Jul 25, 2019

சர்வதேசக் குழந்தைகள் வாரம்




கம்யூனிஸ்ட் இளைஞர் இண்டர்நேஷனலின் செயற்குழு, மூன்றாவது சர்வதேசக் குழந்தைகள் வாரத்தை ஜூலை 24 முதல் 30 வரை கொண்டாட முடிவு செய்துள்ளது. குழந்தைகள் இயக்கம் ருஷ்யாவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஆகவே இதைப் பிரபலப்படுத்த “குழந்தைகள் வாரம்” உபயோகப்படுகிறது.

“குழந்தைகள் இயக்கத்துக்கும், குழந்தைகள் ஸ்தாபனத்துக்கும் என்ன அவசியம்?” என ஒருசில தோழர்கள் கேட்கலாம்.  “அவர்கள் வளரட்டும், மேலும் முதிர்ச்சி அடையட்டும், பிறகு அவர்கள் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் சேருவார்கள். இப்பொழுது அவர்களுக்கு என்ன புரியும்? அவர்கள் விளையாடட்டும், பள்ளிக்குச் செல்லட்டும்” என்று அவர்கள் சொல்லலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் உட்கொண்ட சிறுவர் கம்யூனிஸ்ட் கழகமே இளம் பயனீர் கழகமாகும்.*

இளம் பயனீர் கழகம் அதன் உறுப்பினர்களுக்குக் கூட்டுணர்ச்சியைப் புகட்டுகிறது. இன்பத்தையும் துன்பத்தையும் கூட்டத்துடன் பகிர்ந்துகொள்ள அவர்களைப் பழக்கப்படுத்துகிறது. தங்கள் கூட்டத்தின் நலனே தங்கள் நலன் என்று போதித்து கூட்டத்தின் உறுப்பினராகத் தங்களைக் கருதிக்கொள்ளுமாறு அவர்களுக்குப் போதிக்கிறது.  கூட்டுப் பழக்கங்களை, அதாவது ஒரு ஸ்தாபன ரீதியில் கூட்டாக வேலை செய்யும், இயங்கும் திறமையை வளர்க்கிறது.  தனது விருப்பத்தைவிட கூட்டத்தினரின் விருப்பத்தையே மேலாக மதிக்கவும், தனது  முன்முயற்சியை கூட்ட்த்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கூட்டத்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கடைசியாக, தாங்கள், மனிதகுலத்தின் மலர்ச்சிக்காகப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள், சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் என்ற மாபெரும் சேனையின் உறுப்பினர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி குழந்தைகளின் கம்யூனிஸ்ட் மனவுணர்வை வளர்க்கிறது.

மேலே கூறியவை மட்டுமே குழந்தைகளை எவ்வளவு சீக்கிரமாக இவ்வியக்கத்தில் சேர்க்கிறோமோ அவ்வலவுக்கு நல்லது என்பதை நிரூபிக்கிறது. “நாங்கள் எங்கள் தந்தையைக் காண்பதேயில்லை; அவர் பகல் நேரத்தில் வேலை செய்கிறார், சாயங்காலம் கூட்டங்களுக்குச் செல்லுகிறார்” என்று தொழிலாளர்களின் குழந்தைகள் கூறுவதை அடிக்கடி கேட்கலாம்.  அவர்கள் தாயும் வேலை செய்கிறாள் அல்லது வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை கவனிப்பதிலும் ஈடுபடுகிறாள்.  அகவே அவர்கள் எதையும் பார்க்காமல் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்;  அல்லது அலுப்புத் தாங்காமல் குறும்புச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  அல்லது தெருவில் திரியும் சிறுவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவர்கள் கழகம் அவர்களுக்கு அநேக இன்பமான வாய்ப்புகளைத் தரும். அவர்களது செயல்களையும், முன்முயற்சிகளையும் வளர்த்து அவர்களது எண்ணங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

இயல்பாகவே, இளம் பயனீர் கழகம் பெரியவர்களின் கழகத்தைப் போன்று இருக்கக் கூடாது. அவ்வாறு பெரியவர்கள் கழகத்தின் மறுபதிப்பாக இருந்தால் உண்மையிலேயே கெடுதல்தான். ஆனால் அதில் கம்யூனிஸத் தன்மையை ஊட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அது கோஷ்டிப் பாட்டுகள், விளையாட்டுகள், நீந்துதல், இயற்கைக் காட்சிகளைக் காணச் செல்லுதல், தீக்கணப்பைச் சுற்றி அமர்ந்து பேசுதல், தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல், பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதல் போன்ற உல்லாச நிகழ்ச்சிகளுக்கு வழி செய்ய வேண்டும்.  இவை அனைத்தும் குழந்தைகளின் மனதில் அழியாத உளப்பதிவை ஏற்படுத்தி, ஒரு ஸ்தாபனத்தின், ஒரு கூட்டின் அமைப்பை அவர்களுக்கு நன்றாக எடுத்துக் காட்டும்.  பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதலும், தொழிலாளர்களின் கிளப்புகளையும், தொழிற்சாலைகளையும், தொழிலாளர் கூட்டங்களை பார்வையிடுதலும் குழந்தைகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணும். முடிந்த அளவுக்கு எல்லா வகைகளிலும் இத்தொடர்பை ஊக்கப்படுத்த வேண்டும். மாதர் சங்கக் கிளைகளும், ஆலைகளிலுள்ள கட்சி குழுக்களும், தொழிற்சங்கங்களும் இளம் பயனீர்களுக்கு ஆதரவு தரவேண்டும்; குழந்தைகளிடையே வர்க்க ஒருமைப்பட்டு உணர்வை புகட்டத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்ய வேண்டும்.


