Mar 9, 2020

பெண்ணியம் என்றால் என்ன?



பெண்ணியம் என்றால் என்ன? – கொற்றவை

காப்டன் விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு! அதேபோல் இங்கே பலருக்கு பிடிக்காத வார்த்தை “பெண்ணியம்”. பெண்ணியம் என்றால் என்னவென்று அறியாததால் வரும் வெறுப்பென்று நாம் கடந்து செல்லலாம், ஆனால் உண்மையில் அதற்கு மறுபெயர் பெண் வெறுப்பு (misogyny).  காலம் காலமாக அடங்கிப் போன பெண்களையே பார்த்துப் பழகிப் போன சமூகத்திற்கு பெண்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்திப் பேசத் தொடங்கியதும் பயம் தொற்றிக்கொண்டது. கம்யூனிசம் என்னும் பூதத்தைக் கண்டு முதலாளிகள் நடுங்குவதைப் போல் பெண்ணியம் என்னும் பேய் கண்டு ஆணாதிக்கச் சமூகம் அஞ்சுகிறது.

இப்போதெல்லாம் எங்கே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்? பெண்கள் அடங்க மறுக்கிறார்கள். பெண்ணாதிக்கமே மேலோங்கியுள்ளது என்பன போன்ற எள்ளல்களை நாம் கேட்க முடிகிறது. வேடிக்கை என்னவெனில், இத்தகைய எள்ளல்களும் ஆணாதிக்கமே என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!
பெண்ணியம் என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்பாக “அடங்கிப் போதல்” என்னும் போதனை குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் மற்றும் படிநிலை என்ற ஒன்று உருவாகாத சமூகத்தில் அடிபணிதல் என்னும் ‘ஒழுக்கம்’ (அல்லது விதி) இருக்கவில்லை!

அதிகாரம் என்பது எப்போது உருவானது என்று காலத்தை பின்நோக்கி ஆய்வு செய்தால் செல்வக் குவிப்பு தோன்றிய போது என்கின்ற உன்மை நமக்குப் புலப்படும். அனைவரும் சமமாக இருந்த ஒரு சமூகத்தில் யாரும் யாரையும் ஆள்வதற்கான தேவை இருக்கவில்லை. யாரும் அடிபணிந்து நடக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.  ‘சமமாக இருத்தல்’ என்றால் என்ன? சமத்துவம் என்ற சொல் கூட இங்கே பலரது வயிற்றில் புளியைக் கரைக்கிறது! ஏன்?

சமத்துவம் என்று கூறுகையில், குறிப்பாக ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுகையில் “ஆம்பிளையும் பொம்பிளையும் எப்படி சமமாக முடியும்? சரி சமம்னே வச்சுப்போம்! எங்கள மாதிரி நீங்களும் … என்று தொடங்கி உடல் பலம் சார்ந்த வேலைகளை பட்டியலிட்டு, இதையெல்லாம் செய்ங்கன்னு தான சொல்றோம்! அப்ப மட்டும் உங்களால முடியல.  Sports Day ல பாருங்க பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பரிசு பெற்று வருகிறார்கள். நீங்களும் ஜெயிக்க வேண்டியதுதான?” என்று ‘அறிவாளித்தனமாக’ (அறிவிலிகளாக) கேள்வி கேட்கிறார்கள்.

உடலாலும் கூட பெண்களும் பலமானவர்கள் என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ஆணாதிக்க மனம் அந்த சாதனைகளை எளிதாக புறம் தள்ளிவிடுகிறது! மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல் பிள்ளை பெறும் ஒரு வலு ஒன்றே போதும் பெண் உடலின் வலுவான தன்மையை மெய்ப்பிக்க. அப்படியென்றால் பிள்ளை பெற முடியாத பெண்கள் பலவீனமானவர்களா? இல்லை! அதற்கும் சேர்த்தே நாம் இன்று விடை காண்போம்!

சமத்துவம் என்கின்ற சொல்லை நாம் எண்ணம், சிந்தனை, நடத்தை என்கின்ற அடிப்படையில் மனித ஒழுக்க மாண்பாக முன் வைக்கின்றோம்! உடல் பலம் சார்ந்தல்ல! உடல் பலம் என்று விதண்டாவாதமாக பேச வேண்டுமெனில், பலசாலி என்று சொல்வோமானால் ஆணும் ஆணும் கூட இங்கே மாறுபட்டவர்களே. பிரச்சினைக்குரிய சூழல் வருகையில் எல்லா ஆண்களுமே அதை எதிர்க்க துணிந்துவிடுகிறார்களா? வம்புக்குப் போகாதே என்று சொல்லி ஒதுங்குபவர்களில் ஆண் என்ன பெண் என்ன? அதிலும் குறிப்பாக மிகவும் ஆபத்தான அரசு அதிகாரத்தை எதிர்ப்பதற்கு அஞ்சுபவர்களில் ஆண் பெண் வேறுபாடு உண்டா?

இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதே. எந்த இரண்டு நபர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மாறுபட்டு இருப்பதால் ஒருவர் மேலானவர், மற்றவர் கீழானவர் என்று வகுக்கும் அதிகாரம் இங்கு யாருக்குமில்லை. மாறுபட்டிருந்தாலும் அனைவரும் சமமே என்று வலியுறுத்துவதே சமத்துவம். மாறுபட்டு இருப்பதால்  இன்னார் இன்னதே செய்யக் கடவர்” என்னும் விதிகளை ஒழித்து அனைவர்க்கும் அனைத்திலும் உரிமை உண்டு என்று வலியுறுத்துவதே சமத்துவ சிந்தனை.  ஆக, சமத்துவம் என்று பேசுகையில் உடல் பலம் சார்ந்த, உடலமைப்பு சார்ந்த ஒப்பீடு அல்ல. அது எண்ணம் சார்ந்தது. அது மனித உரிமை சார்ந்தது.

ஏற்றத்தாழ்வு என்பது ஆண் பெண் உறவில் மட்டும் நிலவுகின்ற ஒன்றல்ல. ஒவ்வொரு சமூகத்திலும் (நாட்டிலும்) பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில், வாழ்வாதார நிலைமைகளின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்றது. அந்த அடையாளங்களை மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், உயர் பிறப்பு- கீழ் பிறப்பு, பலமானவர் – பலவீனமானவர், ஏழை - பணக்காரன், வெள்ளையர் - கருப்பர் என்றெல்லாம் வகைப்படுத்தி, திடப்படுத்தி குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பிட்ட உடைமைகளிலிருந்து, உரிமைகளிலிருந்து, வேலைகளிலிருந்து பிரித்து வைத்தனர்.
இத்தகைய வேலைப் பிரிவினையை நிலைநாட்ட பல்வேறு விதமான கட்டுக்கதைகளும், விதிமுறைகளும், ஒழுக்கவிதிகளும், நிர்வாக அமைப்புகளும் தோன்றின. மதம் மற்றும் மத நூல்கள்  அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் பாலின அடிப்படையில் பெண் அத்தகைய ‘ஒதுக்குமுறைக்கு’ ஆளானாள். செய்தொழில் அடிப்படையில், மொழி, இனம், பண்பாடு, பொருளாதார நிலை என்னும் அடிப்படையில் ஆண் பெண் பேதமின்றி பல்வேறு பிரிவினர் இத்தகைய வேலைப் பிரிவினைக்கு ஆளானார்கள். இந்திய சமூகத்தில் கூடுதலாக சுத்தம்-அசுத்தம் என்னும் பார்ப்பனிய மதச் சிந்தனையை உட்புகுத்தி குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பிட்ட வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்னும் மனுவாத விதி உண்டானது. சாதியின் தோற்றுவாய் இதுவே. இந்த அசுத்தமென்னும் சிந்தனை பெண் உடல் சார்ந்தும் நிறுவப்பட்டு பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர் அல்லது அடிமைபடுத்தப்பட்டனர். 

பெண்களை, சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை ஒடுக்கவும், அவர்களே விரும்பி அந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவும் மத ரீதியான கதையாடல்கள் உருவாக்கப்பட்டன. அவையே இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள். ஆதியில் ஆண் பெண் என்ற பேதமின்றி வேட்டையாடுதல் முதற்கொண்டு அனைத்து வேலைகளிலும் ஆணுக்கு நிகராக ஈடுபட்டு வந்த பெண்கள் பின்னர் வீட்டு வேலை, குழந்தைப் பேறு, குடும்ப நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் என்று ஒதுக்கப்பட்டனர். அதேபோல் இனக்குழுக்களாக அனைவரும் அனைத்து வேலைகளிலும் ஒன்றாக ஈடுபட்டு பகிர்ந்துண்டு வாழ்ந்த நிலைமையும் மாறியது.  இனக்குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு பிரிவு மற்ற பிரிவினரை அடிமையாக பிடித்து வரும் போக்கு இருந்தது. அப்படி பிடித்துவரப்பட்ட அடிமைகளை ஒடுக்க அதிகாரம் தேவைப்பட்டது. அதாவது அடக்குமுறை அமைப்பு.  தலைவர் (இன்றைய நிலையில் அரசு), ஒழுக்கக் கோட்பாடுகள் (மதம் போன்றவற்றின் மூலம்), தண்டனைகள் (சட்டம்) போன்றவை உருவானது.

