Jul 25, 2021

மார்க்சியம் என்ன சர்வரோக நிவாரணியா?




தோழர் மார்க்சியம் என்ன சர்வரோக நிவாரணியா? அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒற்றைத் தீர்வு இருக்க முடியுமா?

யார் அப்படி சொன்னா? நாங்க சொன்னோமா? மார்க்சியம் என்ன சொல்லுது “சகல ரோகத்துக்கும்” ஒரு அடித்தளம் இருக்கு. அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கு! அதுதான் தனியுடமை. உழைக்காமல் செல்வம் சேர்க்குற பேராசை புடிச்ச கும்பல் மக்களை படிநிலைப்படுத்தி, ஒடுக்கி, அடக்கி பலவிதமா பிரிச்சு வச்சு கடுமையான உழைப்புல ஈடுபடுத்தி உழைப்பைச் சுரண்டி வாழுறதுதான் எல்லா விதமான ஏற்றத்தாழ்வுக்கும், ஒதுக்கலுக்கும், ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், பாசிசத்திற்கும், போருக்கும் இன்னும் இதர அநியாயங்களுக்கும் காரணமா இருக்குன்னு சொல்லுது! இதை புரிஞ்சுக்குறதுக்கோ, ஏத்துக்குறதுக்கோ ஒன்னும் இழப்பில்லையே. ஏத்துக்க முடியாம போறதுக்கு சில காரணங்கள் இருக்கு! அதுல முக்கியமானது வர்க்க நலன்! அதுக்கு ஏத்த பிழைப்புவாத அரசியல்! அம்புட்டுதேன்.

இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது. இங்க சாதி இருக்கு! கம்யூனிஸ்டுகள் இந்த மண்ணுக்கு ஏத்த மாதிரி மார்க்சியத்தை மாத்தனும்!

இருங்க அவசரப்படாதீங்க! இந்தியாவுல சாதி இருக்கு! ஆமாம்! அது ரொம்ப கொடுமைகளை செய்யுது! ஆமாம்! சாதியை ஒழிக்கனும் – ஆமாம்! இந்தியாவுக்கு ஏத்த மாதிரி மார்க்சியத்தை மாத்தனும் – ஆங் அதுதான் இல்ல! இங்க தான் பிரச்சினை ஆரம்பிக்குது!

மார்க்சியம் என்பது தட்டையான, திடமான  தத்துவமே இல்ல. அது இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்று பொருள்முதல்வாதம் என்னும் சிறந்த கண்ணோட்டங்களை, ஆய்வுமுறையை கொண்டது. எளிமையா சொல்லனும்னா எந்த ஒரு பொருளுக்குள்ளையும் முட்டலும், மோதலும், முரண்பாடும், ஆற்றலும் இருக்கும் அதன் இயக்கப் போக்குல தன்மைகள் முட்டி மோதி ஒண்ணு இன்னொண்ணை மறுத்து அது வேற ஒண்ணா மாறும். இயற்கைப் பொருள் மாதிரி மனுச சமூக வாழ்வும், வாழ்க்கைக்கான ஏற்பாடுகளும் இப்படியே மாறி மாறி கடைசில சமூக இயக்கம் ஒரு சமநிலையை எட்டும் போது முரண்பாடுகளற்ற ஒரு நிலையை எட்டினால் அப்ப அதுக்கேத்த நிலைமைகள் நீடிச்சு நிக்கும் என்பதுதான் மார்க்சியத்தின் சாராம்சம். (விரிவாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்).

