Mar 4, 2015

மண் அரசியல்திரையரங்குகளில், சமீபகாலமாக ஒரு விளம்பரப் படம் ஒளிபரப்பப்படுகிறது. இந்தியன் என்பதில் பெருமை கொள் எனும் செய்தியை உள்ளடக்கி மண்ணின் பெருமை பேசுகிறது அப்படம். தேசிய மக்கள் தொகை பதிவகம் சார்பாக அவ்விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. வரலாற்றில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு ‘தேசிய’ உணர்வு இப்போது முன்னெடுக்கப்படுகிறது. நம் மண், நமது தேசம், நமது கலாச்சாரம் ஆகியவை குறித்த ஒரு பெருமை உணர்வை அதிகப்படுத்துவதன் மூலம், ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசானது தம்மை தூய தேச பக்தர்களாகவும், கலாச்சார காவலர்களாகவும் பறைசாற்ற முயற்சிப்பது நமக்கு விளங்குகிறது.

இதில் என்ன தவறு, ஓர் அரசின் கடமையே அதுதானே, நாடு கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதுதானே என தோன்றலாம். அது அரசின் கடமையோ இல்லையோ, தேசத்தை, பிறந்த மண்ணை நேசிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும், உண்மையில் அது இயல்பானது. ஆனால் அரசென்னும் இயந்திரம் அதைக் கையிலெடுக்கும் விதமே நம்மை அச்சுறுத்துகிறது.  இந்திய நாடு இந்து நாடு எனும் கருத்தியலை கொண்ட ஓர் அரசானது ‘நம்’ மண் என்று அழுத்தம் கொடுப்பதன் மூலம் எவரெவரை ‘அந்நியர்கள்’, ‘வந்தேறிகள்’ என்று மறைமுகமாக சொல்கிறது என்பது வெளிப்படை. ஆக, தம் இந்து தேசிய அரசியலுக்கும், இந்து தேசிய கட்டமைப்புக்கு விசுவாசிகளை பெருக்கிக்கொள்ளவும் இவ்வரசு மண் அரசியலை கையிலெடுக்கிறது. நம் நாடு குறித்த பெருமித உணர்வை தூண்டிவிடுவதன் மூலம், ‘வந்தேறிகள்’ மீதான, அதாவது மாற்று மதத்தினர் மீதான வெறுப்புணர்வை வளர்க்க முற்படுகிறது, தேச பக்தியின் பெயரால் இந்து மதப்பற்றை வளர்க்கும் ஓர் உத்தி இது.  அத்தோடு அரசை எதிர்ப்பவர்கள் பற்றிய எதிர்மறை உணர்வை ஏற்படுத்தவும் இது ஏதுவானது.

அரசியல் சாசன முகவுரையிலிருந்து, நாட்டின் கொள்கைகளைக் குறிக்கும் ‘மதச்சார்பற்ற மற்றும் சோஷலிச’ ஆகிய சொற்களை நீக்கி 26ஆம் தேதி குடியரசு தின விழாவுக்கான விளம்பரம் ஒன்றை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள செயலானது, நமது சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்தத் தவறவில்லை. அரசுப் பிரதிநிதி ஒருவர் இந்து மதப் பற்றோடு கருத்துகளை தெரிவிப்பதும், மற்றொரு பிரதிநிதி அப்படி ஒரு திட்டமே இல்லை என மறுப்பதும் அரசின் வழக்கமாகி விட்டது. அவர்கள் தேச பக்தர்கள், இந்து மதப் பற்றாளர்கள், கலாச்சார காவலர்கள் என்பதை விட அவை யாவும் அவர்களின் அரசியல் தந்திரம் என்று புரிந்துகொள்வதே அறிவுடமையாகும்.  இதுபோன்ற உணர்வுபூர்வமான சர்ச்சைகள் மூலம் தம் அரசு மீதான ஒரு மென் உணர்வையும், அதேநேரத்தில் தாம் எது செய்தாலும் ‘இந்தியர்களின்’ நன்மைக்கே எனும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையையும் பெருவதற்கான தந்திரமது. ’இந்து அரசு; எப்படி நாட்டின் நலனுக்கு துரோகம் செய்யும் என்பதே நம் ஒவ்வொருவர் மனதிலும் நிலைபெற வேண்டும்.

