Jun 4, 2020

தலித் பேந்தர்ஸும் கம்யூனிச அரசியலும்



”எங்களுக்கு மார்க்ஸை ரொம்ப பிடிக்கும்! லெனினை ரொம்ப பிடிக்கும்! மார்க்சியத்தை நோக்கித் தான் நாங்கள் நகர்கிறோம்! ஆனால் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் பிரச்சினை” என்று பூசி மெழுகுவார் பண்பாட்டு மைய முதலாளி மற்றும் தலித்திய மெண்டார்கள்! அதற்குப் பின்பாட்டுப் பாடுவார்கள் அவரது சாதி ரசிகர்கள்!

ஆந்திரத்திலும் இது போன்ற சமாளிப்புப் பேச்சுகள் நிறையவே இருந்தன! “தலித்தியம் பேசுபவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சினை என்றால் அவர்கள் ஏன் ஒரு கம்யூனிஸட் கட்சியைக் கட்டக் கூடாது” என்னும் ரங்கநாயகம்மாவின் கேள்வியை 4 வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்! இதன் பொருள் என்ன? உங்களுக்கு உண்மையிலேயே முதலாளித்துவத்தை தகர்க்கும் எண்ணம் இருக்குமெனில் நீங்கள் சோஷலிசத்தை ஏற்பீர்கள் தானே!

உண்மையில் Black Panther partyஐப் போல் Dalit Panthers (கூகிளில் தேடுங்கள், அவர்கள் Ideology: Socialism, Anti-Casteism என்று வரும்!) ஒரு சோஷலிஸ்ட் அமைப்பாக இயங்கியது! சாதி அடையாள அரசியலை முன்னெடுக்க அந்த அமைப்பை உடைத்தார்கள். இந்த வரலாற்றுத் தொடர்போடு தான் நான் அந்த கேள்வியை தமிழ்நாட்டில் வைத்தேன்.

ஆனால் புலி வெறுப்பரசியல் (விமர்சன அரசியல் அல்ல), நையாண்டி இலக்கியம் செய்யும் சோபா சக்தி என்பவன் அதை வைத்து பெரிய அறிவாளி போல் ஒரு நக்கல் செய்தான், என்னவென்று “தனிக் குவளை! தனிக் கோயில்! தனிச் சுடுகாடு! தனி மார்க்சியம்! " இவ்வளவுதான் அவனது தாராளவாத-தர்க்கவாத அறிவு!
மார்க்சிய தத்துவத்திற்கோ, சாதி ஒழிப்பிற்கோ குறைந்தது அம்பேத்கரிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்கோ அம்பேத்கரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தலித் அல்லாத பின் நவீனத்துவ பிழைப்புவாதிகள் செய்தது என்ன?

Fred Hampton எவ்வளவு தெளிவாக, “அவர்கள் என்னை உங்கள் எதிரி என சித்தரிக்கிறார்கள்” என்கிறார். அதுபோல் இங்கு தலித்திய பண்பாட்டு மைய முதலாளிகள் / மெண்டார்கள் எப்போதாவது பேசியுள்ளார்களா! ”உழைப்புச் சுரண்டலுக்காக பார்ப்பனியமும், தனி உடைமை வர்க்கமும் சாதி என்னும் ஒரு அமைப்பின் மூலம் உங்களையும் என்னையும் பிரித்துவைத்திருக்கிறது. உழைக்கும் வர்க்கமான நம்மை பிரித்து வைக்க நடந்த ஒரு பிரிவினைவாத சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடு இது. (உன்மையில் சிலர் முதலாளி(கள்! உழைக்கும் வர்க்கமாக இருந்தால் அப்படி பேசி ஒருங்கிணைப்பார்கள்) வர்க்கமாக ஒன்றிணைந்து அதனை நாம் முறியடிக்க வேண்டும்.

