Dec 7, 2010

பொருளாதார அடிமைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கான ஓர் அவசரக் கடிதம்:

புகழ் என்றால் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் தோன்றவேண்டும்.முகம் தெரியவேண்டும்.ரோட்டில் போவோர் வருவோர் உங்கள் குழந்தைகளின் முகம் பார்த்து இளிக்கவேண்டும். தாங்கள்தான் அவர்களின் பெற்றோர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். பெரும் பணம் குறுகிய காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும். இதுமட்டுமே உங்களின் மனதில் லட்சியமாய் இருக்கிறது. அவர்கள் புகழ் சின்னமாக்கப்படுவதின் (branding) மூலம் நீங்கள் பேர் பெற விரும்புவது ஒருவகையான அடிமைத்தொழில் என்றே கருதத்தோன்றுகிறது.  

குழந்தைகள் உங்கள் வழியே உருவானவர்கள், உங்களுக்காக உருவானவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வார்த்தைகளை நீங்கள் அறிந்ததுண்டா? குழந்தைகளுக்கான உலகம் (அவர்கள் எதிர்காலம் அல்ல) பற்றி ஏதாவது அறிவீர்களா நீங்கள். எப்பொழுது பார்த்தாலும் அவர்களை மதிப்பெண்கள் பெறவும், பரிசுகளைக் குவிக்கவும், புகழ்களை அள்ளிக்கொண்டு வரவுமே நிர்பந்திக்கும் நீங்கள் உருவாக்குவது மனிதம் நிறைந்த மனிதர்களை அல்ல, எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய நிறைய பணம்  அல்லது புகழ் சம்பாதித்து தரும் இயந்திரங்களை.  

சிறு வயதில் தாங்கள் இப்படியெல்லாம் வியாபாரநோக்கோடு
வளர்க்கப்பட்டதை உண்ர்ந்து பிள்ளைகள் நாளை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்பொழுது நீங்கள் கையாலாகவதராக கூனிக் குறுகி நிற்கவேண்டியிருக்கும்.  உங்கள் பேராசையை அவர்கள் லட்சியமாக விதைப்பதற்கு எதிர்காலத்திற்கான வித்து என்பது மனசாட்சியை தர்க்கம் செய்து ஏமாற்றுவது.  இங்கு ஹன்னா அரெண்ட் கூறும் ஓர் உளவியல் விளக்கத்தை குறிப்பிடுகிறேன் “காலத்தினூடாக நீடித்து இருப்பது பூமியில் இறப்பற்ற வாழ்வு” இருப்பு குறித்த அச்சமே வாரிசு உருவாக்கத்திலும் அவர்கள் மூலம் முத்திரைப் பதிக்கும் செயல்களிலும் (ஆணாதிக்க கண்ணோட்டத்துடனும், அவர்களின் நலனுக்காகவும்) ஈடுபட காரணமாய் அமைகிறது.  இந்த உளவியல் காரணங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் முதலாளிகள். குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அக்குழந்தைகளுக்கு முதலாளிகள்.

எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை எல்லோருக்கும் தெரிந்தவராக ஆக்கும் முயற்சியில் இன்று பெற்றோர்களாகிய நீங்கள் முழு முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். ஆக இதில் குழந்தைகள் நலனைவிட பெற்றோர்களின் பேராசையே ஓங்கி இருக்கிறது.  அதன் விளைவு குழந்தைகள் என்ற பெயரில் நீங்கள் வளர்ப்பது பொருளாதார அடிமைகளையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெற்றோர்களே குழந்தைகளுக்கான நலம் என்பதில் அவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்யும் அணைத்துமே பணம், புகழ், வசதி வாய்ப்புக்களை பெறுவதற்கான ஒன்றாய் மட்டுமே இருக்கிறதே ஏன்? பெரும்பாலும் இவை நடுத்தர, பணக்கார படிநிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான மேடைகளாக உள்ளனவே? தெருவுக்குத் தெரு குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்ச்சி திட்டங்கள் செயல்படுகின்றன. குழந்தைகள் மூளை வளர்ச்சி குறித்து வரைபடம் வரைந்து படங்கள் காட்டி ஏதேதோ சொல்லி அச்சுறுத்துகிறார்கள். இதன் விளைவு காலையில் பள்ளி, வீடு திரும்பியவுடன் மற்ற வகுப்புகள். இயந்திரங்களுக்கு கூட சுமை (load)  பொருக்கும் அளவு என்று ஒன்று உள்ளது ஆனால் குழந்தைகளுக்கு?

