Dec 23, 2010

கடவுளற்றவளின் நாட்குறிப்பு




I.
வானம் 
சாம்பல் குவியல்
காலத்தின் பிம்பங்களில் 
பெண்கள் துலக்கிய
பாத்திரங்களிலிருந்து
வழிந்தோடிய
சாம்பல் குவியல்

கருவிழிகளில் எச்சிலொழுக
கடவுள் அதைத் தின்றுக் கொண்டிருந்தார்
சூரியனில் கருமை பரவுகையில் 
கரும்பூதமாய் குரல் எழுப்புகிறது 
கனவுகளில் 
பசி

அச்சம் 
பச்சை நிறத்துடன் பரவுகிறது 

வானம்
ஓர் சாம்பல் குவியல் 
மண்டையோடுகள் 
ஒப்பாரி இசைக்க
கடவுளர்களை எரியூட்டிய 
சுடுகாடுகளிலிருந்து வழிந்தோடிய 
சாம்பல்.....


II.


கடவுளர் அவரை வெறுக்கிறார். அவரும் இவரைப் போலவே இருக்கும் சாத்தியத்தால், அவரும் மனிதராகத்தான் இருக்கக்கூடும் என்பதை கண்டுகொண்டிருந்தார்.  அவருக்கோ மனிதரைப் பற்றிய அனுபவம் கடவுளின் புன்னகையைப் போன்று குரூரமாய் இருந்தது.  இப்படியாக கடவுள் எப்பொழுது புன்னகைப்பார் என்று அவர் அறிந்து வைத்திருந்தார். சிறுமியின் யோனியில் குறிகளை திணித்து வழியும் மரணத்தின் ஓலத்தை கடவுள் தன் துணைவியருடன் களி நடனம் புரிவதற்கான  இசையென மாற்றிவைத்திருந்ததை அறிவார் அவர். மேலும் முதலாளிகளின் அறைகளில் கடவுளின் கைகள் செய்வதென்ன என்பதையும் அறிந்துவைத்திருந்தார்.  எல்லாம் அறிந்துவைத்திருக்கும் கடவுளிடம் பாவத்தில் அவர் பங்கு குறித்து உரையாடும்பொழுது  அவரும் கடவுளும் அங்கியை மாற்றியணிந்துகொண்டனர். அது அப்படியே ஆகுக.



1 comment: