Jun 18, 2021

மார்க்சியவாதிகளை எதிர்த்து வெளியான கட்டுரைகளுக்கு லெனின் பதில்

 


“மக்களின் நண்பர்கள்” எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் சமூக-ஜனநாயகவதிகளை எதிர்த்துப் போரிடுவது எப்படி? – வி.இ. லெனின்

 

(”ரூஸ்கயே பகாத்ஸ்த்வோவில்”1 மார்க்சியவாதிகளை எதிர்த்து வெளியான கட்டுரைகளுக்குப் பதில்) என்னும் புத்தகத்திலிருந்து

 

இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், நமது அகவயத் தத்துவஞானியானவர் வெறும் சொற்றொடர்களிலிருந்து ஸ்தூலமான விவரங்களுக்கு வருவதற்கு முயற்சி செய்த உடனேயே ஒரு குளறுபடியில் சிக்கிக் கொண்டார் என்பதேயாகும்.2  மேலும் அவ்வளவு சுத்தமில்லாத இந்த நிலையில் இந்த இடத்தில் தான் மிகவும் சுகமாக இருப்பதாக அவர் நினைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் தமது இறக்கைகளைக் கோதி அழகுபடுத்திக் கொண்டு, தன்னைச் சுற்றிலும் சேற்றை வாரியடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.  உதாரணமாக, வரலாறு என்பது வர்க்கப் போராட்ட நிகழ்ச்சிகளின் தொடர்வரிசையே என்ற கருத்துரையை மறுப்பதற்கு அவர் விரும்புகிறார். எனவே மிகவும் ஆழமான ஒரு தோரணையோடு இது “தீவிரமானது” என்று அறிவிக்கிறார்.  “மார்க்சினால் ஆரம்பிக்கப்பட்ட, வர்க்கப் போராட்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கம்3 பிரெஞ்சு, ஜெர்மன் தொழிலாளர்கள் ஒருவரையொருவர்  கழுத்தை வெட்டுவதையும் கொள்ளையடிப்பதையு தடுக்கவில்லை” என்று கூறிய பிறகு பொருள்முதல்வாதம் “தேசிய அகந்தை, தேசியப் பகைமை என்ற பேயோடு” கணக்குத் தீர்க்க முடியவில்லை என்பதை இது நிரூபிக்கிறது என்று வற்புறுத்துகிறார்.  ஆனால் வர்த்தக, தொழில் பூர்ஷுவாக்களின் மிகவும் உண்மையான நலன்களே இந்தப் பகைமைக்கு முக்கியமான அடிப்படை; தேசிய உணர்ச்சி ஒரு சுதந்திரமான காரணி என்பது போலப் பேசுவது பிரச்சினையின் சாராம்சத்தை மறைப்பதற்கு மட்டுமே உதவும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த விமர்சகர் முற்றிலும் தவறி விட்டார் என்பதையே இந்த வற்புறுத்தல் வெளிப்படுத்துகிறது. ஆனால் தேசிய இனத்தைப் பற்றி நமது தத்துவஞானியார் எவ்வளவு ஆழமான புலைமை கொண்டிருக்கிறார் என்பதை நாம் முன்னரே பார்த்து விட்டோம்.

 

அகிலத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு புரேனினுடைய கிண்டல் இல்லாமல் திரு. மிகய்லோவ்ஸ்கியால் குறிப்பிட முடியாது “சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்கு மார்க்ஸ் தலைவராக இருந்தாலும் அது சின்னா பின்னமடைந்து விட்டதும் உண்மையே;  ஆனால் இப்பொழுது அதற்குப் புத்துயிர் கொடுக்கப் போகிறார்கள்” என்று எழுதுகிறார்.  ரூஸ்கேயே பகாத்ஸ்த்வோவின் இரண்டாவது இதழில் வழக்கமாக உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதி வரும் கட்டுரையாளர் சர்வதேச ஒருமைப்பாட்டின் nec plus ultraவை* ஒரு “நியாயமான” பரிவர்த்தனை என்ற அமைப்பாகக் கண்டு பிலிஸ்தினிய அற்பத் தனத்தோடு விளக்கம் கொடுத்திருக்கிறார்; பரிவர்த்தனை என்பது – நியாயமானதோ அல்லது அநியாயமானதோ – பூர்ஷுவாக்களின் ஆட்சியை முன்னூகிப்பதோடு அதை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

