Feb 18, 2011

கிரிக்கெட் சூதாட்ட கும்பல்கிரிக்கட் போன்ற ஒரு சூதாட்ட சோம்பேறி விளையாட்டை பிரபலப்படுத்த விளம்பரங்கள் மூலம் மக்கள் முட்டாளக்கப் பட்டுவருகிறார்கள். மக்கள் வறுமை நீங்க வேண்டும் என்று கவலைப் படாத சூதாட்ட கும்பல்கள் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று பார்ப்பனிய யாகங்கள் நடத்தி வருகிறது. இந்திய தேசியப் பற்று என்கிற பெயரில் முதலாளிகள் அவர்களுக்கான பொருளாதார லாப நோக்கோடு செய்யும் மிகப் பெரிய ஊழல் இது.  கிரிக்கெட்டில் இந்தியப் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. நம் பெருளாதாரத்தை அந்நிய நாட்டு முதலாளிகளும், இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் விட்டுத்தரும் கையாலாகத்தனம் மட்டுமே இதில் எஞ்சியுள்ளது.  

இதற்கிடையில், முதலாளிகளின் பேராசை பள்ளிப் பிள்ளைகளை குறிவைத்து நகர்கிறது. பள்ளிகளில் ஊக்குவிப்பு போட்டி என்கிற பெயரில் ஸ்டம்ப்பைவைத்து ஒரே பந்தில் அடித்து வீழ்த்துபவருக்கு உலகக் கோப்பையில் கிரிக்கெட் விளையாடும் நபரை அறிமுகம் செய்ய அழைத்துச் செல்லும் சிறப்பு வழங்கப்படுவதாக சொல்லி பள்ளிகளுக்குள் புகுந்திருக்கிறது விளம்பரதார நிறுவனம் ஒன்று. பள்ளிகள் இதை எப்படி அனுமதிக்கிறது? இது போன்ற வாய்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவெடுக்கும் அதிகாரம் பள்ளிகளுக்கு யார் வழங்குகிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்கள் அணைத்து தரப்பிலும் தங்களை சந்தைப் படுத்த முயற்சி செய்வதோடு, குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்கிற போர்வையில் பள்ளிகளை தந்திரமாக பயன்படுத்துகிறது. பள்ளிகளும் அவர்களின் நோக்கம் அறிந்தோ / அறியாமலோ வாய்ப்பளித்து வருகிறது. பிள்ளைகளுக்கு எந்த விளையாட்டு, எந்த பொருள், எந்த சிந்தனை மதிப்பிற்குரியது என்று முதலாளிகள் முடிவு செய்து, அதை வளர் பருவத்திலேயே விஷமாக ஏற்றி வருகிறார்கள்.

கிரிக்கெட் பித்து எனும் இந்தக் கொடிய தொற்று நோய் கிராமங்களையும் ஊடுருவியிருக்கிறது. எவர் பிடிகளிலெல்லாம் இருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க வேண்டியுள்ளது என்ற அச்சம் எழுகிறது.

A Sluggish and Gambling game Cricket
A Sluggish and Gambling game Cricket is being promoted as if it is the only Pride for India.  People who are least bothered about the Poverty in India are conducting Brahminical Yagnas praying that India should win. Capitalists sow the love for this game in the name of Nationalism and Patriotism. A big scam and Economical exploitation is being done in the name of Cricket. There is no aspect of Indian Culture in this game. It only results in loosing our Economy to the Multinational Capitalists and Indian Capital Giants.

Amidst this, the geed of Capitalists has entered the School Premises. In the name of motivational games, they are sneaking into the minds of Children. Today a Business group has entered into school and conducted a ‘Stump Game’.  One stump was placed and a ball was given to children to knock it down in 1 throw.  The reward for that game was announced as a chance for the Children to accompany an Indian Cricket Player during his Intro walk. I am surprised that Schools encourage such Advertising opportunities which the Business groups execute tactically. Who give rights to Schools to decide if such things are an opportunity for Children?

The Capitalists corner the minds of Public from all directions, now they are perverting the minds of Children under the label  “Motivational activities”.  It is not clear if the schools are encouraging this  knowing the tactics of the Business firms Or are their any other hidden benefits behind this?? The Capitalists are deciding what is important and respectful in the society and disseminate the bourgeois likes amongst the society and now the Children are also made victim.

The Cricket Mania has been an endemic disease for the past several years, which is also spreading in Villages.  It is worrying to think that our Children are surrounded by innumerous conceptual dangers.


Feb 9, 2011

என் வரையில் முகப்புத்தகம்என் கருத்துதான் உன் கருத்தாக இருக்க வேண்டும் என்ற மன நிலையே பெரும்பாலும் கமென்ட் போடுபவர்களிடம் தெரிகிறது. எழுதப்பட்ட பொருளின் மையக் கருவிலிருந்து, அக்கருவின் தீவிர தன்மையிலிருந்து விலகி தன்னை நிரூபிக்கும் ஆர்வமே கருத்துரைகளாக வடிவது போல் தோன்றுகிறது. முகப் புத்தகம் இல்லாத காலத்தில் இவர்கள் எத்தகைய விமர்சன வழிகளை கையாண்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

துவக்க கட்ட எழுத்தாளருக்கு முகவரியாக இணையத்தளம் இருக்கிறது, இணையத்தில் எழுதுவதும் வாசகர்களின் கருத்துக்களை உடனே அறிவதும், கருத்துக்களை உடனே இடுவதற்கும் கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு இது. குறிப்பாக சமுதாயப் பிரச்சனைகளை எழுதுவோருக்கும், அதிகாரத்திற்கு எதிராக எழுதப்படும் எழுத்துக்களுக்கும் கத்திரி இல்லாது வெளியிடும் எழுத்துக் சுதந்திரமும் இணையம் நமக்குத் தருகிறது.  அரசியல் சார்ந்து இயங்க முடியாதோருக்கு, களப்பணியில் பங்கு பெற முடியாதவர்களுக்கு தங்கள் சமூக அக்கறையை பதிவு செய்ய இணையம் வழி வகுக்கிறது. மேலும் இருந்த இடத்தில் இருந்தபடியே  அநீதிகளுக்கு எதிராக போராடுவோருக்கு சார்பாக தங்கள் ஆதரவைப் பதிவு செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிந்த வரையில் ஆதரவுகளை திரட்டித் தரவும் இணையம் ஒரு சிறந்த தளம். 

ஆனால் இப்பயன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அறிவு ஜீவி முத்திரைக்கும், புறம் பேசவும், தனிமனித வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளவும், பாலியல் வேட்கையை நாகரீகமான வார்த்தைகளாய், எழுத்துக்களாய் தீர்த்துக் கொள்ளவும், தனிமையை போக்கிக்கொள்ளவுமே "கணினி வலைப் பின்னல்கள்" பயன்படுத்தப்படுகிறது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. (பொழுது போக்கிற்காக, சும்மா ஒரு ஆர்வத்திற்காக எழுதுவதும், அங்கு கிண்டல்கள் அளிப்பதும் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. )

நிறைய பேர் மேற்கொள்ளும் அர்த்தமற்ற பாய்ச்சல்கள் ஆரோக்கியமான புரிதலையும், "Discourse" என்று சொல்லப்படும் ஆய்திரன் விவாதங்களை வளர்த்து நுண் அரசியல்களை பேசக்கூடிய சாத்தியங்களை நிராகரித்து விடுகிறது. மிக மோசமான கருத்து வன்முறைத் தளமாக இணைய தளம் மாற்றப்படுகிறது. போதிய வாசிப்பில்லாததால் (அல்லது அதீத வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்ற கர்வத்தின் காரணத்தால்) விவாதத்தின் ஊடே உன்மை வெளிப்பட்டாலும் கர்வம் காரணமாக வசை மிகுந்த நாகரீகமற்ற வார்த்தைகள் வைக்கப்படுகிறது. அல்லது அவருடைய அடுத்த எழுத்துக்களுக்கு பங்களிப்புக குறைகிறது. (அதாவது ஒதுக்கிவைப்பது)

இல்லையென்றால் இவ்வளவு பேசுகிறீர்களே ஏன் நீங்கள் களத்தில் இறங்கி களைகளை வெட்டத் துவங்குவதுதானே என்று குழந்தைத் தனமான கேள்விகள் வரும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சமூகத்திற்கு தங்கள் பங்களிப்புகளை தருதல் அவசியமாகிறது. அரசியல் பின்புலம் கொண்டவர்கள், அமைப்பு சார்ந்து இயங்குபவர்கள் களப் பணிகள் செய்வது சாத்தியப்படுகிறது, மற்றவருக்கு எவ்வளவோ காரணங்களால் அது சாத்தியப் படுவதில்லை.

