Jul 30, 2010

மூளுக தீ


விளிப்பெயர் சுவாசமற்றுத் திரிகிறது

கூடதற்கு சவம்

வாளெடுத்து பேதங்களில் வீசுகையில்

இடம் பெயறாது குறிகள் நிமிர்கின்றன

ஓநாய் பற்களுடன்


தசை மேடுகள் அச்சத்தின் குழந்தைகள்

கரைந்தழும்

சமிக்ஞை காகிதத்தை முத்தமிட்டமர்கையில்

தசைகளற்ற விலங்கு

தனதான உறுப்பைக் கவ்வியணைக்கிறது


குறியழிந்தாலும் சொல்லழிவதில்லை..


தீ

சுடுகிறது

தசை

விறைத்திருந்தாலும்

அவிழ்ந்திருந்தாலும்


தண்ணீருக்கெதிராய் மூளுவதில்லை

தீ

தீ

யாகவே இருக்கிறது

எழுக

பெண்

மரத்தில் இலையுள்ளது

மலருள்ளது

கனியுள்ளது

பூமி கிழிய

வேரோடிப் புணரும்

விதியுள்ளது

எழுக

பெண்

எல்லாவற்றையும்

எல்லாவிதமுமாக

துறந்தபடி

எழுக

பெண்

Jul 28, 2010

சாத்தான்கள் அச்சுறும் புன்னகை


வானம் தொடக் கூசும்
அப் பாதை
கால்களைக் கூவி
அழைத்துக் கொண்டேயிருக்க

வழியில் வரப்போகும்
சப்தம் விரியத்தொடங்குகிறது
பின் மூளையில் இக்கணமே

அதிர்வுறுகிறதென் சலனம்

மைல்களுக்கப்பால் நெளிந்துகொண்டிருக்கும்
இருளின் வாசனை
நாசிகளை நெருங்குகையில்
அரவம் உறங்கும் குடல்களை
பிரட்டி எடுக்குமோ

சாலையில் எழுப்பிய மேடுகளாய்
இடைவெளி விட்டு
இடைவெளி விட்டு
தொண்டைக்குழி எழும்ப
வியர்வையின் நீரைத்தான்
ஊற்றுவனோ மரம் வைத்தவன்

கடவுளைத் தொட்டிரா கைகள்
எவ்வாறு பாறைகளை உணரும்

கண்களை மூடித்துயில்கையில்
மோதவே செய்கிறது அனுக்கள்

பின்
வாங்குகிறது
கரிய நிறத்திலான ஏதோ ஒரு உருண்டை

உருவத்தைக் கிழித்து
சாத்தான்கள் அச்சுறும் புன்னகையுடன்
உதைத்தெழுப்பி
விளையாடுகிறது
அக்
குழந்தை

நிச்சலனம்.

Jul 17, 2010

கள்ளக்காதலின் கொலையுணர்வு.




பாகம் 1

கள்ளக் காதல் (அந்த பெயர் குறிப்பில் எனக்கு உடன் பாடில்லை என்று ஏற்கனவே எழுதியுள்ளேன்) கொலைகள் அதிகரித்து வருவது வருத்தத்தை தருகிறது. தன் விருப்பத்திற்காக கணவனை கொலை செய்வதென்பது அனுமதிக்க முடியாத குற்றம். ஒர் உயிரைக் கொன்று மற்றொரு உயிர் மேல் அன்பு கொள்வது எவ்வாறு காதலாக முடியும்? காதலோ அன்போ ஒர் மனிதனை மிருகமாக மாற்ற இயலாதென நம்புகிறேன். அப்படி கொலையுணர்வு தோன்றுகிறதெனின் அவ்வுணர்வுக்குப் பெயர் சுயநலம், பேராசை, உடல் சார்ந்த வெறி, பொருளாதார இருப்பு.