 

பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு ஒழிக்கப்பட்டாலொழிய சர்வதேச மோதல்களைத் தடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், அகிலத்தைப் பற்றி ஏளனம் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. தேசிய பகைமையை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுபடுத்தி, ஸ்தாபன ரீதியாக திரட்டி பிறகு அத்தகைய தேசிய அளவிலுள்ள தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களைச் சர்வதேச மூலதனத்தை எதிர்த்துப் போராடக் கூடிய சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தனியொரு படையாக ஒன்றுபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சாதாரண உண்மையை திரு. மிகய்ஸோவ்ஸ்கியின் மூளை வாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறது.

தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் தம்முடைய கழுத்துகளை வெட்டிக் கொள்வதை அகிலம் தடுக்கவில்லை என்ற கூற்றைப் பொருத்தவரை, திரு. மிகய்லோவ்ஸ்கியிடம் கம்யூன் நிகழ்ச்சிகளை4 – யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான நிலையை அவை எடுத்துக் காட்டுகின்றன – நினைவுபடுத்துவதே போதுமானதாகும்.

திரு. மிகய்லோவ்ஸ்கி நடத்துகின்ற விவாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அருவருப்பைத் தருவது அவர் பயன்படுத்துகின்ற முறைகளேயாம்.  அகிலம் பின்பற்றுகின்ற செயல்தந்திரத்தில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டால், எந்த லட்சியங்களின் பெயரால் ஐரோப்பியத் தொழிலாளர்கள் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படுகின்றார்களோ, அவற்றில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர் குறைந்தபட்சம் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் அவற்றை விமர்சிக்க வேண்டும்; சரியான கருத்துகள் எவை, இன்னும் திறமையான போர்த்தந்திரம் எது என்பதைப் பற்றிய தம்முடைய கருத்தை விளக்க வேண்டும்.  அவர் தெளிவான, திட்டவட்டமான ஆட்சேபங்களைச் சொல்வது இல்லை;  அதற்குப் பதிலாக, சொற்கூளங்களுக்கு நடுவே இங்குமங்கும் அறிவில்லாத ஏளனச் சொற்கள் சிதறிக் கிடப்பதை மட்டுமே பார்க்கிறோம். இதைக் குப்பை கூளம் என்று கூறுவதைத் தவிர – அதிலும் ருஷ்யாவில் அகிலத்தின் கருத்துகளையும் போர்த்தந்திரங்களையும் ஆதரிப்பது சட்ட பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்ற நிலையில் – வேறு என்ன சொல்ல முடியும்?

-        வி.இ. லெனின். பக். 13-15, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் (நூல் திரட்டு தொகுதி 1, பக். 154-156)  

1894 வசந்த காலம் – கோடை கால்த்தில் எழுதப்பட்டது    





Jun 9, 2021

அம்பேதர் என்ன ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தா

 அம்பேத்கர் எழுதியதை மேற்கோள்களாக, போஸ்டர்களாக பயன்படுத்திக்கொள்ளக் கூட அவரை தொழுபவருக்கு மட்டுமே உரிமை உண்டு அப்படியிருக்கையில் அவரது சிந்தனைகளை திறனாய்வு செய்வதா! அது மகா பாவம்! அல்ல அல்ல சாதி வெறி! இதுதான் அம்பேத்கரியவாதிகளின் எழுதா விதி.

