May 30, 2014

அப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது?

ஒரு போலீஸ்காரர் காஃபி ஷாப்பில் பெண்ணை ஆபாசமாக படம்பிடிக்கிறார் மற்றொருவர் தாழ்த்தப்பட்ட சிறுமிகளை வல்லுறவுக்காட்படுத்தி மரத்தில் தொங்க விட்ட கும்பலில் ஒருவராக இருக்கிறார்... ஒரு டிடிஆர் பெண்ணை ஏசி கோச்சில் ஏற அனுமதிக்காமல் அவளை மரணத்தின் பிடியில் தள்ளி விடுகிறார்..... - இது இந்தியா

பூமிப் பந்தின் எல்லா திசைகளிலும் வன்கொடுமைகளுக்கும், மிருகத்தனத்திற்கும் குறைவில்லை - அதிலும் அதிகாரம் என்று ஒன்று கையிலிருப்பின் பெண் உடல் என்பது பண்டம்..

பொது மக்கள் - அதாவது சமூகத்தில் வாழ்நிலைப் போராட்டங்களுக்கும் அவமானங்களுக்கும்  பலியாணவர்கள் அல்லது நல்வாழ்வு மறுக்கப்பட்டோர் செய்யும் குற்றங்களுக்கான உளவியில் காரணங்களை ஆய்வு செய்வது மேலும் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றுவது குறித்த வாதங்களை இந்த அதிகார வர்க்கத்திற்குப் பொருத்திப்பார்க்க முடியாது.

அதிகார வர்க்கத்தில் இருப்போர் செய்யும் பாலியல் குற்றங்கள் அதிகார வெறியின் அப்பட்டமான வெளிப்பாடு. அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழக்கப்பட வேண்டும். இடை நீக்கமோ அல்லது பணி நீக்கமோ போதுமான தண்டனையாகாது. பெண் உடலை அவமதிக்கும், சிதைக்கும் இத்தகையோருக்கு வழங்கப்படும் தண்டனை அவனது ஆணாதிக்க சிந்தனைக்கான தண்டனையாக இருக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான திட்டங்களும் பேச்சுகளும் வெறும் பேசு பொருளாகவும், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக விவாதப் பொருளாகவும் மட்டுமே இருந்து வருகிறது. வெளி உலகும், இரவும் பெண்களுக்கு எத்தகைய அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிந்துகொள்ள சம்பந்தபட்ட அரசுத் துறையினர் தங்களது குடும்ப உறுப்பினர் பெண்களை கால் நடையாகவும் பொது வாகனங்களிலும் பயணிக்க வைக்கலாம் - ஒருவேளை அப்போதாவது அவர்களுக்குப் புரியும் வாய்ப்பிருக்கிறது.

சாதாரணப் பெண்கள் போல் அவர்கள் வீட்டுப் பெண்களும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளிலும், சிப்காட் போன்ற தொழிற் வளாகத்திலும் தன்னந்தனியாக சுற்றி வரச் செய்தால் கண் துடைப்புக்காக செய்யப்படும் ஆய்வு போல் அல்லாது உண்மை நிலவரங்களை அவர்கள் கண்டறியலாம்.

மக்களைச் சுரண்டி சொகுசுக் கழிப்பறை கட்டி அங்கு கழிப்பதை சில நாட்களுக்கு நிறுத்திவிட்டு தங்கள் வீட்டுப் பெண்களை கரட்டுக்கு அனுப்பி வைத்தால் இயற்கை உபாதையைக் கூட பயமின்றி கழிக்க முடியாத அந்த அவலம் என்னவென்று அவர்களுக்குப் புரிய வாய்ப்பிருக்கிறது.

நாளுக்கு நாள் பொது வெளி என்பது பெண்களுக்கு ஆபத்தானதாகி வருகிறது. ஆண் துணை இன்றி பெண்கள் பொது வெளியில் நடமாட முடியாது எனும் நிலைதான் 65 கால சுதந்திர இந்தியாவின் சாதனை. ஆண் துணை இருந்தாலும் பெண்களுக்குப் பாதுகப்பில்லை என்பதை நிர்பயாக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். கலாச்சார காவலர்களால் பெண்களோடு செல்லும் ஆண்களுக்கும் பாதுகப்பில்லை.

அப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது?

மோடி அவர்கள் அறிவித்துள்ள 10 அம்ச திட்டத்தில் மூன்றாவது அம்சம் கல்வி, சுகாதாரம், நீர்வளம், ஆற்றல், சாலை ஆகியவற்றுக்கு முன்னுரிமை எனப்பட்டுள்ளது.  பெண்கள் மேம்பாடு அல்லது பாதுகாப்பு குறித்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல எவரும் இல்லையோ?

