Jan 31, 2018

நமது உடனடி நடவடிக்கைகள்
- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்

சோஷலிச சகாப்தத்தில் சாதி எப்படி ஒழிக்கப்படும் என்பதை இதுவரை விவாதித்தோம், ஆனால் அதற்காக முதலில் சோஷலிசத்திற்காகப் போராடுவோம், பின்னர் சாதியமைப்பு தானாக மறைந்துவிடும் என்பதல்ல எங்களது வாதம். சோஷலிசத்திற்கான போராட்ட நடைமுறையின் தொடக்கத்திலிருந்தே சாதியப் பிரச்சினை நமது செயல்திட்டத்திலோ அல்லது அதற்கான உடனடி நடவடிக்கைகளோ இல்லாது போனால், புரட்சியை வழிநடத்தும் வர்க்கமானது, சாதியப் பாகுபாடு மற்றும் பூர்ஷுவா சாதிய தேர்தல்முறை மற்றும் சீர்திருத்தவாத தலைவர்கள், ஆதரவாளர்களின் பரப்புரைக்கு பலியாவது தொடரும்.  தலித் மக்களின் பெருவாரியான மக்கள் கூட்டமானது அரைத் தூக்கத்திலிருப்பது தொடரும், ஏதோவொரு சாதித் தலைவரை குறிக்கோளின்றி பின்தொடர்வது தொடரும். பாட்டாளிகளின் துணை வர்க்கங்களிலும் இதே நிலைத் தொடரும். இவ்வாறாக, சோஷலிச சகாப்தத்தில் இறுதியான சாதி ஒழிப்பு நிகழும் என்றாலும், வர்க்கப் போராட்டத்திற்கான தயாரிப்பின்போதும், அதன் வளர்ச்சியின் போதும் சாதியின் செல்வாக்கைக் குறைக்கும் நனவுபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் (அப்போது வர்க்கப் போராட்ட எழுச்சிக்கு அதன் சொந்த புறநிலை அழுத்தங்கள் கூடும், வர்க்க அணிதிரட்டலானது, சாதிய அணிதிரட்டலை பின்னுக்குத் தள்ளும்).

முதல் நடவடிக்கை, சோஷலிசத்தின் மூலம் சாதியமைப்பிற்கான தீர்வை, சாதி ஒழிப்பிற்கான சோஷலிச வேலைத் திட்டத்தை தொடர்ந்து, தீவிரமாகப், பரவலானப் பரப்புரைகள் மூலம் பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பலவீனத்தாலும், திருத்தல்வாத தவறுகளாலும் (குறிப்பிட்ட அளவு தெளிவின்மையும் அதற்குக் காரணம்) உழைக்கும் மக்கள் கூட்டம், குறிப்பாக தலித் மக்களுக்கு சாதி ஒழிப்பிற்காக கம்யூனிஸ்டுகள் பரிந்துரைக்கும் பாதையென்ன என்பது சுத்தமாக தெரியாது. இந்தப் பணிக்காக,  பாட்டாளிவர்க்கக் கட்சிக்கு, கூர்மையான, செயலூக்கமுடைய கம்யூனிஸ்ட் பிரச்சாரகர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தேவைப்படுவார்கள், துண்டறிக்கைகள்-கையேடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சிறிய கல்விக் குழுக்கள் ஆகியவைத் தேவைப்படும். ஆனால், இப்போதைக்கு இந்தியளவிலான ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவதேக் கூட தொலைதூரக் கனவாகத் தெரிகிறது. முடிவற்ற முயற்சிகள் மூலம் அதனை முதலில் அருகில் கொண்டு வரவேண்டும். ஆனால், ஒருவேளை கம்யூனிஸ்டுகள் ஒரு குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ தனித்தனியாகத் திரண்டிருந்தாலும், இந்தப் பணியை முதலில் கையிலெடுக்க வேண்டும்.  சில நடவடிக்கைகளை இன்றே கூட எடுக்க முடியும். இன்றைய நிலையிலேயே பிரச்சார அளவிலும், ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்க அளவிலும் வைக்கக்கூடிய சில கோரிக்கைகளும் உள்ளன.

புரட்சிகர அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இயக்கும் புரட்சிகர சங்கங்கள், மாணவர்-இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், கிராமப்புற தொழிலாளர் அமைப்புகள் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகள் அனைத்தும் தங்களின் வேலைத் திட்டத்தில் சாதியப் பிரச்சினையைச் சேர்க்க வேண்டும், சடங்கு முறையாக இன்றி, இந்தப் பிரச்சினையை முன் வைத்து தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாட்-பாண்ட் டோடக் போஜ் (சாதியை உடைப்பதற்கான உணவுத் திருவிழாக்கள்) நடத்த வேண்டும்,  தொழிலாளர் இயக்கங்களில், தலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், தலித் தொழிலாளர்கள் இயக்கத்தில் (துப்புரவு தொழிலாளர் இயக்கம் போன்று) உற்சாகத்துடன் பங்கெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்களைக் கொண்டுவர விடா முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறத் தொழிலாளர்களை ஒருங்கமைக்கும்போது, அவர்களுக்கிடையிலான சாதி அடிப்பிடையிலானப் பிரிவினைகளை உடைப்பதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கலாச்சார அமைப்புகள், தங்களுடைய பரப்புரை நடவடிக்கைகளில் சாதி ஒழிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  ஜனநாயக உரிமை இயக்கமானது, சாதிய ஒடுக்குமுறை மற்று கப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான சட்டபூர்வ போராட்டங்களுகு அப்பால் உன்மை கண்டறியும் குழு, கையெழுத்து இயக்க, எதிர்ப்பு கடிதங்கள் எழுதுவது என்னும் சடங்குபூர்வ அறிவார்ந்த வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து, பரந்த அளவில் இயக்கங்கள் மூலம் இடையீடு செய்யத்தக்க வகையில் தன்னை ஒருங்மைத்துக் கொள்ள வேண்டும். 

