Feb 13, 2018

நீ... நான்... உடையும் அதிகாரம்


அன்பே
வானின் நீலமாய் நீயும்
பூமியின் சிவப்பாய் நானும்
சேர்கையில் மெய்யாகிறது தொடுவானம்
தொலைகிறது நீ நான் என்னும் அதிகாரம்

சூரியனாய் நீ எழுகையில்
விடியலாய் நான் மலர்கிறேன்
தூரிகையாய் எனை வடித்து
ஓவிமாகிறாய் நீ

இசை நானாக இன்பமாய் நீ
நதி நீயாக ஓட்டமாய் நான்
அலையென மாறி 
உன் பாதங்களை முத்தமிட ஓடி வருகிறேன்
சிப்பியாய் ஓடி ஒளிகிறாய்

உன்னில் நான் ஆவியாக
தென்றலும் மழையும் ஆனோம்
யாப்பும் இலக்கணமும் ஆகி
பாடலும் வரியுமாய் இசைந்தோம்

காதல் நானாக சாரம் நீயாக
காமம் நானாக லீலை நீயாக
இரவு பகலை விழுங்க
முடியாத தேடலில் நம் காதல்

Feb 11, 2018

சமத்துவம் நிறைந்த பொன்னுகலகு அமைய......

அருவருக்கத்தக்க முகமூடி கிழிந்துவிட்டது
மனிதன்
செங்கோல் அற்று இருக்கிறான்
சுதந்திரமாக
எவ்விதத் தடையுமின்றி இருக்கிறான்.
மனிதன்
சமத்துவமாக
வர்க்கமற்ற
குலங்கள் அற்ற
சேதமற்ற நிலையில் இருக்கிறான்.
மனிதன்
எல்லா அச்சத்திலிருந்தும்
எல்லா வழிபாட்டிலிருந்தும்
எல்லா வேறுபாட்டிலிருந்தும்
நீங்கி.
தானே தனக்கு அரசனாக இருக்கிறான்.
- ஷெல்லி

இதுவே நாம் அடைய விரும்பும் பொன்னுலகம்.... (வர்க்கமற்ற.... சாதியற்ற...)
பாட்டாளி வர்க்கம் புரட்சியை முன்னெடுத்துச் சென்று இறுதிவரை நடத்திச் செல்லும் போதும், பழமையான சமூகத்தின் அறிவு ஜீவிகள் தம்மை பெருந்திரளான மக்களுடன் இணைத்துக் கொண்டு செயல்படும் போதும், பெருந்திரளான மக்கள் பழம் சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி, கலை நுணுக்க வளர்ச்சி போன்ற அறிவுச் சாதனைகளைத் தமக்குள் கிரகித்து கலாசார மட்டத்தில் தம்மை உயர்த்திக் கொண்டு செயல்படும் போதும், மனித சமுதாயத்தின் வர்க்கப் பிரிவினைகள், உடல் உழைப்பு, மன உழைப்புப் பிரிவினைகள், மானிட சமூக உணர்வுகளில் ஏற்பட்ட பிரிவினைகள் (சாதி உள்ளிட்ட பிரிவினைகள் – கொற்றவை) ஆகியவற்றுக்கிடையில் ஒரு புதிய ஒற்றுமை மலரும். அது மனித சிந்தனையின் அறிவு அம்சங்களுக்கும், உணர்ச்சி அம்சங்களுக்கும் இடையிலான ஒற்றுமையாகும். அது மட்டுமல்ல, மனித சிந்தனையின் இவ்விரண்டு அம்சங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான ஒற்றுமையாகும்.

அங்கிலேயேப் புரட்சிக் கவிஞன் ஷெல்லி மேற்சொன்னவாறு பாடினான்…. (மனித சமூக சாரம்: கலை அறிவியலின் மூலாதாரங்கள், ஜார்ஜ் தாம்சன்)

வர்க்கம் என்றால் என்ன, நிலவும் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் மற்றும் உழைப்புப் பிரிவினை என்றால் என்ன அதில் சாதி எப்படி இயங்கியது, தற்போது எப்படி இயங்குகிறது, சமூக உறவுகள் என்றால் என்ன, சமூகக் கட்டுமானம் என்றால் என்ன என்பதை எல்லாம் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் (மார்க்சியம்) கொண்டு கற்றரியாமல் ஒருவர் எவ்வளவு நல்லெண்ணெத்துடனும், அர்ப்பணிப்புடனும் போராடினாலும், அல்லது அத்தகைய தலைவர் எவரை முன்வைத்தும், மாற்று மதம் என்று எதனை முன் வைத்து ஜனநாயக சக்திகள் (மார்க்சியத்தைப் புறம் தள்ளிவிட்டு) சாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், சாதி ஒழிப்பு பேசினாலும் அது போதாமை நிறைந்ததாகவே இருக்கும்.

