இக் கடிதத்தை ஓர் கேள்வியுடன் தொடங்கவேண்டியுள்ளது. தொலைக்காட்சி என்ற மாபெரும் ஊடகத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற சுயநினைவோடு, உணர்ந்துதான் செய்கிறீர்களா? உங்கள் வெற்றியின் அளவுகோலை அளக்கும் T.R.P என்ற ஒரு முறை இருப்பது போல் உங்கள் சேவைகளின் மதிப்பையும் அது சமூகத்தில் விதைக்கும் சிந்தனைகளையும் அதன் மூலம் நடக்கும் சீர்கேடுகளையும் அளக்கும் முறை என்று ஒன்றிருந்தால் உங்கள் துரோகங்களின் எண்ணிக்கையையும் கணக்கிடலாம். குறிப்பாக குழந்தைகளையும், பெண்களையும் நீங்கள் சந்தைப் படுத்துவது சொல்லக் கூசும் அளவுக்கு மிக மிக ஆபாசமாக உள்ளது.
எங்கள் குழந்தைகள் உங்கள் விற்பனைப் பொருள் ஆக்கப்படுவதைக் கண்டு அச்சுறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள். உங்கள் காமிராவின் கோரப் பற்கள் புகழுக்கான ஆசையை அவர்கள் மீது மென்று துப்பி அவர்கள் பண்புகளை, குழந்தமையை, சமத்துவத்தை பிடுங்கிச் செல்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது. குழந்தைகளின் திறமைகளுக்கான நிகழ்ச்சி என்பதில் சினமாவைப் பிரதி எடுக்கும் நிகழ்ச்சிகளே தலையானதாய் உள்ளது, இப்போக்கு குழந்தைகள் மத்தியில் திறமைப் பற்றிய தவறான புரிதலை விதைக்கிறது. புகழ் என்றாலே அது திரைத்துறையின் வாயிலாகத் தான் கிடைக்கும் என்று கற்றுத்தருகிறது. அப்புகழுக்காக தங்களை எவ்வகையிலும் பணையம் வைக்க ஐந்திலேயே அவர்களைத் தயார் செய்வது சமுதாய எதிர்காலத்திற்கு பெறும் கேடு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
புகழை முன் நிறுத்தும் போட்டி நிகழ்ச்சிகளினால் மற்ற குழந்தைகளுக்கு (பெற்றோர்களுக்கும்) ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சிந்திக்கும் நேரம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. இசை, நடனம் இவைகளை கற்ற குழந்தைகள் மட்டுமே திறமைக் கொண்டவர்கள் என்ற உங்களது தவறான சித்தரிப்பினால் இன்று ஒவ்வொரு குழந்தையும் கல்விப் படிப்போடு சேர்த்து மற்றப் படிப்புகளைக் (Extra-curricular activities) கற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சிக்கான விளையாட்டுகள், அறிவு விரிவாக்கத்திற்கான அறிவியல் பயிற்ச்சிகளை விட இசையும் நடனமுமே முதன்மை பெறுகின்றன உங்கள் தயவால். குழத்தை 5 வயது எட்டியவுடன் பாட்டு, நடன வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள், பின்பு 6 அல்லது 7 வயதில் தொலைக்காட்சிக்கு நேர்ந்து விடப்படுகிறார்கள்.
திறமைகளுக்கான மேடை என்றால் ஏன் இவ்வளவு ஆர்பாட்டம், மாறுவேடப் போட்டி போன்ற ஒப்பனைகள்? பாடல்களுக்கேற்ப ஒப்பனைகள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் உடைகள் எது போன்றவை. நடிகைகளின் மார்புகளையும், தொப்புளையும் சுரண்டிப் பிழைக்கும் பிழைப்பு போதாதென்று பெண் குழந்தைகளின் மார்புகளையும், தொப்புளையும் குறி வைக்கிறீர்கள். பாடலுக்கேற்ற பாவம் என்ற பெயரில் ஆண் சிறுவனைப் பார்த்து பெண் சிறுமி பாடல் வரிகளுக்கேற்ற பார்வைய செலுத்துவது திறமையை வளர்கிறதா பால் உணர்வை வளர்கிறதா என்று பரப்பரப்பை உண்டாக்க நீங்கள் ஒளிபரப்பும் slow motion முன்னோட்டக் காட்சிகளைப்போல குழந்தைகளின் பாவங்களை ஓட்டிப் பாருங்கள். உங்கள் கண் முன் படுக்கை அறை விரிவதை கண்டுணர்வீர்கள்.