உலகளாவிய, சமச்சீரான, இலவசக் கல்வி மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது நீண்ட காலத்திற்கான கோரிக்கை. ஆனால், இந்த முழக்கத்தின் அடிப்படையில் மாணவர்கள், அனைத்து சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக ஒருங்கமைக்கப்பட வேண்டும், தலித் இளைஞர்களை இணைக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில், சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பிரச்சினைக்குரியதாக்கி எதிர்க்க வேண்டும். இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, கடந்த 60 ஆண்டுகளின் உண்மையை, புள்ளிவிவரங்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன் வைத்து நமது நிலைப்பாட்டைப் பேச வேண்டும். கடந்தகாலத்தில் பெறப்பட்ட இந்த ஜனநாயக உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை, அதை நீக்க வேண்டும் என்றும் கோரவில்லை, அதன் நடைமுறையில் நடக்கும் ஊழலை எதிர்க்கிறோம். அதேபோல், இந்த கோரிக்கையானது பூர்ஷுவா ஜனநாயக மாயை உருவாக்கவே பயன்படுகிறது, பரந்த ஏழை தலித் மக்களுக்கு இது எந்த விதத்திலும் பொருளுள்ளதாக இல்லை; மேலும், பொது மக்கள் மட்டுமின்றி, தலித் சாதிகளிடையேகூட மோதலும், பிரிவினையும் ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்த வேண்டும். அனைத்து சாயல்களிலும் வரக்கூடிய பூர்ஷுவா தலித் அரசியல் மற்றும் பூர்ஷுவா தலித் அறிவுஜீவிகளின் வாதங்களுக்கு தர்க்கப்பூர்வமாகவும், பொறுமையாகவும் பதிலளித்து நமது பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நாளிதழ்களில் சாதியடிப்படையிலான வரன் தேடும் விளம்பரங்கள் பிரசுரிப்பதற்குத் தடை கோர வேண்டும். கலப்பு மணம் மற்றும் காதல் திருமணத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்க வேண்டும்; குடும்பத்தின் பாதிச் சொத்தை பெண்களுக்கு வழங்குவதற்கு சட்டபூர்வமான கோரிக்கை  வைக்க வேண்டும்.

சாதி அமைப்புகள், சாதிக் கூட்டங்கள், கப் மற்றும் சாதி பஞ்சாயத்து மற்றும் அவர்களின் தீர்ப்புகள் இவற்றின் மீது சட்டபூர்வமான தடை கோரி இயக்கங்களை ஒருங்கமைக்க வேண்டும்.

பொது சமகம்களுக்கு (மதக் கூட்டங்கள்) தடை கோர வேண்டும், ஆசிரமங்கள், கோவில்களின் பாரம்பரிய கண்காட்சிகளுக்கு, திருவிழாக்களுக்கு சிறப்பு வரி விதிக்கக் கோர வேண்டும், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் மதச் சடங்குகளை நடத்த தடை கோர வேண்டும்.

தலித் சாதிகளுக்கென தனியான அமைப்பை உருவாக்குவதை நாங்கள் முறையற்றதாகவே கருதுகிறோம், ஆனால் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு போதிய பலம் இருப்பின், சாதி ஒழிப்பு மன்றங்களை அமைத்து, தலித்துகள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுள்ள மற்ற சாதி மக்களையும் அதில் இணைக்க வேண்டும். இந்த மன்றமானது, சாதி மறுப்பு பரப்புரைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும், புத்தகங்கள், கையேடுகள் போடுவது, கலப்பு மணம் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தலித்துகள் மீதான அட்டூழியங்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

இறுதியாக, ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. சமூகத்திலிருந்து தனித்து விடப்படுவோம் என்று சொல்லி, தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் மதச் சடங்குகளில் (திருமணங்கள், பிறப்பு, இறப்பு, யக்ஞோபவீதம், உபநயனம் போன்ற) கலந்துகொள்ளும் பல கம்யூனிஸ்டுகள் இருக்கின்றனர். இந்தச் சடங்குகள் சாதியின் வரம்பிற்குள்ளேயே வருகிறது, வெவ்வேறு சாதிக்கு வெவ்வேறு சடங்குகள். மேற்சொன்ன சாக்குகளைச் சொல்லியே, பல கம்யூனிஸ்டுகள் மத சின்னங்களை அணிவது, தங்களின் உரைகளில் கடந்தகால மதத் தலைவர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது ஒரு சமூக கோழைத்தனம் மற்றும் கொள்கையற்ற ஜனரஞ்சகவாதமும் ஆகும். முரணாக, பொதுமக்கள் மனதில் கம்யூனிஸ்டுகள் பாசாங்குவாதிகள் எனும் எண்ணத்தை வேறு அது ஏற்படுத்துகிறது. மதச் சடங்குகளிலிருந்து பணிவுடன் ஒதுங்கியிருப்பது, திருமணங்களை எந்த சடங்குகளுமின்றி நடத்துவது, மரணத்தின்போது கூட மதச் சடங்குகள் ஏதும் செய்யக்கூடாது என்று உயில் எழுதி வைப்பது போன்ற கம்யூனிஸ்ட் நடத்தைகளால் எந்தவகையிலும் நாம் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதில்லை. மாறாக, கம்யூனிஸ்டுகள் மதிப்பு கூடவே செய்கிறது.

