Apr 30, 2011

பிரபஞ்ச நடனம்…



தழுவி முத்தமிட அழைப்பு விடுத்த பழஞ்சூரியன்

துணை தேடிப் பாடும்
கவிகளில் வழிந்தோடுகிறது
விழிகளற்ற இரவுகளின்  
கொடிகள் சுற்றியெடுத்த சுக்கிலம்

பெண் பூனைகள் முகர்ந்து விடாமல்
வார்த்தைகளுக்கடியில்
புதைத்து வைத்த உதட்டின் மேல் முளைந்த காடொத்த மயிர்கள்
சுக்கில மூலம் ஒளிந்துக் கொண்டது

யானைத் தோலணிந்து
அம்மை
குறிகளின் மீது நடனமாடுகிறாள்
அம்மை
எம் அம்மை

பைரவி
பார் புகழும்
கொற்றவை

எலும்பையும் நசுக்கியுடைத்து மஜ்ஜையுறியும்
இரக்கி
கருணா பைரவி
கருணையின் ஆதி
மகாயோனி
 
இடது காலில்
கழலென
சுற்றித்திளைக்கும் தழலென
மின்னும் இரு நாவோடு நச்சரவம்
தெளிக்கும்
நஞ்சானது கரைக்க துவங்கியது சூரியனின் மொட்டைக் கதிர்களை
ஆம்
அப்படித்தான்

அவள் வைசூரி

வலது காலால் முரசம் பெயர்த்து
ஓங்கியொளிவிடும்
தாகத்தால் தகதகக்கும்
மின்னும் சிறு மூங்கில் விரல்களால்
அம்மை பறிப்பாள்
பறிப்பாள்
அம்மை
குறிகளை
பற்றியிருந்த கொடிகள் தெறித்து சிதறிவெடிக்கிறது
தத்தோம்...தாம்... தரிகிட தித்தோம்
நீலி
பெண்பேய்
பேரம்மை
கனியட்டும் தாயே அகம் இகம் பரம்

சாந்தம்
அம்மையே

குறிகள்
யோனிகளுக்கானஅகராதிகளை படைப்பதில் சலிப்பதில்லை
துதிக்கும் சொற்கள் காலத்தின் கரைப் படிந்த சொற்களானதை
அம்மை அறிவாள்
அம்மையரிவாள்

அவள்
பழுப்பு நிறம் கூடிய பற்களுக்கிடையில் அரைபட்டு
ஓங்கி மிதிக்கையில்
சுக்கிலம் தெறித்து
விரைகள் நசுங்கி
விழிகள் கொட்டி
வேரோடு சாய்கிறது

நீலம் பாவிய கழுத்து
நீலம் பாவிய உடல்
நீலம் பாய்ந்த குறி

நீலத்தை எடுத்துடுத்துடுத்துகிறாள்
அம்மை

இளவுதட்டில் வெம்மை பூக்க
பசுஞ்செம்மை சிவக்க
இளிக்கிறாள்
எம் அம்மை

தம்..
தம்தம்...தம்

தத்...
தத்தரிகிட  தத்....
தத்தரிகிட...தத்தரிகிட...தித்தோம்

சாந்தம்.


Apr 21, 2011

108 கேள்விகளும், நடைபாதைவாசிகளின் மலிவு உயிர்களும்:




இன்று மாலை 5 மணியளவில் (21.03.2011) ஸ்டெர்லிங் ரோடு பஸ் நிறுத்தத்தில் திடீரென்று ஒரு பைக் சரிந்து கொண்டு விழுந்தது. ஓட்டி வந்த வாலிபரின் கால் மேல் அந்த பைக் விழுந்தது, அவ்வாகனம் மோதி சாலையை கடக்க  முயன்ற ஒரு நடுத்தர வயது பெண்மணி அப்படியே சாலையில் விழுந்துவிட்டார். இருவரில் யாரை முதலில் தூக்குவது என்ற குழப்பத்தில் நான் பைக் கால்மேல் வீழ்ந்திருப்பது ஆபத்தாச்சே என்று ஒரு பக்கம் ஓட, மற்றொரு கும்பல் அப்பெண்மணியை தூக்க ஓடியது. அந்த வாலிபரை நடைபாதை மேடையில் அமர்த்திவிட்டு நிதானித்தோம். அந்த பெண்மனி விழுந்த அதிர்ச்சியில் எழுந்திருக்காமல் இருக்கிறார் என்று நிணைத்தேன், ஆனால் அவருக்கு பின் மண்டையில் காயம், முட்டியிலும் அடி பட்டு எழுந்திருக்க முடியாமல் கிடந்தார் என்று கைத்தாங்கலாக சில பேர் தூக்கி அங்கு இருந்த ஒரு சிறு மருந்தகத்தில் (கிளினிக்கில்) கொண்டு உட்கார வைத்திருந்தனர் என்பது தெரியவந்து. அந்த கிளினிக்குக்குள் நுழைந்தபோதுதான் தெரிந்தது அவரது மண்டைக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. முட்டிக்காலை மடக்க முடியாமல் ஒரு நாற்காலி மேல் நீட்டி வைத்து உட்கார்ந்திருந்தார். அவர் கூட ஒரு பெண்மனி ஒன்றும் புரியாத நிலையில் பதட்டத்தில் காயத்தை அழுத்தி பிடித்தவாறு நின்றிருந்தார். சிலர் அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் தலைக் காயத்திற்கு தாங்கள் எதுவும் செய்ய இயலாது, போலிஸ் கேஸ் அதனால் அதற்கென அனுமதி பெற்ற மருத்துவமனை அல்லது அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

உடன் இருந்த பெண்ணிடம் “யாருக்காவது தகவல் சொல்லனுமா” என்று கேட்டேன், டையல் செய்து கொடுக்க அவரிடம் தகவல் சொன்னார், காயமடைந்தவரின் தலையில் பஞ்சை அழுத்திப் பிடித்தவாறு. நான் குழப்பமும் பதட்டமுமாக என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டிருக்கையில், அப்பெண்மனி இடித்தவரின் வாகன எண்ணைக் குறித்துக் கொண்டு வருமாறு கூற வெளியே ஓடினேன். அதற்குள் அந்த வாலிபர் சென்று விட்டார், அவருக்கும் நல்ல காயம்.

