Jan 24, 2012

நித்ரா....நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி - வசுமித்ர, கவிதை நூல் முன்னுரை



முன்னுரை

கவிதை என்றால் என்ன, எது கவிதையாக இருக்க முடியாது என்று தொடங்கிய எங்கள் உரையாடலும், உறவும் ‘நித்ரா’ கவிதைகளின் வாயிலாக சொல்லூற்றி வளர்க்கப்பட்டது.  நான் எழுதத் துவங்கியக் காலத்தில் ’கவிதை’ என்று ஒன்றை நம்பி சுதந்திரம், முற்போக்கு, தனிப் பாணி என்றெல்லாம் சிறுபிள்ளைத் தனமாக, குருட்டுப் பிடிவாதத்துடன் பெசண்ட் நகர் கடற்கரையில் விவாதம் செய்த நாட்கள் தற்போது காட்சிகளாக வந்து செல்கின்றன.  ஆண்கள் மேல், சமூகத்தின்மேல் இருக்கும் கோபமானது அப்படியே எதுகை, மோனை, தாளம் என்று தொல்காப்பியக் காலத்து வடிவத்தில் நான் எழுதி வைத்திருந்த கவியரங்க வடிவ ‘உடைந்த வாக்கியங்களை’ என் முகத்துக்கு நேரே மேஜையில் தூக்கி எறிந்து என் அகங்காரத்தை தூண்டி விட்டவன் வசுமித்ர. 

அவனது விமர்சனங்கள் கடும் கோபத்தை வரவழைக்கும் (அனேகமாக இவ்வனுபவம் அவனுடன் பழகும் அனைவருக்கும் இருக்கும் சாத்தியங்கள் உண்டு), ஆனால் அதை உரையாடலாக மாற்ற ஒருவர் தயாராக இருக்கும் பொழுது அவன் அவருக்கு காட்டிக் கொடுக்கும் உலகமானது ஒரு சிறந்த நூலகத்துக்கான திறவுகோல், அதில் அவன் சிறந்த நூலகன், கடுமையான ஆசான், சிறந்த வாசகன், மனசாட்சியற்ற விமர்சகன் என்று எல்லா பாத்திரங்களிலும் கையில் ஒரு தடியில்லாத குறையாக நாற்காலியிட்டு அமர்ந்திருப்பான். 

கவிதை உலகினுள் எனது நுழைவு இவ்வாறகத்தான் அமைந்தது.  கவிதை வகுப்பு (poetry class) என்ற துறை வெளிநாடுகளில் இருக்கிறது நம் நாட்டில்தான் அத்தகைய முயற்சிகள் இல்லை என்று குறை பட்டுக் கொள்வான். எனக்கு அந்த குறையிருக்கவில்லை.  வீட்டிலேயே ஒரு வகுப்பறை (கடுமையான வகுப்பறை என்று அழுத்தி சொல்லலாம்) செயல்பட்டது.  எங்களுக்குள் நாங்கள் பேசிய அந்தரங்க விஷயங்களை விட புத்தக விஷயங்களே அதிகம்.

அவனது வாழ்நாள் தோழியாய் இருந்துக் கொண்டு நான் எழுதும் இம்முன்னுரை அவனைப் பற்றிய புகழுரையாகி விடக் கூடாது என்பதில் நான் எச்சரிக்கையாய் இருக்கிறேன். உண்மை சில நேரங்களில் புகழுரையாய் அமைந்துவிடுவதை தவிர்ப்பதற்கில்லை.

அவனது கவிதைகளில் கொலை, தற்கொலை, காமம், கொடூரம் ஆகிய உணர்வுகள், சொல்லாடல்கள் அதிகமாக இருப்பதால் மனநிலை பாதிக்கப்பட்ட எழுத்துக்கள் என்று சில ‘கவிஞர்கள்’ விமர்சனங்கள் செய்துள்ளனர். ஒரு கவிதை அச்சில், உருவில் இருக்கும் வார்த்தைகளைத் தாண்டி எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டிருக்கும், இன்னும் சொல்லப்போனால் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொருள் கொடுக்கும் என்ற சிறு புரிதல் கூட இல்லாமல் அவர்கள் கவிஞர்களாய் இருப்பதை எண்ணி வருந்த வேண்டியுள்ளது.  என்னைப் பொருத்தவரையில் பைத்தியமாய் இருப்பதென்பது ஒரு பேறு, சுதந்திரத்தின் பாதங்களை தயக்கமின்றி முத்தமிடும் அவர்கள் வசு மித்ர வின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘சாத்தானின் பிள்ளைகள்’ .  சாத்தான்கள் இருக்கும் வரைதான் ’கடவுளுக்கு’ வேலை இருக்கிறது. ’பைத்தியங்கள்’ இருக்கும் வரை தான் மற்றவருக்கு இயல்பானவர் என்ற அடையாளம் மிஞ்சுகிறது. 