குறிப்பாக பால் பேதம், பொருளாதார சூழல் இவை போன்றவை. துவக்கத்தில் சமூகப் பிரச்சனைகளை எழுதுவோர் பிற்காலத்தில் குறைந்தபட்ச களப் பணிகளையாவது மேற்கொள்வர் என்று நம்பலாம், அல்லது அப்பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதும், உதவிகள் செய்வதும் நடக்கும்.  ஆனால் வெறும் நகையாடுவோர் சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்தும் வியர்வையில் குளிர் காய்வோராக இருப்பது மட்டுமே நடந்து வருகிறது.  செயல் முழக்கப் போராட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு அப்போரட்ட வரலாற்றை, சமூக வரலாற்றை, திரிபு வரலாற்றுக்களை எழுத்து மூலம் எடுத்துச் செல்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இப்படி எழுத்து மூலம் பரவும் எதிர் வினைகள், எதிர்காலத்தில் எழுத்துலகில், வரலாற்றில் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க  எச்சரிக்கை மணியாக செயல்படும் தன்மை வாய்ந்தது என்பதை ஆர்வ மிகுதியாளர்கள் புரிந்து கொள்வதில்லை.

கருத்துரைகளை இடுவதும் லைக்குகள் போடுவதும் பெரும் அரசியலாக மாறி வருகிறது. எவ்வித தேர்வும் இன்றி கிடைத்ததற்கெல்லாம் லைக் போடுபவர்களை போட்டி போட்டுக் கொண்டு மற்றவர் ஆதிரிப்பதும், தொடர்ந்து கருத்துரைகளை இட்டு, விரும்பிக் குழுக்களாக சேர்ந்துக் கொண்டு எதை எழுதினாலும் லைக்குகளை போடுவதும், சம்பந்தமில்லாத கருத்துக்களை அறிவுஜீவித்தனமாக இடுவதும் (மார்க்சியம் முகப் புத்தகத்தில் படாத பாடு படுகிறது, குறிப்பாக தோழர் எனும் அழைப்புபதம்), அநாகரிகமான தனிமனித தாக்குதல்களை மேற்கொள்வதும், அவதூறுகளை பரப்புவதும் நடந்து வருகிறது.  ஒருவர் என்னவிதமான தேர்வுடன் செயல்படுகிறார், எவ்வித கருத்துக்களை முன் வைக்கிறார் என்ற புரிதலுக்கு முன்னேயே முகப்புத்தகம் நண்பர்கள் என்ற பட்டியலின் கீழ் எல்லோரையும் சேர்த்துவைக்கிறது.  பட்டியலில் சேர்ந்துவிட்ட ஒரே காரணத்திற்காக ஆதரவும், எதிர்ப்பும், கருத்துரைகளும் இடவேண்டும் என்ற கட்டாயத்தை அது ஏற்படுத்தி தருகிறது. 

சமூகத்தில் விதைக்கப்பட்ட நச்சுகள் பற்றிய எந்த புரிதலும் இன்றி, அது பற்றிய அக்கறையும், கவலையும் இல்லாது சமூக பொறுப்பற்ற விவாதங்களை மேற்கொள்ளும் நபர்கள் கருத்துக் சுதந்திரம் எனும் பெயரால் உபயோகமற்ற உரையாடல்களை மேற்கொள்வதும் நடக்கிறது. இந்த பரந்த மனபான்மையானது சுயநலம் கருதியே என்று சொல்வது தவறாகாது. (ஆம் இன்று நான் உனக்கு ஆதரவு தருகிறேன், நாளை நீ எனக்கு ஆதரவு தரவேண்டும் சரியா என்பதே அது).

மேலும் ஒரு இடத்தில் மிகவும் பொறுப்புடன் சித்தாந்தங்களை கருத்துரையாக முன் வைப்போர், வேறொரு இடத்தில் போகிற போக்கில் “சூரியன் குளிர்கிறது...எனக்கு மட்டும்” என்கிற ரீதியில் status களை, கழிவிரக்கங்களை இடுவோரிடத்தில் light weight comments என்று கிண்டல் கேலிகள் செய்வதும் முரணாக உள்ளது. 

நான் கிண்டலோ கேலியோ செய்யக்கூடாது, மனம் விட்டுச் சிரிக்கக் கூடாது என்ற அளவில் இதைச் சொல்லவில்லை. நான் தொடர்ச்சியாக முகப்புத்தகத்தைக் கவனித்து வந்த வரையில் இந்த கேலி கிண்டல்கள் சமுதாயப்பார்வையை முன் வைத்தே வருகிறது. ஒருவரின் அறியாமை மற்றவருக்குக் கிண்டல். அந்த வகையிலேயே இது நடக்கிறது. அதிலிருந்து காழ்ப்பு கிளம்பி திட்டுகளையும் வசைகளையும், வதந்திகளையும் அது பரப்புகிறது. முகம் தெரிந்து பழகிய நபர்களிடமே சில சமயம் நகைச்சுவையாக பேசும் பேச்சு அவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியிருக்க முகம் தெரியாதவர்களைக் கிண்டல் செய்யும் போது அவர்களின் மனதில் கோபமும் எரிச்சலும் தோன்றுவதை என்னால் குறையாகச் சொல்லமுடியவில்லை. அதே சமயம் அவர்கள் களத்தில் இறங்குகிறேன் பேர்வழி என்று தானும் பதிலுக்கு வசைகளை வைப்பதே நடக்கிறது.  திறந்த மனதுடன் அவர்கள் பேசுகிறார்கள் என்று நம்புவது இதில் அதைவிட வேடிக்கை. எத்தனை பேர் முகம் தெரிந்த நண்பர்களிடம் இயல்பாய் தொடர்ந்து இருக்கமுடிகிறது. ஏதாவது ஒரு கணம் அவர்களை நன்கு தெரிந்திருந்தாலும் காயப்படுத்தும் சூழலே நிகழ்கிறது.  அப்படி இருக்கையில் முகப்புத்தகம்.....


Social Network ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பயன் பாட்டுக்குரியது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே ஆனால் அதை நான் சமூக பிரச்சனைகளைப் பேசுவதற்காக பயன் படுத்துகிறேன் என்று தங்கள் முகங்களை முன் நிறுத்துவோர் அதே நிலைப்பாட்டில் நிற்காமல் சமயங்களுக்கு ஏற்றார்போல், நபருக்கேற்றார்போல், தேவைக்கேற்றார்போல் மாற்றிக் கொண்டு எழுதுவது என்ன விதமான புரிதல் என அறியமுடியவில்லை. 

அப்படிப் பட்டவர்கள் சமூகப் பார்வை மட்டுமே குறியாக எடுத்துக் கொண்டு மற்ற பொழுது போக்குகளில் ஆர்வமில்லாமல் செயல்படுபவர்களை கருத்துரைகள் என்ற பெயரில் மன உளைச்சல்களுக்கு ஆளாக்காமல் இருப்பது நன்று என்று எனக்குத் தோன்றுகிறது.  முகப் புத்தகத்தில் இருப்பவர்களை நண்பர்கள் என்று அடையாளப் படுத்துவதே இந்த உரிமை மீறல்களுக்கு காரணமாய் இருக்கிறது. தொடர்பாளர்கள் (contacts) என்று இருந்திருந்தால் இவ்வளவு உரிமைகளை ஒருவர் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.


சமூக அக்கறைக்கான பங்களிப்பை உண்மையான நோக்கமாக கொண்டவர்கள் கருத்துரைகளையும், லைக்குகளையும், அங்கீகாரங்களையும், பரிசுகளையும் நம்பி எழுதுவதில்லை. 

Feb 7, 2011

”திராவிடர் பூர்வக் குடியல்லர்” : ஓர் எதிர்வினை
  
”திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல் (Ethnography) படி நாகரீகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக் கலப்புகளின் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்.......... மேற்கிலிருந்து இந்தியாவிற்குள் வந்த திராவிடம் பேசிய ப்ராஹுயி மக்கள் இனம் இன்றும் தொடர்கிறதுஎன்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா?”............

12.01.2011 தேதியிட்ட இந்து நாளிதழில் India, largely a Country of Immigrants (இந்தியா, பெருவாரியாக இடம் பெயர்ந்தவர்களின் நாடு) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ஜனவரி 5, 2001 அன்று உச்ச நீதி மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பின் பின்ணனியில் வெளியிடப்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய் கட்ஜு மற்றும் நீதிபதி க்யான் சுதா மிச்ரா ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம்,  no.11 of 2011  என்ற எண் அடங்கிய மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கும் பொழுது ஒரு ஆய்வறிக்கையையும் வெளியிட்டுள்ளது.  இந்த மேல் முறையீட்டு வழக்கானது மகாராஷ்டிரா பில் பழங்குடியினத்தை சேர்ந்த நந்தாபாய் என்பவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கெதிராக உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட ஒன்று.  இந்த வழக்கின் முழு விவரம் 12.01.2011 தேதியிட்ட the.hindu.com  இணையதளத்தில் முழுமையாக உள்ளது.