அம்பேத்கர் எழுதியதில் புரட்சிகரமாக, சாதகமாக உள்ள எழுத்துகள் மட்டுமே இதுவரை எடுத்தாளப்பட்ட நிலையில் அவரது எழுத்துகள் வாயிலாக அவரது மதப் பார்வை மற்றும் பொருளாதாரப் பார்வை எத்தகையது என்பதை ரங்கநாயகம்மா திறனாய்வு செய்தார். வழக்கம் போல் அதை சாதிய அவதூறுகளாலும், வசைகளாலும், மிரட்டல்களாலும் (வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வேண்டும் என்று அப்போதே ஒருவர் எழுதினார் ). அதனைத் தொடர்ந்து “சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலை நான் தொகுத்தேன், மொழிபெயர்த்தேன். என்னுடைய பதிலுரைகளையும் இணைத்தேன்). ஆனால் அந்நூலை பற்றி அம்பேத்கரியர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை!

ஏனெனில் அதன் தலைப்பில் “அம்பேத்கர்” இல்லை.

அடுத்ததாக, ரங்கநாயகம்மா மறுப்பு நூல் வந்ததாக சொல்லப்பட்டது. வழக்கம் போல் சுயசாதி பற்றிலிருந்தும், அரசியலில் பிழைத்திருக்க வேண்டியும் ரங்கநாயகம்மாவின் சொற்களை திரித்து! அல்லது அவர் இதைத்தான் சொல்ல வருகிறார்! இப்படித்தான் பொருள் கொடுக்கிறார் என்று தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் “வட்டத்தினரை” ஆசுவாசப்படுத்த முயலும் ஒரு நூல் அது!

இதற்கிடையே அம்பேத்கரை கடவுளாக மாற்றி சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடமே தீர்வுள்ளது என்று அடையாள அரசியல் செய்யும் போக்கிற்கு (இதன் பிரதான நோக்கம் மார்க்சியத்தை ஒழிப்பது, கம்யூனிஸ்டு அரசியலை ஒழிப்பது) - எதிராக அம்பேத்கரது புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலை வசுமித்ர எழுதினான். அதை அறிவித்தவுடன் ஒரு கூட்டம் தன் சதி வேலைகளைத் தொடங்கியது. மார்க்சியம் என்றால் என்னவென்றே அறியாத “புலி எதிர்ப்பு போராளி” ஒருவர் களம் இறங்கினார். ரங்கநாயகம்மாவின் அறிவை மட்டமாக பேசியதற்கு எதிர்வினையாக வசுமித்ர ஒரு கேள்வியை வைத்தான்! அதை திரித்து இன்று இந்த நொடிவரை வசுமித்ர அம்பேத்கரை அவதூறாக பேசிவிட்டான் என்று ஒரு கூட்டம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது வசுமித்ர அதற்கு விளக்கமளிக்கிறான்.

அம்பேத்கரின் எழுத்துகளை இப்படி புரிந்து கொள்ளக் கூடாது, அப்படிப் புரிந்துகொள்ளக் கூடாது! இடையிலிருந்து பேசாதீர்கள், முழுவதுமாக படியுங்கள், அந்நூலை அம்பேத்கர் எழுதவே இல்லை, அதை தொகுத்தார்! அது அவருடைய மேற்கோள்! அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதினார்! அவர் எழுதவில்லை! இப்படி வகை வகையாக அம்பேத்கரின் “தவறான” சில வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான எழுத்துகளுக்கு விளக்கம் கொடுத்தனர்!

இப்போது நாம் விளக்கம் கொடுத்தால் ஒரே ஒரு பதில் தான் வரும் – சாதி வெறி!

யாருக்கு சாதி வெறி என்பதை இனியும் நாங்கள் விளக்க வேண்டியதில்லை!

ஆனால், மேற்சொன்ன சமாளிப்புவாதங்களை நாம் எல்லா மத நூல்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கத் தொடங்கினால் அது எத்தகைய அறிவார்ந்த சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தும்?

