Oct 9, 2019

அசுரனைக் கொண்டு உரையாடுவோம்

say no to caste-class atrocities


#வெற்றிமாறன் இயக்கத்தில் #தனுஷ் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் #அசுரன் திரைப்படம் பரவலான வரவற்பை பெற்றுள்ளது. நம் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆண்டான் அடிமைப் போராட்டம் குறித்து விவாதங்களை தூண்டிவிட்டுள்ளது.

வெற்றிமாறன் ஒரு சிறந்த ஜனரஞ்சக இயக்குனர். ஆனால் அவரின் எல்லாப் படங்களிலிருந்தும் மாறுபட்டது இந்த அசுரன். சினிமா குறித்து மிகுந்த கூருணர்வுடன் பேசக்கூடியவரிடமிருந்து சிறந்த கலைப்படைப்பாக அசுரன் வெளி வந்திருக்கிறான்.

அசுரன் என்ற பெயர் ஏன் என்பதிலிருந்து இத்திரைப்படத்தை முன் வைத்து ஓர் உரையாடல்.

அசுரன் என்பவன் யார்? யாராக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது? படத்தின் கதாநாயகன் பெயர் சிவசாமியாக இருக்க, சிவசாமி என்றோ, அல்லது வேறு ஏதோ புலைமை மிக்கப் பெயர்களை சூட்டாமல், பூமணி எழுதிய வெக்கையைத் தழுவி இருந்தும் வெக்கை என்று பெயர் சூட்டாமல் ஏன் அசுரன் என்கிறார்?

நம் தொன்மங்களில் அசுரன் என்பவன் கெட்டவன், #சூரசம்ஹாரம் செய்யப்பட வேண்டியவன், அல்லவா?

அப்படி இருக்கையில் இங்கு அசுரன் வேட்டையாடுகிறான்! யாரை? ‘தேவர்களை’. வழக்கமாக ‘தேவர்கள்’ தானே அசுரர்களை வேட்டையாடுவார்கள்? வெற்றிமாறனின் அசுரன் ‘தேவர்களை’ வேட்டையாடுகிறானே? வரலாறு அறியாதவரா வெற்றிமாறன்?

வரலாற்றை சரியாக அறிந்தவரால் மட்டுமே தலைப்பிலேயே இப்படி சிறப்பான சம்பவம் செய்ய முடியும்.

வரலாறும், தொன்மங்களும் ஆளும் வர்க்கங்களாலும், அவர்களின் அடிவருடிகளாலும் எழுதப்படுகிறது என்பதே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது. அப்படி எழுதப்பட்ட ஆளும் வர்க்க மத வரலாற்றில், இந்திய சூழலில் பார்ப்பனிய மதத் தொன்மங்களில் தேவர்கள் நல்லவர்களாகவும், அசுரர்கள் கெட்டவர்களாகவும் புனையப்பட்டனர் என்பதை #இடதுசாரி சிந்தனையாளர்கள், #மானுடவியல் வரலாற்றரிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.

அத்தொன்மங்கள் நிலப்பிரபுத்துவ காலத்தைய ஆளும் வர்க்கக் கதைகள் என்றும் அது ஆண்டான் அடிமைப் போராட்டங்கள் என்பதோடு, ஆரிய எதிர்ப்பு, இனக்குழுக்களிடையேயானப் போராட்டங்கள் என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன. அப்பின்னணியில், அசுரர்கள் என்று சித்தரிக்கப்பட்டவர்கள் ஆரியர் அல்லது நாடோடிகளாக இடம்பெயர்ந்து இங்கு வந்து இராஜ்ஜிய அபகரிப்பிலும், இன அழித்தொழிப்பிலும், வள அபகரிப்பிலும் ஈடுபட்ட குறிப்பிட்ட இனக்குழுவின் ஆதிக்கத்தினை எதிர்த்தவர்கள்; அவர்களில் அசுரர்கள் எனப்படுவோர் ஓர் பழங்குடி இனக்குழுவினர். (வர்ணாசிரமத்தின் படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள்… பின்னர் சாதிய ரீதியாக இன்றுவரை உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் ஒடுக்கவும், கொல்லவும் படுகிறார்கள்). 

ஆக, அசுரர்கள் கெட்டவர்களும் அல்ல, ‘தேவர்கள்’ நல்லவர்களும் அல்ல! அடக்குமுறை செய்தவர்களை எதிர்த்தவன் அசுரன். ஆம்! ஆள்பவர்களின் அதிக்கத்திற்கு அணிபடியாதவர்கள் தற்போது Anti-Indian, Naxallite, Maoist எனப்படுவது போல் அப்போது ஆள்பவர்கள், ஆதிக்க சாதிகள், பண்ணையார்கள் ஆகியோரின் அட்டூழியங்களை எதிர்த்தவர்கள் அசுரர்கள் எனப்பட்டனர்.