இது அறிவை வளர்க்கும் பயிற்சிகள் என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கும் அவை தேவை தானே. அப்படி அது மிக மிக அவசியம் என்றால் அரசாங்கமே அவற்றைப் பாட திட்டத்தில் சேர்ப்பார்கள் தானே? ஊடக நிகழ்ச்சிகளுக்காக 24 மணி நேரமும் சிந்திக்கும் பெற்றோர்களே இதைப்பற்றி யோசிக்க நேரம் கிடைக்குமா உங்களுக்கு?

பொருளாதாரத்தை மட்டுமே குறிவைக்கும் பண்டங்களை சந்தைப்படுத்த ஊடகங்கள் தேவை. அவ்விளம்பரங்களைப் பெற ஊடகங்கள் T.R.P*  என்ற ஒரு தர மதிப்பீட்டில் முன்னணியில் இருக்கவேண்டும் அதற்கு மக்களும் பங்குபெறும் நிகழ்ச்சியாக இருந்தால் நம் முகம், நமக்கு வேண்டியவர் முகம் அதில் தெரிகிறதே என்று வாயைப் பிளந்துக்கொண்டு நாம் பார்க்கச்செய்யும் நிகழ்ச்சிகளே மெய்மை நிகழ்ச்சிகள். அதன் தற்போதைய பலி குழந்தைகள்.  இந்த தரங்கெட்ட செயலுக்கு பெற்றோர்களாகிய நீங்கள்  துணை புரிகிறீர்கள்.

பீட்சாவும், பாஸ்தாவும் அறிந்த உங்கள் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் உண்ணும் ஈ மொய்த்த மிட்டாய்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.  தங்கள் பெற்றோரின் பொருளாதார சூழல் அறிந்து அக்குழந்தைகள் அதை உண்டே திருப்திக்கொள்வார்கள். உங்கள் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரையைச் சொல்லி அப்பொருளை வாங்கிக் கொடுத்தாலே ஆயிற்று என்று அடம் பிடிக்கும். நீங்களும் “என் குழந்தை எது கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்” என்று மார்தட்டிக்கொள்ள அதை வாங்கிக்கொடுப்பீர்கள். பின் தொடர்ந்து அது கேக்கப்போகும் பொருட்களுக்காக ஓடி ஓடி உழைப்பீர்கள். வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுப்பதென்பது எதிர்காலத்தில் உங்களை அவர்கள் கைவிட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தினால் என்றும் கருதலாம்.  இப்படி எல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்க்கப்படும் நகரக் கலாச்சாரத்தின் பெரிய சாதனை ‘முதியோர் இல்லம்’.  அடியும் உதையும் வாங்கி புழுதிக்கு மத்தியில் வளர்க்கப்படும் ஊர்கலாச்சாரத்தில் முதியோர் இல்லங்களைக் காண்பது அரிது.  ஆனால் அதையும் (இலவச) தொலைக்காட்சிகள் குலைத்துவிடும் ஆபத்து தொலைவில் இல்லை.

இறுதியாக பெற்றோரிடம் சில கேள்விகள்:

 1. பொது மேடைகளில் புகழுக்காய்,காமப் பாடல்களை பெரியவர்களுக்கேற்ற முகபாவனையுடன் உதடுகளை அசைக்கும் உங்களது செல்லக் குழந்தைகளுக்கு அவற்றின் அர்த்தங்களை வரிக்கு வரி விளக்கியதுண்டா?
 2. அச்சிறுமி அல்லது சிறுவனுக்கு பாலியல் கல்வி பற்றி என்றாவது தாங்கள் வகுப்பெடுத்ததுண்டா?
 3. சினிமாப் பாடல் வரிகளை மணப்பாடம் செய்து அக்கதாநாயக மனோபாவத்துடன் வளரும் சிறுவர் பள்ளிகளில் சக சிறுமியை எப்படிப் பார்கிறார்கள் என்று தெரியுமா? (குழந்தைகள் பிற்காலத்தில் பெண்கள் ஆண்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும்  வைக்கும் பாலியல் பார்வை எவ்வாறு அமையும்?)
 4. உங்களது குழந்தைப் பருவ இச்சைகளை நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
 5. புகழினால் உங்கள் குழந்தைகள் அடையும் இலட்சிய மாதிரி என்ன? அதனால் நீங்கள் அடையும் மனநிறைவை விளக்கமுடியுமா?
 6. இன்று படுக்கையறைப் பாடல்களை மேடையில் பெருமையாய்ப் பாடும் உங்களது குழந்தைகள் நாளை பெரியவர்கள் ஆனதும் அதைப் பதிவு செய்துக் காட்டுவீர்களா?
 7. அப்படிக் காட்டும்பொழுது நீங்களும், உங்களது மகன் அல்லது மகள் அடையும் உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?
 8. உங்கள் மகன், மகள் மேடையில் பாடும் முனகல் பாடல்களை தெருவிலும் பாட அனுமதிப்பீர்களா..அப்படி அனுமதித்தால் வரும் விளைவுகளை சந்திப்பீர்களா?
 9. குறிப்பாக பெண் குழந்தைகளை கவர்ச்சி உடைகள் அணிந்து காமப் பாடல்களை பாட அல்லது அதற்கு ஆட  ஊக்கப்படுத்தும் பெற்றோர்களே..அக்குழந்தை வளர்ந்து தெருவில் செல்லும் பொழுதும் அதே போண்ற உடை அணிய அனுமதிப்பீர்களா? (அதை நீங்கள் மறுக்கும் பட்சத்தில் புகழுக்காக அன்று நீங்கள் அனுமதித்தீர்களே என்று உங்கள் மகள் கேட்கக்கூடும்..)
 10. நல்லது கெட்டது என்ற இருமைகளுக்கு மாற்றாய் தவிர்ப்பது,மற்றும் ஒதுக்கப்படவேண்டியது என பலவகை உணர்ச்சிகளை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்களா? அவை உள்ளனவென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
 11. உங்களது குழந்தையின் உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு அதனால் தோன்றும் மன உளைச்சலுக்கு நீங்கள் கூலி கொடுப்பீர்களா?
 12. உங்களைப் போன்ற பெற்றோரால் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல் நிறைந்த மன உளைச்சலுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வீர்களா?
 13. எல்லாவற்றிர்கும் மேலாய் அவர்கள் உங்கள் குழந்தைகளா இல்லை உங்கள் அடிமைகளா?
 14. ‘சிறுமி பாலியல் பலாத்காரம்’ என்று படிக்கையில் உங்கள் மனவோட்டம் எப்படி இருக்கும்? விளக்கமுடியுமா?
 15. பல்வேறு அரசியல் காரணங்களால் பின்தங்கியுள்ள குழந்தைகளின் நிலையை மாற்றியமைக்க நீங்கள் கொண்டாடும் ஊடகங்களும், நடிகர்களும் செய்துள்ளது என்ன என்பது பற்றி விளக்கமுடியுமா? 
விவாதிப்போம் பெற்றோர்களே.....அவர்கள் நம் குழந்தைகள் அல்லவா....

14 comments:

 1. அருமை நண்பரே.....

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு நன்றி sha

  ReplyDelete
 3. Waw its a excellent article, every parents must realize the facts .....

  you have done a wonderful job..Keep writing..

  Regards
  Farook.S

  ReplyDelete
 4. நெடு நாளாய் மனதிற்குள் உறுத்திய கருத்துக்களை,நிறைவாகவும்,துல்லியமாகவும் எடுத்து வைத்துள்ளீர்கள்.நன்றி.

  ReplyDelete
 5. நன்கு ஆழமான சிந்திக்கக் கூடிய பதிவை மிக எளிமையான சொற்களில் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கொற்றவை.

