Mar 20, 2020

மார்க்சியமும் சூழலியலும் வேறில்லை



21.3.20 – இன்றைய இந்து தமிழ் திசையில் நக்கீரன் அவர்கள் எழுதிய பொதுவுடைமை இயக்கங்களின் முன்நிற்கும் கடமை என்று ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. நக்கீரன் மீதிருக்கும் பெருமதிப்பை இக்கட்டுரை சற்று குறைத்துவிட்டது என்பதே உண்மை. கண்டிப்பாக இது நட்பு முரண்பாடே J

பொதுவாக குறிப்பிட்ட துறை சார் வல்லுனர்களிடம் காணப்படும் அறிவார்ந்த ’கோளாறு’ இது என்று சொன்னால் தவறாகாது என்றே எண்ணுகிறேன். மார்க்சியர்கள் என்னும் போது மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள், 
ஏற்றுக்கொள்பவர்கள் என்பதோடு அக்கோட்பாட்டை அனைத்து தளங்களிலும் பொருத்தி சமூகத்தை மேம்படுத்த முடியும் என்னும் அறிவியலை உணர்ந்தவர்கள் என்றும் பொருளாகிறது. அதுபோல் அல்லாது மார்க்சிய ஆதரவளார்கள் (அதாவது எதிர்ப்பாளர்கள் அல்ல) என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்வதை விட மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின் (மற்றும் பலர்) ஆகியோரை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

மார்க்சியத்தை விமர்சனத்தோடு வளர்த்தெடுக்கும் நோக்கில் அனுகுவதாக ’அக்கறையோடு’ பேசுவார்கள். உண்மையில் இது நற்பணியே! ஆனால் இத்தகையோரின் பேச்சில் ஒரே வாய்ப்பாடு தான் சுழன்று சுழன்று வரும்!


மார்க்சியர்கள் எப்போதும் ‘வெறும் பொருளாதார’ போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்! வர்க்கப் போராட்டம் வர்க்கப் போராட்டம் என்று ‘கூலிப் போராட்டத்தில்’ மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்பார்கள். நக்கீரன் அந்தளவுக்கு மார்க்சியர்களை நேரடியாக அவரே மட்டம் தட்டவில்லை! மாறாக “பொருளாதாரக் கோட்பாடு என்கிற அளவுடன் மார்க்சியக் கோட்பாட்டைச் சுருக்கக் கூடாது’ என்று மைக்கேல் லெபோவிட்ஸ் உள்ளிட்ட மார்க்சியப் பொருளாதார அறிஞர்களை துணைக்கு அழைக்கிறார். இங்கு தான் நமக்கு ஐயம் எழுகிறது. ‘வழமையான’, ‘காலாவதியான’ பேச்சுகளையே மார்க்சியர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைபிடிக்கின்றனர். அதனால் தான் மார்க்சியம் தோற்கிறது! மார்க்ஸ் (& கோ) சொன்னது வேறு இவர்கள் செய்வது வேறு! மார்க்ஸ் தவறு செய்யவில்லை, மார்க்சியர்கள் தவறு செய்கிறார்கள் உள்ளிட்ட ‘திறனாய்வுகள்’ மட்டும் வழமையாக இருக்கிறதே என்று நாம் கேட்டுவிடக் கூடாது!

எனக்கு மார்க்ஸை பிடிக்கும், பெரியாரை பிடிக்கும் ஆனால் மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் தான் பிரச்சினை இப்படி வகை வகையாக சொல்லி தங்கள் துறை சார் மேதமையைக் காடிக்கொள்வதையும் நாம் காலம் காலமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மார்க்சியர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இல்லை! ஆனால் மார்க்சியர்கள் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கையில், போகிற போக்கில் “மார்க்சியம் என்பது ‘வெறும் பொருளாதாரம்’ மட்டுமே பேசுகிறது, மார்க்சியர்கள் ‘வெறும் பொருளாதார’ போராட்டங்களை மட்டுமே முன்னெடுக்கிறார்கள் என்னும் வகையிலான ‘விமர்சனங்கள்’ ஆபத்தானவை!