மீண்டும் வந்து எங்கு அழைத்துச் செல்வது என்று பேசிக்கொண்டிருக்கையில், அப்பெண்மனி தான் பணிபுரியும் ஹாஸ்டல் மேடத்திடம் தகவல் தெரிவிக்க செல்லவேண்டும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்க, மருத்துவரோ உடனடியாக தரமான மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு சொல்லிக்கொண்டிருக்க, ஒருவர் 108க்கு போன் போட்டு ஆம்புலன்சை அழையுங்கள் என்றார். உடனே நான் 108க்கு அழைக்க, அவர்கள் நடந்ததை குறித்துக் கொண்டு, இடத்தைக் கேட்டார்கள். விவரத்தை சொல்லிவிட்டு, பஸ் நிறுத்தத்தில் உள்ள சிறு கிளினிக்கில் அவர் உட்கார்ந்திருக்கிறார் என்று சொல்வதற்குள் மருத்துவ மனைக்கு இட்டு சென்று விட்டீர்கள் என்றால் உதவி செய்ய முடியாது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரு இளைஞர் என் கைபேசியை வாங்கி அவரும் விவரம் சொல்ல ஆரம்பித்து எரிச்சலுடன் கத்த துவங்கினார், முதலுதவி கூட செய்யப்படவில்லை, அவரை உட்கார வைக்க இடமில்லாமல் மருத்துவமனை நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறோம் என்று விளக்கினார், நானும் கைபேசியை வாங்கி, அடிபட்டு கிடக்கும் ஒருவருக்கு முதலுதவி கூட செய்யாமல் இருந்தால் தான் 108 வரும், தனியார் மருத்துவமனையில் இருந்தால் வரமாட்டோம் என்று இத்தனை கேள்வி கேட்டால் பாமர மக்களுக்கு என்ன புரியும், அரசாங்க அமைப்பின் உதவிக்கு இத்தனை சிரமமா, யாரிடம் புகார் செய்யவேண்டும் என்று கேட்க , சம்பந்தபட்டவரை பேச சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதற்குள் அந்த பெண்மனி தான் பணி புரியும் இடத்தின் மேடத்தை கூப்பிட சென்றார். மீண்டும் 108க்கு அழைத்து வாகனம் வருமா வராதா என்க மீண்டும் அதே கேள்விகள், சற்று கோபமாக நான் கத்த துவங்க, மறுமுனையில் ஒரு பெண் “இல்லங்க ஹாஸ்பிடல்குள்ள இருக்குறதா சொன்னாங்க, அப்படின்னா நாங்க வண்டி அனுப்ப முடியாது” என்றார். நானும் சற்று கோபமாக பேச, ஆம்புலன்ஸ் துறையிலுருந்து என் எண்ணிற்கு தொடர்பு கொள்வார்கள் என்றார். அதற்குள் நாங்கள் ஆட்டோ பிடித்து அவர்களை ஏற்றினோம். ஆம்புலன்ஸ் துறையிலிருந்து அழைப்பு வந்தது, கோபமாக என் வருத்தத்தை பதிவு செய்துவிட்டு உங்க சர்வீஸ் வேண்டாம் என்று துண்டித்து விட்டேன்.

ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து KMC  போகுமாறு அனுப்பி வைத்தோம். 40 நிமிடம் இப்படியே போயிற்று. என்ன விதமான காயமோ, என்ன விளைவுகள் வருமோ தெரியவில்லை.

சாலையில் நடந்து செல்பவர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் இங்கு இல்லை.

அரசாங்க அமைப்பான 108 இன் பெருமைகளை மிகைப் படுத்தி பறை சாற்றுகிறார்கள். அதன் விளம்பரத்திற்கென்று, பராமரிப்புக்கென்று லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகிறது ஆனால் பயன்பாட்டைவிட இவர்களின் கேள்விகளே அதிகமாக இருக்கிறது.

சாலைத் தகராறுகளில் தாக்கப்பட்டு உதவி கேட்டால் அசால்ட் கேஸ் வரமுடியாது என்கிறார்கள்.  ஆனால் இவர்களது வலைத்தளம் சொல்வது:

Types of Emergencies:       
Medical Emergencies
Police Emergencies
Fire Emergencies
Serious Injuries
Robbery / Theft / Burglary
Burns
Cardiac arrests
Street Fights
Fire breakouts
Stroke
Property Conflicts
Industrial fire hazards
Respiratory
Self - inflicted injuries / Attempted suicides 

Diabetics
Theft

Maternal/Neonatal/Pediatric
 Fighting

Epilepsy
 Public Nuisance

Unconsciousness
 Missing

Animal bites
 Kidnappings

High Fever
 Traffic Problems ( Traffic Jams or Rallies, raasta rokos etc )

Infections 
 Forceful actions, riots etc


இதில் போலிஸ் எமர்ஜென்ஸி என்ற பட்டியலில் சாலைச் சண்டைகள் குறிக்கப்பட்டிருக்கிறது, ஆனாலும் நாங்கள் அன்று தொடர்பு கொண்டபோது மறுத்துவிட்டார்கள். 108 இன் மூலம் சென்றால் முதல் 24 மணி நேரத்திற்கு முதலுதவி இலவசம் என்று சொல்லப்படுகிறது, அதனால் தான் அவர்களை இன்று தொடர்பு கொண்டோம், அவர்களுடைய சில நிபந்தனைகள் எரிச்சலை வரவழைத்து, நம்பிக்கை இழக்கவைக்கிறது.