கம்யூனிசத்தைப் பன்றித் தத்துவம் என்றார், மார்க்ஸியம் பற்றி எதிர்மறையாக பேசினார்! தாழ்த்தப்பட்டவர்கள் கம்யூனிசத்தை நாடினால் நாடே அதோகதிதான் என்பார்! ஏன்? ஏனென்றால் அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பை கண்டுகொள்ளவில்லை! அவர்கள் மேல் இருந்த கோவத்தில் அப்படி பேசினார் என்று மீண்டும் சமாளிப்புவாதம்! அப்படியெனில் மார்க்ஸையும், மார்க்சியத்தையும் ஏன் அவர் மறுக்க வேண்டும்? அது வன்முறைய்ப் பாதை என்று ஏன் முடிவுக்கு வரவேண்டும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்டோர் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அனைவரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை! ஆனால் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கையில், குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் அரசியலை மடைமாற்றம் செய்கையில், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை குலைக்க அதை முன்னெடுக்கையில் அதற்கு காரணமாக அமையும் அரசியல் சித்தாந்தத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உள்ளது.

ஆதாரம் எங்கே ஆதாரம் என்கிறார்களே அம்பேத்கர் மார்க்ஸை விமர்சிக்க எதை ஆதாரமாக கொடுத்துள்ளார்?

எல்லாவற்றுக்கும் மேலாக பொருள்முதல்வாத விஞ்ஞான சித்தாந்தத்தை கருத்துமுதல்வாத (கால் பொருள்முதல்வாத??) சித்தாந்தத்தோடு ஒப்பிட்டு மார்க்சியம் உதவாது பௌத்தமே தீர்வு என்று போதித்து சென்றார். இதை நாம் திறனாய்வு செய்யக் கூடாதா?

அம்பேத்கரது எழுத்துகள் என்ன ஒரு கூட்டத்தின் / சாதியின் தனிச்சொத்தா?

அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞர் என்னும் அடிப்படையிலும் மார்க்சியர்கள் அவரை விமர்சிக்கலாம்! விமர்சிப்போம்!

சாதியத் தலைவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸா புத்தரா என்றோ, மார்க்சியமா பௌத்தமா என்றோ ஆய்வுகள் செய்யவில்லை. சாதி ஒழிப்பிற்கு தீர்வு தம்மிடம் உள்ளது என்றும் சொல்லவில்லை! எனவே நாங்கள் அத்தகைய சாதியத் தலைவர்கள் குறித்து பேசவோ, ஆய்வு செய்யவோ ஒன்றுமே இல்லை! இதுகூட தெரியாத அறிவிலிகள் ஏதோ அறிவுபூர்வமாக கேள்வி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு “அவரை விமர்சிச்சியா, இவரை விமர்சிச்சியா?” என்று உளறிக்கொண்டிருக்கின்றனர்!

அவர்களது உளறல்களும் வசைகளும் அம்பேத்கருக்கே இழுக்கு சேர்க்கிறது! எங்களது ஆய்வுகள் அல்ல!

வசுமித்ரவின் விளக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்

// ஆண்குறி என்பது ஆபாசமான வார்த்தையல்ல. அது ஆணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ஒரு சொல். அவ்வளவே. ஆண்குறிக்கான வசைச் சொற்கள் என்னவென்று தெரியாதவர்கள் அல்ல நாம். விசயத்திற்கு வருகிறேன்.//

// அம்பேத்கரின் பௌத்தப் புரிதலை முன்வைத்தே அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். அந்தக் கேள்விக்கான அடிப்படை அவசியமும் இருக்கிறது.

அம்பேத்கரது பௌத்தமானது புத்தரின் ஆண்குறி உள்ளிட்ட அங்க இலட்சணங்களை எப்படிப் பதிவு செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாகப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக சிவனின் ஆண்குறி குறித்து அம்பேத்கரின் வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்.

//

https://www.facebook.com/makalneya/posts/5980320278652594

 

Jun 4, 2021

நான் ஒரு பகவானைப் படைக்கிறேன்.

நான் ஒரு பகவானைப் (இறைத் தூதரை / புனிதாத்மாவை / புரட்சியாளரை) படைக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் (மத நூல்கள்) அடிப்படையில் நானே எழுதுகிறேன் (தொகுக்கிறேன்).

என்ன நோக்கமாக இருக்க முடியும்? - அவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்… இந்தந்த கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனவே நான் அவரை என் விடிவெள்ளியாக கருதுகிறேன். அவரின் போதனைகளை விடுதலைத் தத்துவமாக, புரட்சிகர சிந்தனையாக முன் வைக்கிறேன்.என்’ மக்களின் விடுதலைக்கான பாதையாக அதை வழிமொழிகிறேன் என்பது தானே நோக்கமாக இருக்க முடியும்?

