Aug 21, 2020

நீங்க மட்டும் என்னாவாம் என்னும் முட்டாள்களுக்கு!

 

எப்போது பார்த்தாலும் சிலர் (பொதுப் புத்தியில் உள்ள மக்கள் அல்ல, தங்கள் சாதிப் பற்று மற்றும் அடையாள அரசியல் பற்றிலிருந்து எங்கள் மீது வெறுப்பு கொண்டவர்கள்) கேட்கிறார்கள், “தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களின் பிற்போக்குத்தனங்கள், பெண் சித்தரிப்பு பற்றியெல்லாம்  நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள் ஆனால் நீங்கள் (நானும் வசுவும்) அதே துறையில் பணியாற்றித் தானே உங்கள் வயிறு வளர்க்கிறீர்கள், உங்கள் கணவர் (நானே அவனை அப்படிச் சொல்றதில்லை… உவேக்) வக்கிரம் பிடித்த மனிதராக நடிக்கிறார் …. (இதெல்லாம் ஒரு கேள்வின்னு தூக்கிட்டு வந்துட்டாய்ங்க!)

இக்கேள்விகள் எப்போது வரத் தொடங்கின? என் முதல் மொழிபெயர்ப்பு நூல் வந்த போது! யாரிடமிருந்து! அதைச் சொல்லவே தேவையில்லை… அந்த 63! இல் சிலர்!

அப்போது சொன்ன பதில் தான் இப்போதும், “அடேய்… பேமானிகளா, நிலவுகின்ற முதலாளித்துவ உற்பத்தி முறையில் நாங்களும் உற்பத்திச் சாதனங்களற்று உழைப்புச் சக்தியை மட்டுமேக் கொண்டு ’சுதந்திரமாக’ சந்தைக்கு வரும் பாட்டாளிகள் (வர்க்கம்). எந்த அதிகாரமும் இன்றி உழைப்புச் சக்தியை விற்று வாழும் நிலையில் இருப்பவர்கள்! (நிதி வாங்கி என். ஜி. ஓ நடத்தி வயிறு வளர்க்க போலி அரசியல் செய்யும் கூட்டமல்ல!) சந்தையில் நாங்களும் ஓர் உழைப்பாளி; சந்தைக்கு வெளியே எங்களது போராட்டங்கள் நாங்கள் வெறும் உழைப்புச் சக்தியாக வைக்கப்பட்டிருக்கும் அதே அழுத்தப்பட்ட நிலையிலிருந்தே எழுகின்றன. முதலாளித்துவத்தால் பலியாடு ஆக்கப்படுவதன் விளைவாகவே தோன்றுகின்றன.  ஓர் அரசாங்க நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அரசுக்கு எதிராக சங்கம் அமைக்கும் ஓர் உழைப்பாளியின் நிலைமைகளை ஒத்ததே அது…

இதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் எங்கள் வாழ்வாதாரத்திற்கு வேற்று கிரகம் எதிலும் நீங்கள் எங்களுக்கு வேலை வாங்கித் தரலாம். எங்கள் கடன்களை அடைக்க பொறுப்பேற்றுக் கொள்ளலாம். இல்லையேல் எங்களை தத்து எடுத்துப் பராமரிக்கலாம்… முடியாதெனில் மூடிக் கொண்டு செல்லவும்..

Marxism is not Baptism! மார்க்சியம் என்பது ஞானஸ்தானமல்ல! நிலவுகின்ற சுரண்டல்வாத அமைப்பை மாற்றுவதற்கான அறிவியல்பூர்வ போராட்டம்! அது ஓர் உள்ளிறுப்புப் போராட்டமே அன்றி வேற்று கிரகத்திலிருந்து தொடுக்கக் கூடிய போர் அல்ல! அதேபோல் மதவாத சாமியார்த்தனமும் அல்ல முற்றும் துறந்து முண்டங்களாக அலைய!

பேசும் பொதுவுடைமை அரசியலுக்கு நேர்மையாக இருத்தல் என்பது அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பை, அதன் அரசை, சுரண்டலை எதிர்ப்பதும் அதை மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குவதும் தான்…

போராடுவது செழுமையாக வாழ்வதற்கே ஒழிய பட்டினிக் கிடந்து சாவதற்கல்ல…

(இருக்கிற நாலு கம்யூனிஸ்டும் சோத்துக்கு வழியில்லாம மண்டையப் போட்டா அப்புறம் எவ / எவன் மார்க்சியத்தைப் பிரச்சராம் பண்றது? சொங்கொடிய புடிக்குறது? போங்கப்பா அங்குட்டு)

உள்ளவன் கிட்டப் புடுங்கி இல்லாதான் கிட்ட கொடுக்குற ராபின் ஹூட்டை… சிகப்பு மனிதன்னு கொண்டாடுவீங்க! உங்க தலைவர் யாரையாச்சும் விமர்சிச்சா அறிவார்ந்த முறைல எதிர்கொள்ள முடியாம இப்படி அல்பத்தனமா முட்டாள்தனமா உளறுவீங்க… போங்க போய் நீங்களும் மார்க்சியம் படிச்சு உங்க புள்ளைக் குட்டிங்களையும் படிக்க வைங்க!

No comments:

Post a Comment