பைத்தியங்களின் மொழி, எந்த பொருளையும் கொண்டிருப்பதில்லை, எந்தக் கருத்தாக்கத்தையும் உருவாக்குவதில்லை. அது அதிகாரமற்ற மொழி, ஆக அந்நிய மொழி.  ’மனித’ சொற்களால் சிதைவுண்டு கிடக்கும் மனங்களுக்கு அப்படி ஒரு அந்நிய மொழியே ஆறுதல் அளிக்கவல்லது. 

”இப்படியும் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்க முடியுமா” என்ற கேள்வியை எழுப்பும் கவிதைகள் “நித்ரா” கவிதைகள். சொல்லின் செருக்கு தற்பெருமைக்குப் பதில் காதலியின்பால் காதலன் கொண்டுள்ள சார்பை (dependency) விளக்குகிறது.  கவிதைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகள் மொழியின் எல்லைகளை ஒரு புதிய தளத்தில் நீட்டிச் செல்கிறது.  காதல் கவிதைகள் காதலை உருகி உருகிப் பேசும், செயற்கரிய சாகசங்களை வெற்றுச் சொற்களால் நிகழ்த்தும் ஆனால் நித்ரா கவிதைகள்  மார்க்சியம், பெரியாரியம், பௌத்தம், பெண்ணியம் முன்மொழியும் ‘அன்பை’ப் பேசுகிறது. அது ‘மிகையான காதல்’ (Romantic) உணர்ச்சியாக இல்லாமல் ”ஒருவழி இணைவுநிலையை”ப் (Parallelism) பிரதிபலிப்பதாக உள்ளது.  காதல் கவிதைகளில் கண் கூசச் செய்யும் சுயவர்ணனை, பெண் வருணணைகளாக இல்லாமல் நித்ராவின் காதலன் ‘இப்படிப் பட்டக் காதலை’ எதிர்பார்க்கும் அல்லது ‘பெரும்’ ஒரு பெண் எத்தகைய ஒரு ஆளுமையாக இருப்பள் என்று சாடைக் குறிப்புகள் கொடுத்தவாறு விரிகிறது. 

‘காதலின் அறத்தை’ (ethics of Love) ( அன்பின் அறமென்றும் கொள்ளலாம் )பேசும் agapism ( அகேப்பிசம் ) பல இடங்களில் வெளிப்படுகிறது.  அர்ப்பணிப்பாலும், சரணடைதலாலும் உண்டாகும் படைப்பாற்றல் மிக்க இத்தகைய காதல் பொழியும் அன்பினால் காதலிக்கப்படுபவரும் அத்தகையதொரு நிலைக்கு ஈர்க்கப்படுவார் என்று அகேப்பிசத்துக்கான விளக்கத்தை பியர்ஸ் கூறுகிறார். ஒருவகையில் தன்னலமின்றி குழந்தைகளின் மேல் பெற்றோர் செலுத்தும் அன்பானது இவ்வகையே என்றும் சொல்கிறார்.  இறுதியில் ஒரு குழந்தை தாயின் கதகதப்பான உள்ளங்கையைக் கோருவதுபோல் நித்ராவின் காதலன் அவளின் அருகாமையை மட்டுமே வேண்டுகிறான்.  நித்ராவின் கதகதப்பான அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு கருவறைக்குள் பொதிந்துக் கொண்டு உயிர் வாழும் அக்குழந்தை தன் இறுதி வரை அந்தப் பனிகுடத்திலேயே ஊறி மாண்டுபோகட்டும். 

கொற்றவை.


6 comments:

  1. முதல் முறையாக, கவிஞர் மற்றும் முன்னுரை எழுதியிருக்கும் அவரது வாழ்நாள் தோழி.. இருவரையும் நட்பாக்கிக் கொண்டு கவிதைகளை வாசித்தனுபவம் சற்று வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் பட்டது..