நிற்க!

இப்படி நான் தொகுக்கையில் அந்த பகவான் ஏன் துறவறம் எய்தினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது வாய்ப்பில்லை (முற்போக்கானதாக இல்லை) என்று எனக்கு தோன்ற நான் அக்காரணங்களை மாற்றி எழுதி புரட்சிகரமாக மாற்றுகிறேன்!

பின்னர் ஓரிடத்தில் அந்த புனிதாத்மாவின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த பண்பு நலன்களை எழுதுகிறேன். அப்போது, ” தன் மகன் துறவறம் சென்றால் இராஜ்ஜியத்தை யார் ஆள்வது என்னும் கவலையில் அவரை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் “இறக்கி” அந்த ‘ஆண்’ மகனை மயக்கி ‘சிற்றின்பத்தில்’ ஆழ்துமாறு பணித்தார்” என்று எழுதி… அந்த பெண்களும் மிகுந்த ஈடுபாட்டோட்டு அதனை செய்தனர்…

ஆண்டுக்கணக்கில் இந்த ‘வசிய’ வேட்டை நடந்தது என்று எழுதுகிறேன் (சாரி தொகுக்கிறேன்). எழுதி விட்டு இறுதியில் குலகுருவோ அல்லது யாரோ வந்து கேட்கிறார்கள் “பெண்களை நாடுதல் இயற்கையானது தானே என்கிறார். .அதற்கு அந்த புனிதாத்மா " தாங்கள் பெண்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்பீர்களாயின் , பண்பான நேயம் பற்றி நானறிவேன்" என்று பதிலடி கொடுத்தார் என்று எழுதி “ஆஹா எப்படிப்பட்ட பண்பாளன்’ இவனல்லவோ ஒழுக்கவாதி! பாருங்கள் இவன் பெண்களை எப்படி மதிக்கிறான் என்றெல்லாம் புகழ்ந்துரைத்து அவரை வரலாற்று நாயகனாக முன்னிறுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மற்ற மத நூல்களில் உள்ள ஆணாதிக்க நரித்தனங்களை கட்டுடைக்கும் ஒருவர் எனது புனிதாத்மா குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது மேற்சொன்ன வர்ண்ணனைகளைப் படித்து விட்டு அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது “ஏதேதோ துயரங்களை, அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் துறவறம் மேற்கொண்ட அந்த புனிதாத்மா அடிமைப் பெண்களை இப்படி பாலியல் பண்டமாக ஏவியது குறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?” சரி அதை “தொகுத்த” எம் தலைவி! ஏன் அதை அந்த கதாப்பாத்திரம் வழியாக போதிக்கவில்லை?

ஆண்டுக்கணக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அமைச்சர் வந்து கேட்கையில் “எனக்கு பண்புடன் நேசிக்கத் தெரியும்” என்கிறாரே? அதற்கும் மேல அந்த பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இளமை போய்விட்டால் பெண்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதாக வருந்தினார் என்றும் எழுதினால் எப்படி இருக்கும்?

உண்மையில் அந்த புனிதாத்மா சமத்துவவாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதி / மார்க்சியவாதி எதிர்பார்ப்பார்? குறைந்தபட்சம் அந்நூலை கட்டுடைப்பார்.

ஆணைப் புனிதவானாக காட்டுவதற்காக பெண்களை பாலியல் பண்டமாக்கி நடமாட விட்டு, அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.. ஏனென்றால் என்னுடய ‘நாயகன்’ ஒழுக்கவான். மனதைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் என்று நிறுவும் ஆணாதிக்க மனம் என்று திறனாய்வு செய்யக் கூடாதா?

