Aug 23, 2016

கருத்து சுதந்திரம் வாழ்க!

தத்துவார்த்த அடிப்படையில் ரங்கநாயகம்மா முன்வைத்திருக்கும் விமர்சனத்தின் அவசியம் கருதியே அவரின் நூல் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கான அரசியல் காரணங்கள் நிலவுகின்ற அரசியல் போக்குகளிலிருந்தே எழுகின்றன.
பல்வேறு ‘பாதைகளை’ முன்வைத்து மார்க்சிய எதிர்ப்பு நிகழ்கிறது. அவை பெரும்பாலும் கட்சிகளின் போக்குகள் குறித்தே விவாதங்களை நடத்துகின்றன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்களிடையிலான பிளவின் காரணங்கள், மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்ந்த ஏளனங்கள், முதலாளித்துவ சிந்தனைக்கு ஒத்த கருத்தியல்கள் முற்போக்கு கருத்துகளின் பெயரால் பரப்பப்படுவது, பின்நவீனத்துவவாதம், பாராளுமன்ற அரசியல் ஜனநாயகப் பாதை, தேர்தல் அரசியல், சாதியவாதத்தை உள்ளடக்கிய அடையாள அரசியல், மார்க்சியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு எனும் பெயரில் என்.ஜி.ஓக்களின் ஊடுறுவல் முன்னெடுக்கும் மார்க்சிய திரிபுவாத வேலை ஆகியவை மார்க்சிய தற்காப்பைக் கோரும் சில அரசியல் காரணங்களாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி ஒரு நூலுக்கான தேவையை அம்பேத்கரே நமக்கு வழங்குகிறார். அவருடைய மார்க்சிய -பொதுவுடைமை-பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிரான கருத்துகள் காரணமாகவும், ஆளும் வர்க்கத்திற்கு சாதகமான பொருளாதாரத் தீர்வுகள் மற்றும் மதத்தின் தேவை குறித்த வலியுறுத்தல்கள் காரணமாகவும் இவ்விமர்சனம் அவசியமாகிறது, விவாதத்திற்குரியது. எந்த வகையிலும் இது அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பை, போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகாது. எங்கள் யாருக்கும் அந்த எண்ணமும் இல்லை. நூலின் தலைப்பே அதை போதுமான அளவில் உணர்த்துகிறது.
அதேபோல் மார்க்சியக் கோட்பாடு சார்ந்து வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக, உழைப்புசார் உறவுகள், உற்பத்தி உறவுகள், பரிவர்த்தனை உறவுகள், சொத்துறவுகள் என்று எப்படிச் சொன்னாலும் இங்கு அது ஏற்றத்தாழ்வுடனேயே இருக்கிறது. உழைப்பின்றி உற்பத்தி கிடையாது. மேலும் இரண்டிற்கும் இடையில் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை, தான் ஏன் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதையும் ரங்கநாயகம்மா விளக்கிவிட்டார். எந்த வகையிலும் மார்க்சிய அடிப்படையை விளக்குவதிலிருந்து அத்தர்க்கங்கள் மாறுபடவில்லை எனும் புரிதலுடனேயே இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் புத்தர் பற்றிய அவரது விமர்சனமும் அம்பேத்கர் முன்வைத்த புத்தரை மையமாகக் கொண்டது எனும் விளக்கங்களும் நூலிலேயே உள்ளன.
கேள்வி உள்ளவர்களும், விமர்சனங்கள் உள்ளவர்களும் நூலை முழுமையாகப் படித்து தங்களது விமர்சனங்களை முன்வைக்கலாம். மொழிபெயர்ப்பாளர் எனும் எல்லைக்கு உட்பட்டு போதுமான விளக்கங்கள் கொடுத்தாயிற்று. இதற்கு மேலும் பதிலுரைப்பது மொழிபெயர்த்துவிட்டதாலேயே நூலின் ஆசிரியருக்கு வக்காலத்து வாங்குவதாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும், அதற்கான அவசியமும் இல்லை. இரண்டு தரப்புக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகவோ, பதிலுரைப்பவராகவோ மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டிய அவசியமில்லை.
கோட்பாட்டு விளக்கம் காரணங்களால் நூலின் ஆசிரியர் பதிலளிப்பதே சரியானதாக இருக்கும். ஆகவே கேள்விகள், விமர்சனங்கள் உடையவர்கள் தங்கள் விமர்சனங்களை ஆங்கிலத்தில் எழுதியோ, மொழிபெயர்த்தோ brbapuji@gmail.com எனும் ஐடிக்கு அனுப்பலாம்.
மாற்றுக் கருத்தோ விமர்சனங்களோ இருப்பினும்கூட ஒரு நூலை மொழிபெயர்த்ததாலேயே சாதியைச் சொல்லித் தாக்குவது கண்டனத்துக்குரியது என்று இன்னும் ஒரு இடதுசாரி அமைப்புகூட கண்டனம் தெரிவிக்காத சூழலில் - அறம், காலம், சூழல், மொழி, தொனி, உள்நோக்கம், வெளிநோக்கம் - என்று எல்லா அறிவுரைகளும், கேள்விகளும் எங்களை நோக்கி மட்டுமே வைக்கப்படும் அவலமான (புரட்சிகர அமைப்புகளின் பலவீனத்தையே இது உணர்த்துகிறது) சூழலில் எங்களுடைய இந்த விளக்கங்களே போதுமானது. கருத்து சுதந்திர காவலர்களின் மௌனம் அதைவிட மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.
ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான உரையாடல்களை முன்னெடுப்பது எனும் நோக்கத்தில் தெளிவும், விஞ்ஞானபூர்வ தத்துவத்தின் பலமும் இருக்கையில் யாம் யார்க்கும் அஞ்சோம்!
- கொற்றவை.

No comments:

Post a Comment