இத்தகைய ‘வழமையான சீண்டல்கள்’ சம்பந்தபட்டவரின் மார்ச்கியப் புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறது! ஏற்கனவே நிலவும் மார்க்சியம் பற்றிய எதிர்மறை சிந்தனை உள்ளோர் மற்றும் மார்க்சியத்தை கற்காமலேயே கம்பு சுழற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இத்தகைய ‘சொல்லாடல்கள்’ வலு சேர்க்கின்றன.

மார்க்சியம் மனித சமூகத்திற்கு அவசியம் தேவை! ஆனால் அதில் உப்பில்லை, காரமில்லை, அது சற்று கெட்டியாக இருக்கிறது, அது ஐரோப்பிய பூதம் எமக்கு இந்திய பூதம் / தமிழ் பூதம் தான் வேண்டும் என்னும் கூப்பாடுகளை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நக்கீரனின் கட்டுரையும் அத்தகையோரின் குரலாகவே ஒலிக்கிறது. ஆனால் சற்று மிதமாக!

முதலாளித்துவ சுரண்டல் குறித்து மார்க்ஸும் எங்கல்ஸும் திறம்பட விளக்கியுள்ளார்கள். குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு எத்தகைய கேடுகளை இந்த உற்பத்தி முறை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பின்னர் வந்த மார்ச்கியர்கள் (லெனிக்குப் பிந்தைய) கோட்டை விட்டார்கள். இனியாவது மார்க்சியர்கள் சுற்றுச் சூழலில் கவனம் செலுத்துங்கள் என்பதே அவரது அறைகூவல்! மகிழ்ச்சி! மார்க்சியம் வேலைக்கு ஆகாது என்பவர்கள் மத்தியில் மார்க்சியத்தில் உண்டு மார்க்சியர்களிடம் இல்லை என்கிறார் நம் தோழர் நக்கீரன்!

வெறும் பொருளாதாரம் அல்லது பொருளாதாரக் கோட்பாடாகச் சுருக்கிவிடக் கூடாது என்றால் என்ன? பொருளாதாரம் என்றால் வெறும் பணப் பரிவர்த்தனை தொடர்பான செயல்பாடுகள், போராட்டங்கள் என்கிற பொதுபுத்தி சார் புரிதலை முன் வைத்து இத்தகைய ‘துறை சார் ஆய்வாளர்கள்’ பேசுவார்கள் எனில், இவர்கள் மார்க்சியர்கள் அல்ல என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்! தவறில்லை! வேண்டுமென்றால் ‘மார்க்சிய ஆர்வலர்கள்’ என்று அழைக்கலாம்!

மற்றவர் போல் அல்லாது நக்கீரன் தனது கட்டுரையில் மார்க்சியத்தின் சாரத்தையேனும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். “மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பது போல் சூழலியல் சீர்கேட்டுக்கு முதலாளித்துவக் கொள்கையே காரணம்” என்று கூறிவிட்டு இதனை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு மார்க்சியத்தின் தேவை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேவையை உணர்த்தும் வகையில் தொடர்ந்திருந்தால் அது அவர் நினைக்கும் நோக்கத்திற்கு – அதாவது ‘இந்த நிலை தொடர்ந்தால் ஆபத்து’, ‘சிஸ்டம் மாறவேண்டும்’ என்னும் நோக்கத்திற்கு வலு சேர்த்திருக்கும். அதை விடுத்து அவர் வழமையான அறிவுஜீவிகள் போல் மார்க்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து (அறிவுரை கூறி!!!) கட்டுரையை முடித்துவிடுகிறார். இங்கு தான் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது! இவர் யாருக்காகப் பேசுகிறார்?

பசுமையைக் காக்கும் வரலாற்றுக் கடமையில் சிவப்பு ஈடுபட வேண்டுமெனில், இதுவரை சிவப்பு அது சார்ந்து எதுவும் செய்யவில்லையா?

முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சுயநலம் பிடித்த, அராஜக உற்பத்தி  முறை (அவரும் அதை குறிப்பிடுகிறார்). தனி நபர்களின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து உற்பத்திச் சாதனங்களும் (நிலம், வளம், இயந்திரங்கள், மனிதர்களின் உழைப்புச் சக்தியை வாங்குவதற்கான பணபலம்.. இத்யாதி) இருக்கும். தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி முறையை தாங்கிப் பிடிப்பதற்கான அரசு தோன்றி வளர்ந்து தற்போது முதலாளித்துவ அரசாக உச்சம் பெற்று நிற்கிறது. இந்த உற்பத்தி முறை சுரண்டல் நிறைந்தது என்று மார்க்சியம் அல்லது மார்க்சியர்கள் பேசுகையில் அவர்கள் உழைப்புச் சுரண்டல் / பொருளாதார சுரண்டலை மட்டும் பேசுவதில்லை. நிலம், வளம், சுற்றுச் சூழல் என்று அனைத்தும் சுரண்டப்படுவதை சேர்த்தே பேசுகிறார்கள், போராடுகிறார்கள். சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அனைத்துவிதமான தொழில் திட்டங்களுக்கும் எதிராக போராடுகிறார்கள். குறிப்பிட்ட துறை சார் அமைப்புகள் (NGOs போல்) போல் மார்க்சிய அமைப்புகள் அத்தகைய போராட்டங்களுக்கு தனித்த விளம்பரம் தேடிக்கொள்வதில்லை!

இங்கே இன்னொரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மார்க்சியர்கள் தொழிநுட்ப வளர்ச்சிக்கோ அறிவியல் வளர்ச்சிக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவை தனிச்சொத்தாக மாற்றப்படுவதற்கு எதிரானவரகள். இந்த பூமியில் உருவாக்கப்படும் அனைத்து செல்வங்களும் காலம் காலமாக மனித சமூக அறிவு மற்றும் உழைப்பின் தொடர்ச்சியே ஆகவே அது தனி நபர்களின் வளர்ச்சிக்காக மட்டும் பயன்படக் கூடாது. அது ஒட்டுமொத்தமாக மனித சமூகத்திற்கு இலாப நோக்கின்றி பயன்பட வேண்டும் என்பதே மார்க்சியர்களின் நிலைப்பாடு (கியூபாவைப் போல்!). அதேபோல் தேவையற்ற பொருள் உற்பத்திக்காக திட்டங்கள், அதேபோல் பாதுகாப்பற்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகையில் மார்க்சியர்கள் எதிர்க்கிறோம். அது வளர்ச்சிக்கெதிரான போராட்டமல்ல மாறாக நிலம், வளம், மனிதர்கள் உள்ளிட்டவற்றை காப்பதற்கான போராட்டம்.

பொருளாதரம் என்பதை மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒருவர் சரியாகப் படித்து புரிந்து கொண்டால் ‘வெறும் பொருளாதாரக் கோட்பாடாக சுருக்காதீர்கள்! பொருளாதார போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள்’ என்னும் வகையிலான ‘அறிவுரைகள்’ மார்க்சிய அல்லது மார்க்சியர்கள் பற்றிய விமர்சனத்தின் அடிப்படையாக இருக்காது.

பொருளாதாரம் என்று மார்க்ஸ் / மார்க்சியர்கள் பேசியதென்பது –

// “இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. [அரசியல்பொருளாதாரவிமர்சனத்துக்குஒருபங்களிப்பு – முன்னுரை, மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் – தொகுதி 4, பக்.207]

