Jun 3, 2015

பெண்ணுக்கழகு



அழகு என்ற சொல்லுக்கு பால் அடையாளம் இல்லை. எனினும், சமூகத்தில் அது பெண் பாலினச் சொல்லாக மாற்றப்பட்டுவிட்டது. ஒரு பெண்ணைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டுமெனில் அவள் நல்ல அறிவானவள் என்று சொல்லக் கேட்பது அரிதுலும் அரிது. அவள் அழகானவள், சுமாராக இருப்பாள், குண்டாக இருப்பாள் என்பன போன்ற அங்க வரையறைகளே பெண்ணுக்கு அடையாளம்.  ஆனால் ஆணைப் பற்றி சொல்ல – தொழில், கல்வி, அறிவு, வம்சாவளி போன்றவை முன்னிறுத்தப்படும்.

அழகொன்றே பெண்ணின் அடையாளம் என்ற கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றுவிட்டது. அதன் விளைவாக அக்கருத்துப் பள்ளத்திலிருந்து மீளமுடியாதவர்களாகிப் போனார்கள் பெண்கள். இதுவரை ஆணுக்கான நுகர்வுப் பொருளாய் பெண்ணை தாரைவார்த்து வந்த அக்கருத்தியலானது இன்றைக்கு அழகு சாதன நுகர்வுப் பொருள்களுக்கான சந்தை இலக்காய் பெண்ணை மாற்றி வைத்திருக்கிறது.  ஊடகங்களில் எங்கெங்கு காணினும் அழகிப் போட்டிகள், அழகு சாதனக் குறிப்புகள், தோல், நிறம், முடி, நகம், உடல் எடை… இத்யாதி பற்றிய மருத்துவக் குறிப்புகள். எந்நேரமும் பெண்கள் தங்கள் அழகு பற்றிய கவலையிலே மூழ்கியிருக்க வேண்டும். பெண்களின் கைப்பையில் என்ன இருக்கும் மேக்கப் சாதனங்கள்தானே என்று ஆண்கள் ஏளனம் பேசுவதை நாம் கேட்பதுண்டு. ஆனால் அத்தகைய ஆண்கள்தான் ‘அழகற்ற’ எந்தப் பெண்ணையும் ‘சப்பை ஃபிகரு’, ‘கேவலமான ஃபிகரு’ என்று பெருந்தன்மையோடு அவமானப்படுத்துகின்றனர்.

பெண்களுக்கு அதீத அழகுணர்வு இருக்கிறது. இதை யாரும் மறுக்கவில்லை. அதே அளவு ஆண்களுக்கும் இருக்கிறது. ஆனால் ‘அழகற்ற’ பெண்ணுக்கு எதிர்காலமும், வாய்ப்புகளும், பெரும் சவாலுக்குறியது. ஆண்களுக்கு பெரும்பாலும் அப்படியில்லை. பெண்ணை வெறும் போகப் பொருளாக பாவிக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளே பெண்களின் அழகுப் பைத்தியத்திற்குக் காரணம். நிறுவனங்களின் வாயில்களில், அழகான பெண்கள் வேலைக்குத் தேவை எனும் பெயர் பலகையைக் கண்டிருப்போம், அழகான ஆண்கள் தேவை என்று கண்டிருக்கிறோமா?

பெண்ணுக்குத்தான் அழகு பற்றிய எத்தனைக் கவலைகளை இந்த அழகு சாதன நிறுவனங்கள் திணிக்கின்றன. பரு, நிறம், சுருக்கம், கரு வளையம், பளபளப்பு, கை கால், அக்குளில் முடிப் பிரச்சினை, தூசு, மாசினால் சருமப் பிரச்சினை, குதிகால் வெடிப்பு, அங்க அளவு, முடி, கண்ணின் கருவிழி நிறம், கண்ணாடி அணிதல் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதனால் தாக்கம் பெற்று பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஒருபுறம் தங்கள் அழகை மேம்படுத்திக்கொள்ள பெண்கள் தீவிரமாகப் போராட விளம்பரங்கள் நிர்பந்திக்கையில், அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அல்லது தன் அழகை முன்னிறுத்தும் பெண்கள் பற்றிய தவறான - திமிர் பிடித்தவள், ஒழுக்கம் கெட்டவள், நம்பிக்கைக்குறியவள் அல்ல என்பன போன்ற - கருத்துகளை பரப்பும் வேலையை திரைப்படங்களும், வேறு சில சமூக மட்டங்களும் செய்கின்றன. பெண்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாய் சிக்கித் தவிக்கின்றனர்.


