Aug 21, 2020

பிள்ளையார் வழிபாடு உண்மையில் தமிழர்களின் பண்பாடா?


2008 இல் ஆர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் என்றொரு படிப்பு படிக்கையில் தான் மதங்கள், கடவுள்கள், பெண்களின் நிலை பற்றிய கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தன. கட்டிடக் கலை வரலாற்று வளர்ச்சிப் பற்றி படிக்கையில், ஒன்றை வீழ்த்தி மற்றொன்று நிலைநாட்டப்படுகிறது. ஒரு ‘சாமி’ இன்னொரு ‘சாமியை’ தூக்கி அடிக்கிறாரே… என்னமோ சரியில்லையே என்னும் கேள்வி எழுந்தது. அப்போது முக்கியமாக நான் அவதானித்தது:

1. பௌத்ததின் வீழ்ச்சி (மார்க்சிய நோக்கில் அல்ல)

2.  பெண் தெய்வங்களின் வீழ்ச்சி

3.  முருகன் சோமஸ்கந்தன் ஆக்கப்பட்டது.

4.   வாதாபி கணபதியின் வருகை

5.  ஆட்சியாளர்களின் மாற்றத்தோடு நிலைநாட்டப்பட்ட கட்டிடக் கலை, நம்பிக்கைகள், பண்பாடு மற்றும் (சாதி, மத, பாலின) அதிகாரம்!

எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியை, ஆசிரியர் இடதுசாரிகள் இல்லையெனினும் துறை சார் வல்லுனர்கள், வரலாற்றாசிரியர்கள் என்னும் அடிப்படையில் சார்பின்றி வரலாற்றை முன் வைத்தனர்.

தாய் தெய்வ வழிபாடு குறித்து என்னுடைய சிறிய ஆய்வைச் செய்து முடிக்கும் தருவாயில் வசுமித்ரவை சந்தித்தேன்… அறிவும் உண்மையும் கிடைத்தது. யான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்துடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன் 2010 முதல்….

கீழே உள்ள பதிவு… பிள்ளையாரை வைத்து நடக்கும் இந்துத்துவ மதவாத அரசியலை சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

 

தமிழர்களின் மீதான வடவர்களின் பண்பாட்டு படையெடுப்பே விநாயகர் ஊர்வலம் - தோழர் சுந்தரம்

அக்கால தமிழர்களால் எதிரிகளின் சின்னமாக கருதப்பட்டு அவமதிக்கப்பட்ட கணபதி சிலையை இக்கால தமிழர்கள், தலையிலே தூக்கிவைத்துக் கொண்டு ஊர்வலம் போவது, தமிழர்களுக்கு அவமானகரமான செயல் அல்லவா!
==============================================

பிள்ளையார் என்றும், விநாயகர் என்றும் கணபதி என்றும் அழைக்கப்படும் பிள்ளையார் பற்றிய செய்தி கி.பி.7 -ஆம் நூற்றாண்டிற்கு முன் தமிழ் நாட்டின் வரலாற்றில் கிடையாது. சங்க இலக்கியங்கள் எதிலும் பிள்ளையாரை பற்றிய குறிப்புகள் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் வடக்கேயிருந்து சாளுக்கியர்கள் தமிழ்நாட்டின் மீது பலமுறை படையெடுத்து வந்தனர். அவர்களால் நாட்டை பிடிக்க முடியவில்லை, பல்லவர்கள் சாளுக்கியர்களை விரட்டியடித்துவிட்டனர். ஆனால் நாடு பிடிக்க முடியவில்லையே எனும் ஆத்திரத்தில் சாளுக்கியர்கள் தமிழ்நாட்டின் கிராமங்களை கொள்ளையடித்துக் கொண்டு கிராமங்களை தீக்கிரையாக்கிவிட்டு சென்றனர். அதனால் தமிழக மக்கள் சாளுக்கியரை எண்ணி அஞ்சி நடுங்கினர். அதிலும் இரண்டாம் புலிகேசியின் காலத்தில் தான் சாளுக்கியர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனது. தமிழர்களை கொன்று குவிக்கவும் மக்களை கொள்ளையடிக்கவும், ஊர்களை கொளுத்தி தீக்கிரையாக்கவும், இப்படிப்பட்ட அட்டகாசங்களை செய்ய சாளுக்கியர்களால் முடிகிறது என்று சொன்னால் அதற்கு காரணம், சாளுக்கியர்களின் தலைநகரமான வாதாபியில் இருக்கும் வாதாபி கணபதி எனும் துஷ்ட தெய்வமே என மக்கள் நம்பினர். வாதாபி கணபதி எனும் துஷ்ட தெய்வம் அங்கிருக்கும் வரை நாம் நிம்மதியாக வாழ முடியாது என்று கலவரத்துடனே இருந்தனர் தமிழக மக்கள்.