ஒரு குற்றம் நிகழும் போது அதன் பின்னணியில் இருந்து செயல் படுவது எது என்று அறிவது, அக்குற்றங்களைத் தடுக்க உதவும். திருமணத்திற்கப்பாற்பட்ட உறவுகள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான தேவைகள் என்ன? அப்படி ஓர் உறவு ஏற்பட்ட பின்னர் திருமண உறவை முறித்துக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் எவை ? அதைக் கொலை வரைக் கொண்டு செல்வதில் ஆணின் பங்கு (காதலன்) இப்படி பல. மாறாய் பத்திரிகைகள் தலையங்கம் போட்டு எழுதுவது கட்டிய மனைவியே கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற அவலம், பெண்ணின் வெறிச்செயல், என்ற ரீதியில் செய்தி பதியப்படுகிறது. அதன் வார்த்தை விவரிப்பிலும் குற்றச்சாட்டு மனைவியாகிய அப்பெண்ணின் குணத்தையும், நடத்தையையும் விவரிப்பதாய் இருக்கிறதே ஒழிய, அதில் ஆணின் பங்கு (தந்தை, கணவன், காதலன்) பற்றி குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் வெறும் பார்வையாளர்களைப் போல் சித்தரித்துவிட்டு பெண்ணை மட்டும் கற்பு அடிப்படையில் சித்தரிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதரத்தை ஊழல் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்துச் சம்பாதிக்கும் முதலாளிகளின் மன
இயல்பை இப்படி வார்த்தைகளால் பத்திரிக்கைகள் விவரிப்பதில்லை. ஆயிரம் கோடி ஊழல். விசாரணை இவை மட்டுமே..இதில் ஆயிரம் கோடியை ஊழல் செய்த நபர், அச்சொத்தை அனுபவித்த அவரது மகன்கள், மகள்கள் மனைவி யாரிடமும் பத்திரிக்கைகள் குறுக்குக் கேள்வி கேட்ப்பதில்லை. அதில் கேட்பதற்கு சுவராசியமாகவும் எதுவும் இல்லை என்று நினைக்கலாம். மனித மாண்புகளை கேவலத்துக்குட்படுத்தும் சாதிய பிரச்சினைகள், அவற்றால் சகமனிதன் அடையும் மன வேதனைகளை இதே அளவுக்கு பத்திரிக்கைகள் எழுதுவதில்லை. காரணம் விரைவில் விற்றுத்தீரும் விசயம் அந்தரங்கமே. அதுவும் அது பெண் தரப்பென்றால் இன்னும் மகிழ்ச்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கை உலகில் தொலைக்காட்சி ஊடகங்களில் வெவ்வேறு முறைகளில் நடக்கும் கொலைகள் பற்றிய செய்தி வர்ணனையை விட இந்த கள்ளக் காதல், விபச்சாரம், பெண்ணின் கற்பு, உறவு சார்ந்து வரும் செய்திகளின் ஆண் வர்ணனை மொழி படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தவே உதவுகிறது. குற்றப்பின்புலத்தை ஆராய்ந்து அதில் உள்ள பிரச்சினைகளை விளக்கினால் மாற்றம் நிகழும் அதை பத்திரிக்கைகள் செய்வதில்லை.. மேலும், இந்த மொழிகள் ஏற்றிவைக்கும் அவமான கருத்தியலால் கொலைகளும், தற்கொலைகளும்தான் பெருகும். அவர்களுக்கு வணிகமும் பெருகும். திருணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏற்படக் காரணமாய் இருப்பதாய் நான் படித்தவரையில், கேட்டவரையில் அறிவது :
1. பெண்ணுக்கு விருப்பமில்லாமல் தந்தை செய்துவைக்கும் கட்டாயத்திருமணம்.
2. கொடுமைக்காரக் கணவர், குடிகாரர், பொறுப்பற்ற கணவர்.
3. பணம், புகழ் என்று சுற்றித் திரிந்து மனைவியை வெறும் ஒரு பொருளாக மட்டும் நடத்தும் கணவர். (lack of care)
4. விவாகரத்துப் பெறுவதில் உள்ள சிக்கல் (கணவன், பெற்றோர், மாமியார், குழந்தைகள், சமுதாய நிலை, கலாச்சார முடக்கு மற்றும் பெண் தரப்பு கேவலப்படுத்தப்படுதல். இவைகளால்)
5. சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஆண். ஏற்படுத்தித்தரும் பெண்.
6. பெண்ணின் அறியாமை.
(இவற்றில் ஊடகங்கள், அவை போதிக்கும் விசயங்கள், தொடர்புக் கருவிகள். செல்போன், நெட் இதர.)

மாதிரி;1

குடும்ப அந்தஸ்த்து, மானம் என்று காரணம் காட்டி பெண்ணின் காதலை நிராகரிக்கும் தந்தைகளையே முதல் குற்றவாளியாக கருதவேண்டியிருக்கிறது. ஒருவேளை அந்த காதலன் மகளுக்கு பொருத்தமானவர் அல்ல (பொருளாதார அடிப்படையில் இல்ல, பண்பு சார்ந்து) என்று பெற்றோர் கருதினால் மகளின் விருப்பமின்றி வேறொருவரை திருமணம் செய்து வைப்பதை தவிர்த்து அவளை வீட்டில் வைத்துக்கொள்ளலாமே. அதை விடுத்து ஓர் ஆண் மகனை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிடுகிறார். அந்த தந்தை திருமணத்தை ஒரு கடமையாக நினைத்து அதை நிறைவேற்றிவிடுகிறார். பின்பு கலாச்சாரத்தின் பெயர் சொல்லி கைகழுவியும்விடுகிறார். பெரும்பாலோனோருக்கு தனது மகள்,மகன் காதல் வயப்பட்டது தெரிந்ததுமே திருமண நாளை அவசரமாக குறிக்கின்றனர். இதில் காதலை வயசுக்கோளாறாகப் பார்க்கும் பெற்றோர்கள் அவ்வயசுக்கோளாறில் அவர்கள் எதுவும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். திருமணம் முடிந்துவிட்டால் சமுதாயத்திற்கு பயந்து அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என நம்புகிறார்கள். (இதில் சமுதாயம் ஒழுக்கம் என்பது புரிந்து ஏற்றுக்கொண்டு நல்லியல்புகளை வளர்க்கும் ஒன்றாக இல்லாமல் பயமுறுத்தும் ஒன்றாக இருப்பதை நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.)