அழகு மட்டுமிருந்தால் போதும் பெண்கள் வானையே எட்டிவிடலாம், முக்கியமாக பெரும் பணக்காரியாகலாம், சாலையில் நடந்துபோகும்போது ஒரு திரைப்பட இயக்குனர் அல்லது விளம்பர இயக்குனர் கண்ணில் பட்டு ஒரேநாளில் நட்சத்திரமாகி விடலாம், இன்னும் உச்சபட்சமாக ஓட்டப்பந்தயத்தில் வெல்லக்கூட அழுகிருந்தால் போதும் என்கிற அளவுக்கு வியாபார நிறுவனங்கள் நம்மை முட்டாள்களாக்குகின்றன. இக்கருத்தை ஆழமாகப் பரப்பப் பயன்படும் உத்திகளில் ஒன்று அழகிப் போட்டியாகும்.

அழகிப் போட்டிகள் மூலம் பெண் உடல் மேலும் மேலும் பாலியல் பண்டமாக்கப்படுகிறதே தவிர எந்த விதத்திலும் அது பெண்களின் விடுதலைக்கு வழிவகுப்பதில்லை. உலக அழகிப் போட்டிகள் போன்றவை உண்மையில் பெரும் அரசியல் உள்நோக்கமுடையது. அழகுசாதனப் பொருட்கள், ஆடை அலங்கார நிறுவனங்கள், அழகான உடல் பராமரிப்புக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் ஆதாயத்திற்காக நடத்தப்படுபவை. முதலாளித்துவ நுகர்வு கலாச்சார வேட்டையின் வலைவீச்சுகளில் ஒரு பகுதி அது. எந்த நாட்டின் பெண் அப்பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது உட்பட அனைத்திலும் சந்தை அரசியல் நிறைந்துள்ளது. வெல்லும் அழகிகளைக் கொண்டு தமது அழகு சாதனப் பொருட்களை அந்நாட்டில் சந்தைப்படுத்து எளிமையானது.  கிரிக்கெட் விளையாட்டைப் போல் அந்தந்த நாட்டின் தேசிய உணர்வை அல்லது இன உணர்வை பகடைக்காயாய் கொண்டு செல்வாக்குச் செலுத்தி  மக்களின் ஆதரவைப் பெற அவர்களையும் ஓட்டெடுப்பில் பங்கெடுக்கச் செய்து தம் சரக்குகளுக்கான ஆதரவை வெகு தந்திரமாக அவை நிலைநாட்டிக்கொள்கின்றன. இதில் சமீபத்திய பகடைக்காய் தமிழ் இன உணர்வு, முதன் முதலில் ஒரு தமிழ் பெண் உலக அழகி ஆகும் வாய்ப்பு, தமிழ் பெண்ணுக்கு வாக்களியுங்கள் எனும் அறைகூவல்கள். ஒரு இனத்தின் உயர்வுக்கும், விடுதலை போராட்டத்திற்கும் அடையாளமாக அழகு எதற்காகத் தேவைப்படப் போகிறது? அல்லது உலக அழகிகள் இதுவரை சாதித்ததுதான் என்ன? மானுட விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்குதான் என்ன?

அழகு பற்றிய வியாபாரிகளின் அக்கறையில் சருமத்திற்கு அடுத்ததாக இடம்பிடிப்பது மயிர் பிரச்சினை. அதற்குத் தீர்வாக சந்தையில் இன்றைக்கு எத்தனை எண்ணை நிறுவனங்கள் தோன்றிவிட்டன. ஏதோ ஒரு எண்ணை 200 மில்லி 400 ரூபாய் என்று சொல்லக் கேள்வி. ஆனால் நம் வீட்டு தாய்மார்கள் தோட்டத்தில் அல்லது சாலையோரத்தில் கிடைக்கும் எளிய மூலைகை இலைகளைப் போட்டு காய்ச்சிக் கொடுக்கும் எண்ணைக்கு 50 ரூபாய் கூட செலவாகாது. இப்படி ஒவ்வொரு அழகு சாதனப் பொருளகளிலும் அடிக்கப்படும் கொள்ளை இலாபம் அநியாயமானது. ஆனால் உண்மை என்னவெனில், உடலின் எந்தவொரு பிரச்சினையும் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது, அதாவது உடலின் வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடையது. உடல் உறுப்புகளை, குறிப்பாக வயிற்றை சுத்திகரிப்பது அல்லது வாழ்க்கை முறையை இயற்கையோடு இயைந்த வகையில் பராமரிப்பதோடு தொடர்புடையது. மேல்பூச்சுகள், எண்ணைகள் எந்த வகையிலும் அதற்கு தீர்வாக அமையாது. மேலும், பொருள் இழப்பைக் காட்டிலும், அவை ஏற்படுத்தும் மன சஞ்சலங்கள், ஆபத்தான கருத்தியல்களே நமக்கு கவலை அளிக்கின்றன.