பெண்கள் நலனை புறக்கணிக்கும் 10 அம்ச திட்டத்தைக் கொண்டு அவரது அரசாங்கம் எப்படி தனது முதல் இலக்கை அடையமுடியும்? – அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை கட்டி எழுப்புதல் – அதிகாரத்துவம் பெண்களின் பாதுகாப்பிற்காக – அடிப்படை உரிமையான – பாதுகாப்போடு உயிர் வாழ்தலுக்காக செய்யவிருப்பது என்ன?  

மேற்சொன்னக் கேள்வி மாநில அரசுக்கும் பொருந்தும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசைக் கைகாட்டி விடுவதும் அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு பெண்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் பொறுப்பை தமிழக அரசு தட்டிக் கழிக்க முடியாது. ஏன்றால் ஒரு பெண்ணாக நான் வேண்டுவது தமிழ் நாட்டிலும் சுதந்திரமாக, தைரியமாக நடமாடும் உரிமையை. 

இரவையும் இயற்கையையும் அச்சமின்றி அனுபவிக்கும் எனது உரிமையை எனக்கு உத்திரவாதம் செய்ய முடியாத எந்த அரசும் என்னை ஆள தகுதியற்றவர்கள். 


May 18, 2014

அறிவுஜீவிகள் என்பவர் யார்?

இன்றைய இந்து நாளிதழில் அரவிந்தன் எழுதிய அறிவுஜீவிகளுக்கும் ஒரு பாடம் என்றொரு கட்டுரை படித்தேன்.

அரவிந்தனின் கட்டுரைகள் பல முக்கிய பிரச்சினைகளை பேசக்கூடியவை, குறிப்பாக திரைப்படங்களில் பெண்கள் சித்தரிப்பு, ஆணாதிக்க வசனங்கள் குறித்த அவரது விமர்சனங்கள் கவனத்திற்குறியவை.

அந்தவகையில் ஜனநாயகத் திருவிழா எனும் பக்கத்தில் (இன்று – மே.18,2014) மற்றவர்களின் கட்டுரையைக் காட்டிலும் நான் அரவிந்தனின் கட்டுரையையே முதலில் படிக்க தேர்வு செய்தேன்.  பஜகவின் வெற்றி, மோடியின் வெற்றி மற்றும் காங்கிரசின் தோல்வி குறித்த அவருடைய அவதானிப்புகளில் எனக்கும் உடன்பாடுண்டு.  அதேவேளை எதிர்மறைப் பிரச்சாரம் என்றொரு பார்வையை வைத்து அறிவுஜீவிகளுக்கு ஒரு பாடம் என்று ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். தலைப்பும் அதையேச் சொல்கிறது. எதிர்மறை பிரச்சாரம் குறித்த அவரது பார்வையும் முடிவும் உடன்படக்கூடியதாக இல்லை.

முதலில் தலைப்பிலேயே எனக்கு ஒரு நெருடல் இருக்கிறது அறிவுஜீவிகளுக்கும் என்று ஒரு ‘ம்’அன்னாவை வைத்துள்ளார்.

அடுத்து //மோடியைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலமும் மோடியையே தேர்தலின் மைய சக்தியாக ஊடகங்கள் மாற்றின. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஊடகங்களும் அறிவுஜீவிகளும் மோடிக்கு அளவுக்கதிகமான முக்கியத் துவம் கொடுத்துவந்தார்கள். அரசியல் களத்தில் எதிர்மறைப் பிரச்சாரமும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என்பதால் இதுவும் மோடிக்குச் சாதகமாயிற்று.

ஒருபுறம் செயலற்ற எதிரி. மறுபுறம் எல்லாமுனைகளி லிருந்தும் கவனம் பெற்றுவரும் ஒரு ஆளுமை. இவற்றுக்கு மத்தியில் மாற்றம் தேடும் மக்கள். இந்நிலையில் மக்களின் தேர்வு என்னவாக இருக்குமோ அதுதான் இந்தத் தேர்தலில் நடந்திருக்கிறது.
ஜனநாயக நாட்டில் மக்களுடனான தொடர்பை அறுத்துக்கொள்ளும் எந்த சக்தியும் தன் வலிமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதே இந்தத் தேர்தல் தரும் மிகப் பெரிய பாடம். அளவுக்கதிகமான எதிர்ப்பும் ஒரு நபரின் நாயக பிம்பத்துக்கு வலு சேர்க்கும் என்பது துணைப் பாடம். முதலாவது பாடம் கட்சிகளுக்கு. இரண்டாவது பாடம் அறிவுஜீவிகளுக்கு.//

எதிர்மறைப் பிரச்சாரம் என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் – அரசியல் களத்தில் எதிர்மறைப் பிரச்சாரமும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என்கிறார். எதிர்மறைப் பிரச்சாரம் என்றால் – Negative Propaganda என்று பொருள் இல்லையா? மோடி அல்லது பாஜக அல்லது மத அடிப்படைவாதக் கட்சிகள் குறித்த அல்லது அவர்களைப் பற்றிய அல்லது அவர்களை எதிர்க்கும் பிரச்சாரம் என்பது எவ்வாறு எதிர்மறைப் பிரச்சாரமாகும்?  இவ்வார்த்தைத் தவறான பொருள் கொடுக்கும்படி இடம்பெற்றுள்ளது என்பதே எனது கருத்து.