மார்க்ஸ் (மார்க்சியம்) சமூக இயக்கத்தை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம்னு ரொம்ப அழகா பிரிச்சு கொடுத்திருக்காப்ல. நாம பார்க்குற மதம், அரசு, அரசியல், பண்பாடு, சட்டம், நீதி இதெல்லாம் மேற்கட்டுமானம். மனுசப்பய வாழ்க்கைக்கு கூட்டா சேர்ந்து பொருள் தயாரிச்சு வாழும் போது உருவாகுற ஏற்பாடுலருந்து (உற்பத்தி முறை) உருவாகுற மனுசப்பய உறவுகள் (உற்பத்தி உறவுகள்) தான் மேல எது எப்படி இருக்கும்னு தீர்மானிக்குதுன்னு சூப்பரா படம் போட்டு காட்டிருக்காரு. அவர் நேரடியா இந்த முடிவுக்கு வரலங்கோ! அவருக்கு முன்னாடி இருந்த அத்தனை தத்துவங்களையும், பொருளாதார அமைப்புகளையும், வரலாரையும் ஏங்கல்ஸோட சேந்து ஆய்வு பண்ணி தான் உண்மையை கண்டுபுடிச்சாரு. ஒரு கூட்டம் உழைக்காம சொத்து சேர்க்குது எப்படி தெரியுமா? அதுக்கு அந்த கூட்டம் என்னல்லாம் செய்து தெரியுமான்னு கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லிவச்சிருக்காங்க மார்க்ஸும் எங்கல்ஸும்.

இது ஒரு சிறந்த விஞ்ஞானபூர்வ உலக கண்ணோட்டம். ஆய்வுக் கருவி. இதை வச்சுக்கிட்டு இந்திய சமூகத்தை ஆய்வு பண்ணனும். ஆமாம் ஆய்வு பன்ணனும். ஆய்வு பண்றது வேற. மார்க்சிய அடிப்படையவே காலி பண்ணி அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானதம்னெல்லாம் ஒண்ணுமே இல்ல. அது அப்போ சொன்னது! அது ஐரோப்பிய உற்பத்தி முறைய மாதிரியா வச்சு பேசுனாங்க.. இங்க பொருந்தாது! இந்திய கம்யூனிஸ்டுங்க சாதி மேற்கட்டுமானம்னு தப்பு தப்பா பேசிட்டாங்க . அது அடிக்கட்டுமானம் தான்.. இல்ல இல்ல அது ஒரு தனி மையம்.. இப்படில்லாம் திரிக்குற வேலையத்தான் “உண்மையான” மார்க்சிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்.

அப்படிப்பட்ட உண்மையான மார்க்சியர்கள் யாரும் சாதி மேற்கட்டுமானம்னும்  சொல்லல. வர்க்கப் போராட்டம் மட்டும் தான் தொடுக்கனும். அப்ப சாதி தானா ஒழிஞ்சுடும்னும் சொல்லல. சும்மா எதையாச்சும் உளறிக் கொட்டக் கூடாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு இயக்கம் கட்டி போராடனும். ஆனா அது வர்க்கப் போராட்டப் பாதைல இனைஞ்சு இருக்கனும்னு மட்டும் தான் சொல்றாங்க.

மார்க்சியத்தை முன் வைத்து (தற்காத்து) வாதிடுபவர்கள் என்ன சொல்றோம்: எந்த ஒரு சமூகத்துல இருக்குற ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்குறதுக்கு தேவைப்படுற சமூக பகுப்பாய்வ மார்க்சியத்தைப் பயன்படுத்தி சிறப்பா திறனாய்வு செய்ய முடியும். அப்படின்னா என்ன? இந்தியாவுல என்ன மாதிரி உற்பத்தி முறை இருக்கு. அது நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்கா? எங்கெங்க என்ன மாதிரி உற்பத்தி நிலவுது. ஒவ்வொரு பகுதிலையும் என்ன மாதிரி உற்பத்தி உறவுகள் இருக்குன்னு (உ.ம் முதலாளி தொழிலாளி, ஆண்-பெண் உறவு, சாதிய உறவுகள், பாலின, திறன் சார்ந்த உறவுகள், மத ரீதியான உறவுகள், ஆண்டான் அடிமை உறவுகள், நிறவாத, இனவாத உறவுகள்) ஆய்வு பண்ணுங்க. ஒவ்வொரு பகுதியா.. ஒவ்வொரு குழுவா கூட ஆய்வு பண்ணுங்க. யார் கிட்ட உற்பத்தி சாதனங்கள் உடைமையா இருக்கு. அது எந்த சாதிகிட்ட பெரும்பான்மையா இருக்கு (எந்த மதம், பாலினம், இனம், மொழி, இத்யாதி)   இப்படியெல்லாம் ஆய்வு பண்ணா நமக்கு ஒரு “டேட்டா” கிடைக்கும். அந்த தரவுகள வச்சு பொது எதிரி யாரு.. தனித் தனியான எதிரி யாரு, எந்தெந்த வடிவத்துல, மாறு வேஷத்துல அந்த பயலுவ இருக்காகன்னு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க!

