Dec 14, 2009

வேட்கையின் கட்டமைப்பும் மனித விதிகளும்…



-->
ஆதி மனிதன் வேட்கையை எப்படி கண்டுணர்ந்திருப்பான். வேட்கையை என்ன விதமாய் அனுபவித்திருப்பான், இலக்கியங்கள் வேட்கையை என்ன விதமாய் அணுகுகிறது.
தோன்றும் ஆசைகளை அனுபவிக்க ஆரம்பித்தவன், அதை புரிந்துகொள்ள முயற்சிக்கையில் அல்லது அனுபவத்தை தள்ளி வைத்து பார்க்க எண்ணுகையில் அதனை அவஸ்தையாய் உணர்ந்திருக்கலாம். போகிற போக்கில் ஒன்றை கண்டுபிடிப்பது அதனை துய்ப்பது, வெறுப்பது, இவை போன்ற அனுபவங்கள் மனித இனத்துக்கு புதிதில்லை. அவனது ஆதி விருப்பத்துக்கு உயிர் முதல் பொருள் வரை யாவும் அனுபவித்தலின் எல்லைக்குள் அடங்க வேண்டும். அவன் புலன்கள் உட்பட.
புலன்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே ஓர் அவா. வேட்கை. தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியா மனம் அதை வேட்கையாய் வேட்கையிலிருந்து தவிப்பாய் அனுபவத்தில் உணரத்தொடங்குகிறது. வேட்கையில்லா மனிதன் அரிது. காணி நிலம் வேண்டுமென்பதிலிருந்து குண்டலினி உயர்த்த தவமிருப்பது வறை எல்லாமே ஒரு வகை வேட்கைதான். மனிதனுள் இருக்கும் வேட்கைதான் கவுகளாகின்றன. தன்னுடைய வேட்கை நிறைவேறா பட்சத்தில் அது தொடமுடியாத ஒன்றென எல்லை வகுத்து அதற்கு லட்சியம் என பெயரிடுகிறது மனம். வுகள் லட்சியத்தை உருவாக்குகின்றன, வேட்கை என்றும் அணையா நெருப்பு, நீர்மையால் பருக முடியா பெருந்தாகம். இந்த மண்ணில் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்த வேட்கையுடன் ஓடும் ஓர் ஆத்மாவை நோக்கி.....
எல்லாவற்றிற்கும் அர்த்தம் இருக்கும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை நான் கண்டுணர்ந்திருக்கிறேன். அதே பிடிவாதத்தோடு நான் அவர்களின் லட்சியங்களை வேடிக்கை பார்க்கிறேன். அதற்கு என்னுடைய வினை வெறும் பார்வைதான்.
என் வரையில் பார்வையாளனாய் இருப்பது பெரும் வலியும் ஆறா வாதையையும் கொண்டது. சாதனைதான் வாழ்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றால், அதன் உந்து சக்தியாக வேட்கை இயங்குகிறது.
இயற்கை மனிதனை ஆறறிவுடன் படைத்துள்ளது. ஐந்து அனுபவிக்க, ஆறாவது அந்த ஆசையை படைக்க,ஆசைகளையும், வேட்கையையும் சரியான திசையில் வழிநடத்த, 'சரி' என்பதன் விளக்கம் அவரவர் பொறுத்ததே. சமுதாயம் தோன்றியதும் மனிதன் 'நெறி'களை வகுத்திருக்கவேண்டும், இது தான் 'சரி' என்று சொல்லப்படும் வன்முறைக்கு மாறாக நான் சொல்ல விரும்புவது, யாருக்கும் 'தீங்கு' விழைக்காத பாதை.
லட்சியம், கனவு, விருப்பம் இவைகளுக்கு முன் சக மனிதன் ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் இடம் கொடுங்கள், நீங்கள் அடையப்போகும் லட்சியம், அதன் பெருங்கனவு இவைகளுக்கு முன் அவனின் கண்ணீர் உங்கள் லட்சியங்களை வெறுக்கும். அழும் மனிதனின் பிடறி பிடித்து லட்சியத்தை நோக்கி ஓடச்சொல்லும் தத்துவங்கள் கடவுள்கள் இவைகளை நான் வெறுக்கிறேன்.