    கவிதை என்றால் என்ன?
    இந்த ஒரு வரியை வாசித்ததுமே... கொஞ்சம் சலிப்புதட்டியது எனக்கு. அதற்கடுத்து நகராமல்.. என்னடா இது? தன் காதலன் தனக்குணர்த்தும் காதலின் பதிப்பிலுமா இப்படி உரைநடையாய் எழுத வேண்டும் என்று. உங்களது பெண்ணியத்தைப் பற்றிய சில கட்டுரைகளை வாசித்ததின் விளைவாக எனக்கு இப்படி தோன்றியதோ என்னவோ?

    ஆனால் அதற்கடுத்தடுத்த வரிகளிலேயே உங்கள் காதலனை.. ஆசானை... மிக அழகாக கண்முன் நிறுத்தி விட்டீர்கள். வெகு சில வரிகளிலேயே அவனை உச்சத்தில் வைத்து கொண்டாடுகிறீர்களோ என எண்ணும்போதே அடுத்த பக்கத்தில் சிறு அதட்டலுடன் கையமர்த்திவிட்டீர்கள்..அவனைப் பற்றிய புகழுரையாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்று.

    ஆனால் நிர்மலா..கவிதை வரிகள் சிலவற்றைக் கடந்து விடும்போதே தெரிகின்றது உங்கள் காதலனை உங்களுக்கு புகழவே தெரியவில்லை என்பது.. காதலிலேயே மூர்ச்சையாகி விட்டவனுக்கு இவ்வரிகள் எம்மாத்திரம்.
    அவன் கொண்ட காதலைப் பற்றியோ அதனை வெளிக்கொணர்ந்த வரிகளைப் பற்றியோ நான் பேசவே போவதில்லை. அது அதன் போக்கில் அப்படியாகவே இருக்கட்டும்.
    இருந்தும் சில வரிகள் மட்டும்.

    //மதியங்கள் என் பாவைகளைக் கடன் கேட்கிறது..
    உன்னை வேவு பார்க்க கடவுளை பணிக்கழைக்கிறேன்..
    புறமுதுகிட்டு ஓடும் அவனுக்கு
    என் வெடித்த உதடுகளால் ஒரு வறண்ட முத்தம்//

    கடவுளுக்கு வறண்ட முத்தமா? மித்ர.. காதலா.. உன் காதலி நொறுங்கத்தான் வேண்டும் உன் காதலில்.

    //காதலென்பது
    விட்டகலா எமனின் கால்சலங்கை சப்தமடி கள்ளியென
    நானுனக்குச் சொல்ல
    புன்னகையை கலீரனவெழுப்பி
    நீ
    மௌனம் உறைய வாழ்தலென நீ சொல்ல//

    ஆணைப் பொறுத்தவரை காதலை-வெற்றியாயினும் தோல்வியாயினும் ஆர்ப்பாட்டமாகவே எதிர்கொள்கிறான். பெண்ணோ வெற்றியையும் ஆர்ப்பரிப்பதில்லை.தோல்வியையும் அவ்வளவாய் வெளிக்காட்டிக் கொள்வதுமில்லை... எனது புரிதல் இது.

    மேலும் கவிதைகளில் சில எனக்கு புரியவுமில்லை.. புரிய அவசியமும் இல்லையென்றே எண்ணுகிறேன்... முழுதும் எனக்கெதற்கு புரிய வேண்டும்.

    மித்ர..
    நீ கொண்ட காதல்தான் உயர்ந்ததென சொல்லி மற்ற காதலரை இகழ்ந்து விடமாட்டேன்.
    நீ கொண்ட பெருங்காதலை வார்த்தைகளில் மிகச் சிறப்பாய் வடித்து விட்டாய்.

    //இறுதியில் ஒரு குழந்தை தாயின் கதகதப்பான உள்ளங்கையைக் கோருவதுபோல் நித்ராவின் காதலன் அவளின் அருகாமையை மட்டுமே வேண்டுகிறான். நித்ராவின் கதகதப்பான அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு கருவறைக்குள் பொதிந்துக் கொண்டு உயிர் வாழும் அக்குழந்தை தன் இறுதி வரை அந்தப் பனிகுடத்திலேயே ஊறி மாண்டுபோகட்டும்//

    நிர்மலா... வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு..


    வசு மித்ர-கொற்றவை

    அழகான பெயர்களைப் போல் அனுதினமும் மலருங்கள் காதலுடன்...