குழந்தைகள் இயக்க வாரத்தின்போது தொழிலாளர் கழகங்கள் இளம் பயனீர்களை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைத் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தங்கள் வேலையை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.  விசேஷமாகப் பொறுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் அவர்களுக்குத் தங்கள் இளமைப் பருவத்தைப் பற்றியும், தாங்கள் நிகழ்த்த வேண்டியிருந்த போராட்டத்தைப் பற்றியும் கூற வேண்டும். சுருங்க்க் கூறின் சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் தொழிலாளி வர்க்கம் இளம் பயனீர்களைத் ‘தத்து’ எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. ஆகவே தான் இளம் பயனீர் கழகம் விளையாட்டுகளுக்குப் பெரிதும் முக்கியத்துவமளிக்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் உடற்கட்டை வளர்க்க விளையாட்டுகள் கண்டிப்பாகத் தேவை. அவை உடல் பலத்தை வளர்க்கின்றன, குழந்தைகளின் கைகளை வலுவுறச் செய்கின்றன, உடல் லாவகத்தை அதிகரிக்கின்றன, கண்பார்வையைக் கூர்மையாக்குகின்றன; அவர்களது நுண்ணறிவையும் சமயோசித புத்தியையும், முன்முயற்சியையும் வளர்க்கின்றன.  குழந்தைகளின் ஒழுங்கமைப்புத் திறமை, தன்னடக்கம், பொறுமை, நிலைமையை சீர்தூக்கி ஆராயும் திறமை போன்றவற்றை அதிகரிக்கின்றன.  நல்ல விளையாட்டுக்களும் கெட்ட விளையாட்டுக்களும் இருப்பது உண்மைதான்.  சில விளையாட்டுகள் குழந்தைகளைக் கொடியவர்களாகவும், முரடர்களாகவும் செய்கின்றன. பிற இனத்தினரை வெறுக்கத் தூண்டுகின்றன, குழந்தைகளின் நரம்பு மண்டலத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. சூதாடும் உணர்ச்சியையும் செருக்கையும் வளர்க்கின்றன.  வேறு சில விளையாட்டுகள் குழந்தைகளைச் சரியான முறையில் போற்றி வளர்க்கின்றன. குழந்தைகளின் மனதிடத்தை வலுப்படுத்துகின்றன. நீதி உணர்வை வளர்க்கின்றன. வேறு சில அவர்களைக் கம்யூனிஸ்டுகளாக்குகின்றன. கடைசியாகக் கூறியதை நிறைவேற்றுவதே இளம் பயனீர்கள் எடுத்துக்கொண்டுள்ள காரியம். இங்குதான் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் உதவி புரிகிறது.


இளம் பயனீர்கள் விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. இக்காலக் குழந்தைகள் பலவற்றைக் கண்டுள்ளனர், கேட்டுள்ளனர்; மனிதகுலத்தின் மலர்ச்சிக்கும், புது வாழ்விற்குமான போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். இதில் அவர்களுக்குள்ள பங்கு ஒருவேளை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்;  மருந்துச் செடிகளைத் திரட்டுதல், தொழிற்சாலைகளுக்கு முன்னுள்ள வெற்றிடங்களைச் சுத்தப்படுத்தி அங்கே பூச்செடிகளை நடுதல், பச்சிளங்குழந்தைகள் விடுதிக்காகத் துணிகளைத் தைத்தல், கூட்டங்களுக்கான வரவேற்பிதழ்களை விநியோகம் செய்தல், தொழிலாளர் கிளப்புகளை அலங்கரித்தல் போன்றவையே அவை. ஆனால் இந்தக் கூட்டுப் பணிகள், தான் சமுதாயத்துக்கு உதவும் ஒரு உறுப்பின்ன் என்பதை இளம் பனீர் உணருமாறு செய்து, வேறு ஆக்க வேளைகளைச் செய்யுமாறு அவனைத் தூண்டி விடுகின்றன.  சோவியத் ஸ்தாபன்ங்கள் இளம் பயனீரிடம் கவனம் செலுத்த வேண்டும், அவர்களின் நடவடிக்கைகளின் மண்டலத்தை விரிவாக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

குழந்தைகள் இயக்கம் பள்ளிக்கூடத்துக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் குழந்தைகளின் “சுய ஆட்சியை” வலுவுறச் செய்ய உதவுகிறது.  புதிய போதனை முறைகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தையும் அறிவு வேட்கையையும் அதிகரிக்கிறது.  முற்போக்கான ஆசிரியர்கள் இளம் பயனீர்களைப் போற்ற வேண்டும். சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் பள்ளிகள் இளம் பயனீர்கள் முன்னுள்ள வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இளம் பயனீர்கள், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஆசிரியர்களுக்கு முழுமனத்துடன் உதவ வேண்டும், பள்ளியின் நடுமையங்களாகத் திகழ வேண்டும்.

ஜூலை 24 முதல் 30 வரைப்பட்ட இந்த வாரத்தில் ருஷ்ய சோவியத் கூட்டாட்சி சோஷலிசக் குடியரசின் குழந்தைகள் இயக்கத்துக்கு ஒரு திடமான அடிப்படையை ஏற்படுத்த வேண்டும்.

- ந. கா. க்ரூப்ஸ்கயா, இளைஞர்களைக் கம்யூனிச முறையில் பயிற்றி வளர்த்தல், பக்.149-153


புகைப்படங்க: https://weirdrussia.com/2015/05/19/young-pioneer-organization-of-the-ussr/ (இந்த சுட்டியை சொடுக்கிப் படிக்கவும்) 

No comments:

Post a Comment