இப்படி கவுகளும், வேட்கைகளும் தான் மனிதனின் லட்சியத்தை வளர்கின்றன என்றால், ஒருவருக்கு பல லட்சியங்கள், பல வேட்கைகள் இருக்க வேண்டும். நான் எல்லா ஆசைகளையும் லட்சியமாக கொண்டேன். வாழ்கையில் உன் லட்சியம் என்ன? நீ என்னவாக விரும்புகிறாய் என்று என்னிடம் யாராவது கேட்டால், எனக்கு சிரிப்பு வரும்.
ஏனென்றால் எனக்கு பல 'லட்சியங்கள்' உண்டு, ஆசை, வேட்கை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்த வரை என் ஒவ்வொரு இருப்பும் எனது லட்சியங்கள்தான். ஆனால் ஒருபோதும் உங்கள் கையால் விருதுகள் வாங்காத சக மனுஷி. இன்று காலை தொழிலதிபர், மாலை கவிஞர் பிறகு சிற்பி, நாளை விவசாயி, வேறொருநாள் சமூக சேவகி, ன்மீகவாதி இப்படி. கணந்தோறும் மாறும் மனநிலையை பலர்....'பைத்தியம்' என்கின்றனர், 'நிலை இல்லா குணம்' என்கின்றனர். ஒரே லட்சியம் உள்ள மனத்தை நான் இறுகிய பாறை என நான் சொல்லப்போவதில்லை. என்வரையில் பித்தம்தான் ஞானத்தின் உச்சம். அது எவரையும் கிழிக்கும் பட்சத்தில் அந்த ஞானத்தை நடுத்தெருவில் நிறுத்துவதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் 'எல்லா வேட்கைகளையும்' பூர்த்தி செய்வதுதான் என் லட்சியம்.
'jack of all, master of none' என்று வைத்துக்கொள்ளலாம். நான் தலைவியாக (master) விரும்பவில்லை, அது பெரும் பாரம். பிறருக்கு வாதை. அந்த சிம்மாசனத்தை நான் மின்சார நாற்காலியாகவே அறிகிறேன். அந்த நாற்காலியை காலியாகவே விடுகிறேன்...
பல தொழில்களை செய்து மூலதனத்தை குவிக்கும் மனிதனை முதல்படி ஏற்றி தொழில்களை ஆளூம் அதிபர் என்றழைக்கும் சமூகம், ஓர் தனி மனிதன் நிறைய லட்சிய வேட்கைகளை கொண்டிருந்தால் அது 'நிலையற்ற மனம் என்கிறது. பரிதாபம்.
மனித மனத்திற்கு முடிவு தேவை. முடிவில் கண்டறிந்த ஞானத்தை ஊர்கூடி அறிவிக்க வேண்டும். என்னுடைய ஞானத்தை நான் எனக்கே சொல்லப்போவதில்லை. இதில்…..
ஒரு நாள் என் மகள் கேட்டாள் 'அம்மா நானும் பிக்காசோ போல், எம்.எஃப். ஹுசேன் போல் ஓவிய வரலாற்று புத்தத்தில் இடம் பெறுவேனா? என்று. வேட்கை இருந்தால் முடியும் என்றேன்.புன்னகைத்தாள். வேட்கைதான் வேறென்ன. அதே போல், ' எப்படி வேட்கை தானாகவே திறமையை உற்பத்தி செய்யும்' என்ற தலைப்பில் ஒரு பாடம் இருப்பின், நானும் இடம் பெறுவேன் உங்கள் அதிகாரத்தில் அனுமதிக்கப்பட்ட வரலாற்றில்.
அதன் குறியீடே நான் வடித்த இந்த சிற்பம்..புலன்கள் ஒவ்வொன்றும் இழுக்கும் திசைக்கெல்லாம் நான் செல்வேன்..வாழ்வை வாழ்வேன் என் கட்டளைப்படி..
இயற்கையின் வேட்கை பிரபஞ்சம்
பிரபஞ்சத்தின் வேட்கை உயிர்
உயிரின் வேட்கை மனிதன்
மனிதனின் வேட்கை பேராசை மிச்சம் வைக்காது எதையும் துள்ளத் துடிக்க அனுபவிக்கும் பேராசை
வாழ்க அனுபவங்கள்...
உங்கள் கடவுளர்கள் மிகுந்த அன்பை கைக்கொண்டிருந்தால்
இதுபோன்றொரு உலகை அதன் வன்மத்தோடு படைத்திருக்க முடியாது. உங்கள் கடவுளுக்கு என் வாழ்த்துக்கள்.