கண்டிப்பாக முற்போக்கு மனங்கள் இதை வரவேற்கும். ஆஹா என்னவொரு ஆய்வு என்று மெய்சிலிர்க்கும்… அத்தகைய விமர்சனத்தை வைப்பது யார் என்பதைப் பொறுத்து! விமர்சிக்கப்படுபவர் யார் என்பதைப் பொறுத்தும்! 😉

சுயசாதி பற்றுடன் தம் தலைவரை அனுகுபவர்களுக்கு தம் தலைவர் இப்படி தூய்மைவாதப் பார்வையோடு தம் புனிதாத்மாவைப் படைத்திருக்கிறாரே… அதற்குள் இப்படி ஒரு “மதவாத”, “பார்ப்பனியத்திற்கு நிகரான புனிதவாத”, “ஆணாதிக்க” மனம் செயல்பட்டிருக்கிறதா என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாகத் தான் இருக்கும்… என்ன செய்வது!

கூடுதலாக பெண்கள் அப்படி உலவ விடப்படுவது குறித்த வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்சியம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். தாய்வழிச் சமூகம் உடையத் தொடங்கும் காலம், இனக் குழுக்கள் மெல்ல அழியும் காலம். ஆணாதிக்கம் மேலோங்கும் காலம், அரசு உருவாகும் காலம், பார்ப்பனிய ஒழுக்கவாத, மதவாத குலகுருக்கள் உள் நுழைதல், மன்னருக்கு அவர்கள் “முக்கியமானவர்களாக” மாறுதல், அதிகாரம் செலுத்துதல் என்று எவ்வளவோ விசயங்களை நாம் ஒரு தொன்ம நூலில் / புனிதாத்மாக்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து திறனாய்வு செய்ய முடியும்.

அதற்கு மார்க்சியம் வழிகாட்டும்!

இல்லையெனில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் செய்யப்படும் ஆய்வுகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். சுயசாதி பற்றும், ரசிக மனோபாவமும், பரிதாப உணர்வும் அதை தடுக்குமே ஆனால் அது அறிவு மறுப்புவாதம். மதம் அப்படித்தான் நகர்த்தும். முற்போக்கு சாயம் பூசப்பட்ட மதமானாலும் அது கருத்துமுதல்வாதமே. அதனை முன்மொழியும் ‘தலைவர் / தலைவி’களின் எழுத்துகளில் (தொகுப்புகளில்) உள்ள கோளாறும் அதுவே.

மதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளார்ந்த கேடு என்ன என்பதை அறியவும் மார்க்சியம் வழிகாட்டும். எல்லா மதங்களும் ஏதோ ஒரு நாட்டில் வன்முறையையும், அழித்தொழிப்பும் மேற்கொள்கிறது என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

இந்த அடிப்படையில் தான் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு விடுதலை தத்துவம் என்று போதிக்கப்படும் தொகுப்பு எழுத்துகளும் விமர்சிக்கப்படுகின்றன. எழுதியவரும் விமர்சிக்கப்படுகிறார்!

அவரை விமர்சிச்சீங்களா இவரை விமர்சிச்சீங்களாங்குற கேள்விக்கு 5 வருஷமா பதில் சொல்லியாச்சு... போய் அதையாச்சும் படிங்க!

 

Jun 1, 2021

உழைக்கும் மகளிர் நிலை

 


..  ஆனால் பெண்களின் உழைப்பு வழக்கமானதாக இல்லாத தொழிற்துறைகளில் அவளின் கூலி மிகவும் குறைவானது என்பதால் பெண் வாழ்வதற்குப் போதுமான வருவாயின்றி, ஒன்று பெற்றோரையோ அல்லது கணவனையோ சார்ந்தே வாழ வேண்டியுள்ளது.  அதற்கும் வழியில்லை எனில், விபச்சாரம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் நிலைக்கு ஆளாகிறார்க்ள்.  சமீபத்தில், 1899 மே மாதம் இரிகாவில் இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலகம் ஏற்பட்டது. சணல் ஆலையில் பெண்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடியதோடு, தொழிற்சாலை நிர்வாகம் குறித்துப் புகார் அளிக்க ஆளுநர் அலுவலகத்திற்கு கூட்டாகச் சென்றனர்.  போகும் வழியில், அப்பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அலெக்சாண்ட்ரோவ் பூங்காவில் சிறை வைக்கப்பட்டனர்.  வேலையை விட்டுக் கிளம்புகையில், ஃபீனிக்ஸ் தொழிற்சாலை ஆண்களும், மற்றும் சிலரும் பலவந்தத்தைப் பிரயோகித்து, சிறைவைக்கப்பட்ட பெண்களை விடுவித்தனர். உடனே ஆளுநர் இராணுவத்தை வரவழைத்தார். 5 முதல் 15 மே வரை ரிகா ஒரு போர்க்களமானது.