அடித்தட்டு மக்களின் உயிருக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லை, சாலையில் நடக்கும் மக்கள், பேருந்தை பயன் படுத்தும் மக்கள் இவர்களுக்கான உரிமைகள் என்று என்ன இருக்கிறது, அவர்களுக்கான பாதுகாப்பு என்பது பற்றிய அறிவுறுத்தல்கள் மிகவும் குறைவு. ஒரு வழிப் பாதைகளில் போக்குவரத்து ஒழுங்கென்பது அடியோடு இல்லை. வாகனங்களில் வருபவர்களுக்கு முந்திக் கொண்டு செல்வதில் இருக்கும் நாட்டமும், இன்பமும் தன்னைப் போன்ற ஒரு மனித உயிர்தான் சாலையை கடக்க தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுவதில்லை. பாத சாரிகளுக்காக வாகனங்களை நிறுத்தி சாலையைக் கடக்க உதவி செய்ய போக்குவரத்து காவல் துறையினர் இருப்பதில்லை. ”ஜீப்ரா க்ராசிங்” பயன்படுத்த சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் நாம் செல்ல வேண்டிய இடத்திலிருந்து அது ஒரு மைலுக்கு அப்பால் இருந்தால், முதியவர்கள், குழந்தைகள்  எவ்வளவு தூரம் நடந்து சென்று அதில் கடந்து, பின்பு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது? (ஒருமுறை ஜீப்ரா க்ராசிங்கில் நான் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டி சாலையை கடக்க முயன்றபோது கூட ஒரு ஆட்டோ நிக்காமல் என் மீது மோதிவிட்டு, என்னையும் திட்டி விட்டு பறந்து சென்றது, கைபேசி சிதிற, என் முட்டிக்கால் மடங்கி சாலையில் நான் விழுந்த நிலையில், கால் ஊனமுற்று விட்டது என்று தான் நிணைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. )


ஸ்டெர்லிங் சாலையில் ஒரு ‘மின்தூக்கி (லிஃப்ட்)’ வைத்திருக்கிறார்கள், மற்றொரு முனையை கடக்க முயல்பவர்களுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை.

மற்ற நாடுகளில் நடைபாதைவாசிகளுக்குத் தான் முன்னுரிமை, எவ்வளவு வேகத்தில் வாகனம் வந்தாலும், நடைபாதைவாசி கைக்காட்டி நிறுத்துமாறு சைகை காட்டினால் வாகனங்கள் நிற்க வேண்டும், அவர்கள் சாலையைக் கடந்த பின்னர் தான் செல்லமுடியும், 70% மக்கள் வருமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு நாட்டில் போக்குவரத்து முறை, சாலை பாதுகாப்பு, நடைபாதை உரிமைகள் என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. ஆட்சியைப் பிடிக்க, தக்கவைத்துக்கொள்ள இலவசங்களை அள்ளி வீசும் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் தங்களது அறிக்கைகளில் போக்குவரத்து ஒழுங்குப் பற்றி, பொதுமக்களின் நடைபாதை உரிமைகள் பற்றி, உபாதைகள் பற்றி எந்த அளவுக்கு கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்?

வசிப்பதற்கு இடமற்று, நடைபாதையில் வாழும் மக்களுக்கு “லாப் டாப்பும், மின் விசிறியும், தொலைக்காட்சியும்” கொடுப்பதில் என்ன பயன் இருக்கிறது? இதற்காக செலவு செய்யும் பணத்தை ஏன் அரசாங்கம் பெட்ரோலுக்கு, டீசலுக்கு, சமயல் எரிவாயுக்கு மானியமாக, விவசாய வளர்ச்சிக்காக,  பேருந்து கட்டணத்திற்கு மானியமாக வழங்குவதில்லை? அடிப்படை மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, அவசர மருத்துவ உதவி என்று போதாமை இருக்கும் பொழுது தொழிநுட்ப வசதிகள், நவ நாகரீக வாழ்க்கை முறை வசதிகளின் பெருக்கத்திற்கு தங்கள் கவனத்தை செலுத்தி முன்னேறிய நாடு எனும் பிம்பத்தை தோற்றுவித்து ஏமாற்றுவது வேடிக்கையாக இருக்கிறது.