  //சிறு வயதில் தாங்கள் இப்படியெல்லாம் வியாபாரநோக்கோடு
  வளர்க்கப்பட்டதை உணர்ந்து பிள்ளைகள் நாளை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்பொழுது நீங்கள் கையாலாகவதராக கூனிக் குறுகி நிற்கவேண்டியிருக்கும்//
  குழந்தைகள் அவ்வாறு உணர்ந்து விட்டால் மிகுந்த மகிழ்ச்சி.அவ்வாறு யோசிக்கக் கூட விடாமல்தானே பல குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்..

  நானும் பன்னிரண்டாவது முடித்து விட்டு சராசரி மதிப்பெண்களைக் கொண்டு பொறியியலில் சேர்ந்து விட்டேன். பொறியியல் என்ற போதை என்னுள் ஏற்றப்பட்டிருந்தது பள்ளிப்பருவத்திலேயே... உறவினர்களாலும் ஊர்க்காரர்களாலும் பெற்றோராலும்.. குக்கிராமத்தில் படிப்பறிவில்லாத பெற்றோரால் எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியும் தன் மகனின் படிப்பை... மாமாவினால் மிகுந்த கண்டிப்புடன் வழிநடத்தப்பட்டேன்.அவருக்கு தன் அக்காள் மகன் ’பெரிய ஆளாய்’ வர வேண்டும் என்ற அக்கறை.. பெற்றோருக்கும் மகன் ’இஞ்சினீயர்’ என்பதில் பெருமை!
  இன்றும் கூட அந்த போதை சில நேரங்களில் வெளிப்படும்போது முற்றிலும் அதனை இறக்கி வைக்க துடிக்கிறேன். படித்த படிப்பு எனக்காக சில வசதிகளை கொடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை.அது எனது பெற்றோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அது என்னை வெகுதூரம் எங்கோ விலக்கி வைத்து விட்டதாய் உணர்கிறேன். வசதிகளையும் பணத்தையும் சேர்ப்பதற்கு அது என்னைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது..அதன் வலையில் நான் விழுந்தும் விட்டேன்.நான் பணிபுரியுமிடமும் கூட அரசால் ஏதோ ஒரு விவாசாயியிடம் என்றோ நஷ்ட ஈடு என்று ஏதாவது கொடுத்து பறிக்கப்பட்டிருக்கும்.பணிபுரியுமிடம் எனக்கு உணவளிப்பவனையும் அலுவல் நிமித்தம் உதவி செய்யும் பணியாளர்களையும் நினைத்து உறுத்தலாகவே உள்ளது.அவர்களில் ஒருவன் பாதிக்கப்பட்டவனாக இருப்பானோ.. அவன் நிலத்தில் நான் வந்து அமர்ந்து விட்டேன். அவன் எனக்கு ஊழியம் செய்கிறான். படிப்பு என்ற ஒன்றுமட்டுமே இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறது.

  நம் சமுதாயத்தில் படிப்பின் விளைவு இன்னும் மோசமாய்த்தான் இருக்கிறது. முகச்சவரம் செய்ய பிளேடு எனக்கு வீட்டினருகில் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. மிகவும் பின்தங்கிய கிராமம்தான் இது. தொழில் நிறுவனங்களால் இப்போது ’முன்னேறிக் கொண்டிருக்கிறது’. முன்னேற்றத்தின் விளைவு... ஒரு சிறிய குடும்பம் தங்குவதற்கான சிறிய படுக்கையறை கூடம் குளியலறை கொண்ட வீட்டிற்கு வாடகை பன்னிரண்டாயிரம். விவசாய நிலம் வைத்திருந்தவனெல்லாம் இன்று வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். அவ்ர்களுக்கு இன்று வீடு கட்டி வாடகைக்கு விடுவது முக்கியத் தொழில். நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்களைத் தங்க வைக்க வீடு வேண்டுமே. குறைந்தபட்சம் முப்பதாயிரத்திலிருந்து சில லட்சங்களுக்கும் வீடுகள் வாடகைக்கு... சாமனியனெல்லாம் தெருவிற்குத்தான் போக வேண்டும் வெகு விரைவில்.. விவசாய நிலங்களில் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. ஓடைகளில் ஓடிய தண்ணீர் தேக்கப்பட்டு சிறிய குட்டைகளாக.. பின்னர் சாக்கடைகளாக... அப்படியே வற்றிப் போய்விடும்...