நந்தாபாய் பில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவர் தன் தந்தை, மாற்றுத்திரனாளிகளான தங்கை மற்றும் தம்பியுடன் வசித்து வந்திருக்கிறார். விகரம் எனும் உயர் சாதி  இளைஞரோடு தொட்ரபு ஏற்பட்டு அவர் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றிருக்கிறார். விக்ரமிற்கு அவரது சாதியிலேயே வேறொரு பெண் பார்த்திருக்கும் வேளையில் நந்தாபாய் இரண்டாவது முறை கர்பபமுற்றிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேர் நந்தாபாயை அடித்து உதைத்து, மானபங்கப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.  

அஹமத் நகர் கூடுதல் நீதிபதி குற்றவாளிகளுக்கு IPC சட்டத்தின் கீழ் 100 ரூபாய் அபராதம், 6 மாத சிறைத் தண்டனை விதித்து, குற்றவாளிகளை வன்கொடுமை சட்டத்தின் கீழும் குற்றவாளிகளாக சேர்த்து 100 ரூபாய் அபராதமு, 1 வருட தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மும்பை உயர்நீதி மன்றத்தின் ஔரங்காபாத் அமர்வுக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்ட இவ்வழக்கை விசாரித்தபோது, வன்கொடுமை சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒதுக்கிவிட்டு வெறும் IPC  சட்டத்தின் கீழ் ப்ராசிகியூஷன் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டிருக்கிறது. தண்டனையின் ஒரு பகுதியை ஒதுக்கிவைத்துவிட்டு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பின்பு உச்ச நீதி மன்றத்திற்கு இவ்வழக்கு மேல் முறையீட்டிற்கு வந்துள்ளது. அப்பொழுது மாநில அரசையும், வன் கொடுமை சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒதுக்கிவிட்டு தீர்ப்பளித்த உயர் நீதி மன்றத்தையும் நோக்கி ஆச்சரியத்தை வெளிப்படுத்திய்தோடு, இது போன்ற குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கபடவேண்டும் என்றும் பழங்குடியினருக்கிழைக்கப்படும் அநீதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தும் உள்ளனர். வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். நியாயமான தீர்ப்பு என்பதில் நாம் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம். ஆனால் திராவிட குடிகள், திராவிட மொழித் தோற்றம் பற்றிய கருத்துக்கள் குறித்தும், இந்தியா பரவலாக வட அமெரிக்காவைப் போல் ஒரு வந்தேரிகளின் நாடு என்று கூறியிருப்பது குறித்தும் கேள்விகள் எழுவதை தடுக்கவியலவில்லை.

மேலும் அக்கருத்துக்கு அடிப்படையாக “google search”  எனும் இணைய தேடலின் குறிப்புகளை ஆய்வுக் குறிப்பாக ஏற்றுக்கொள்வதும், அதை மற்றவர்கள் படித்துப் பார்த்து அந்த வலைத் தளம் தரும் வரலாற்று தகவல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளச் சொல்வது அறிவு சார் ஆய்வுமுறைக்கு உவப்பானதாக இல்லை. வலைத் தளங்களில் தரப்படும் தகவல்களை கல்வி சார் ஆய்வுகளுக்கே அனுமதிக்கப்படுவதில்லை, அப்படி இருக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் பொறுப்புள்ள ஒரு நீதிபதி வலைத் தளங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை பொருட்படுத்துவது எவ்வகையில் ஆதரிக்கத் தகுந்தது?

ஒரு இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமானால் அவர்கள் எவ்வாறு அந்நிலைகளுக்கு தள்ளப்பட்டனர் என்ற உன்மைகளை சார்பற்ற நிலையிலிருந்து பேசுவதும், அக்கொடுமைகளை அதாவது சாதியக் கொடுமைகளை அரங்கேற்றியவர்கள், அதற்கு உறுதுணையாக நின்றவர் எவர் என்று தலைமகர் பொறுப்பில் இருப்பவர்கள் மனம் திறந்து பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக வரலாற்றையும், மக்களையும் குறை சொல்லிவிட்டு கண்டிப்பதும், அம்மக்களின் மேல் பரிதாபப் பட சொல்வதும், சம்பந்தமேயில்லாமல் ஒரு இனக் குழு மக்களை (திராவிட இனம்) பூர்வக்குடிகள் இல்லை, பெரும்பான்மை இந்தியர்கள் வந்தேரிகள் என்று சொல்வதும் பொறுப்புள்ளவர்களின் அறநிலைக்கு உகந்ததாகப் படவில்லை. 

ஆதாரமற்ற, அர்த்தமற்ற குறிப்புகள் நீதித் துறையிலிருந்தே வருமென்றால் அது பிற்காலத்துக்கான ஓர் ஆவணமாகிவிடும் என்பதால் திராவிடம் குறித்த ஆய்வறிக்கைப் பற்றிய என் எதிர்வினையாகவே, இக்கட்டுரையை எழுத விழைகிறேன். சிந்து சம வெளி காலத்திற்கும் திராவிட நாகரீகத்திற்கும் இருக்கும் தொடர்புகள் ஆய்வுகளாக வெளிவந்துக் கொண்டிருக்கும் சூழலிலும், பார்பனிய இந்துத்துவம் பிரிவினைவாத கருத்துக்களை மக்கள் மனதில் தேசியத்தின் பெயரால் விதைத்து வரும் சூழலிலும் திராவிடர் பூர்வக்குடியல்லர் என்று கூறப்பட்டிருப்பது வகுப்புவாத அரசியல் காரணிகள் நிறைந்த்தாய் உள்ளது போல் தோன்றுகிறது.  பூர்வக்குடிகளுக்கு சார்பாக கூறப்பட்டிருக்கும் புராணங்கள் பற்றிய குறிப்புகள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் பூர்வீகத்தையோ, அவர்கள் எந்த மரபு தோன்றிகள் என்றோ கூறப்படவில்லை.

”பழங்குடியினர், பழங்குடினிரல்லாதார் போல் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை, அவர்கள் பொதுவாக உயர்ந்தவர்கள், சிறந்த அறம் கொண்டவர்கள்” 39

பழங்குடி மக்கள் நல்லவர்கள், பொய் சொல்ல மாட்டார்கள் என்றெல்லாம் அவர்களின் மீது பரிதாபம் கொள்ள சிபாரிசுகள் செய்யப்படுவது அவர்களுக்கான நியாமான உரிமைகளைப் பரிக்காதீர்கள் என்ற பொருளைக் குறிப்பதை விட, அவர்கள் மீது இரக்கம் கொள்ளுங்கள் என்பது ”பாவம் பிச்சையிடுங்கள்” என்பது போல் உள்ளது.

மனித உரிமை மீறல்கள் யார் மீது நடத்தப் பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கதே, அதை விடுத்து இவர்கள் இன்ன பிண்ணனிக் கொண்டவர்கள் அதனால் அவர்களிடம் இரக்கம் கொள்ளுங்கள் என்று மனித குணங்களுக்கு இனச் சாயல் பூசுவதென்பது பிரித்தாளும் கொள்கைக்கு சற்றும் குறைவில்லாத ஒரு அணுகுமுறையாக கருதத் தோன்றுகிறது.  தண்டகாரண்யத்தில் பழங்குடியினருக்கெதிராக அரசும், முதலாளிகளும் நடத்தும் பசுமை வேட்டைக் குறித்தோ, சல்வா ஜுடும் குறித்தோ, அங்கு நடக்கும் படுகொலைகள் குறித்தோ, கற்பழிப்புகள் குறித்தோ,  அம்மக்களுக்கு மருத்துவ உதவி செய்த ஒரேக் காரணத்திற்காக பொய் வழக்குகள் போட்டு மருத்துவர் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறித்தோ கட்ஜு அவர்களும், மிச்ரா அவர்களும் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

திராவிடர்கள் பூர்வக் குடிகள் என்பது இனிமேல் செல்லுபடியாகாது என்பது எவ்வகையில் பழங்குடியினரின் பிரச்சனைகளுக்கு தொடர்புடையது? திராவிடர்கள்தான் அப்பழங்குடியினருக்கு கொடுமைகள் இழைத்து வருகிறார்களா? இன்னும் சொல்லப்போனால் மனு சாஸ்திரத்தின் படி சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திராவிடர்கள், ஆதி திராவிடர்களும் பழங்குடியினர்களே. அந்த ஆதிதிராவிடருள் எவ்வளவு இனக்குழுக்கள் இடம்பெருகின்றன? அதனால் தான் ஆதிதிராவிடர் என்ற பட்டியல் சாதி குறிக்கப்பெற்றது அவர்களுக்கென உரிமை சட்டங்கள், இட ஒதுக்கீடுகள் இயற்றப்பெற்றன என்பது வரலாற்று உன்மை.   அம்பேத்கரின் போராட்டங்களுக்குப் பின்னர் அரசியல் காரணங்களுக்காகவும், சுயமரியாதைக் காரணங்களுக்காகவும் இம்மக்கள் மராட்டிய சொல்லான “தலித்” என்ற அழைப்புப் பெயருக்குள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.   இந்தப் பார்வையும், சமூக மாற்றமும் பழங்குடியினர் பற்றிய நீதிபதிகளின் கருத்துக்களில் பேசப்படவேயில்லை.

