ஜூலை6 அன்று ‘நூல்வெளி’ பகுதியில் அம்பேத்கரின் சாதிய ஆய்வுகள் குறித்த ரங்கநாயகம்மாவின் நூலையும் அதை மறுத்து மதிவண்ணன் எழுதிய நூலையும் பற்றிய விமர்சன அறிமுகத்தைப் படித்தேன். செல்வ புவியரசன் சொல்லியிருப்பதுபோல அம்பேத்கரின் சாதி குறித்த பார்வையில் உள்ள போதாமைகளை ரங்கநாயகம்மா நிறுவ முயலவில்லை. நிறுவியேவிட்டார்.
செல்வ புவியரசன், அம்பேத்கரின் ஓரிரு மேற்கோள்களை எடுத்து அவர் மார்க்ஸியத்தை வெறுக்கவில்லை அல்லது மார்க்ஸை ஏற்றுக்கொண்டார் என்ற சித்திரத்தை வழங்க முடியுமெனில், அதேபோல் பல நூறு மேற்கோள்கள் கொண்டு அம்பேத்கர் எவ்வாறு மார்க்ஸியம் குறித்தும், புரட்சி குறித்தும் காழ்ப்புணர்ச்சியோடு பேசியுள்ளார் என்பதையும் நிரூபிக்க முடியும்.
அம்பேத்கருக்குத் தெரிந்தது ஏபிசிடி மார்க்சியம்தான் என எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டியதிலிருந்து அம்பேத்கருக்கு மார்க்ஸியம் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கவில்லை என அருணன் சொல்லியது முதற்கொண்டு டெல்டும்டே வரையில் அம்பேத்கருக்கு மார்க்ஸியம் பற்றிய புரிதல்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்க, அம்பேத்கரின் தலையில் மார்க்ஸியப் புத்தகங்களைக் கட்டிச் சுமக்கவிடுகிறார் மதிவண்ணன்.
ஒட்டுமொத்தமாக, ரங்கநாயகம்மாவையும், கொற்றவையையும் திட்டுவதற்கு ஒரு நூலை எழுதி, அதை ஆங்காங்கு அம்பேத்கர் எழுதிய வார்த்தைகளால் வெட்டி ஒட்டி நிரப்பிவிட்டால், அது ஆய்வு நூல் தகுதியை அடைந்துவிட முடியுமா என்பதை செல்வ புவியரசன் விளக்க வேண்டும்.
மற்றபடி டுபாக்கூர் மற்றும் ஒரிஜினல் ஆய்வுகளை ஆய்வாளர்களும், வாசகர்களும் சமப்ந்தப்பட்ட நூல்களை வாசிக்கும்போது உணர்ந்துகொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், மதிவண்ணனின் நூல் ஒரு வசைக் குப்பை. பெண்களின் மீதான அருவருப்பு மற்றும் மத துவேஷத்தோடு இருப்பதுடன் அது அம்பேத்கருக்கே முரணான நூல்.
நன்றி - #வசுமித்ர (இன்றைய இந்து தமிழில் எதிர்வினை வெளியிடப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment