Jul 21, 2020

தனியார்மயம் தோற்கும்!


 

தனியார்மயம் என்பது என்ன? யாரோ ஒரு தனிநபர் மற்றவர்களை உழைப்பில் ஈடுபடுத்தி செல்வம் குவிக்கும் சுரண்டலான உற்பத்தி முறை.
இதன் அநீதியை அறியாமல் முதலாளித்துவம் இயல்பானது தான் என்று இங்கே நம்பவைக்கப்பட்டுள்ளது.

திறமை உள்ளவன் தொழில் செய்றான்.
அவன் கிட்ட (அவகிட்டன்னு சொல்ல மாட்டாய்ங்க) மூலதனம் இருக்கு அவன் மேடேறுறான்.
அவன் பாட்டன் முப்பாட்டன் சொத்து சேர்த்துவச்சான்… என் அப்பன் கடனை இல்ல சேர்த்து வச்சிருக்கான்… எடுபட்ட பய.. குடிகாரப் பய… சோக்கு மைனரு.. எல்லாத்தையும் அழிச்சுபுட்டான்…

இப்படிப்பட்ட வியாக்கியானங்கள் மூலம் ‘முதலாளித்துவம் நல்லது’, ‘கருணை உள்ளம்’ கொண்டு நம்மை வாழ வைப்பது என்று நிலைநாட்டப்பட்டு விட்டது!

கல்வி, மருத்துவம், இரயில்வே போன்ற அடிப்படை தேவைகளைக் கூட இப்போது தனியார்மயமாக்கி வருகிறது பா.ஜ.க அரசு!

அரசு அலுவலகங்களை பராமரித்த நிலை, அதன் அராஜக இயங்குமுறை, அதில் நிலவிய தொழிலாளர் அதிகாரத்துவ போக்கு (Labour Aristrocracy), ஊழல், எந்த ஒரு வேலைக்கும் நாட்கணக்கில், மாதக் கணக்கில் அலைய வேண்டிய நிலை இப்படி எல்லா வகையிலும் பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளானார்கள். அதேவேளை தனியார் நிறுவனங்கள் “இலாப” நோக்கோடு போட்டா போட்டியின் காரணமாக வாடிக்கையாளரை ”கடவுள்” என்ற இடத்தில் நிறுத்தி சிவப்பு கம்பளம் விரித்து “சேவை” செய்வதாக ஒரு பிம்பம் நிலவுகின்றது. ஓரளவுக்கு அதை மறுக்கவும் இயலாது. தனியார் நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களிடம் அராஜகப் போக்கை கடைபிடிப்பார்கள் எனினும், விகிதாச்சார வேறுபாடு உண்டு.

பொதுவெளியில் பிரச்சினை ஆகிவிட்டால் தங்கள் “பிராண்டுக்கு” அவப் பெயர் என்னும் அச்சம் இந்த போட்டா போட்டி அமைப்பை குறைந்தபட்ச “வாடிக்கையாளர் நன்பராக” இருக்கும்படி நிர்பந்திக்கிறதே ஒழிய. அது தனியார்மய மதிப்பீடு (value) எல்லாம் இல்லை! இலாபத்தின் தேவையிலிருந்தே இந்த உத்திகள் மேலெழுகின்றன. தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் தங்கள் பொருளை விற்கையில் எப்படி நடந்துகொள்கிறார்கள், கடன் வசூலிக்க எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்!

மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், இரயில்வே, குடிநீர், மின்சாரம் போன்ற துறைகள் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டு மக்களுக்கு எந்த கோபமும் வரவில்லை! தனியார்மயம் என்றால் தூய்மை, எளிதாக வேலை முடியும், தொழில்நுட்ப வசதிகள், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை, பலவகையான தேர்வுகள் என்பதோடு போட்டியின் காரணமாக “தரம்” என்பது நமக்கு கிடைக்கிறது என்னும் மாயையில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மூளைச் சலவைக்கு மத்தியில் அரசுத் துறைக்காகவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் தனியார்மயமாக்கல் என்னும் அநீதி குறித்து மக்களுக்கு, குறிப்பாக மத்தியத்தர வர்க்கம், மேல் மத்தியத்தர வர்க்கத்திடம் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறோம்?
இந்திய சமூகத்தின் “சாபம்” சாதியும், இந்துத்துவமும் நம்மை பிரித்தாள்வதில் வெற்றி கண்டுவருகின்றன.

அரசுத் துறைகள் மெல்ல ஒழிக்கப்பட்டு, தனியார் மயம் வளர்தல் என்பது ஏகபோகத்திற்கு வழிவகுக்கும், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கப் போகிறது, கல்வியும் மருத்துவமும் கைக்கெட்டா நிலைக்கு செல்வதென்பது இனப்படுகொலைக்கு நிகரானது!

தனியார்மய பெருக்கத்தால் தொழிலாளர்கள் உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு நவீன ஆண்டான் அடிமை சமூகமாகும் காலமும் வந்துவிட்டது!

அதுதான் புரட்சிக்கான உந்துவிசையாக இருக்கும் என்பதை மார்க்ஸ்(ஸியம்) சுட்டிக்காடியுமிருக்கிறார்! ஆனால் இதை மக்கள் முன்னமே உணர்ந்துகொண்டால், முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ அரசுகளின் கயமையை முன்னமே உணர்ந்துகொண்டால் எதிர்வரும் துன்பகரமான வாழ்வை முன்கூட்டியே முறியடிக்கலாம். இழப்புகளை தவிர்க்கலாம்.

பேராசைதான்! ஆனால் கனவல்ல!

ஏனென்றால், தொழிலாளர் வாழ்வு சிறக்காமல் முதலாளி வாழ இயலாது!

உழைப்புச் சக்தி இன்றி முதலாளித்துவத்தால் பிழைத்திருக்க இயலாது! முதலாளிகள் உழைப்பதில்லை! உழைப்பாளர்களை சார்ந்தே உள்ளனர்!

அடுத்ததாக, என்னதான் முதலாளி மாங்கு மாங்கென்று பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் குவித்து வளர்ச்சி என்று ஏமாற்றினாலும், வாங்கும் சக்தியான உழைப்பாளர்கள் வளர்ச்சியுறாமல் முதலாளித்துவத்திற்கு போனி ஆகாது!

எப்படிப் பார்த்தாலும் முதலாளி தான் உழைப்பாளியை சார்ந்திருக்கிறாரே ஒழிய உழைப்பாளி முதலாளியை சார்ந்தல்ல!
உண்மை இதுவெனில் ஏன் முதலாளித்துவத்தின் அதிகாரம் ஓங்கி இருக்கிறது? உழைப்பாளர்களின் அறியாமை! ஒற்றுமை குலைக்கும் அடையாளங்களான – சாதி, மதம், இனம்,மொழி, பாலினம்! இந்த உண்மையை உணர்த்தி வர்க்க ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய மார்க்சிய அரசியல் பொருளாதார சித்தாந்தம் குறித்து முதலாளித்துவமும், முதலாளித்துவ சக்திகளும் பரப்பும் எதிர்மறை சிந்தனைகள்!

ஆனால்! எப்படிப் பார்த்தாலும் முதலாளி தான் உழைப்பாளியை சார்ந்திருக்கிறாரே ஒழிய உழைப்பாளி முதலாளியை சார்ந்தல்ல! உழைப்பாளி வீழ்கையில் முதலாளித்துவமும் வீழும்! உழைப்பாளியை தூக்கி நிறுத்த சோஷலிசம் இருக்கிறது! முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த அவர்களிடம் எந்த சக்தியுமில்லை என்பதே யதார்த்தம் 😊

No comments:

Post a Comment