இந்த காலகட்டத்தில் தான் “அடிபணிதல்” என்னும் ஒழுக்கம் மனித சமூகத்தில் ஒரு ‘பண்பாக’ போதிக்கப்பட்டது. மூத்தோருக்கு இளையோர் அடிபணிதல், எஜமானனுக்கு அடிமை அடிபணிதல், ஆனுக்குப் பெண் அடிபணிதல், தந்தைக்கு மகன்கள் அடிபணிதல், மன்னனுக்கு குடிகள் அடிபணிதல் என்னும் இயற்கைக்கு முரணான, மனித குலத்திற்கு அவசியமில்லாத ஒரு சிந்தனை ‘நல்லொழுக்கம்’ என்னும் பெயரில் பரப்பப்பட்டது. பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆண்களைச் சார்ந்து வாழும் நிலையும் உருவானது. அதன் தொடர்ச்சியாக தர்மபத்தினியாக வாழ்தல் என்னும் கடமை பெண்ணின் ஒரே கடமை என்றானது. இதிலிருந்து விலகி எதைப் பேசினாலும் செய்தாலும் கேடுகெட்ட பெண்ணியவாதிகள், அடங்காப்பிடாரிகள் என்னும் பட்டங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

இந்த பண்பாட்டில், அதாவது காட்டுமிராண்டிகளின் காலத்தில் தோன்றிய அராஜக பண்பாட்டில் ஊரிப்போனவர்கள்  இன்றைக்கும் அதிலிருந்து மீளாமல் “உங்களை எல்லாம் (பெண்களை) யார் அடிமைபடுத்துறா?” என்பதும் “இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லைங்க.. அவங்கல்லாம் (சாதி) எங்க அடங்கி இருக்காங்க… அடிச்சா திருப்பி அடிங்குறாங்க” என்பதுமான வியாக்கியானங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.  
மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு காலகட்டங்களை, நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறது. மனித சமூக வரலாற்று வளர்ச்சி என்பது  ஒரு பிரிவு மற்ற பிரிவிடமிருந்து செல்வங்களை கையகப்படுத்திய போர் என்னும் நிகழ்வுகளால் ஆனது. இழந்த செல்வங்களை, உரிமைகளை மீண்டும் பெறுவதற்கான போராட்டங்களால் நிறைந்தது. 

ஆண் பெண் இடையிலான போராட்டம் என்பதும், சாதி, மத, இன, மொழி ரீதியான போராட்டம் என்பதும் அத்தகையதே. உரிமைகள் பறிக்கப்படவில்லை எனில் போராடுவதற்கும் இங்கு அவசியமில்லாமல் போயிருக்கும். ஒடுக்குமுறை இல்லையெனில் விடுதலைப் போராட்டம் இருக்கப் போவதில்லை.
தொடக்கத்தில் பெண் உடல் சார்ந்து, அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் பெண் ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றிய இயல்பான வேலைப் பிரிவினையானது பின்னர் குடும்பம் மற்றும் தனிச்சொத்தின் தோற்றத்தின் காரணமாக நிரந்தரமான உழைப்புப் பிரிவினையாக மாறியது. அடிபணிதல் என்பது பெண்ணின் பண்பாக அவளது இரத்த நாளங்களில் மதம், சடங்கு, பெண்மை என்னும் விஷ ஊசிகள் கொண்டு ஏற்றப்பட்டன.  பல்லாயிரம் வருடங்களாக சமூகமானது இதற்கு பழக்கப்பட்டு, மூளைச் சலவைக்கு உள்ளாகி விட்டது. பெண்களே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதே இதில் மிகவும் துயரமான விசயம். சாதிய ரீதியாக (மற்றும் இதர) ஒடுக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்னும் உன்மை தெரிந்து உணர்வு பெற்று ஒருங்கிணைந்து போராட வந்துவிட்டார்கள். ஆனால் பெண்களில் பெரும்பான்மையினருக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிவதில்லை.

ஆண் வலிமையானவன், ஆணே உயர்ந்தவன், ஆணே குடும்பத் தலைவன் என்கின்ற நிலைமை இயல்பானதே என்பதே இங்கு நிலவும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு பெண்கள் ஆணைச் சார்ந்து, அவன் தலைமையிலான குடும்ப அமைப்பிற்கு கட்டுப்பட்டு வாழும் நிலைமைகள் உள்ள சமூகத்தைத்தான் நாம் ஆணாதிக்கம் என்கின்றோம். இது எந்த ஒரு தனியான ஆணைக் குறிப்பதல்ல. பெண்ணியம் என்பது ஆணைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதோ, ஆண் வெறுப்பை போதிப்பதோ அல்ல. பெண்களை வேறுபடுத்தி நடத்துகிறார்கள் என்னும் புரிதல் ஆணுக்கும் இல்லை, பெண்ணுக்கும் இல்லை. ஆகவே இரண்டு பாலினங்களும் இதில் பாதிக்கப்பட்டவர்களே (பிற்கால அரசியல் சூழலால், ஆணாதிக்க பாலின ஒடுக்குமுறையின் காரணமாக மூன்றாம் பாலினத்திற்கு இந்த புரிதல் ஓரளவுக்கு வந்துவிட்டது) என்னும் சமூக நிலைமையை உணரச் செய்து அதற்கெதிராக போராட பெண்கள் மட்டுமல்லாது அனைவரையும் போராட ஒன்றிணைத்து பாலின சமத்துவத்தை நிறுவ நினைப்பதே பெண்ணியம்.

கண்டபடி பாலுறவு வைத்துக்கொள்ளவும், குடும்பத்திற்கு அடங்காமல் நடக்கவும், கணவனை வீட்டு வேலைச் செய்யச் சொல்லி சீரியல் பார்க்கவுமே பெண்கள் பெண்ணியம் பேசுகிறார்கள் என்கிற அவதூறும் நிலவுகின்றது. பாலுறவு சுதந்திரம் என்பது “மண்ணும் பொண்ணும் ஒன்னு” என்று ஆணாதிக்க சொத்துடைமை அடக்குமுறைக்கு எதிராக பேசப்படுகிறது. குடும்பம் என்னும் அமைப்பு வன்முறையாக மாறுகையில் அதற்கு அடங்கமறுப்பது அவசியமானதே. அதேபோல் ஆம்பிளையை வீட்டு வேலை செய்யச் சொல்வது என்பது சமத்துவமான வேலைப் பிரிவினையாகும். ஒருவர் உழைப்பில் மற்றவர் சுகபோகமாக வாழும் நிலையை ஆண் பெண் இடையே மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து உறவுகளிலும் ஒழித்திட வேண்டும்.

முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்யும் நிலை இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரே இப்போது அவர்களுக்கு ஓட்டுரிமை, கல்வி, வேலை போன்ற உரிமைகள் கிடைத்துள்ளன.  ஆனாலும் பல குடும்பங்களில் பெண்கள் இன்னமும் வீட்டு வேலை, வெளி வேலை என்னும் இரட்டை உழைப்புக்கு ஆளாகி துன்புறுகிறார்கள். சில குடும்பங்களில் அன்பினால் ஆண்களும் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும் வீட்டு வேலை என்பது பெண்களின் பொறுப்பே என்னும் கருத்தியலிலிருந்து யாரும் விடுபடவில்லை. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் உண்ட எச்சில் தட்டைக் கூட எடுத்திடாது தட்டிலேயே கை கழுவும் பழக்கம் உள்ளது. இத்தகைய ஆண் அதிகாரச் செயல்பாடு இயல்பானதே என்று கருதும் சிந்தனையையே நாம் ஆணாதிக்கம் என்கிறோம். இது ஆண்களிடத்தும் உண்டு. பெண்களிடத்தும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய அளவில் பல்வேறு கட்டப் போராட்டங்கள், உயிர் தியாகங்களின் விளைவாக இன்றைக்கு பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனாலும் சமூகத்தின் கூட்டு மனநிலையில் பெண் என்பவள் இரண்டாம் நிலையிலானவள் என்னும் கருத்தியல் மாறவில்லை. பெண்ணின் உடை தொடங்கி, கல்வி, திருமணம், திருமணத்திற்குப் பின் வேலைக்கு செல்வதா கூடாதா என்னும் முடிவுகள், வேலைக்குச் சென்றால் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் போன்ற கட்டளைகள் என்று ஆணாதிக்கம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தையை பெற்றுக்கொள்வதே சுமை, அவமானம் என்னும் நிலை இன்னமும் தொடரத்தானே செய்கிறது. கொள்ளி போடும் உரிமை ஆணுக்குத்தானே உள்ளது. இது வாரிசுரிமை, சொத்துடைமை சார்ந்த தந்தை வழிச் சமூகத்தின் விதி. இப்படியாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெண்ணியம் என்ற ஒன்று பெண்கள் மட்டும் பேசுவதல்ல. அதேபோல் பெண்கள் பேசக் கூடியதெல்லாம் பெண்ணியமும் அல்ல. பெண்கள் தினம் என்னும் பெயரில் ‘சிறந்த இல்லத்தரசி’, ‘பெண்மையை போற்றுவோம்’ என்னும் வகையிலான புகழுரைகளை பெண்ணியம் என்று முன்வைப்பது வேடிக்கையானது. இத்தகைய புகழுரைகள் ஆணாதிக்க சமூகம் வகுத்திருக்கும் கடைமைகளை செவ்வனே செய்து முடிப்பவள் என்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம். அவ்வளவே. அந்த குடும்பக் கடைமைகளை மீறும் பெண்களை இந்த சமூகம் கொண்டாடுமா என்பதே கேள்வி.
ஆண்கள் தாங்கள் ஏதோ உயர்ந்தவர்கள், பலசாலிகள், ஆண்மை மிக்கவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களும் இந்த ஏற்றத்தாழ்வு மிக்க சுரண்டல் பொருளாதார அமைப்பில் பொருளாதார அடிமைகளே என்று உணராமல் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் அத்தகைய ஆண்களுக்காகவும், அதாவது வீடு, சமூகம் என்று சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கமாக சக ஆண் உழைப்பாளனின் விடுதலைக்காகவும் சேர்த்தே போராடுகிறார்கள். பாலின ரீதியாக பெண் உடல் சார்ந்தும் ஒடுக்கப்படுவதால் அவர்கள் உடல் சார்ந்த கருத்தியல்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் பெண்களோடு ஆண்களும் போராடுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும், அவர்களை பின்பற்றுபவர்களும் கம்யூனிஸ்டுகளும் அதற்கு சான்று. ஆனால் பொதுச் சமூகமானது இத்தகையோர் குறித்து தவறான புரிதல்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளது.