ஆணாதிக்கச் சமூகத்தில், ஆணாதிக்க திரைப்படங்களையே எதிர்பார்க்க முடியும். ஆணாதிக்க சிந்தனையோடு எழுதப்பட்ட ஆபாசமான இரட்டை அர்த்தப் பாடலை போட்டிக்காக குழந்தைகள் திரும்ப திரும்ப பாடி மனப்பாடம் செய்யும் பொழுது பெண் பற்றிய எத்தகைய மனப்போக்கை ஆண் குழந்தைகளுக்குள் நீங்கள் வளர்த்துவிடுகிறீர்கள்? “வாடா வாடா பைய்யா என் வாசல் வந்துப் போடா”, “நீ மாசத்துல 3 நாளு எங்க போயி படுப்ப” போன்ற வரிகளின் அர்த்தம் தங்களுக்கும் புரியும் தானே? (இத்தருணத்தில் ஓர் ஐயத்தை கேட்கவேண்டும் இது போன்ற நிகழ்சிகளில் உங்கள் குழந்தைகளோ, உங்கள் குடும்பத்தாரின் குழந்தைகளோ, உங்கள் ஊழியரின் குழந்தைகளோ, நடுவர்களின் குழந்தைகளோ பங்கு பெறுகிறார்களா, அவர்கள் இவ்வரிகளை அதே பாவனையோடு மற்றவரின் நிகழ்சிகளில் பாடுவதுண்டா, ஆடுவதுண்டா?)
உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம், நுகர்வு கலாச்சர அடிமைகளாகவும், பணம் புகழிற்கு அடிமைகளாகவும் எங்கள் குழந்தைகளை உருமாற்றம் செய்யாதீர்கள். உண்மையிலேயே திறமைகளுக்கான மேடை அமைத்துத் தருவதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆசை இருப்பின் சினிமாவின் பிரதி எடுக்கும் நிகழ்சியாக அல்லாமல், குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள். முடிந்தால் குழந்தைகளை ஊடகத்திலிருந்து ஒதுக்கி விடுங்கள் அவர்கள் காண வேண்டிய உலகம் அரியது அதை ஓர் அறைக்குகள் (சினிமாவிற்குள்) அடைக்க நினைக்காதீர்கள்.
இசை, நடனத்திற்கான நிகழ்ச்சி நடத்தித்தான் நீங்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தால், போட்டியல்லாத நிகழ்ச்சியாக நடத்துங்கள். அடிப்படைத் தேர்வுகளை திரை மறைவில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான (பெரியவர்களுக்கும் கூட) சமமான ஓர் மேடையை அமைத்துக்கொடுங்கள். நடுவர்கள், ஆசிரியர்களாக செயல்பட்டு திறைமறைவில் அவர்களுக்கான வழிமுறைகளை வழங்கட்டும். பரபரப்பான முன்னோட்டங்கள், ஓட்டு வேட்டை, சுவரொட்டி வேட்டைகளை தடுத்து ஓர் ஆரோக்கியமான நிலை உருவாக அது உதவும். போட்டிகள் நிலவினால்தான் திறமைகள் வளரும் என்ற முதலாளித்துவ அரசியலை குழந்தைகளிடம் செயல்படுத்தாதீர்கள். பணம், அங்கீகாரம், புகழ் இவையெல்லாம கொண்டவரே வாழ்வதற்கான தகுதி பெற்றவர் என்று நீங்கள் பல்லாயிரம் வருடங்களாக முன்னிறுத்திவருகிறீர்கள். அவ்வரசியல் நீங்கள் மேலும் மேலும் உங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும், பண்பற்ற குணமற்ற சமுதாயத்தை வளர்க்கவும் மட்டுமே உதவுகிறது. இதுவரை ஆண்களை, குடும்ப உறவுகளை சுயநலமிக்க உங்கள் முதலாளித்துவ அரசியல் ஆட்டிப்படைத்தது, அதன் அடுத்த குறி பெண்கள், குழந்தைகள்.