நாம் நமது கருத்தியல்களை எவர் மீதும் திணிக்க வேண்டியதில்லை; ஆனால் நம் சொந்த வாழ்வில் அதைக் கடைபிடிக்கலாம். பூர்ஷுவா ஜனநாயகமும், இந்நாட்டின் அரசமைப்பும்கூட அதைத்தான் சொல்கிறது.  நாங்கள் ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், மத நடத்தை என்பது சாதியோடு தொடர்புடையது. கம்யூனிஸ்டுகளின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் மதமற்றதாக இருப்பின், இந்த மனிதர் மனதார சாதியில் நம்பிக்கையற்றவர் எனும் நம்பிக்கை தலித்துகளுக்கு வரும்.

சாதியப் பிரச்சினை என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதற்கு உடனடியான ஒற்றை மருந்து கிடையாது. நீண்டகால, கடினமான நடைமுறை தேவை. முதலாளித்துவ அழிவோடு இந்தப் பிரச்சினை தொடர்புடையது.  இன்றைய நிலையில், சாதி ஒழிப்பிற்கு எதிரான எந்தத் திட்டமும் துணிவுமிக்கதே. ஆனால், ஒவ்வொரு கடினமானப் பணியும் துணிவைக் கோருவதே. சாதி ஒழிப்பு இன்றைக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம், ஆனால் ஒரு கனவுக்கு அறிவியல் அடிப்படை இருக்குமெனில், அதை மெய்யாக்க முடியும். அத்தகையதொரு கனவை ஒவ்வொரு உண்மையான புரட்சியாளரும் கொண்டிருக்க வேண்டும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.


சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம்- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்.


பாட்டாளி வர்க்க அரசானது அனைத்துவிதமான பூர்ஷுவா அரசாங்கப் பண்ணைகள், பழைய ஜாகிர்களின் மாபெருமளவிலான விவசாய நிலங்கள், நகர்புற தொழிலதிபர்கள்-வணிகர்கள்-அதிகாரத்துவத்தினரின் நிலச்சொத்துகள், பெரு விவசாயிகளின் பண்ணைகள் மற்றும் தோட்ட-பண்ணைகள் அனைத்தையும் (எந்தவித நஷ்டஈடுமின்றி) தேசியமயப்படுத்தும்; மக்கள் அங்கு அரசு தொழிற்சாலையில் பணிபுரிவது போல் பணிபுரிவார்கள், கட்சியின் தலைமையில் பணிபுரியும் அனைவரும் சேர்ந்து தேர்தெடுக்கும் கமிட்டிகள் நிர்வாகப் பொறுப்பைக் கொண்டிருக்கும். குலாக்குகள்-நிலக்கிழார்கள்-விவசாயிகளின் நிலச்சொத்துகள் எவ்வித நஷ்ட ஈடுமின்றி எடுத்துக்கொள்ளப்பட்டு, கூட்டுப் பண்ணைகளாக மாற்றப்படும். அரசு மற்றும் கூட்டுப்ப பண்ணைகளில், நிலமற்ற மக்கள் அனைவரும் பணிபுரிவர், சம அந்தஸ்துடன் கூட்டு நிர்வாக நடவடிக்கையிலும் ஈடுபடுவர்.  கூட்டுறவு வேளாணில் இணைந்துகொள்ளத் தயாராக இருக்காத சிறு உடைமை விவசாயிகள் கூட்டுறவுமயமாக்கலுக்காக ஊக்குவிக்கப்படுவர். சில இடங்களில், கூட்டுறவு வேளாணுக்குத் தயாராக இல்லாத நபர்கள், தங்களுடைய தனியார் பண்ணைகளில் உழைப்பாளரை கூலிக்கமர்த்த தடை விதிக்கப்படும். உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது தடுக்கப்படும். அதேபோல், தனியார் வேளாணில் ஈடுபடுபவர்களுக்கு, கூட்டுறவுப் பண்ணைக்கு அளிக்கப்படும் விதைகள், தண்ணீர், மின்சாரம், உரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட மாட்டாது. மெல்ல மெல்ல, பொருளாதார பாதுகாப்புக்கான உத்திரவாதத்தைக் கண்டு, அரசு மற்றும் கூட்டுப் பண்ணைத் தொழிலாளர்களின் வளர்ச்சியைக் கண்டு ஏற்படக்கூடிய சோஷலிசத்தின் மீதான நம்பிக்கையினால், தனியார் மற்றும் கூட்டுறவு வேளாணில் ஈடுபடுபவர்கள் கூட கூட்டுப் பண்ணை முறையினால் ஈர்க்கப்படுவர். இந்நடைமுறையின் இறுதி கட்டம் என்பது ஒட்டுமொத்த விவசாயத்தையும் தேசியமயமாக்குவதாகும். இவ்வாறாக, தனியார் நிலவுடைமை மற்றும் ஆண்டாண்டு காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகளின் பிரச்சினைக்கும் முடிவு கட்டப்படும், சாதியமைப்பின் முக்கிய கிராமப்புறத் தூணை சோஷலிசம் தகர்த்தெறியும்.

பூர்ஷுவா அரசை அழித்த உடன், பாட்டாளி வர்க்க அரசானது சிறு மற்றும் பெரிய, தேசிய மற்றும் அந்நிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி தேசியமயமாக்கும், கட்சியின் தலைமையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி நிர்வாகப் பொறுப்பை வகிக்கும். தொழிற்சாலைகளில், பன்முகத் திறமைக்கான பயிற்சிகள் மூலம், உழைப்புப் பிரிவினை என்பது நெகிழ்வுத் தன்மையுடனும், நகரும் தன்மையுடனும் இருக்கும். இதில் எல்லோரும் அனைத்து விதமான வேலைகளையும் (தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பணிகள் தவிர) செய்ய வேண்டும். இவ்வாறாக, “உயர்வான” மற்றும் “தாழ்வான” வேலைகள் என்னும் வேறுபாடுகள் மற்றும் “சுத்தமான” மற்றும் “அசுத்தமான” பணிகள் என்னும் வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையும்.  கழிவுநீர்-வடிகால் சுத்திகரிப்புக்கான ஆலைகளில், இயந்திரமயமாக்கலும், திட்டமிட்ட அரசாங்க ஏற்பாடுகளும் கொண்டுவருவதன் மூலம், “அசுத்தமான” பணிகளின் வகைப்பாடு மாற்றப்படும். அதன்பிறகு, சோஷலிச உணர்வுநிலை அதிகரிகரித்து வரும்போது, மக்களிடையே இருக்கக்கூடிய பண்பாட்டு வேறுபாடுகளுக்கு முடிவு கட்டும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையில்கூட பலவந்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியத்தை அது குறைக்கும். ஒருவேளை சிலர் மீது பலவந்தம் தேவைப்பட்டால் அது நியாயத்தின் பொருட்டு பிரயோகிக்கப்படும்.

பங்குச் சந்தைகள் உடனடியாக மூடப்படும். வணிகத் துறையும் தேசியமயப்படுத்தப்படும் என்பதால், பரிவத்தனையில் மக்களின் கட்டுப்பாடு நிறுவப்படும். அதன் மூலம் பதுக்கல்-லாபமீட்டும்-இடைத்தரகுக்கு (ஹோர்டிங்-புராஃபிட்டீரிங்-புரோக்கிங்) முடிவு கட்டப்படும். மேலும், இறுக்கமான பாரம்பரியக் குடும்பத் தொழில் அமைப்பும் உடைக்கப்படுவதானது, சாதிய அமைப்பில் தாக்கம் செலுத்தும். தனியார் கந்துவட்டி தடை செய்யப்பட்டு, கடுமையான சிறைத் தண்டனைக்குரியதாக்கப்படும். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவருக்கு அரசின் நிர்வாகக் கமிட்டி மற்றும் கூட்டு நிறுவனங்களின் உதவி வழங்கப்படும்.

பொருளாதாரப் பாகுபாடு தவிர்த்து, கல்வி நிறுவனங்கள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. சோஷலிச அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்னவெனில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் தேசியமயப்படுத்துதல், பயிற்சி நிறுவனங்களுக்குத் தடை செய்வது. மேலும், இலவச, சமச்சீர் கல்வியை அறிவிப்பது சோஷலிச அரசின் முக்கியப் பொறுப்பாகும். விஞ்ஞானபூர்வ கல்வி அமைப்பில், நாட்டம் மற்றும் இயற்கைத் திறன் அடிப்படையில் வெவ்வேறு துறைக் கல்வி அளிக்கப்படும், பல திறன்கள் உண்டாக்கப்படும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையானது, பல வேலைகளை, வெவ்வேறு தொழில்களில்  மாறி மாறி செய்ய வகை செய்யும். படிப்படியான  சமச்சீரான சம்பளம், சமச்சீரான வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பு, மூளை உழைப்புக்கு இடையிலான வேறுபாடு குறைவது ஆகியவற்றின் மூலம், சமூக அந்தஸ்துடன் தொழிலை இணைந்துப் பார்க்கும் போலி கவுரவும் முடிவுக்கு வரும். சோஷலிசக் கல்வியானது உழைப்புப் பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல், அனைத்து இளைஞர்களின் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும். பொருளாதார மட்டத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைக்கையில், கல்வியில், பண்பாட்டு நிலையில் வேறுபாடுகள் மறைந்து போகும், இப்போது சாதியப் பாகுபாட்டை தகர்ப்பது மேலும் சுலபமாகி விடும்.

