ஒண்ணு”

“சரி சாப்பிடு உடனே வாய் கொப்பளிக்கனும்…”

“ம்ம்ம் சரிம்மா”

அடுக்களை சென்று வசந்தி பிஸ்கட்டை எடுத்து கொடுக்க

“அம்மூ இன்னொண்ணு” என கண்ணடித்து கிசுகிசுத்தாள் காதல்

“உங்கம்மா பார்த்தா…. சரி இந்தா… வாங்கிட்டு அந்தப்பக்கமா ஓடிடு”

பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு ஓடினாள் காதல்

“கடைசியா என்னதான் சொல்றீங்க..”

“அத்தை நமக்குள்ள வச்சுக்குவோம்… யாரையும் கூப்பிட வேண்டாம்… நீங்க அம்மா அப்பா போதும்…”

“என்னமோ போங்க… அந்த கறுப்பு சட்டைக்காரன் மட்டும் உயிரோட இருந்தான்.. இந்நேரம் நான் நேரா அவன் வீட்டுக்கே போயிருப்பேன்…”

பையை எடுத்து தயார் செய்து ஷூவுக்கு பாலீஸ் போட்டான் மதிவாணன்

“ஏன்யா உனக்கு சாமி… சடங்கு… இதுல எல்லாம் நம்பிக்கை இல்லன்னா நீ உன்னோட வச்சுக்க வேண்டியதுதான… எதுக்குயா மேடை போட்டு பேசி… புஸ்தகமெல்லாம் போட்டு எங்க வூட்டு புள்ளைங்கள கெடுத்தன்னு கேட்டிருப்பேன்…”
”அப்போ.. சாமி இருக்கு… இந்த பூஜை பண்ணுங்க… மண் சோறு சாப்பிடுங்க… அவனைத் தொடாதீங்க… இவள வீட்டுக்குள்ள விடாதீங்க… தீட்டுன்னு அவங்க ஏம்மா மேடை போட்டு பேசுனாங்க.. புஸ்தகமெல்லாம் போட்டாங்கன்னு அவரு பதிலுக்கு கேட்டிருப்பாரு…”

“நீங்கல்லாம்… ச்சே… போடி…”

சரித்த மதி “நான் ஆஃபீஸ் கிளம்புறேன்… லட்சு நீ ரெஸ்ட் எடு… மறக்காம ஜூஸ் குடி… நான் சாய்ந்திரம் வந்தப்புறம் வாக் போகலாம்”

“சரிடா செல்லம்” என லட்சு இரு கைகளை விரிக்க

அவள் வயிறு அமுங்காதவாறு மென்மையாக அவளைக் கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் வைத்தான் மதி. லட்சு இடது கன்னத்தை திருப்ப.. ஒரு செல்லக் கடி கடித்தான் மதிவாணன் “ஸ்… அம்மா”

வசந்தி சிரித்துக் கொண்டாள்

காதலுக்கு முத்தம் கொடுத்து “பைடா குட்டி…”

“பைப்பா… சாந்திரம் ஜெம்ஸ்… பிச்சுக்கூ… மறந்துடாத…”

“பிச்சுக்கூ… ” என ஐந்து விரல்களை குமித்து திறந்து காட்டிவிட்டு சென்றான் மதிவாணன்

“சரிடி நான் குழந்தைய தூங்க போட்டுட்டு மார்கெட் போயிட்டு வரேன்…”

“ம்ம்ம் சரிம்மா..” என தன் அறைக்கு சென்றாள் வரலட்சுமி.

இரண்டு தலையனைகளை முதுகிற்கு முட்டு கொடுத்து மெல்ல சாய்ந்து உட்கார்ந்தாள்.

“உன்னால அவரு கெட்டாரோ… அவரால நீ கெட்டியோ…..” அம்மாவின் கேள்வி அவள் நினைவுகளைக் கிளறியது.

II

புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்க கூட்டம் கூட்டமாக மக்கள் வேடிக்கைப் பார்த்து சென்றனர். ஒரு புத்தகக் கடையில் “பெண் ஏன் அடிமையானாள்” என கேட்டபடி கையில் தடியோடு புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான் ராமசாமி.

டாவின்சியின் தூரிகைக்காக கணக்கான புன்னகையோடு அமர்ந்த மோனலிசா போல் அல்லாது ஆட்டம் காட்டி ஓய்ந்த குழந்தையின் சிரிப்பு அது.