பழங்குடியினருக்கு கிடைக்கவேண்டிய சகல உரிமைகளையும் மறுப்பதற்கில்லை. உரிமை மீட்டெடுப்பு என்பது அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என்ற அரசியல், பொருளாதார, சாதீயக் காரணங்களைக் கொண்டு அணுகப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமைய வேண்டும்.  அவ்வொடுக்குமுறைகளை ஏவியோர் நேரடியாகக் குறிக்கப்ட்டு கண்டிக்கப்படவேண்டும் (அது ஆளும் அரசாக இருந்தாலும் சரி), பிரிவினைவாத வர்ணாஸ்ரம கொள்கைகளை இந்துத்துவத்தின் பெயரால் தூக்கிப் பிடிக்கும் நபர்களையும், அவர்களுக்கு துணை நிற்கும் மத அமைப்புகளையும் தடை செய்யவும் சிபாரிசு செய்ய வேண்டும். அதை விடுத்து காம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகம் ”இந்திய வரலாறு”  என்பதில் மொழியியல் அடிப்படையிலும், உடலியில் கூறுகளின் அடிப்படையிலும் முன்னிறுத்தும் பூர்வக்குடிகள் பற்றிய தகவல்களை மட்டும் கொண்டு ஒரு தீர்ப்பில் “திராவிடர்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் எனும் அனுமானம் இனி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல” 24 என்பது மனித உரிமை மீறலுக்கெதிரான ஒரு வழக்கில் எத்தகைய பொருளில் இணைக்கப்பட்டிறுக்கின்றது என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கையில் தமிழின மக்களை கூண்டோடு அழித்தொழிக்கும் வேலைகள் நடந்தேரிவிட்ட்து.  மீதமிருப்பவர்களும் மோசமான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  இப்போது அவர்கள் அழித்தொழிப்பு தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  தமிழ்க எல்லைகளில் (கடலூர், பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் கூட) மீன் பிடிக்கும் தமிழர்களை சுட்டுத்தள்ளுவதும், கயிற்றில் இறுக்கி கொல்வதும் என இலங்கையின் ராஜ பக்சே அரசு கடற்படை அத்து மீறல்களை செய்து வருகிறது. இந்தச் சூழலில் ”திராவிடர் பூர்வக் குடியல்லர்” என்பது போன்ற அறிவிப்புகள் எத்தைய விளைவுகளுக்கு அடித்தளமிடும் என்பதை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. 

 இவ்வழக்கில் பயன் பட்டிருக்கும் ஆய்வரிக்கையின் படி இந்தியாவின் பழங்குடியினராக குறிக்கப்பெருவோர் முண்டா வழித் தோன்றல்கள் பின்பு  சடீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களுகு இடம் பெயர்ந்தவர்கள், மற்றும் நீலகிரி தோடர்கள், அந்தமான் ஆதிவாசிகள், கோண்டுகள், சாந்தலர்கள், ஃபில்கள் ஆகியோர்.  இதில் நாம் மாற்றுக் கருத்து கொள்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் காம்பிரிட்ஜ் இந்தியாவின் வரலாறு (பாகம் 1), பண்டைய இந்தியா எனும் பகுதி குறிப்பிடுவதே ஆய்வரிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, இப்பழங்குடியினரை Pre-Dravidians திராவிடர்களுக்கு முன்பு என்று குறிப்பிட்டு அவர்களே இந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் 8 விழுக்காடு மக்கள் என்றும் மீதம் 92% வந்தேரிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
“இந்தியா ஒரு வந்தேரிகளின் நாடு”
”அமெரிக்காவானது  4 அல்லது 5 நூற்றாண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்த மக்களைக் கொண்டது, இந்தியா பழம் வந்தேரிகளின் நாடு, கடந்த 10,000 வருட காலங்களாக இந்தியாவிற்கு மக்கள் இடம் பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர். தோராயமாக இன்று இந்தியாவில் வாழும் 92% மக்கள் வந்தேரிகளின் வம்சாவளியினரே, குறிப்பாக வட-மேற்கிலிருந்தும், சில சதவிகத்தினர் வட-கிழக்கிலிருந்தும் வந்தவரகள். இது நம் நாட்டைப் பற்றி புரிந்துக் கொள்ள ஒரு முக்கியக் குறிப்பாகையால், இது குறித்து சற்று ஆழமாக நோக்க வேண்டியுள்ளது”.

பிறகு மக்கள் இனம் குடிப் பெயர்தலுக்கான புவியியல் காரணங்களும், வளமை, பொருளாதார காரணங்களும் கூறப்பட்டுள்ளது. 

பத்தி 24இல் “இந்தியாவின் பூர்வக்குடிகள் யார்? ஒரு காலத்தில் திராவிடர்களே இந்தியாவின் பூர்வக் குடிகள் என்று நம்பப்பட்டுவந்தது.   இருந்தாலும் தற்போது இக்கோனம் மாற்றப்பட்டுவருகிறது, இப்போது ”திராவிடர்களுக்கு முந்தைய பூர்வக்குடிகளே அதாவது தற்போதைய பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகளின் வம்சாவளியின்ரே இந்தியாவின் பூர்வக் குடிகள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கையாவிருக்கிறது”

இங்கிருந்துதான் நெருடல்கள் துவங்குகின்றது.  மனித இனம் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னறே தோன்றியிருந்தாலும், நாகரீக வளர்ச்சி, மானுடவியல் மாற்றங்கள், மொழியியல் ஆய்வுகள் போன்றவை சிந்து வெளி நாகரீக ஆய்வுகளைக் கொண்டு எழும் வரலாற்றுத் தகவல்கள் கொண்டே இந்தியா பற்றிய (தெற்கு ஆசியா பற்றிய) முழுமையான ஆய்வை ஆதாரப் பூர்வமாக நிறுவ முடியும். அதோடு ஆதி மனிதன், ஆதி இனம், ஆதி மொழி பற்றிய தகவல்களும் இவ்வாய்வை சார்ந்து உள்ளதாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் கூறிவருகிறார்கள்.  ஹரப்பா அகழ்வாராச்சியில் கிடைத்த எழுத்துருக்களை டெசிபர் செய்யவியலாவிட்டாலும், சிந்து வெளி நாகரீகத்தை தோற்றுவித்தது திராவிட இனமே என்று பல்வேறு மானுடவியல் வல்லுனர்கள், அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் முன் மொழிகிறார்கள். உலகில் உள்ள பல்வேறு மொழிகளிலும் திராவிடக் கலப்பு இருப்பதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகிறது.

கனம் நீதிபதியவர்கள் கட்ஜுவும், மிர்சாவும் அதற்கும் முந்தைய மனித இனத் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால் அது “லெமூரியாக் கண்டம்” பற்றிய ஆய்வுக்கும், மாந்தரினமாவதற்கு முன்பு மந்தி இனமாக (நிமிர்ந்த குரங்கு இனம்) வாழ்ந்த காலங்களுக்கும் நாம் செல்லவேண்டியிருக்கிறது.  ”லெமூரியாக் கண்டம்” என்று உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்ற “குமரிக் கண்டம்” தான், மனித இனம் முதலில் தோற்றம் எடுத்து இருந்த உலகப் பகுதி என்பது நிலவியல் அறிஞர்களின் முடிவு (a) சுமார் 82,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரே கண்டமாக இருந்த நான்கு கண்டங்களும் ஒன்று சேர்ந்து இருந்தன என்று நிலவியலாளர்கள் கூறுகிறார்கள். (a.1) இந்தக் கண்டம்தான் குமரிக் கண்டம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. குமரிக் கண்டத்தில், பல் வேறு ஆறுகளும் ஏரிகளும் கடல்களும் தீவுகளும் இருந்து இருக்கலாம் என்ற போதிலும், முழுவதும் தரை வழித் தொடர்புகள் கொண்ட ஒரே தரைப் பகுதியாகத் தான் அன்று அது இருந்து இருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. (a)

ஆஸ்திரேலியக் கணடத்துப் பழங்குடி மக்களும் ஆஃப்ரிக்கக் கண்டத்துப் பழங்குடி மக்களும் அமெரிக்கக் கண்டத்துப் பழங்குடி மக்களும் இந்தியத் துணைக் கண்டத்துத் திராவிட மக்களும், மாந்தவியல் முறையாகவும் மொழியியல் முறையாகவும் ஒத்து இருப்பதற்கு, இவர்கள் அனைவரும் குமரிக் கண்டத்தில் விளர்ந்த உலகின் முதல் மாந்தர்கள் என்பது தான் காரணம். (d)
தமிழ் பேசுபவர் எல்லாம் திராவிடர் என்று கருதிவிட இயலாதென்றாலும், தமிழ் மொழி பேசிய திராவிட இனமானது ஆதி இனம் எனும் வரலாற்று உன்மையை பகிரவே தமிழ் மொழியின் சிறப்பு பற்றி இங்கு நாம் பார்க்கவேண்டியுள்ளது, ஏனென்றால் தீர்புக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட ஆய்வில் தமிழ் மொழிக் குறித்த எந்த ஆய்வுக் குறிப்புகளும் இல்லை. (திராவிட மொழிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டிருக்கிறது) காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வில்
“திராவிடம்” என்பது ஒரு சவுகரிய முத்திரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிடர்களுக்கு முந்தைய ”தொன் முதுவரே” (aborigines) பூர்வக்குடிகள், பண்பாடு வளர்ச்சியடைந்த திராவிடர்கள் ஆதி பழங்குடியினர் என்று கருதிவிட இயலாது...... ... சிலோனின் வெட்டாக்கள், செலெபெஸின் தாளாக்கள், சுமத்ராவின் பத்தின்கள் மற்றும் ஆஸ்திரிலேயர்கள் திராவிடர்களுக்கும் மூதாதையோர்”