Dec 13, 2009

மனதில் உறுதி வேண்டும்...

நான் நானேதானா...எனக்கான நானா.. உங்களுக்கான நானா...எனக்கும் உங்களுக்கும் ஆன நானா...நான் நானாக இருக்க உங்களுக்கான என்னை கொல்ல வேண்டும்...சற்றும் இரக்கிமில்லாமல்....மனதில் உறுதி வேண்டும்...

Dec 3, 2009

கற்பின் பெயரால்


'கற்பு' - உலகில் உள்ள வார்தைகளில் மிகவும் பெண் இயல்பு (ஃபெமினிஸ்டிக்) நிறைந்தது. பெரும்பாலும் 'கற்பு' எனும் குறிப்பு பெண்ணை ஒட்டிக்கொண்டுதான் வருகிறது. அந்த குறிப்புக்கு உண்டான 'குறியீடுகளுக்குள்' அவள் விழவில்லையென்றால் அவள் 'வேசி'..என்னுடைய இந்த 'கற்பின் பெயரால்' எனும் சிற்பம்:- ஒரு பெண் தன் இரு கைகளையும் தன் மார்பகங்களின் முன் குறுக்காக பிடித்துள்ளாள். அவளுடைய கழுத்து நீண்டு இருக்கிறது. கழுத்தின் மேல் சிறைக் கம்பிகளுக்கு நிகரான சதுர வடிவ முடக்கு (பிளாக்) உள்ளது. அவள் தலைமேல் ஒரு கூடை. கூடைக்குள் ஓர் ஆண் படுத்துக்கிடக்கிறான். பால்வகை ஒழுக்கத்தின் (செக்ஷுவல் மொராலிட்டி) பெயரிலும், கற்பின் (சாஸ்டிட்டி) பெயரிலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சித்தரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை நளாயினியின் கதையைப் படித்தபோது, எனக்கு சில வினாக்கள் எழுந்தன. ஒரு பெண் தன்னைப் பத்தினி என்றும், பதிவிரதை என்றும் நிரூபிக்க எத்தனை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறாள்? நம் புராணங்களில் 'பஞ்சகன்னிகள்' என்று ஐவரைக் கூறுவர். பின்னர் அவர்கள் பத்தினித் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரு கணவனுக்கு மேல். புராணக் காலங்களில் பல்மனை மணம் (பாலிகாமி) வழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக இது விளங்குகிறது. பின்னர் சொத்துக்கள் பிரிப்பதில் விவகாரங்கள் எற்பட, முறைகள் மாற்றப்பட்டதாகவும், மரபுகள் தோன்றப்பெற்றதாகவும் கேள்வி. உங்கள் முன் நளயினின் கதையை முன் வைத்து சில கேள்விகள்:-

ஒரு முறை ரிஷி மௌதகல்யா (நளாயினியின் கனவர்) தன் மனைவியின் சகிப்புத்தன்மையும், அன்பையும் சோதிக்க எண்ணி தனக்குத் தானே தொழு நோயை வரவைத்துக்கொண்டு தான் உண்ட அந்த எச்சில் தட்டில், எப்பொழுதும் போல் தன் மனைவி சாப்பிடுகிறாளா என்று சோதிக்கிறார். சற்றும் முகம் சுளிக்காமல், நளாயினி அதே தட்டில் உண்கிறாள். அப்படியும் திருப்தி ஏற்படாமல், ரிஷி தன்னை ஓர் வேசியின் வீட்டிற்கு கூட்டிச் செல்ல சொல்கிறார். நளாயினியும் அவரை ஓர் கூடையில் சுமந்து கொண்டு சென்று, அவரை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்துக்கிடக்கிறாள். பின்னர் அவரை சுமந்து கொன்டு வீடு திரும்புகிறாள்.

இப்படி சோதனையெல்லம் அவள் வென்றதால், ரிஷி மனமகிழ்ந்து 'என்ன வரம் வேண்டும் கேள்' என்கிறார். அப்பொழுதும் அவள் அவர் மேல் கொண்ட காதலால், ரிஷி ஐந்து உருவங்கள் எடுக்க வேண்டும் என்றும், அந்த ஐந்து உருவத்திலும் அவர் அவளை அனுபவிக்கவேண்டும் என்றும் வேண்டுகிறாள். பல வருடங்களாக இந்த உலகத்தை காதலும் களிப்புமாக சுற்றிவருகிறார்கள். ஆனால் நளாயினிக்கு அவைப் போதவில்லை என்றும், ஆகையால் ரிஷி கோபம் கொண்டு, அவள் அடுத்தப் பிரவியில் ஐந்து கணவர்களுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்றும் சபிக்கிறார்.