இந்த மாதிரியில், 2 ஆவது குற்றவாளி மகள். விருப்பமில்லாமல் திருமணத்திற்கு இசைவு தரவேண்டியதில்லை, பெற்றோர்கள் மிரட்டினால் சட்டத்தையும், மனித உரிமை கழகங்களையும் நாடுவதை விடுத்து ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு போவதென்பது கயமை. போராடும் குணமில்லாது சந்தர்ப்பவாதத்தை கைகொள்வது மன்னிக்க முடியாத குற்றம். பெற்றோரை, சூழலை எதிர்த்துப் போராடத் துணிவில்லாத ஒரு பெண்ணுக்கு கணவனைக் கொல்லுமளவுக்கு துணிவு வருவது எப்படி? காதலனாகிய ஆண் தரும் தைரியமா? தடயங்களின்றி தப்பிவிடலாமென்ற குருட்டு நம்பிக்கையா? பொருளாதார பலமா? ஒரு மனித உயிரை அகற்றுகிறோம் என்ற பதைப்பின்றி யோசிக்கவியலாத அவசரமா?. அப்படித் தப்பினாலும் மனக்குரல் விட்டுவிடுமா? உங்கள் மகிழ்விற்காகவும், உங்கள் தந்தையின் கவுரவத்திற்காகவும் அப்பாவி ஒருவர் கொல்லப்படுவது நியாமற்ற செயல்.


மாதிரி 2, 3:

விரும்பி திருமணம் செய்த பின்னர், விரும்பத்தகாதவராக கணவர் மாறும் பொழுது, அவர் ஏன் விரும்பத்தாகாதவராக மாறினார், அப்படி தாங்கள் உணர்ந்த மாற்றம் என்ன என்ற கேள்விகளை ஆராயாமல், அல்லது அதை தவறாக புரிந்துகொண்டு வீட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சண்டைகள் போட்டு அலுத்து நமக்கு கிடைத்த வாழ்க்கை இவ்வளவுதான் என கழிவிரக்கம் கொண்டு அப்போது ஆறுதலாய் கிடைக்கும் ஆண், மற்றும் பெண்ணின் துணை தேடி, சந்தர்ப்பத்தை பயன்படுத்துவது நடந்து விடுகிறது,

ஆனால் அப்படி தனக்கு பிடித்த மாதிரி ஒரு துணையை கண்டவுடன் கணவனோ அல்லது மனைவியோ மனம் விட்டுப் பேசி நேர்மையாக உறவுகளை கைக்கொள்வதில்லை. இதற்குள் அவர்கள் தங்களுக்குள் விடுபடாத உறவென குழந்தைகளை சாட்சியாய் வைத்து சமூக ஒழுக்கத்திற்கு பயந்து மறைக்கிறார்கள். ஒருவரை ஏமாற்றி ஒருவர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது கூடுவதால் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள முடியுமே தவிர பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இயலாது. கணவணுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவணும் இது போன்ற தவ்றுகளைச் செய்வதில் பலனாகக் கிடைப்பது திருட்டுத்தனம் செய்கிறோம் என்ற குற்றவுணர்வு, மனஅழுத்தம், யாருக்கும் உண்மையாய் இருக்கமுடியாத நிலை. அதுவே இயலாமையாக உருவெடுத்து, தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் நிலை.


மேலும் மனக் குழப்பங்கள் அதிகரித்து அந்தப் புது உறவிலும் விரிசல் ஏற்படுத்தும். பின்பு அதுவும் முடிந்து போய், நாளை வேறொரு ஆள், முறிவு, உறவு, முறிவு என தொடர்ந்து கொண்டே செல்லும். இதற்கிடையில் தனது துணைக்கு இவ்விசயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற மரணபயம், அல்லது தீர்வு காண துணையையும், குழந்தைகளையும் கொல்லச் சொல்லும் தீவீரம், அல்லது தற்கொலை எண்ணம்.


ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதை சரியான முறையில் தீர்க்க வழியும் இருக்கையில் இதுபோன்ற முறைகளில் ஈடுபடுவது எவ்வகையில் சரி எனத்தெரியவில்லை. ஒத்துவரவில்லையா, முறைப்படி பேசி விவாகரத்துப் பெற்றுவிடுங்கள். விவாகரத்துக்கு முட்டுக்கட்டையாக துணைகள் இருப்பார்களேயானால், பிரிந்து உங்கள் சுயத்தோடு வாழும் உங்கள் உரிமைக்காக போராடுங்கள். சமூகத்திற்காக அஞ்சி போலியாக குடும்ப உறவை ஒரு போதும் காக்க இயலாது. அது குற்றவுணர்வுடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