பிரச்சினைக்குரிய அடித்தளத்தைத் தகர்க்காமல் மேல் மட்டத்தை தகர்க்க முனைவது அறிவியலாகுமா? அந்த அடித்தளத்தின் மேல் புதியதொரு கட்டிடத்தை எழுப்பினாலும், அடித்தளத்தில் உள்ள பிளவுகள் காலப்போக்கில் மேலே பரவத்தானே செய்யும்.

நாங்கள் மார்க்சிய வெறுப்பாளர்கள் இல்லை, ஆனால் கம்யூனிஸ்டுகள் தான் அம்பேத்கரை ஒதுக்குறீர்கள், சாதி ஒழிப்பை சரியாக முன்னெடுக்கவில்லை என்பவர்கள் அம்பேத்கரை யார் தலித் தலைவராக மட்டும் முன்வைத்து அரசியல் செய்கிறார்கள், மார்க்சியத்தை புறக்கணித்தோ அல்லது மார்க்சியத்தை வெறுத்தோ இயங்கும் தலித் அமைப்புகள் யாவை என்பதை எல்லாம் கவனித்து, அத்தகைய தலைவர்களால் சாதி ஒழிப்பில் அடைந்த முன்னேற்றம் என்ன என்பதை விரிவாக எழுதலாம்.

தலித்தியத்தின் பெயரால் முன்வைக்கப்படும் சாதி ஒழிப்பு வேலைத்திட்டம் என்ன?

மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்றால் ராஜா காலேவின் தலித்தியவாதம் குறித்தும் அவர் வழி வந்தவர்களின் தலித்திய அரசியல் (கம்யூனிச எதிர்ப்பரசியல்) பற்றியும், அதில் என்.ஜி.ஓ அரசியல் மற்றும் மத மாற்ற அரசியல் குறித்தெல்லாம் கற்றரியலாம்.

எப்படி இங்கே கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோல்வி பற்றிய சுய விமர்சனத்தை கம்யூனிஸ்டுகள் முன்வைத்துப் பேசியுள்ளார்களோ அதேபோல் தலித்திய அரசியல் (மற்றும் இயக்கங்களின்) தோல்வி குறித்தும் திறந்த மனதுடன் ‘தலித்தியவாதிகள்’ பேசவும் செய்வதே உண்மையில் நாம் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலையில் அக்கறை கொண்டுள்ளோம் என்பதற்கு சான்றாக இருக்க முடியும்.

தலித்தியத்தை (மட்டும்) முன் வைத்துப் பேசும், இயங்கும் அமைப்புகள் பற்றியும், பிரிவுகள் பற்றியும் ஆய்வு செய்யுங்கள். ஒவ்வொரு தலித்திய அமைப்பின் தலைமைகள், கட்சிகள் எந்த அடிப்படையில் உருவானது, காலப் போக்கில் அவற்றின் நிலை, அது ஏன் சாதிய ரீதியில் பிரிந்துள்ளது என்பதை எல்லாம் ஆய்வு செய்யுங்கள். தலித்திய அமைப்புகள் அனைத்தும் அம்பேத்கரை தங்கள் தலைவராக ஏற்றிருப்பினும் அவர்களுக்குள் நிலவும் பிரிவினையின் அடிப்படை என்ன? உட்சாதிப் பூசல் என்பதே மழுப்பலான வாதம். தமக்கான ஒரு அரசியல் அமைப்பு வேண்டும் என்பதால் என்றால், ஏன் குறிப்பிட்ட சாதிக்கான அமைப்பாக மட்டுமே அது உள்ளது? அதிலும் கூட உள்ள முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?

அதேவேளை ஆம் இந்திய சமூகத்தில் சாதிய மனநிலை எல்லா மட்டங்களிலும் உள்ளது என்பீர்களானால், அதை வெறும் கருத்தியல் பிரச்சினையாகவோ அல்லது இந்து மதப் பிரச்சினையாகவோ மட்டும் அணுகுவது பயன் தருமா என்பதையும் இதுகாரும் நிகழ்ந்துள்ள பல்வேறு நிகழ்வுகளை, விவாதங்களை முன்வைத்து நீங்களே ஆய்வு செய்யுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவம் என்றால் என்ன என்பதையும், அனைத்துப் பாகுபாடுகளையும் ஒழிக்க எது அவசியமான வழி என்பதையும் நீங்களே கற்றரியுங்கள்.