அரசுக்கு இந்திய மண் மீது இருக்கும் அதே பற்று மக்கள் மீதும் இருக்கிறதா என்பதே நமது கேள்வி. இல்லை என்பதையே அரசின் அடுத்தடுத்த திட்டங்கள், கொள்கைகள் நமக்கு உணர்த்துகின்றன. முதலாளித்துவ ஆதரவும், ஏகாதிபத்திய ஆதரவும் கொண்ட எந்த ஒரு அரசுக்கும் மண்தான் பிரதானமே ஒழிய மக்கள் அல்ல. உழைப்புச் சக்தியாக மட்டுமே இவர்களுக்கு மக்கள் தேவை, தீர்மானிக்கும் சக்திகளாக மக்கள் மாறுவதை இவ்வரசுகள் விரும்புவதில்லை, அதனால்தான் கண்மூடித்தனமான விசுவாசத்தைப் பெறுவதற்கான அத்தனை மாயையகளையும் இவ்வரசுகள் பிரச்சாரம் செய்கிறன. தேச பக்தி, வளர்ச்சி ஆகியவை அதன் தாரக மந்திரங்கள். அப்போதுதான் தேச பக்தியின் பெயரால்  இராணுவவாதத்தையும், வளர்ச்சியின் பெயரால் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

இரண்டிற்கும் பிரதானம் மண் – நிலம். டிசம்பர் 2014இல் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத் திருத்தத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியது. நிலங்களைக் கையகப்படுத்த 70-80% நில உரிமையாளர்களின் ஒப்புதல் தேவை, சமூக பாதிப்பு மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்ற முந்தைய சட்டங்கள் இதன்மூலம் ரத்து செய்யப்படுகின்றன. ஐந்து முக்கியமான வளர்ச்சி திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்துவதென்றால் விவசாய நிலங்களுக்கும்கூட விதிவிலக்கில்லை. பெரு நிறுவனங்களுக்கும், இராணுவ தயாரிப்புகளுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களின் தொழில் நிறுவனங்களுக்குமே அந்நிலங்கள் அளிக்கப்படும், (சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில், பல சலுகைகளுடன்). இதுதான் இவ்வரசின் தேச பக்திக்கான உண்மைக் காரணம், உண்மையில் இது தேச பக்தியல்ல, தங்களை ஆட்சியில் அமர்த்தியதற்கான முதலாளித்துவ, ஏகாதிபத்திய விசுவாசம்.

முந்தைய அரசுகள் சட்டங்களையும், இராணுவத்தையும் கையிலெடுத்ததென்றால், பா.ஜ.க அரசோ மண்ணை (நாட்டுப்பற்றை) கையில் எடுக்கிறது. இந்திய மண்னை கூறு போட்டு விற்க, மண்ணையே ஆயுதமாகப் பயன்படுத்தும் ஓர் உத்தி, உண்மையில் இது வெற்றிகரமான உத்தியே. அரசின் இந்த மக்கள் விரோதப் (உண்மையில், தேச விரோத) போக்கை அம்பலப்படுத்தும்,எதிர்க்கும் சக்திகளுக்கெதிராக மக்களை ஓரணியில் திரட்ட இவர்களுக்கு இந்துமத அரசியல் தேவைப்படுகிறது. முதலாளித்துவ தொழில் மட்டத்தில் ஆதிக்க சாதி மேலாதிக்கத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ளவும், சிறுபான்மையினரையும், மாற்று மதத்தவரையும் இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கவும் இந்த இந்து தேசபக்த மண் அரசியல் இவர்களுக்கு உதவுகிறது.