அடுத்து, மருத்துவம். தனியாக பயிற்சி செய்வது, தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கண்டிப்புடன் தடை செய்யப்படும். ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். சோஷலிசமானது ஏகாதிபத்தியக் காப்புரிமைகளில் நம்பிக்கைக் கொண்டிருக்காது. அனைத்து மருந்துகளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும். அனைத்து மக்களுக்கும் மருத்துவம் இலவசமாக்கப்படும். சோஷலிச மருத்துவக் கொள்கையை ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால், சோவியத் ஒன்றியம், சோஷலிச சீனா மற்றும் கியூபாவில் இத்துறையில் மேற்கொண்டுள்ள அற்புதமானப் பணியைப் பற்றி படித்தறியலாம்.  இலவச மருத்துவக் கல்வி மற்றும் இலவச, சமச்சீர் மருத்துவ அமைப்பு மூலம் தலித்துகளின் சமூக அந்தஸ்தில் ஏற்றம் ஏற்படும். 

சோஷலிச வீட்டுவசதி கொள்கையானது சாதி பாகுபாட்டை ஒழிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் சோஷலிச அரசே கையில் எடுத்துக்கொள்ளும். கட்டுமானக் காண்டிராக்டர்கள் சாதாரண தொழிலாளர்களாவார்கள். வீடற்ற மக்கள் அனைவருக்கும், சேரியில் வசிப்பவர்களுக்கும் வீட்டு வசதியை செய்துகொடுப்பதே பாட்டாளி வர்க்க அரசின் முதல் பணி. பழைய அரண்மணைகள், பல வீடுகள் வைத்திருக்கும் உடைமையாளர்களின் கூடுதல் வீடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் இதர பகட்டான மாளிகைகளை, பெரிய பங்களாக்களைக் கைப்பற்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். அதேவேளை குடியிருப்புக் காலனிகள் பெரியளவில் உருவாக்கப்படும்.

தொடக்கத்தில், சோஷலிசக் கல்வியைப் பெற்ற முதல் தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், நிபுணர்கள் உருவாகும் வரை, இந்தத் துறை வல்லுனர்களுக்கு சம்பளத்தில் மட்டுமல்லாது, வீட்டு வசதியிலும் சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் உற்பத்தி அமைப்பை சுமூகமாக இயக்க முடியும். பிந்தையக் கட்டத்தில் அது தேவைப்படாது. இந்தத் தொடக்கக் கட்டங்களைக் கடந்தபின்னர், சோஷலிச அரசானது எல்லா வீடுகளையும் அரசுடைமையாக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும்  உத்திரவாதமளிக்கும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு, வீடுகளை சமச்சீரான முறையில் வசதியுள்ளதாகக் கட்டிட, பழைய குடியிருப்புகளை மறுவடிவமைக்கவும், உழைப்பு சக்தியை அணிதிரட்டி புதிய காலனிகளை உருவாக்கவும் பெரியளவிலான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏடாகூடமான முறையில்  அமைந்திருக்கும் கிராமப்புறங்கள் அனைத்து வசதிகளும் உடைய நவீன காலனிகளாக மாற்றப்படும். கூடுதல் நிலம் மற்றப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். அரசிற்கு சொந்தமான சமச்சீரான  வீடுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால் (தனிக்குடும்பத்தின் அடிப்படையில்),  சமூகப் பாகுபாட்டின் முக்கியக் காரணமாக இருக்கும் தலித்துகள்  (மற்றும் இதரப் பணியாளர்கள்) ஒதுக்கப்படுவது தீர்ந்துவிடும்.  தேசியமயமான விவசாயம், தொழிற்சாலை மற்றும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் சமச்சீரான வசதி கொண்ட வீடு (மற்றும் போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள்) ஆகியவற்றால் தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு இடையிலான வேறுபாடு மற்றும் நகரங்கள் கிராமங்களுக்கு இடையிலான வேறுபாடு மறையத் தொடங்கும். அதே நடைமுறையில், உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையிலான இடைவெளியும் குறையத் தொடங்கும். ஒரு சோஷலிச சமூகத்தில்,  இந்த மூன்று ஏற்றத்தாழ்வுகளும் தனிமனிதருக்கிடையிலான உறவில் பூர்ஷுவா சிறப்புரிமையின்  பொருளாயத அடிப்படையாக திகழும். இம்முன்று ஏற்றத்தாழ்வும் மறைகையில் பூர்ஷுவா சிறப்புரிமைகளும் மறையும்.  அதனைத் தொடர்ந்து பூர்ஷுவா சாதியமைப்பும் முழுஅழிவை நோக்கி நகரும்.