ஒவ்வொரு ஏற்றத்தாழ்வையும் ஒழிக்க வேலைத்திட்டத்தை  முன் வச்சு, மக்கள அரசியபடுத்தி, அணிதிரட்டுங்க, உழைக்கும் மக்கள் / ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டி புரட்சி பண்ணி அதிகாரத்தை கைபத்தி சமத்துவமான ஒரு உற்பத்தி முறையை நிறுவி… அதுகூடவே தொடர்ந்து வர எல்லாவிதமான ஏற்றத்தாழ்வு, பண்பாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து புரட்சிகர அரசியல் மூலமா சரி பண்ணி இறுதியான சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டுங்கன்னு தான் சொல்லுது. இதுல என்ன தப்பிருக்கு? இது எப்படி வன்முறையாகும்? இந்த நடைமுறைல ஆளும் வர்க்கம் வன்முறையை ஏவும்.. அப்ப தவிர்க்கவியலாத வகையில சூழலுக்கேத்த முடிவை எதிர் முகாம் (உரிமைக்காக, சமத்துவத்திற்காக போராடும் மக்கள்) எடுக்க வேண்டியிருக்கும்.. அவ்ளோதான்! இதை ஒழுங்கா படிக்காம கண்டபடி பேசிக்கிட்டு மார்க்சியத்தை தப்பு தப்பா திரிச்சு, கம்யூனிச வெறுப்பை ஏற்படுத்த பலவிதமான குரூப்புகள் இருந்துச்சு, இப்பவும் இருக்கு. உலகெங்கிலும் அதுக்கெதிரான மார்க்சியப் போராட்டமும் தொடர்ந்துட்டு தான் இருக்கு.இந்தியால, குறிப்பா தமிழ்நாட்ல மட்டும் தான் இந்த மாதிரி ஆய்வைக் கண்டா பயப்படுறாங்க.. ஏன்னா பொழைப்பு போய்டுமே!

மேல சொன்ன மாதிரி இந்திய சமூகத்தை மார்க்சிய நோக்குல ஆய்வு பண்ணி பல பேர் பலவிதமான ஆய்வுகள முன் வச்சிருக்காங்க.. சிலது சரி, சிலது தவறு, சிலது பகுதியளவில் சரின்னு ஒரு நீண்ட வரலாறு இருக்கு. சிலரு மார்க்சியப் போர்வைல மார்க்சியத்தையே திரிச்சு வேலை பார்த்திருக்காங்க.. கட்சிங்க காணாம போறதுக்கு அதுவும் ஒரு காரணம். வேற சிலர் பெரியார், அம்பேத்கர், பின்நவீனத்தும், பெருங்கதையாடல், சிறுகதையாடல், ஊடறுக்கும் கோட்பாடு (இண்டர்செக்‌ஷனாலிட்டி தியரி), கீழைத்தேயம், மேலைத்தேயம், பின் அமைப்பியல், ஃபூக்கோ தெரிதா, அல்தூசர், ப்ளக்கனாவ், இன்னும் நிறைய பேரை முன் வச்சு மார்க்சியத்துல ஒண்ணுமே இல்லன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க.. நாம மாத்திக்கனும், விரைப்பு தன்மையோட இருக்க கூடாது அப்படி இப்படின்னு நிறைய சால்ஜாப்பு பேச்சுகளை முன் வச்சு கடந்த 30 வருஷங்கள்ள மார்க்சியத்தை ஒழிச்சு கட்ற வேலைய (மறைமுகமாக கம்யூனிஸ்ட் இயக்கங்களையே) சீரும் சிறப்புமா செஞ்சு முடிச்சுட்டாங்க.