மஹிஷன் என்னும் அசுரனின் வதத்தைக் கொண்டாடும் தசராப் பண்டிகை காலத்தில் ஆளும் வர்க்க ஓநாய்களை வேட்டையாடும் அசுரனை களம் இறக்கியிருக்கிறார்கள் வெற்றிமாறனும், தனுஷும். என்னவொரு உள்குத்து!

நம் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர்கள், தோழர்கள், உழைக்கும் வர்க்கத்திலிருந்து போராடிய எழுச்சிமிகு மக்களின் உருவகமாக இருக்கும் ‘அசுரனை’ ஒரு பார்ப்பனியக் கடவுள் வென்றதை, அதாவது நம்மைக் கொல்லும் பண்டிகையை நாமே உற்சாகத்துடன் கொண்டாட வைத்திருப்பதே மதத்தின் வெற்றி. அந்த அறியாமையை போக்கி நாம் யார், நம் வரலாறு என்ன என்று உரக்கச் சொல்கிறான் அசுரன். வேட்டையாடப்படவேண்டியவர்கள் ‘தேவர்களாக’ சித்தரிக்கப்பட்டுள்ள ஆளும் வர்க்க முதலாளிகள், ஆண்டைகள்.

அசுரன் திரைப்படம் ஒரு சிறந்த மானுடவியல் வரைவு. அதேவேளை அது சினிமா என்னும் அந்தக் கலைவடிவத்திற்கு ஏற்ற நயத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதீத கதாநாயகத்தன்மை என்றபோதும், அத்தகையதொரு எழுச்சியை ஏற்படுத்த அரசியல் இயக்கம் ஒன்று காரணமாக இருந்தது என்பதை தோழர்கள், வர்க்க அணிதிரட்டல் கூட்டம், உழைக்கும் வர்க்க மக்களுக்கான வழக்குறைஞர் கதாப்பாத்திரங்கள் மூலமாக சிறப்பாக பதிவுசெய்திருக்கிறார். வரலாற்றை அறிந்தவர்களால் அத்தகைய தோழர்கள் யார் என்றும், அதனால் எழுச்சி பெற்று பண்ணையார்களை வேட்டையாடிய போராளிகள் யார் என்றும், மக்களை அணிதிரட்ட தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் யார் என்பதையும் அறிய முடியும்.

அசுரன் கதைக்கு வருவோம். யாரோ ஒரு பெரிய தலைகட்டை சாய்துவிட்டு ஊரை விட்டு ஓடும் ஒரு குடும்பத்தின் மூலமாக தொடங்குகிறது கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பம். ஆளுமை நிறைந்த தாய், குடிகார புருஷன் (அப்பன்). நல்ல உழைப்பாளிகள்.  அப்பன் ஒரு கையாலாகாதவன் என்று வெறுக்கும் இளைய மகன், பொறுப்புடனும், அடங்கமறுக்கும் குணத்துடனும் இருக்கும் மூத்த மகன். இவர்களுக்கு உறுதுணையாக மாமன்.

சிமெண்ட் தொழிற்சாலை கட்டுவதற்காக இவர்களின் நிலத்தை அபகரிக்க முற்படும் பண்ணைக் குடும்பம். செல்வந்தர்கள் எப்படி சொத்து சேர்த்தார்கள் என்பதற்கு இதுவே சான்று. ‘ஆதி மூலதனத் திரட்டல்’ எப்படி நடந்தது என்று மார்க்சியம் எடுத்துரைக்கும் சூத்திரத்தை சிறப்பான கதையாடலாக பதிவு செய்கிறது படம்.

தம் உரிமை நிலத்தைக் கொடுக்க மறுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் (பெரும்பாலும் அவர்கள் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டோர்), சிறுகுறு விவசாயிகளுக்கும் நேரும் கொடுமைகள் அக்குடும்பத்திற்கும் அரங்கேறுகின்றன. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள், ஆண்டைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என்று விரிகிறது கதை.

சாதியாலும், பொருளாதார ரீதியாகவும் தாழ்த்தப்பட்டோர் அன்றாடம் படும் துன்பங்கள் தான் இவை. ஆனால் அதை உணரும் அளவுக்கும், அதனை எதிர்த்துப் போராட வேண்டிய விழிப்புணர்வும் இல்லாததால் ஆதிக்க சாதிகளின் கை இங்கு பொருளாதார ரீதியாக எப்போதும் ஓங்கியே இருக்கிறது.