குற்றச் செயல்களில் ஆண்கள் ஈடுபடுவது போல் பெண்களும் ஈடுபடுகின்றனர். ஆனால் ஆண்கள் செய்கையில் அதை வீரமாக பார்க்கும் இந்த சமூகம் பெண் இப்படி நடந்துகொள்ளலாமா என்று இயற்கைக்கு மாறான பிறப்பின் அடிப்படையிலான ஒரு தூய்மைவாத கேள்வியை வைப்பதும், பெண்ணியம் பேசுவதால் தான் பெண்கள் குற்றங்கள் இழைக்கின்றனர் என்பதும் அபத்தமானது. குற்றங்கள் நிகழ்வதற்கு மோசமான பொருளாதார அமைப்பும் அதற்கு ஏற்றவாறு உருவாகி இருக்கும் பண்பாடுமே காரணம். இதற்கு ஆண் பெண் பேதமில்லை. குற்றமிழைக்கும் பெண்களுக்கு பெண்ணியவாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பதுமில்லை.
பெண்ணியத்திலும் பல வகைகள் உள்ளன.  ‘ஆணிய’ தத்துவங்களில் அராஜகவாத போக்கு நிலவுவது போல் பெண்ணிய சிந்தனைகளிலும் சில விசயங்களில் அராஜக போக்குகள் இருக்கவே செய்யும். ஆணாதிக்க அராஜகம் போல் அல்ல; இது வர்க்க ரீதியான சிக்கல். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். ஆனால் அதுவும் கூட பெண்கள் தினம் என்னும் வணிகக் கொண்டாட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர மற்றையோர் இந்நாளை பெண்கள் தினம் என்பார்களே ஒழிய உழைக்கும் மகளிர் தினம் என்று கூற மாட்டார்கள்.

பெண்ணியம் என்பது பாலின அடிப்படையில் ஒடுக்கப்படுவதை ஒழித்து குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் சமத்துவத்தை அடைந்திடுவதற்கான ஓர் அரசியல் இயக்கம். பெண்ணியம்  பேசுவோர் பெண் விடுதலை மட்டுமல்லாது சாதி மத ஒடுக்குமுறை, பொருளாதார பிரச்சினைகள், இன ஒடுக்குமுறை, போர் எதிர்ப்பு, சூழலியல் சுரண்டல் என்று பல்வேறு பிரச்சினைகளையும் முன் வைத்து போராடுகின்றனர்.

ஆண்களே உங்களின் விடுதலைக்காகவும் சேர்த்தே பெண்ணியவாதிகள் போராடுகின்றனர். உழைக்கும் வர்க்கமான உங்களுக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

மார்ச் 8 அன்று வணக்கம் இந்தியாவில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் 

No comments:

Post a Comment