என்று தர்ஸ்டனின் ஆய்வுக்குறிப்பு குறிக்கப்படுகிறது. (Madras Presidency, இது பிரிட்டிஷாரின் காலத்தில் எழுதப்பட்ட குறிப்பு என்பது கவனத்துகுரியது, இதில் பார்ப்பனியம் வகுத்த சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட திராவிடர்களுக்கெதிராக அதிகாரத்தை வளர்தெடுக்கும் அரசியல் ஆதாயக் காரணங்களை ஒதுக்குவதற்கில்லை, இதுவும் காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடு, 1913)

”திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல் (Ethnography) படி நாகரீகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக் கலப்புகளின் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்..........”

உலக மொழிகளில் குறிப்பிடத்தக்க தொன்மையும் வளமையும் கொண்டவையாகக் கருதப்பெறுபவை தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீன், கிரீக்கு, எபிரேயம் என்பர்.  இவற்றுள் தமிழ் இயற்கை மொழித் தோற்றமும், இலக்கிய இலக்கண வளமும், நெறியும் கொண்டு பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள உயர்தனிச் செம்மொழி.    தொன்மைத் தமிழ் தொடக்க காலமுதல் ஆய்வாளர்களால் நேரடியாகக் குறிக்கப் பெறாமல் “திராவிட மொழிக் குடும்பம்” எனும் தொகுப்பில் வைத்து குறிக்கபெறுகிறது. (g)

தமிழைத் திராவிடம் என்று சொல்வதே ஒரு திரிபு. தமிழ் என்பதே திராவிடம் ஆயிற்று.  திராவிடத்திலிருந்து தமிழ் வரவில்லை. ஆனால், திராவிடம் என்றே பலர் கொண்டனர்.  வடமொழியாளரே திராவிடம் என்றவர். எனவே, அவரது மொழித் செயல் கொண்டே இதனை விளக்கவேண்டும்.தமிழ் என்பதில் ‘ழ’ வடமொழியாளரால் பலுக்க இயலவில்லை, எனவே அதனை விடுத்து ‘தமி’ என்பதை ‘த்ரமி’ என்றனர். ’த்ரமி – த்ரமிள் – தமிளம் – த்ரிமளம் – த்ரமிடம் – த்ரவிடம் – த்ராவிடம் என்றனர்’.  பிராகிருதத்தில் ‘தமிழம் – தமிள – தவிள – தவிட’ என்று திரிந்திருப்பதாக முனைவர் Dr. Grierson கூறுகிறார். (h)

மகாவமிசம் எனும் பாலி மொழி நூலில் “தமிளோ” என்று தமிழ் சொல்லப் பெறுகின்றது.  கிரேக்க நாட்டவரான எகிப்திய குலத்து வரலாற்றரிஞர் தாலமி (கி.ப். 119 – 161) தமிழ் நாட்டை டிமிரிகா (கா – கிரேக்கத்தில் நாடு என்று பொருள்) என்றார். இதைத் தமிழகம் என்பதன் மாற்றாகவும் கொள்ளலாம்.  நேபளத்தில் தெற்குப் பகுதியில் வாழும் பழங்குடியினர் ‘திமில்’ எனப் படுகின்றனர்.  “ஆப்கானிஸ்தானத்தில் ஒரு நகரம் ’தமிழக்’ என்னும் பெயரில் வழங்குனின்றது. அங்கு வாழும் இசுலாமியர் தமிழ் கலந்த சொற்களில் பேசுகின்றனர் என்று மாகறல் கார்த்திகேயனார் காட்டியுள்ளார். இவை யாவும் தொன்மைத் தமிழர் பல நிலப்பகுதிகளில் பரவிச் சென்ற வரலாற்றைக் குறிப்பாகச் சொல்வதுடன் தமிழ் ஒலிப்பையும் நினைவுறுத்துகின்றன.  (i) 

எவ்வகையில் நோக்கினாலும் தமிழே மொழிப் பெயர்; இனப்பெயருக்குமுரியது.  தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் வெறும் இலக்கிய இலக்கண நூல்களாக நாம் கருதிவிட இயலாது, அது புவியியல் குறிப்புகளை “நால் வகை” நிலம் என்று பிரித்துக் குறிக்கிறது, நம் சங்க இலக்கியங்களும் திணை என்பதைக் கொண்டு நில வகைகளையும், மக்களின் வாழ்வு முறையையும் குறிக்கிறது. கடல் கோள்கள் மூலம் தமிழரின் நகரங்கள் மூழ்கியதை சிலப்பதிகாரம் பேசுகிறது.

கலப்புகள் குறித்து பேசிய ஆய்வுக்குறிப்பில் ”முண்டா மொழிகள் பேசுவோர் திராவிட மக்களே” என்று மாக்சு முல்லர் கண்டறிந்து கூறியுள்ளார். (M) முண்டா மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள தொடர்பைக்  கேள்விக்குறியது என்கிறார்கள் நீதிபதிகள். அதற்கு காரணம் இனவியல் வரம்பு மிகவும் சிக்கலாகிவிட்டது ஆகவே இவ்வேர்களை ஆராந்து உன்மை அறிவது கடினம் என்கின்றனர். 

ஆஸ்ட்ரிக் ((Austric) அதாவது செர்மானியர்கள் வகுத்த ஒரு பெரிய மொழிக் குடும்பம்), திராவிடியன், இந்தோ-ஈரோப்பியன் என்று மொழி படிமுறையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் நீதிபதிகள். மேலும் வேதம், செம்மொழி சமற்கிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் திராவிட குணாதிசியங்கள் கொண்டுள்ளது என்கிறார்கள். (24) (இதிலிருந்தே அவர்களது சமற்கிருத சார்பை நாம் அறிந்துக் கொள்ளலாம்)

பிறகு அவர்கள் கூறுவது ’”இந்தோ-ஆரியர்களின் வரவுக்கு முன்பு வடக்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் திராவிட மொழி (தமிழ் என்று எங்கும் சொல்லவில்லை) ஓங்கியிருந்ததற்கு ஆதாரங்கள் இல்லை, அதோடு பண்டையத் தன்மை ஆரிய மற்றும் திராவிட மொழிகள் இரண்டிலும் இருப்பதால் திராவிடர்கள் தொன்முதுவர்கள் என்பது இனிமேலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.  அவர்கள் எப்பொழுது இந்தியாவிற்குள் வந்தார்கள்? அவர்களுடைய (அதாவது திராவிடர்கள், நியாயமாக தமிழர்கள்) தோற்றம் குறித்து  ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை, இருப்புக் குறித்தும் ஆதாரங்கள் இல்லை, பெரும் தீவும், மலைப்பகுதிகளும், இந்திய மேற்குப் பகுதியில்  இந்தியாவிற்கு வழி இருந்த பலூசிஸ்தான், அங்கு பேசிய ப்ராஹுயி இருப்புக் குறித்தும் ஆதாரங்கள் இல்லை. மேற்கிலிருந்து இந்தியாவிற்குள் வந்த திராவிடம் பேசிய ப்ராஹுயி மக்கள் இனம் இன்றும் தொடர்கிறதுஎன்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா?” ................ (24)

 (See ‘Brahui’ on Google) – ப்ராஹுயி (ப்ராகூயி) என்று கூகிளில் தேடிப் பாருங்கள்” – கூகிளில் தேடுதல் என்பது பொறுப்பற்றவர்கள் செய்யக்கூடிய ஒரு அவசர கதி ஆய்வு.  இணையத்தில் (wiki pedia) வரும் செய்திகளை யார் வேண்டுமானாலும் edit செய்துப் போடலாம்.  நீதிபதிகள் காம்ப்ரிட்ஜ் ஆய்வையும், கூகிள் சொல்வதையும் எந்த வரலாற்றுப் புதகங்களில் சரி பார்த்தார்கள், குறிப்பாக தமிழ் மொழி பேசும் திராவிட வல்லுனர்களின் புத்தகங்களை எந்த அளவுக்கு கணக்கில் எடுத்துக்கொண்டார் என்பது தெளிவாக இல்லை.