பூர்ஷுவா சமூகத்தில் மதமும் பூர்ஷுவா சமூகத்திற்கு ஏற்ற வகையில் தகவமைக்கப்பட்டு, பூர்ஷுவா சாதியமைப்பின் ஒரு தூணாகி விட்டது. சோஷலிச சமூகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியானது, மத எதிர்ப்பு மற்றும் அறிவியல்சார் பகுத்தறிவு பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்ளும், அதேவேளை சிவில் உரிமையின் அடிப்படையில், சோஷலிச அரசானது, ஒவ்வொரு குடிமகரின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுக்கான உரிமையையும் மதிக்கும். ஆனால் சமூக-அரசியல் வாழ்வில் மதத்தின் தலையீடு தடைசெய்யப்பட்டிருக்கும். தொடக்க விழாக்களில் மதச் சடங்குகளை நடத்துவது, பள்ளிகளில் பிரார்த்தனை செய்வது, ஒலிபெருக்கிகள் வைத்து கீர்த்தனைகள் பாடுவது, திருமணம் மற்றும் மதப் பேரணிகள் நடத்தி பொதுமக்கள் வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்துவது, மதப் பள்ளிகள்,  பொது இடங்களை வாடகைக்கு எடுத்து சமகம் (சீக்கிய ஆன்மீகக் கூட்டங்கள் – மொ.ர்) போன்ற நிகழ்ச்சிகளில் சமூக செல்வத்தை வீணடிப்பது ஆகியவை தடை செய்யப்படும். மக்களின் மத உணர்வுகளைக் கணக்கில்கொண்டு, பழைய மதத் தலங்கள் விட்டு வைக்கப்படும், ஆனால் அதன் தர்மகர்த்தாக்கள் மற்றும் மடாதிபதிகளிடமிருந்து அரசே நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும்.  ஆசிரமங்கள்-கோயில்கள்-வக்ஃபுகள்-குருத்வாராக்கள்-சர்ச்சுகள்  போன்ற மத நிறுவனங்களிடம் உள்ள நிலம் மற்றும் பணம் அனைத்தையும், அரசு கையகப்படுத்தும் (இந்த அளவற்ற சொல்வதத்திலிருந்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்தும்,  சோதனைக்குப் பின்பு செல்வந்தர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்படும் தங்கம் மற்றும் கறுப்பு பணம் கையகப்படுத்தப்படும். சோஷலிச புராதன மூலதனத் திரட்டிலிருந்து  ஒரு பகுதி இப்படி வசூலிக்கப்படும்). 

மத நிறுவனங்களை அமைத்தல், அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தவிதமான சமூக-அரசியல் அணிதிரட்டலில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். மதச் சடங்குகள் நடத்தி திருமணம் செய்துகொள்ள ஒருவருக்கு சுதந்திரம் இருக்கும், ஆனால் பதிவுக்குப் பின்பே அத்திருமணம் அங்கீகரிக்கப்படும்.  பெண்ணின் ஒப்புதல் இன்றி ஒரு திருமணம் அங்கீகரிக்கப்படாது. விவாகரத்துக்கான சட்ட நடைமுறை எளிமையானதாக இருக்கும். வரதட்சனை என்பது  கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். இவ்வாறாக, சமூக வாழ்வில், மதத்தின் தலையீட்டைக் குறைப்பதின் மூலம் சாதி ஒழிப்பு நடைமுறைத் துரிதப்படுத்தப்படும்.

பூர்ஷுவா குடும்ப அமைப்பு மற்றும் அகமண முறை ஆகியவை பெண் ஒடுக்குமுறைக்கு  அடித்தளமாக இருக்கின்றன. உலகளாவிய மற்றும் கட்டாய சமச்சீர் இலவசக் கல்வியோடு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்திரவாதம் ஆகியவற்றோடு, குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, பெரியளவிலான கூட்டு சமையல்கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பெண்கள் கொடுமையான வீட்டு உழைப்பு என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவர். இதன் விளைவாக, சமூக வாழ்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். தந்தையை (மற்றும் கணவர்) சார்ந்திருக்கும் நிலை இருக்காது, எந்த அழுத்தங்களும் இன்றி தங்களது வாழ்க்கை பற்றிய முடிவுகளை அவர்களே சொந்தமாக எடுக்க முடியும். இந்த நிலை மாற்றங்கள் மூலம், காதல் திருமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்கள் பெருகும், சாதியின் சுவர், சரிந்து விழத் தொடங்கும்.

சோசலிச அரசானது, அனைத்து சாதி பஞ்சாயத்துகள், கப் பஞ்சாயத்துகள், சாதி சங்கங்கள், சாதிக் கூட்டங்கள் ஆகியவற்றை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கும், அத்தகைய முயற்சிகள் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். கல்வி அமைப்புக்கு அப்பால், அனைத்து பண்பாட்டு ஊடகங்கள் மற்றும் இதர ஊடகங்களை, சோஷலிச மதிப்பீடுகளைப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்துவதோடு, சாதியமைப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்காகவும் சோஷலிச அரசு பயன்படுத்தும். இதன் மூலம் புதிய சமூகத்தின் புதிய குடிமகர்களின் மனங்களில் இதுபோன்ற கொடுமையான பழக்கவழக்கங்களுக்கு இடமில்லாமல் போகும்.

இவ்வாறாக, சோஷலிசமானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் உற்பத்தி உறவுகளில் தொடர் மாற்றங்கள் மூலமாகவும், அதேவேளை மேற்கட்டுமானத்திலும்,  முழுவீச்சுடன் கூடிய முடிவற்ற வகையிலான கலாச்சார புரட்சியின் மூலமாகவும் சாதியமைப்பை அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானத்திலிருந்து ஒழிக்கும். சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுவதற்கானப் பயணம் மிக நீளமானதே, ஆனால் சாதி ஒழிப்பு என்பது சிலப் பத்தாண்டுகள் மட்டுமே பிடிப்பதாக  இருக்கும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.Jan 22, 2018

லேடீஸ் அண்ட் ஜெண்டில்வுமன் ....திட்டமிடாமல் நிகழும் சில நிகழ்வுகள் சில வேளைகளில் ஆச்சரியங்களை இறைத்துச் செல்கின்றன. ஜனவரி 21ஆம் நாள், மாலினி ஜீவரத்தினம் இயக்கிய “லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன்” ஆவணப் படத்தைக் காணச் சென்றதும் அப்படித்தான் நிகழ்ந்தது.