உங்களை எதிர்த்து நீதித்துறையை அனுகலாம்தான் அதற்கான பொருளாதார சூழலும், அரசியல் பலமும் எங்களைப் போன்ற எளியவர்களிடத்தில் இல்லை. அது பயன் தரப்போவதுமில்லை. அப்படியே எதிர்க்கப்பட்ட வழக்கிலும் கூட குழந்தைகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பங்கேற்பதை குழந்தை ஊதியம் என்று கருத முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுளது. ஒருவேளை குழந்தைகள் தங்கள் விருப்பத்தோடு உடலை விற்க துணிந்தாலும் சட்டம் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கும் போலிருக்கிறது.
முதலாளிகள் ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் பணம் படைத்தவர்களுக்கே, ஆகவே நீங்களும் அவர்களின் இலக்கான படிநிலைக்குடும்பங்களின் பிள்ளைகளை பயன்படுத்தி சாமர்தியமாக பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். அதே வேளையில் இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் உண்மை நிகழ்ச்சிகளின் மூலம் கிராமங்களை மூடநம்பிக்கையின் சின்னமாக காண்பிக்கிறீர்கள்.
உன்மையில் குழந்தைகளுக்கான சமூக அறிவை ஏற்படுத்த நீங்களும் உங்கள் விளம்பர நிறுவனங்களும் துடிப்பீர்களானால் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளை சீரமைக்கும் முயற்ச்சிகளை மேற்கொள்ள முடியுமா? முடிந்தால் நகரப் பிள்ளைகளை அச்சீரமைக்கும் பணிகளுக்கு அழைத்து சென்று அவர்களையும் அதில் பங்கு பெற செய்யுங்கள். எங்கள் பிள்ளைகள் ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் நிலையையும், பார்ப்பனியம் தன் குல, வர்ண, வர்க்கப் பேதத்தால் செய்த கொடுமைகளையும் கண்டுணரட்டும்.
பாடதிட்டத்தில் கற்றுத்தரப்படும் வரலாற்றுப்பாடங்கள் ஆதிக்க வர்க்கத்திற்கு துதி பாடும் (வடிகட்டப்பட்ட) வரலாறு. உண்மைகளைத் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் களப்பணியாளர்களையும், மறைக்கப்பட்ட வரலாற்றை கற்றுணர்ந்த மேதைகளையும் பயன்படுத்தி வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கல்வியை போதிக்கும் நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்த முடியுமா?
தற்போதைய அரசியல் சூழலில் எதிர்காலும் குறித்து முற்றிலும் நம்பிக்கை இழந்து போய் இருக்கும் எங்களின் கடைசி நம்பிக்கை குழந்தைகள் (எதிர்காலத் தூண்கள் !!) அவர்களையும் பெரியவர்களாக்கி பிரிவினைகளையும், முதலாளித்துவ படிநிலைகளையும் மேலும் மேலும் வளர்த்து சமூக சீரழிவிற்கு நீங்கள் துணைபோவதை யோசித்துப் பாருங்களேன்.
நீங்கள் தயாரித்து அனுப்பும் குழந்தைகள் விளம்பரங்களால், ஊடகங்களால் சாரம் உறிஞ்சியெடுக்கப்பட்ட வெற்றுப் பொம்மைகள், நிகழ்வில் நடக்கும் எதையும் சற்றும் கவனத்தில் கொள்ளாத இளம் தலைமுறை, இவர்களுக்கு நெல் எப்படி விளைகிறது என்று தெரியாது, சுதந்திரப்போராட்டம், இழப்புகள், இந்திய ஜாதிகள், வர்க்க வேறுபாடுகள், அரசியல் சூழல்கள் எதுவும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்ட அப்பாவிகள். இவர்களுக்கு அரசியல் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம், (நாளை அரசியலில் நடக்கும் குறைகளை ஊழல்களை இவர்கள் போன்றோரே வளர்த்து பிரச்சாரத்துக்கும் வருவார்கள்.) அதே கேள்வியோடு இவர்கள் வரலாற்றுத் தூண்கள் என நீங்கள் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இளம்தலைமுறை என்று நீங்கள் கொண்ட்டாட்டமாய் உங்கள் ஊடகத்தில் காண்பிப்பது யாரை, அவர்களின் மனவளர்ச்சி என்ன என்பதை சோதித்துப் பாருங்கள்.