அழகு சாதன நிறுவனங்களின் பிரச்சாரத்தில் மற்றொரு ஆபத்தான பிரச்சினை என்னவெனில் அதன் பாலினவாதமாகும். ஆண் உடலின் இயற்கையான தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஆணாதிக்கச் சமூகமானது பெண் உடலை தம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைப்பதிலேயே குறியாய் இருக்கிறது. உதாரணமாக, உடலில் முடி முளைப்பதென்பது இயற்கையான ஒன்று ஆனால் அதை மழிக்கச் சொல்லி பெண்கள் ஏன் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கால்களில் முடி தெரிய ஆண்கள் ஷார்ட்ஸ் அணிகையில், அத்தகைய உடை அணிய வேண்டுமானால் பெண்கள் தங்கள் கால்கலை மழுமழுப்பாக வைத்திருக்க வேண்டும், அக்குளில் முடியை சிரைக்க வேண்டு்ம், (வில் போல்) புருவம் மழிக்க வேண்டும், உதட்டுச் சாயம் பூச வேண்டும், மேல் உதட்டில் முளைக்கும் மீசை மயிர்களை மழிக்க வேண்டும், இமைமயிர்களை விரைப்பாக்க வேண்டும், முடிக்கு இஸ்திரி போட வேணடும்…. நகச் சாயம் பூச வேண்டும்…  பெண்களே ஏன் நமக்கு இத்தனை கட்டளைகள். முதலாளித்துவ ‘கண்டுபிடிப்புகளின்’ விளைவாக ஆண்களுக்கும் அத்தகைய நிர்பந்தங்கள் இப்போது வரத் தொடங்கிவிட்டன எனினும், இன்னும் அது எழுதா விதியாக்கப்படவில்லை. ஆண் எப்படி இருந்தாலும் திருமண சந்தையில் அவன் விலை போவான்.

அழகு என்றால் என்ன? எவர் அதை வரையறுப்பது எனும் கேள்வியை எழுப்புங்கள். நம் இயல்பான தோற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்காத ஒருவருக்காக நாம் ஏன் வருந்த வேண்டும்? நம்மை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? ஏன் அடிமைகளாக வேண்டும்?

அழகென்பது தனித்தன்மையில் இருக்கிறது, ஒப்பனை என்பது அத்தனித்தன்மையைக் கொன்று சாயம் பூசப்பட்ட பொதுச் சுவர் போல் நம் முகங்களை மாற்றுகிறது. தனித்தன்மை என்பது அறிவில் இருக்கிறதே ஒழிய முகத்தில், உடலில் இல்லை. இந்த சமூகத்தில் பெண் பாலினத்தின் இடம் என்ன? எவர் நம்மைக் கட்டுப்படுத்துகின்றனர்? அதற்குக் காரணமான சமூக அமைப்பு யாது என்பது பற்றிய அறிவே இன்றைக்குப் பெண்களுக்குத் தேவை.

வெளித்தோற்ற ரீதியான அழகு விதியானது உண்மையில் நம்மை அவமானப்படுத்தும் ஒரு விதியாகும். அது நம் தன்னம்பிக்கையைக் குலைக்கிறது. தன்நம்பிக்கையே சுயமரியாதையின் ஊற்று. சுயமரியாதை என்பது சுயத்தின் வெளிப்பாடு. அழகுணர்ச்சி சுயத்தைக் கொல்கிறது, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாகக் கருதச் செய்கிறது. ஆண்களுக்கான பாலியல் பண்டமாக நம்மை நிர்ணயிக்கிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.

அழகு என்பது இன்றைக்கு ஒரு வியாபாரச் சரக்கு. ஒன்று நாமெல்லாம் அதற்கான பரிசோதனை எலிகள் அல்லது சந்தை இலக்கு. நம் சருமங்கள் மீதும், நம் உடல் மீதுமல்ல அவர்களுக்கு அக்கறை, நம்மிடம் இருக்கும் பணத்தின் மீதே அவர்களுக்கு அக்கறை. நாம் எவ்வளவுக்கெவ்வளவு சிந்திக்க மறுக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு இலாபம். சரி அப்படியென்றால் எதுதான் பெண்ணுக்கழகு? அழகென்பது ஒரு கருத்து. அது வெறும் சொல். அதைப் பெண்களுக்கான கட்டளையாக்கியது ஆணாதிக்கச் சமூகமும், அதன் பாதுகாவலரான பொருளாதார அமைப்பும். உண்மையில், பெண் உடலைக் கட்டுப்படுத்தும் ஆணாதிக்க விதிகளை ஒழித்தலே பெண்ணுக்கழகு.

நன்றி: உயிரோசை

image source: http://economydecoded.com/2015/02/beauty-consumerism-ugly-truth.html