தோழர் ஆனந்த் குமரேசனிடமிருந்து அழைப்பு வர, அட நம்ம மாலினியா படம் இயக்கியிருக்கிறாள் என்ற வியப்புடனும், ஆவலுடனும் திரையிடலுக்குச் சென்றேன். “எதிர்ப்பார்ப்புகளோடு ஏன் வருகிறாய்” என்று முகத்தில் அறைந்தாள் மாலினி.  ஆம், நமக்குள் எவ்வளவு முன் முடிவுகள் உள்ளன, நாமே அறியாத அருவருப்புகள் உள்ளன என்பதை லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன் வெளிச்சம் போட்டு காட்டியது. நமக்குள் இருக்கும் அந்நியளை (னை) வெளிக்கொண்டுவருகிறாள் தீவிரா!


தனியுடைமை சமூகத்தில் எவரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதற்கு மற்றுமொரு ஆவணம் “லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன்”. எண்ணற்ற அடிமைகள் இவ்வுலகில், ஆனால் அவர்களின் வரலாறு ஒன்றுதான். அதுவே ஒடுக்கப்படும் வரலாறு. வரலாற்றை வலிமையானவர்கள் தானே எழுதுகிறார்கள் என்று படம் தொடங்கும்போதே வெளிப்படுகிறது மாலினியின் அரசியல் விழிப்புணர்வு. “அடிமைகளின் துணிச்சலைச் சித்தரிப்பதற்கு வரலாற்று ஆசிரியர்கள் இல்லையே” என்ற ஹோவர்ட் ஃபாஸ்டின் வரிகள் அப்போது எனக்குள் எதிரொலித்தது. அரசியல் என்பதே பொய்யும் புரட்டும் தான், அதைத்தான் வரலாறு என்று எழுதிவிடுகிறார்கள் என்கிறார் ஃபாஸ்ட். ஆம், ஆளும் வர்க்கங்களால் எழுதப்படும் வரலாறானது பொய்களின் கூடாரம், ஒடுக்குமுறையை, சுரண்டலை பரப்பும் போதை மருந்து.


ஆகவே, ஒடுக்கப்படுபவர்கள் தங்களின் வரலாற்றை தாமே எழுதுவது அவசியமாகிறது. அந்த வகையில் இதுபோன்ற படைப்புகள் முக்கியமானவை. எந்த ஒரு சமூகப் பிரச்சினையும், அதைப் பற்றி பேசப்படும் அளவைப் பொறுத்து கவனத்தை ஈர்க்கும். அதிலும் ஒரு வலிமை அரசியல், அளவு அரசியல் இயங்குகிறது. அதனால் இங்கு, ஒடுக்குமுறை வடிவங்களுக்கும் ஒரு தரவரிசை பட்டியலை நம்மை அறியாமலே வழங்கிவிடுகிறோம். சமூகத்தின் பிரதான பிரச்சினை இதுதான் என்று ஒன்றை கவனித்து மற்றொன்றை புறக்கணித்துவிடுகிறோம். அப்படித்தான் காதல் மற்றும் பால் உறவு பிரச்சினனிகளில், எதிர் பால் காதல், மற்றும் அதன் மீதான வெறுப்பரசியலை பேசிய அளவுக்கு ஓர் பால் ஈர்ப்பு, காதல் அதிலும் நிகழும் ஆணவக் கொலைகள் பெரிதாக பேசப்படாமல் போய்விட்டது அல்லது நம் ‘selective nature’இனால் நாம் அதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் என்று  நினைக்கிறேன்.


லேடீஸ் அண்ட் ஜெண்டில் வுமன், அதுபோல் கவனிக்கப்படாமல் விடப்பட்ட - ஓர் பால் ஈர்ப்பில் – பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவின் பரிமானத்தை கவிதையாகப் பேசுகிறது. அதேவேளை அக்காதல் எதிர்கொள்ளும் சமூக அவலங்களை கேட்டீரில்லையோ என குரலெழுப்புகிறது. ஆவணப்படங்களின் கனத்த தன்மையின்றி (பெரும்பாலான) ஒரு எளிமையான தகவல் பரிமாற்றமாய், நம்மை அந்நியப்படுத்தாமல், கைகோர்த்தபடி நிகழும் உரையாடல். உண்மை மிக எளிமையானதல்லவா? அதற்கு அலங்காரங்கள் தேவையில்லை என்னும் தெளிவோடு மாலினி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறாள். வாழ்த்துகள்.
சாதிய எதிர்ப்பு மட்டுமின்றி அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும் என்பதில் பா. ரஞ்சித் முனைப்புடன் இருக்கிறார் என்பதைக் கண்டபோது மகிழ்ச்சி!