 இராணுவத்தினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நத்த, தொழிலாளர்கள் அவர்கள் மீது கல் வீசினர், கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.  அதனைத் தொடர்ந்து அவர்களுடைய சீற்றம் விபச்சார விடுதிகள் மீது திரும்பியது.  ஒரே இரவில் 11 விடுதிகளை அடித்து நொறுக்கினர்.  தொழிலாளர்கள் எதனால் விபச்சார விடுதிகளை நொறுக்கினர்?  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும், தொழிலாளர்களின் கலகத்திற்கும் என்ன தொடர்பு?  விபச்சார விடுதிகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?  தொழிற்சாலை அதிகாரிகளிடம் தங்கள் மனைவிகளின் சம்பளம் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதில்லை என்று முறையிட்டபோது, அப்படியெனில் விபச்சாரம் செய்து அவர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவமதித்துள்ளனர்.

 ஆக, மிகவும் மோசமான கூலி போதாமல் பெண்கள் பிழைக்க முடியவில்லை என்றால், விபச்சாரம் செய்து அதை சமாளிக்கலாம் என்பது வெளிப்படையாக பரிந்துரைக்கப்பட்டது.  அப்படியென்றால் தன்னுடைய பிச்சைக்கார வாழ்விற்காக, பட்டினியைப் பொறுக்க முடியாது, சில வேளைகளில் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்க தன்னையே விற்உம் ஒரு ஏழைப் பெண்ணை நாம் எப்படி குறை சொல்ல முடியும்?  ஒரு விபச்சாரியாக இருப்பது ஒன்றும் கொண்டாட்டமானதல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத, நன்றாக உண்டு கொழுத்து வாழும் பூர்ஷுவாக்களும் அவர்களது மனைவிகளும் தொழிற்சாலை மகளிர் மற்றும் சிறுமிகளின் இந்த இழிவான நிலை பற்றி மிகவும் வக்கிரத்துடனும், பாசாங்கு கூடிய வெறுப்புடனும் “விபச்சாரி” என்றழைப்பதை நீங்கள் கேட்க வேண்டும்.  மறுபுறம் பூர்ஷுவா பேராசிரியர்களோ விபச்சாரிகள் ஒன்றும் அடிமைகள் அல்ல, அவர்கள் தம் விருப்பத்தின் பேரிலேயே அப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்று கூறுகின்றனர்.  தூசும், விசவாயுவும் சூழ்ந்திருக்கும் ஒரு பணிமனையில் மூச்சுவிடக் கூட அல்லல்படும் பெண் தொழிலாளர்கள் தம் விருப்பத்துடனே ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்வதாக நாகூசாமல் பேசுகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, சொற்பக் கூலி பெறும் ஒரு பெண் போதிய வருமானத்திற்காக தன்னையே விற்றுக்கொள்ள வேண்டிய  அவசியமின்றி கணவனால் அல்லது பெற்றோரால் பராமரிக்கப்படுகிறாள் என்றால், எவரின் துணையும் இன்றி தன் சொந்தக் காலில் வாழும் பெண்ணைப் போன்று அவள் சுதந்திரமானவளாக இருக்க முடியாது.  தனித்து வாழ முடியாத காரணத்தால் அத்தகைய பெண்கள் தங்களைப் பராமரிப்பவர்களுக்கு அடி பணிந்தே வாழ வேண்டியிருக்கும்!

-        ந.கா. க்ரூப்ஸ்கயா, உழைக்கும் மகளிர். தமிழில் – கொற்றவை. சிந்தன் புக்ஸ் வெளியீடு