உலகம் தோன்றியது எப்படி என்று தொடங்கி… சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அல்லது மனித சமூக வாழ்நிலைமைகள் குறித்து இங்கு பலரும் (தலைவர்களும்) வியாக்கியானம் செய்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகளை தந்துள்ளனர். சில பல (தத்துவார்த்த) கண்டுபிடிப்புகளும் உண்டு.
சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கெதிராக எண்ணற்றோர் கிளர்ந்தெழுந்துள்ளனர். சிலர் சீர்திருத்தங்களை முன் வைத்துள்ளனர். சிலர் புரட்சியில் ஈடுபட்டு பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். ஆனால் தத்துவார்த்த அடிப்படையில், சமூக விஞ்ஞானமாக எல்லா பிரச்சினைகளுக்குமான ஆணி வேரை அதாவது காரண காரியங்களை, அதாவது சமூகத்தின் இயக்க விதியை வரலாற்று வளர்ச்சியிலிருந்து, அதாவது அதன் உள் முரண்பாடு மற்றும் மாறும் தன்மைகளோடு எது சமூகத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்று விளக்கியவர் கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ், லெனின் இப்படியாக).
மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரமல்ல... பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டுமல்ல. அது வெறும் பொருளாதார பிரச்சினைகளை மட்டும் அலசவில்லை. மனிதர்கள் சமூகமாக வாழத்தொடங்கிய வரலாற்று நிலைமைகள் தொடங்கி, அதன் வளர்ச்சிப் போக்கு, இயக்கப் போக்கு என்று கடந்த கால நிலைமைகள் மட்டுமின்றி எதிர்கால நன்மை மிகு சமூக அமைப்பிற்கான வேலைத்திட்டத்தையும் (தீர்வையும்) வழங்குவது மார்க்சியம்.
மார்க்சியம் என்பது வெறும் தத்துவமல்ல, வெறும் பொருளாதாரமல்ல, கற்பனாவாத பொதுவுடைமை பிதற்றலும் அல்ல.
மார்க்சியம் என்பது ஓர் உலகக் கண்ணோட்டம் - இயற்கையின் தோற்றத்தோடும், வளர்ச்சியோடும், இயக்கப் போக்கோடும் மட்டுமின்றி மனித உறவுகள் (அதாவது கூட்டுச் சமூக வாழ்வு) மற்றும் சமூக அமைப்பு, அதன் உள்ளார்ந்த விதிமுறைகள், சமூக வளர்ச்சி, இயக்கப் போக்கு ஆகியவற்றை ஆய்ந்தறிந்து, தொகுத்து, ஒரு வரைபடம் போல், அறிவியல் கண்டுபிடிப்புகளின் விதியைப் போல் நிறுவும் சூத்திரம் (உன்மையில் இந்த சொற்கள் போதவில்லை).
மார்க்சியம் என்பது ஓர் உலகப் பொதுமறை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது. இதை அடிப்படையாகக் கொண்டு எந்த நாட்டு நிலைமைகளையும், உழைக்கும் வர்க்கப் பிரச்சினைகளையும் ஆய்வு செய்ய முடியும்.
மேலும் மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கண்ணோட்டம் என்று கூறுவது மார்க்ஸை (மார்க்சியத்தை) கொச்சைப்படுத்துவதற்கு சமம்.. அல்லது மார்க்சியம் அறியாத பேச்சு! மார்க்ஸ் விளக்கும் அரசியல் பொருளாதாரம் என்பது சமூகத்தின் கட்டுமானம் குறித்தது – அது அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்று சமூகத்தின் அனைத்து இயக்க இயந்திரங்கள் (பண்பாடு உள்ளிட்ட) பற்றியும் உள்ளடக்கியது.
பொருளாதாரம் என்றால் ஏதோ பணப் பரிவர்த்தனை, சில கூட்டல் கழித்தல், ஐந்தாண்டு நலத் திட்டம், வரிவிதிப்பு இப்படியான புரிதலில் மார்க்சியத்தை வெறும் பொருளாதாரம் என்று கூறுவது அபத்தம்.
சமூக கண்ணோட்டம் என்று ஒன்று தனித்ததாக இங்கு இல்லை…. ஒவ்வொரு வரலாற்று கட்டத்திலும் நிலவும் உற்பத்தி முறைகளின் அடிப்படையில்தான் ஒரு சமூக கண்ணோட்டம் உருவாகும்… அது அடுத்த உற்பத்தி முறையில் தொடரும், நீர்த்து போகும், எச்ச சொச்சம் இருக்கும், அடுத்து அதுவே முரண்பட்டு மாறும்… அதாவது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட்டு சமூக-அரசியல்-பண்பாடு- பொருளாதார கட்டுமானம் எல்லாம் மாறும்….
இப்படியாக சமூக கண்ணோட்டம் என்பதை வரலாற்று வளர்ச்சியிலிருந்து காணக் கற்றுக்கொடுப்பதுதான் மார்க்சியக் கண்ணோட்டம்… அதுவே அதன் தத்துவார்த்தப் பார்வை… அதனுள் அடங்கியிருப்பது அரசியல் பொருளாதாரம். மேலும் சமூக கண்ணோட்டம் என்பதை புரிந்துகொள்வதில் மார்க்சியம் ஒரு தனித்துவமான சிந்தனையை நமக்களிக்கிறது – ஆளும் வர்க்க கருத்தியலே ஆளப்படும் வர்க்கங்களின் கருத்தியல் என்பதாகும்… மார்க்சியம் கற்ற ஒருவர் இந்த தத்துவ, அரசியல் பொருளாதார பார்வையிலிருந்தே எந்த ஒரு நிலைமையையும், பிரச்சினையையும் ஆய்வு செய்யவார்.
மார்க்சியக் கண்ணோட்டத்தில் வைக்கப்படும் விமர்சனங்களையும் இந்த கண்ணோட்டத்திலிருந்தே அணுக வேண்டும். அதைவிடுத்து நடுநிலைமையோடோ அல்லது பரிதாப உணர்விலிருந்தோ அல்லது தங்களின் அடையாள உணர்விலிருந்தோ… தங்களது தலைவர் என்கிற பக்கச் சார்பிலிருந்தோ அல்லது மிதவாத, தாராளவாத புரிதல்களிலிருந்தோ அணுகுவது விமர்சனத்தின் மீதான முழுமையான விமர்சனமாகாது.
அத்தகைய விமர்சனத்தின் மீதான விமர்சகரானவர் ‘ஒர்ஜினலா’ ‘டுபாக்கூரா’ என்று கண்டுபிடிக்க குறைந்தபட்சம் இந்த புரிதலாவது வேண்டும்.
மார்க்சியர்களை தரம் பிரிக்க முதலில் மார்க்சியம் அறிந்திருக்க வேண்டும். அதனோடு முதலாளித்துவ பேராசையும், அதிகாரப் பசியும் இல்லாதிருக்க வேண்டும்!
மார்க்சியர்களை தரம் பிரிக்க முதலில் மார்க்சியம் அறிந்திருக்க வேண்டும். அதனோடு முதலாளித்துவ பேராசையும், அதிகாரப் பசியும் இல்லாதிருக்க வேண்டும்!
No comments:
Post a Comment