    ReplyDelete
  2. Replies
    1. கொற்றவை, உங்களின் " வளர்ந்த நாட்களை " சுகமாக அசைபோட உங்களுக்கு ஒரு ' வசுமித்ரா ' இருக்கிறார். ஆண்களை இவ்வளவு சாடுகிறீர்களே, உங்களுக்கு ஆண் நண்பர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். தப்பாகி விட்டது. நிச்சயம் நீங்கள் இதற்கு பதில் அளிக்க மாட்டீர்கள். உங்களுக்கு இருக்கும் நண்பர்களோடு, எதோ ஒரு கடற்கரையில் அமர்ந்து கொண்டு சூடான சுண்டலை சுவைத்துக் கொண்டு, எதோ ஒரு தீவிரமான மக்கள் பிரச்னையை சில கூறுகளாகப் பிரித்து அந்தக் கூறுகளை உங்கள் ஈகோ குதிரைகளின் மீது ஏற்றி அந்தக் குதிரைகளுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தி, அதை வேடிக்கை பார்க்கவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கலாம்.

      வயிற்றெரிச்சல் தான். ஒப்புக் கொள்கிறேன். நண்பர் ' வசுமித்ர ' கவிதைகளை நான் படித்ததில்லை. ஏன் உங்களின் கவிதைகளைக் கூட நான் படித்ததில்லை. வைரமுத்துவின் சில கவிதைகளைத் தவிர எந்தக் கவிஞர்களின் கவிதை நூலையும் நான் படித்ததில்லை. அதற்காக நானும் ஒரு கவிஞன் என்று சொல்ல வரவில்லை. பின்பு என்ன தான் சொல்ல வருகிறாய் என்கிறீர்களா ? வருகிறேன். இப்போது நவீனமாக எழுதும் கவிஞர்களின் கவிதைகளில் மேற்கத்திய வாடை வீசித்தள்ளுகிறது. இப்போதிருக்கும் பெரும்பாலான தமிழ் கவிதைகள் எதோ ஆங்கில மொழிக்கவிதையை அப்படியே மொழிபெயர்த்ததைப் போலத் தான் இருக்கின்றன.

      நீங்கள் ஒரு இடத்தில், " கவிதைகள் புரிய வேண்டிய அவசியம் இல்லை " என்று சொல்லியிருப்பது போலத் தோன்றுகிறது. கவிதை என்பது ஒரு விடுகதை போல இருக்க வேண்டும். ஒரு விடுகதையின் முடிச்சு அவிழும் போது ஒரு சுகம் ஏற்படுமே, அது போல ஒரு சுகம் தான் ஒவ்வொரு கவிதையிலும் ஏற்பட வேண்டும். கவிதை என்பது கேள்வியை ஏற்படுத்தி பதிலையும் தருவதாக இருக்க வேண்டும். மேலும் கவிதைகள் பாமரர்களுக்கு என இருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளைப் பாமரர்களுக்குத் தான் எழுதினார். பாரதியார், " பாப்பாப் பாட்டை " எதோ ஒரு பாமரப் பாப்பாவை மனதில் வைத்தே எழுதினார். கவிதை என்பது, எளிய உணர்வுகளைப் புரியாத மொழியில் சொல்வதல்ல. சிக்கலான உணர்வுகளையும் அழகாகப் புரியவைத்தல்.

      இந்தக் காலத்தில், ஒரு பெண் எழுத வந்தால் அவளுக்கு அனேக ஆண் நண்பர்கள், வழிகாட்டிகளாக, உடன் பயணிப்பவர்களாக, சமயங்களில் நிழல் தருபவர்களாக இருக்கிறார்கள். எழுத்துலகம் அவளுக்கு பசுமையான நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. அந்த நந்தவனத்தில், அவள் தானே உதிர்ந்து விழும் மலரைக் கையில் ஏந்துவது கூட சாதனையாக கொண்டாடப் படுகிறது. இதே ஒரு ஆண் எழுத வந்தால், அவன் மீது பல முனைத் தாக்குதல்கள் நடக்கின்றன. பெரும்பாலான தாக்குதல்கள் புறக்கணிப்புகளாக இருக்கின்றன. அவன் உடன் பணிபுரியும் நண்பர்கள் அவனை ஒரு ' ஜந்துவைப் ' போலப் பார்க்கிறார்கள். அவனது எழுத்துக்களைப் படிப்பவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். எழுத்துலகம் அவனுக்கு ஒரு வறண்ட பாலையாகவே காட்சியளிக்கிறது. தன் வாழ்வே அவனுக்கு அங்கு கேள்விக்குறியாக இருக்கும்போது, இதில் அந்தப் பாலை நிலத்தில் அவன் எங்கே போய் தோட்டம் வளர்த்து, பூப்பறிப்பது ?