இது ஏதோ ஒரு சிவசாமியின் கதை. நல்லவன் கெட்டவனைப் பழிவாங்கிய கதை என்பதாகவே சினிமா ‘ரசிகர்கள் காண்பர். என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி இடைவெளியில், “என்னப்பா இது படம் இவ்ளோ சீரியசா இருக்கு. 2ண்ட் ஹாஃப் கொஞ்சமாச்சும் ஜாலியா இருக்குமா” என்று பேசிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் எனக்கு நெஞ்சு உறைந்துபோனது.

ஆனால் 8 வருடங்களுக்கு முன்னர் நானும் சினிமாவை இப்படித்தான் அனுகியிருக்கிறேன். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை, வர்க்க உணர்வை, சாதி மற்றும் இதர ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வதன் அவசியத்தை ஏற்படுத்த சினிமா மிக முக்கியமானதொரு ஊடகம். இடதுசாரி (தலித்தியம் பேசுவோரும் இடதுசாரிகளே) மற்றும் முற்போக்கு சிந்தனைகளையுடைய இயக்குனர்கள் பலர் தற்போது இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றனர். வெற்றிமாறன் அதில் ஒரு பலத்த முத்திரையை பதித்திருக்கிறார்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கப்பட்டுள்ளது. சிறந்த கதாப்பாத்திர தேர்வு. நடிகர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். தனுஷ் ஒரு மகாநடிகன், கலைஞன் என்பதை நாம் சொல்லவும் தேவையில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாது சர்வதேசிய அளவுக்கு அவரைக் கொண்டுசென்றது அவரின் அந்த தனித்தன்மையே. நடிப்பு வெறியன் தனுஷ்!

ஜீ.வியின் பின்னணி இசை எழுச்சி!

தனுஷ் ஒரு பூஞ்சை என்று தொடக்கத்தில் காட்டி, பிறகு அவர் வீறுகொண்டு துவம்சம் செய்ய திரையில் நுழைவு கொடுக்கையில் அரங்கமே அதிர்கிறது. இது தனுஷுக்கான ரசிக வரவேற்பு என்பது ஒருபுறம், அதேவேளை கதாநாயகத்தன்மை, வீரம் என்கிற ‘ஆண்மை’சார் எதிர்பார்ப்பிற்குத் தீனி போடுவதால் ஏற்படும் பரவசம் என்பது மறுபுறம். இத்தகைய மனநிலை கொண்ட சமூகத்தில், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து சாதிய வர்க்கப் போராட்ட வரலாற்றை பதிவு செய்ய துணிந்திருக்கும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

இறுதியாக, திரையில் அநியாயங்களை எதிர்த்து உங்கள் மனம் கவர் கதாநாயகன் அடிக்கையில், களம் இறங்குகையில் உங்கள் மனம் கொண்டாடுகிறது. அது கதை அதனால் ஒரு சாகசத்தை உங்களால் கொண்டாட முடிகிறது. அது யாரோ ஒருவருடைய வாழ்க்கை, அங்கே ஒருவன் போராடுகிறான், அவன் ஜெயிப்பானா தோற்பானா என்று ஆர்பரிக்கும் மனம்.

அதே சமூகத்தில் நிஜமாக நடக்கையில், அங்கேயும் அது யாரோ ஒருவருடைய பிரச்சினை, யாரோ போராடுகிறார்கள் என்று வேடிக்கைப் பார்க்காமல் நமக்கான உரிமைகளுக்காக நம்மில் ஒருவர் போராடுகிறார் என்கிற உணர்வைப் பெறுவதும் ஆளும் வர்க்கச் சுரண்டலை ஒழிக்க ‘தோழர்களோடு’ அணி சேர்வதும்தான் மக்களின் கடமை.

அசுரன் நம்மின் பாட்டன், முப்பாட்டன்! யாமே அசுரர்! நம் வரலாற்றையும், உரிமைகளையும் அறிவோம், நம் சமூகத்தில் சாதிய-வர்க்க ஒடுக்குமுறைகளை நிகழ்த்தும் ஆண்டைகள், முதலாளிகளுக்கு எதிரான அசுரவேட்டையைத் தொடங்குவோம். நாமும் அசுரர்களாக மாறுவோம். குறைந்தபட்சம் அசுரனைக் கொண்டாடுவோம்.


No comments:

Post a Comment