ஆணாதிக்கத்தால் பீடிக்கப்பட்ட சமூகத்தில் வளர்வதாலோ என்னவோ காதல் என்றதும் நமக்கு அது ஒழுக்கக்கேடாகவே தெரிகிறது. அதிலும் தன் பால் ஈர்ப்பு எனில் காம வெறி பிடித்தவர்கள் என்பதே நம்மில் பலரின் புரிதல். ஆனால் நாங்கள் தேடுவது உங்களின் காதலைக் காட்டிலும் மேலானதொரு அன்பை என்று அந்தக் காதலர்கள் நம்மிடம் ஆணவத்துடன் கூறுகிறார்கள். காதலில், காமமே கண்ணெனக் கொண்டாலும் தவறில்லை என்பதில் எனக்கும் உடன்பாடே. ஆனால் ஆணாதிக்கச் சமூகத்தில் எதிர்பால் காமத்திற்கு புனித இடமும், ஓர் பாலினக் காமத்திற்கு அறுவறுப்பானதொரு இடமும் அளிக்கப்படுவதால், இதை அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

ஒரு சமூகப் பிரச்சினையை அதன் வரலாற்று வளர்ச்சியோடு பதிவு செய்யும்போதே அது ஒரு சிறந்த ஆவணமாகும். அந்த வகையில், புராண காலம் தொடங்கி, நாட்டுப்புற வாய்வழிக் கதைகளாக வளர்ந்து இன்றைய மனிதர்களின் வாழ்க்கைப் பகிர்வாக நகர்கிறது படம். அதில் பகிரப்படும் நாட்டுப்புற கதைகள் தொடங்கி, நம்மோடு வாழ்ந்து சமூக படுகொலைக்கு உள்ளான நமது சகோதரிகளின் கதைகள் என எல்லாமும் நமது மனதை உலுக்கிச் செல்கிறது. “சே! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என குறளெழுதிய ஒரு சமூகத்திலா நாம் வாழ்கிறோம் என்று வெட்கித் தலைகுனியும் தருணமது.

படம் ஓடும் அந்த 1 மணி நேரமும் நாம் இப்படித்தான் வெட்கித் தலை குனிவோம் அல்லது குற்ற உணர்வடைவோம்.

மாலினியும், அத்திரைப்படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொருவரும் நமக்கு அன்பால் நிறைந்த வேறோர் உலகத்தை அறிமுகம் செய்கிறார்கள். (LGBT Community படங்கள் பல வந்திருக்கின்றன. அவையெல்லாம் கண்டிப்பாக இம்முயற்சியிலானவையே என்பதில் ஐயமில்லை. ஆனால், அவற்றை நான் கண்டதில்லை என்பதற்காக என்னை மன்னியுங்கள்!) அன்பு இன்னதாய் தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பது எவ்வளவு முட்டாள் தனமானது, இல்லையில்லை காட்டுமிராண்டித்தனமானது.

அன்பைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் இந்தப்படம் பேசுகிறது.  அந்த விதிகளைத் தகர்த்து, சுதந்திர மனிதர்களாக காதல் செய்ய எங்களுக்கு உங்கள் அனுமதி தேவையில்லை, புரிதல் இருந்தால் போதும் என்கிறார்கள் அப்பெண்கள். நம்மைப் போல் விலக்கிவைப்பதில் நம்பிக்கையற்றவர்களாய் இருக்கும் இந்த மாற்றுப் பாலினத்தவர் நம்மிடம் புரிதலையும் வேண்டுவது கூட அவர்கள் மானுடத்தின் மீது கொண்டுள்ள பெரும்காதலுக்குச் சான்றாகும்.

அந்த மரியாதையை காத்துக்கொள்வது இனி நம் கையில்!

#Ladiesandgentlewomen ஆவணப்படத்தை தயாரித்துள்ள பா. ரஞ்சித், இயக்கியுள்ள மாலினி, இசையமைத்துள்ள ஜஸ்டின் பிரபாக்கரன் உட்பட இதில் பங்காற்றியுள்ள அனைத்து தோழர்களும் பாராட்டிற்குறியவர்கள். சுபா கண்ணன், கிருபா முனுசாமி, ஆர்த்தி வேந்தன், ஸ்ரீஜித் சுந்தரம் என்று குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல் கொஞ்சம் நீண்டதே. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறப்பான தகவல்களை பகிர்ந்துள்ளனர். இவர்களின் தகவல்களையெல்லாம் மிஞ்சும் தகவல் என்ன தெரியுமா? லெஸ்பியனா? பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிறதா என்று கேட்கும் நம் சமூகக் குரல்கள். அவர்களோடு இப்படம் வாயிலாக உரையாடியபின் ஏற்படும் மாற்றமென்ன… நீங்களே காணுங்கள் #லேடீஸஅண்ட்ஜெண்டில்வுமன்.

அன்பே பொருளாய் இருக்கும் உறவுக்கு, ஆணாதிக்க அகராதி கொண்டு இல்லாப் பொருள் கொடுக்கும் அறியாமைகெதிராய் இதுபோன்ற பல படைப்புகளை நம் கலைஞர்கள் படைக்க வேண்டும்.

- கொற்றவை
23.1.2018