Jan 27, 2012

எர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல் - வசுமித்ர, முன்னுரை கொற்றவை




நனவிலி மனதின் உணர்வுகளை இரக்கமின்றி வெட்ட வெளிச்சமாக எழுதிய வசுமித்ரவிடமிருந்து மற்றுமொரு பரிணாமம் ‘எர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல்’ எனும் இந்தக் கவிதை தொகுப்புஅரசியல் கவிதைகள் என்று சொல்லக்கூடிய வகையில் பெரும்பாலான கவிதைகள் இருக்கின்றதுஅத்தோடு ’கவிதை’ வடிவம் பற்றிய மார்க்சியம் மற்றும் பின் நவீனத்துவ பார்வைக் கொண்ட  விமர்சனம், கவிஞனுக்குரிய சமூக பொறுப்பு என தற்காலத்திய தமிழ் ’இலக்கியச்’ சூழலையும் கவிதையின் வாயிலாக உரையாடலுக்கு உட்படுத்தப்படுகிறதுசந்தைப்படுத்திக் கொண்டு ‘கவிதைத் தொழில்’ செய்யத் தெரியாத கவிஞர்களின் நிலை குறித்த கவிதைகள், வாசக மனதில்  கவிதை குறித்தான சந்தேகத்தைப்  பீய்ச்சி அடிக்கவல்லது

கவிதை என்பதை வெறும் மொழியின் விளையாட்டாக, மொழி ஆளுமையின் வெளிப்பாடாக மட்டும் கருதி விட இயலுமா? அது சரியானதாக இருக்குமா என்பது ஐயமேஎந்த ஒரு படைப்பும், கண்டுபிடிப்பும் மக்களுக்கு பயன் அளித்தல் வேண்டும், அது எந்த சமூகக் குழுவின் பிரதிநிதியாக செயல்படுகிறது என்பது முக்கியமானதுதுன்பப்படும் மக்களின் சார்பாக இல்லாத ஒரு படைப்பு “பூர்ஷுவா”த் தன்மை நிறைந்தது என்று  மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனம் சார்ந்தப் பணிகளை செய்யும் எழுத்தாளர்கள் தங்களின் கலகக் குரல்கள் மூலமும், சமூக கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் அத்தகையதொரு பயன்பாட்டு எல்லையைத் தொடுகின்றனர்

அவ்வகையில் வசுவின் கவிதைகள் கலகக் குரலாக இருக்கிறது எனச் சொல்வேன்முந்தைய இரண்டு தொகுதிகளின் தலைப்புகளும் அதற்கொரு சான்று. சமூகமானது கருத்தாக்கங்களின் மூலம் “கட்டுக்குள் வைத்திருக்கும்” உணர்வுகளை கவிதைச் சொற்களாக்கி அதன் பொருளை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்ச்சிஅது பேசிய தனிமை, ஏமாற்றம், அனாதைத் தனம், கரமைதுன அனுபவம், கள்ளக்காதல், ஒரு பால் உறவு  எனும் உணர்ச்சிகள் வெறும் தனிமனித உணர்வு என்று ஒதுக்கிவிட இயலாதவையாக இருந்தன. யாரோ ஒருவர் தன் அவலங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அதிர்ச்சியுறும் அல்லது உச்சுக் கொட்டும் தாக்கத்தோடு முடிக்கிறார் என்று ரசித்து விட்டு அல்லது நிராகரித்து விட்டுச் செல்வது என்பதைத் தாண்டி வேறு ஒரு அனுபவத்தை, உரையாடலை தொடங்கி வைப்பதாக  முந்தையக் கவிதைத் தொகுதிகள் இருந்தன

அந்தப் படைப்பு வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்புகூட்டுச் சமூக மன உணர்வுகளை, அரசியல் அறம், கவிதை அறம், கவிஞர்களின் அறம்  என பல்வேறு தளங்களை தொட்டுச் செல்கிறது. ச்சே கொபாராவைக் கொலை செய்தல், நூலகத்திற்கு செல்லும் வழியில், ஒரு துண்டுச் சதை எனும் தலைப்பின் கீழ் வரும் கவிதைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பிரமிளுக்கும், ஐயப்பனுக்கும் எழுதப்பட்ட கவிதையானது மனதை உலுக்கும் தன்மையைக் கொண்டுள்ளதோடு, சமூகமானது அத்தகைய ஆளுமைகளை கைவிடும் அவலத்தையும் பிரிதிபலிக்கிறதுகைவிடப்பட்ட சொற்களின் நிம்மதி எனும் கவிதை சொற்களின் அரசியலை எள்ளல் தன்மையோடும், தத்துவார்த்த பின்புலத்தோடும் விமர்சிக்கிறதுசொற்களின் அரசியல் மற்றும் அதன் அதிகாரம் குறித்து இத்தொகுப்பில் நிறைய எழுதியிருக்கிறார் வசுமித்ர. ஒருவகையில் அது காலத்தின் அவசியமாகவும் இருக்கிறது