இந்தக் கணத்தில் தான் நாம் மனசாட்சியை தர்க்கம் செய்து ஏமாற்றுகிறோம். ஆமாம் கனவனைப் பிடிக்கவில்லை, ஆனால் அவன் சம்பாத்தியத்தில் உண்டு, களிப்பது, கூடி இருப்பது – அதே போல் மனைவியைப் பிடிக்காது ஆனால் அவள் வகை வகையாய் சமைப்பது வேண்டும், பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். (பிச்சை பொருளாதாரத்திற்காக) கணவனை தெய்வமாக மதிக்க வேண்டும். ஏமாற்றமளிக்கும் கனவனின் / மனைவியின் குணத்திற்கு மாற்றாக மற்றொருவருடன் உறவு கொள்வதென்பது நோகாமல் நோன்பு கும்பிடும் பேராசை. நற்பெயர் வேண்டும், சமூதாய அந்தஸ்த்து வேண்டும், குழந்தை வேண்டும், கூடுதல் உறவும் வேண்டுமென்பது கூழிற்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல். குழந்தைக்காக சகித்துக்கொண்டு வாழ்வதாக கூறிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, மாற்றுத் தேவையாக மனம் ஏன் மீண்டும் ஓர் எதிர்பாலையேத் தேடுகிறது? அது ஏன் மாற்றுச் சிந்தனைகளை, பாதைகளை நாடுவதில்லை? இது போன்ற கேள்விகளை யோசிக்கவேண்டியிருக்கிறது. மனித மனத்திற்கு தேவை குற்றங்களை நியாயப்படுத்த ஏதாவது காரணம். அதுவும் குற்றத்தை திருத்திக்கொள்ள அல்ல, குற்றத்தை தொடர்வதற்காக அல்லது குற்றத்தை குற்றவிணர்வில்லாது துவக்குவதற்காக.

கள்ளக்காதலின் கொலையுணர்வு. பாகம் 2






இதில் இருதரப்பும் யோசிக்காது போன கேள்விகள் அல்லது யோசித்தும் அதை நிறைவேற்ற இயலா மனப்போக்கு.

1 கணவன் சரியில்லை என்று ஒரு பெண் நாடிச்செல்லும் ஆண் ஏன் அவளுக்கு அன்பும், தோழமையும் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் காதல் என்ற ஒன்றை முன் வைக்கிறார். அதுவும் பெரும்பாலும் அவர் திருமணமானவராகவே இருப்பது ஏன்? இந்த தோழமை என்ற புரிதலில் உடலுறவு ஏற்பட்டால் அதன் பங்கென்ன?

2 அப்படி ஒரு பெண்ணுக்கு மன ஆறுதல் தரும் ஆண், தன் மனைவி தன்னைப் பிடிக்கவில்லை என்று வேறொரு ஆணை நாட ஏன் அனுமதிப்பதில்லை. (பெண்ணுக்கும் பொருந்தும்)

3 திருமண உறவில் ஏமாற்றங்களுடன் தோழமை நாடி வரும் பெண்ணை அந்த ஆறுதல் தரும் ஆண் ஏன் தன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்து, அந்தப் பெண் மூலம் அவளுக்கு ஆறுதல் பெற்றுத் தருவதில்லை?

4 அல்லது அந்தப் பெண்ணின் கணவனை நேரில் சந்தித்து அவர் மனைவிக்கு அவரைப் பிடிக்கவில்லை, தன்னை விரும்புகிறார் என்று தைரியமாக கூறுவதில்லை?

5 இவையெல்லாவற்றையும் விட செல்போன் என்ற ஒன்றால் விளையும் பாதகங்கள் பல. ஒரு நண்பண் கொடுத்த எண் இது, தவறாக வந்த அழைப்பு என்ற ரீதியில் ஏதேனுமொரு ஆணிடம் பெண்ணிடம் குரல் மூலம் இன்புறும் தன்மை. இல்லறவாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை மிகச்சரியாக ஆராயாமல் சோர்வு கொள்ளும் மனத்தோடு தங்கள் கணவரை\மனைவியை பேசும் குரலிலம் அலுப்பு நிறந்த குரலால் தெரிவிப்பது, பதிலுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் இவை போதும் எனத் தொடங்கி, நேரத்தை பிரச்சினைகளைத் தீர்க்க அணுகாமல் வேறொரு பிரச்சினையை தொடங்க ஆரம்பிக்கின்றனர். இது இப்பொழுது ஆண்பெண் மத்தியில் பரவலாக இருக்கும் மையப் பிரச்சினைகளில் ஒன்று.

6 கணவன் சரியில்லை எனும் பெண் தன்னிடம் பேசும் இன்னொரு ஆணுக்கும் அவனது மனைவிக்கும் உள்ள பிரச்சினைகள் என்னவென்பதை யோசிக்கமல் இருப்பது அதே போல் ஆணும்.

இவை எவற்றையும் யோசிக்காது மன ஆறுதல் என்ற ஒன்றினடியில் ஒளிந்துகொண்டு ஆண் பெண்ணாகிய இருவருக்கும் தேவைப்படுவது சொகுசு நிறைந்த, தொந்தரவற்ற உறவு.

இதில் உளவியலையும் சற்று பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. துணையுடன் உங்களுக்கு கசப்புணர்வு இருக்கிறது என்பதை ஓர் ஆணிடம் பகிர்ந்துக் கொள்ளும் பொழுது அதை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்தே அதிகம் உள்ளது. அதையும் தாண்டி ஒரு பெண்ணுக்கு ஆறுதல் தறுவதன் மூலம் அவன் மனதில் அவனைப் பற்றிய கதநாயகத் தன்மை அதிகமாகிறது. பிரச்சினைகளைத் உண்மையிலேயே தீர்க்கவேண்டுமெனில் உங்கள் மேல் அவன் அன்பு செலுத்துவானானால் உங்களை வைத்து (தேவைப் பட்டால், உங்கள் குழந்தைகளுடன்) அவன் வாழத் தயாரா என்பதை அறிந்து கொண்டு உங்கள் தேர்வை மேற்கொள்ளலாம். ஏனென்றால் ஆறுதலுக்காக காதல் வளர்க்கும் இதுபோன்ற ஆண்கள் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள தயாராய் இருப்பதில்லை.
(அவர்கள் குடும்பத்தை நினைத்து).