இரண்டு கைகள் அந்தப் புத்தகத்தை எடுத்தன.

“ஓ சாரி… நீங்களும் எடுக்குறீங்களா…” சொன்ன குரலை நிமிர்ந்து பார்த்தாள் வரலட்சுமி

வாரப்படாத தலை. குறவனின் கண் போன்ற லேசான பழுப்பு நிறக் கண்கள். அளவான மூக்கு… சிறிய கறிய உதடுகள்… பூப்போட்ட வெள்ளை சட்டை.. கருப்பு ஜீன்ஸ்… உட்லண்ட் ஷூவோடு நின்றிருந்தான் ஒருவன்.

“பரவால்ல இருக்கட்டும் நான் வேற காபி வாங்கிக்குறேன்” என்றவள் கவுண்டரை நோக்கி நடந்தாள்.

“பெண் ஏன் அடிமையானாள் வேணும்”

“அங்க இருக்குமே”

“அதை இவரு எடுத்துக்கிட்டாரு”

“அப்படியா… சரி இருங்க வேற காபி இருக்கான்னு பார்க்குறேன்…” என தேடியவன் “அடடா ஒரு காபிதான் இருந்திருக்கு…”

”என்னங்க இப்படி சொல்றீங்க…”

“சாரி மேடம்… நாளைக்கு வந்துடும்…”

“பச்… நான் நைட்டு ஊருக்குப் போறேன்….சரி விடுங்க நான் பார்த்துக்குறேன்” என கடையை விட்டு வெளியே வந்து நடந்தாள்.

பணத்தை கொடுத்து புத்தகத்தை வாங்கி வேகமாக அவளைப் பின் தொடர்ந்தான் மதி

“மேடம்”

“ம்…” என திரும்பினாள் வரலட்சுமி

“இந்தாங்க…”

“நீங்க ஏன் எனக்கு புத்தகம் கொடுக்குறீங்க…”

“இல்ல ஆசைப்பட்டீங்க.. முக்கியமான புத்தகம் வேற… அதான் என்னோட பரிசா…”

“எதுக்கு பரிசு…. நான் கேட்டனா”

“ஐயோ தப்பா நினைக்காதீங்க… ஊருக்குப் போறதா சொன்னீங்க… நான் இங்கதான் இருப்பேன்… நாளைக்கு வந்து வாங்கிக்குவேன்…”

‘நானும் ஊர்ல வாங்கிக்குறேன்… ம்ம் தள்ளுங்க… ஆளைப் பாரு ஆளை…”

மதிவாணன் வருந்தி இடது பக்கம் திரும்பினான்

“ஆசைப்பட்டாளேன்னு கொடுத்தா… ச்சே” எனப் போக

“எக்ஸ்கியூஸ் மீ” எனக் குரல் கேட்க. மதிவாணன் திரும்பினான்.

“கொடுங்க”

மதிவாணன் புரியாமல் பார்க்க “இல்ல ஊர்லையும் கிடைக்காமத்தான் நான் இங்க வாங்கிடனும்னு வந்தேன்…”

புன்முறுவலுடன் “இந்தாங்க…”

“கையெழுத்துப் போட்டுக் கொடுங்க நான் அன்பளிப்பாவே வச்சுக்குறேன்…”

“எதுக்குங்க வம்பு நீங்க காசு கொடுத்துடுங்க…”

சிரித்த வரலட்சுமி “எவ்வளவு”

“40 ரூபாய்”

100 ரூபாயை எடுத்து கொடுத்தாள் வரலட்சுமி

”சாரிங்க என்கிட்ட சில்லறை இல்ல”

“ம்ம்ம் .. சரி காண்டீன்ல மாத்திக்குவோம்… காஃபி சாப்பிடலாம்ல…”

“ம்ம் சாப்பிடலாம் காஃபிக்கான காசைக் கழிச்சுட்டு மிச்சத்தைக் கொடுத்தா போதும்….”

வரலட்சுமி சிரித்தபடி போனாள். பெண் ஏன் அடிமையானாள் என தெரிந்துகொள்ள அன்று லட்சுமி வாங்கிய புத்தகம் உண்மையில் அவளுக்கு ஒரு மகத்தானக் காதலனைப் பரிசளித்தது.

III
காதல் பிறந்தாள். 3 வருடம் கழித்து இப்போது காதலுக்குப் பிறகு வரலட்சுமி மீண்டும் கருவுற்றிருந்தாள்.