எந்த மார்க்சியரும் விரைப்புத் தன்மையோட இல்ல. நெகிழ்வுத் தன்மை என்பது மார்க்சிய அடிப்படையைவே விட்டுக் கொடுக்குறதுமில்ல. Application is different from Revisionism, Distortion and adding ‘isms’ that is dead against Proleterian class & its guiding light Marxism. மார்க்சியத்தை இந்திய சூழலுக்கு, தமிழ் சூழலுக்கு பிரயோகித்தல் என்பது வேறு, மார்க்சியத்தையே திரித்து, உருவைக் கெடுத்து, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான, அதன் ஒளிவிளக்கான மார்க்சியத்தையே சிதைக்கும் வகையில் பல்வேறு இசங்களை சேர்க்கச் சொல்லி மார்க்சியத்திற்கு சாவு மணி அடிப்பது வேறு.

எங்களைப் போன்ற மார்க்சியர்கள் மார்க்சியத்தின் அடிப்படையை தகர்க்காமல் இந்திய சமூகத்தை, விடுதலை கருத்தியல் கோட்பாடுகளை, அதை முன் வைத்த தலைவர்களை பகுப்பாய்வு செய்து நேர்மையான வரையறையை முன் வைத்து பொது எதிரி யார் என்பதை வரையறுங்கள். அந்த பொது எதிரிக்கும் துணை நிற்கும் சக்திகள் யார், சீர்திருத்தவாதிகள் யார், ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சங்கள் என்ன, நிராகரிக்க வேண்டிய அம்சங்கள் என்னவென்று கோட்பாட்டுருவாக்கம் செய்து, வேலைத்திட்டங்களை வகுத்து செயல்படுங்கள் என்று தான் சொல்கிறோமே தவிர எந்த ஒரு தலைவரையும் இழிவுபடுத்துவதோ, அவதூறு செய்வதோ எங்கள் வேலையல்ல.

சாதி ஒழிப்பு என்று வரும் போது அதன் மாபெரும் சக்திகளாகத் திகழும் பெரியாருக்குரிய இடம் என்ன, அம்பேத்கர் அவர்களின் இடம் என்னவென்பதை கம்யூனிஸ்டுகள் வரையறுப்பது அவசியம். ஏனென்றால் அவர்களிடம் போதாமை உள்ளது. அவர்களை முன் வைத்து மார்க்சியத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் இல்லாமல் ஆக்கத் துடிக்கும் சக்திகள் இங்கே நிறைய உள்ளன. உண்மையில் அது உழைக்கும் வர்க்க விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும், பாசிச ஒழிப்பிற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் தான் நாம் இடையீடு செய்ய வேண்டியுள்ளது.

இது காலம் காலமாக நடந்து வரும் போராட்டம். 2015இல் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்கு புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூலின் விளைவாக அந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இயக்கவியல் வரலாற்றுப் போக்கில் அது தவிர்க்கவியலாதது.

இதை பலமுறை பல வழிகளில் விளக்கியாகிவிட்டது. ஆனால் பிழைப்புவாதிகள் சிலரின் அவதூறுகளால் பலர் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டு கொந்தளிக்கும் சூழல் நிலவுகிறது. இதுவும் அப்படித்தான் இருக்கும். அதற்குரிய எதிர்வினைகளும் முரன்பாடுகளின் இருப்பிலிருந்து மேலெழும்..

இங்க என்னதான்யா நடக்குதுன்னு குழப்பமா இருக்கா… அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க.. நம்மாளு, நம்ம தலைவர், நம்ம அமைப்பு, நம்ம தோழர்ங்குற சார்பையெல்லாம் விட்டுட்டு மார்க்சியம் படிக்கவும். பிரச்சினை புரியும்

-            நன்றி, கொற்றவை, 26.7.2021