பல்லவர்கள், படையெடுத்து வந்த சாளுக்கியர்களை வெற்றி பெற விடாமல் விரட்டி விரட்டியடித்து வந்த பல்லவர்கள், படையெடுத்து வெற்றிபெற விடாமல் விரட்டியடித்து வந்தாலும், அதிலும் முக்கியமாக மகேந்திரவர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் திறமையாக போரிட்டு வந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடம் நிலவிய அச்ச உணர்வை நீக்க முடியவில்லை. மக்களின் அச்ச உணர்வை போக்காததால் அவர்களால் நிம்மதியாக ஆட்சியை நடத்த முடியவில்லை. அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று ஆலோசனை நடத்தினர்.

பல்லவ தளபதி பரஞ்சோதி (புராணங்களில் சிறு தொண்டை நாயனார் என அறியப்பட்டவர்) சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்து அதை அழித்துவிரட்டு வருவதுதான் நிரந்தர தீர்வு என்றார். அவரின் கருத்துப்படியே அவரின் தலைமையில் பெரும் படை திரட்டி சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்தனர். பல்லவ தளபதி பரஞ்சோதி சாளுக்கியரின் தலைநகர் வாதாபியை அழித்து அந்நகரிலிருந்து வாதாபி கணபதி சிலையை பெயர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து தமிழக மக்களிடம் காட்டி, இனி மக்கள் வாதாபி கணபதி எனும் துஷ்ட தெய்வத்தை எண்ணி பயப்பட தேவையில்லை என்றார். அதுமட்டுமல்லாது வாதாபி கணபதி சிலை போன்ற சிலைகளை செய்து அவற்றை ஊர் முச்சந்திகளில் நிறுத்தியும், பெண்கள் நீராடும் நீர்த்துறைகளில் நிறுத்தியும் அவமதிப்பு செய்தனர். அப்போது அவ்வாறு செய்ததால்தான் தற்காலத்திலும் பிள்ளையார் கோவில்கள் முச்சந்தியிலும் ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் உள்ளன. பல ஊர்களில் மக்கள் துணி துவைக்கும் கல்லாக பயன்படுத்தி வருகின்றனர். பிள்ளையார் சிலையை கோவில்களில் இருந்து திருடிக் கொண்டுவந்து வைப்பதை பழக்கமாக கொண்டிருக்கும் காரணமும் வாதாபியிலிருந்து பெயர்த்தெடுத்து வந்ததை பின்பற்றிதான். பிள்ளையார் என்கிற வரலாற்று உண்மையை புரிந்து கொள்ளாம தற்கால தமிழர்களை பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது சரியா?

