Aug 16, 2020

அன்பும் நன்றியும்

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒவ்வொருவருக்கும் நன்றியும் அன்பும்! இந்த வருடம் தான் இத்தகைய “அட்டகாசம்” நடந்திருக்கிறது!

 

முகநூலில் புகைப்படம் போடுவது தொடங்கி, பிறந்தநாள் கொண்டாட்டம் வரை பொதுச் சமூகத்திலிருந்து நம்மை மட்டும் விலக்கி கேள்விக் கணைகளும் தொடுக்கப்படும்! “நீங்களே இப்படிச் செய்யலாமா”? என்று! நாங்கள் தான் செய்ய வேண்டும்! செய்யவும் முடியும்! அரசியல் பழகியவருக்கு எல்லாமே அரசியல் தான் 😊

 

வழக்கமாக, பெண் உடலைப் பார்க்கும் ஆண் நுகர்வு மனதை உடைத்தெறிந்து ஒரு பெண்ணை அவளது அறிவுக்காகவும், அரசியல் செயல்பாட்டிற்காகவும், புகைப்படத்தின் வாயிலாக அவள் கட்டுடைக்கும் அதிகாரங்கள், தடைசெய்யப்பட்ட பேச்சுக்கள் யாவை என்பதை உள்வாங்கிக் கொள்ளும் ஆண் (பெண்) பிரிவினரின் பார்வை எப்படி முதிர்ச்சி மிக்கதாக இருக்கிறது என்பதை உணர்த்தும் அரசியல் அது. மேலும், இந்த ஆணாதிக்க வக்கிர சமூகத்திற்கு எதிராகவும்... பற்றுறுதியுடன் மார்க்சியத்தை முன்வைத்து விமர்சனபூர்வமாகவும் பேசுவதால் சில அடையாள அரசியல்வாதிகளின் வன்மத்திற்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் ஒரு பெண்ணின் இருப்பும், சக “தோழர்களுடனான” போராட்டமும் எத்தகையது என்று உரக்கச் சொல்லும் செயல்பாடே அது!

 

பிறந்தநாள் கொண்டாட்டம்! வழக்கம் போல அன்றைக்கும் அதே அறை, அதே கணினி அதே எழுத்தும் பேச்சும் தான்! ஆனால் வேறுபாடும், மகிழ்ச்சியும் என்னவெனில் முட்டாளாக, ஆணின் பெண்ணாக, ஆணாதிக்க வக்கிர அவமானப் பேச்சுகளுக்கு உள்ளாகி, இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்க வேண்டிய ஒரு பெண் அறிவின் துணைக் கொண்டு எப்படிப்பட்ட “மரியாதையையும், அன்பையும்” இச்சமூகத்தில் பெற்றிருக்கிறாள் என்பதற்கான ஒரு சான்று. அவ்வளவே!

 

வாழ்த்தும் அன்பும் பகிரும் நண்பர்கள் (தோழர்கள்) ஒரு பெண்ணின் அழகிற்காகவோ, உடலுக்காகவோ சேரும் கூட்டமல்ல, மாறாக சமூக மாற்றத்திற்கான தேடலில் ஒத்த சிந்தனையுள்ளவர்களாக சேரும் கூட்டத்தினர்.. இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாக இருப்பதன் மூலம் இவள் உணர்த்த விரும்புவது என்ன?

 

பெண்களே! படியுங்கள்! அரசியல் பயிலுங்கள்! பகுத்தறிவுப் பாதையில் பயணியுங்கள்! உங்கள் விடுதலைக்கு வழிகாட்டியாகத் திகழும் சித்தாந்தங்களைப் படித்து உங்களை மேம்படுத்திக் கொண்டு.. உங்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து சமூகத்தையும் விடுவிப்பதற்கான பங்களிப்பை செய்திட தயாரானால்… பெண்மைச் சிமிழுக்குள் உங்களை யாரும் அடைக்க இயலாது! ஆணினம் “ஆண்” மனதோடு உங்களை நெருங்கவும் இயலாது!

 

எழுத்தென்பது விதை! பெண்ணுக்கு அது ஆயுதமும் கூட!

 

Much Love to all of you 🤗

 


No comments:

Post a Comment