திராவிட மொழிகள் என்பதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் தவிர ப்ராஹீய்என்பது ஒன்று. பலூசிஸ்தானத்தில் வழக்கிலிருந்த மொழி. இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை ப்ரோட்டா எலோமாநாகரிக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற வரலாற்றறிஞர்கள் வாதிட்டனர். எனவே தொல் இந்திய நாகரிகம் என்பது மேற்காசிய (மெசபடோமிய) எலாமைட் நாகரிகத்துடன் தொடர்புடையது என்கிற கருத்தும் மேலெழுந்தது. (M2)  

ஆதாரங்களை எழுதிக் கொண்டு போனால் இக்கட்டுரை நீண்டு கொண்டே போகுமாதலால், மொழியியலிலிருந்து உயிரியல், சமூகவியல், புவியியல் போக்குகளுக்கு செல்கிறேன்.

”தன் தோற்றம் தனி ஒரு வழி கொண்டது என்று மாந்தன்
          கருதிக்கொள்ள எவ்வகைச் சான்றும் இல்லை. வளர்ந்த
          வழியில் ஒரு பிரிவுக் குடும்பத்தைச் சாந்தவன்
என்று கூறிக்கொள்ளவேண்டியவனே” – டார்வின்  (s)

தனித்தனியாகப் பல இடங்களிலோ படிமுறை வளர்ச்சிப்படி மாந்தர் இனம் தோன்றியிருக்குமானால் மேலே கண்ட அக, புற உறுப்புகளில் இத்துணை ஒற்றுமை அமையாது. சிறிதளவேனும் வேறுபட்ட அமைப்பு நேர்ந்திருக்கவேண்டும்.  அவ்வாறன்றி ஒரே நிலையான – ஒத்த அமைப்பான உடல், உறுப்பு வடிவமைப்புகளே உள்ளமையல் மாந்த உயிரினம் ஒரே இடத்தில் முதன் முதலில் தோன்றியிருக்க வேண்டும். பின்னர் சூழப் பரவியிருக்க வேண்டும். இதுதான் அந்த உள்ளடக்கமான உண்மை.  (s)

ஆக மாந்தரினத்தின் தோற்றம் ஒரு இடத்தில் துவங்கி பின்பு இயற்கை கொந்தளிப்புகளாலும், போர் நிகழ்வுகளாலும், வாழ்வாதார பொருளியல் காரணங்களாலும் இடம் பெயர்தல் என்பது காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று. கற்காலம், பெருங்கற்காலம், வெண்கலக்காலம் என்றெல்லாம் கால வகுப்புகளும் உள்ளன.  நாடு என்ற ஒரு புவியியல் அமைப்பு தோன்றுவதற்கு முன்பு இனக் குழுக்களாக மக்கள் வாழ்ந்த இடங்களாக மலைகள், மலைத் தீவுகள் இருந்திருக்கின்றன. அதைக் கண்டங்களாக பிற்காலத்திய ஆய்வாளர்கள் பிரித்துக் கண்டனர்.   இடம் பெயர்ந்தவர்கள், வந்தேரிகள் என்று குறிக்கப்பெருவதென்பது சில நூற்றாண்டுகளுக்கு முன் (காலனியாதிக்க முறையில் நாடு என்று ஒரு தேசியம் உருவாக்கப்பட்ட பின்னர்) இடம் பெயர்ந்தவர்களைக் குறிக்க பயன்படுத்தலாம், அதற்கு முன்பே கிறஸ்தவர்களும், இசுலாமியர்களும் பாரதக் கண்டத்திற்குள் வந்து விட்டனர், தீண்டாமைக் கொடுமைகளால் இங்கிருந்தவர்கள் பலர் மதம் மாரி விட்டனர், (பாரதம் என்று இந்நாட்டிற்கு பெயர் வந்ததும் ஓர் அரசியல்)).
இந்தியா என்பதே நிலப்பரப்புகளை அரசியல் ரீதியாக  ஒருங்கிணைக்கப்பட்ட நாடாக இருக்கும்பொழுது ((அதுவரை சிற்றூர்களாகவும், பேரூர்களாகவும், பட்டினங்களாகவும், ராஜ்ஜியங்களாகவும் தானே இருந்திருக்கிறது).  10,000 வருடங்களுக்கு முன்னர் இம்மண்ணில் பிறந்தவர்களே பூர்வக்குடிகள், அதற்கு பின்னர் வந்தவர்கள் வந்தேரிகள் என்று சொல்வது எவ்வகையில் மானுடவியல் அறிவு சார் பார்வைக் கொண்டதாக உள்ளது?  எதேச்சிகார காலனியாக்கம் ஒருங்கிணைத்த இந்தியாவில் அதற்கு முன்பே பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் ஒரு இனத்தை பூர்வக்குடிகள் அல்லர் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

10,000 வருடமாக பூர்வக்குடிகளில் இனக் கலப்புகள் ஏற்பட்டிருக்காது என்று எவ்வாறு உறுதிபடக் கூற இயலும்? மீண்டும் வலியுறுத்திக் கேட்கிறேன், அப்பொழுது இப்படி நாடு, மாநிலம் போன்ற அமைப்புகள் இருந்தனவா? பூர்வக்குடிகள் பற்றிய ஆய்வானது உரிமைகளை மிட்டெடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் மிது பரிதாபம் கொள்பராக, அவர்களை இரட்சிப்பவர்களாக அரசியல் நாடகமாற்றுவோரிடத்து அல்லது எதிரிக் குழுக்களுக்கு அதிகார சாய்பு ஏற்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.  அதனாலேயே இக்கருத்துக்கள் பற்றி நாம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது.  இந்திய வம்சாவளிக்குள்ளேயே முந்தையோர் யார் என்பது பற்றிய கருத்துக்கள் “Divide and Rule” என்ற ஐரோப்பிய பிரிவினைவாதக் கொள்கைகளுக்கு சற்றும் குறைவில்லாததுதான்.

“ஆரியர்-பார்ப்பனியர்” பற்றிய ஆய்வு அலல்து விமர்சனமானது பண்பாட்டு ஆதிக்கத்தின் மூலமும், தொன்மை வாதங்கள் மூலமும் அச்சமூகத்தினர் கட்டமைத்த பிரிவினைவாத தத்துவங்கள், அரசியல் கோட்பாடுகள், சமூக விஞ்ஞானங்கள் ஆகியவற்றைக் கட்டுடைத்தலுக்கான காரணியாக அமைகிறது.  அதன் மூலம் இந்திய சமூகத்தில் நிலவும் சாதீயப் பூசல்களை, ஏற்றத்தாழ்வுகளை களைய வழிகோலலாம்.  அவர்களின் வாதத்தின் படி ஆரியர்கள் அந்நிய தேசத்திலிருந்து வந்த வந்தேரிகளா, இடம் பெயர்ந்தவர்களோ, படையெடுத்தார்களோ, அழித்தார்களோ இல்லையோ - என்று ஒருவேளை நாம் பொருட்படுத்தினாலும் கூட, ஆரியர் (Noble) என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு சமூகம் பல்வேறு பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், சாதிப் பிரிவினைகளையும், அரசியல் ஆதிக்கத்தையும் நிறுவியதும், மனித உரிமை மீறல்களையும், படுகொலைகளையும், வன்கொடுமைகளையும், வரலாற்று திரிபுகளை செய்ததும் ஆதாரப் பூர்வமான உன்மை. அப்படியிருக்க ஆரிய சார்போ அல்லது அவர்கள் வகுத்துக் கொடுத்த சம்ஸ்கிருத மேட்டிமைத்தனமான அணுகுமுறயுடன் நடக்கும் திராவிட எதிர்ப்பு வாதமோ, பூர்வக்குடிகள் பற்றிய ஆய்வுகளோ சமூகத்திற்கு ஒருபோதும் நீதியை வழங்காது.  

ஒரு குழு அல்லது பிரிவினரின் தனித்தன்மைகளை முன் வைத்து தனி அந்தஸ்து கோருவதும், அதை வைத்து பொருளாதார, அதிகார நிலைகளில் உயர்விடத்தை பிடிக்கும் செயல்களில் ஈடுபடுவதனாலும்தான் மற்ற பிரிவினர், ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது வேர்களைத் தேடி வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்படி ஆரியர்களின் திரிபுகளை, பார்ப்பன அரசியலை வெட்டவெளிச்சமாக்கி வருபனமவாக திராவிட இன ஆய்வுகள் இருப்பதால், அதுவும் உலகின் ஆதி இனம் லெமூரியா எனப்படும் குமரிக் கண்டத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று கண்டறியப்படுவதால் திராவிட இன மக்களின் தொன்மையானது வேத மரபு, சம்ற்கிருத ஆதரவாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறதோ என்னவோ?