      பாலையின் வெம்மை தாங்க முடியாமல் அவன் வெகு சீக்கிரமே வெந்து சாகிறான். இங்கு வெம்மை என்பது, புறக்கணிப்பு !
      அங்கீகரிக்கப் படாத எந்த ஒரு படைப்பாளியும், முழுமையாக உருவாவதில்லை. பாரதியார், அவர் வாழுங்காலத்தில் சரியானபடி அங்கீகரிக்கப் பட்டிருந்தால் அவர் அவ்வளவு சீக்கிரம் இவ்வுலகை விட்டுப் போயிருக்க மாட்டார். புறக்கணிப்பு தான் அவரைக் கொன்றது. எழுத வரும் ஒவ்வொரு ஆணையும் கொன்று கொண்டு இருக்கிறது. பெண்களாகிய அதிலும் அழகான பெண்களாகிய உம்மைப் போன்றவர்களுக்கு உலகம் வெளிர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆண்களாகிய, சுமாரான ஆண்களாகிய எங்களுக்கு உலகம் எப்போதும் அடர் சிவப்பு நிறத்துடனே காட்சியளிக்கிறது.

      இவ்வளவுக்குப் பிறகும் நீங்கள் ஒரு வரி கூட பதில் எழுத வில்லை எனில், நீங்கள் எல்லாம் தேவ தூதர்கள், நாங்கள் எல்லாம் நரகத்திலும் இடம் மறுக்கப் பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

      Delete
  3. தோழர் குரு சந்திரன் அவர்களுக்கு, நீங்கள் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து பதில் அளித்தமைக்கு நன்றி...

    ஒரு தனி மனிதராக நாம் சிந்திக்கும்போது ஆண் என்பதாகவும், பெண் என்பதாகவும் நாம் நம்மை பொருத்திப் பார்த்துக்கொள்கிறோம், ஆனால் ஆண்மை பெண்மை என்பதை எவர் தீர்மானிக்கின்றனர், எவர் நம் சிந்தனைகளின் மீது தாக்கம் செலுத்துகின்றனர் என்பதை எனது எழுத்து பதிவு செய்கிறது.

    பெண்ணியம் உரையாடலுக்கான தொடக்கம் எனும் கட்டுரையை முடிந்தால் படித்து பாருங்கள்.. எனக்கு ஆண் எதிரி அல்ல, ஆண்மை பேசும் ஆணின் செயல்பாடுகளை விமர்சிக்கிறேன் அவ்வளவுதான்.

    தேவைப்பட்டால் இந்த சுட்டியில் உள்ள காட்சிப்படத்தைப் பாருங்கள் - http://masessaynotosexism.wordpress.com/videos/

    //எதோ ஒரு கடற்கரையில் அமர்ந்து கொண்டு சூடான சுண்டலை சுவைத்துக் கொண்டு, எதோ ஒரு தீவிரமான மக்கள் பிரச்னையை சில கூறுகளாகப் பிரித்து அந்தக் கூறுகளை உங்கள் ஈகோ குதிரைகளின் மீது ஏற்றி அந்தக் குதிரைகளுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தி, அதை வேடிக்கை பார்க்கவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கலாம்.// உங்கள் கற்பனைகளுக்கு என்னால் பதில் சொல்ல இயலாது.

    //பெண்களாகிய அதிலும் அழகான பெண்களாகிய உம்மைப் போன்றவர்களுக்கு உலகம் வெளிர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆண்களாகிய, சுமாரான ஆண்களாகிய எங்களுக்கு உலகம் எப்போதும் அடர் சிவப்பு நிறத்துடனே காட்சியளிக்கிறது. // - நான் அழகாய் இருக்கிறேனால் இல்லையா என்று என்னை நான் மதிப்பிட்டுக் கொள்வதில்லை, மற்றவரையும் மதிப்பிடுவதற்கு அனுமதிப்பதில்லை....எனக்கு உலகம் எந்த நிறத்தில் காட்சியளிக்கிறது எனப்தை நீங்கள் முடிவு செய்யாதீர்கள்...

    ’சுமார்’ என்பது எவரின் வரையரைப்படி....எனக்கு வேறு அளவைகள் இருக்கலாம்...சுயபச்சாதாபத்திற்கு என்னிடம் பதில் கிடையாது...