எங்களைப் போன்றோரின் அரசியல் விமர்சனம் உங்களுக்கு உவப்பானதாக இல்லையெனில் அறிவுத் தளத்தில், ஆய்வுத் தளத்தில் அம்பேத்கரையும், பௌத்தத்தையும் முன்வைத்து சாதி ஒழிப்புக்கான வேலைத்திட்டத்தை முன்வைய்யுங்கள் கற்றரிந்துகொள்கிறோம்.

அதில் தீர்வு இல்லை என்று உணரும்போது நாங்கள் எங்களது கேள்விகளை விமர்சனங்களை தொடர்ந்து கொண்டே இருப்போம்….. (அவசியமான தளத்தில் மட்டுமே….)

Feb 9, 2018

மயிரில் பெண்மையைத் தேடாதீர்கள்


‘நவநாகரீக’ பெண்களுக்கு
பின்னல் போடத் தெரியவில்லை
சேலை உடுத்தத் தெரியவில்லை
சமைக்கத் தெரியவில்லை
இன்றைய பெண்கள்
உள்ளாடை அணிவதில்லை
நைட்டியைப் போட்டுக்கொண்டு வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்கள்.
லெக்கிங்க்ஸ் அணிந்து கொண்டு உடலைக் காட்டுகிறார்கள்
என்றெல்லாம் ‘ஆண்கள்’ நீங்கள் கவலைப்படுகையில்
உங்களுக்கு வேட்டி கூட கட்டத் தெரியாது என்று கொக்கரித்தபடி
ஒட்டு வேட்டியை தயார் செய்கிறான் முதலாளி

இன்றைய ஆண்களுக்கு துணி துவைக்கத் தெரியாது
வேட்டையாடத் தெரியாது
விவசாயம் தெரியாது
எல்லாவற்றுக்கும் மேலாக புராதன சமத்துவ சமூக வரலாறு கூட தெரியாது என்று நாங்கள்  வாயடிப்பதில்லை

ஆணாய் பெண்ணாய் மாற்றுப்பாலினமாய் உடலிருக்க
ஆண்மை பெண்மை என்பதெல்லாம் இயற்கையான பண்பல்ல
அது ஆணாதிக்க சமூகத்தின் நஞ்சு என்று
ஆண்களும், பெண்களும் முற்போக்காளர்களுமாய்
பக்கம் பக்கமாய் எழுதியும் கத்தியும் வந்துள்ளோம்
மாற்றம் என்பது சமூக இயக்கத்தின் மாற்றமுடியா அங்கம் என்று
பொருளுரைத்திருக்கிறார்கள் சமூக விஞ்ஞானிகள்

‘நவீன’ வளர்ச்சியின் காரணமாக ஆணும் மாறுகிறான்
பெண்ணும் மாறுகிறாள்
பண்பாடு மாறுகிறது
தொழில்நுட்பம் மாறுகிறது
தொழில் மாறுகிறது
இயற்கையே மாற்றப்படுகிறது
ஆயினும் மாறாதிருக்கிறது
சாதியும் ஆணாதிக்கமும்

சிலையின் பின்னலழகை
சிற்பியின் நிபுணத்துவத்தை
கலையின் உச்சத்தை ரசிக்க
அழகியலை முன் வைத்துப் பேசுவது அறிவுடைமை
பெண்மையை முன்வைத்துப் பேசுவது மடமை

ஆணென்ன பெண்ணென்ன
ஆண்மை என்ன பெண்மை என்ன
வேலைப் பிரிவினை என்றால் என்ன
என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளதை இந்நூற்றாண்டில் கூட படிக்காது
பெண்களின் நடத்தையில் பண்பைத் தேடும்
‘ஆண்களே’
முதலில் நற்பண்பை உங்கள் மூளையில் தேடுங்கள்
அது காலிக்குடமாய் தள்ளாடுவதை கண்டறிந்து
அறிவியலறிவால் நிரப்புங்கள்

நவீனத்தின் அனுகூலங்கள் ஆண்களுக்கானது மட்டுமல்ல
அது மனிதராய் பிறந்த அனைவருக்குமானது
மயிரைக் கட்டி வைத்தாலும், அவிழ்த்துவிட்டாலும்
சமூகத்திற்கு எக்கேடுமில்லை
உங்களின் முட்டாள் தனத்தால் தான் இவ்வுலகிற்கு மாபெரும் கேடு

ஓவியம்: Monikhaa
மாசெஸ் கூட்டத்தின் பயிற்சிப்பட்டறையின் போது ஓவியம் வரைந்து கொடுத்த ஓவியர்கள் அனைவருக்கும் நன்றி
(Artists Viswam, Rajan, Christy, Vasanth, Rohini Mani, Vidharthe, Ezhumalai, Suraj, Yugan, Anand, Monika )