புவியியல் மாற்றஙகள், கடல் கோள்கள் போன்ற இயற்கை காரணிகளும், மாந்தரால் ஏவப்பட்ட அதிகார தொடுப்புகளும், ஆக்கிரமிப்புகளும் நிலவியலில், மானுட குடி அமர்வில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.  இடப் பெயர்வுகள் நடந்துக் கொண்டேயிருந்தது, நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பின்பு தொழிற்முறை மாற்றங்களுக்காகவும், புவியியல் வளமைக் காரணங்களுக்காகவும் சில இடங்களில் நிரந்தர குடி அமர்வு செய்துக் கொண்டனர். மேலும் இப்படி இடம் பெயர்வு நடைபெறும் பொழுது கலப்புகள் நேரிட்டு உடலியில், மாற்றம், மொழியியல் மாற்றம், பண்பாட்டு மாற்றம், புதிய பண்பாடு தோன்றுதல் ஆகியவை ஏற்படுவதை தடுக்க வியலாது. மானுடக் காரணிகள் மட்டுமன்றி, இயற்கையும் இம்மாற்றங்களில் தட்ப வெப்ப சூழலின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, குறிப்பாக ஒலி சார்ந்த மொழியியல் மாற்றம், உடலியல் தோற்றம் அமைப்பு ஆகியவை. ஆக பழங்குடியினர் கூட வேறு தட்ப வெட்ப சூழலுக்கு இடம் பெயர்ந்திருந்தால் மேலே சொன்ன மாற்றங்களின் முளம் புற காரணிகளில் வேறுபாடு காணப்படும்.  அப்படிப் பட்ட புற வேறுபாடுகளைக் கேள்விக்குடுத்தி திராவிட இனத்தை பூர்வக்குடிகள் இல்லை என்று வகைப் படுத்துவது பார்ப்பனியம் வகுத்துக் கொடுத்திருக்கும் சனாதன தர்ம வழியேயாகும். 

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு மக்கள் இனம், பெருங்கூட்டம், கூட்டமாக (தங்கள் இனத்தோடு) இடம் பெயர்வதை நிறுத்திக்கொண்ட காலக் கட்டத்திற்கு பின் தனிப் பட்ட பொருளாதாரா, ஆதிக்க அரசியல் காரணிகளுக்க இடம் பெயர்பவர்களைத் தான் வந்தேரிகளுக்குள் அடக்க வேண்டும் அதுவும் ஒரு முத்திரைக் காரணிகளுக்காகவும், மானுடவியல், புவியியல், பண்பாட்டுப் புரிதல்களுகாகவும் பயன் படவேண்டுமேயன்றி பிரிவினைவாத செயல்களுக்காகவும், முதலாளித்துவ ஊடுருவலகளூக்காகவும், தொழில்மயமாக்கலுக்காகவும் அல்ல என்பதே என் கருத்து. 

பல்லாயிரம் வருட வரலாற்றில் பழங்குடியினர் என்பவரிடத்திலும் இனக் கலப்புகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளது.  மலை வாழ் தலங்களிலிருந்து மற்ற இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்த பின்னர், சில இனக் குழு மக்கள் மலை மோட்டிலேயே தங்கள் வாழ்வாதாரங்களை அமைத்துக் கொண்டு பல நூற்றாண்டுகாலமாக வாழ்ந்துவருகிறார்கள். வாணிக தொடர்புக்காக ஊற்களாக, நகரங்களாக  மாற்றப்பட்ட இடங்களுக்கு இடம் பெயர்நதவர்களும், மலைக் கீழ் தலங்களான கிராமப் புற இடங்களில் வாழ்வோரும் ஆதிக்க வர்கக்ங்கள் திணித்த கருத்தாக்கங்களையும், தொழில்மயமாக்கல் கொள்கைகளோடு ஒத்திசைந்தும், நவ நாகரீக திணிப்புகளை உட்செரித்தும் காலப்போக்கில் மாறிவிடுகின்றனர்.  அதனாலேயே இனக் குழுமுறை ஒழிந்து பார்ப்பனியம் தோற்றுவித்த சாதி முறை மேலோங்கி நின்றது. இந்தப் பண்பாட்டு மாற்றம் நகரங்களில் அந்நியத் தன்மையுடனும், நகரங்களின் எல்லை முடிவில் குறைவாகவும், கிராமப் புரங்களில் மரபுத் தொடர்ச்சியின் நீட்சியாகவும் காணப்படுகிறது.  மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரபுறங்களையும், சுற்றியுள்ள கிராமப்புரங்களையுமே முதலில் குறிவைத்து நகர்த்துகின்றனர் முதலாளிகள், ஆதிக்க வர்கத்தினர், மற்றும் அரசு.

திணிப்புகளுக்காகவும், சந்தைப் படுத்தலுக்காகவும் முதன் முதலில் முதலாளிகளால் செய்யப்படுவது பண்பாட்டு ஆய்வுகள், நிலவியல் ஆய்வுகள். அப்படிச் செய்யப்படும் ஆய்வுகளிலிருந்து தனித் தன்மைகளை கண்டறிவது, பின்பு அத்தனித் தன்மைகளுக்கேற்ற பண்டங்களை தாங்கள் உற்பத்தி செய்வதாகவும், அந்த உற்பத்தி மையங்களை நம் இடங்களில் நிறுவுவதால் வேலை வாய்ப்பு பெருகுவதாகவும் சொல்லி உள் நுழைந்து விடுவர். இந் நிறுவனங்களால் ஏற்பட்ட இயற்கை சீரழிவுகளும், பண்பாட்டொழிப்புகளும், இன அழிப்புகளும் ஏராளம்.  இவ்வாய்வுகளைக் கொண்டு பண்பாட்டின் பெயரால், மொழியின் பெயரால், தேசியத்தின் பெயரால், மூதாதையர் தொடர்பின் பெயரால் என்று பல்வேறு முறைகளைல் தேவையற்ற பற்று உணர்வுகளை விதைத்து காலனியாக்கங்களின் நீட்சியான நவீன நகரமயமாகமக்கலை உலக அமைப்புகள், முதலாளிகல் செய்து வருகின்றனர். (அந்தமான் ஆதிவாசிகளை நாகரீகப் படுத்துக்கிறோம் என்று ஒருவரை அழைத்து செல்லப்பட்டு, மாற்றங்களை சகியாமல், நாகரீக உணவுகளை உண்ணமுடியாமல் இறந்து போய்விட்ட்தாக தொலைகாட்சிசயில் செய்தி ஒளிபரப்பானது நிணைவுக்கு வருகிறது. இதுவே ஆதிக்க வர்கத்தினருக்கிருக்கும் பூர்வக் குடிகள் பற்றிய அக்கறை)

மலை வாழ் தலங்களிலிருந்து இடம் பெயறாத தொல் பழங்குடி மக்கள்,அவர்களுக்குள்ளேயே தொழில் முறைகளை வகுத்துக் கொண்டு தேவைப் படும் நேரங்களில் மற்ற இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து மீண்டும் தங்கள் தலங்களுக்கே திரும்பி விடுகின்றனர்.  எந்த நாகரீகத் திணிப்புகளையும், இயந்திரமயமாக்லையும், தொழிற்சாலைப் பெருக்கத்தையும், இயற்கை விரோதப் போக்கையும் அவர்கள் அனுமதிப்பதேயில்லை. அதனாலேயே அம் மலைவாழ் தலங்கள், காடுகள் இன்னும் வளம் குன்றாமல் இருக்கின்றன. அவர்களை மாற்றியமைக்க எவ்வளவு முயற்சிகளை முதலாளிகள் மேற்கொண்டாலும் எதிர்த்து போராடுபவர்களாக அவர்கள் வாழ்கின்றனர். அவர்களை நகர் புறங்களுக்கு இடம் பெயர்த்து விட்டு வளங்களை சுரண்ட சதிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றையெல்லம் எதிர்த்து போராடும் பொழுது அவர்களுக்கு நக்சல்கள், மாவோயிஸ்டுகள் என்று அரசு முத்திரைக் குத்தி போர் படைகளை அனுப்பி அவர்களை அழித்தொழிக்கும் செயல்களைச் செய்யும்.  