முன்னேறிய நாடுகளில், சாலையில் செல்லும் பொழுது லேசான தலை சுற்று, மயக்கம் என்று ஆம்புலன்ஸை அழைத்தால் கூட ஓடி வருவார்கள் இங்கு அப்படியா? அங்கு தரமான மருத்து வசதிகள் அணைவருக்கும் கிடைக்கும் வகையில் ‘மருத்துவ காப்பீடு’ அரசாங்கத்தால் செய்யப்படுகிறது, இங்கு?

பந்தோபஸ்துக்களுக்கு அனுப்புவது, சாய்பாபாவின் புட்டத்திற்கு 500 போலீசாரை அனுப்பி பாதுகாப்புக் கொடுப்பது, சி.ஆர்.பி.எஃப் படைகளை அனுப்பி அழித்தொழிப்பு செய்வது (மற்ற நாடுகளுக்கும் அவர்களை அனுப்பி அழித்தொழிப்புக்களில் ஈடுபடுவது) இவற்றையெல்லாம் விட்டுவிட்டு சாலைகளில் போதுமான போக்குவரத்து காவலர்களை அரசு நியமிக்க வேண்டும், மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு இவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் அல்லது நடைபாதிவாசிகளுக்கு முதன்மை உரிமைகள் கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவேண்டும்.

சுற்றுப் பயணங்களுக்கு, வோட்டிற்காக சிலைகளுக்கு மாலை போடுவது என்று அபூர்வமாக சாலைகளை பயன்படுத்தும், குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு வாகனங்களில் பவனி வரும் அரசியல்வாதிகளுக்கே போக்குவரத்தை முடக்கி சாலைகளை ’பளீர்’ என்று சரி செய்வது எந்த அளவுக்கு அவசியமாக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு, அதை விட இன்னும் அதிகமாக கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் சாலையைக் கடக்க முயலும், நடை பாதையை பயன் படுத்தும் பொது மக்களுக்கு (குறிப்பாக முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு) உரிமைகள் இயற்றப்படுதல் அவசியமாகிறது.

பாகம் 3, 12 முதல் 35 வது பிரிவு அடிப்படை அரசமைப்பு சட்டத்தின் 6 வது சுட்டியின் படி அடிப்படை உரிமைகளை சீர்செய்வதற்கான அமலாக்கத்தை பரிந்துரைக்கும் உரிமையின் கீழ் பின் வருபவற்றை பட்டியலிடுகிறேன்:

1.      போதுமான போக்குவரத்து காவலர்கள் 
         நியமிக்கப்படவேண்டும்.
2.      ஒரு வழிப் பாதையில் மைல்கள் இடைவெளியில் அல்லாமல், 
         சில அடிகள் இடைவெளியில் ’ஜீப்ரா க்ராசிங்” கோடுகள் இருக்க
வேண்டும்.
3.      அதில் ஒருவர் நின்று சாலையைக் கடக்க முயன்றால் கூட,
வாகனங்கள் நிற்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட
வேண்டும்.
4.      அவசர உதவி மையங்கள், முதலுதவி வசதியோடு
அமைக்கப்படவேண்டும்,  குறைந்த பட்சம், ஒரு வழிப்
பாதைகளில், நெடுஞ்சாலைகளில்.
(ஏனென்றால் 108 ஐ நம்பி ஒரு பயனும் இல்லை).
5.      நடைபாதி வாசிகளுக்கு முன்னிரிமை அளிக்கும் சட்டங்கள்
இயற்றப்படவேண்டும், அது குறித்தான விளம்பரங்கள்,
விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள்
செயல்படுத்தப்படவேண்டும்.
6.      வெள்ளை நிற ‘ஷேர் ஆட்டோ’ நடமாட்டங்களை ஒழுங்குப்
படுத்த வேண்டும் (பேருந்து நிலையத்தை இவர்களின்
முதலாளிகளின் நெருக்கடிகளினால் , ஓட்டுனர்கள்
ஆக்கிரமித்துக் கொண்டு செய்யும் அட்டகாசம் சகிக்க
முடியவில்லை).
7.      சாலையில் இவர்கள் செய்யும் அத்துமீறல்களை தட்டிக் 
         கேட்கும் நபர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும்.
8.      இவை எல்லாவற்றையும் விட சாலையைக் கடப்பதற்காக ஒரு
குறிப்பிட்ட தூரத்தில் வரும் பொழுதே பொது மக்கள்
நிறுத்தும்படி சைகை காட்டினால், வாகனத்தை நிறுத்தவேண்டும்.    
சாலையை கடக்கும் உரிமையை வழங்க வேண்டும்.
9.      எல்லா பஸ் நிறுத்தங்களிலும் நிழற்குடைகள் அமைக்க
வேண்டும்.
10.    108 ஆம்புலன்ஸின் கேள்வி முறைகள், சம்பிரதாயங்களை 
          நீக்கி, அவசர உதவி துரிதப்படுத்தப்படவேண்டும். அது 
          நடக்காத போது அது குறித்தான புகாரைப் பதிவு செய்ய 
          சாலைகளில் உள்ள முதலுதவி மையங்களில் புகார்பெட்டி, தொடர்பு 
          எண்கள் வைக்கப்படவேண்டும்.


(இது தொடர்பான ஒரு சுட்டி http://www.consumercomplaints.in/complaints/gvk-emri-108-ambulance-services-gujarat-c462656.html )

Apr 11, 2011

ஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு



ஆண்களுக்கான முகப்பூச்சு (கொல்லி) ஒன்றின் விளம்பரத்தில் பெண் தன்மையை மிகவும் அவமானகரமானது என்று முன்வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. பெண்கள் உபயோகிக்கும் நகப் பூச்சு, தாவணி இவைகளை இழிவு படுத்துகிறது. இவைகளை பெரும்பாலும் ஆண் முதலாளிகள் தானே பெண்களுக்கான பண்டம்என்று உருவாக்கியிருக்கிறார்கள். ஆணின் சருமம் கடிமானது அதற்கு பெண்கள் (after all women) கிரீம் மலினமானது என்று சொல்வதோடு அப்பூச்சை உபயோகிக்கும் ஆணின் பின்னால் பெண்கள் வரமாட்டார்கள் என்கிற ரீதியில், ஆணுக்கான பூச்சை உபயோகிக்கும் மீசைவைத்த ஆணைப் பார்த்து பெண்கள் ஆசை படுவது போல் காண்பிக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் நடிகர், தன்னைப் பெற்றவள் ஒரு பெண், தான் திருமணம் செய்திருப்பதும் ஒரு பெண், தனக்கும் ஒரு பெண் பிறந்திருக்கிறாள் என்பதை எல்லாம் இதில் நடிக்கும் பொழுது நிணைவில் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை.  இவர்களது குடும்பம் தான் சிறந்த மாதிரிகுடும்பமாக ஊடகங்கள் முன் வைக்கின்றன. 

தலா 50 ரூபாய்க்கு உலக அழகிகள் தங்கள் உடலை திறந்து போட்டு ஆடுகிறார்கள் என்றால் தலா 20 ரூபாய் காசுக்கு நடிகர்கள் பெண்களை இழிவு படுத்தி, பெண்மையை தாழ்த்தி பிரகண்டனம் செய்கிறார்கள். அதோடு, குழந்தைகளுக்கும் பண்டங்களை பரிந்துரை செய்கிறார்கள் தலா 2 ரூபாய் காசுக்காக. இவர்கள் பரிந்துரை செய்யும் எந்தப் பொருளையும் இவர்கள் பயன்படுத்துகிறார்களா, தங்களது குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே.