    நான் நரகத்தை விரும்புபவள்....நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கொற்றவை, மன்னிக்கவும். கண்மூடித்தனமாக பெண்ணியம் பேசும் ஒரு சராசரி பெண் எழுத்தாளராக நான் உங்களை நினைத்து விட்டேன். என் எழுத்துக்களின் வாயிலாக நீங்கள் என் மனநிலையை அப்படியே படித்து அதை சுருட்டி ஊதித் தள்ளி விட்டீர்கள். அந்தப் பின்னூட்டத்தை ஒரு குப்பையாக நினைத்துக் கொள்ளுங்கள். தூங்கிக்கொண்டே விழித்திருக்கும், விழித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவுப்பணியில் கிடைத்த நேரத்தில், அரைகுறையாக உங்களின் பதிவுகளைப் படித்து விட்டு, நானும் பெரிய ' மேதாவி ' என்று உங்களிடம் ஸ்தாபிக்கும் முயற்சியில் எழுதப்பட்டது அது. அதை எழுதி விட்டு, பிறகு பதிந்து விட்டு, பிறகு படித்து விட்டு, பிறகு தலையில் அடித்துக் கொண்டேன். பதிந்ததை உடனடியாக நீக்குவதற்கான கணினி நுட்ப சங்கதிகளில் நான் கொஞ்சம் பலவீனன்.

      எனது அந்தப் பின்னூட்டம் தங்களை எந்த வகையிலாவது வருத்தப் பட வைத்திருந்தால், அதற்கு ஒரு ஆறு ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு நூல் புடவை எடுத்துக் கொடுத்து, என் வாழ்நாளில் அந்தப் பாவத்திற்கான பரிகாரம் தேடிக் கொள்கிறேன். நான் உங்களின் கட்டுரைகள் அனைத்தையும் படித்து சமயம் கிடைக்கும் போது பின்னூட்டம் இட இருக்கிறேன். அதில் உங்கள் கருத்துக்களுக்கு ஆட்சேபம் கீட்சேபம் போன்றவைகளை நாசுக்கான நயமான முறையில் தெரிவிக்க இப்போதே உங்களின் அனுமதியை வேண்டிக் கொள்கிறேன்.

      மற்றபடி, நீங்கள் ஏன் நரகத்தை விரும்பவேண்டும் ? அங்குதான், உங்களைப் போன்றவர்களின் ' தேவை ' இருப்பதாலா ? அப்படியானால் நீங்கள், திருமணமாகாத, காதலி இல்லாத, பெண் தோழிகளே இல்லாத, சொந்த ஊரைவிட்டு பெற்றோரை விட்டு பணி நிமித்தமாகப் பிரிந்து, ஏதோ ஒரு அறையில் நான்கு பேரில் ஒருவனாக வாழும் பல்லாயிரக்கணக்கான பிரம்மச்சாரிகளின் உலகத்தையும் கவனிக்க வேண்டும். நரகத்தின் அதிர்வலைகள் அங்கே தான் அதிகம்.

      Delete
  4. பெண்ணிய சிந்தனை ஆண்களுக்கும் விடுதலை அளிக்கவல்லது என்பதை ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பெண் விடுதலை என்பது புரட்சிகரமான அறிக்கைகளினாலும், ஆண்களை வசைபாடுவதாலும், நாகரீகத் தோற்றத்தினாலும் திடீர் என்று ஒரு நாள் நம் கையில் தானாய் கனிந்து விழக்கூடிய பழமன்று. ஆணாதிக்க முறைமையால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபட்ட பாலினத் தேர்வுக்கொண்டவருக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை சரியாக புரிந்துக்கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று.

    ஆண் தலைமையிலான சமூக அமைப்பு, குடும்ப அமைப்பும், முதலாளித்துவ அமைப்பு ஆகியவை ஒவ்வொருவரையும் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளுகிறத். அதன் விளைவே நீங்கள் மேற்சொன்ன உலகம். அதை கண்டு புலம்புவதோடு அது ஏன் அவ்வாறு இருக்கிறது எனும் கேள்விக்கு விடை தேடலாம். அதை மாற்றியமைக்க முயற்சி செய்யலாம். அதன் படி வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

    மார்க்சியத்தின் உதவியோடு பொதுவுடைமை சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதும், மற்றும் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சமத்துவ சிந்தனைகளை முன்வத்து பெண் விடுதலை, சமூக விடுதலைக்கான முயற்சியை மேற்கொள்வதும் மனவிடுதலை அளிப்பதாக என் அனுபவத்தின் வாயிலாக நான் உணர்கிறேன். அதை செய்கிறேன். நன்றி.

    நன்றி.

    ReplyDelete