அதே போன்று அவனுடைய மனைவி குழந்தைகளின் நிலையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கற்பு சார்ந்து இக்கூற்றை நான் முன் வைக்கவில்லை. அறம் சார்ந்தே பேசுகிறேன். உங்களுக்கு இருக்கும் தேவையை பயன்படுத்தி உறவை வளர்க்கும் ஓர் ஆண் தன் மனைவியோ அல்லது தன்மகளோ இதுபோல் முறைக்குட்படாத (முறையற்ற என்று நான் சொல்லவில்லை, நான் கூறுவது அவுட் ஒப் சிஸ்டம் எனும் கூற்று) உறவு மேற்கொள்ள அனுமதிப்பதில்லை. தன் மனைவி தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிபார்க்கும் கணவர்கள் தங்களுக்கென்று வரும் பொழுது அதை தளர்த்திக்கொள்கிறார்கள்.

கணவன் மனைவி உறவு முறையில் கற்பு எனும் அடிப்படையில் அதை காப்பாற்றுவதோ அல்லது மீறுவதோ, அடிமைத்தனம் அல்லது தனி மனித சுதந்திரம் என்று விவாதிப்பதோ பொருத்தமற்றதாக நான் கருதுகிறேன். இதை ஒழுக்கம், கற்பு, சார்ந்த விஷயமாக பார்ப்பதை விட ஒப்பந்தம் மற்றும் அர்பணிப்பு சார்ந்த விஷயமாக நான் கருதுகிறேன். (agreement & commitment). முறையற்ற அலைவு வாழ்வுக்கு ஒரு முறை ஏற்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வது ஓர் அமைப்பு. இந்த அமைப்பை ஏற்கும் போதே நாம் சில உறுதிகளை எடுத்துக்கொள்கிறோம். அதில் ஒரு முக்கிய உறுதி உனக்காக நான் உண்மையாக வாழ்வேன் என்பதே. அது முடியாதோர் இந்த அமைப்பை தேர்ந்தெடுக்காது வேறுமுறையான தனித்திருக்கும் வாழ்க்கை வாழ தேர்வு (option) உண்டு. அல்லது அந்த உறவிலிருந்து விடுபட்டு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

அப்படி துணிந்து முடிவெடுத்து ஒரு பெண் வெளியேறிவிட்டால் அவள் சந்திக்கவேண்டிய கலாச்சார சவால்கள் அதிகம். அதைச் சந்திப்பதில் பிழையொன்றும் இல்லை. குற்றவுணர்வோடு வாழ்வதை விட தனது சுதந்திரத்திற்காகப் போராடலாம்.
எப்படி ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது அதன் அமைப்புக்கு கட்டுப்பட்டு நடப்போம் என உறுதி மொழி கூறுகிறோம், உடன் பட இயலவில்லை என்றால் விலகி விடுகிறோம், அதை விடுத்து இங்கே சம்பளம் வாங்கிக்கொண்டு கள்ளத்தனமாக வேறொரு நிறுவனத்தில் வேலை செய்வது எவ்வளவு குற்றமோ (அறம் சார்ந்து) அதுபோல் தான் உறுதி எடுத்துக்கொண்ட உறவுகளில் கள்ளத்தனம் செய்வதென்பது.

உடன்படாத திருமண வாழ்வில் விலகிவிடுவதென்பது முறை மேற்கொண்ட ஒரு செயலில் முறையற்ற ஒன்றை நாம் செய்யும்பொழுது அது குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது . பிறகு மற்றொருவர் அதை வைத்து நம்மை பயன்படுத்திக்கொள்ளவும், பணியவைக்கவும் வழி வகுத்துக்கொடுக்கிறது.


பெங்களூரில், சமீபத்தில் காதலனுடன் சேர்ந்துக் கொண்டு, தனக்கு நிச்சயிக்கப்பட்ட மகனை ஆள் வைத்து கொன்றிருக்கிறார் ஓர் பெண் வக்கீல் என்ற செதியை படித்தேன். பத்திரிக்கைகள் வழக்கம் போல் அதன் பாணியில் எழுதியுள்ளது. ( இதில் உள்ள இன்னொரு வன்முறை கற்பழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, தவறு செய்கிற பெண் அழகாய் இருந்தால் முழுப்புகைப்படத்துடன் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இவற்றின் அந்தரங்க நோக்கம் என்னவென்பது நாம் அறிந்ததே.)

உண்மையில் அன்பு சார்ந்து ஏற்பட்ட உறவு, நியாயமான காரணங்களால் என்றால் அதை முறைப்படுத்திக்கொள்வதே சரி. அதுவல்லாத செயல் கயமை, பித்தலாட்டம், அலுப்பிற்கு மாற்றம் என்றே பொருள்.

