Dec 26, 2010

நாங்கள் இப்படியாகத்தான் எங்களை அழைத்துக்கொள்வோம்......



கனவான்களே...
இம்மண்ணில்
நாங்கள் குரல்களை மென்று வாழ்பவர்கள்
நாகரீகமற்றவர்கள்

நிழல்களின் அம்மணத்தை
அதன்
விலையுயர்ந்த
ருசியை அறிந்தவர்கள்                                                                                     

சோடியம் விளக்குகளின் கீழ்
இயற்கை குறித்து  கவலை கொள்வீர்கள்
நிறம்பாய்ந்த உங்கள் கன்னங்கள் அப்பொழுது சிவக்கும்
சேவைகளுக்கான அட்டவணை தயாராகும்பொழுது
அடிமைகளை சேகரிக்கத் துவங்குவீர்கள்

எங்களுடல்களை மீட்டெடுக்க வழங்கிக்கொண்டேயிருப்பீர்கள்
உதிர நிறங்கூடிய கைகளால் பெற்றுக்கொண்டே
கண்ணீரால் வாழ்த்துவோம்
உள்ளாடைகளுக்குள் ஒளிந்திருக்கும் கடவுளர்களின்
இறுகப்பொத்திய செவிகளை
அவை துளைக்கட்டும்

நாங்கள் அப்படியே உங்களுக்கு தேவை
கறிப்பன்றியைப் போல
கைவிடமாட்டோம் கனவான்களே...

நீங்கள் பலசாலிகள்
அதைக் கனவிலும்  நாங்கள் மறந்ததில்லை
உண்மையை ஈணித்தள்ளும் உதடுகளைப் பார்த்து
கடவுளாகிய
நீங்கள்
பற்களைத் திறக்கும்போதும்
புன்னகைக்கும் போதும்
துவாரத்திலிருந்து வழிகிறது
ஓலம்

வதை செய்யும் வல்லமை உங்களுக்கானதென்பதை
நன்கறிவோம்
மேலும்...
கனவான்களே....
எங்கள் குரலுயரா தொண்டையை
உங்களது மேட்டிமைமிக்க குறிகளால்
நாங்கள் விரும்பும் வண்ணம் திறந்து
வாதையின் பயத்தை விதைத்துச் செல்வீர்கள்

மரம் கனிகொடுக்கும் கனவான்களே...
உங்கள் இருதயத்தை ஆண்டவர் ஆசிர்வாதிப்பாராக
நீங்கள் உண்பது எங்கள் பயம் கொண்ட விழிகளை

உடல் வலிகளால் நிறைந்தது
கடவுளும் அடிமையும் ஆத்மாவும் அதனை நன்கு அறியும்
உணர்ச்சியற்ற உடல்கள்
சொல்லக்கூசும் அளவுக்கு அவமானகரமானது
அதை அப்படியே நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்
நம்புங்கள் கனவான்களே

நம்பிக்கொண்டிருக்கிறோம்
ஏற்றுக்கொண்டிருக்கிறோம்
மறந்துகொண்டிருக்கிறோம்
நீங்கள் மறக்கும் வரை

எங்களது வார்த்தைகளை
எங்களது வாதையை
எங்களது கனவை
நாங்கள் காத்திருக்கிறோம்
கனவான்களே....



No comments:

Post a Comment