இதில் மறைமுக பொருளும், நெறிகளும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என் கேள்வி - ஏன் பெண் மட்டும் இப்படி சோதிக்கப்பட வேண்டும்? பின்னர் சபிக்கப்படவேண்டும்? இக்கதைகளை முன்மாதிரியாக கொன்டு பெண்கள் நடத்தபடவேண்டும்?

புராணங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால், அவர்களுக்கு சாதகமாக விதிகளை உருவாக்கிவிட்டார்களோ? எனக்கு ஓர ஐயம்:- புராணங்கள் பலருடைய கருத்தை உள்ளடக்கி புனையப்பட்டதாக இருக்ககூடும். ஆகையால் தான் கதாப்பாத்திரங்களுக்குள் அத்தனை முரண்பாடு.

ஓரிடத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்று படைத்துவிட்டு, வேறொரு இடத்தில் அவள் முன் ஜென்மத்தில் நளாயினி என்றும் ரிஷியின் சாபத்தால் ஐந்து கணவர்களைப் பெற்றாள் என்றும் நியாயப்படுத்தப்படுகிறது. இது முரண்பாடுதானே? பெண் சாபம் பெறுவதற்காகவே சபிக்கப்பட்டவளா? கருத்துக்கள் ஆணாதிக்க போக்கிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. நளாயினியின் பதி பக்திக்கு இத்தனை சோதனைகள் வைக்கப்பட்டது நியாயமா? ஏன் ஒரு மனித பிறவி இன்னொரு மனித பிறவியை வழிபட வேண்டும்? ஏன் தன்னை நியாயப்படுத்த வேண்டும் தான் களங்கமற்றவள் என்று நிரூபிக்க தீயில் குதிக்க வேண்டும்?

எப்பேற்பட்ட சகிப்புத்தன்மையை பெண்கள் மேல் திணித்திருக்கிறார்கள், கதைகள் மூலம்?

கற்பின் பெயரால் எங்களை கடவுளாக்கவும் வேண்டாம், களங்கத்தின் பெயரால் எங்களை மிதிக்கவும் வேண்டாம். ஆண்களுக்கு நிகராக புகைக்கவோ, குடிக்கவோ, பலபேருடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி எழுப்படும் கேள்விகள் அல்ல இவை. சிந்தியுங்கள்..யாருடைய கருத்துக்கள் மரபுகளாக இந்த சமுதாயத்தில் உலா வருகிறது? விதிகளை கடவுள் விதித்தார் என்றால், எல்லா சமுதாயத்திற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? நம் நாட்டிலேயே சில குலமரபுகுழுக்களை (உ.ம். கோண்டு சமுதாயம்) சார்ந்தவர்கள் 'பல்மனை' கலாசாரத்தைப் பின்பற்றுவதாக படித்திருக்கிறேன். மேலும் முற்காலத்தில் 'குலத்தலைவி' (matriarchy) முறைதான் இருந்ததெனவும், பின்பு குலத்தலைவன் (patriarchy) முறைக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. (உ.ம் சதவாகன அரசர்கள் / பல்லவ முன்னோர்கள் - கௌதமிபுத்ர, வசிஸ்டிபுத்ர, ஹரிதிபுத்ர போன்ற பெயர்கள்)

'குலத்தலைவி' முறையும் அல்லாமல் 'குலத்தலைவன்' முறையும் அல்லாமல் தனி நிலை சமுதாயம் வேண்டும். (neutriarchial society).

என்னைப்பற்றி


படித்து பெற வேண்டிய அறிவும், அனுபவமும், என் நடுத்தர வர்க்க வாழ்க்கை எனக்கு கொடுத்தது. அதன் வாயிலாக ஒரு தெளிவு ஏற்பட 33 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு முன்: பால் பேதமையின் பெயரிலும், கற்பு, பண்பு, கலாச்சாரம், ஒழுக்கம், பெண்மை இவற்றின் பெயராலும் இந்த சமூக சாத்தான் என்னை அடக்கி வைத்திருந்தது.