மார்க்ஸின்  மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து  நாம் ‘பொருளாதார அமைப்பு’ என்னும் பதத்தை கவனிக்க வேண்டும். ‘உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்’ என்பதை  ‘உண்மை அடித்தளம்’ என்று குறிப்பிட்டு அவர் அதை ‘பொருளாதார அமைப்பின்’ அடித்தளம் என்கிறார். வேறு சொற்களில் சொல்வதானால் பொருளாதார அமைப்பு (பொருளாதாரம்) என்பதே சமூகத்தின் அடித்தளம். பொருளாதாரம் என்றால் ‘பணம்’ இல்லை. உற்பத்தி உறவுகளே பொருளாதார உறவுகளாகும். பணம் இல்லாத புராதனக் காலத்தில் கூட பொருளாதார உறவுகள் (உற்பத்தி உறவுகள்) நிலவின. ‘பணத்தின்’ இருப்பு இன்றி உருவாகப்போகும் கம்யூனிச சமூகத்திலும் பொருளாதார உறவுகள் இருக்கும். உற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, மற்ற மேற்கட்டுமானங்கள் அந்த அடித்தளத்திற்கு ஏற்ற வகையில் உருவாகிறது. இதுவே அவர் கண்டடைந்த ‘பொதுவான முடிவு’ - அவரது ‘ஆய்விற்கு’ ‘வழிகாட்டும் கொள்கையாக’ அமைந்த முடிவும் இதுவே. // (ரங்கநாயகம்மா. முழுமையான கட்டுரைக்கான சுட்டி இறுதியில்)

மேலும் சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் முதலாளித்துவம் தரித்து வந்த அல்லது வரக்கூடிய முகமூடிகள் குறித்து நாம் அறிய மாட்டோமா? நம்மவிட இயற்கை வேளான்மை குறித்து அதிகம் கவலைப்படுவது முதலாளித்துவமே! ஏன்? நிலமும் வளமும் மாசுபட்டுப் போனால் அவர்களால் சுரண்டலில் ஈடுபட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும் தானே?

// பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட புரட்சிகள், கிராமப்புறங்களிலும், வேளாண் தொழிலிலும் மூலதன வரவுக்கு வழிகோலும் விதமாக செழிப்பானக் களத்தை தயார் செய்தன. மறுபுறம், மூலதனத்தின் பலத்திற்கு ஏற்றவாறு, உபரியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை முதலாளித்துவ நிலப்பிரபு-குலாக்குகளுக்கு வாரி வழங்கின. வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் நாடு முழுவதிலும் வளர்ச்சியடைந்தது. நகர்புற செல்வந்தர்கள் கூட தங்களது மூலதனத் திரட்டிலிருந்து விவசாயத்தில் முதலீடு செய்தனர். மூலதனத் தீவிரமுடைய நவீன விவசாயப் போக்கு முன் நகர்ந்தது.  விவசாயக் குடிகளுக்கிடையிலான பாகுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இயற்கைப் பொருளாதாரம் மற்றும் வட்டாரச் சந்தை ஆகியவற்றின் எச்சம் துடைத்தழிக்கப்பட்டது, தொலைதூரப் பகுதிகள்கூட தேசிய மற்றும் சர்வதேசியச் சந்தையோடு இணைக்கப்பட்டது. பழைய நில வாடகை முறை இன்னும் சில இடங்களில் நிலவியது, ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது தடையாக இருக்கவில்லை (மார்க்ஸும் எங்கெல்ஸும் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்). // (அர்விந்த் மார்க்சியக் கல்வியகம்)

மார்க்சியர்களுக்கு வழிகாட்டும் கொள்கையும் இதுவே! எந்த ஒரு பிரச்சினையும் தனித்ததொரு பிரச்சினை இல்லை என்பதே மார்க்சியர்களின் நிலைப்பாடே ஒழிய தனித்தனிப் போராட்டங்களோ, தனித்தனி துறைசார் முன்னெடுப்பகளோ தேவையில்லை என்பதல்ல.