பெண் சுதந்திரம், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, பெண்கள் முன்ணேற்றம், பெண்ணியம் என்று பெண்களின் உரிமைகளுக்காகவும் விழிப்புணர்வுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தனக்கு ஒவ்வாத வாழ்வை முறித்துக்கொண்டு பிடித்த வாழ்வை அமைத்துக்கொள்ள எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. அதை விடுத்து ஓர் உயிரைக் கொன்று குவிப்பது மன்னிக்க முடியாத குற்றம். இங்கேதான் பெண்களின் அறியாமையை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் ஆண்கள். ஆணைச் சார்ந்து வாழ்ந்தாலே ஒரு பெண்ணுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலையை அவள் மேல் ஏற்றி, உன்னதக் கோட்பாடுகள் என்பனவற்றை எழுதா விதியாக்கி, அழகுணர்ச்சிக்கும், ஆடம்பரத்திற்கும் அவளை அடிமையாக்கி தாய்மை என்ற ஒன்றின் பேரால் அவளை ஆயுள் கைதியாக்கி விடுகிறது ஆண் சமூகம். அதே ஆண் சமூகம் தான், தன் உரிமைகளை சரியாக முன் வைத்து தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் பெண்ணை விபச்சாரி, அடங்காப்பிடாரி என்ற ஆணாதிக்க அவமானக் கூற்றுகளைக் கூறி பெண்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அதைப் பொருட்படுத்துவது அவசியமாகப் படவில்லை எனக்கு.

பெண்களே உங்கள் இனம் பற்றி, உங்கள் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் பெண் கருத்தாக்கங்கள் பற்றி உன்னதங்கள் பற்றி கற்பதும், பெண்கள் விடுதலைப் போராளிகளின் வாழ்க்கையயும், தத்துவங்களை கற்பதும் ஆண்களின் சதிகளில் நீங்கள் வீழாதிருக்க உஙளுக்கு உதவும். நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, அழகுணர்ச்சியை முதலில் தூக்கி எறியுங்கள். நகை ஆசைகளை விட்டொழியுங்கள். உங்களுக்காகத்தான் சம்பாதிக்க ஓடுகிறேன் என்று கூறி உங்களைப் பொருட்படுத்தாத கணவனாயின் அவன் சம்பாதிப்பதை மறுத்துவிடுங்கள். ஏனென்றால் அது உண்மையல்ல. இந்த சமுதாயத்தில் தன்னையும் தன் வாரிசையும் உயர்தரமாக நிறுவிக் கொள்ளவே அவன் ஓடுகிறான். ஆணை தெய்வமாக்கி உங்களை தாழ்த்தி மனநிறைவற்ற வாழ்வு வாழ்ந்து மன உளைச்சல் பெற்று சூழ்நிலைக் கைதியாகி பரிதாப உணர்வை வளர்த்துக்கொண்டு மீண்டும் ஓர் ஆணிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

பிடிக்கவில்லை என்றால் பிரிவதென்பது சுலபமில்லையே கணவனோ / மனைவியோ விவாகரத்துக் கொடுப்பதில்லையே என்று ஒரு வாதத்தை நீங்கள் முன் வைக்கலாம். அதற்கும் என் பதில் போராடுங்கள், சட்டத்தின் உதவியை நாடுங்கள். பிரிந்து வாழ்வதற்கு யாரும் தடை செய்ய முடியாது. முறையான பத்திரம் கைக்கு வருவது தான் தாமதிக்கும். அதற்கும் சட்டமும், மனித உரிமைக் அமைப்புக்களும் கண்டிப்பாக உதவ இயலும். அதை விடுத்து அவமானங்கள் நேரக்கூடாதென சாமர்த்தியமாக கள்ள உறவு வைத்துக்கொள்வது முற்றிலும் முறையற்ற ஒன்றே.

எல்லா வகையிலும் வாழ்க்கை உங்களை வரவேற்றுக்கொண்டே இருக்கிறது. தேர்வு செய்யுங்கள். அதற்கான உரிமையும் சுதந்திரமும் உங்களுக்கிருக்கிறது.

Jul 13, 2010

சொல்லற்ற...


கண்ணீர்

லிபிகளற்றது
குற்றவுணர்வு அதற்கு அன்னியம்

அஃது

தீயின் பருப்பொருள்
சிசுவின் தொப்புள் உதிரம் தாங்கி
பாவங்கள் கழுவும்

பனிமலை

உச்சியில் கேட்கும் காற்றின் மௌனம்

கண்ணீர்
சிலுவை ஏறும் கணம்
விரியட்டும் சிறகு
திசைகளற்று

காற்றாய் கரைந்து போகையில்
பாதத்தில்
முத்தச் சுவடு
உண்மையின் வாடையை
கைப்பற்ற இயலாது தவிக்கும்

சொற்களினாலான கயிறு


அழைத்துக்கொண்டே இருக்கிறது
அது

தழுவிகிறேன்
கடந்த காலத்தை அறுத்தெறிய

மாறுவது காலம்
மாறாதது சொல்

அயர்ச்சியுறுகிறேன்

நான்

Jul 6, 2010

கவிதை நூல் திறனாய்வுக் கூட்டம்


கள்ளக்காதல்’ - (வசுமித்ர -ஆதிரன்)
’ஆகவே நீஙகள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’ (வசுமித்ர )

- கவிதை நூல்கள் திறனாய்வு


நாள் : 20 ஜூலை 2010, செவ்வாய்
நேரம் : மாலை 6 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணாசாலை, சென்னை-2.

பங்கேற்கும் தோழர்கள் :

தமிழச்சி தங்கபாண்டியன்
ரமேஷ் பிரேதன்
கவின் மலர்
வசுமித்ர
ஆதிரன்

Jul 2, 2010

கவி பிம்பம்


வனயிளமுலைகளை
கவிஞர் வார்த்தையுதிர்க்கையில்
மரங்கள் கூடி மூட்டும் காட்டுத்தீயை வரைந்துவைத்தேன்

உதடுகளுக்குவமையாய் அவன் விரல்கள் பழம் தேடி அலைகையில்
வன்மம் கிழித்தொரு சொற்கள் பொழியும்
செந்நா சுழண்டெழுந்தது
வனச்சர்ப்பமென

திரு கவிஞர்
கழுத்தைச் சுற்றி வரிகள் பதித்து
தலை புதைய இடம் வேண்டி நின்ற கணம்
புன்னகைத்தது
பணிய மறுக்கும் குரலொன்று

இடையின் வளைவுகளுக்கு
நுரையடங்கும் அலைகளை
முன்னிருத்தினார் கவிஞர்
பெண் மதத்தில்
பிறக்கப்போகும் சிசு
காலூன்றி நடக்கும் காலம் வரை சுமந்து செல்லும்
பெரும் பேழையை காட்சிக்கு வைத்தேன்

என்னிரு பாதங்களை பற்றிக்கொண்டு
இவ்வுலகையவன் தாரைவார்க்கையில்
சட்டகத்திற்கு வெளியில் நிற்கும்
என்னொரு
காலை மடித்து
சிலுவை செய்தேன்
பாடிய கவிச்சொற்களால் ஆணிகள் செய்து
அறைந்தேன்
அவனிரு கைகளை

என்னுடல்
என்மொழி
என் கனா
விடுதலை
நான்.

கல்லெறியும் குளம்.



கரையான்கள் தீண்டாத கதவுகளுக்கு பின்னால்
புனிதம் காத்திருந்தது
உதடுகள் தொங்க முத்தம் கேட்டு

காத்திருக்கிறது
புனிதம்
வியர்வை பொங்கும் கரங்களை
பிசைந்தவாறு
முத்தத்தின் வாசனை
முத்த
வாசனை
புனிதத்தின் துர்மணம்
முத்தம்
வருந்தி விலக

புனிதம் அறிவித்தது

உங்களில் எவர் புனிதர் இல்லையோ
அவர்களுக்கே என் உதடுகள்...

மதத் தரகர்
தூபமிசைப்போர்
கடவுளின் காவற்காரர்
துரோகத்தை மந்திரமாய் ஈணுபவர்
கொலையாளி
வரலாற்று விற்பனன்
ஜனநாயகவாதி
கொள்கை பரப்பாளன்
அரசியல்வாதி
கலைக் காப்பாளர்கள்
ஒழுக்கம் செய்து விற்பனைக்கு வைப்போர்
தசைக்கு கீழ் ஆடை அணிவோர்
கைகளில்
அரிதாரம் வழி வழியும் பாவைகள்
மிதக்கிறது மறைக்கப்பட்ட வரலாற்று பக்கஙகளில்
துர்மணம் சூழும் பெயரற்ற கண்ணீர்

எல்லோருக்கும் சாத்தியமாயிற்று
ஒரே வானம்
ஒரே மௌனம்
ஒரே சொல்

Jul 1, 2010

செம்மொழியும், தமிழ் வாழ்வும்...


சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி..கிளியே
செம்மை மறந்தாரடி. - மாகவி பாரதி.

தமிழ் பேசிச்சாவடைந்த மக்களை நோக்கி, வாழ்வாதாரம் ஏதுமின்றி பேச்சற்ற மக்களின் முன் ஓங்கியொலிக்கிறது..செம்மொழியான தமிழ் மொழியே..

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தான் செம்மொழி கீதம் கேட்டோம். அதில் தமிழ் உச்சரிப்பையும், தமிழ் இசையையும் தேடவேண்டியிருந்தது. அதைக் கேட்ட பின்பு இதையா செம்மொழிப்பாடலென்று சொல்கிறார்கள் என சந்தேகம் வந்தது. அதனால் மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டோம்.