“ஏன் லட்சு முதல் குழந்தைக்கு காதல்னு பேர் வச்சுட்டோம். அடுத்த குழந்தை ஆண் குழந்தையா இருந்தா அன்புன்னு பேர் வச்சுடலாமா… பொண்ணா இருந்தா நேயா… சரியா… உனக்கு ஒகேதான..”

“பையனா இருந்தா நேசன்னு வச்சுக்கலாம்… ஆனா எனக்கு பையன் வேண்டாண்டா…”

அவளது கண்களை தன் கண்களால் முத்தமிடுவது போல் பார்த்த மதிவாணன்அவள் தாடையைப் பிடித்து சற்றே நிமிர்த்தி “லட்சு உனக்கு சின்ன வயசுல நடந்ததை நினைச்சு குழப்பிக்காத… நாம எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லி வளர்த்தா ஒரு தப்பும் நடக்காது”

அவன் தோளில் சாய்ந்து “சரி மதி”

அவள் கண்ணீரை துடைத்தான் மதிவாணன்.

நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் வந்து அச்சமூட்டியது.

III

அப்போது அவளுக்கு வயது 8 தம்பிக்கு 6. பொம்மைகளை வைத்து விளையாடியபடி இருக்க

“அக்கா அக்கா இங்க பாரேன் எனக்கு எப்படி இருக்கு… எங்க உனக்குக் காமி…”

“என்னக்கா இது உனக்கு வேற மாதிரி இருக்கு…”

“ஆமாம் தம்பி உனக்கு மூணு இருக்கு… எனக்கு ஒண்ணுதான் இருக்குல்ல….”

“அக்கா அப்ப நீ எது வழியா ஒண்ணுக்குப் போவ…”

“இது வழியாத்தாண்டா…”

“உனக்கு நீளமா இல்லையே… அப்ப ஒண்ணுக்கு கீழ வருமா…”

“ம்ம்ம் வருதே…”

“உனக்கு இப்படியே இருக்குமா சுருங்குமா…”

“ஏண்டா…”

“இல்ல எனக்கு இப்ப… தொட்டுப் பாரேன் எப்படி சுருங்கி காஞ்சு போன மாதிரி இருக்குன்னு…”

“ஆமாண்டா…”

“சில நேரத்துல இப்படி ஆகிடுதுக்கா….”

“சரி விடு… சரியாகிடும்… நான் வெளிய போய் விளயாடப் போறேன்”

பாவாடையை சரி செய்து கொண்டு ஓடினாள் வரலட்சுமி

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி தன் வயிற்றைத் தடவினாள் வரலட்சுமி. பனிக்குடத்தில் உப்புப் பரவியது.

“அக்கா வர்றியா இன்னைக்கும் தொட்டு தொட்டு விளையாடலாம்…”

“போடா நீ அழுத்தி தொடுற வலிக்குது…. இனிமேல் நான் உன்கூட விளையாட மாட்டேன்… போடா…”

IV

குலுங்கி குலுங்கி அழுதாள் வரலட்சுமி… “இப்ப எனக்குப் பையன் பிறந்தா அவனும்… என் பொண்ணை அப்படி…”

“நான் தெரியாமத்தான அவனுக்கு … தம்பியும் தெரியாமத்தான அப்படி கேட்டான்…”

“ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கனும்… இல்ல மத்தவங்க வீட்லையும்…”

“ஏன் அம்மா அப்பா சின்ன வயசுலையே அதைச் சொல்லிக் கொடுக்கல…”

“ஆம்பிளை பொம்பிளைக்கு உறுப்பு வேற வேற… ஏன் என்னன்னு அம்மா அப்பா சொல்லி இருந்தா தம்பிக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்திருக்குமா…”

“இன்னைக்கு நான் குத்த உணர்ச்சில துடிக்குற மாதிரி… எம் பொண்ணு… ம்ஹூம்…”

“லட்சு இது ஒரு சாதாரண விஷயம்…. உடல் உறுப்புகளை பத்தி தெரிஞ்சுக்குற ஆர்வத்துல உன் தம்பி அக்காங்குற முறைல உன்கிட்ட அப்படி கேட்டிருக்கான்… நீயும் தம்பிதானன்னு சொல்லிக் கொடுத்திருக்க… விடு… இதுக்கெதுக்கு தினம் தினம் அழுதுகிட்டிருக்க….”