நடிகர்கள், அரசியல்வாதிகளுக்கிணையாக எதிர்கால நாற்காலியை குறிவைத்து, வருமான வரியை தவிர்ப்பதற்கு என்று பிறந்த நாள் இலவசங்களை அள்ளி வழங்கி மக்களின் அறியாமையை, எளிய மனங்களின் அன்பை ஏய்த்துப் பிழைக்கிறார்கள். பின்னணி, வரலாறு ஏதும் தெரியாமல் மீனவப் பிரச்சனை, தமிழர் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை, தனித் தமிழ் தேசியம், இசுலாமியர் தீவிரவாதம் என்று எதையாவது உளறி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

திரைப்படங்களில் அரசியல்வாதியை எதிர்த்து அதிரடி செய்பவர்கள், நிஜ வாழ்க்கையில் கோழைகளாக அவர்களுக்கு ஜால்ரா தட்டி சுயமரியாதையற்ற பிழைப்பு நடத்துகிறார்கள்.  

பெண் தன்மையைக் கேவலப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஆண்களையும் இவ்விளம்பரங்கள் தரக்குறைவாக சித்தரிக்கிறது, பெண்களைக் கவர்வதையும், கிண்டல் செய்வதையும் தவிர ஆண்களுக்கு வேறு நினைப்பே கிடையாதா என்ன? இவர்களின் தவறான கதாநாயகத் தன்மை, ஆண் தன்மைகள் பற்றிய சித்தரிப்பு ஆண்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கிறது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பெண் தன்மைக் கேவலமானது எனும் திரைப்படங்களின் கேளிக்கைகள், திருநங்கைகளை மக்கள் கிண்டல் செய்வதற்கான முக்கியக் காரணமாய் இருக்கிறது.


Fair & Handsome எனும் அந்த விளம்பரத்தை, திமிர் பிடித்த இவர்களின் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து சுயமரியாதை உள்ளவர்களாக நாம் ஏதாவது செய்யவேண்டும். 

http://www.facebook.com/home.php?sk=group_202859906403065&ap=1 - Oppose Male Chauvinistic Fair & Handsome Advertisement

Apr 6, 2011

பூனையின் வகுப்பில் பொய்கள் வெளியேறியது…....



பூனைகள் தலைவர்களை சரியாக
அடையாளம்
காண்கிறது
தலைவர்களைக் கொண்டே
மக்களையும்
அடையாளம் காண்கிறது

பயம் நிறைந்த மஞ்சள் விழிகள்
மனித நிழல்களை வேவு பார்க்கிறது
அந்நிழல் மிருகத்தோடு ஒத்திருப்பதை
குகைச் சுவற்றில் வரைந்து வைத்து
குட்டிப் பூனைகளுக்கு வகுப்பெடுத்தது பூனை

பூனையின் வகுப்பில்
எச்சரிக்கை சின்னமாய் மனிதனின்
குவிந்த உதடுகள்
அபாய ஒலியாக முத்தச் சத்தம்
நாற்றத்தின் குறியீடாய் நாக்கு
மரணத்தின் குறியீடாய்
மனித சொற்கள்

குருதி வடியும் விலங்குகளின் பற்களைக் காட்டிலும்
மனித சொற்களின் முன்
கூறிய நகங்களை தயாராய் வைத்திருக்க
கற்றுத் தந்தது
வாத்தியார் பூனை

அதிகாரத்தின் வரைபடமாய் இடம் பெற்றது கைகள்
வருடும் மனித விரல்கள்
சுதந்திரமானவை..
அது
என்றும்
அடிமைகளைத் தேடிக் கொண்டே இருக்கும் என்றும்
சிறந்த
அடிமைகளுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு
இறகுகள் தானமாய்
வழங்கப்படும்
மனித
நேயம் பற்றிய குறிப்போடும்

வகுப்பை முடித்தது பூனை
வாலை
ச்
சு
ழற்றியது
பூ
னை.