இயல்புக்கப்பாற்பட்ட பிம்பங்களும், குறியீடுகளும் நிரம்பிய கவிதைகள் வசுமித்ரவினுடையதுஒரு கவிதைத் தொகுப்பு முன்னுரையில் கவிதை வரிகள் குறித்து பொருள்விளக்கம் கொடுத்து எழுதுவதென்பது அந்த கவிதை வரிகளின் மேல், வாசக அறிவு நிலை மேல் அதிகாரம் செலுத்துவது போலாகக் கூடும். தொகுப்பிலிருந்து சில வரிகளை மேற்கோள்களாகக் காட்டி இவை இன்ன தத்துவத்தினை, பாணியை, குறியீடுகளை, சிந்தனைகளை, காட்சிகளை கொண்டுள்ளது என்று சொல்வது கவிதையின் அர்த்தங்களைப் பிடுங்கி சட்டகம் இட்டு கண்காட்சியில் காட்சிக்கு வைப்பது என்பதாக உணர்கிறேன்.  .

ஓவியர் பாப்லோ பிக்கசோ ‘அரூப ஓவியங்களை’ப் புரிந்துக் கொள்வதைப் பற்றி பின் வருமாறு கூறியிருக்கிறார்:

எல்லோரும் ஓவியத்தைப் புரிந்துக் கொள்ள முயல்கிறார்கள்ஏன் அவர்கள் பறவையின் பாடல்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது? ஏன் அவர்கள் ஒரு இரவை, ஒரு மலரைக் காதலிக்கின்றனர், இப்படியாக மனிதரை சூழ்ந்திருக்கும் அனைத்தையும் அதை புரிந்து கொள்ளும் முயற்சியின்றி விரும்புகின்றனர்ஆனால் ஒரு ஓவியத்தைப் பொருத்தவரை, புரிந்துகொண்டேயாகவேண்டும் என்று விரும்புகின்றனர்அவர்கள் புரிந்துக் கொள்ளட்டும் ஒரு ஓவியன் தேவையிலிருந்து பணி புரிகிறான் என்றுஇயற்கையில் உள்ள எத்தனையோ வசீகரிக்கும் பொருள்கள் விளக்கம் கூற முடியா தன்மையில் உள்ளனஅவ்வுலகில் அவனும் ஒரு மிகச்சிறிய தனிமம் அவ்வளவேஒரு ஓவியத்தை விளக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலான நேரங்களில் தவறான தண்டவாளத்தில் பயணிக்கின்றனர். கெர்த்ருதே ஸ்டையின் மிகுந்த குதூகலத்துடன் ஒருமுறை என்னிடம் சொன்னாள், இறுதியாக என் ஓவியத்தைப் புரிந்துக் கொண்டதாக: மூன்று இசைக் கலைஞர்கள். அது ஒரு “ நிழற்படம்”

படைப்பாளிக்கு படைப்புக்களைத்  தருவதோடு வாசகரின் ரசனையை ஆரோக்கியமாக மாற்றியமைக்கும், அறிவு நிலையை உயர்த்தும் பொறுப்பும் இருக்கிறது என்று சொல்லும் வசு தன் கவிதைகள் மூலம் அத்தகைய ஒரு சூழலை வாசகருக்கு உருவாக்கித் தருகிறார் என்றே நான் சொல்வேன்.

(எர்னஸ்டோ சேகுவேரா என்று உச்சரிக்கப்படும் Ernesto Che Guvera, எர்னெஸ்த்தோ செகெபாரா என்று ஸ்பானிய உச்சரிப்பில் வருகிறது.           வெளியீடு: உயிர் எழுத்து)

2 comments:

  1. கொற்றவை,

    நண்பர் வசுமித்ர வின் கவிதை நூல் பற்றி சிறப்பாக முன்னோட்டம் கொடுத்துள்ளீர்கள். அந்த நூல் எங்கு கிடைக்கும் ?

    ReplyDelete
  2. it is available in book lands, t.nagar. thanks

    ReplyDelete