நானும் நீண்ட கூந்தல் வளர்த்து, பெரிய பொட்டு வைத்து, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, 6 மணிக்கு அல்வாவையும், அவரையும் எதிர்நோக்கி காத்திருக்க வளர்க்கப்பட்டேன். திருமணத்திற்கு முன்பு பெய் என்றால் பெய்கிறதா மழை என்று பல முறை ஒத்திகை பார்த்தேன். பெய்யாததால் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டேன். (நல்ல வேளை மழை பெய்யவில்லை, பெய்திருந்தால் ஏதோ சித்து வேலை செய்துவிட்டேன் என்று கற்பை மறுபடி நிரூபிக்க தீயில் குதிக்க சொல்லியிருப்பார்கள்). பற்றாக்குறைக்கு அம்மன் திரைப்படங்கள் வேறு ...

அந்நாளைய குற்ற உணர்வு, பின்னாளில் ஏன் இப்படி? என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டே இருந்தது . பெண் தெய்வ வழிபாடு பற்றி நான் செய்த ஆராய்ச்சி, கடவுள் வழிபாடு எப்படி தோன்றியது, எப்படி உருவ வழிபாடாக மாறியது, பெண் ஏன் தெய்வமாக்கப்பட்டாள் என்ற உண்மையை போட்டு உடைத்தது. செய்யாத தவறுக்கு அகலிகை பெற்ற சாபம், நளாயினிக்கு நடந்த பதிவிரதை சோதனை, சீதை தீக்குளித்தது போன்ற கதைகள் பெண்ணை கற்பின் பெயரால் அடிமை ஆக்க புனையப்பட்டவை என்று புரியவைத்தது.

இன்னும் பல கொடுமைகள்

பெற்ற தந்தையே, மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு தன் இரண்டு மகள்களை கற்பழித்த போது, கண்ணன் பாஞ்சாலிக்கு புடவை கொடுப்பதிலும், துர்கை மகிஷனை வாதம் செய்வதிலும் ஆழ்ந்து விட்டதால், அக்குழந்தைகள் காவல் நிலையம் ஏறியதாக படித்தேன் . பின்பு ஒரு நாள் கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியாரின் முத்த மகத்துவத்தை விளக்கி எழுதியப் புத்தகத்தைப் படித்த போது, ஆவியானவும் நேரில் வர மாட்டான் என்று புரிந்தது.

பெண்மைக்கடுத்து மதமும், அரசியலும் என்னை பாதித்தது. அந்நிய சக்திகளாக குதிரையில் வந்த குலத்தவரை எதிர்க்க மனோதிடம் வேண்டி பிரார்த்தனைக்காக உருவாக்கப்பட்ட கடவுள் உருவங்கள் பின்பு சுயநலத்திற்காக, சிறுபான்மையினரை அடக்கி ஆண்ட வரலாறு புலப்பட்டது. மனிதனே சக்தி வாய்ந்த படைப்பாளி என்ற நிதர்சனத்தை நிலை நாட்டியது. பின்னே, அவன் படைத்த பணமும், மதமும் தானே இன்று எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

என் அனுபவங்கள், கேள்விகள், கோபங்கள், ரசனை இவைகளை நான் சந்தேகப்படவேண்டியிருக்கிறது.

அ முதல் அ வரை...


வார்த்தைகள் ஒவ்வொன்றாய்
நீக்கினேன்..
வாக்கியமற்று போனேன்..
உறவின் இலக்கியம் புலப்பட்டது
வெற்றிடத்தில் ....

படைப்பின் மேன்மை வேண்டி
நான் பிடித்த ஆயுத எழுத்தின்
மூன்று புள்ளிகள்...
சறுக்கிக் கொண்டு ஓடியது...

அ வில் தொடங்கி...
அ வில் முடிந்தது...

இப்பொழுது மொழி புலப்பட்டது...

எங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம்












நீங்கள் கிசுகிசுக்களைபேசிக்கொண்டிருக்கிறீர்கள்...
நாங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்

எங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம்
உங்களுக்கு படுக்கை அறை தெரிகிறது...

எங்கள் உடல்களை பங்கு போடுவதில்
எங்களுக்குப் பிரச்சனை இல்லை...

உங்கள் கற்பனைப் புணர்ச்சிகளுக்கு
நாங்கள் வெளியேற்றம் செய்ய இயலாது...