பல்லவர்களுக்கு பிறகு தமிழ்நாட்டை ஆண்ட பிற்கால சோழர்கள் சாளுக்கியர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டனர். இராசராசசோழனும், இராசேந்திரசோழனும் கீழைச்சாளுக்கியர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டனர். இராசராசசோழனின் சகோதரி ஒரு சாளுக்கியனை மணந்துகொண்டார். இராசராசசோழனின் மகளும் ஒரு சாளுக்கியனை மணந்துகொண்டாள். இராசேந்திரசோழனுக்கு பிறகு இராசராசசோழனின் மகள் வயிற்று பேரன் சாளுக்கிய வம்சத்தவன் ஆட்சிக்கு வந்தான். தமிழ்நாட்டில் முதன்முதலாக அந்நிய வம்சத்தவனின் ஆட்சி ஏற்பட்டது. அவன் சோழர்கள் பெயரால் ஆட்சி செய்தாலும் அவன் சாளுக்கிய வம்சத்தவன் என்பதால், பல்லவர் காலத்தில் அவமதிக்கப்பட்ட கணபதி சிலைகளை நிமிர்த்தி வைத்து கோயில் கட்டி வழிபடும் தெய்வமாக மாற்றிவிட்டனர். சாளுக்கிய வம்சத்தவர்களி சோழ வம்சத்தவர்களாக -தமிழர்களாக எண்ணி ஏமாந்து ஏற்றுக்கொண்டது போலவே பழைய வரலாறு தெரியாமல் பிள்ளையாரை வழிபடும் தெய்வமாக ஏற்றுக்கொண்டு விட்டனர். பிற்கால சோழர்களுக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு அந்நியர்களின் ஆட்சிகளுக்கு உள்ளானது தமிழகம். முகமதியர் படையெடுப்பு, மராட்டியர் ஆட்சி, பொற்சகீசியம், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேர்கள் என் பலரும் தமிழகத்தை கூறு போட்டு ஆண்டனர். சுமார் ஆயிரம் ஆண்டுகாலமாக இன்று வரை தமிழகத்தை அந்நியர்கள் ஆண்டு வருகின்றனர்.

அவ்வாறு அந்நியர்கள் தமிழகத்தை கூறுபோட்டு ஆண்ட காலத்தில் தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டு வந்தனர். தஞ்சையை ஆண்டு வந்த மராட்டியர் அந்நிய சாளுக்கிய வம்சத்தின் தொப்புள் கோடி உறவுகளே. அவர்களுக்கு வாதாபி கணபதி வழிபாட்டை பின்பற்றிய வம்சத்தவர்களே என்பதால் அவர்களும் பிள்ளையார் வழிபாட்டை தமிழக மக்களிடம் திணித்து விட்டனர்.

இந்திய துணை கண்டத்தில் ஆங்கிலேயர் கைப்பற்றிய நாடுகளையெல்லாம் தங்களின் நிர்வாக வசதிக்காக ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். ஆங்கிலேயர் ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களும் பங்கு வேண்டுமென்று அதற்காக தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக திலகர் வந்தபோது, ஆங்கிலேயர்களுக்கு எதிப்பான உணர்வை மராட்டியர்களிடம் தூண்டிவிடுவதற்காக மராட்டியத்தில் பிள்ளையார் ஊர்வலத்தையும், சிவாஜிக்கு விழாவும் நடத்தினார் திலகர். அதுமுதல் பிள்ளையார் ஊர்வலம் மத தன்மையிலிருந்து அரசியல் தன்மையை பெற்றுவிட்டது. பிள்ளையார் ஊர்வலமானது ஆங்கிலேயருக்கு எதிர்ப்பான உணர்வை மட்டும்மல்ல, கிறித்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும், எதிரான உணர்வுகளையும் தூண்டிவிட்டது.

திலகர் அன்று துவக்கிய பிள்ளையார் ஊர்வலத்தின் விளைவு இன்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா போன்ற இந்து மதவாத இயக்கங்களும் கட்சிகளை வளர்ப்பதற்கும் அவைகள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கலவரங்களை ஏற்படுத்துவதற்காக பிள்ளையார் ஊர்வலத்தை நடத்துவதற்கும் காரணமாய் அமைந்துவிட்டது. அதேபோல திலகர் காட்டிய வழி, மராட்டிய வெறி பிடித்த இயக்கமான சிவசேனா வளரவும் காரணமாய் அமைந்துவிட்டது மராட்டிய இனவெறி, மதவெறி இயக்கமான சிவசேனா பம்பாயில் வாழும் தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவருகின்றனர், என்பது யாவரும் அறிந்ததே. தமிழர்களை சிவசேனா இயக்கத்தவர் - மராட்டியர் தாக்குவதற்கு, அவர்களுக்கு ஆன்மீக பலம் பிள்ளையார் ஊர்வலம்தான் என்பதை தமிழர்களை உணரவேண்டும்.

ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் மதவாத அடிப்படையில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம் நாடக பாகிஸ்தான் நாடும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களின் நாடக இந்தியாவும் தோன்றின. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் - மதவாத எதிப்பு நாடல்ல என்பதால், இந்துக்களையே பெரும்பான்மையினராக கொண்டுள்ளது என்பதால், எதார்த்தத்தில் இந்து மதவாதத்தை ஆதரிப்பதும் சிறுபான்மை மதத்தவர்க்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது இந்திய அரசு, என்பது கண்கூடு. இந்தியா, பாகிஸ்தான் என இருவேறு நாடுகள் தோன்றிய பிறகு, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்து மதவாதிகளால் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது. அந்த ஊர்வலத்தின்போது இந்து -முஸ்லீம் மத கலவரங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆட்சியாளர்களும் அதற்கு மறைமுகமாக துணை போய்க்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு முடிவுகட்ட இந்திய ஆட்சியாளர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

கணபதி என்றால் கணம்+பதி= கணபதி இதில் கணம் என்பது குலம் ஆகும். அதாவது பழங்குடி இனத்தில் பல குலங்கள் உண்டு. குலத்தலைவன் என்பதே கணபதி என்பதாகும் பொதுவாக நாகரிக சமுதாய அமைப்பிற்கு முன் வரலாற்றில் பழங்குடி இனங்களே இருந்தன. ஒவ்வொரு குலமும் தங்கள் குலத்திற்கு என்று ஒவ்வொரு குலச்சின்னங்களை வைத்துக்கொண்டனர். பெரும்பபாலும் குலச்சின்னங்களாக ஆடு, மாடு...போன்ற விலங்குகளாகவோ பருந்து, புறா, கிளி...போன்ற பறவைகளாகவோ, மீன், முதலை... போன்ற நீர்வாழ் உயிரினங்களாகவோ இருந்தன. அந்த வகையில் தான் வட நாட்டில் இருந்த ஒரு இனத்தவர் குலத்தவர் கணபதியை தங்களின் குலச்சின்னமாக அமைத்துக்கொண்டனர். அதுவே பிற்காலத்தில் வழிபடும் தெய்வமாக மாற்றப்பட்டது.

பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை தெய்வமாக வழிபட்டனர். அந்த முருகனுக்கு அண்ணனோ தம்பியோ கிடையாது. வடவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் ஏற்படஏற்பட வடவர்களின் கடவுளர்களும் தமிழகத்தில் புகுத்தப்பட்டனர். வடவர்களின் தெய்வங்களில் ஒன்று சுப்பிரமணியன், வடவர்களின் தெய்வமான சுப்ரமணியனையும் தமிழர்களின் தெய்வமான முருகனையும் ஒன்றாக்கிவிட்டனர். முருகனையும், சுப்ரமணியனையும் ஒன்றாக்கியவர்கள் அவர்களின் மனைவியர்களை மட்டும் இரண்டு பேராக வைத்துவிட்டனர். முருகனின் மனைவி வள்ளி, சுப்பிரமணியனின் மனைவி தேவையனை இருவரையும் ஒருவனுக்கே இரு மனைவியர் என்றாக்கிவிட்டனர். வடவர்கள் சுப்பிரமணியனின் அண்ணன் கடவுளாக விநாயகரை கொண்டாடினர். முருகனை சுப்ரமணியனாக சித்தரித்தவர்கள் முருகனின் அண்ணனாக விநாயகரையும் சித்தரித்துவிட்டனர். இத்தகைய கதைகள் யாவும் கோர்க்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திணிக்கப்பட்ட கதைகளேயாகும்.

பெரியார் ஒரு நாத்திகவாதி. கடவுள் மறுப்பு கொள்கையுடையவர். அவர் தமது கடவுள் மறுப்பு கொள்கைகளை தமிழக மக்களிடம் எடுத்து செல்வதற்காக- சொல்வதற்காக பிள்ளையார் சிலைகளை உடைக்கும் இயக்கத்தை நடத்தினார், என்பது யாவரும் அறிந்ததே.