மண்ணும் வளமும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இதுபோன்ற தேச பக்த-மக்கள் விரோத அரசுகள் அவ்வளங்களை மக்களின் பிடியிலிருந்து பறித்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது நிகழ்ந்து கொண்டிருக்கையில், நிலமும் வளமும் பறிபோய், விவசாயமும் சிறு தொழில்களும் நலிவடையத் தொடங்கும்;  மேலும், லட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒருபுறம் தொடர்கதையாக நடக்க, மீதமிருப்பவர்களை உலகளாவிய மூலதன வளர்ச்சிக்குத் தேவைப்படும் உலகளாவிய உழைப்புச் சக்திக்காக (Reserve Army of Global labor) மலிவான கூலிகளாக, அதிலும் பேரம் பேச முடியாத கூலிகளாக மாற்றுவதும் நிகழ்ந்துவிடும்.   புதிய திட்டங்கள் தொடங்கும்போது வேலை வாய்ப்பு பெருகும் என்ற விளம்பரங்களும், போதுமான லாபம் சம்பாதித்ததும் பெரு நிறுவனங்கள் கதவடைப்பை அரங்கேற்றுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஒருபுறம் பசுமைத் திட்டங்கள், மற்றொருபுறம்  கோரமான விபத்துகள் ஏற்பட்டால்கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இழப்பீடு தரவேண்டியதில்லை எனும் ஏற்பாடுகளோடு ஒப்பந்தங்கள். மண் வளம் கெட்டாலும் பரவாயில்லை எமக்குத் தேவை முதலீடு என்றால் வளர்ச்சி யாருக்கு?

தண்ணீரை சேமியுங்கள், தேவையற்றபோது மின்சார சாதனங்களை முடக்கி வையுங்கள் போன்ற அனைத்து அறிவுரைகளையும் மக்களுக்கு வழங்கிவிட்டு நிலத்தையும், தண்ணீரையும், மின்சாரத்தையும் அப்பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கு இலவசமாகவும், மானியத்தோடும் வழங்கி தனியுடமை செல்வக்குவிப்புக்கும், ஏகபோக மூலதனக் குவிப்பிற்கும் மேலும் மேலும் சேவை செய்யும். தனியுடைமைக்கு ஆதரவான வளர்ச்சி திட்டங்கள் நாட்டையும் பொருளாதாரத்தையும் அழிவை நோக்கியே கொண்டு செல்லும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

மக்களை குறி வைத்து தேசியம் பேசும் இவ்வரசின் இந்திய மண் உணர்வு மற்ற மாநிலங்களோடு வளங்களைப் பகிரும் விஷயத்தில் ஏதேனும் பயனளித்திருக்கிறதா? தண்ணீருக்காக தமிழ்நாடு தம் உரிமையைக்கூட நிலைநாட்ட முடியாத நிலையில்தானே இருக்கிறது. மாநில அரசுகள் இந்தியர்கள் இல்லையா? வளங்களைப் பகிர்ந்துகொள்ள இந்திய தேசிய உணர்வு ஏன் அவர்களை வழிநடுத்துவதில்லை? இந்தியன் என்ற பெருமை மட்டும் போதுமா மக்கள் உயிர்வாழ?  

மக்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை, அதேவேளை அரசு மக்களை எந்த தராசில் வைத்துப் பார்க்கிறது, எல்லா மாநிலங்களையும், வளங்களையும் அது ஒரே தராசில் வைத்துப் பார்க்கிறதா என்பதே நமது கேள்வி. உண்மையில் அரசுக்கு இருப்பது நாட்டுப் பற்றா அல்லது ஏகாதிபத்தியங்களுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்கும் நாட்டை தாரை வார்க்கும் பற்றா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஒபாமாவின் வருகைக்காக இந்தியா லட்சங்களில் செலவு செய்து சாதித்தது என்ன? அணுசக்தி ஒப்பந்தங்களில் தடை நீக்கம் மற்றும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள். உலகெங்கிலும் அணுசக்திக்கெதிரான போக்குகள் பெருகிக் கொண்டிருக்கும்போது, இம்மண்ணில் அது போன்ற ஆபத்தான உற்பத்திகளுக்கு அனுமதி அளிப்பதுதான் தேச பக்தி, இல்லையா? இதை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள். மக்களே இப்போதாவது புரிகிறதா அரசின் அகராதியில் தேசம் என்றால் என்னவென்று? தேசம் என்றால் மண்ணும் வளமும், அப்படியென்றால் தேசத் துரோகிகள் யார் – இம்மண்ணை முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் கூறு போட்டு விற்கும் அரசுக்கு எதிரானவர்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? தோழர்களே, முதலாளித்துவ உலகில் தேச பக்தியும் ஒரு விற்பனைப் பொருளே – “மேக் இன் இந்தியா”.  
source: https://drive.google.com/file/d/0B3s-aUDmOjq3TUx0MlBoUkZHUjQ/view