அறிவுஜீவிகளும் அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள் என்பதை எப்படி புரிந்துகொள்வது. எந்த அளவுகோலை வைத்து இது அளவுக்குட்பட்ட முக்கியத்துவம் அல்லது இது அளவுக்கதிகமான முக்கியத்துவம் எனும் முடிவுக்கு ஒருவர் வரமுடியும்? அரவிந்தன் எந்த அளவுகோலை வைத்து இம்முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.

மேலும் அவரின் கூற்றுபடியே தேர்தல் அறிவுப்பு வரும் முன்னரே மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என பாஜக அறிவித்ததை எவரும் அறிவர். அவரின் கட்டுரையும் அவர்களின் அனுகுமுறையை பேசுகிறது. பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட ஒரு நபரை சுற்றி எந்த அளவுக்கு விளம்பரங்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ அதே அளவுக்கு அவர் பற்றிய விமர்சனங்கள் எதிர்ப்பலைகள் நிலவுவதுதானே அரசியல் களம். மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினருக்கு, இசுலாமியர்களுக்கு எதிராக  அந்நபரின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள் அரங்கேறியிருக்கும் பட்சத்தில் அச்செயல்பாடுகள் குறித்த விவாதங்களும் அந்நபர் பற்றிய விமர்சனங்கள் உச்சத்தில் இருக்கும் என்பது இயல்புதானே. இது எவ்வாறு எதிர்மறைப் பிரச்சாரமாகும்?

பாஜக வெற்றிக்கும் மோடியின் வெற்றிக்கும் மைய / தேசிய ஊடகங்கள் பெரும் பங்காற்றின என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவ்வூடகங்கள் மோடியை கடுமையாக எதிர்த்தனவா அல்லது விவாத மேடையை ஒரு வியாபார மேடையாக மாற்றி லாபம் கண்டுகொண்டனவா என்பதை சொல்லத் தேவையில்லை. மோடியை கடுமையாக எதிர்த்த ஊடகம் எது என்பதும் எனக்கு உண்மையில் விளங்கவில்லை. தேர்தல் சமையத்தில் எனக்குத் தெரிந்து நமோ விளம்பரங்கள் காட்சி ஊடகங்களில் கொடி கட்டிப் பறந்தன.

ஆக நேரடி ஆதரவாளர்கள் மறைமுக ஆதரவாளர்கள் என இருதரப்பும் ஒவ்வொரு மணித்துளையும் மோடி தலைமை குறித்து பிரச்சாரங்கள், விளம்பரங்கள், மற்றும் விவாதங்களை மேற்கொள்கையில் எதிர் தரப்பு எந்த அளவோடு நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும் என அரவிந்தன் எதிர்பார்க்கிறார் என்பதும் விளங்கவில்லை.

மேலும் இம்முறை பாஜகவின் வெற்றிக்குப் பின் இருக்கும் கார்ப்ரேட் அரசியல் என்ன என்பதை ஒரு மூத்த பத்திரிகையாளரான அவர் நிச்சயம் அறிந்திருப்பார். கார்ப்ரேட் லாபி, பார்ப்பனிய இந்துத்துவ லாபி, பார்ப்பனிய ஊடக லாபி, பனியாக்கள் லாபி என பல லாபிகள் இணைந்து இந்தியாவின் பிரதமரை தீர்மானித்துள்ளது அதை நோக்கி மக்களின் மனதை பலவகைகளில் கட்டமைத்தது. கூடுதலாக கருத்துக் கணிப்புகள் என்பது மக்கள் மனதை வெற்றி பெறப் போகும் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் எனும் ஒரு மனநிலையை உருவாக்கும் என்பதாகவே நான் கருதுகிறேன்.
பெரும்பான்மை ஊடகங்களின் கருத்துக்கணிப்பு யாரை முன்மொழிந்தன என்பதை நாம் அறிவோம். அந்தக் கருத்துக் கணிப்பு படமும் அக்கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மெய்மை இதுவாக இருக்க ஊடகங்கள் மோடியைக் கடுமையாக எதிர்த்ததன என்பது முரண்பாடான ஒரு கருத்தாகவே இருக்கிறது.