இவ்வாறு மார்க்சியர்கள் செயல்படுகையில் சகல விதத்திலும் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை தகர்த்து சுரண்டலற்ற பொதுவுடைமை உற்பத்தி முறையை நுறுவுவதற்கான இலட்சியத்தோடு இயங்குகிறார்கள் என்று பொருள். சுரண்டலை எதிர்க்கிறார்கள் என்கையில் சாதி, மதம், பாலினம், சுற்றுச் சூழல், இனம், மொழி அடிப்படையிலான உழைப்புச் சக்தி சுரண்டல் என்று வெவ்வேறு வடிவிலான சுரண்டலுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் சமமாகவே போராடுகிறார்கள். அதிலும் குறிப்பாக முதலாளித்துவ எதிர்ப்பு என்பதிலேயே சுற்றுச் சூழல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என்பது உள்ளார்ந்து இருக்கிறது. தனி நபர் செல்வக் குவிப்பிற்காக நிலம், வளம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். இலாப நோக்கத்திற்காக சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறார்கள் என்று முழங்குபவர்கள் கம்யூனிஸ்டுகள். நிலத்தை பொதுவுடைமையாக்குவோம் என்பது எதற்காக என்று இந்த துறை சார் வல்லுனர்கள் அறியமாட்டார்கள் போலும்!

எல்லாவற்றுக்கும் மேலாக முதலாளித்துவம் என்பது தேவையற்ற பொருள்களை உற்பத்தி செய்கிறது. செயற்கையான தேவைகளை ஏற்படுத்தி மக்கள் மேல் திணிக்கிறது என்றெல்லாம் மார்க்சியர்கள் பேசுகையில், சுற்றுச் சூழல் சுரண்டலும் அதில் அடக்கம் தானே!

மார்க்சிய ஆதரவு ஆய்வாளர்களே, நிலத்தை பொதுவில் வை! செயற்கையான தேவையாக உள்ள இலாபம், வாடகை, வட்டி உள்ளிட்டவற்றை ரத்து செய்! என்பது வெறும் உபரி மதிப்பு பற்றிய கோஷம் மட்டுமில்லை! இலாபத்தின் பெயரால் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதற்கு எதிரான முழக்கமே அது!

மார்க்சியம் பற்றிய உண்மையை தெளிவுபடுத்தி, முழுமையான புரிதலை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. (நாம் ஒன்றும் அதில் இல்லாததை பேசப் போவதில்லை). அதை விடுத்து மார்க்சியர்களை வெறும் பொருளாதாரவாதிகள் என்னும் தொனியிலான அறிவுஜீவித்தனமான ‘பிரசங்கம்’ என்பது மார்க்சியத்தின் மீதான அவநம்பிக்கைக்கே வித்திடும்.

ஆகவே துறைசார் வல்லுனர்களாக தனித்து இயங்கும் ‘தோழர்கள்’ மார்க்சியத்தின் அடிப்படையை மக்களுக்கு அதன் கோட்பாட்டு சாரத்திலிருந்து எடுத்து விளக்கி, அதன் மூலம் மார்க்சியர்கள் எவ்வாறு வெவ்வேறு வடிவிலான சுரண்டலை எதிர்க்கிறார்கள் என்பதை விளக்கி, மார்க்சியத்தின் தேவையை உணர்த்துவதன் மூலம் தான் அவர்கள் விரும்பும் மாற்றத்திற்கு வித்திட முடியும்.

“பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றுவதே புரட்சி” என்றார் நிக்கிடின். மார்க்சியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அதற்கான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள். சூழலியலும் அதில் அடக்கம். 

சிவப்பின் பின்னால் அணிதிரள வேண்டிய வரலாற்றுக் கடமையை மக்களுக்கு எடுத்துரைப்பது இடதுசாரிகளின் கடமை. இதில் பசுமையும் சிவப்புடன் ஈடுபட வேண்டும்.

தோழர் நக்கீரனின் ஆழமான வாசிப்பும், கடின உழைப்பும், சூழலியல் சாந்த அவரது பங்களிப்பும் போற்றுதலுக்குரியவை. நன்றி. வாழ்த்துகள்

இணைப்பு: பொருளாதார நிர்ணயவாதம் என்றால் என்ன? http://saavinudhadugal.blogspot.com/2018/11/blog-post.html



No comments:

Post a Comment