தலித் இளைஞர்களே நமக்கு எதிரி உழைப்புச் சுரண்டல் அடிப்படையிலான நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் அதற்கு துணை நிற்கும் இந்துத்துவ பார்ப்பனிய மதம். நம்மைப் போலவே அனைத்து சாதிகளிலும் உள்ள உழைக்கும் சகோதர, சகோதரிகள் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர்!
நமது பொது எதிரி நிலவுடைமையும், முதலாளித்துவமும் அதனை தகர்ப்போம், சோஷலிசத்தை நிறுவ பாட்டாளி வர்க்கப் புரட்சிப் பாதையில் பயணிப்போம்” என்று முழங்கினால் குறைந்தபட்சம் இடைநிலை சாதிகளில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும், தலித் உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தவும், பார்ப்பனிய அதிகார வர்க்கத்திற்கு அது அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கும்!

தலித் பேந்தர்ஸ் இயக்கம் தொடக்கத்தில் இப்படித்தான் இயங்கியது. ஜிக்னேஷ் மேவானி போன்றோர் இந்த சிந்தனையைக் கொண்டுள்ளவர்கள்! அவரிடம் நட்பு பாராட்டும் தமிழ்நாட்டு தலித்திய லாபியிஸ்டுகள் அம்பேத்கரிடம் இருந்துதான் எதையும் கற்கவில்லை, குறைந்தது ஜிக்னேஷிடம் இருந்தாவது கற்கலாம்! ஆனால் மார்க்சியத்திற்கு எதிரான மேட்டுக்குடி தலித்திய அறிவுஜீவிகள் / முதலாளிகள் இதை செய்வதில்லை!

தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என்று சொன்னால் கூட, அதற்கும் ஒரு நையாண்டி! திராவிட வெறுப்பு, தமிழ்தேசிய வெறுப்பு, மார்க்சிய வெறுப்பு! முதலாளித்துவ, தாராளவாத ஆதரவு – இதுவே இந்த சிறிய கூட்டத்தின் அரசியல் கொள்கை!
மார்க்சியத்திற்கு எதிரான இந்த சிறிய கூட்டத்தை எதிர்ப்பதை ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் எதிரானதாக, தலித் அறிவுஜீவிகளையே நிராகரிப்பதாக எவரேனும் கருதினால் அதற்கு நாங்கள் பொறுப்பாக இயலாது!

இப்படிப்பட்டவர்கள் போலியான சாதி ஒழிப்பு பேசுகிறார்கள், அதற்கு அம்பேத்கரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பல வகைகளில் ஆன்ந்த் டெல்டும்ப்டே உட்பட பலர் விமர்சித்துவிட்டார்கள். (டெல்டும்ப்டேவை இவர்களால் சாதி வெறியர் என்று சொல்ல இயலாது!) ஆனால் இந்த முதலாளித்துவ ஆதரவு மேட்டுக்குடிகளிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை.

சாதியப் பிரச்சினை மற்றும் தலித் மக்களின் நிலை குறித்து மைய அரசியல் நீரோட்டத்தில் கவனத்தை ஏற்படுத்தி, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய அம்பேத்கரால் கூட பொருள்முதல்வாதப் பார்வை இல்லாமல் போனதால் சாதி ஒழிப்பிற்கு தீர்வு கொடுக்க இயலாமல் போனது என்று மார்க்சிய ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதில் என்ன அவதூறு! ஆனால் அவரை முன் வைத்து சிறு கூட்டமான முதலாளித்துவ அறிவுஜீவிகள் எதிர்புரட்சி சக்திகள் போல் இயங்குவதால் தான் நாம் அம்பேத்கரிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வு உள்ளதா என்னும் திறனாய்வை தமிழ்நாட்டில் முன் வைக்க நேர்ந்தது! அது எதிர்கொள்ளப்பட்ட விதம் அடுத்தடுத்த விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும், ஆதாரபூர்வமான பதிவுகளுக்கும் இட்டுச் சென்றது! அவ்வளவே!



No comments:

Post a Comment