ஆதிக்க அரிப்புக் கொண்டோருக்கு மக்கள் இனத்தை போதுமான வரையில் வகைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும், அப்பொழுது தான் பிரித்தாளவும், பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ளவும் சாதகமான கருத்தாக்கங்களை ஏவ முடியும்.  இதில் பெரும்பான்மையான பிரிவினைவாதக் கருத்துக்கள் மதத்தின் பெயரால் ஏவப்படுகிறது, நாகரீகத்தின் பெயரால் ஏவப்படுகிறது, தொழிமுறையாக்கலின் தேவையின் பெயரால் ஏவப்படுகிறது. இவற்றை நிராகரித்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து, தனிச் சொத்து சேர்த்தலின் தேவையையும் நிராகரித்து வாழ்வோராக தொல்-பழங்குடியின மக்களை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

இனக் குழுவினரது இழி நிலைக்கு சனாதன தர்மம் வகுத்துக் கொடுத்த சாதிய முறைகளும், தனிச் சொத்து, நிலப் பிரபுத்துவ, அடிமை முறை, முதலாளித்துவ பேராசைகளுமேக் காரணம். ஆகவே தான் அவர்கள் பட்டியல் சாதி, ஆதி திராவிடர், தலித் ஆகிய வகைப் பிரிவுகளுக்குள் வைத்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தற போராட்டங்கள் நடந்து வருகிறது.  அதற்காக அம்பேத்கரும், பெரியார் அவர்களும், தலித் தலைவர்களும் நிறைய போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். அம்பேத்கரின் அகிம்சைப் பாதையும், சகிப்புத்தன்மையும் தலித் மக்களின் மேம்மாட்டிற்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது.  கல்வியும், சட்ட அறிவும் மட்டுமே இம்மக்களை விழித்தெழச் செய்யும் அடித்தளங்களை இட்டுத் தரும் என்ற நம்பிக்கையில், கூசச் செய்யும் அவமான்ங்களை புறந்தள்ளி இரவு பகல் பாராது ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக அவர் உழைத்த உழைப்பை சாதியப் பூசல்கள் பற்றிய பேச்சில் மாண்புமிகு நீதிபதிகள் கட்ஜுவும், மிர்சாவும் ஒரு புள்ளியாக்க் கூட சேர்க்காதது வியப்பைத் தருகிறது

நால் வர்ணங்களை ஏற்படுத்தி அவற்றிலும் இம்மக்களைச் சேர்க்காமல் பஞ்சமர் என்று ஒதுக்கிவைத்து, பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று வகைப்படுத்தியது யார் என்று நீதிபதிகள் பேசி அவர்களையும், அவர்களது வேதங்களையும், சாஸ்திரங்களையும் கண்டித்திருந்தால் கூட பரவாயில்லை. அதைவிடுத்து அவர்கள் கூறியிருப்பது

          ”பண்டையப் புராணங்களில் அவர்கள் ராக்சதர்கள், அசுரர்கள் என்று குறிக்கப்பட்டனர்......... கொடுமைப் படுத்தப்பட்டனர்...துரத்தியடிக்கப்பட்டனர்....................இப்போதும் அவர்களின் நிலங்களைக், காடுகளை பறிக்கும் முயற்சி நடந்து வருகிறது”

யார் அல்லது எந்த இனம் இத்தகைய கொடுமைகளைச் செய்த்து, புராணங்களையும், பக்தி இலக்கியங்களையும் இயற்றி மக்களைக் குழப்பியது என்று நேரடியாக சொல்லப்படவில்லை. 

யார் அவர்கள் காடுகளை அழித்து சுரண்டிப் பிழைக்க நிணைப்பது, அதற்கு உதவி செய்வது யார், அதை எதிர்த்து நடக்கும் போராட்டம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த்து, அப்படிப் போராடும் மக்களுக்கு சட்டரீதியாக நிலவும் அச்சுறுத்தல்கள் இவைப் பற்றிப் பேசாமல் திராவிடர்கள் பூர்வக்குடியல்லர் என்பதும், ஆதி, ஆதிக்கு ஆதி என்று 10,000 வருடத்திற்கு முந்தைய மாந்தரினத் தோற்ற வரலாற்றுக்கு பொருத்தமில்லாத ஆய்வறிக்கைகளின் குறிப்புகளைக் கொண்டு பேசுவதும் எவ்வகையில் பூர்வக்குடிகளின் பிரச்சனைகளை, சமூக அவலத்தை புரிந்துக்கொள்ளும் முயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது? அவ்வகையில் திராவிடர் பூர்வக் குடியல்லர் எனும் வரலாற்று உன்மை (ஒரு வேளை அப்படியே இருந்தாலும்) எவ்வாறு பூர்வக் குடிகளின் உரிமைக் பிரச்சனைகளை தீர்க்கவல்லது.

தொழில்மயமாக்கலுக்காக, அரசு நில விரிவாக்கத்திற்காக பூர்வக் குடி நிலங்கள், விவசாய நிலங்கள் பரிக்கப்பட்டு வருகிறது அதை செய்வோர் அரசும், பெரு முதலாளிகளும், அவர்கள் கூட்டு சேந்து கையொப்பமிட்ட அந்நிய நாட்டு பெரு முதலாளிகளும் தான்.  இதில் திராவிடர்களின் பங்கு எத்தகையது? அல்லது அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் என்ன?

நம்மிடையே இருக்கும் சாதியப் பிரிவினைகள், மத வெறி, மொழிப் பற்று ஆகியவை “பற்று பிரிவினைவாத” கதையாடல்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.  குறிப்பாக சாதிப் பிரிவினை. சாதிப் பிரிவினையை வகுத்தது பிராமணர்கள், அதை இந்து மதத்தின் பெயரால் வள்ர்தெடுத்தார்கள் , சாதியானது எவ்வகையில் இன்று சமூகத்தில் செயல்படுகிறது போன்ற விவாதங்களே இவ்வழக்கிற்கு பொருத்தமானதாக இருந்திருக்கும். 

இதில் மகா பாரத துரோணாச்சாரியார், ஏகலைவன் கதையை சாதி மனப்பான்மைக்கு உதாரணமாக சொல்லியிருக்கின்றனர்.  மகாபாரதம் மட்டுமன்றி, வேதம், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இராமாயணம், இன்னும் இதர இந்து மத நூல்கள் அணைத்தும் சாதியைத் தான் பேசுகின்றன, இவற்றை துவங்கி வைத்தவரைக் குறித்து ஏதும் பேசாமல், அதைக் களைய எத்தகைய முறைகளை வகுக்க வேண்டும் என்று ஏதும் பேசாமல் மேலோட்டமாக திராவிடர் குறித்த ஆய்வும், பூர்வக் குடிகள் பற்றிய பரிதாபக் குறிப்புகளும் மக்கள் மனதை சுவாரசியத் தகவல்கள் மூலம் கவர்ந்திட உதவுமே அன்றி அநீதிகளைக் களைந்திட உதவாது. 

பாரத நாடு என்பதற்கான பெயர் விளக்கத்திலிருந்து வேதக் காலத்தை பொற்காலம் என்பது உள்ளிட்ட பல்வேறு பாசிசக் கருத்துக்களை பாடதிட்டங்களில் ஏற்றியுள்ளனர் இந்துத்துவ வாதிகள். (பார்க்க நச்சை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள், அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள், 2005 (முதல் பதிப்பு 2003).

பார்ப்பனியத்தைத் தொடர்ந்து விமர்சிப்பதற்கான அவசியத்தை ஏதோ மதத் தூற்றுதலாக கருதிவிட இயலாது. பிரிவினைகளை விதைத்து விட்டு, தேசியத்தின் பெயரால் பிரிவினைவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்கிக்கொண்டும், இந்துத்துவ நாடு என்று நிறுவ பல்வேறு பயங்கரவாத்தை நிகழ்த்திக் கொண்டுமிருக்கிறார்கள். அவர்களே தற்போது நிலவும் இந்தியச் சமூகச் சிந்தனைகளை கட்டமைத்தவர்கள், இன்றும் ஆதிக்க நிலையில் இருப்பவர்கள் அவர்களும், அவர்களால் அரவணைத்துக் கொள்ளப்பட்டவர்களுமே, இவற்றை சரியாக புரிந்துக் கொள்ளாத பெண்களை, மக்களை மூட மத நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுப்பது சாத்தியமில்லை, அதன் வழி பெண் விடுதலையும், சமதர்ம சமுதாயமும், சுரண்டலற்ற சமுதாயமும் சாத்தியமில்லாமல் போய்விடும் என்ற நோக்கமே இவ்வெதிர்வினைகளுக்குக் காரணமாய் அமைகிறது.
 

(Hon'ble Mr. Justice Markandey Katju - His speech at the first anniversary of the Madurai Bench of the Madras High Court in which he said that the people have a right to criticize the judiciary as the people were supreme in a democracy, and all authorities including Judges were servants of the people, was hailed by Mr. Fali Nariman, the doyen of the bar, in a centre spread article in �Indian Express�. http://www.supremecourtofindia.nic.in/judges/bio/sitting/mkatju.htm)

உதவிய நூல்கள்:
1.   திராவிடர் வரலாறு, சோதிப் பிரகாசம், பொன்மணிப் பதிப்பகம், 2002
2.   சூடாமணி நிகண்டு, பதிப்பாசிரியர் கோவை. இளஞ்சேரனார், சரசுவதி மகால் அச்சகம், 1999
3.   நச்சை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள், அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள், 2005 (முதல் பதிப்பு 2003)
4.   வரலாறும் கருத்தியலும், ரொமிலா தாப்பர்,(தமிழாக்கம் ஆ.றா. வேங்கடாசலபதி), நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா, 2008.
5.   உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாய (மொழி பெயர்ப்பு எஸ். தோதாத்ரி), NCBH, 2010
6.   கோவில் – நிலம் – சாதி, பொ. வேல்சமி, காலச்சுவடு பதிப்பகம், 2007
7.   பண்டைய வேத தத்துவங்களும் வேத மறுப்பு பௌத்தமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், 2008.


மார்ச் மாத உயிர் எழுத்து இதழில் இக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.