“நாம நம்ம பிள்ளைங்களுக்கு அந்த வயசு வரும்போது எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்ப்போம்… அழாத படு… எவ்வளவு புத்தகங்கள் படிக்குற இந்தச் சின்ன விஷயத்தை உன்னால தாண்ட முடியலையா என்ன லட்சு” என அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளைப் படுக்க வைத்தான்.

IV

நேசன் ஓடி வந்தான் “அம்மா அம்மா… ஏம்மா நான் டவுசர் போடுறேன்.. அக்கா மட்டும் ஸ்கர்ட் போடுறா…” ஆஃபீசிலிருந்து வந்து காலணியை கழட்டிய வரலட்சுமியிடம் கேட்டான் நேசன்.
வரலட்சுமி சற்று அதிர்ச்சியுடன் பார்த்தவள் “அக்காகிட்ட இதைப் பத்தி கேட்டியா நேசன்”

“இல்லம்மா உன்கிட்டத்தான் கேக்குறேன்… ஏம்மா அக்கா ஒண்னுக்கு போற மாதிரி ஈசியா டிரஸ் போடுது… நான் மட்டும் ஏம்மா… அவசரமா வரும்போது…. இந்த டவுசர் கஷ்டமா இருக்கும்மா… சில நேரத்துல ஜிப்புல மாட்டிக்குதும்மா…”

ஃபோனை எடுத்தாள் வரலட்சுமி.

புத்தகங்கள் போஸ்டர்களோடு வந்தான் மதிவாணன்

“நேசன் குட்டி… காதல் செல்லம் இங்க வாங்க இங்க வாங்க… அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாருங்க….”

“என்னதுப்பா”

“குட் டச் பேட் டச்” என்ன புக்பா இது

நேசனை தூக்கி மடியில் வைத்தவனாக மதிவாணன் “ம் இதுதான் உங்க உடம்பை பத்தி தெரிஞ்சுக்கத் தேவையான புத்தகம்”

“ஹை”

“அப்பா இது நான்…. இது அக்காவா”

“ஆமாம் நேசன்… காதல் பார்த்தியா இது… ஆம்பிளைங்க உடம்பு… அவங்க உடம்புல…”

“நேசன் இது பொம்பிளைங்க உடம்பு…”

வண்ண வண்ணப் படங்கள் போடப்பட்டிருந்த புத்தகங்களை தங்கள் மேல் போட்டபடி பிள்ளைகள் உறங்கிப் போயிருந்தார்கள்.

“அம்மா ஜிப்புல மாட்டிக்குதும்மா… அக்காக்கு அந்தப் பிரச்சினை இல்லல்ல…” என்று நேசன் கேட்டது நினைவுக்கு வர “ஒருவேளை தம்பிக்கும் அதனாலதான் எனக்கு எப்படி இருக்குன்னு…. ”

பதில் கிடைத்தவளாக வரலட்சுமி

“மதி நான் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ‘நோ யுவர் பாடி’ன்னு வகுப்பெடுக்கலாம்னு இருக்கேன்”  தனது கைகளை அவன் தோளின் மீது போட்டு அவன் முதுகில் தன் முகத்தை பதித்தாள் வரலட்சுமி

“வேலைக்கும் போயிட்டு எப்படி லட்சு” அவளை நோக்கி திரும்பினான் மதிவாணன்

“மாசத்துல ஒரு நாள் லீவு எடுக்கலாம்..  அந்த டைம்ல எடுக்குறேன்”

“உன் உடம்பு அதுக்கு ஒத்துழைக்கும்னா செய்யு… கிடைக்குற ஒரு நாளையும்… அலைய முடியுமான்னு பார்த்துக்கோ”

“முடிஞ்ச அளவுக்குப் பண்றேன்…”

“ம்ம் சரி…” அவளை தன் நெஞ்சின் மேல் இறுக்கிக் கொண்டான் மதி. அவனின் வெம்மையான மூச்சுக் காற்று அவளின் நெற்றியை சூடேற்றியது.

தன் இடதுகாலை மதிவாணனின் தொப்பையின் மேல் போட்டபடி அவனுள் ஒடுங்கியவளாக அவன் கன்னத்தை ஈரமாக்கியவாறு அன்றிறவு நிம்மதியாக உறங்கினாள் வரலட்சுமி.

காதலும் நேசனும் அருகில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.


2014 july (16.7.14)
https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78ZHZid2o4WHdkVnc/view