அடுத்ததாக அறிவுஜீகளுக்குப் பாடம் என்கிறார் அரவிந்தன். அறிவுஜீவிகள் என்றால் பாடம் கற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டும். எல்லா அறிவையும் பெற்றுவிட்டேன் என்று சொல்பவர் அறிவுஜீவியாக இருக்க முடியாது. ஆனால் அரவிந்தன் சுட்டிக்காட்டியிருக்கும் இரண்டாவது பாடமான மோடி – எதிர்மறைப் பிரச்சாரம் என்பதை பாடமாக எடுத்துக்கொள்வதாக இருப்பின் அறிவுஜீவிகளின் சமூகப் பாத்திரம் என்ன என்பதை  விளக்கி அவர் உதவி செய்ய வேண்டும்.  ஒரு நபர் அல்லது அமைப்பு அல்லது கட்சி அல்லது சம்பவம் குறித்து எந்த அளவில் அறிவுஜீவிகள் தங்களது எதிர்ப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர் விளக்க வேண்டும்.

நாயக பிம்ப கட்டமைப்பு என்பதை ஒரு கார்ப்ரேட் லாபி, கார்ப்ரேட் ஊடக லாபி செய்து கொண்டிருக்கையில் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட அறிவுஜீவிகள் செய்ய முடிவதெல்லாம் எதிர் பிரச்சாரம் மட்டுமே (எதிர்மறைப் பிரச்சாரமல்ல). சொல்லப் போனால் அத்தகைய அறிவுஜீவிகள் சிறுபான்மையினரே. அவர்களின் எதிர்ப்பும் எதிர் பிரச்சாரமும் மோடிக்கு சாதகமாகி அவரது வெற்றிக்கு வழிவகுத்துவிட்டதென்றால், அவர்களது குரலுக்கு அத்தனை சக்தி இருந்திருக்கிறது என்பதை ஒரு நேர்மறை விஷயமாகவே வைத்துக்கொள்வோம். அதே போல் அறிவு ஜீவிகள் ஆதரிக்கும் ஆனால் பெரும்பான்மையினர் (அறிவுஜீவிகள் அல்லாதோர்) எதிர்க்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விதி பொருந்துமா? ஆனால் அங்கும் மக்கள் நலன் சவக்குழி தோண்டி புதைக்கப்படுகிறதே.

1)  மோடிக்கு எதிராக, பிஜேபிக்கு எதிராக, மத அடிப்படைவாத கட்சிகளுக்கு எதிராக அறிவுஜீவிகள் செய்தது எதிர்மறைப் பிரச்சாரமா அல்லது அவர்கள் முன்வைத்தது உண்மைகளா?

2) அறிவுஜீவிகள் என்றால் யார்? அரசியல் களத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை எதிர்ப்பவர் அனைவரும் அறிவுஜீவிகளா? அறிவுஜீவிகள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்கள்தாமா? ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா?

இறுதியாக அறிவுஜீவிகளின் அளவுக்கதிகமான எதிர்ப்பு நாயக பிம்பத்திற்கு வலு சேர்க்கும் என்றால் இந்நேரம் நம் நாட்டில் ஏன் உலகெங்கிலும்கூட கார்ல் மார்க்சும், எங்கல்சும், லெனினும், மாவோவும் இன்னும் இடது சாரி உழைக்கும் வர்க்க அரசியலை முன் வைத்து பேசிய தலைவர்களும் அல்லவா பெரும்பான்மை மக்கள் மனதில் கதாநாயகர்களாக மிளிர வேண்டும்.  ஆனால் நிஜம் அதுவா?
அப்படி பார்த்தால் ஆளும் வர்க்க அறிவுஜிவிகளான பெரும்பான்மையினருக்கு அதிகமான எதிர்ப்பு இடதுசாரி கட்சிகள் (குறிப்பாக மாவோயிஸ்டுகள்) மீதுதான் என்பதாக சொன்னால் இந்நேரம் இடதுசாரி கட்சிகள் வெற்றிவாகை சூடியிருக்க வேண்டுமே?

எல்லாவற்றிற்கும் அப்பால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதானால் முதலாளித்துவ ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கும் இடதுசாரி கட்சிகள் தேர்தலின் மைய சக்தியாக மாறி இருக்க வேண்டுமே.

நண்பர் அரவிந்தன் சரியான ஒரு விஷயத்தைச் சொல்ல தவறான சொற்களைத் தேர்ந்தெடுத்துவிட்டாரோ என தோன்றுகிறது.


தொடர்புடைய சுட்டி:

http://saavinudhadugal.blogspot.in/2012/01/literatus.html - 

எழுத்தாளர் (Literatus)