  ReplyDelete
 6. //குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அக்குழந்தைகளுக்கு முதலாளிகள்.

  இது அறிவை வளர்க்கும் பயிற்சிகள் என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கும் அவை தேவை தானே.

  அடியும் உதையும் வாங்கி புழுதிக்கு மத்தியில் வளர்க்கப்படும் ஊர்கலாச்சாரத்தில் முதியோர் இல்லங்களைக் காண்பது அரிது.//
  பிடித்த வரிகள்..

  நாளை திருமணம் செய்ய வேண்டுமானால் ஒரு வீடு வேணும்டா...(கிராமத்து வீடு கண்ணிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது)
  குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கணும்டா...
  பணம் ரொம்ப முக்கியம்டா..

  இப்படியான ’அறிவுரைகளைக்’ கேட்கும்போது மிகுந்த எரிச்சல்தான் மிஞ்சுகிறது.. பணம் முக்கியம்.. அது எந்த அளவிற்குத்தான் என இன்னும் புரியவில்லை.. வீடு தேவைதான்.. ஆனால் குழந்தைகளின் கல்வி.. இதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. படிப்பு என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக பணத்தைக் கொட்டி குளிரூட்டபட்ட மாட்டுக் கொட்டிலில் மந்தைகளாய் அடைக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.அதற்காகவே பணத்தின் பின்னால் ஓடவும் தூண்டி விடுகிறது..
  நான் குழந்தையாய் இருந்த போது எவ்வளவு பொதி சுமந்தேன் என்று மறந்துவிட்டேன்.. இன்று நான்காவது படிக்கும் என் அக்காள் மகன் சுமக்கும் பொதியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையாய்த்தான் இருக்கிறது.ப்அவர்களுக்கான நாள் அட்டவணை சுவரில் ஒட்டபட்டிருந்தது. அதில் ஒன்று..
  Playing only on holidays… No play on week days..
  அதை நான் பேனாவால் அடித்து விட்டதும் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி..

  பள்ளி விட்டு வந்ததும் ஒருவன் ஏதோ இசை வகுப்பிற்கும் இன்னொருவன் ஸ்கேட்டிங் என்றும் செல்கிறார்கள்.. அது அவர்களுக்கு எந்த அளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று தெரியவில்லை..

  எனது எண்ணம்.. என் குழந்தைகளை அந்த மாதிரி மாட்டுக்கொட்டிலுக்கு விட்டு விடமாட்டேன்.. எனது கிராமத்தில் வளராவிட்டாலும் என் வீட்டிலிருக்கும் ஆடு மாடுகளுடன் அவர்கள் குதூகுலத்துடன் ஓடியாடி பேசி மகிழ வேண்டும்..அருகிலிருக்கும் எனக்கு ’நல்ல பள்ளியாக’ தோன்றுவதில் படிக்க வேண்டும்.. அது சாத்தியப்படவே வேண்டும்.

  ReplyDelete
 7. நன்றி வெங்கடேசன்... நாம் எதிர்க்கும் வேகத்தை விட ‘வளர்ச்சி’ எனும் கருத்தாக்கம் அதிவேகமாய் திணிக்கப்படுகிறது... இருந்தாலும் ஓயாது எதிர்ப்போம்...

  ReplyDelete
 8. பதிவின் கருத்துகளை முகப்புத்தகத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நல்ல கருத்துகள் நன்றி

  ReplyDelete
 9. அருமையான பதிவு. மிக சிறந்த உதாரணம், விஜய் டிவின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அந்த சிறு பிள்ளைகளின் ஆடைகளில் அதனை ஆபாசம் இருப்பதை ஏனோ அந்த பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர், பல கோடி மக்கள் காணும் இந்த நிகழ்ச்சியில், வக்கிர பார்வையுடன் நோக்கும் மனிதர்களும் இருப்பனர் என்பதை எப்படி மறந்து விட்டனர்?

  ReplyDelete
 10. மிக அவசியமான பதிவை தந்ததற்கு நன்றி

  ReplyDelete