அந்தப் பாடலில் (பொருந்தச் சொல்வதென்றால் கூச்சலில்முதலில் எங்களுக்கு ஏற்பட்டது வருத்தம். உலகில் உள்ள அத்தனை இசைக் கருவிகளும் காதுகளை நோக்கி படை எடுப்பது போன்ற ஒரு மிரட்சி. தமிழிசை என்றோ தமிழர்களுக்கான இசை என்றோ சற்றும் உணரமுடியாத ஒரு இசையாகவே உள்ளது அது. பார்ப்பன கர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் சூபி இசையும் சேர்த்து அமைத்த இசையில் எங்களால் தமிழ் மணத்தை உணரவேமுடியவில்லை. அதன் பாடலாக்கத்திலும் நவீனத்துவம் மேலோங்கி இருக்கிறதே தவிர, தமிழ் மண் சார்ந்த காட்சிகள் ஓரிரு இடங்களில் (கிராமிய நடனம், பொய்க்கால் குதிரை, கே.ஏ. குணசேகரனின் குரல் மற்றும் முகம் ) மட்டுமே இடம்பெறுகின்றன. பாடுபவர்களில், இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களின் உடல் மொழியில், உடையில் கூட (ரஹ்மானின் உடை உட்பட) மேற்கத்திய தாக்கம் மேலோங்கி இருக்கிறது. இடையில் ஒரு குழந்தை சுவற்றில் அம்மா அப்பா என்று எழுதி வைக்கும் காட்சி கூட நவீன பணக்கார வாழ்க்கைமுறையை ஒட்டி இருக்கிறதே ஒழிய (மிகவும் செயற்கைத்தனம்), தமிழ் வீடு என்று சொல்ல இயலவில்லை. கிராமியப் பாடகியான மதுரைச் சின்னப்பொண்ணுவிற்கும் கூட அரிதாரம் பூசி அவருடைய மண் வாசனையையும் பிடுங்கி விட்டார்கள். உள்ளபடி சொன்னால் தமிழ் மக்களல்லாதோர் இப்பாடலைக் கேட்டும், பார்த்தும் தமிழ் மக்கள் வாழ்வு நவீன நாகரீகத்தின் உச்சியில் இருக்கிறது என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

மண்ணின் இசையை கிராமத்தில் தொடங்கி உலகின் கடைக்கோடி வரை எடுத்துச்சென்ற இளையராஜாவை விடுத்து, இப்படி நவீனத்தின் கையில் செம்மொழி கீதம் இசைக்கபெற்றது வருத்தத்துக்குரியது. வெள்ளைக்காரன் அங்கீகரித்த ஒரே காரணத்தால் ரஹ்மானுக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. பார்பனிய கர்நாடக இசையைக் கூட அதன் சாயல் ஏதுமின்றி மீட்டெடுத்து, திரை இசை பாடல்களாய்த் தந்த இசைஞானியை எவ்வாறு அரசு நினைவு கூறவில்லை என்பது வியப்பாக உள்ளது. பாடும் இசைக்கலைஞர்களின் குரலும், இசைகருவிகளின் இசையும் எவ்வித உறுத்தலும் இன்றி ஒருங்கிணைத்து அவர் தந்த பாடல்கள் தமிழனுக்கு உலகளாவிய பெயர் பெற்றுத் தந்துள்ளது யாவரும் அறிந்ததே ஆனால் இச்செம்மொழி கீதத்தில் இசைக்கருவிகளின் ஆதிக்கமும், நாகரீகத்தின் ஆதிக்கமும், பார்ப்பனிய இசை மற்றும் இசைகலைஞர்களின் ஆதிக்கமுமே காண முடிகிறது.

ஒருவேளை அதைத் தான் நாம் தமிழிசை என்று கொள்ள வேண்டுமோ. இதில் மகாக் கொடுமை, இடையில் வரும் ராப் வகைப் பத்தி. கிராமங்களிலும் கூத்து என்ற வகைப்பாடல்களில் 7 1/2 கட்டையில் பாடுவார்கள், ஆனால் அது கூச்சல் போல் இருக்காது, இங்கே ஓர் பெண் 'ஒபேரா சிங்கிங்' என்ற ஒரு மேற்கத்திய பாணியில் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்று ஆங்கில தொனியோடு கூச்சலிடுகிறார்.

இதை 'தனியார் ஒலிநாடா' (Private Album) என்ற வகையில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம், அதுவும் உலகளாவிய நவீன இசைப் போக்கை மனதில் கொண்டு தொலைக்காட்சிகள் அல்லது திரையரங்குகளில் ஒளிபரப்ப வைத்துக்கொள்ளலாமே ஒழிய, 2000 வருட தொன்மையை பறை சாற்றும் நிகழ்வாக அறிவிக்கப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கான இசையாய்க் கொள்வது தமிழ் இசையை அவமானப்படுத்துவதற்கு சமம்.

செம்மொழி மாநாட்டுச் செலவு 300 கோடிகள் அல்லது 500 கோடிகள் என்று சொல்லுகிறார்கள். அவ்வளவு காசைக்கொட்டி
மொழிக்குசெய்ய வேண்டியது அவ்வளவு ஒன்றும் உயிராதார பிரச்சினையில்லை. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கையின் பிரச்சினைகள் அவர்களை பேசமுடியாதவர்களாய் ஆக்கியிருக்கிறது. ஆக்கப் பூர்வமான வழிகளில் தமிழக அரசு
மக்களுக்குச் செலவு செய்திருக்கலாம்..இதை உரத்த குரலிலும் சொல்லலாம் ஏனாயின் அது அவர்களின் வரிப்பணமே.

{செம்மொழிப் பாடலுக்கு இயக்குனர் என்று கௌதம் வாசுதேவ மேனன் என்றதும் சந்தேகம் தெளிந்தது. தமிழ் படம் எடுக்கமாட்டேன் என ஒரு வாரப்பத்திரிக்கையில் இவர் படம் போட்டு எழுதியிருந்தார்கள். புத்தகம் வாங்கி படிக்கும் முன்பே மனதில் தோன்றியது அவர் எப்போது தமிழ் படம் எடுத்தார்.}

- கொற்றவை - வசுமித்ர