மூன்று வேளை உணவு இல்லாவிட்டாலும் இல்லம்தோறும் உங்களை நுழைய வாய்ப்பளித்த இவ்வரசியலை நான் புரிந்துகொள்கிறேன், அய்யா நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்.
இனி இது குறித்து தாங்களிடம் நான் நிறைய விவாதிக்க இருக்கிறது என்பதை நானறிவேன்...நீங்களும்....
சமீபத்தில் கண்ணாடி என்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினேன்.அது ஒரு சமுக அக்கறையுள்ள நிகழ்ச்சி.அதில் கலந்து கொள்ளும்போது அதை எத்தனை பேர் பார்ப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு முதலில்.இருந்தது.ஆனால் அது டிவியில் ஒளிபரப்பான பின் எனக்கு வந்த அழைப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தின.நண்பர்கள் பலர் போன் செய்து பாராட்டினர்.என் பிளாட்டில் அருகாமை இருப்பவர்கள் புன்னகையுடன் என்னை எதிர்நோக்கினர்.உறவினர்கள் வேறு ஊர்களில் இருந்து எல்லாம் பார்த்துவிட்டு போன் செய்தனர்.மாஸ் மீடியாவின் பலத்தை அன்று என்னால் உணர முடிந்தது.ஆனால் சன்,கலைஞர் போன்றவற்றில் மருத்துக்கு கூட சமுக அக்கறையுள்ள நிகழ்வுகள் இல்லை.முழுக்க சினிமா ,ஆடல் பாடல் கொண்டாட்டம் என்றுதான் போய்கொண்டு இருக்கிறது.ஆடைகளை குறைத்து படி போடும் ஆட்டங்கள் குடும்பத்துடன் பார்க்கும்படி இல்லை.அதை குடும்பத்துடன் பார்க்கிறார்கள் எல்லா வீடுகளிலும்.குழந்தைகளையும் அவ்வாறு ஆடவைப்பது கொடுமையும் உச்சம்.ஏதாவது செய்து நம் குழந்தை புகழ் வாங்க வேண்டும் என்ற வெறி தான் சில பெற்றோகளுக்கு இதில்.சேனல் அதை பயன்படுத்தி கொள்கிறது அவ்வளவே .சமுக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளுக்கு டி.ஆர்.பி கிடைக்காது என்பதெல்லாம் உதார்
ReplyDeleteThanks vijay mahendiran
ReplyDeleteஒரு வகையில் ஊடகத் துறையில் பணிபுரியும் நான் இது போன்ற நிகழ்வுகளுக்காக வெட்கப்படுகிறேன் தோழி.
ReplyDeleteதொலைக்காட்சி ஊடகம் என்றில்லை, அச்சு ஊடகமும், வணிக ரீதியானதாக மாறிவிட்டது.
பாலியல் தொடர்பான குற்றச் செய்திகளுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் மற்றவைகளுக்கு இல்லை. பெண்கள் சந்தைப் படுத்துதலுக்கான வாயிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர். வடிகட்டிக்
கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை.
நன்றி சக்தி..
ReplyDeleteஉண்மை தான்...இக்கருத்து ஒவ்வொரு வீட்டில் உள்ள பெற்றோரிடமும் தோன்றிக்கொன்டு தான்
ReplyDeleteஇருக்கிறது...
சன்,கலைஞர் போன்றவற்றில் மருத்துக்கு கூட சமுக அக்கறையுள்ள நிகழ்வுகள் இல்லை...
சமூகத்தை திரையிட்டு மூடி மக்களை விழிஇருந்தும் குருடர்களாக்கிக்கொண்டிருக்கின்றனர்!
மக்கள் இதை உணரும் வரை இவர்கள் ஆட்டம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்..
nanri joerabinson..
ReplyDeleteபதிவின் கருத்துகளுடன் 100 சதவிகிதம் உடன்படுகிறேன். நல்ல விழிப்புணர்வு பதிவு
ReplyDelete