இந்து மதத்தில் பல்வேறு சாமிகள் இருந்தும் வேறு எந்த சாமி சிலைகளையும் உடைப்பதற்கு தேர்ந்தெடுக்காமல், பிள்ளையார் சிலையை மட்டும் உடைப்பதற்கான சாமி சிலையாக தேர்ந்தெடுத்தது ஏன்? வேறு சாமிகளின் சிலைகளை உடைத்தால் தமிழக மக்கள் அதிக அளவு எதிப்பை காட்டுவர், பிள்ளையார் சிலைகளை உடைப்பதற்கு தமிழக மக்கள் அதிக அளவு எதிர்ப்பினை காட்டமாட்டார்கள் என்பதனால்தான். பிள்ளையார் சாமி சிலைகளை உடைக்கும் போது மட்டும் தமிழக மக்கள் எதிப்புணர்வை காட்டாததற்கு காரணம் பல்லவர் காலத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்ததன் தொடர்ச்சியாக அதை தங்களின் ஒரு அளவாக தமிழர்களை கருதியதே ஆகும்.

வடவர்கள் வடநாட்டில் வருடா வருடம் இராமலீலா கொண்டாடுகின்றனர். இராமலீலா விழாவில் வட நாட்டில் உள்ள அரசியல் வாதிகளும் பங்கேற்கின்றனர். இராமலீலா விழாவானது தமிழர் நாட்டில் கொண்டாடப்படுவதில்லை. இராமலீலா விழாவானது வடவர்களுக்கும் தமிழர்களுக்குமான போராட்டத்தை சித்தரிப்பது ஆகும். ஆனாலும் அதை தமிழர்கள் உணரவில்லை. இராமனின் பெயரால் இராமர் பாலம் என்று சொல்லிக்கொண்டு சேது சமுத்திர திட்டம் நிறைவேற விடாமல் தடுக்கின்றனர் வடவர்கள், அதையும் தமிழர்கள் புரிந்துகொள்ளவில்லை. மதத்தின் பெயரால் வடவர்கள் தமிழர்களின் மீது பண்பாடு படையெடுப்பை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றனர்.அவற்றில் ஒன்று தான் விநாயகர் ஊர்வலமும் அதனை சரியாக உணர்வதில்லை தமிழர்கள்.

வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி தொடர்ந்து சுரண்டி வருகிறது சுரண்டும் வர்க்கம், சுரண்டும் வர்க்கத்தின் செயலை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தி வருவதே மதங்கள் செய்யும் வேலை, அந்த வகையில் மதங்கள் சுரண்டல் வர்கத்திற்கானதே. வர்க்க ஒடுக்குமுறையை மட்டுமல்லாது இன ஒடுக்கு முறையையும், ஒடுக்கப்படும் இனத்திற்கு எதிராக ஒடுக்கும் இனத்தின் செயலை நியாயப்படுத்துவதற்கான கருத்தியல் அமைப்பே மதங்கள். ஆனால் அது புரியாமல் சாதாரண மக்கள் மதங்களின் பெயரில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மதங்களின் பெயரில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கட்டாயப்படுத்தி போக்க முடியாது. அதனால் மக்களின் வழிபாட்டுரிமையை மறக்கலாகாது, அதே நேரத்தில் மதங்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கலாகாது. அவ்வகையில் விநாயகர் வழிபாட்டை தடுக்க கூடாது என்றாலும் விநாயகர் ஊர்வலத்தை தடை செய்வது அவசியமாகும்.
===============================================
உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்துருவாக்கமே அரசியலாக்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலம் என்பதை புரிந்துகொண்டு உழைக்கும் மக்கள் விநாயகர் ஊர்வலத்தை புறக்கணிக்க வேண்டும்.

பல்லவர் காலத்தில் எதிரியின் சின்னமாக கருதப்பட்டு தமிழர்களால் அவமதிக்கப்பட்ட சிலையே பிள்ளையார் சிலை. தமிழர்கள் மீது வடவர்கள் நடத்தும் பண்பாட்டு படையெடுப்பின் ஒரு அம்சமே விநாயகர் ஊர்வலமென்பதை தமிழர்கள் புரிந்துகொண்டு அதை எதிர்த்திட வேண்டும்.

முஸ்லீம்களுக்கு எதிராக மதக்கலவரத்தை தூண்டி வரும் அரசியலாக்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்தை தடைசெய்ய வேண்டும்.
===============================================
- தோழர் சு (எ) சுந்தரம்

 


No comments:

Post a Comment